Wednesday, December 30, 2020

drone

Middle English drane, drone, "male honeybee," from Old English dran, dræn, from Proto-Germanic *dran- (source also of Middle Dutch drane; Old High German treno; German Drohne, which is from Middle Low German drone), probably imitative (compare Lithuanian tranni, Greek thronax "a drone"). Given a figurative sense of "idler, lazy worker" (male bees make no honey) 1520s. Meaning "pilotless aircraft directed by remote control" is from 1946

drone என்ற சொல்லிற்கு male bee esp. male honey-bee, a person who lives on the labour of others, a pilotless aircraft or ship controlled by radio என்று 3 பொருள்களைப் பெரும்பாலான ஆங்கில அகரமுதலிகளில் கொடுத்திருப்பர். 3 ஆம் பொருள், முதற்பொருளின் ஒப்புமை கருதி ஏற்பட்டது. நேரேயிருந்து வலவன்போற் செலுத்தாது தூரத்தில் நின்று ஏதோவொரு நுட்பமுறையில் கட்டளையிட்டு மற்றவரை/கருவிகளைக் கொண்டு இயங்கவைக்கப்படும் கலன் இது. இச்சொல் முதலில் எழுந்தது பறனை நுட்பத்திற்றான். பார்ப்பதற்கு தேனீ போலிருந்து செயல்களைச் செய்ததால், தேனி ஒப்புமையில் 3 ஆம் பொருள் எழுந்தது. (பறனை நீட்சியாய்க் கப்பலும் கூட வரையறையில் கூறப்பட்டுள்ளதைக் கவனியுங்கள். பொருள்நீட்சிகள் இப்படி ஏற்படும்.) புது நுட்பியல் கருவிகளுக்கு ஒப்புமை வழியில் பெயரேற்படுவது இயல்பே. பெயரீட்டில் கருவிச் செயல்முறை விளக்கம் சொல்லத் தேவையில்லை. நாமேன் அப்படி எதிர்பார்த்துக் குழப்பிக் கொள்கிறோம்? தெரியவில்லை. இச்சொல் ஒரு பக்கம் உயிரியைக் குறித்து இன்னொரு பக்கம் கலனைக் குறித்தது. ஆங்கிலம் பேசுவோர் யாரும் இது போலும் ஒப்புமைப்பெயரை ஏற்கத் தயக்கம் காட்டுவதில்லை. தமிழராகிய நாம்மட்டும் ஏன் தயக்கம் காட்டுகிறோமென்று எனக்குப் புரியவில்லை.

ஆங்கிலச் சொல்விளக்கம் படித்தால், இச்சொல்லைத் தேனியம் என்றே சுருங்கச்சொல்லலாம். அதனால் ஏற்படும் பொருளும் சரியாகப் பொருந்தும். தேனிக்களில் பெரியது தேனியம். தேன் என்றாலே தேனீயையும் குறிக்கும் என்று திவாகரம் சொல்கிறது. நான் தேனியம் என்று சொன்னது தவறென்றால் தேனீயம் என்று கொள்ளுங்கள். பிறகு இதையும் தேன்+ஈயம் என்று பிரித்து தவறாய்ப் பொருள் கொள்ளாதீர். (ஒரு குவளை நீரைப் பாதி நிறைந்துள்ளது என்றுஞ் சொல்லலாம். பாதி நிறையவில்லை என்றுஞ் சொல்லலாம். ஒவ்வொன்றும் ஒரு பார்வை.) பறனையை உலோகப்பறவை என்கிறாரே? அதில் குற்றங் காண்கிறோமா? பறவையைப் (bird) பார்த்து அட்லாண்டா பெரி. சந்திரசேகரன் பறனை (aeroplane) என்ற சொல்லை உருவாக்கினார். இன்று பழகுகிறோம். 

இராம.கி. ஆங்கிலச்சொல்போல் தமிழ்ச்சொல் படைக்கிறார் என்ற மொண்ணை வாதத்திற்கு மாறாய் நான் மேலே கொடுத்த சொற்பிறப்பு விளக்கத்தை ஆழ்ந்து படியுங்கள். சொல்லின் உள்ளே ரகரம் நுழைப்பது இந்தையிரோப்பியப் பழக்கம். நான் ரகரத்தை எடுத்துப் பார்த்தேன். அவ்வளவு தான். drone இன் இடையில் ஒகர ஒலி ஆங்கிலத்தில் வருகிறது. மற்ற இரோப்பிய மொழிகளில் எகரவொலி உள்ளது. நான் இந்தையிரோப்பியத்திற்கும் தமிழியத்திற்கும் விட்டகுறை தொட்டகுறை உள்ளதென நம்புபவன். இந்தப் பின்புலத்தில் பார்த்தபொழுது, :தேனீ ஒப்புமை எனக்கு உடனே கிட்டியது. மேலையர் செய்தால் சரி. இராம.கி. செய்தால் தவறா? இது போலும் வாதங்களைக் கேட்டுக் கேட்டு எனக்குச் சலித்துப் போகிறது. எத்தனை நாள் தான் இப்படி நடக்கும்? பேசாமல் தமிழை ஒரேயடியாய் விட்டுவிட்டு வேறு புலங்களில் நான் ஈடுபடலாம் போல் தோன்றுகிறது. .


Monday, December 28, 2020

Kidney

----------------------------

kidney யைச் சிறுநீரகம் என்றே பொதுப்புலனில் சொல்வர். அதுவும் பொருத்தம் இலாத உப்புக்குச் சப்பாணிச் சொல் தான். (இயக்குநர் என்பது மாதிரி அச் சொல். இயக்குநர் என்பார் operator-ஆ, director- ஆ? ) அது என்ன சிறுநீர்? உடலில் இருந்து வேறேதும் பெருநீர் வெளியாகிறதோ? - என்ற கேள்வியெழும்.  சிறுநீர் என்பது ஒருசில உப்புகள் கரைந்த பால்மமே (plasma) அதை உமரிநீர் எனலாம். (உப்புக்கு இன்னொரு பெயர் உமரி) உமரிநீரைக் கையாளும் உறுப்பு = உமரி நீரகம். சிறுநீரகத்தை விட இது பொருத்தமான சொல். ஆனால் மருத்துவத்தில் பயனாகும் Nephrologyக்கு இது உதவாது. உமரிநீரகத்திற்குச் சரியான உடற் கூற்றுப் பெயரொன்றை நாம் தர வேண்டும். முயன்றால் கிடைக்கும். “கலைச் சொல்லே வேண்டாம்; எமக்குச் சிறுநீரகம் போதும்” என்று பாமரத்தனம் நாடுவோர்க்கு நான் சொல்வது விளங்காது.

பல்வேறு சிறு தூம்பு (tube)களும் அதைச்சுற்றி ஒரு கூடுங் (shell) கொண்டது உமரிநீரகமாகும். தூம்புகளின் வழிச்செல்லும் அரத்தத்தின் வேதிப்பொதுள் (chemical potential) தூண்டலால்,  சிவப்பணு , வெள்ளணு, ஒருசில பெருதங்கள் (proteins) ஆகியவற்றைத் தவிர, மிஞ்சியுள்ள பால்மம், உப்புகள் போன்றவை தூம்புப் படலம் (tube membrane) வழி, நூகமாய் (நுண்ணிதாய்) ஊடுறுவி, கூட்டுப் பக்கம் [ஊடுதலை ஊறுதல் எனலாம்] உமரி நீராய் வெளிப்படும், எனவே  உமரி நீரகத்தை நூவூறகம் என்பது மிகச் சிறந்த சொல்லாகும்.]

------------------------------------

என்று https://valavu.blogspot.com/2020/04/case.html இடுகையில் நான் சொன்னேன். இன்று வேறு ஏதோ தேடியபோது, ”நம்முடைய குழந்தை மருத்துவ முறையிலே ரோசனை, கஸ்தூரி முக்கியமானவை. ரோசனை என்பது பசுவினுடைய அட்ரினல் கிளாண்ட். கஸ்தூரி என்பது கஸ்தூரி மானுடைய அட்ரினல் கிளாண்ட். இக்கிளாண்ட்களை மருந்துகளோடு சேர்த்துக் கொடுத்தால் குழந்தைக்கு நோய்யெதிர்ப்புச் சக்தி உருவாகும்” என்ற பேரா. தொ. பரமசிவனின் கருத்தை திரு. ஒப்பிலாமணி அழகரின் பதிவில் படித்தேன்.  தொ.ப.வின் எந்த நூலில் இது வருகிறதென்று எனக்குத் தெரியவில்லை.  என் சிந்தனை ”ரோசனை” என்ற சொல்லின் தமிழ்த் தொடர்பு பற்றியது.  

கோரோசனைக்கு, ”பசு வயிற்றில் எடுக்கும் மஞ்சள்நிற மணப்பண்டம்” என அகரமுதலிகளில் சொல்வார். செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலியில் ”கோ+அரிசனம் (மஞ்சள்)” என்று பிரித்து ”மாட்டின் மஞ்சள்நிற மணப் பொருள்” என்பார்.  ”கோரோசனை= மாட்டின் adrenal gland" எனும் Multi-disciplinary பார்வையை அங்கு கொடுப்பதில்லை. புதலியல், விலங்கியல், உடலியல் என எதையும் நமக்கு விளக்கிச் சொல்லார்.  இது ஒரு குறை. நம்மூர் அகரமுதலி எடுவிப்போர், பெரும்பாலும் மொழியறிவு கொண்ட சிறு குழுவினர் மட்டுமே. எடுவிப்போர் குழு (editors grpup)பெரிதாய் இருக்கும் ஆங்கில அகரமுதலிகளில் இக்குறைபாடு இருக்காது. கோரோசனைக்குப் பொருள்சொல்ல, அகராதிக் குழுவுக்கு நாட்டு மருத்துவ அறிவு வேண்டும் . 

ரோசனை என்ற சொல் எப்படி எழுந்தது? உல்>அல்>அர்>அரி = அழல், பொன், மஞ்சள் ஆகியவற்றின் நிறம். சிவப்புக் கலந்த அழல் நிறம் என்றுங் குறிப்பர்.  ”அரித்தேர் நல்கியும்” என்பது பெரும்பாண் 490 . அரித்தேர் = பொற்றகடு வேய்ந்த தேர். தவிர அரி= மடங்கல் என்பது மஞ்சள்நிற சிங்கத்தைக் குறிக்கும். அரன்= அழல்நிறச் சிவன், ”அரோகரா” என்பது சிவனை வேண்டிக் கூக்குரல் எழுப்புவது. அரக்கு = பொன் கலந்த சிவப்பு. அரியனம்>அரிசனம் = மஞ்சள். அரியகம்>அரிசகம் = மஞ்சள்நிறச் சரக்கொன்றை.  அரியாசம் = நறுமணச் சரக்கு (சிலம்பு 5:14 விற்கான அரும்பத உரையில் வரும் குறிப்பு.) அருணன் என்றாலும் அழல் நிறத்தவனே. ஐம்பூதங்களில் ஒன்றான நெருப்பெனும் பூதத்தை உணர்த்தும் சிவலிங்கம் அருணமலை>அண்ணாமலையில் உள்ளது. “அண்ணாமலைக்கு அரோகரா!” என்பது சிவநெறியார் முழக்கம்.  

சிறுநீரகம், உமரிநீரகம், நூவூறகம் என்று நாம் சொல்லும் உடலுறுப்பு அருணை நிறத்தில் உள்ளதால் அதை அருணையென்றும் சொல்லலாம். பேச்சு வழக்கில் அருணை= அருயனை> அருசனை> ரோசனை என்றமையும்.  வடபால் மொழிகளிலும் இக் கோரோசனை பயிலும்.  பேச்சுவழக்கில் ”கோரோசனை” என்கையில், நல்ல தமிழில், மாந்தனுக்குரிய உமரிநீரகத்தை “அருணை” என்று பயிலக்கூடாதா? kidney க்கு  உமரிநீரகம், நூவூறகம், அருணை என 3 சொற்கள் நம்மிடமிருந்தும், ”சிறுநீரகத்தை” ஏன் பயில்கிறோம்? தெரிய வில்லை.   

ஆங்கிலத்தில் renal (adj.) 1650s, from French rénal and directly from Late Latin renalis "of or belonging to kidneys," from Latin ren (plural renes) "kidneys," a word of of uncertain etymology, with possible cognates in Old Irish aru "kidney, gland," Welsh arenn "kidney, testicle," Hittite hah(ha)ari "lung(s), midriff." Also possibly related are Old Prussian straunay, Lithuanian strėnos "loins," Latvian streina "loins." "The semantic shift from 'loins' to 'kidneys' is quite conceivable" [de Vaan]என்று சொல்வர். “uncertain etymology” என்பதைக் கூர்ந்து கவனியுங்கள். 

அருணை கொண்டு, ஒருசில கூட்டுச்சொற்களுக்கும் வழிகாணலாம். renal disease= அருணை நோய், renal failure= அருணைப் பழுது. renal calculi= அருணைக் கற்கள். renal function= அருணை வங்கம். adrenal gland= அருணையடிச் சுரப்பி. (அருணையை அடுத்துள்ள சுரப்பி). renin = அருணையம் (அருணையடிச் சுரப்பியில் உள்ள ஊறல் -hormone).

அன்புடன்,

இராம.கி. 




Friday, December 25, 2020

-மானம் (-metry )

அறிவியலில் பல இடங்களில் வெவ்வேறு பொருட்களை, நிகழ்வுகளை, தன்மைகளை, அளக்கத் தலைப்படுவோம். பல்வேறு இயல்களிலும் (-logy) பல்வேறு -metryகள் உண்டு. ஆங்கிலத்தில் -metry என்பதை, word-forming element meaning "process of measuring," Middle English -metrie, from French -metrie, from Latin -metria, from Greek -metria "a measuring of," from -metros "measurer of," from metron "measure," from PIE root *me- (2) "to measure" என்று சொல்வர். PIE root *me- is the hypothetical source of/ evidence for its existence is provided by: Sanskrit mati "measures," matra "measure;" Avestan, Old Persian ma- "to measure;" Greek metron "measure," metra "lot, portion;" Latin metri "to measure.

-metry என்பது வெறும் PIE முடிப்புச்சொல் மட்டுமல்ல. (சங்கதத்தோடு அதைப் பொருத்துவது பெரும்பாலான இந்தையிரோப்பிய ஆய்வரின் வழக்கம்.)  தமிழியச் சொல்லும் கூடத் தான். A Dravidian Etymological Dictionary இல் வரும் ”மட்டம் (3811), முக-த்தல் 4001 போன்ற இட்டிகளை (entries) இவற்றோடு பொருத்துங்கள். இவற்றைக் காட்டிலும் முல்> முள்> முட்டு> மட்டு-தல்> மடு-த்தல் = அள-த்தல் என்ற வினைச்சொல்லை அவ்வகரமுதலி குறித்திருக்கலாம்.  ஏன், மல்>மால்>மா-த்தல் வினையைக் கூடக் குறித்திருக்கலாம்.  மானமெனும் ஈறு கிட்டியிருக்கும். மட்டி-த்தல்> மத்தி-த்தல்> மதி-த்தலென்றும் அவ்வினை வளர்ச்சிபெறும். மானம் என்பது (சிலபோது மதியம்) பெயர்ச்சொல்லாகி அளவையும், அளக்கும் தொழிலையும் தமிழில் குறிக்கும். (மானத்திற்கு மாறாய் மத்திகை என்றுங் குறிகலாம்.கீழே சில மானங்களைப் பட்டியல் இட்டுள்ளேன். இவை மட்டுமே அளவுமுறைகளல்ல. இவற்றிற்கு மேலுமுண்டு. 

முதலில் வருவது, hypsometry (n.) = உம்ப மானம்; "the measuring of altitudes," 1560s; உம்பம் = இடவுயரம். இடமல்லாதவற்றை வேறுவழியிற் சொல்வர். altimetry (n.) உயரமானம்  = "the art of measuring heights," 1690s, from Medieval Latin altimetria, from Latin alti- "high" (see alti-) + Greek -metria "a measuring of" (see -metry). 

அடுத்தது  craniometry (n.) கவாலமானம் "the measuring of skulls," 1844; மாந்தவியலில் கவாலங்களைக் கொண்டு பல்வேறு அளவுகள் செய்கிறார்.  அடுத்து கவாலம் மட்டுமின்றி, மாந்தவுடம்பின் பல்வேறு பகுதிகளை அளக்கும் மானமும் உண்டு. அதை anthropometry (n.) மாந்தவுறுப்பு மானம்  என்பார், "science of the measurement and dimensions of the parts of the human body," 1839, from anthropo- + -metry "a measuring of." 

அடுத்தது horometry (n.) ஓரைமானம் "art of the measurement of time," 1560s, from Greek hōra "any time or period" நம்மூர் ஓரைதான் கிரேக்கம் போனது. அது எல்லா நேரம். பொழுது, பருவம், காலங் குறிக்கும் பொதுச்சொல்லாக இருந்தது, இற்றைத் தமிழில் இப்பயன்பாட்டைத் தவிர்த்து ஓரை என்றால் இராசி என்று மட்டுமே பொருள் கொள்கிறோம். hour ஐக் குறிக்க மணி என்ற சொல்லைப் பயன் படுத்துகிறோம். அதுவோர் ஒப்புக்குச் சப்பாணி. bell எனுங் குறிப்பு. நம் சொல்லை நாமே இப்படி இழந்திருக்கிறோம். 

இன்னும் ஒன்று,  axonometric (adj.) அக்கன மத்திகை 1869, from axonometry "art of making a perspective representation of figures based on coordinate points" (1865), from Greek axon "axis, axle" அக்கம் = பக்கம், அச்சு. அன்னம்>அனம் = co-ordinate. அக்கனம் = side co-ordinate. Perspective representation= ஆழங்காட்டும்  வெளிப்பாடு, 

அடுத்து வேதியலின் stoichiometry(n.) தக்கைமானம் ”science of calculating the quantities of chemical elements involved in chemical reactions," 1807, from German Stöchiometrie (1792), coined by German chemist Jeremias Benjamin Richter (1762-1807) from Greek stoikheion "one of a row; shadow-line of a sundial," in plural "the elements" (from PIE *steigh- "to stride, step, rise") வேதிப்பொருள்கள் தக்க அளவிற்கு இருந்தால் தான், வேதிவினை தடையுறாது முற்றுமுழுதாய் நடக்கும்.  2 வேதிகள் இருந்தால், ஒன்றின் அளவிற்குத் தக்க இன்னொன்றின் அளவைப் பொருத்தி மதிப்பிடுவது, தக்கை மானம் எனப் படும்.  

இன்னொன்று biometry (n.) உய்யுமானம் 1831, "calculation of life expectancy" (obsolete); see bio- + -metry. Coined by Whewell, popularized 1860s by T.S. Lambert. Later, "application of mathematics to the study of biology" (1894). உய்தல் = வாழ்தல். உய்யும் பொருள்கள் வாழும்.  

இனி geometry (n.) இதைப் புவிமானம் அல்லது குவிமானம் எனலாம். குவிந்து திரண்டது குவியம், அல்லது குவலயம்.. இக்காலத்தில், வரலாற்றுச் சொற்பிறப்பியல் காட்டும் குவியைத் தவிர்த்து வடிவியல்/ அளவியல் என்றும் சொல்ல முற்பட்டு விட்டோம்   early 14c., also gemetrie, gemetry, from Old French geometrie (12c., Modern French géométrie), from Latin geometria, from Greek geometria "measurement of earth or land; geometry," from combining form of gē "earth, land" + -metria "a measuring of" 

அடுத்தது optometry (n.) தமிழில் கூர்ந்தபார்வை குறிக்க அஃகமென்ற சொல்லுண்டு. அஃகமானம் இதற்குச் சரிவரும். "measurement of the range of vision; measurement of the visual powers in general," 1886, from optometer (1738), name given to an instrument for testing vision, from opto- "sight," from Greek optos "seen, visible" (from PIE root *okw- "to see") + -metry "a measuring of." இன்னொன்று symmetry; ஒன்றுபோல் இன்னொன்று அமைவது. ஓர் உருவத்தின் ஒருபக்கம் போல் இன்னொன்று அமைவதையும் அப்படியே சொல்வர், சம்மானம்>சமானம் எனலாம். சமைதல் - ஒன்றுபோல்  இருத்தல். 

அடுத்தது trigonometry; முக்கோணத்தை இந்தையிரோப்பியன் trigona என்னும். ”மூன்று” எனும் இடுகையில்   (https://valavu.blogspot.com/2020/12/blog-post_23.html) துதியும் மூன்றும் ஒருபால் சொற்கள் என்று நிறுவியிருப்பேன் துதியும் துரி>த்ரியும் தொடர்புள்ளவை. முக்கோணமானம் என்பது  trigonometry க்குப் பொருந்தும்

அதுபோக, மா-த்தலோடு தொடர்புள்ள வேறுசில சொற்களும் உண்டு. amenorrhea= மாதவடி(ப்பு) நிற்றல்;  menarche மாதவடி பூப்பு; menopause மாதவடி நிற்பு;  menses= மாதவடி;  menstrual= மாதவடிப்பு;  menstruate= மாதவடி-த்தல்;  mensural= மாதவடி;  commensurate = மதியுறு-த்து;  meal(n.1)= "food, time for eating= உண்மதியம்; measure= மாத்திரை ; meniscus= மட்டிகை (மட்டத்தோடு தொடர்புற்றது);  Monday= மதிநாள்; month= மாதம்;  moon= மதி ;  piecemeal= துண்டுமானம்;  

diameter= ஊடுமானம்/விட்டம்; dimension= வடி/பரி மானம்; immense= மாவளவு;  isometric= இசைமான;   meter(n.1)= மடுகை (யாப்பில் அசை என்பர்) "poetic measure; meter (n.2)= மாத்திரி=  unit of length; centimeter= நுறியமாத்திரி;  meter(n.3)= மானி= device for measuring; thermometer= தெறுமமானி;  metric= மத்திகை;  metronome= மாத்திரை அளவி;  parameter= பரமானம்; ஓர் ஒக்கலிதி (equality) வேறிகள் போகப் பரமானங்களும் உண்டு. பரமானத்தைப் பரமத்திகை என்றுஞ் சொல்லலாம். parametric equation = பரமத்திக ஒக்கேற்றம் அல்லது பரமத்திகச் சமன்பாடு. pentameter= பந்தமானம்; பற்றுவது பந்தம் இப்பந்தமே வடபால் மொழிகளிலும் இந்தையிரோப்பியனிலும் ”பஞ்ச, பந்த” என்று பயிலும். perimeter= பரிமானம் ; semester= துவ்வ மானம் (சுருக்கமாய்த் துவ்வம்).; trimester = மும்மானம் அல்லது முப்பருவம் (சுருக்கமாய் முவ்வம்).

அன்புடன்,

இராம.கி.


Wednesday, December 23, 2020

மூன்று

கடந்த 70000 ஆண்டுகளில் எப்போது முகன மாந்தன் (modern man) ’எண்’ணத் தொடங்கினானென்பது அறிய ஒண்ணாதது. ”இரு விரல்கள், இரு பூனைகள், இரு பழங்கள்” என்ற அறிவை அப்பூதியாக்கி (to abstract) இரட்டுமைக் (two-ness) கருத்து எப்போது புரிந்ததோ அப்போதே எண் பற்றிய சிந்தனை அவனுக்கு எழுந்திருக்கலாம். ஒருவேளை 50000 / 60000 ஆண்டுகள் முன் முதல்மொழி தோன்றுகையில், (அதற்குமுன் மொழி எழுந்ததாய் இற்றை அறிவியல் கருதவில்லை.) மாந்தன் ’எண்ணத்’தொடங்கினானோ, என்னவோ? ”ஒன்று, இரண்டு, பல” என்றவாறு பொருத்தும், சேர்க்கும், இள்ளும், இணர்க்கும், இணைக்கும் போக்கு, கொஞ்சங் கொஞ்சமாய் ஏற்பட்டது கூட இள்> *இண்> எண் சிந்தனை (இதுவே என் புரிதல். எள்>எண் என இப்போது கருதுவதில்லை) வளர்ச்சிக்குக் காரணமாகலாம். புதிதாய்ப் பேசத்தொடங்கும் பிள்ளைகூட, “ஒன்று, இரண்டு, பல” என்றே முதலிற் புரிந்து கொள்வதாகவும், பின் சிச்சிறிதாய் அப்பூதி எண் (abstract number) கருத்தைப் புரிந்து கொள்வதாயும் குழவிவளர்ப்பு வல்லுநர் சொல்வர்.  

பல்வேறு தொல்முது குடியினரும், பெரும்பாலும் ஒன்று, இரண்டு, இரண்டொன்று, இரண்டிரண்டு, பல என எண்ணுவதையும், இரண்டொன்றை மூன்றாகவும், இரண்டிரண்டை நாலாகவும் சொல்வது பழங்குடியினருக்குச் சரவலாவதையும், The universal history of numbers என்ற 3 பொத்தகங்களில்  [Penguin Books India, 2005] Georges Ifrah காட்டி யிருப்பார். (இயன்றோர் இப் பொத்தகங்களைக் கட்டாயம் படியுங்கள். இணையத்தில் தமிழெண்கள் பற்றித் தப்பும் தவறுமாய்ப் பல செய்திகள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. Georges Ifrah இல் இருந்து வேறுபடலாம். ஆனால் அவரைப் படித்தபின் வேறுபடுங்கள். கற்பனையில் எண்ணாய்வுக் கோட்டை கட்டாதீர்கள்.) இதேபோல், பல்வேறு பொருட்தொகுதிகளை நம்முன் காட்டி அவற்றை ’எண்’ணிக் கணக்கிடாமல், பார்த்த அளவிலேயே “எத்தனை பொருட்கள் நமக்குத் தெரிகின்றன?” என வினவினால், நம்மில் பலரும் நாலுக்குமேல் இனங் காட்டத் தடுமாறுவதையும் நாலுக்குமேல் நினைவுகுன்றிப் ’பல’ என்று சொல்வதையும் அவர் சான்று காட்டுவார். 

இவ்விடுகை 3 ஐப் பற்றியது. (ஒந்து/ஒண்ணு/ஒன்னு எனும் 1 ஐப் பற்றி https://valavu.blogspot.com/2005/11/blog-post_03.html இடுகையில் சொன்னேன். ஈல்>ஈர்>ஈர்ந்து; ஈர்> இரு> இரள்> இரள்தல்> இரள்ந்து> இரண்டு எனும் 2 ஐப் பற்றிப் பல கட்டுரைகளில் எழுதியுள்ளேன். அவற்றைத் தொகுத்து ஒரு தனியிடுகை இடவேண்டும்.  (உலகின் பல பழங்குடிகளும் (1,2, பல) என்றோ, (1,2,3, பல) என்றோ, எண்ணுவதில் தேங்கி நின்றார். இன்னுஞ் சில குடிகள் கைவிரல் கொண்டு, ஐந்து எனும் கருத்தீடு வரை வந்தார். ஐ, ஐது, ஐந்து, அய், செய் என்றும் தமிழிற் சொல்லப்படும் அள்>அய்>ஐ என்று இச்சொல் வளரும். அள்ளுதல்= சேர்த்தல். ஐந்து விரலும் சேர்த்தே அள்ளுகிறோம். அஞ்சென்பது ஐந்து> அய்ந்து> அய்ஞ்சின் பேச்சுவழக்கு. இன்னும் வளர்ச்சியடைந்தோர் மட்டுமே 4,6,7,8 ஆகியவற்றையும் எண்ணி வளர்ந்துள்ளார். பத்தும் ஒன்பது போன்றவை ஏற்பட்டது நீண்ட கதை. இவற்றைச்சொல்லாது 3 ஓடு நின்றுகொள்கிறேன்.

தமிழிய மொழிகளில்,  ”மூன்று” தமிழிலும், ”மூது” தெலுங்கிலும், ”மூறு” கன்னடத்திலும், ”மூ(ந்)நு” மலையாளத்திலும், ”முஜி” துளுவிலும், ”முண்ட்” கோண்டியிலும், ”மூண்டிங்” கொலாமியிலும், ”மூண்ட்” குருக்கிலும், ”முசி” பிராகுயிலும் பயிலும். https://www.etymonline.com/search?q=three இடுகையில்  இந்தையிரொப்பிய மொழிகளில் பயிலும் சொற்கள் சொல்லப்படும். (இந்தை யிரோப்பியன் குடும்பம் தமிழியக் குடும்பத்தோடு ஏதோ வகையில் தொடர்பு காட்டும். எனவே அதையும் தெரிந்துகொள்வது நல்லது தான். நம்மிடம் இருந்து அரேபியர் எண்வடிவத்தை  அறிந்து மேலையுலகில் பரப்பியதால், அதையும் ஆய்வது நல்லதே,  அடுத்த 3 பத்திகளில் இந்தையிரோப்பியன் செய்தி வருகிறது.

three (adj.,n.) "the number which is one more than two; a symbol representing this number;" Old English þreo, fem. and neuter (masc. þri, þrie), from Proto-Germanic *thrijiz (source also of Old Saxon thria, Old Frisian thre, Middle Dutch and Dutch drie, Old High German dri, German drei, Old Norse þrir, Danish tre), from nominative plural of PIE root *trei- "three" (source also of Sanskrit trayas, Avestan thri, Greek treis, Latin tres, Lithuanian trys, Old Church Slavonic trye, Irish and Welsh tri "three") என்பார். சொற்பிறப்பியலார் SKEAT கீழுள்ள்தைச் சொல்லி யிருப்பார்.   

THREE, two and one. (E.) M. E. thre, Wyclif, Matt, xviii. 20. A.S. thred, Matt, xviii. 20 ; other forms thrio, thri, thry, Grein, ii. 599. + Du. drie. +Icel.thrir (fem, thrjar, neut. thriu). +Dan.tre. +Swed.tre. +Goth.threis. +G.drei +Irish,Gael.,and W.tri. +Russ.tri. +Lat.tres, neut. tria +Gk. treis, neut. tria.+ Lithuan. trys (stem tri-). + Skt. tri. All from Aryan TRI, three (masc. TRAYAS, neut. TRIA) ; Fick, i. 604. 

Origin unknown; some have suggested the sense 'that which goes beyond,' as coming after 2. Cf. Skt. tri, to pass over, cross, go beyond, fulfil, complete. Perhaps it was regarded as a 'perfect' number, in favour of which much might be said. Der. three-fold, A.S. thrifeald, thriefeald, Alfred, tr. of Boethius,c. xxxiii. 4 (b. iii. met. 9); three-score, Much Ado, i.i.aoi; also thri-ce, q. v.; and see thir-d, thir-teen, thir-ty. From the same source are tri-ad, tri-angle, tri-nity, tri-pos, &c. See Tri-. Also tierce, terc-el, ter-t-ian, ter-t-i-ar-y.  

மேலே ”Origin unknown“ என்று சொல்வதைக் கவனியுங்கள். வட இந்திய மொழிகளிலும் ”திரிச்” சொற்களை மொழியறிஞர் அடுக்குவாரே தவிர, சொற்பிறப்பியல் என்னவென்று சொல்லார், இதை ஒழுங்கே முதலில் நமக்கு உணர்த்தியவர் பாவாணரே. 1, 2, 3, 5, 10, ஆகிய எண்களின் செய் அடையாளங்களும் அவற்றிற்கான பெயர்களும் மாந்த உறுப்புகளை வைத்தே எழுந்திருக்கலாம். இன்றுங் கூட, 1 ஐக் காட்ட, ஆள்காட்டி விரலையே பயன் படுத்துவோம்  2 ஐக் காட்ட, ஆள்காட்டி விரலும், நடுவிரலும் பயன்படும். 3 ஐக் காட்ட ஆள்காட்டி, நடுவண், மோதிர விரல்களைப் பயன்படும். மூவிரல் அடையாளத்தை விட, (2 துளைகள், 3 தோல்பிரிவுகள் கொண்ட). மூக்கைத்  தொடுவது 3 கோட்டை எளிதாய் அடையாளங் காட்டும். (கை எப்படி ஐந்தைக் காட்டியதோ, அதுபோல் இதுவும் முடியும்.. பழக்கந்தானே? ஓர்ந்துபாருங்கள்.) தொடக்கத்தில் உலகெங்கும் 3 இன் குறியீடாய் 3 கோடுகள் படுத்தோ, குத்திட்டோ, ஒருமுனையில் ஒட்டியோ கிடக்கும்  இன்று நாம் பயிலும் அரேபிய எண்வடிவு வளர்ந்த வகையையும் கூர்ந்து பாருங்கள். 2 துளை 3 தோல் உருவத்திற்கும் மூக்கிற்கும் உள்ள ஒப்புமை சட்டெனப் புரிந்துபோகும்  

சரி, மூக்கு, மூன்று ஆகிய சொற்கள் தமிழில் எப்படி எழுந்தன? முல், முன், முள், மூ, மூன்று என்பவை முன்வரல் பொருளில் எழுந்தவை. முல்லல்= முன்வரல். முல்>முன்= முன்மைக் கருத்து. முல்>முள்> முளு>முழு>முகுதல்= முன்வரல்; முகுதல்>முகுத்தல்= முன்வர வைத்தல் (பிறவினைச் சொல்); முகு>முகம்= தலையின் முற்பகுதி; முகு>முகரை= மூக்கும் வாயும் சேர்ந்த பகுதி; முகு> முக்கு> மூக்கு= முகத்தில் வாய்க்கும் முன்னுறுப்பு;  முகஞ்சி>மூஞ்சி= மூக்கும் வாயும் சேர்ந்து முன்னீண்ட முகம்; முகனை= வீட்டின் முன்புறம்; main. முகனை= சொல்லின் முன் எழுத்து,  இதுவே, யாப்பில் திரிந்து மோனையாகும். முகப்பு = வீட்டின் முன்பகுதி. முகு-த்தல்>மூ-த்தல் ஆயினும் முன்வரல் பொருளைக் கொடுக்கும். அகவை உயர்வையும் உணர்த்தும்.

மூ(ல்)>மூ என்பது மூன்றின் பெயரடையுரு. முல்நுதல்>முன்னுதல்>மூனு>மூன்று என்பது எண்வளர்ச்சி. மூனு, மூணு என்றும் திரிவு காட்டும். மூற்றை = triple. மூக்கு என்பது பறவை அலகையும், யானைத் துதிக்கையையும் குறிக்கும். கிண்ணியின் spout உம் மூக்கு எனப்படும்.  மூழ்த்தல்= மூட்டல்> மூத்தல்> மூத்திரம்= முன்னே பாய்ச்சும் சிறுநீர்; மூதம்= முன்னெழும் விந்து; மூதலித்தல்= முன்னிகழ்வை நிறுவிக் காட்டும் வினை,  மூரல்= முன்வரும் பல்;  முல்> மூல்> மூலம்= முன்வரும் முளை; மூலி/மூலிகை = முளைத்துவரும் வேர், இலை போன்றன. மருத்துவப் பொருள்கள். மூலிகம்> மூளிகம்> மூடிகம்> medicine (ஆங்கிலத்தில் சொற்பிறப்பு காட்டார்.)  முன்வருவது இன்னொரு பொருளோடு முட்டும் முள்தல்>முட்டல்; மூலை = பக்கங்கள் முட்டும் corner. முள்ளுவது முழுகும் பின் மூழ்கும். முள்> மூழ். 

தமிழ் மூக்கைப் பார்த்த நாம், இனி ஆங்கில nose (n.) ஐப் பார்ப்போம்.  Middle English nose, from Old English nosu "the nose of the human head, the special organ of breathing and smelling," from Proto-Germanic *nuso- (source also of Old Norse nös, Old Frisian nose, Dutch neus, Old High German nasa, German Nase), from PIE root *nas- "nose." Used of beaks or snouts of animals from mid-13c.; of any prominent or projecting part supposed to resemble a nose from late 14c. (nose cone in the space rocket sense is from 1949). Meaning "sense of smell" is from mid-14c. Meaning "odor, scent" is from 1894. In Middle English, to have one's spirit in one's nose was to "be impetuous or easily angered" (c. 1400).

மேலே  any prominent or projecting part supposed to resemble a nose என்பதைப் பார்த்தால் to project- என்பதே மூக்குச் சொற்பிறப்பியலில் முன்மைக் கருத்தெனப் புரியும், முகர்தல், மூக்குச் சொற்பிறப்பிற்கான முதற்பொருளல்ல; மூக்கில் பெற்ற வழிப்பொருள். இதைக் குழப்புவது முறையல்ல, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலியில்  இக் குழப்பமுண்டு.  (அந்த அகரமுதலியில் ஆய்ந்தால், ஏராளம் குறைகளுண்டு, ஆயினும் அதை  நாடத்தான் வேண்டும். எதிர்காலத்தில் புது எடுவிப்போர் - new editors- அதன் குறைகளைக் களையட்டும்)   nose என்பது நமக்கு அயலில்லை. முன்வரும் மூக்கு முகர, நுகரப் போலியில் முதி>நுதி>நுசி>நொசி>நாசி ஆகும். இது வடபால் மொழிகளிலோ, இந்தையிரோப்பியனிலோ கிட்டாது,  நுல்>நுள்>நுழு> நுகு என்ற வளர்ச்சியிலும் சொற்களுண்டு, தவிர, நுல்+தல் = நுற்றல்>நுற்றி>நெற்றி> நெத்தி என்பதை நோக்குங்கள். நுத்தி>நெத்தி என்றும் இது புரிந்துகொள்ளப் படும். நுது>நுதல் என்பதும் நெற்றியே. இச்சொற்களை எல்லாம் பார்க்கையில் நாசி எனக்குத் தமிழ் போலத் தான் தென்படுகிறது..  

இன், துகரச் சொற்களுக்கு வருவோம். முகரத்திற்கு நுகரம் ஒருவகை போலி எனில் நுகரத்திற்குத் துகரம் வேறுவகைப் போலி. துல்>துள்>துள்ளல்= முன்வரல். மாந்தர், விலங்கு, திண்மம், நீர்மம், வளிமம் என யாரும்/எதுவும் முன்வரலாம். துள்ளு>துளு<துளி= முன்னெழுந்து, பரப்புவிசையால் (surface force) சொட்டுச்சொட்டாய் நீர்மம் மாறுதல். துள்>தூள்>தூள்சு> தூசு> தூசி (திண்மத் துளி) துகள் என்பதும் தூள்தான், .தூள்>தூள்வு>தூவுதல் என்பது துளிக்கும், தூளுக்கும் உண்டு. துளு>துளும்பு= முன்வரல். அடுத்த ளகர, டகரத் திரிவில் துளு> துடு> துடங்கு> துடக்கு> துடக்கம்>தொடக்கம்= முதலில் நேர்வது. துளு>துடு>துடி கிடக்கும் பரப்பு/பட்டை குறுக்குவெட்டில் முன்னெழுந்து துடிப்பது. துடு>துடுப்பு படகு நகரும்படி,  முன்வந்து நீரைப் பின் தள்ளுவது. துள்வு>துவு>துவங்குதல்>துவக்குதல்>துவக்கம். (தொடக்கம், துவக்கம் ஆகிய இரண்டும் தமிழே.) துவல்>துவலை>திவலை = நீர்த்துளி

அடுத்து, டகர, தகரத் திரிவிலும் இதே கருத்தீடு பயிலும். துத்தம் = குரலுக்கு மேல்வரும் இசைச்சுரம். துத்தரி = மேல்வரும் ஊதுகொம்பு. துத்தியம் = புகழ்ச்சி. துதம் = துதி முன்நிற்போரைப் புகழும் போற்றுதல். துதி = கம்பு, கோலின் நுனி. துருத்தி = ஆற்றிற்கும் முன்வந்து நீளும் நிலநீட்சி. துருத்தி = உறை (sheath). யானையின் மூக்கு துதிக்கரம் = துதிக்கை எனப்படும். துதி தமிழ் என்பதற்கு இந்த யானை மூக்கு ஒன்றே போது,. துந்தம்>துந்தி>தொந்தி (எருதின் முன் தள்ளிய வயிறு. நந்தி என்ற பெயரே துந்தி>தொந்தியை உணர்த்தும், மாந்தரின் முன்தள்ளிய வயிறும் தொந்தி எனப்படும். துந்துபி = பேரிகை  (இசைப் பல்லியத்தில் முன்நிற்கும் முழங்குகருவி. துளும்பு> துடும்பு> துதும்பு>ததும்பு டகர, ரகரத் திரிவிலும் பல சொற்களுண்டு. துருத்தல்> துரத்தல்= முன்னோக்கிச் செலுத்தல். துரிதல் = தேடுதல். துரு = மண்ணிலிருந்து மேல்வளர்ந்த மரம். துரு/துருசு = இரும்பின் மேல்மையும்  கறை. துருக்கப்பல் = துருத்தப்பல் = முன்வந்த பல். துருத்தி = ஆற்றிடைக் குறை, உலையூது கருவி. துருவம் = தேடுகை

மூக்கின் மறுபெயராய், துண்டத்தையும், நாசியையும் திவாகரமும், கூடவே கோணத்தையும் பிங்கலமும்.  ஆக்கிராணம் எனும் வடசொல்லை சூடாமணி நிகண்டும் சொல்லும்., துள்+ந்+து = துண்டு>துண்டம் = துளை கொண்ட பறவை யலகு , மூக்கு, துதிக்கை போன்றன. நாசி பற்றி மேலே சொல்லிவிட்டேன். குள்> கொள்> கோள்> கோண்> கோணம் = கூர்மையான ஏனத்தின் மூக்கு.  ஆக்கிராணம் என்பது கந்தம் = மணம் என்பதோடு தொடர்புடையதாய்த் தெரிகிறது.

இனி முடிவுரைக்கு வருவோம். துதி என்பது நம்மூரில் யானை மூக்கைக் குறித்தது. முக்கைக் குறிக்கும்படி ”துரி” என்பது நம்மூரில் இல்லைதான். ( அதனால் என்ன? சோழ>சோட>சோர என்ற திரிவில் ’சோழ’ மட்டுமே நம்மூரில் உண்டு.மற்ற இரண்டும் ’சோழ’ என்பதன் திரிவுகளென்று சொல்லாதிருக்க முடியுமா?) துரி>த்ரி>திரி என்பது இந்தையிரோப்பியனில் மூன்றைக் குறித்தது. திரியின் மூக்குத் தொடர்பை அவர் இன்றுவரை அறியவில்லை. Origin unknown என்பார். ஆனால் நுதி>நுசி>நொசியை இன்றும் கூட மூக்கிற்கு இணையாய்ப் பயன்படுத்துவார். மூக்கு-நாசி- துதி என்பது தான் இக்கட்டுரையின் அடிக்குறிப்பு. மூன்று - திரி என்பது இந்த அடிக்குறிப்பால் ஏற்பட்ட விளைப்பு. 

கட்டுரையை முடிக்குமுன் இரு உதிரிச் செய்திகள். இங்கிலாந்தின் Teesdale, Swaledale பகுதிகளின் கிளைமொழியில் tether/ tethera என்றும் 3 (cardinal number three) பழைய எண்ணிக்கைக் கட்டகத்தில் ( old counting system) அழைக்கப் படுகிறது. அரபியில் 3 என்பது THALATHA- ثلاثة - THREE எனப்படும். துளதா>தலதா என்பதும் துளையோடு தொடர்பு காட்டும். 

அன்புடன், 

இராம.கி.


Monday, December 21, 2020

laboratory

 கீழே வரும் அத்தனை சொற்களுக்கும் சொற்பிறப்பு உழைத்தல் தான். to work.to exert the body, to toil, to go through pain, etc. செய்தல் என்றாலும் அதே பொருள் தான்.  செய்தல் என்பது to process என்பதற்கு இணையாகப் புழங்கி வருகிறேன். இந்த உழையத்திற்கு வந்து சேர எனக்கு நெடுநாட்கள் பிடித்தன. வேறு ஏதேதோ பயன்படுத்தி, அவையெல்லாம் கனவுலகச் சொற்கள் என்று தவிர்த்து முடிவில் இதற்கு வந்தேன். பல கூட்டுச் சொற்களுக்கு உழை என்பது புணர்ச்சியில் இணங்கிவரும். 

உழைத்தல் என்பது முயற்சி செய்தல், வருந்துதல் என்ற பொருட்பாடுகளைக் குறிக்கும். ஒரு குறிப்பிட்ட வேலையைத் திருப்பித் திருப்பிச் செய்து நேர்த்தியான செய்முறையைக் கண்டுபிடிப்பதையே laboriously working என்கிறோம். கண்டுபிடிப்பு என்பது வேறு; (அது நமக்குக் கனவைத் தரும், சாதிப்பைத் தரும்.) ஒழுங்கான செய்முறைகளுக்குத் தக்கத் தமக்குத் தாமே ஏற்படுத்திக் கொண்ட விதிகளிலிருந்து வழுவாது செய்யும் lab work வேறு. உழையப் பணிகளில் இருக்கும் dredgery உழையம் என்ற சொல்லில் வெளிப்படுகிறது. செய்களம் என்பது கனவு தரும் சொல். நான் என் ஆய்வுப் பட்டப் பணிக்காக அத்தகைய உழையத்தில் 3.5 - 4 ஆண்டுகள் புகுந்து வந்தபோது, ஒவ்வொரு உருப்படியான தரவுப் புள்ளியைத் தேடும் போது, இந்த உழைப்பு முதன்மையானது, எல்லாமே  10% inspiration, 90% perspiration என்று உணர்ந்தவன். அப்புறம் உங்கள் உகப்பு.     

அன்புடன்,

இராம.கி.

labor (n.) 

c.1300, "a task, a project;" later "exertion of the body; trouble, difficulty, hardship" (late 14c.), from O.Fr. labour (Fr. labeur), from L. laborem (nom. labor) "toil, pain, exertion, fatigue, work," perhaps originally "tottering under a burden," related to labere "to totter." Meaning "body of laborers considered as a class" (usually contrasted to capitalists) is from 1839. Sense of "physical exertions of childbirth" is 1590s, earlier labour of birthe (early 15c.); cf. Fr. en travail "in (childbirth) suffering" (see travail). Labor Day first marked 1882 in New York City.

labor (v.) 

late 14c., "perform manual or physical work; work hard; keep busy; take pains, strive, endeavor" (also "copulate"), from M.Fr. labourer, from L. laborare, from labor (see labor (n.)). The verb in modern French, Spanish, Portuguese means "to plow;" the wider sense being taken by the equivalent of English travail. Sense of "to endure pain, suffer" is early 15c., especially in phrase labor of child. Related: Labored; laboring.

laboratory 

c.1600, "building set apart for scientific experiments," from M.L. laboratorium "a place for labor or work," from L. laboratus, pp. of laborare "to work" (see labor).

labored 

"learned," mid-15c., pp. adj. from labor (v.).

laborer 

mid-14c., "manual worker," especially an unskilled one, agent noun from labor. Meaning "member of the working class, member of the lowest social rank" is from c.1400.

laborious 

late 14c., "hard-working, industrious," from O.Fr. laborieux (12c.), from L. laboriosus "toilsome, wearisome, troublesome," from labor (see labor (n.)). Meaning "costing much labor, burdensome" is from early 15c.; meaning "resulting from hard work" is mid-15c. Related: Laboriousness.

laboriously 

early 15c., "with difficulty, laboriously, slowly," from laborious + -ly (2). Meaning "earnestly, strongly" is from c.1500.


Saturday, December 19, 2020

உயர்கணிதப் பொதுக் குறிகளும், பொளிகளும்.

Penguin Dictionary of Mathematics என்றோர் அருமையான அகரமுதலி உண்டு. இயன்றோர் இணையத்தில் தேடிப் பாருங்கள். அதின் கடைசிப் பக்கத்தில் கொடுத்துள்ள 7 ஆம் பட்டியலில்  பொதுவான கணிதக் குறிகளையும் (common mathematical signs) பொளிகளையும்  (symbols) கொடுத்திருப்பர். இவற்றிற்கான சரியான கலைச் சொற்கள் இன்றி உயர்கணிதத்தைத் தமிழில் மேலெடுத்துச் செல்வது கடினம்.  பைம்புல மட்டத்திற்கும் (popular level) மேம்பட்டதாய் அறிவியலையும், நுட்பியலையும் தமிழில் சொல்லவேண்டுமெனில், உயர்கணிதத்தை விட்டுவிட்டு நகருவதும் கடினமே. 

பலரும் ”பைம்புல மட்டத்திற்கு மேல் தமிழ் ஏன் பயன்படவேண்டும்?” என்று ஒர்ந்து பார்க்க மறுக்கிறார். ”கலைச்சொற்கள் ஏன்? அவற்றின் வரையறைகள் என்ன?” என்று உணரவும் மறுக்கிறார். பொதுவான தாளிகைகளில், நாளிதழ்களில்  வரும் சொற்களைப் போல் ”பாமர நிலையிலேயே தமிழ் மொழி எந்நாளும் நிற்கட்டும்” என எண்ணவும் தலைப்படுகிறார். இச் சிந்தனையில் இருந்து நான் மாறுபட்டவன். தமிழில் எக்குறையும் இன்றி, உயர்கணிதம், அறிவியல், நுட்பியல் ஆகியவற்றை எதிர்கால மாணவர் தமிழ் வழி படிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். எனவே கீழ்வரும் சொற்கள் கட்டாயம் எனக்கு வேண்டும். குறிப்பிட்ட பட்டியலையும் அதில் வரும் கலைச்சொற்களுக்கு ஆன தமிழ் இணைச்சொற்களையும் கீழே கொடுத்துள்ளேன்.  


equals sign = ஒக்குமைக் குறி

inequality = ஒக்காமை

approximation = பக்கமடை

identity, congruence modulo n = ஒற்றம், n மூட்டுக் கூடுகை

plus sign பலைக் குறி; (https://valavu.blogspot.com/2010/04/3.html)

minus sign நுணைக் குறி 

plus/minus sign பலை/நுணைக் குறி

multiplication sign பெருக்கல் குறி

division sign = வகுத்தல் குறி

divisor = வகுதி

radical = மூலம் 

exponent = மடக்கு 

ratio = வீதம்

variation = வேற்றம்

interval = இடைவெளி

binomial coefficient இருமக் கெழு

summation sign = கூடுகைக் குறி

continued product தொடர்ப் பெருக்கு

integer part தொகுவப் பகுதி

n-tuple = n- மடை 

set = கொத்து

subset = உட்கொத்து

proper subset = முறையான உட்கொத்து

union = ஒன்றியம்

intersection = இடைச்செகுத்தம்

difference = விட்டாயம் (இதுவே விட்டாயம்>வித்தாயம்>வித்யாயம்>வித்யாசம் என்று சங்கதத்தில் மருவும். ஒன்றை விட்டு இன்னொன்று ஒன்றிலிருந்து இனொன்று என்று பொருளாகும். ஆயம் = மதிப்பு.)    

complement = உடன்படுவம் 

empty set = வெற்றுக் கொத்து

universal set = ஒருங்கக் கொத்து

cardinal number கட்டு எண்

power set = புயவுக் கொத்து

cartesian product = கார்ட்டீசப் பெருக்கு

and = உம்

or = அல்

not = இல்

implication = அடிப்படுகை

equivalence = ஒக்குமை

quantifier = எண்ணுதியாக்கி

function (map, mapping) = வங்கம் (முகப்பு, முகவுதல்) 

inverse function = தலைகீழ் வங்கம்

limit = எல்லை

asymptotic = ஒட்டுப் போலி

derivative = திரிவு 

partial derivative = பகுதித் திரிவு

integral = தொகை

multiple integral = பல்மடித் தொகை

vector = வேயர்

position vector = பொதிய வேயர்

absolute value = முற்றை மதிப்பு

scalar product = அளவர்ப் பெருக்கு

vector product = வேயர்ப் பெருக்கு

norm = நேர்வம்

determinant = தீர்மானன்

matrix = அணி

inverse (of a matrix) = அணியெதிர்

transpose = பொதிப்பெயர்ப்பு

complex conjugate = பலக்குக் சேர் உகத்து 

Hermitian conjugate = எர்மீசியச் சேர் உகத்து 

probability = பெருதகை

expectation = எதிர்பார்ப்பு

variance = வேறுகை

covariance = கூ வேறுகை

complex number = பலக்கெண்

modulus = மூட்டில்

argument = வெள்ளிமை

அன்புடன்,

இராம.கி.


 


Wednesday, December 16, 2020

குருதயமும் (heart) குருதியும் (blood) - 3

 (குருதி, எருவை, இரத்தம், உதிரம்), (சுடுவன்), (புண்ணீர்), (செந்நீர், சோரி, சோணிதம்), (நெய்த்தோர், கறை  என்ற 11 சொற்களை blood இன் தொடர்பாகத் திவாகரத்தின் 554 ஆம் நூற்பா குறிக்கும். மேலும், செம்பால், புலானீர் என்ற 2 சொற்களை பிங்கலமும், சூடாமணி நிகண்டும் குறிக்கும். அச்சொற்களை 5 தொகுதிகளாய்ப் புரிந்துகொள்ளலாம்) 

முதல்வகைச் சொற்களான குருதி, எருவை, இரத்தம், உதிரம் என்பவை குருதி யோட்ட ஒலியால் எழுந்தவை. நெஞ்சில் காதுவைத்துக் கேட்டால், குளுகுளு> குடுகுடு> குருகுரு ஒலிக்குறிப்பில் இரத்தவோட்டத்தை உணர்வோம். இதன்வழி ஓர்ந்தால், குரு-தல் வினை, ஓடுவினைக்குப் பகரியாகலாம். குருதும் (=ஓடும்) நீர்மம் குருதியாகும். படுதல்> படுவுதல் ஆவது போல், குருதலின் பொருள் கெடாது, குருவுதlலாகலாம்; குருவுதல்>கெருவுதல் என்றும் திரியலாம். கெருவதலிற் ககரங்கெட்டு, எருவுதல்>எருவை ஆகும். குருத்தல்> கெருத்தல்> இருத்தல்> இரத்தல் திரிவில், ககரங்கெட்டு இரத்தமாகும். (இரத்தம் X அரத்தம் வேறுபாட்டிற்குக் கீழே வருவேன்.) அடுத்துக் குளுகுளு>குடுகுடு என்பது குதுகுது ஆகலாம். ”குதி” வினை இதனிற் பிறக்கும். குதி> குதிர்> உதிர்> உதிரம் என்பதும் ககரங்கெட்டு உருவானதே. 

குருதிக்கான எல்லாச் சொற்களையும் செந்நிற வழிப் பெற்றதாய் ஒருகால் எண்ணினேன். https://valavu.blogspot.com/2020/07/blog-post.html, இப்போது என் புரிதல் மாறி விட்டது, எல்லா விலங்குக்குருதிகளும் சிவப்பில்லை. இருக்க வேண்டியதும் இல்லை. ”அரத்தம் சிவப்பு” என்பது வேட்டுவ மாந்தப் புரிதலில் முகன்மைக் குறிப்பில்லை. சிவப்பு, மாந்தருக்கு நேர்ந்த விதப்பு. விலங்குக் குருதிகள்  சிவப்பு (red), ஊதா (blue), பச்சை (green), மஞ்சள் (yellow), நரங்கை (orange), நீலம் (violet) எனப் பல நிறங்களிலும், நிறம் இலாதும் உண்டு. சில விலங்குகளின் அரத்தங்களில் செம்மைக் கோளங்களும் (hemoglobin), சிலவற்றின் அரத்தங்களில், வேறுவகை உய்ப்பு நிறமிகளும் (respiratory pigments), இன்னும் சிலவற்றில் உய்ப்பு நிறமிகளே இல்லாமலுமுண்டு, ஆனால் எல்லா விலங்குகளும் அரத்தவழி அஃககம் நகர்த்தும் (to transport oxygen) திறன் கொண்டவை.  விலங்குகளை வேட்டையாடிய மாந்தன் இதை உணர்ந்திருப்பான். சிவப்பால் குருதிக்குப் பெயர் வந்தது என்பது பட்டறிவிலாப் பார்வை. 

அடுத்தது சுடுவன். வெட்டுற்ற உடலில் வெளிவரும் குருதி, சுற்றுச்சூழல் வெம்மையை விடச் சற்றதிகம் சூடு காட்டும். சுடும் காரணத்தால் ஏற்படும் சொல் சுடுவன். புண் என்பதை 2 விதம் புரிந்துகொள்ளலாம். ஒன்று, புல்> புள்> புண்= திரண்ட தசை. இன்னொன்று புண் = வெட்டுக்காயம். புண்ணில் இருந்து வெளிப்படுவது புண்ணீர். 4 ஆம் தொகுதி மாந்தக் குருதியின் சிவப்பு நிறத்தால் எழுந்தது. செம் எனும் முன்னொட்டுப் பொருள் குருதியால் எழுந்ததல்ல; எரி/தீ குறித்த சுல் எனும் வேர்ச்சொல்லால் எழுந்தது. செந்நீர், செம்பால் போன்றவை சுல்> செல்> செள்> செய்> செய்ம்> செம் என்றெழுந்தவை. சுல்> சுள்> சொள்> சோள்> சோர்> சோரி= செங்குருதி. சுல்> சுள்> சொள்> சோள்> சோண்> சோணிதம்= செங்குருதி. சோணமலை= அருண மலை. சோணேசன்= அருணேசன்= அண்ணாமலையான், செந்நீர், செம்பால், சோரி, சோணிதம் போன்றவை மாந்தக் குருதி குறிக்கும் விதப்புச் சொற்கள்; குருதிக்கான பொதுச்சொற்கள் அல்ல. 

அடுத்தது நெய்த்தோரும், கறையும். உடம்புவிட்டு வெளியேறும் குருதி, நெய்ப் பசை காட்டும். துவர்தல்= ஒட்டல், உலர்தல். தரையில் விழுந்த குருதித்துளி தரையில் ஒட்டிக் காய்ந்து போகும். நெய்த்துவர்> நெய்த்தோர்.  இனி, காய்ந்த குருதி கறுத்துக் கறையாகும். அடுத்தது புலால்நீர். இதுவும்  ஒலிக்குறிப்பில் எழுந்ததே. (முதற்பகுதியில் ”குளுக், பளுக்” எனும் ஒலிக்குறிப்பைச் சொல்லி பளுக்கை blood-ஓடு தொடர்புறுத்தினேன். ”புலபுல” என்பது விரைவுக் குறிப்பு. “புலபுலெனக் கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர்” என்பார் பட்டினத்தார். (178 ஆம் பாட்டு) (”பொலபொலென ஓடிவந்தான்”). புலவுதல்= ஓரிடம் விட்டு விலகல். தலைவி தலைவனை விட்டு, ஊடலால் விலகினாள்: புலவியது (= இடம்விட்டு விலகியது) புலவு= குருதி ‘புடை அவிழ்ந்த கூந்தல் புலவுத்தோய (சீவக 293) புலவு, புலா  என நீளும். புலா ஆலியது (=நிறைந்தது) புலால். (உடல் தசைக்கு நுண்குழாய் முலம் சத்துக் கொணர்வது குருதி.  புலால் நீர் = புலானீர் = குருதி.  குருதி போகத் தசையையும் அதன் திரட்சிப் பொருளில் புலவு, புலால் என்ற சொற்களால் அழைப்பர்.

புலாலுக்குப் புலை என்றும் பெயருண்டு, புலை= ஊன் ”புலையுள்ளி வாழ்தல்” இன். நாற். 13. புலைசு= புலால். புலைத்தொடர்பால், புலையன்/ஞன், புலைச்சி என்ற சொற்கள் எழுந்தன. கொல்லாமை விழைந்த செயினம் புலைத் தொழிலை  இழிவாய்ப் பார்த்தது. செயினம் மறுக்கவிழைத்த உத்தர மீமாஞ்சையும், சிவமும், விண்ணவமும், சமயப் போட்டியில் வெற்றி பெற, இதேநிலை எடுக்கும் தேவைக்குத் தள்ளப்பட்டன. சாதிநிலை இறுகிய பொ.உ. 3 ஆம் நூற்றாண்டில், இதுபோன்ற தவறான கண்ணோட்டங்கள் தமிழ்க் குமுகாயத்தில் பதிந்து போயின. புலத்து என்னும் இந்தையிரோப்பியச் சொல்லிற்கும் மேலே காட்டிய புலவு, புலா, புலால், புலை போன்ற சொற்களுக்கும் ஏதோவொரு உறவு இருப்பது போல் தான் தெரிகிறது. 

blood (n.) Old English blod "blood, fluid which circulates in the arteries and veins," from Proto-Germanic *blodam "blood" (source also of Old Frisian blod, Old Saxon blôd, Old Norse bloð, Middle Dutch bloet, Dutch bloed, Old High German bluot, German Blut, Gothic bloþ), according to some sources from PIE *bhlo-to-, perhaps meaning "to swell, gush, spurt," or "that which bursts out" (compare Gothic bloþ "blood," bloma "flower"), from suffixed form of root *bhel- (3) "to thrive, bloom." But Boutkan finds no certain IE etymology and assumes a non-IE origin. இதே கருத்தை பேர்பெற்ற ஆங்கிலச் சொற்பிறப்பியலார் Skeat உம் சொல்வார், 

Blood, gore (E) M.E. blod,blood Chaucer, C.T. 1548,A. S. blud (Grein). + Du. bloed. + Icel. blod. + Swed. blod. + Goth. bloth. + O. H. G. pluot, ploot. A. S. blowan, to blow, bloom, flourish (quite a distinct word from blow, to breathe, puff, though the words are related); cf. Lat. flarere, to flourish; see Curtius, i. 375. See Blow (2). ^f Blood seems to have been taken as the symbol of blooming, flourishing life. Der. blood-hound, blood-shed, blood-stone, blood-y, blood-i-ly, blood-i-ness ; also bleed, q. உண்மை எங்கோ ஒளிந்துகொண்டு உள்ளது.

இனி அரத்தம் என்ற சொல்லிற்கு வருவோம். இது எரி/தீக் கருத்தில் சுல்> உல்> உல> அல> அர என்ற வளர்ச்சியில் சிவப்புப் பொருளில் உருவானதாகும்.  ”அரத்தம் உடீஇ அணி பழுப்ப பூசி” என்பது திணை150:144/1. இதில் சிவப்பு ஆடை பேசப்படுகிறது, “அரத்த பூம் பட்டு அரை மிசை உடீஇ” - சிலம்பு, மது:14/86, “பொங்கு ஒளி அரத்த பூ பட்டு உடையினன்” - சிலம்பு, மது:22/46 என்ற இரு காட்டுகளில் சிவப்புப் பட்டாடை பேசப்படுகிறது. இதுவரை அரத்தம் = குருதி என்ற பொருளைக் காணோம்.   அடுத்து, 8 ஆம் நூற்றாண்டு சீவக சிந்தாமணியில் 

இன் அரத்த பட்டு அசைத்து இந்திரற்கும் புகழ்வு அரிதே - சிந்தா:1 173/4

அரத்த வாய் பவள செம் தாள் பெடை அன்னம் அழுவது ஒத்தாள் - சிந்தா:5 1385/4

பரவி ஊட்டிய பஞ்சு அரத்த களி - சிந்தா:12 2396/2

அள்ளி ஏந்திய அரத்த அல்குலார் - சிந்தா:13 2685/

அரத்தகம் அகம் மருளி செய்த சீறடி அளிய தம்மால் - சிந்தா:12 2459/1

அட்டு ஒளி அரத்தம் வாய் கணிகை அல்லது - சிந்தா:1 98/2

அ நுண் துகில் கல் அரத்தம் அல்குல் அது வருத்த - சிந்தா:7 1783/1

அல்லலுற்று அரத்தம் ஆர்ந்த சீறடி தொழுதிட்டானே - சிந்தா:9 2084/4

அஞ்சன நிறம் நீக்கி அரத்தம் போர்த்து அமர் உழக்கி - சிந்தா:10 2239/1

உகிர் வினை செய்து பஞ்சி ஒள் ஒளி அரத்தம் ஊட்டி - சிந்தா:12 2540/

என்ற எல்லாக் குறிப்புகளிலும் சிவப்பு நிறமே பேசப்படுகிறது. குருதி பற்றிய பேச்சே காணோம். அதாவது அரத்தத்திற்கு 8 ஆம் நூற்றாண்டுவரை குருதிப் பொருள் கிடையாது போலும்.  முதன்முதல் கம்பனின் இராமகாதையில் தான் இரத்தமும் அரத்தமும் தம் பொருளில் ஒன்று கலக்கின்ற்ன. 

அரத்த நோக்கினர் அல் திரள் மேனியர் - பால:14 37/1

வாள் அரத்த வேல் வண்டொடு கொண்டைகள் மயங்க - அயோ:1 53/3

அகல் மதில் நெடு மனை அரத்த ஆம்பல்கள் - அயோ:4 176/3

புக்கிலாதவும் பொழி அரத்த நீர் - கிட்:3 48/3

அண்ணல் அ இராவணன் அரத்த ஆடையன் - சுந்:3 40/3

பொங்கு அரத்த விழியோர் புடை சூழ - யுத்1:11 10/4

அண்ணல் வாள் அரக்கர்-தம் அரத்த பங்கிகள் - யுத்2:15 103/2

சேப்புற அரத்த செ வாய் செம் கிடை வெண்மை சேர - யுத்3:25 15/2

நீள் அரத்தங்கள் சிந்தி நெருப்பு உக நோக்கும் நீரான் - ஆரண்:10 164/2

அரத்தம் உண்டனையே மேனி அகலிகைக்கு அளித்த தாளும் - பால:21 5/1

பொங்கு அரத்தம் விழி வழி போந்து உக - ஆரண்:7 22/2

கம்பனுக்கு முன்னால் இரத்தம் வேறு, அரத்தம் வேறு என்பது வியப்பைக் கொடுக்கிறது.  திவாகரம் கூட அரத்தம் என்பதைச் “செங்குவளை, பவளம், அரக்கு, சிவப்பு” என்பதற்கே ஒப்பு ஆக்கும். பிங்கல நிகண்டே அதன்  3078 ஆம் நூற்பாவில், “கடம்புஞ் சுடுவனும் கழுநீர்ப் பெயரும் அரக்கும் செந்நிறமும் அரத்த மாகும்” என்று முதன்முதல் சுடுவனை அரத்தத்தோடு சேர்க்கும்.  இரு வேறு சொற்பிறப்பில் உருவான சொற்கள் பிங்கலத்தின் காலமான 10 ஆம் நூற்றாண்டில் தான் ஒன்றாகியுள்ளன. இன்றோ, ”இரத்தமே தப்பு” என்று சொல்லும் நிலைக்கு நம்மில் சிலர் வந்துள்ளோம். (நானும் ஒருகால் அப்படி எண்ணினேன். இப்பொழுது தவறென உணர்கிறேன்.) இருவேறு சொற்கள் ஒன்றானதை நாம் சரியாய் விளங்கிக் கொள்ள வேண்டும். 

இனி அடுத்த பகுதியில் தசை பற்றிய விளக்கங்களையும், குருதய உள்ளுறுப்புகளையும், குளுகல்(clotting)பற்றியும், இந்தையிரோப்பியன் மொழிகளிலுள்ள குருதி தொடர்பான சொற்களையும் பார்ப்போம்.

அன்புடன்,

இராம.கி.


Thursday, December 10, 2020

குருதயமும் (heart) குருதியும் (blood) - 2

”குருதியின் சொற்பிறப்பு பற்றிய விளக்கம் சொல்லுமுன், முன்பகுதியில் மறந்த, குருதயம் தொடர்பான, இருவேறு செய்திகளைப் பற்றிச் சொல்ல வேண்டும். முதலில் வருவது. பிறங்கு, இறை, வரி/வரை, பொறி ஆகிய குருதயத்தின் இணைச் சொற்களைப் பற்றியது, (இதை அடையாளங் காண்பதில் தமிழ் அகராதிகளும் தடுமாறியுள்ளன. ஒத்திசைவு (consistensy) பார்க்காமலே சிலர் சொற்பொருள்களைப் பதியமுற்படுகிறார். கொஞ்சம் பொறுமையோடு நான் சொல்வதைக் கீழே படியுங்கள்.) இரண்டாவது மார்புக்கான சொற்களையும், அதில் வரும் நெஞ்சை குருதயத்தோடு குழப்பிக் கொள்வதையும் பற்றியதாகும்.  கீழே விளக்கமாய்ப் பார்ப்போம்.

“மெய்த்தகும் இறையே பிறங்கெனப் படுமே” என்பது 399 ஆம் திவாகர நூற்பா,  இதற்கு முன், ”உடல், பிணம், உடற்குறை, பாதம், காலடி, கரடு, கணைக்கால், முழந்தாள், தொடைப்பற்று, குறங்கு, அல்குல், இடை, மருங்குற்பக்கம், வயிறு, ஆண்குறி, பெண்குறி, தொப்பூழ், மார்பு, முலை, தேமல், கை, அகங்கை, விரல், நகம், தோள், முதுகு, தோள்மேல், கழுத்து, பிடர், பிறகு, முகம், உதடு, பல், எயிறு, சிரிப்பு, அண்ணம், கீழ்வாய்ப்புறம், உள்நா, நா, மூக்கு, கதுப்பு, கண், நெற்றி, புருவம், காது, தலை, முடி, பல்வேறு மயிர்கள், மயிர்ப்பரப்பு, மயிர்க்குழற்சி, மயிர்முடி, சடை” என வெளிப்படத் தெரியும் உடற்பாகங்களை, திவாகர நிகண்டின் மக்கட்பெயர்த் தொகுதி சொல்லும். . இவ்வரிசையை அடுத்து (வெளிப்படக் கண்ணுக்குத் தெரியும் உறுப்புகளுக்கும், கண்ணுக்குத் தெரியா உள்ளுறுப்புகளுக்கும் ஆன பொதுப்பெயரை நிகண்டு சொல்லும். 

இதையடுத்து,  ”சந்து (joint), இறை, உடல்தழும்பு (காயத்தின் அடையாளம்) , கழலை (கட்டி), நரம்பு (nerve), எலும்பு (bone), தலையோடு (கவாலம்), முழு எலும்பு (entire bone network), குடுமி (தலையில் பொருந்தும் மயிர்), கவால உச்சி, இந்திரியம் (reproductive glands), புலனறி கருவி (sensory perceptors)” எனும் உள்ளுறுப்புகளை திவாகர நிகண்டு விவரிக்கும். இப்படி வரும் ஒழுங்கு முறையால், ”பிறங்கு” என்பது  ஓர் “உள்ளுறுப்பு:” என்பது விளங்கும், பெரும்பாலான அகர முதலிகளில், பிறங்கின் பொருளாய் “விரலிறை” என்று குறிப்பார். விரல் எனும் வெளியுறுப்போடு இப்படிப் பிறங்கைப் பொருத்தி (20 ஆம் நூற்றாண்டு) அகராதி சொல்வது (9 ஆம் நூற்றாண்டு) நிகண்டிற்கு முரணாகிப் போகிறது. அப்படி எனில், இறை என்பதன் பொருள் தான் இங்கு என்ன? (இறைக்கு வேறு பொருள்களும் உண்டு.) 

”இறை-” எனும் வினைச்சொல்லிற்கு, ”தூவு, வீசு, எறி, பாய்ச்சு, தங்கு” போன்ற பொருள்களைச் சொல்வர். இறை- வினையடியில் பிறக்கும் பெயர்ச்சொற்கள் பல்வேறு உருபுகளையும், ஈறுகளையும் சேர்த்தே உருவாகும். காட்டு: இறைப்பி = pump. இதுவும் இறை-த்தொழிலில் ஏற்பட்டதே.  பழங்காலத்தில் “ப்பி” சேராத ”இறை” என்பது ஒருவேளை பாய்ச்சும் கருவியைக் குறித்ததோ? - என்ற இயல்பான ஐயம் நமக்கெழும். உடலுள் உறுப்பாகும் ஒரே இறைப்பி குருதயம் தானே? ஆக, ”இறையும்” குருதயம் தானா? ஏனெனில் தொடர்புள்ள இறு> இற்று> இற்றி; இறு> இறை> இறைச்சி போன்றவை எலும்போடு ஒட்டித் தங்கும் ஊனைக் குறிக்கின்றன. இறைச்சியின் ஊன் பொருளைக் கண்டே ”இறை” நோக்கி நான் ஓர்ந்துபார்க்க விழைந்தேன்,

சரி! “பிறங்கிற்கு என்ன பொருள்?” அதை வினை வழியே பார்ப்போம். பிறங்கின் 9 பொருள்களில் பெருகுதலும் (to overflow, inundate. மாய்ப்பதோர் வெள்ளம் போலும் -- பிறங்கி வந்து, கலித் 146), ஒலித்தலும் (to sound) நம்மைக் கவனிக்க வைக்கும். வெள்ளம்போல் ”இறை” அரத்தத்தை இறைக்கிறது. ”பிலக்” என்ற ஒலியோடும் அது செயற்படுகிறது, பிலக்>பிறக் என்பது ஒலிப்பில் மெலிந்து பிறங்கு ஆகலாம். ஓர்ந்து பார்த்தால், குருதயத்தைக் குறிக்க “பிறங்கு” எனும் சொல் முற்றிலும் பொருத்தமே. பிங்கலம் 1082 ஆம் நூற்பா, “பிறங்கு, வரி, பொறி, வரை, இறையாகும்” என்பதில் வரும் வரி, வரை என்பன அரத்த ஓட்டத்தால் எழுந்தவை. வரித்தல்/வரைத்தல் = ஓடுதல்.  பொறி என்பது அரத்தம் இறைக்கும் எந்திரத்தைக் குறிக்கும். குருதயமும் அது தானே?. இனி, 16 ஆம் நூ. சூடாமணி நிகண்டு,  பிறங்கையும் வரியையும் தவிர்த்து, தருபொறி, வரை என்ற சொற்களை மட்டும் காட்டும். ,

சென்ற பகுதியில் விட்டுப்போன இன்னொரு செய்தி மார்பின் (frontside of the chest) பெயர்கள் பற்றியதாகும்.  அகலம், மருமம், ஆகம், உரல்/ம் என்ற சொற்களைத் திவாகரமும், இவற்றோடு நெஞ்சைச் சேர்த்துப் பிங்கலமும், சூடாமணி நிகண்டும் தரும். தொல்காப்பியத்தில் புழங்கும் ”நெஞ்சு”, திவாகரத்தில் விடுபட்டது, வியப்பாகிறது. மார்புக்கு மேல் உள்ளது முலை, முலைக்கு மேல் உள்ளது முலைக்கண். மார்பின் பின்னுள்ளது முதுகு/புறம். இனி மார்பின் சொற்பிறப்பிற்கு வருவோம். அகலமும், ஆகமும் ஒரே மாதிரி எழுந்தவை. நம் உடம்பில் வெளிப்படத் தெரியும் உறுப்புகளில் மார்பே அகலமானது. அகல்> அகல்வு> அகவு> அகவம்> ஆவம்> ஆகம் என்பது அகலத்தின் இன்னொரு சொல்வளர்ச்சி, இனி நெஞ்சிற்கு வருவோம்.

நெஞ்சு என்பது மார்பின் 2 பரிமானக் குறிப்பு. ஒரு துணி நெய்கையில் வார்ப்பு நூலும் (warp thread) ஊட்டு நூலும் (weft thread) பின்னிப் பிணைந்து நெய்யப் படுகின்றன. நெய்தல் வினை, நெய்வு>நெசவு எனும் பெயர்ச்சொல்லை உருவாக்கும். நெய்ந்தது>நெய்ஞ்சது>நெஞ்சு என்பது மார்பின் 2 பரிமானக் குறியீடு, நெஞ்சாங்கூடு என்பது நெஞ்சோடு சேர்ந்த என்புக்கூடு (chest). ஆங்கிலச் சொற்பிறப்பும் இக் கூட்டுப் பொருளை அழுத்திச் சொல்லும். chest (n.). Old English cest "box, coffer, casket," usually large and with a hinged lid, from Proto-Germanic *kista (source also of Old Norse and Old High German kista, Old Frisian, Middle Dutch, German kiste, Dutch kist), an early borrowing from Latin cista "chest, box," from Greek kistē "a box, basket," from PIE *kista "woven container" (Beekes compares Middle Irish cess "basket, causeway of wickerwork, bee-hive," Old Welsh cest).

நெஞ்சாங்குலை என்பது நெஞ்சின் பின்னுள்ள குலை. எனவே heart என்று பொருள்படும். வாழை, தென்னை, பனை ஆகிய மரக்கள் குலைகள் தள்ளுவது போல், நெஞ்சுக்கூடு இங்கே குலை தள்ளியது. என்னைக் கேட்டால் நெஞ்சை heart இக்கு இணையாய்ப் பயன்படுத்துவது முற்றிலும் தவறான சொல்லாட்சி யாகும். நெஞ்சாஙுகுலை என்பதே சரியான சொல்லாட்சி. 

அகலம், ஆகம் போல், மருமமும் மார்பும் ஒரேவிதமான சொற்பிறப்புக் கொண்டவை.  மருவுதல் = தழுவுதல். மருமகள்/ன் = தழுவிக் (ஏற்றுக்) கொண்ட மகள்/ன். மருவீடு = சம்பந்தி குடும்பம். மருவுகை = marriage. ஆணும் பெண்ணும் தழுவும் போது, இணையும் பகுதி மருவு>மார்வு என்று சொல்லப்பட்டது. இன்னொரு வகையில் மகரம் வகரத்தின் போலியாகையால் மருவுதல் = மருமுதல் என்ற சொல்லும் உருவானது. மருமுதலில் உருவான பெயர்ச்சொல் மருமம். உர்>உறு என்பதும் உரல் = தழுவலைக் குறிக்கும். உரம் என்ற பெயர்ச் சொல் இதில் உருவானது, மார்பைக் குறிக்கும் எல்லாச் சொற்களும்  தழுவல் கருத்தில் உருவானவை ஆகும். மார்பு தொடர்பான சொற்களைக் குருதயம் தொடர்பாய்க் குறிக்கமுடியாது.  இதுவரை ஆய்ந்த அளவில், heart ஐக் குறிக்க, குருதயம், இருதயம், இதயம், இதம், நெஞ்சாங் குலை, தாமரைக் காய்,  குண்டிக் காய், போன்றவறோடு இறை, வரி, வரை, தருபொறியையும் சேர்க்கலாம். மொத்த்ம் 12 சொற்களை இப்படி நாம் குறிக்கலாம்.. இனிக் குருதிக்கு வருவோம்.

அன்புடன்,

இராம.கி.


Wednesday, December 09, 2020

Outlook Dec 14 2020 பக்கம் 74, 76 இல் வெளிவந்த ஒரு சில கணிமைக் கலைச்சொற்கள் (A few computer terms)



Applications Programming Interface படியாற்றங்களின் நிரவல் இடைமுகம்

Blockchain = கட்டைக்கணை;  chain = கணை (கண்ணி கண்ணியாய் கோத்துக் கணைத்தது கணை)

Cloud elasticity = கொளுவு நெகிழ்மை

Dark Web = இருட்டு வலை

Edge computing = ஓரக் கணிமை

File extension = கோப்பு நீட்சி

GNU/Linux = யுனிக்சு அல்லாத கட்டகம் / லெய்னசு 

Haptic = தொடுவாடல்

IoT = பொருள்களின் இணையம் 

Java = யாவா

Kernel Panic = கருப் பதறல் 

Machine learning  = எந்திரக் கற்றல்

Neuromorphic computing = நரமால்வுக் கணிமை

OLED - Organic Light-emitting electrode அலங்க ஒளி-விடு மின்னேக்கி

plug-in = செருகு நிரலி

Quantum Computing = கண்டக் கணிமை

RFID Radio-frequency Identification Tags வானொலிப் பருவெண் அடையாளத் தக்கைகள்

SaaS Software as a Service = சேவையாகச் சொவ்வறை

Trojan Horse = கரவுக் குதிரை

URL - Uniform Resource Locator ஒருங்கு ஊற்று இலக்கி 

Virtual Machine = மெய்நிகர் எந்திரம்

WAN Wide-Area Network = விரிநில வலை

XML Extensible Markup Language = நீட்டுக் குறியீட்டு மொழி. 

Y2K = இரண்டாயிராவது ஆண்டுச் சிக்கல்





Monday, December 07, 2020

குருதயமும் (heart) குருதியும் (blood) - 1

"Heart-க்குத் தமிழில் புதுச்சொல் உருவாக்குவது குறித்து, நிகண்டியம் புலனக்குழுவில் ஒரு தருக்கம் நடந்தது. அதை இங்கு பகிர்கிறேன். Heartக்கு நெஞ்சு, நெஞ்சம், நெஞ்சாங்குலை போன்ற சொற்களிருந்தாலும், நெஞ்சுச்சளி, நெஞ்சகநோய் போன்றவற்றில் அது மார்பையே சுட்டுகிறது. நாளங்களுள் அரத்தம் பாய்ச்சும் கருவியை புதுப்பெயரால் அழைப்பது நன்று. கருவி அமைப்பு, செயல், தோற்றங் கருதிக் ’குருதியத்தை’ அங்கு பரிந்துரைத்தார். வேறுசொற்களைஒ பரிந்துரைக்க இயலுமா?” என நண்பர் பெஞ்சமின் பிராங்கிளின் முகநூலின் தமிழ்ச்சொல்லாய்வுக் குழுவில் கேட்டார். ”15 ஆண்டுகள்முன் யாகூக்குழுக்களில் ”’குருதயத்தைப்’ பரிந்துரைத்தேன். . http://valavu.blogspot.com/2006/09/blog-post.html. குருதியத்தை விட, குருதயம் பொருந்தும்” என மறுமொழித்தேன். உடன், குருதயத்தின் வேர்ச்சொல் விளக்கத்தை நண்பர் கேட்டார், 

”2006 க்குமுன் யாகூ மடற்குழுமங்களில் குறிப்பெழுதினேன். அம்மடல்களை இப்போது தேடுவது கடினம். என் பழங்கணிகளும் பழுதாகிவிட்டன. அகவை முற்றிய என்மூளையுள் மட்டுமே இப்போது விளக்கமுண்டு. (இதுவும் எவ்வளவு நாளைக்கோ?) மீண்டும் புதிதாய் எழுத முயல்கிறேன். இம்முறை கட்டுரையாக்கி வலைப்பதிவில் சேர்க்கிறேன். இக்கால மின்னாக்கச் சிக்கல் இதுவே. மின்னாக்கிய கட்டுரைகளின் அகவை கூடுவதிலை. புதுப்புது நுட்பியல், நடைமுறை வருவதால், பழைய ஆக்கங்கள் மாற்ற இயலாது போகின்றன. வெள்ளம் வந்த பின், போட்டது போட்டபடி வேறிடம் ஓடி, பழைய இடத்தில் இருந்தவற்றை நம் முன்னோர் தொலைத்தது போல் தான் இப்போதும் ஆகிறது. அது மண்ணுலகில். இது மின்னுலகில்” என விடையிறுத்தேன். இந்த இடுகையின் முதற்பகுதியில் குருதயத்தையும் அடுத்த பகுதியில்  குருதியையும் விளக்கமாய்ப் பாரப்போம். 

முன்மை, தோன்றல், பொருந்தல், நெருங்கல், குத்தல், தாக்கல், வளைதல், உள்ளொடுங்கல், கருமை போன்றவற்றைக் குல் எனும் வேர் குறிக்கும். முன்மையில் வழிப்பொருளாய் அசைவு, விரைவுப் பொருள்கள் வெளிப்படும். குல்>குலு>குலுங்கு, அசைதலைக் குறிக்கும். குலுங்கலின் பிறவினை குலுக்கல். குலுகுலுத்தல், இன்னொரு வளர்ச்சி. குலுகுலு, குறுகுறு என்றும் திரிந்து,  உறுத்தலை உணர்த்தும்.  குலுகுலுப்பு = தினவு. குறுகுறுத்தல்= முணுமுணுத்தல், மனமுறுத்தல், தினவுறல். குறுகுறுப்பு, சுறுசுறுப்பு, விரைவு, தினவு, சினம், அச்சம் ஆகியவற்றைக் குறிக்கும். குலுகுலு>குளுகுளு =  நீர்க்கொதியின் ஊடே ஆவிக்குமிழ் எழுந்து வெடிக்கும் ஒலி. “பார்ப்பான் குண்டிகை மிகுந்த நீரும் குளுகுளு கொதித்ததன்றே” என்பது கம்ப.வருணனை.61. 

ழகரம்/ளகரம், முதலில் டகரமாயும், பின் ரகரமாயும் திரிவது பல சொற்களிலுண்டு. காட்டு: தமிழ்நாடு> ஆந்திரம்> ஒடியா போனால், சோழமண்டலம்>சோடமண்டல> சோரமண்டல் ஆகிப் போகும். மேலையர் கோரமண்டல் என்பார், குளுகுளு>குடுகுடு>குருகுரு என்றாவது தமிழ்நாட்டிலும் உண்டு. குடுகுடுத்தல், ஒலித்தலையும் விரைவையும் குறிக்கும்.  அகவைகூடித் தளர்ந்து அசைவதையும் குடுகுடு என்பார். குடுகுடுப்பு= பரபரப்பு.  குடுக்குடுக்கெனல்= ஒலிக்குறிப்பு., குடுகுடெனல் = ஒலி, விரைவுக் குறிப்பு.  குருகுருத்தல்= நமைச்சல், நெஞ்சுறுத்தல், தொண்டை கொப்பளிக்கும் ஓசை எழல், வேர்க்குரு உண்டாதல். குகரம் ககரமாயினும் அதே பொருள்களைக் காட்டும்.  கடுத்தல்= விரைந்தோடல், சினத்தல், கடுகடுத்தல்= சினத்தல், விறுவிறுப்போடு வலித்தல், கடுகதி = விரைவு. கடுகுதல் = விரைதல். கடுகுடுத்தல் = துடிதுடித்தல்; கடத்தல் = நகரல், ஓர் இடத்தைவிட்டுப் போதல் கடிது = விரைந்து. கதித்தல் = விரைதல், கதி = velocity. 

நெஞ்சில் குருதயம் துடிப்பதை இந்தக் கால நாளிதழில், “லப்டப்” என்றும், ”லபக், படக்” என்றும் இலக்கணம் மறுத்து எழுதுவார். ”குளுக், பளுக்” என்பது இலக்கணத்தோடு எழுதும் ஒலிக்குறிப்பு ”குளுக்குளுக்” என்பது ”குடுக்குடுக்” என்றும், “குருக்குருக்” என்றும் திரியும். (பளுக் என்பதை blood பற்றிப் பேசும்போது பார்ப்போம்,) நெஞ்சில் காதுவைத்துக் கேட்டால் குளுகுளு>குடுகுடு>குருகுரு ஒலியோடு அரத்தம் ஓடுவதை உணரலாம். இவ்வோசை நமக்கு மட்டுமின்றி, நம்மோடு நெருங்கிய இந்தையிரோப்பியக் குடும்பத்தாருக்கும் புலப்படும். ஸ்கீட் என்னும் பேர்பெற்ற ஆங்கிலச் சொற்பிறப்பியலார் heart இற்கு க் கீழ்வந்தவாறு சொற்பிறப்பு சொல்வார். (AN ETYMOLOGICAL DICTIONARY OF THE ENGLISH LANGUAGE- SKEAT)

HEART, the organ of the body that circulates the blood. (E.) M. E. herte, properly dissyllabic. 'That dwelled in his herte sike and sore, Gan faillen, when the herte felte deth.' Chaucer, C. T. A.S. heorte, fern. (gen. heortan), Grein, ii. 69. + Du. hart. + Icel. Ajarta. + Swed. hjerta. -f- Dan. Aierte. +Goth. hairto. -f- G. Aerz, O. H. G. herzd. + Irish cridhe. -f. Russ. serdtse. + Lat. cor (crude form cordi-). + Gk. xfjp, mpoia. +Skt. Arid, hridaya (probably corrupt forms for frid, fiidaya). p. The Gk. icapbia is also spelt Kpaoia, (Doric) and upaSir; (Ionic) ; this is connected with KpaSativ, KpaSaivuv, to quiver, shake; the orig. sense being that which quivers, shakes, or beats. ^ KARD, to swing about, hop, leap ; cf. Skt.Iturd, to hop, jump ; Fick, i. 47 ; Benfey, 197. Der. heart-ache, Hamlet, iii. I. 62; 

இங்கு கூர்ந்தறிய வேண்டியது “orig. sense being that which quivers, shakes, or beats” என்பதே. குருதயத்தை அதன் துடிப்பால் தானே உணர்கிறோம்? அத்துடிப்பின் ஒலிக்குறிப்பு குடுகுடு>குருகுரு என்பதே. குடுகுடுத்தல், விரைவோட்டத்தையும் ஒலித்தலையும் குறிக்கும். கடுத்தல், கடுகுதல், கடிதல், கதித்தல் போன்ற சொற்களும் அதேபொருள் கொண்டவை.  இதே நீட்சியில் குடுத்தல்>குருத்தல் என்ற வினை ஒரு காலம் இருந்திருக்கலாம். ஏனெனில் கடுத்தல் வினை இன்றுமுள்ளது,  ”குருத்தல் இன்றில்லையே? ஏன் சிவப்பு நிறம் வழியாக குருதயத்திற்குப் பெயர் ஏற்படக்கூடாது?” என்ற கேள்விகளும் நமக்கெழலாம். என் விடை எளிது. எல்லா விலங்கு அரத்தமும் சிவப்பாக இல்லை. இருக்க வேண்டியதுமில்லை. ”அரத்தம் சிவப்பு” என்பது வேட்டுவ மாந்தப் புரிதலில் முகன்மைக் குறிப்பில்லை. சிவப்பு என்பது மாந்தருக்கு நேர்ந்த ஒரு விதப்பு. அவ்வளவு தான். 

விலங்குக் குருதிகள்  சிவப்பு (red), ஊதா (blue), பச்சை (green), மஞ்சள் (yellow), நரங்கை (orange), நீலம் (violet) போன்ற பல நிறங்களிலும், அன்றேல் நிறமிலாதும் கூட உண்டு. சில விலங்குகளின் அரத்தத்தில் மாந்தர்போல் செம்மைக் கோளங்களும் (hemoglobin), வேறுசிலவற்றின் அரத்தத்தில், வேறுவகை உய்ப்பு நிறமிகளும் (respiratory pigments), இன்னும் சிலவற்றில் எந்த உய்ப்பு நிறமிகள் இல்லாமலுமுண்டு, ஆனால் எல்லா விலங்குகளும் அரத்தவழி அஃககம் நகர்த்தும் (to transport oxygen) திறன் கொண்டன. பல விலங்குகளை வேட்டையாடிய மாந்தன் இதைக் கட்டாயம் உணர்ந்திருப்பான். சிவப்பை வைத்தே குருதிக்குப் பெயர்வந்தது என்பது பட்டறிவில்லாப் பார்வை. 

சிவப்பைக் காட்டிலும்  “குளுகுளு>குடுகுடு>குருகுரு” ஓட்டவொலி முகன்மை.  குடுத்தல்>குருத்தல் என்பது பிறவினை வடிவம் = ஓடவைத்தல் என்று பொருள் கொள்ளும். இறைத்தல் = நீர்மம் பாய்ச்சல் என்பதும் இதேபொருள் காட்டும். (இறைப்பவர்க்கு ஊற்றுநீர் போல மிகும்” குறள் 1161.) pump இற்குச் சொல்லாக்கையில் 1960 களில் இறைப்பியைப் பயன்கொண்டோம். வேகமாய்ச் சுழன்றாடும் பம்பரம் காணின், நீர்மத்தை  எம்பி ஏற்றும் செயலைப் பம்புதல் என்றும் சொல்லலாம். பம்பி கூடப் pump-இற்கு இன்னொரு இணைச்சொல்லாகலாம். (சிவகங்கை மாவட்டம் தேவகோட்டைக்கு அருகில் அங்குமிங்கும் விரவியோடும் ஆற்றைப் பம்பாறு>பாம்பாறு என்பார். ”ஏன் பம்முகிறான்?” என்ற கூற்றையும் இங்கு எண்ணிப்பாருங்கள்) 

குருதயம் என்பது பெரும்பாலும் பழந்தமிழில் இருந்திருக்குமென்றே ஊகிக்கிறோம். குருதயம், கெருதயம் என்றும் பேச்சுவழக்கில் சொல்லப்படும். அடுத்து, கெருதயம்> எருதயம்> இருதயம் என்று தமிழில் மீத்திருத்தம் பெறும். இது மேலும் பேச்சுவழக்கில் இருதயம்>இதயம்>இதம் என்று திரியும். [கெருதயம்>எர்தய>எர்தெ எனக் கன்னடத்தில் திரியும். எர்தெ>எழ்தே>எதே என்றும் அங்கு பலுக்கப்படும். தெலுங்கில் எத என்பதும் துளுவில் எதெ என்பதும் புழங்குகின்றன.] இதயம், இதம் என்ற சொற்கள் தேவாரம், திருவாசகத்தில் சொல்லாட்சி பெறும். 

17. சம்பந்தர் தேவாரம் சீகாழி : திருமாலைமாற்று: ”நேர் அகழ் ஆம் இதய ஆசு அழி தாய் ஏல் நன் நீயே நன் நீள் ஆய் உழி கா, காழி உளான் இன் நையே நினையே தாழ் இசையா தமிழாகரனே” 

50. சம்பந்தர் தேவாரம் திருத்தண்டலை நீணெறி: இகழும் காலன் இதயத்தும் என்னுளும் - தேவா-சம்:3332/1

87. அப்பர் தேவாரம் திருச்சிவபுரம் - திருத்தாண்டகம்: கானவன் காண் கானவனுக்கு அருள்செய்தான் காண் கருதுவார் இதயத்து கமலத்து ஊறும் - தேவா-அப்:2946/3

2 திருவாசகம் கீர்த்தித் திருஅகவல் 139 ஆம் அடி: இதம் சலிப்பு எய்தநின்று ஏங்கினர் ஏங்கவும் - திருவா:2/139

குருதயம், இருதயம், இதயம், இதம் போக தாமரைக்காய் (pericarp of the lotus. தாமரையில் நடுவில் ஊள்ள காய் போன்றது என்று நிறத்தாலும், அரத்த ஓட்டத்திற்கு நடுவம்  என்ற பொருளிலும் இச்சொல் எழுந்தது,குண்டிக்காய் [இது இதயம், நூவூறகம் (=சிறுநீரகம்), புட்டம் ஆகிய மூன்றிற்கும் ஒப்புமைப் பொரூளில் சொல்லப்படும்.]  என்ற இன்னொரு சொல்லும் உண்டு.  மார்பு பற்றிய சொற்களை அடுத்த பகுதியில் பார்ப்போம். அறிவியலில்  குருதயம், மார்பு போன்றவற்றைப் பயன்படுத்திக் கீழ்க்கண்ட சொற்களை உருவாக்கலாம். 

Thoracic Surgery மார்புக்கூட்டுப் பண்டுவம்

Congenital cardiac surgery கூடுற்ற குருதயப் பண்டுவம் (குருதியைக் கையாளுவது குருதயம். இது தமிழ் தான்.)

Pediatric cardiology குழவிக் குருதயவியல்

Cardiothoracic radiology குருதய மார்புக்கூட்டுக் கதிரியல்

Cardiovascular radiology குருதய நாளக் கதிரியல்

Chest radiology மார்புக் கதிரியல் 

Advanced heart failure & transplant cardiology குருதய இழப்பு, மாற்றுநடவுக்கான அடுவாங்கைக் குருதயவியல் (advance = அடுவாங்கை)

Cardiovascular Disease குருதய நாள நோய்

Clinical cardiac Electrophysiology ஆதுலக் குருதய மின்பூதிகையியல்

Cardiac Medicine குருதய மருத்துவம்

அடுத்த் பகுதியில் குருதி (blood) தொடர்பான சொற்களைக் காண்போம்.

அன்புடன்,

இராம.கி.


சேக்கிழான்

 "சேக்கிழான் என்ற சொல்லின் பொருள் என்ன?" என்று திரு.Karunakaran என்பார் தமிழ்ச்சொல்லாய்வுக் குழுவில் கேட்டிருந்தார். அதற்கு ம்றுமொழியாய், திரு தாமரைச்செல்வன்,  https://ta.wikipedia.org/s/69i = இனைச் சுட்டி விடையிறுத்தார், "சே என்பதற்கு காளை என்றும் சேக்கிழார் என்றால் காளைக்கு உரியவர் என்று பொருள் தருவதாகும். வெள்ளாளர்களில் காளையை வைத்து உழவுத் தொழில் செய்து வந்தோர்களில் அமைச்சராகவும், சிவனடியாராகவும் சிறந்து விளங்கியமையால் இயற்பெயரான அருண்மொழித்தேவர் என்பது மறைந்து சேக்கிழார் என்பதே பெயராக அறியப்படுகிறது" என்று விக்கிப் பீடியாவில் சொல்வதற்கு ஆதாரமில்லை. அங்கு இக்கட்டுரையை எடுவிப்பு (edition) செய்தவரே ”சான்று தேவை” என்று அருகில் எழுதியிருக்கிறார் - என்று நான் சொன்னேன்

-------------------------

மாறாக சுள்>செள்>சேள்* என்ற முன்னொட்டை எண்ணிப் பார்க்கலாம். சேள்*>சேளு*>சேடு என்பதும், சேள்*>சேண் என்பதுவும் ”பெருமை, திரட்சி, உயரம்” போன்ற பொருட்பாடுகளைக் குறிக்கும். சேட்டன் = தமையன், பெரியோன், சேட்சி = தொலைவு; சேட்டம் = மேன்மை; சேட்டா தேவி = மூத்த தேவி; சேட்டி = தமக்கை; சேட்டை = மூத்தவள்; சேட்படுதல் = தொலைவாதல்; சேட்புலம் = தொலைவிலுள்ள புலம்; சேடம் = பெருமை; சேடன் = பெரியோன், தோழன், சேடி= தோழி; சேடு= தோழமை; சேணம் = உயரம், துறக்கம், மெத்தை, குதிரையின் மேல் இடப்படும் தோலாசனம்; சேணி = ஏணி; சேணியர் = உயட் உலகிலுள்ள தேவர்; சேணோன் = உயரத்தில் இருப்பவன்; இத்தனை சொற்களையும் நீங்கள் அகரமுதலிகளில் பார்க்கலாம்.

பல நாட்டுப்புற ஊர்களில் இன்றும் ஒரு பெரியதனக்காரரும் (பெரிய வீட்டுக் காரரும்). சிறியதனக்காரரும் (சிறியவீட்டுக்காரர். இவர் முன்னவருக்குத் தம்பியாய்க் கூட இருக்கலாம்) இருப்பது வழமை தான். சில வட்டாரங்களில் பெரிய பண்ணை, சிறிய பண்ணை என்பார். (தேவர்மகன் திரைப்படம் நினைவுக்கு வருகிறதா?) இருவருக்கும் சண்டை வரவேண்டிய கட்டாயம் இல்லை. ஆனால் சில முரண்கள், போட்டிகள் போன்றவை இவரிடையே இருக்கும். (இந்தக் காலக் கட்சிகள், கழகங்கள் போல் இது நீறுபூத்த நெருப்பாய் இருக்கும்).பெரியது, சிறியது என்பதை சேள், அனு என்றும் இன்னொரு வகையில் சொல்லலாம். மலையாளத்தில் அண்ணனைச் சேட்டன் என்றும், தம்பியை அனுயன் என்றும் சொல்வர். ”அனுயன்” என்பான் சங்கதத்தில் அனுஜ என்றாவான். குன்றத்தூரில் சேள்+கிழார் = சேட்கிழார்> சேக்கிழார் குடும்பம் அண்ணன்காரக் குடும்பமாயும், அவரின் தம்பி, அல்லது சிற்றப்பா குடும்பம் அனுக்கிழார் குடும்பமும் ஆகலாம். இச்செய்தியை உறுதிசெய்ய அவர் காலத்துக் கல்வெட்டுகளை அங்குள்ள சுற்றுவட்டாரக் கோயில்களில் தேட வேண்டும். 

இப்படிப் புரிந்துகொள்வது எனக்கு இயல்பானதாய்த் தோன்றுகிறது. ஒரு பண்ணையார் அல்லது கிழார் ஏராளம் காளைகள் வைத்திருந்தது விதப்பான செய்தியாய் எனக்குத் தோற்ற வில்லை. எல்லாப் பண்ணயாரும் அக்காலத்தில் காளைகள் வைத்திருப்பர். அதுதான் அக்குமுகாய இயல்பு. செல்வம் ஒரு காலத்தில் மாடுகளால் அளக்கப்பட்டது. ஊரில் பெருங்கிழார் என்பது அப்படி யல்ல. அதிகாரம் கொண்ட குடும்பம் என்பது முகன்மையான செய்தி. இவர் முதலமைச்சர் ஆகுமளவிற்குப் பெரியவராய் இருந்துள்ளார். தொண்டை மண்டலத்தில், நிலவுடைமைக் குமுகாயத்தில், இவர்குடி பெரிதும் மதித்துப் போற்றப்பட்ட குடி எனவே சேக்கிழார் என்று ஒரு பெயர் இருந்ததில் வியப்பு இல்லை.

நான் இங்கு சொன்னது ஒரு முன்னீடே. முதலிரு குலோத்துங்கர் காலத்துக் கல்வெட்டுக்களை ஆழ்ந்து படிக்கவேண்டும். ஆதாரம் தேடவேண்டும். கல்வெட்டியலில் ஆர்வமுள்ளோர் இந்த முன்னீடு சரியா என்ற ஆய்வைச் செய்யலாம். . 

------------------------------

இதற்கு மறுமொழியாய், திரு .Karunakaran திருவண்ணாமலைக்கு அருகிலுள்ள ஆடையூர் செக்குக் கல்வெட்டில் உள்ள ”காட்டாம் பூண்டி:சகர ஆண்டு 877(கி.பி 955) வாணகோப்பாடி பெந்ணை வடகரைக்கு காட்டாம் பூண்டி உடைய சேக்கிழான் உலகளந்தான் வீரட்டன் இட்ட செக்கு இதிரெட்டினேன் தேவனார் கொருமுறள் யெண்ணை” என்ற வாசகத்தை வெளிப்படுத்தினார், இதுபோல் இன்னும் பல கல்வெட்டுக்களைத் தேடவேண்டும். சேக்கிழான் என்பது விதப்பான பெயரல்ல. ”ஊரில் இருக்கும் பெருங்கிழார்” என்று இக்கல்வெடில் பொருள் வருகிறது. எனவே சேக்கிழார் என்பது ஊர்மக்கள் கொடுக்கும் ஒரு title என்பது விளங்கும். தவிர இந்தக் கல்வெட்டு கி.பி.955 இல் அமைச்சர் சேக்கிழாருக்கு 200 ஆண்டுகள் முன்னேயே இருக்கும் கல்வெட்டு, அப்படி யெனில் சேக்கிழார் என்னும் பெருங்குடி விளிப்பெயர், ”மழவராயர், பழுவேட்டரையர்” போல்  நாட்பட்டதாகலாம். 

நாம் அறியாத, ஆயாத செய்திகள் வரலாற்றில் இன்னும் பல உள்ளன போலும்.  

அன்புடன்,

இராம.கி.  

             


Thursday, December 03, 2020

Guitar, Sitar, Viola, Violin, Piano and Trumpet

ஒருமுறை, ”guitar, violin, piano, sitar, trumpet முதலிய இசைக் கருவிகளின் தமிழாக்கம் என்ன?” என்று ஒரு நண்பர் கேட்டிருந்தார். பொதுவாய் மேலை யிசைக் கருவிகளுக்குத் தமிழ்ப்பெயர் காணுவது கடினம். தவிரப் பைம்புலத்தில், ஆங்கிலத் தாக்குற்ற இளைஞர் இக்கருவிப் பெயரை ஆங்கிலத்திலேயே புழங்க விரும்புவார். அது தான் அவருக்கு “கெத்”தாய் இருக்காம்! ”கருவியே வெள்ளைக்காரர் தந்தது; இதுலெ பெயரை மட்டும் தமிழில் வைத்து என்ன வாழுமாம்? - என்ற பேச்சும் எழுகிறது அப்படியோர் அடிமைத்தனம் நம்மில் ஊறிக் கிடக்கிறது. இந்நிலையில் இக்கருவிகளுக்கான பெயர்களை தமிழிற் சொல்ல யாரும் துடிப்பதில்லை. முதன் முறையாக இந்நண்பர் கேட்டதும் வியந்தேன். ”சரி, முயல்வோம்” என முனைந்தேன். 

guitar என்பது sitar இல் பிறந்ததாகவே பலரும் சொல்வார். sitar (n.) 1845, from Hindi sitar, from Persian sehtar "three- stringed," from si "three" (Old Persian thri-; see three) + tar "string," என்பார்.  சித்தாரில் 3 தந்திகள் மட்டும் உளதாவெனில், இற்றை நிலையில் அப்படியில்லை.  இந்தியாவில் ஏழும் ஏழுக்கு மேலும் தான் சித்தார்த் தந்திகள் எண்ணிக்கையுண்டு. தவிர, ”தார்” ஈறு, தந்தியைத்தான் குறிக்கிறதா என்பதும் விளங்கவில்லை. தும்புரு, guitar, violin, sitar, viola,  Middle Eastern tambourines, வீணை போன்ற கருவிகள் எல்லாமே அடிப்படையில் lute வகைத் தந்திரிகளே. குழிப் பத்தரும் துளை மரத்தண்டும், பல்வேறு எண்ணிக்கையில் தந்திகளும் என தந்திரிக் கருவிகள் விதப்புறும், இக்கருவிகளுக்குத் தும்புருவே முந்து நிலை. தும்புரு (தும்பு +உரு) என்பது தமிழில் tube-shape ஐக் குறிக்கும். அப்புறம் தந்து இருக்கும் கருவி தந்து + இரி. ) 

சித்தாரின் தோற்றம் இந்தியாவில் தொடங்கி, நடுஆசியாவிற்கு நகர்ந்ததெனச் சிலரும், ”ஈரான்/ நடு ஆசியாவின் (Sāsānian Iran, Middle East, Caucasus, and Central Asia) tanbur கருவியில் தொடங்கி dutār (“2-strings”), setār (“3-strings”), and cartār (“4-strings”) என வளர்ந்து, 15, 17 ஆம் நூ. வில் இந்தியா நகர்ந்ததென வேறு சிலரும்  சொல்வார். (தும்புருத் தந்திரி பற்றிய சொல்லாட்சி காணின், சித்தாரின் இந்தியத் தோற்றமே சரியெனத் தோற்றும்.)  இந்தியத் துணைக்கண்டத்தில் இரவிசங்கர், விலாயத்கான் என இருவேறு இந்துசுத்தானிப் பள்ளிகள், தும்புரு, தபலை(> தபலா) இணைந்த சித்தார் இசையில், பெரும்பங்கு வகிக்கின்றன. கதக் நாட்டியத்திலும் பின்னிசையாய் சித்தார் முழங்கும்,  அளவு (size), வடிவம் (shape), தந்திகளின் எண்ணிக்கை (number of strings), தொனிசேர் கட்டகம் (tuning system) எனப் பலவற்றிலும் 2 பள்ளியாரின் சித்தார்களும் வேறுபடும்  

தம்புராவைத் தும்புருவை ஒத்த (சுருதி)க் கருவி என்பார். இசைநிகழ்வினூடே, தொடக்க சுரத்தையும், பொருந்து சுரங்களையும்  அவை தொடர்ந்தொலித்து நிறைக்கும். (தம்புரா, தம்புரு, தம்பூர், தம்பூரி, தம்பூரு என்றும் சொல்வர்.) 1730 ஆம் ஆண்டில் எழுந்த குற்றாலக் குறவஞ்சி 5 ஆம் பாட்டில் ”கனக தம்புரு கின்ன ரங்களி யாசை வீணை மிழற்றவே” என்ற அடி தும்புருவைப் பேசும்.  ”இணையில்லா இன்னிசை யாழ் கெழுமி இன்பத் தும்புருவும் நாரதனும் இறைஞ்சி ஏத்த” என்பது நாலாயிரப்பனுவல் பெருமாள் திருமொழியின் (:651/1) முதலடி, ”நன் நரம்பு உடைய தும்புருவோடு நாரதனும் தம் தம் வீணை மறந்து” என்பது நாலாயிரப் பனுவல் பெரியாழ்வார் திருமொழி 3 ஆம்பகுதி 6 ஆம் பத்து 6 ஆம் பாட்டு. 2 பாட்டிலும் தும்புரு என்பது தும்புருக் கருவி கொண்ட தேவ பாணனைக் குறிக்கும். ”தும்புருக் கருவியும் துன்னி நின்றிசைப்ப” என்பது கல்லாடம் 81 ஆம் பாட்டு 18 ஆம் அடி.. இதே பாட்டில், 1000 தந்திகள் கொண்ட நாரதப் பேரியாழும், 9 தந்தி கொண்ட தும்புரு வீணையும், 100 தந்திகள் கொண்ட கீசகப் பேரியாழும், பேசப்படும்.  பாட்டில் வரும் தும்புரு வீணையின் விவரிப்பு சித்தாருக்கு நெருங்கிய தோற்றம் காட்டும். 

இது போக, “பாடுவார் தும்புருவும் நாரதாதி பரவுவார் அமரர்களும் அமரர்_ கோனும்” என்பது 7 ஆம் நூ. அப்பர் தேவாரம் 6 ஆம் திருமுறை 25 ஆம் பதிகம் திருவாரூர் திருத்தாண்டகத்தில் 8 ஆம் பாட்டில் தும்புரு முனிவர் பற்றிய குறிப்பு ஒன்று உண்டு. ஆக 1400 ஆண்டுகளுக்கு முன் தும்புரு ,  9 தந்திகள் அடங்கிய தும்புரு வீணை ஆகியன பற்றிய குறிப்புகள் தமிழிலுள்ளன.  எனவே சித்தாருக்கு நெருங்கிய இசைக்கருவியின் காலம் 1400 ஆண்டுகள். இவ்வளவு முந்தைக் குறிப்பு ஈரானிலுண்டா? எனக்குத் தெரியவில்லை. இப்போதைக்கு எனக்குத் தெரிந்தவரை, தமிழ்க்குறிப்பே காலத்தால் முந்தையது.

திவாகரம் 1235 இல் யாழின் பெயர் குறிப்பிடுகையில், தந்திரி, வீணை, கின்னரம். விபஞ்சிதம், கோடவதி, வல்லரியோடு 6 தந்திகள் கொண்ட அறுசர யாழும் குறிக்கப்படும்.  இயம் என்ற சொல் தமிழில் இசைக்கருவிகளைக் குறிக்கும் பொதுச்சொல் ஆகும். பல்லியம். ஆமந்திரிகை போன்றன  orchestra வைக் குறிக்கும்.

தந்திரி பற்றி மேலே பேசினோம் வீணை இன்றுமுளது. கின்னரம் = கில்லும் நரம் (கிளரும் நரம்பு). mandalin போல் ஒன்றிற்கு அது பொருந்தலாம். விபஞ்சிதம், இது தமிழா, சங்கதமா தெரியவில்லை.  கோடு (=துளையுள்ள தண்டு) பதிந்தது கோடபதி>கோடவதி; அரித்தல் = இடைவிட்டு நடுங்கும் படி, அதிரும் படி, ஒலித்தல் வல்+அரி = வல்லரி; தந்தியைச் சுண்டி ஒலிய வைப்பதை வல்லரி-த்தல் எனலாம். அரித்தலைக் குயில்- தல் = குயிற்றல் = இழைத்தல், சுதித்தல், சுண்டுதல், தெறித்தல், விதுத்தல் (= விதிர்த்தல், விதுலல்) என்றும் சொல்லலாம் 

தும்புருவைத் துவர்ப் (-துளைப்) பொருளில் துவரை என்றுஞ் சொல்லலாம். கூர்ச்சரத்தில் துவரையம்பதி என்பது துவாரகை என்று அழைக்கப்பட்டது. கருநாடகத்திலும் ஒரு துவாரசமுத்திரம் உண்டு. துவரைக் கடற்கரையில் ஒரு தோரணம் இருந்ததாய்த் தொன்மமுண்டு, (துவர்>தோர்>தார்; தோர்+அணம் = தோரணம்). தோரணத்திற்கு இன்னொரு பெயர் கவாடம். கன்னி யாற்றின் கரையில் இரண்டாம் சங்கம் இருந்ததாய்ச் சொல்லப்படும் கவாட புரத்திலும் இதே போல் கடற்கரையில் ஒரு தோரணம் இருந்ததாம். ஆக guitar, sitar ஆகியவற்றில் வரும் tar என்பது ஒரு துவரை தான். துளையுள்ள தண்டு.   தும்புரு போன்ற சொல்லாட்சி.   

இதுவரை சொன்ன செய்திகளின் அடிப்படையில் 4 தந்திரிகளைக் கீழ்க்கண்ட படி அழைக்கலாம். இவை தமிழ் முறையில் பொருளும், இந்தையிரோப்பியப் பிணைப்பும் காட்டும். guitar என்பதைக் குயில் துவரை (தெறிக்கக் கூடிய தந்திகள் கொண்ட துவரை) என்றும், sitar என்பதைச் சுதித் துவரை (சுதிக்கக் கூடிய துவரை) என்றும், viola என்பதை விதுலம் (விதுலக் கூடிய பெரிய தந்திரி) என்றும், violin என்பதை விதுலி (விதுலக் கூடிய சிறிய தந்திரி. விதுலி = fiddle. உரோமானியப் பலுக்கலில் விதுல் என்பது வியுல் என்றாகி viol) என்றும் சொல்லலாம்.

இனித் தும்புரு வகையைச் சேராத இன்னொரு வகைத் தந்திரியும் உண்டு. இதில். 2,3 சுர மண்டிலங்கள் சாரும் வகையில் (ஒவ்வொன்றும் 12 தந்திகள் கொண்டது. 3 மண்டிலம் எனும்போது) 36 தந்திகள் கூட அமையலாம். இத் தந்திகளை வெவ்வேறு பிட்டிகை (pitch) களில் சின்னஞ்சிறு சுத்தியல்கள் கொண்டு அடிக்கும்போது வெவ்வேறு சுரங்களை வெளிப்படுத்தும். ஒவ்வொரு சுத்தியலையும் வெவ்வேறு மாழைக் கயிறுகளால் பொத்தான்களோடு பிணைத்து, எல்லாப் பொத்தான்களையும் ஒரு பலகையில் அணையுமாறு செய்வது பலகணை [ piano (n.) "percussion musical instrument in which tones are produced by blows of hammers upon stretched strings, the hammers being operated from a keyboard," 1803, from French piano (18c.), Italian piano, shortened form of pianoforte. Essentially, the pianoforte is a large dulcimer with a keyboard; Historically it replaced the clavichord and harpsichord, which were keyboard-instruments more akin to the harp than to the dulcimer.]

கடைசியில் வருவது தந்திரிக் கருவியே அல்ல. அது ஓர் ஊது கருவி. அதுவும் தூம்பு கொண்டது தான். சிறிய தூம்புகளைத் தமிழில் தூம்புழை என்றழைப்போம். trumpet = தூம்புழை.

இக்கட்டுரை இசைக்கருவிகள் செய்யும் அடவு (design), கட்டுமானம் (construction), இசைநுணுக்கம் ஆகியவற்றை விளக்கும்படி எழுந்ததல்ல.  தமிழோடு பொருளால் பொருந்தும்படி இணைச்சொல் விளக்கந் தரும் கட்டுரை. எனவே சுருங்கச் சொன்னேன்.

அன்புடன்,

இராம.கி.


Saturday, November 28, 2020

”சைவம், வைணவம்” என்னாது ”சிவம், விண்ணவம்” என்று ஏன் நாம் சொல்லவேண்டும்?

திரு. சிவக்குமார் என்பார் முகநூலில் “சிவ_சமயம் சைவ_மதமானது எப்படி? விண்ணவ_சமயம் வைணவ_மதமானது எப்படி?” என்று கேட்டிருந்தார். இதுபோன்ற கேள்விகள் பலருக்கும் இருக்கின்றன.  அதற்கான விளக்கம் இது. 

தமிழ்போல் ஒட்டுநிலை மொழிகளில் (agglutinative languages) ஒரு பெயரை இன்னொரு பெயரோடு சேர்ப்பதற்கும் வேற்றுமைகளைப் பயன்படுத்துவது உண்டு. அப்போது முதல் பெயரடியை அப்படியே வைத்து அடுத்து வேற்றுமை உருபுகளையும் தேவைப்பட்டால் சில தொடர்களையும் நுழைத்துப் பின் இரண்டாம் பெயரை வைப்போம். சுருக்கம் கருதிப் பின்னால், வேற்றுமைகளைத் தொகுக்கும் போது இலக்கணம் அறியாத சிலர் தடுமாறுவர். முதலில் 3 இகரமுதல் சொற்களைப் பார்ப்போம். 

காட்டு: சிவநெறி = சிவனைச் சார்ந்த நெறி என்பதில் ஐ எனும் இரண்டாம் வேற்றுமை உருபையும், ”சார்ந்த” என்ற தொடரையும் தொக்கி ”சிவநெறி” என்போம். (சிவ எனும் பெயரடியை நாம் திரிப்பதில்லை.) இப்பழக்கத்தை இரண்டாம் வேற்றுமைத் தொகை என்பார். நெறியைப் போன்று மதமும் தமிழே. சமயமும் தமிழே. நெறி, சமயம் ஆகியவை தமிழோடு நின்றன. மதம் வடமொழிக்குக் கடன் போனது. அதைத் தவிர்க்க வேண்டாம். கடன்போன சொற்களை எல்லாம் நாம் தவிர்க்கத் தொடங்கினால் நமக்குத் தான் இழப்பு. 

விண்ணவநெறி = விண்ணவனைச் சார்ந்த நெறி. மாயோன்= கருத்தன். ”புவி நிலவுகின்ற பெருவெளியும் அவனே” எனுமுணர்வு நம்மில் சிலருக்குண்டு. விரிந்த பெருவெளியானை விரி> விரிநன்> விண்ணன் என்பதும் தமிழே. விண்ணனை விண்+ அவன் = விண்ணவன் எனலாம். விண்>விண்டு, விண்ணு என்றும் இச்சொல் நீட்சி பெறும். விரிநன்= விரிநு+அன் என்றுணர்ந்து ”விரிநு” என்பதைக் கடன்வாங்கி, ”ஷ்” நுழைத்து, விரிஷ்நு>விஷ்ணு என வடவர் சொல்வர். இது அவருடைய ஒலிப்புப் பழக்கம். விண்ணவ நெறி என்பதில் ”ஐ” வேற்றுமை உருபையும், ”சார்ந்த” எனும் தொடரையும் தொக்கி விண்ணவ நெறி என்போம். (விண்ணவ எனும் பெயரடியை நாம் திரிப்பதில்லை.) இப்பழக்கத்தை இரண்டாம் வேற்றுமைத் தொகை என்பார்.

பித்த நிலை = பித்தனின் கலங்கிய நிலை. இதில் இன் எனும் ஐந்தாம் வேற்றுமை உருபையும், ”கலங்கிய” என்ற தொடரையும் தொக்கி ”பித்தநிலை” என்போம். (பித்த எனும் பெயரடியை நாம் திரிப்பதில்லை.) இப்பழக்கத்தை ஐந்தாம் வேற்றுமைத் தொகை என்பார். பித்த நிலை = பித்த ஸ்திதி (sthitiḥ) என்று சங்கதத்தில் ஆகும். 

அடுத்து  3 உகரமுதற் சொற்களைப் பார்ப்போம்.

குரவத் துரியன் = குரவ குலத்தைச் சார்ந்த துரியன். குரவர்= பெரியவர். சிவநெறிக் குரவர் என்று சம்பந்தர், அப்பர், சுந்தரர், மணிவாசகரைச் சொல்கிறோமே? எண்ணிப் பாருங்கள். குருக் குலம் என்பது 3000 ஆண்டுகளுக்கு முன்னால் பஞ்சாபுப் பகுதியில் இருந்த பெரிய குலம். அதைக் குரு குலம் என்றே சொல்லிவந்தார். (தமிழில் க் சேரும். சங்கதத்தில் சேராது.) அதில் உறுப்பினரைக் குரவா என்பார். தமிழில் குரவர் எனலாம். குரவத் துரியன் என்பது ஐ எனும் இரண்டாம் வேற்றுமை உருபையும் அத்து எனும் சாரியையும், ”குலஞ் சார்ந்த” எனும் தொடரையும் தொக்கி. ”குரவத் துரியன்” என்கிறோம். துரியன் ஒரு குரவன். 

புத்தநெறி = புத்தனைச் சார்ந்த நெறி. புத்தன் = போதி மரத்தின் அடியில் ஞானம் (புலனறிவு) பெற்றவன். புத்தர். புத்தம் = புலனறிவு = ஆசையே, பற்றே, புலனுகர்ச்சியே துன்பத்தின் காரணம் என்னும் புரிதல். இதில் ஐ எனும் இரண்டாம் வேற்றுமை உருபையும், ”சார்ந்த” என்ற தொடரையும் தொக்கி ”புத்தநெறி” என்போம். 

குமரம்>குமாரம் என்பது முருகனைச் சார்ந்த நெறி. குமரன் = முருகன், ”குமாரன்” என்று நீட்டிச் சொன்னது சங்கதம் போனது. ”குமரன்” தமிழில் தங்கியது. இதில் ஐ எனும் இரண்டாம் வேற்றுமை உருபையும், ”சார்ந்த” என்ற தொடரையும் தொக்கி ”குமாரநெறி” என்போம்.  

இனி வடமொழி இலக்கணத்திற்கு வருவோம். இதில் வேற்றுமை உருபுகளையும், இடைவரும் சொற்றொடர்களத் தொக்குவதும் போக, பெயரடியையும் திரிப்பார். பெயரடியைத் திரிப்பது சங்கதத்தில் ஒரு முகனப் பழக்கம். இகரமுதல் அதன் வருக்கமான ஐகாரமாயும். உகரமுதல் அதன் வருக்கமான ஔகாரமாயும். அகரமுதல் ஆகாரமாயும் அங்கு திரியும்.

சிவமதம் சங்கதத்தில் சைவமத என்றும். விண்ணவமதம். சங்கதத்தில் வைஷ்ணவமத என்றும், பித்த ஸ்திதி (sthitiḥ), சங்கதத்தில் பைத்ய ஸ்திதி என்றும்,  குரவத் துரியன் சங்கதத்தில் கௌரவ துரிய என்றும், புத்தமதம் சங்கதத்தில் பௌத்தமத என்றும், குமரமதம் சங்கதத்தில் கௌமார மத என்றும் திரியும்.  

நாம் ஏன் சங்கத இலக்கணம் பின்பற்ற வேண்டும்?  நாம் தமிழ் இலக்கணம் பின்பற்றுவோம். அதிலேயே கூட நாம் பெரும் தப்புகள் செய்கிறோம். நம் மொழியை நாம் சரியாகக் கையாள வேண்டாமா?

அன்புடன்,

இராம.கி.

  


Thursday, November 26, 2020

அகம் 127 - இல் வரும் வரலாற்றுச் செய்தி.

 அண்மையில் மாமுலனார் பாடிய அகம் 127 இல் வரும் 3-5 ஆம் அடிகளைக் கொடுத்து ”எப்படிப் பொருள் கொள்வது?” என்று நண்பர் திரு. வேந்தன் அரசு கேட்டார். இதற்கு விடைசொல்ல, வரலாற்றை விளக்க, 3-10 ஆம் அடிகள் முழுமையும் பார்ப்பதே சரியாய் இருக்கும்.     

வலம்படு முரசின் சேரலாதன்

முந்நீர் ஓட்டிக் கடம்பு அறுத்து இமயத்து

முன்னோர் மருள வணங்கு வில் பொறித்து  5

நன் நகர் மாந்தை முற்றத்து ஒன்னார்

பணி திறை தந்த பாடு சால் நன் கலம்

பொன் செய் பாவை வயிரமொடு ஆம்பல்

ஒன்றுவாய் நிறையக் குவைஇ அன்று அவண்

நிலம் தினத் துறந்த நிதியத்து அன்ன  10

என்ற அந்த வரிகளின் திணை: பாலை. தோழி தலைவியிடம் சொன்னதாய்ப் பா அமையும். மாமூலனாரின் காலம் பெரும்பாலும் வானவரம்பன் பெருஞ் சோற்றுதியன் சேரலாதனின் முடிவுக் காலத்திற்கும் இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனின் தொடக்க காலத்திற்கும்  இடைப்பட்டதாகலாம்..

வானவரம்பன் பெருஞ்சோற்றுதியன் சேரலாதனின் காலம் பெரும்பாலும் பொ.உ.மு. 217-170 ஆகும். இவனை முரஞ்சியூர் முடிநாகராயர் புறம் 2 இல் பாடுவார். இவன் காலத்தில் அசோக மோரியனின் தாக்கம் சேரர்மேல் தொடங்கிவிட்டது. கூடவே மோரியரை வீழ்த்திய சுங்கரின்மேல் சேரருக்குக் கடுப்பிருந்தது நாட்பட்ட கதையாகும். (ஐவரான) சுங்கருக்கும் நூற்றுவர் கன்னருக்கும் இடைநடந்த வஞ்சி/தும்பைப் போரிற் கன்னரின் பக்கம் சேரரிருந்தார். உதியன்சேரல் காலத்திருந்தே 2,3 தலைமுறைகள் இவ்வுறவு தொடர்ந்திருக்கலாம். சேரருக்கும் நூற்றுவர் கன்னருக்கும் இடையிருந்த நல்லுறவு சிலம்பின் வஞ்சிக் காண்டத்தால் புரியும். என் ”புறநானூறு - 2 ஆம் பாட்டு” என்ற கட்டுரைத் தொடரையும் படியுங்கள்.

உதியன் சேரலாதன் பொதினியைச் சேர்ந்த ஆவியர் குலத்து வேண்மாள் நல்லினியை மணஞ்செய்தான். (இற்றைப் பழனியே பழம்பொதினி. அதன் அடிவாரத்தில் ஆவினன் குடியுள்ளது.) ஆவியர் குடியோடு சேரர் குடியினர் கொடிவழி தோறும் மணத்தொடர்பு கொண்டார். உதியனின் முதல்மகன் இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனாவான். இவனைக் குடக்கோ நெடுஞ்சேரல் ஆதன் என்றுஞ் சொல்வர். (குடக்கோ என்று பெயர்வைத்துக் கொண்டு கொங்குவஞ்சியில் இவனாண்டான் என்று சில ஆய்வறிஞர் சொல்வது நம்பக் கூடியதாய் இல்லை.) 

இவன் காலம் பெரும்பாலும் பொ.உ.மு. 187 - 131 எனலாம். இவனுக்கு 2 மனைவியர். தன் தாய் நல்லினியின் சோதரனான வேளாவிக் கோமானின் (இவன் மன்னனில்லை; வெறுங் கோமான்; கூட்டத் தலைவன். இமையவரம்பன் நெடுஞ்சேரலின் தாய்மாமன்) முத்த மகள் பதுமன் தேவியை இமையவரம்பன் நெடுஞ்செரலாதன் தன் முதல் மனைவியாகப் பெற்றான். குடக்கோ நெடுஞ் சேரலாதனின் பங்காளியான செல்வகடுங்கோ வாழியதன் வேளாவிக் கோமானின் இரண்டாம் மகளை மணந்தான். ஒருவகையில் செல்வக் கடுங்கோ வாழியாதன் குடக்கோ நெடுஞ்சேரலாதனுக்கு ஒன்றுவிட்ட தம்பி முறையாகவும் இன்னொரு வழியில் சகலையாகவும் ஆவான். 

நெடுஞ்சேரலாதனின் இரண்டாம் மனைவி உறையூர் ஞாயிற்றுச் சோழனின் மகள் நற்சோனை.  நெடுஞ்சேரலாதனின் மூத்த மனைவி வழிப் பெற்ற மக்கள் களக்காய்க் கண்ணி நார்முடிச் சேரலும், அவன் தம்பி ஆடுகோட்பாட்டுச் சேரலாதனும் ஆவர். இரண்டாம் மனைவி நற்சோணை வழி பெற்ற மகன் செங்குட்டுவன். இளங்கோ என்ற மகன் கிடையாது. அதற்குச் சிலம்பின் கடைசிக் காதை தவிர எந்த ஆதாரமும் கிடையாது, அந்தக் காதையில் நிறைய முரண்கள் உள்ளன. அது இளங்கோ எழுதியதா என்பதில் நிறையக் கேள்விகள் உண்டு.  

அகம் 127 இல் பேசப்படும் சேரலாதன் என்பான் பெரும்பாலும் இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனாகவே இருக்கமுடியும். (அவன் தந்தை உதியன்சேரலாய் இருக்கமுடியாது,) ஏனெனில் இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்காக, சேரன் செங்குட்டுவன் (தன் இளமைப் பருவத்தில்) கடல் பிறக்கோடிய செய்தியும், இலக்கத் தீவுகளில் இருந்த கடற்கொள்ளையரை ஒழித்துக் கட்டி அவருக்கு ஆதரவான (இன்றைக் கருநாடகம் சேர்ந்த) கடம்பரின் காவல் மரத்தை அறுத்ததும் இப்பாட்டின் 4 ஆம் அடியில் பேசப்படுகிறது.  இதே அடியின் தொடர்ச்சியில் இமையத்தில்  வில்பொறித்த  செய்தியும் பேசப் படுகிறது,  சிலம்பை ஆழ்ந்து படித்தால் கண்ணகிக்குக் கல் எடுக்க வடக்கே போனது இரண்டாம் முறை என்று விளங்கும். அதற்கு முன்னால், இமையத்தில் வில்பொறித்ததும், செங்குட்டுவனின் தாய் காசிக் கங்கையாற்றில் நீராடியதும் முதல்முறையாய்ப் பேசப்படும். 

செங்குட்டுவன் காலம் பெரும்பாலும் பொ.உ.மு.131-77 ஆகும். இத்தனை மன்னரின் காலங்களைப் பொருத்திப் பார்க்கும் போது, மாமூலனாரின் காலம் பெரும்பாலும்  பொ.உ.மு. 180-125 இல் அமைந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது  இந்தப் பாடல் பெரும்பாலும் பொ.உ.மு. 131-125 இல் பாடப் பட்டிருக்கலாம். இந்தப் பின்புலத்தோடு, குறிப்பிட்ட  பாடல் அடிகளுக்கு வரலாம்.

”வெற்றி கொள்ளும்  முரசத்தை உடைய சேரலாதன் கடற்கொள்ளையரைத் தாக்கியழித்துக் கடலைப் பிறக்கோட்டி (தனக்கென ஆகும் கடல் எல்லையைப் பின் தள்ளி), கடம்பரின் காவல்மரத்தை அறுத்து, தம் பெரியவர் வியக்கும் (=மருளும்) படி இமையத்தில் வளையும் வில் சின்னத்தைப் பொறித்து,  அப் பயணத்தால் தான் பெற்ற ஒன்னார் (= பகைவர்) அவன் நன்னகர் மாந்தையின் முற்றத்தில் பணிந்து திறையாகத் தந்த பாடு (=உழைப்பு, செய்நேர்த்தி) நிறைந்த அணிகலங்களும், பொன்னால் செய்த கட்டிகளும், வயிரமும்  என 10^9 அளவு பொருந்தியதாய்க் (இங்கே ஆம்பல் எனும்  எண்குறிப்பு எடையைக் குறிக்கிறதா? - என்பது விளங்கவில்லை. ஆம்பல் என்பது உயர்வுநவிற்சியும் ஆகலாம்) குவித்து அன்று அந்த நிலம் வருந்தும் படி உறந்த நிதியத்தைப் போல்” .  

ஒரு நிதியத்தைச் சம்பாதிக்க வடபால் இருக்கும் மொழிபெயர் தேயத்திற்குப் போன தலைவனைப் பற்றித் தோழி தலைவிக்குச் சொல்கிறாள்.

வரலாறுச் செய்தி மட்டும் இங்கு சொன்னேன். முழுப் பாட்டையும் நான் விளக்கவில்லை.

அன்புடன்,

இராம.கி.


Saturday, November 21, 2020

ஆறாம் திகழி

" சஷ்டி " தமிழ்ச் சொல் என்ன ? - என்று திரு செம்பியன் வளவன் தமிழ்ச் சொல்லாய்வு களத்தில் கேட்டார். அவருக்கான விடை இது.

kanda shasti என்பது kanda shasti tithi என்பதன் சுருக்கம். shasti என்பது சங்கதச்சொல். ஆறாம் என்பது அதன் பொருள். kanda shasti tithi என்ற சொற்றொடரில் tithi என்பதைத் தொக்கி இக்காலம் புழங்குகிறார். tithi என்பதைத் திகழி என்று தமிழில் சொல்லுவோம். இது நிலவின் ஒரு பிறை. அமையுவாவில் (அமாவாசையில்) தொடங்கி 15 வளர் பிறைகளும், பூரணையுவாவில் (பௌர்ணமியில்) தொடங்கி 15 தேய்பிறைகளும் உண்டு. 15 ஆம் தேய்பிறையும் முதல் வளர்பிறையும் ஆன திகழியை அமையுவா என்கிறோம். அதேபோல் 15 ஆம் வளர்பிறையும் முதல் தேய்பிறையும் ஆன திகழியை பூரணையுவா என்கிறோம்.

(திகழி, தாரகை போன்ற தமிழ்ச்சொற்களின் பிறப்பைத் தெரிந்து கொள்வோம். தழல் என்பது நெருப்பு. அழல் என்றாலும் நெருப்பே. ”தழலும் தாமரையானொடு” என்பது தேவாரம் 1215:27. “தழதழவென எரிகிறது” என்று நாம் சொல்லும் போது அடுக்குத்தொடர் ஆக்குகிறோம். ழகரத்திற்கு மாறி ”தளதளத்தல்” என்றாலும் ”விளங்குதல்” பொருளுண்டு. அப்புறம், ழகரம் பயிலும் பல்வேறு சொற்கள் மாற்றொலியில் ககரம் பயிலும். இங்கே “தழதழ” என்பதும் அதே மாதிரி, ”தகதக” என்று பலுக்கப்படும். ”தகதகவென எரிகிறது” என்பதும் நம் பேச்சுவழக்கில் உள்ளதுதான். பொதுவாக எரிபவை சூடும், ஒளியுங் காட்டும். தக>தகம்= எரிவு, சூடு. தகம்>தங்கம்= ஒளிரும் பொன். தக>திக>திகழ்= திங்கள், நிலா.

திகழ்>திகழி= திதி. நிலவின் ஒரு பிறை. சூட்டின் காரணமாய் தக>தகு>தகை = தாகம். தகம்>தாகம் = நீர்வேட்கை என்ற சொற்களும் எழுந்துள்ளன. தகல் = ஒளி என்பது அகராதியில் இன்றும் இருக்குஞ் சொல். தக>தகர்>தகரம் (tin) என்பது ஒளிகாட்டும் வெளிர்ந்த வெள்ளீயத்திற்கு இன்னொரு பெயர். தகர்>தார் எனப் பலுக்கல் திரிவுகொள்ளும். இதுபோல் நூற்றுக்கணக்கான தமிழ்ச்சொற்கள் பலுக்கல் திரிவு காட்டியுள்ளன. அவற்றில் மூன்றை மட்டும் இங்கு காட்டுகிறேன். பகல்>பால், அகல்>ஆல், நீளம்>நிகளம் இவை போலத் தகர்>தார் என்பது அமையும். பின் தார்>தாரகை என்பது அடுத்த நீட்சி. இதன் பொருள் எரியும், ஒளிதரும் விண்மீன். ]

தமிழர் கணக்கில், சந்திரமான மாதங்கள் அமையுவாவில் தொடங்கும். சந்திரமான கார்த்திகைத் திங்கள் அமையுவாவில் கந்தனின் ஆறாம் திகழி (kanda shasti tithi) விழா தொடங்குகிறது. இவ்விழாவை நான் இங்கு விவரிக்க வில்லை. இந்த ஆறாம் திகழி விழாவின் ஆறாம் நாள் (கிட்டத்தட்ட நாள், ஆனால் திகழிக் கணக்கின் படி இதைச் செய்யவேண்டும்.) இந்த ஆண்டு ஆறாம் திகழி (Shasti tithi) என்பது நவ.19 இல் பிற்பகல் 9:59 க்குத் தொடங்கி, நவ. 20 பிற்பகல் 9:29 க்கு முடிந்தது. இதைப் பொறுத்து சூர சம்மாரம் நடைபெற்றது.


Monday, November 16, 2020

Material and Process Engineering

 Material and Process Engineering என்பதை தமிழில் எப்படிக் கூறுவது? - என்று ”சொல்” முகநூல் குழுவில் கேட்டிருந்தார்.

பலநேரம்  Material தொடர்பான சொற்களுக்கு வேற்றுமை காட்டாது எல்லாவற்றிற்கும் பொருள் என்றே சொல்வது நம்மை வெகுதொலைவு கொண்டு சொல்லாது. அதிலும் துல்லியம் வேண்டும்.

content = உள்ளீடு

matter = பொருண்மை, 

material = பொருணை,

meaning = பொருட்பாடு 

substance = உள்ளடை 

subject = அகத்திட்டு, செய்பொருள், எழுவாய், கருத்தா 

topic = தலைப்பு 

article = உருப்படி, 

thing = தினை, பொருள் 

object = புறத்திட்டு, செயப்படுபொருள், கருமப்பொருள் 

Material and Process Engineering = பொருணைப் பொறியியலும், செலுத்தப் பொறியியலும்.

தாரை வாழ்சுற்று (Star life cycle)

நண்பர் ஒருவர் ”தாரை வாழ்சுற்று” பற்றிய ஒரு படத்தைக் கொடுத்து அதிலுள்ள சொற்களுக்கான தமிழ் இணைகள் கேட்டிருந்தார். கீழே அவைகளைக் கொடுத்துள்ளேன்.  

stellar nebula = தாரை முகில். தாரை என்பது விண்மீனுக்கு இன்னொரு பெயர். ஒரு கோளத்தின் எல்லாத் திசையிலும் இருந்து நீர்த்தாரை போல் ஒளி யொழுக்கு வெளிப்பட்டுக் கண்ணில் தெரிவதால், தாரையே அதற்குப் பெயராயிற்று. nebula (n.) = முகில்; mid-15c., nebule "a cloud, mist," from Latin nebula, plural nebulae, "mist, vapor, fog, smoke, exhalation," figuratively "darkness, obscurity," from PIE root *nebh- "cloud."

average star நிரவல் தாரை

red giant அரக் கயை (அரக்கு நிறம் சிவப்பு நிறம். அரன் என்றே சிவனைக் குறிக்கிறோம். அரோ அரா>அரோகரா = சிவ சிவ; கயம்/கயை = பெரியது = giant. கயன் = பெரியவன்

planerary nebula கோள முகில்

white dwarf வெண்கூளி (குள்ளம் = குறுகிய நிலை. கூளன் = குட்டையானவன். கூளி = dwarf) 

massive star மொதுகைத் தாரை (ஒரு பொருள் மொத்தையாய் இருப்பதை massive என்போம். mass = மொதுகை.) 

red Supergiant அர மீ கயை

Supernova - மீ நுவ்வை (நுல் என்பது முல்லின் போலி. முல்>முன் என்பது முன் தள்ளி வருவது. நுந்துதலும் முன் தள்ளுதலே. நுல்வி வருவது= பொங்கி வருவது. நுல்வை>நுவ்வை.)

neutron star = நொதுமித் தாரை (நொதுமல் என்பது எப்பக்கமும் சாராமல் நடுநிலையில் இருப்பது. ஓர் அணுக் கருவில்  இருக்கும் முன்னிகள் (protons) பொதிவுக் கொண்மை (positive charge) பெற்றிருக்கும்  கருவைச் சுற்றிவரும் மின்னிகள் ( electrons) நொகைக் கொண்மை (negative charge) பெற்றிருக்கும். கருவிற்குள் இருக்கும் முன்னிகள் ஒன்றையொன்று முட்டி மோதி வெளிப் படாமல் அடைத்துவைக்க எந்த மின் கொண்மையும் (electric charge) கொள்ளாத நொதுமிகள்( neutrons) பயன்படும். ஒரு தாரையில் முன்னிகளும், மின்னிகளும் குறைந்து நொதுமிகள் கூடிப்போன நிலையில் தாரை அமைந்தார் அது நொதுமித் தாரையாகும்.)

Black hole கருங்குழி (கருந்துளை என்றுஞ் சொல்வர். நான் குழியை விழைகிறேன்.)

 



Monday, November 09, 2020

பாலம்

”பாலம்’என்ற சொல்லின் சொற்பிறப்பை நண்பர் ஒருவர் கேட்டார். இதற்குச் சற்று சுற்றிவளைத்தே சரியான விடை சொல்லமுடியும். வெவ்வேறு நீர்ப் பரப்புகளைக் (அவைகள் நிலைத்தும் இருக்கலாம், ஓடவுஞ் செய்யலாம்)  கால்நடையிலோ, வண்டிகள், வேயங்களாலோ Iwagons), கடப்பதை இவ் இடத்தில் ஓர்ந்து பாருங்கள். முதலில் ஓரடியகலமே கொண்ட வாய்க்காலைக் கடப்பதாய் எண்ணுங்கள். இதைத் தாவியே  கடந்துவிடலாம். அடுத்து, 1 (அ) 2 மீ. அகலக் கால்வாயின் குறுக்கே 2 கரைகளை அணைத்தாற்போல் 2 மர இணைப்பை இட்டுக் கடந்துவிடலாம். கால்வாயின் அகலம் கூடக்கூட குறுக்கு மரத் திண்ணமும் (thickness) கூடத்தான் வேண்டும். பலநேரம் திண்ணத்தைக் கூட்டுவது  முடியாது போகலாம். இன்னுஞ் சிக்கலாய், குறுக்கு மரப் பிணைப்பின் மீது சுமையோடு போகையில் மரங்களே கூட முறிந்துவிடலாம். இதைத் தடுக்க, குறுக்குமரக் கட்டுமானம் மிக வலிதாய் இருக்கவேண்டும். 

இத்தகைய கட்டுமான அடவு செய்வதற்கு, சுற்றியுள்ள இயற்கையைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். பல இடங்களில் ஆலமரம் பார்த்திருப்பீர்களே?  குட்டை அடித்தண்டும், 360 பாகையில் கிளைகள் பரந்தும் வளரும் மரம் அது . மரம் வளர, வளர, அடிமரம் மட்டுமின்றி, கிளைகளின் திண்ணமும் கூடும். கிளைகளின் கனத்தைக் காண்கையில், இவ்வளவு பளுவை இம்மரம் எப்படித் தாஙகுகிறது என்ற ஐயமும் நமக்கு எழலாம். கிடைமட்டக் கிளையிலிருந்து, உருத்துக் காற்றினூடே கீழ்நோக்கி நாலித் (தொங்கித்) தூணென விழும்  புதுவேர் (aerial prop root) நிலத்தைப் பற்றி, மரச் சுமைப்பரவலை எளிதாக்குவதை நாம் காணலாம். ஆலமரத்தின் இவ்வியத்தகு நுட்பத்தைப் பழந்தமிழன் கூர்ந்து கவனித்திருக்க வேண்டும். ஏனெனில் அதை இந்தப் பால அடவில் பயன் படுத்தியுள்ளான். ஆலமரத்தை இன்னும் ஆழமாய்க் கவனிப்போம்.

 ஆல மரம் என்பது அகல மரம். ஆலின் சொற்பிறப்பும் அதுவே தான். அகல்> ஆல். இதுபோல் ஆகும் திரிவு 1000 சொற்களுக்கு மேல் நடந்துள்ளது. v1- short vowel. V1- long vowel. c= consonant என்று வைத்துக் கொள்ளுங்கள். c1viகc2v2 என்று சொல்லிருந்தால், பேச்சில் ”க” தொலைத்து v1 ஐ  V1 ஆக்கி c1V1c2v2 என்று ஆவது தமிழில் மிகுதி. கணக்கிலா சொற்களில் இருந்து. இங்கு 2 ஐ மட்டும் காட்டுகிறேன்.. (மற்றவற்றை ஓர் அகரமுதலியில் பாருங்கள்.) பகல்>பால்;  அகழம்>ஆழம். இதேமுறையில் அகலமரம்> ஆலமரம்.  ”க”விற்குப் பகரியாய் வகரத்திலும் இதுபோன்ற சொற்களுண்டு.  கிளையின் ஆரம் கூடக்கூட உருத்தியபடி, நாலும் (விழுகும்) விழுது கெட்டிப்படும். மர அடித்தண்டின் மேல் ஆலின் அரைக்கோளம் படர்ந்தெழும். கூர்ந்து காணின், அரைக்கோள மேங்கோப்பு (superstructure; சிவகங்கை வழக்குச்சொல்) சேர்ந்த எடையை, அடிமரமும் விழுதுகளும் சேர்ந்தே தாங்கும்..  

ஆலின் அறிவியல் பெயர்:  : Ficus benghalensis (Moraceae) இதற்குத் தமிழில் வேறு பெயர்களும் உண்டு. பூதவம் = 30 மீ உயரத்திற்கும் மேல் பூதமாய்ப் பெருத்த மரம்.  கா(ன்)மரம் = ஒவ்வொரு விழுதும் அடிமரம் போல் தோற்றுவதால், காடு போல் காணும் மரம்., கோளி = அரைக்கோள மரம்., வட்டம்>வடம் = வட்டக் குடை மரம். தொல்மரம்/பழுமரம் = தொல்/பழுத்த அகவை  கொண்ட மரம்., பால்மரம்= பால்தரும் மரம். மரத்தைக் கீறி, வடியும் பாலைக் கீரம்/கீறம் என்பர். (சங்கதத்தில், நாம் அருந்தும் பாலையே கூட இதோடு ஒப்பிட்டு, kṣīra என்பார் ) மேலே சொன்ன ”நால்குருத்தும்” (தொங்கும் வேர் கொண்ட மரம்) தமிழ்ப்பெயரே. 

சங்கதத்தில் , நால்குருத்தை, நாகுருத்த> நியக்ரோத என்று திரித்துப் பயன் உறுத்துவார். nyagrodha m.( rudh- equals ruh-),"growing downwards"the Banyan or Indian fig-tree, Ficus Indica (it belongs to the kṣīra-vṛkṣas- q.v;fibres descend from its branches to the earth and there take root and form new stems). வட்ட மரம் (vaTavRkSa), வண்டீரம் (bhaNDIra), தொழு மரம் (yajJavRkSa), விழுது மரம் (rohin) என்ற பெயர்களையும் சங்கதம் நம்மிடமிருந்து ஈர்த்துக் கொள்ளும். வணிகர் கூடும் அம்பலம் ஆனதால் வணிய மரம் (: Banyan) என்பது ஆங்கிலத்தில் பெயராயிற்று. திரு அன்பிலாந்துறை, திருப்பழுவூர், திருவாலம்பொழில், திருவாலங்காடு, திருமெய்யம், திருவல்லிபுத்தூர் போன்ற பல்வேறு தலங்களில் ஆலமரமே தல மரமாகும். 

புல் எனும் வேர் புல்லி( தழுவி)க் கொள்ளலையும், பற்றிக் கொள்ளலையும் குறிக்கும். புல்லினாற் போல் பற்றிப் பொருதும் விலங்கு புலி. பல்லினாற் போல் (பற்றினாற் போல்) சுவரில் செங்குத்தாய் நகரும் உயிரி பல்லி. பல்தல் என்பதே பற்றலானது. ஒன்றைப் பற்றிக் கொள்வது பற்று. இறைவனைப் பற்றிக் கொள்வது இறைப்பற்றி.(பத்தி>பக்தி என்று திரியும்.). வாயில் பண்டத்தைப் பற்றிக் கொள்வது பல். வாயிலுள்ள ”பல்”லின் எண்ணிக்கை கருதி ”பல. பன்மை” போன்ற பொருட்படுகள் ஏற்பட்டன. பல்> பல்+து> பற்று> பத்து என்பது கூட எண்ணிக்கை வளர்ச்சியைக் குறித்தது. கை எனும் உறுப்பு 5 ஐக் குறித்தது போல் பல் எனும் உறுப்பு பத்து 10 ஐக் குறித்தது. பற்றுவதற்கு அமையும் மாந்த உறுப்புகள் கையும். பல்லுமே. 

பல்+து> பற்று> பத்து என்பது, பஃது>பது என்றும் அழைக்கப் பட்டது. தாயின் முலையைப் பிள்ளை பல்லால் பற்றி அருந்தும் நீர்மம் பால். வெள்ளை நிறம் என்ற பொருளும் கூட அதற்கு அமைந்தது. எனவே, பல்லியதைப் பாலியது என்று கூடச் சொல்லலாம்.  அதே முறையில் நீரைக் கடக்கப் பாலியது (= பற்றியது) பாலம் ஆகும். இரு கரைகளையும் பற்றிக் கொண்டு, ஆலம் விழுதுபோல் அமையும் பாலத் தூண்கள் ஆற்றுபடுகையைப் பற்றிக் கொண்டு, அமைவது பாலம். ஆங்கிலத்தில் bridge (n.1) என்பதையும் இப்படித்தான் சொல்வர். "any structure that affords passage over a ravine or river," Old English brycge, from Proto-Germanic *brugjo (source also of Old Saxon bruggia, Old Norse bryggja, Old Frisian brigge, Dutch brug, Old High German brucca, German Brücke), from PIE root *bhru "log, beam," hence "wooden causeway" (source also of Gaulish briva "bridge," Old Church Slavonic bruvuno "beam," Serbian brv "footbridge").

இது மட்டுமல்ல. beam (n.) என்பது பாலத்தில் போடப்படும் பாவம் (பல்வியது பவ்வும். பவ்வம்>பாவம்). Old English beam originally "living tree," but by late 10c. also "rafter, post, ship's timber," from Proto-Germanic *baumaz "tree" (source also of Old Frisian bam "tree, gallows, beam," Middle Dutch boom, Old High German boum, German Baum "tree," and perhaps also (with unexplained sound changes) Old Norse baðmr, Gothic bagms), which is of uncertain etymology (according to Boutkan probably a substrate word). The shift from *-au- to -ea- is regular in Old English.

பல்>பால்>பாலம் என்று தமிழில் சொல்வது ஏதோ விந்தையல்ல. அதில் மொழியின் வழமையும் உள்ளது.  இன்னொரு வேரான கல்லைப் பார்ப்போம். கல்லுதல் = குத்தல், தோண்டல், தோண்டி வெளிக்கொணர்தல்,  கல்லப்பட்டது கலம் என்ப்படும். மட்கலம், உண்கலம், நீர்க்கலம், மரக்கலம் போன்ற பயன் பாடுகளை எண்ணுங்கள். எல்லாமே கல்லப் பட்டவை. அடுத்துக் கல்லும் கருவி கலப்பை எனப்படும். இனிக் கல்லப்பட்டது கலயம்>கலசம் என்றும் சொல்லப் படும். மரத்தைக் கல்லி உருவானது கல்பு> கற்பு> கப்பு என்றும் அழைக்கப் படும். கப்பின் நீட்சி கப்பல். இனிக் கல்லியது கல்நம்> கன்னம் = குழி, படகு என்றும் அமையும். கல்லியது கடம், கரகம் என்ற சொற்களையும் உருவாக்கும். கல்வு> கவ்வு என்பது கை என்ற சொல்லுக்கும் அடிப்படையாகும். 

கல்லி எழுந்தது கலம்> களம்> கயம் = நீர்நிலை. கயத்தின் நீட்சி கயத்தில் கல்லினால் கயிதல்> கசிதல் வினை உருவாகும். வேறுவகையில் கல்லப்பட்டது கால்வாய். கல்லுதல் என்பது கறணுதல் என்ற சொல்லையும் உருவாக்கும். குல்>கல்>கால் = தோன்றல், வெளிவருதல், பாய்தல், ஓடுதல், பரவுதல், வீசுதல்; time என்பது நீண்டுபோவது எனவே காலம்  இருளைக் கல்லியது கால்>காலை ஆனது. கல்> கால்> காய்> காயம் என்பது கல்லும் உடம்பைக் குறிக்கும். நான் பல்வேறு சொற்களைச் சொல்லிப் போகலாம். கல்>காலம் போல் பல்>பாலம் என்று உணர்ந்தால் போதும்

இனி சல் வரிசையையும், தல்/தள் வரிசையும் பார்க்கலாம்.  *சல் (செல்) என்பது சால் (furrow in ploughing) என்பதைக் குறிக்கும். சால்>சாலை என்பது நீண்டு போகும் பதை.  தள் (தள்ளு)> தாள்>தாளம் (தாழை); தால் = நா>தாலம் 

6 வகைப் பாலங்கள்:
Arch = ஆலகம், ஆலகை; ஆல்-தல் = சுற்று-தல். அல்>ஆலம்> ஆரம் = சுற்றும் கை; arm; ஆல்கம்>ஆலுகம், ஆலகம் = சுற்றிப் பெற்ற சிறு பகுதி, arc. ஆல்>ஆழு>ஆழி = நிலப்பரப்பைச் சுற்றிய கடல், வில்.
Beam = பவ்வம்; கீழே முன்னிகைகளில் கொடுத்துள்ள பாலம் என பதிவைப் பாருங்கள்.)
Truss = தொடையம்; தொடுத்தல் = சேர்த்தல்; தொடை = மாலை, எதுகை - மோனை - இயைபு போன்ற யாப்புக் க்ட்டுகை. தொடையம் = இல்ரும்புச் சலாகைகளைக் கொண்டு வேண்டும் வகையில் தொடுக்கும் வடிவம்.
Cable-stay = கொப்புழைத் தாயம்; cable = கொப்புழை (மரத்தில் கிளை, கொப்பு என்று உறுப்புகள் பிரிவதை நினைவு கொள்ளுங்கள். உழை என்ற ஈறு கொப்பின் சிறியதைக் குறிப்பது.) to stay = தாய்-தல்; வாழைப்பழம் வடமாவட்டப் பலுக்கலில் வாயப்பயம் ஆவது போல் தாழம் என்பது தாயமாகும். ”பரம பத விளையாட்டைப்” பாம்பு/ஏணித் தாயக்கட்டம் என்பார். தாயம் = தங்குமிடம், 100 தாயக்கட்டம் = 100 தங்குங் கட்டம். தாயத்தில் உருட்டுங் கட்டை தாயக் கட்டை (dice) ஆகும். ’ஒன்று” போட்டால் தான் தாயம் தொடங்கலாம் என்பதால் ஒன்று போடலும் ”தாயம் போடல்” ஆகும்..
Cantilever = கோணெழுவம்; canti = கோணக் கூடிய, கோடக் கூடிய, கோண்டக் கூடிய. Lever = கடப்பும் பாறை போல், எழுப்பும், எழுவும் கருவி.
suspension = ஊஞ்சுபந்தம் sus = ஊஞ்சல் போல் தொங்குதல். ஊஞ்சல்>ஊசல். pendere in Latin = பந்துறுதல்.

அன்புடன்,

இராம.கி.