Monday, November 09, 2020

பாலம்

”பாலம்’என்ற சொல்லின் சொற்பிறப்பை நண்பர் ஒருவர் கேட்டார். இதற்குச் சற்று சுற்றிவளைத்தே சரியான விடை சொல்லமுடியும். வெவ்வேறு நீர்ப் பரப்புகளைக் (அவைகள் நிலைத்தும் இருக்கலாம், ஓடவுஞ் செய்யலாம்)  கால்நடையிலோ, வண்டிகள், வேயங்களாலோ Iwagons), கடப்பதை இவ் இடத்தில் ஓர்ந்து பாருங்கள். முதலில் ஓரடியகலமே கொண்ட வாய்க்காலைக் கடப்பதாய் எண்ணுங்கள். இதைத் தாவியே  கடந்துவிடலாம். அடுத்து, 1 (அ) 2 மீ. அகலக் கால்வாயின் குறுக்கே 2 கரைகளை அணைத்தாற்போல் 2 மர இணைப்பை இட்டுக் கடந்துவிடலாம். கால்வாயின் அகலம் கூடக்கூட குறுக்கு மரத் திண்ணமும் (thickness) கூடத்தான் வேண்டும். பலநேரம் திண்ணத்தைக் கூட்டுவது  முடியாது போகலாம். இன்னுஞ் சிக்கலாய், குறுக்கு மரப் பிணைப்பின் மீது சுமையோடு போகையில் மரங்களே கூட முறிந்துவிடலாம். இதைத் தடுக்க, குறுக்குமரக் கட்டுமானம் மிக வலிதாய் இருக்கவேண்டும். 

இத்தகைய கட்டுமான அடவு செய்வதற்கு, சுற்றியுள்ள இயற்கையைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். பல இடங்களில் ஆலமரம் பார்த்திருப்பீர்களே?  குட்டை அடித்தண்டும், 360 பாகையில் கிளைகள் பரந்தும் வளரும் மரம் அது . மரம் வளர, வளர, அடிமரம் மட்டுமின்றி, கிளைகளின் திண்ணமும் கூடும். கிளைகளின் கனத்தைக் காண்கையில், இவ்வளவு பளுவை இம்மரம் எப்படித் தாஙகுகிறது என்ற ஐயமும் நமக்கு எழலாம். கிடைமட்டக் கிளையிலிருந்து, உருத்துக் காற்றினூடே கீழ்நோக்கி நாலித் (தொங்கித்) தூணென விழும்  புதுவேர் (aerial prop root) நிலத்தைப் பற்றி, மரச் சுமைப்பரவலை எளிதாக்குவதை நாம் காணலாம். ஆலமரத்தின் இவ்வியத்தகு நுட்பத்தைப் பழந்தமிழன் கூர்ந்து கவனித்திருக்க வேண்டும். ஏனெனில் அதை இந்தப் பால அடவில் பயன் படுத்தியுள்ளான். ஆலமரத்தை இன்னும் ஆழமாய்க் கவனிப்போம்.

 ஆல மரம் என்பது அகல மரம். ஆலின் சொற்பிறப்பும் அதுவே தான். அகல்> ஆல். இதுபோல் ஆகும் திரிவு 1000 சொற்களுக்கு மேல் நடந்துள்ளது. v1- short vowel. V1- long vowel. c= consonant என்று வைத்துக் கொள்ளுங்கள். c1viகc2v2 என்று சொல்லிருந்தால், பேச்சில் ”க” தொலைத்து v1 ஐ  V1 ஆக்கி c1V1c2v2 என்று ஆவது தமிழில் மிகுதி. கணக்கிலா சொற்களில் இருந்து. இங்கு 2 ஐ மட்டும் காட்டுகிறேன்.. (மற்றவற்றை ஓர் அகரமுதலியில் பாருங்கள்.) பகல்>பால்;  அகழம்>ஆழம். இதேமுறையில் அகலமரம்> ஆலமரம்.  ”க”விற்குப் பகரியாய் வகரத்திலும் இதுபோன்ற சொற்களுண்டு.  கிளையின் ஆரம் கூடக்கூட உருத்தியபடி, நாலும் (விழுகும்) விழுது கெட்டிப்படும். மர அடித்தண்டின் மேல் ஆலின் அரைக்கோளம் படர்ந்தெழும். கூர்ந்து காணின், அரைக்கோள மேங்கோப்பு (superstructure; சிவகங்கை வழக்குச்சொல்) சேர்ந்த எடையை, அடிமரமும் விழுதுகளும் சேர்ந்தே தாங்கும்..  

ஆலின் அறிவியல் பெயர்:  : Ficus benghalensis (Moraceae) இதற்குத் தமிழில் வேறு பெயர்களும் உண்டு. பூதவம் = 30 மீ உயரத்திற்கும் மேல் பூதமாய்ப் பெருத்த மரம்.  கா(ன்)மரம் = ஒவ்வொரு விழுதும் அடிமரம் போல் தோற்றுவதால், காடு போல் காணும் மரம்., கோளி = அரைக்கோள மரம்., வட்டம்>வடம் = வட்டக் குடை மரம். தொல்மரம்/பழுமரம் = தொல்/பழுத்த அகவை  கொண்ட மரம்., பால்மரம்= பால்தரும் மரம். மரத்தைக் கீறி, வடியும் பாலைக் கீரம்/கீறம் என்பர். (சங்கதத்தில், நாம் அருந்தும் பாலையே கூட இதோடு ஒப்பிட்டு, kṣīra என்பார் ) மேலே சொன்ன ”நால்குருத்தும்” (தொங்கும் வேர் கொண்ட மரம்) தமிழ்ப்பெயரே. 

சங்கதத்தில் , நால்குருத்தை, நாகுருத்த> நியக்ரோத என்று திரித்துப் பயன் உறுத்துவார். nyagrodha m.( rudh- equals ruh-),"growing downwards"the Banyan or Indian fig-tree, Ficus Indica (it belongs to the kṣīra-vṛkṣas- q.v;fibres descend from its branches to the earth and there take root and form new stems). வட்ட மரம் (vaTavRkSa), வண்டீரம் (bhaNDIra), தொழு மரம் (yajJavRkSa), விழுது மரம் (rohin) என்ற பெயர்களையும் சங்கதம் நம்மிடமிருந்து ஈர்த்துக் கொள்ளும். வணிகர் கூடும் அம்பலம் ஆனதால் வணிய மரம் (: Banyan) என்பது ஆங்கிலத்தில் பெயராயிற்று. திரு அன்பிலாந்துறை, திருப்பழுவூர், திருவாலம்பொழில், திருவாலங்காடு, திருமெய்யம், திருவல்லிபுத்தூர் போன்ற பல்வேறு தலங்களில் ஆலமரமே தல மரமாகும். 

புல் எனும் வேர் புல்லி( தழுவி)க் கொள்ளலையும், பற்றிக் கொள்ளலையும் குறிக்கும். புல்லினாற் போல் பற்றிப் பொருதும் விலங்கு புலி. பல்லினாற் போல் (பற்றினாற் போல்) சுவரில் செங்குத்தாய் நகரும் உயிரி பல்லி. பல்தல் என்பதே பற்றலானது. ஒன்றைப் பற்றிக் கொள்வது பற்று. இறைவனைப் பற்றிக் கொள்வது இறைப்பற்றி.(பத்தி>பக்தி என்று திரியும்.). வாயில் பண்டத்தைப் பற்றிக் கொள்வது பல். வாயிலுள்ள ”பல்”லின் எண்ணிக்கை கருதி ”பல. பன்மை” போன்ற பொருட்படுகள் ஏற்பட்டன. பல்> பல்+து> பற்று> பத்து என்பது கூட எண்ணிக்கை வளர்ச்சியைக் குறித்தது. கை எனும் உறுப்பு 5 ஐக் குறித்தது போல் பல் எனும் உறுப்பு பத்து 10 ஐக் குறித்தது. பற்றுவதற்கு அமையும் மாந்த உறுப்புகள் கையும். பல்லுமே. 

பல்+து> பற்று> பத்து என்பது, பஃது>பது என்றும் அழைக்கப் பட்டது. தாயின் முலையைப் பிள்ளை பல்லால் பற்றி அருந்தும் நீர்மம் பால். வெள்ளை நிறம் என்ற பொருளும் கூட அதற்கு அமைந்தது. எனவே, பல்லியதைப் பாலியது என்று கூடச் சொல்லலாம்.  அதே முறையில் நீரைக் கடக்கப் பாலியது (= பற்றியது) பாலம் ஆகும். இரு கரைகளையும் பற்றிக் கொண்டு, ஆலம் விழுதுபோல் அமையும் பாலத் தூண்கள் ஆற்றுபடுகையைப் பற்றிக் கொண்டு, அமைவது பாலம். ஆங்கிலத்தில் bridge (n.1) என்பதையும் இப்படித்தான் சொல்வர். "any structure that affords passage over a ravine or river," Old English brycge, from Proto-Germanic *brugjo (source also of Old Saxon bruggia, Old Norse bryggja, Old Frisian brigge, Dutch brug, Old High German brucca, German Brücke), from PIE root *bhru "log, beam," hence "wooden causeway" (source also of Gaulish briva "bridge," Old Church Slavonic bruvuno "beam," Serbian brv "footbridge").

இது மட்டுமல்ல. beam (n.) என்பது பாலத்தில் போடப்படும் பாவம் (பல்வியது பவ்வும். பவ்வம்>பாவம்). Old English beam originally "living tree," but by late 10c. also "rafter, post, ship's timber," from Proto-Germanic *baumaz "tree" (source also of Old Frisian bam "tree, gallows, beam," Middle Dutch boom, Old High German boum, German Baum "tree," and perhaps also (with unexplained sound changes) Old Norse baðmr, Gothic bagms), which is of uncertain etymology (according to Boutkan probably a substrate word). The shift from *-au- to -ea- is regular in Old English.

பல்>பால்>பாலம் என்று தமிழில் சொல்வது ஏதோ விந்தையல்ல. அதில் மொழியின் வழமையும் உள்ளது.  இன்னொரு வேரான கல்லைப் பார்ப்போம். கல்லுதல் = குத்தல், தோண்டல், தோண்டி வெளிக்கொணர்தல்,  கல்லப்பட்டது கலம் என்ப்படும். மட்கலம், உண்கலம், நீர்க்கலம், மரக்கலம் போன்ற பயன் பாடுகளை எண்ணுங்கள். எல்லாமே கல்லப் பட்டவை. அடுத்துக் கல்லும் கருவி கலப்பை எனப்படும். இனிக் கல்லப்பட்டது கலயம்>கலசம் என்றும் சொல்லப் படும். மரத்தைக் கல்லி உருவானது கல்பு> கற்பு> கப்பு என்றும் அழைக்கப் படும். கப்பின் நீட்சி கப்பல். இனிக் கல்லியது கல்நம்> கன்னம் = குழி, படகு என்றும் அமையும். கல்லியது கடம், கரகம் என்ற சொற்களையும் உருவாக்கும். கல்வு> கவ்வு என்பது கை என்ற சொல்லுக்கும் அடிப்படையாகும். 

கல்லி எழுந்தது கலம்> களம்> கயம் = நீர்நிலை. கயத்தின் நீட்சி கயத்தில் கல்லினால் கயிதல்> கசிதல் வினை உருவாகும். வேறுவகையில் கல்லப்பட்டது கால்வாய். கல்லுதல் என்பது கறணுதல் என்ற சொல்லையும் உருவாக்கும். குல்>கல்>கால் = தோன்றல், வெளிவருதல், பாய்தல், ஓடுதல், பரவுதல், வீசுதல்; time என்பது நீண்டுபோவது எனவே காலம்  இருளைக் கல்லியது கால்>காலை ஆனது. கல்> கால்> காய்> காயம் என்பது கல்லும் உடம்பைக் குறிக்கும். நான் பல்வேறு சொற்களைச் சொல்லிப் போகலாம். கல்>காலம் போல் பல்>பாலம் என்று உணர்ந்தால் போதும்

இனி சல் வரிசையையும், தல்/தள் வரிசையும் பார்க்கலாம்.  *சல் (செல்) என்பது சால் (furrow in ploughing) என்பதைக் குறிக்கும். சால்>சாலை என்பது நீண்டு போகும் பதை.  தள் (தள்ளு)> தாள்>தாளம் (தாழை); தால் = நா>தாலம் 

6 வகைப் பாலங்கள்:
Arch = ஆலகம், ஆலகை; ஆல்-தல் = சுற்று-தல். அல்>ஆலம்> ஆரம் = சுற்றும் கை; arm; ஆல்கம்>ஆலுகம், ஆலகம் = சுற்றிப் பெற்ற சிறு பகுதி, arc. ஆல்>ஆழு>ஆழி = நிலப்பரப்பைச் சுற்றிய கடல், வில்.
Beam = பவ்வம்; கீழே முன்னிகைகளில் கொடுத்துள்ள பாலம் என பதிவைப் பாருங்கள்.)
Truss = தொடையம்; தொடுத்தல் = சேர்த்தல்; தொடை = மாலை, எதுகை - மோனை - இயைபு போன்ற யாப்புக் க்ட்டுகை. தொடையம் = இல்ரும்புச் சலாகைகளைக் கொண்டு வேண்டும் வகையில் தொடுக்கும் வடிவம்.
Cable-stay = கொப்புழைத் தாயம்; cable = கொப்புழை (மரத்தில் கிளை, கொப்பு என்று உறுப்புகள் பிரிவதை நினைவு கொள்ளுங்கள். உழை என்ற ஈறு கொப்பின் சிறியதைக் குறிப்பது.) to stay = தாய்-தல்; வாழைப்பழம் வடமாவட்டப் பலுக்கலில் வாயப்பயம் ஆவது போல் தாழம் என்பது தாயமாகும். ”பரம பத விளையாட்டைப்” பாம்பு/ஏணித் தாயக்கட்டம் என்பார். தாயம் = தங்குமிடம், 100 தாயக்கட்டம் = 100 தங்குங் கட்டம். தாயத்தில் உருட்டுங் கட்டை தாயக் கட்டை (dice) ஆகும். ’ஒன்று” போட்டால் தான் தாயம் தொடங்கலாம் என்பதால் ஒன்று போடலும் ”தாயம் போடல்” ஆகும்..
Cantilever = கோணெழுவம்; canti = கோணக் கூடிய, கோடக் கூடிய, கோண்டக் கூடிய. Lever = கடப்பும் பாறை போல், எழுப்பும், எழுவும் கருவி.
suspension = ஊஞ்சுபந்தம் sus = ஊஞ்சல் போல் தொங்குதல். ஊஞ்சல்>ஊசல். pendere in Latin = பந்துறுதல்.

அன்புடன்,

இராம.கி.




No comments: