Thursday, December 10, 2020

குருதயமும் (heart) குருதியும் (blood) - 2

”குருதியின் சொற்பிறப்பு பற்றிய விளக்கம் சொல்லுமுன், முன்பகுதியில் மறந்த, குருதயம் தொடர்பான, இருவேறு செய்திகளைப் பற்றிச் சொல்ல வேண்டும். முதலில் வருவது. பிறங்கு, இறை, வரி/வரை, பொறி ஆகிய குருதயத்தின் இணைச் சொற்களைப் பற்றியது, (இதை அடையாளங் காண்பதில் தமிழ் அகராதிகளும் தடுமாறியுள்ளன. ஒத்திசைவு (consistensy) பார்க்காமலே சிலர் சொற்பொருள்களைப் பதியமுற்படுகிறார். கொஞ்சம் பொறுமையோடு நான் சொல்வதைக் கீழே படியுங்கள்.) இரண்டாவது மார்புக்கான சொற்களையும், அதில் வரும் நெஞ்சை குருதயத்தோடு குழப்பிக் கொள்வதையும் பற்றியதாகும்.  கீழே விளக்கமாய்ப் பார்ப்போம்.

“மெய்த்தகும் இறையே பிறங்கெனப் படுமே” என்பது 399 ஆம் திவாகர நூற்பா,  இதற்கு முன், ”உடல், பிணம், உடற்குறை, பாதம், காலடி, கரடு, கணைக்கால், முழந்தாள், தொடைப்பற்று, குறங்கு, அல்குல், இடை, மருங்குற்பக்கம், வயிறு, ஆண்குறி, பெண்குறி, தொப்பூழ், மார்பு, முலை, தேமல், கை, அகங்கை, விரல், நகம், தோள், முதுகு, தோள்மேல், கழுத்து, பிடர், பிறகு, முகம், உதடு, பல், எயிறு, சிரிப்பு, அண்ணம், கீழ்வாய்ப்புறம், உள்நா, நா, மூக்கு, கதுப்பு, கண், நெற்றி, புருவம், காது, தலை, முடி, பல்வேறு மயிர்கள், மயிர்ப்பரப்பு, மயிர்க்குழற்சி, மயிர்முடி, சடை” என வெளிப்படத் தெரியும் உடற்பாகங்களை, திவாகர நிகண்டின் மக்கட்பெயர்த் தொகுதி சொல்லும். . இவ்வரிசையை அடுத்து (வெளிப்படக் கண்ணுக்குத் தெரியும் உறுப்புகளுக்கும், கண்ணுக்குத் தெரியா உள்ளுறுப்புகளுக்கும் ஆன பொதுப்பெயரை நிகண்டு சொல்லும். 

இதையடுத்து,  ”சந்து (joint), இறை, உடல்தழும்பு (காயத்தின் அடையாளம்) , கழலை (கட்டி), நரம்பு (nerve), எலும்பு (bone), தலையோடு (கவாலம்), முழு எலும்பு (entire bone network), குடுமி (தலையில் பொருந்தும் மயிர்), கவால உச்சி, இந்திரியம் (reproductive glands), புலனறி கருவி (sensory perceptors)” எனும் உள்ளுறுப்புகளை திவாகர நிகண்டு விவரிக்கும். இப்படி வரும் ஒழுங்கு முறையால், ”பிறங்கு” என்பது  ஓர் “உள்ளுறுப்பு:” என்பது விளங்கும், பெரும்பாலான அகர முதலிகளில், பிறங்கின் பொருளாய் “விரலிறை” என்று குறிப்பார். விரல் எனும் வெளியுறுப்போடு இப்படிப் பிறங்கைப் பொருத்தி (20 ஆம் நூற்றாண்டு) அகராதி சொல்வது (9 ஆம் நூற்றாண்டு) நிகண்டிற்கு முரணாகிப் போகிறது. அப்படி எனில், இறை என்பதன் பொருள் தான் இங்கு என்ன? (இறைக்கு வேறு பொருள்களும் உண்டு.) 

”இறை-” எனும் வினைச்சொல்லிற்கு, ”தூவு, வீசு, எறி, பாய்ச்சு, தங்கு” போன்ற பொருள்களைச் சொல்வர். இறை- வினையடியில் பிறக்கும் பெயர்ச்சொற்கள் பல்வேறு உருபுகளையும், ஈறுகளையும் சேர்த்தே உருவாகும். காட்டு: இறைப்பி = pump. இதுவும் இறை-த்தொழிலில் ஏற்பட்டதே.  பழங்காலத்தில் “ப்பி” சேராத ”இறை” என்பது ஒருவேளை பாய்ச்சும் கருவியைக் குறித்ததோ? - என்ற இயல்பான ஐயம் நமக்கெழும். உடலுள் உறுப்பாகும் ஒரே இறைப்பி குருதயம் தானே? ஆக, ”இறையும்” குருதயம் தானா? ஏனெனில் தொடர்புள்ள இறு> இற்று> இற்றி; இறு> இறை> இறைச்சி போன்றவை எலும்போடு ஒட்டித் தங்கும் ஊனைக் குறிக்கின்றன. இறைச்சியின் ஊன் பொருளைக் கண்டே ”இறை” நோக்கி நான் ஓர்ந்துபார்க்க விழைந்தேன்,

சரி! “பிறங்கிற்கு என்ன பொருள்?” அதை வினை வழியே பார்ப்போம். பிறங்கின் 9 பொருள்களில் பெருகுதலும் (to overflow, inundate. மாய்ப்பதோர் வெள்ளம் போலும் -- பிறங்கி வந்து, கலித் 146), ஒலித்தலும் (to sound) நம்மைக் கவனிக்க வைக்கும். வெள்ளம்போல் ”இறை” அரத்தத்தை இறைக்கிறது. ”பிலக்” என்ற ஒலியோடும் அது செயற்படுகிறது, பிலக்>பிறக் என்பது ஒலிப்பில் மெலிந்து பிறங்கு ஆகலாம். ஓர்ந்து பார்த்தால், குருதயத்தைக் குறிக்க “பிறங்கு” எனும் சொல் முற்றிலும் பொருத்தமே. பிங்கலம் 1082 ஆம் நூற்பா, “பிறங்கு, வரி, பொறி, வரை, இறையாகும்” என்பதில் வரும் வரி, வரை என்பன அரத்த ஓட்டத்தால் எழுந்தவை. வரித்தல்/வரைத்தல் = ஓடுதல்.  பொறி என்பது அரத்தம் இறைக்கும் எந்திரத்தைக் குறிக்கும். குருதயமும் அது தானே?. இனி, 16 ஆம் நூ. சூடாமணி நிகண்டு,  பிறங்கையும் வரியையும் தவிர்த்து, தருபொறி, வரை என்ற சொற்களை மட்டும் காட்டும். ,

சென்ற பகுதியில் விட்டுப்போன இன்னொரு செய்தி மார்பின் (frontside of the chest) பெயர்கள் பற்றியதாகும்.  அகலம், மருமம், ஆகம், உரல்/ம் என்ற சொற்களைத் திவாகரமும், இவற்றோடு நெஞ்சைச் சேர்த்துப் பிங்கலமும், சூடாமணி நிகண்டும் தரும். தொல்காப்பியத்தில் புழங்கும் ”நெஞ்சு”, திவாகரத்தில் விடுபட்டது, வியப்பாகிறது. மார்புக்கு மேல் உள்ளது முலை, முலைக்கு மேல் உள்ளது முலைக்கண். மார்பின் பின்னுள்ளது முதுகு/புறம். இனி மார்பின் சொற்பிறப்பிற்கு வருவோம். அகலமும், ஆகமும் ஒரே மாதிரி எழுந்தவை. நம் உடம்பில் வெளிப்படத் தெரியும் உறுப்புகளில் மார்பே அகலமானது. அகல்> அகல்வு> அகவு> அகவம்> ஆவம்> ஆகம் என்பது அகலத்தின் இன்னொரு சொல்வளர்ச்சி, இனி நெஞ்சிற்கு வருவோம்.

நெஞ்சு என்பது மார்பின் 2 பரிமானக் குறிப்பு. ஒரு துணி நெய்கையில் வார்ப்பு நூலும் (warp thread) ஊட்டு நூலும் (weft thread) பின்னிப் பிணைந்து நெய்யப் படுகின்றன. நெய்தல் வினை, நெய்வு>நெசவு எனும் பெயர்ச்சொல்லை உருவாக்கும். நெய்ந்தது>நெய்ஞ்சது>நெஞ்சு என்பது மார்பின் 2 பரிமானக் குறியீடு, நெஞ்சாங்கூடு என்பது நெஞ்சோடு சேர்ந்த என்புக்கூடு (chest). ஆங்கிலச் சொற்பிறப்பும் இக் கூட்டுப் பொருளை அழுத்திச் சொல்லும். chest (n.). Old English cest "box, coffer, casket," usually large and with a hinged lid, from Proto-Germanic *kista (source also of Old Norse and Old High German kista, Old Frisian, Middle Dutch, German kiste, Dutch kist), an early borrowing from Latin cista "chest, box," from Greek kistē "a box, basket," from PIE *kista "woven container" (Beekes compares Middle Irish cess "basket, causeway of wickerwork, bee-hive," Old Welsh cest).

நெஞ்சாங்குலை என்பது நெஞ்சின் பின்னுள்ள குலை. எனவே heart என்று பொருள்படும். வாழை, தென்னை, பனை ஆகிய மரக்கள் குலைகள் தள்ளுவது போல், நெஞ்சுக்கூடு இங்கே குலை தள்ளியது. என்னைக் கேட்டால் நெஞ்சை heart இக்கு இணையாய்ப் பயன்படுத்துவது முற்றிலும் தவறான சொல்லாட்சி யாகும். நெஞ்சாஙுகுலை என்பதே சரியான சொல்லாட்சி. 

அகலம், ஆகம் போல், மருமமும் மார்பும் ஒரேவிதமான சொற்பிறப்புக் கொண்டவை.  மருவுதல் = தழுவுதல். மருமகள்/ன் = தழுவிக் (ஏற்றுக்) கொண்ட மகள்/ன். மருவீடு = சம்பந்தி குடும்பம். மருவுகை = marriage. ஆணும் பெண்ணும் தழுவும் போது, இணையும் பகுதி மருவு>மார்வு என்று சொல்லப்பட்டது. இன்னொரு வகையில் மகரம் வகரத்தின் போலியாகையால் மருவுதல் = மருமுதல் என்ற சொல்லும் உருவானது. மருமுதலில் உருவான பெயர்ச்சொல் மருமம். உர்>உறு என்பதும் உரல் = தழுவலைக் குறிக்கும். உரம் என்ற பெயர்ச் சொல் இதில் உருவானது, மார்பைக் குறிக்கும் எல்லாச் சொற்களும்  தழுவல் கருத்தில் உருவானவை ஆகும். மார்பு தொடர்பான சொற்களைக் குருதயம் தொடர்பாய்க் குறிக்கமுடியாது.  இதுவரை ஆய்ந்த அளவில், heart ஐக் குறிக்க, குருதயம், இருதயம், இதயம், இதம், நெஞ்சாங் குலை, தாமரைக் காய்,  குண்டிக் காய், போன்றவறோடு இறை, வரி, வரை, தருபொறியையும் சேர்க்கலாம். மொத்த்ம் 12 சொற்களை இப்படி நாம் குறிக்கலாம்.. இனிக் குருதிக்கு வருவோம்.

அன்புடன்,

இராம.கி.


2 comments:

kirubanidhi said...

வணக்கம் ஐயா,
இதில் இனி நெஞ்சு என்னும் சொல் பற்றி பார்ப்போம் என்ற பின்னர், நெஞ்சோடு சேர்ந்த என்புக்கூடு நெஞ்சாங்கூடு என்று மட்டுமே வந்துள்ளது. நெஞ்சு எனும் சொல் பற்றிய வேர் சொல் விவரனை இல்லயே. அது பற்றி விவரங்கள் தந்தால் மேலும் உபயோகமாக இருக்கும்.

இராம.கி said...

மேலே சொலியுள்ளேனே? படிக்கவில்லையா? அந்தப் பத்தியை மீண்டும் வெட்டிக் கீழே ஒட்டியுள்ளேன்.
---------------------------
நெஞ்சு என்பது மார்பின் 2 பரிமானக் குறிப்பு. ஒரு துணி நெய்கையில் வார்ப்பு நூலும் (warp thread) ஊட்டு நூலும் (weft thread) பின்னிப் பிணைந்து நெய்யப் படுகின்றன. நெய்தல் வினை, நெய்வு>நெசவு எனும் பெயர்ச்சொல்லை உருவாக்கும். நெய்ந்தது>நெய்ஞ்சது>நெஞ்சு என்பது மார்பின் 2 பரிமானக் குறியீடு, நெஞ்சாங்கூடு என்பது நெஞ்சோடு சேர்ந்த என்புக்கூடு (chest). ஆங்கிலச் சொற்பிறப்பும் இக் கூட்டுப் பொருளை அழுத்திச் சொல்லும். chest (n.). Old English cest "box, coffer, casket," usually large and with a hinged lid, from Proto-Germanic *kista (source also of Old Norse and Old High German kista, Old Frisian, Middle Dutch, German kiste, Dutch kist), an early borrowing from Latin cista "chest, box," from Greek kistē "a box, basket," from PIE *kista "woven container" (Beekes compares Middle Irish cess "basket, causeway of wickerwork, bee-hive," Old Welsh cest).
-------------------------------------