Saturday, November 21, 2020

ஆறாம் திகழி

" சஷ்டி " தமிழ்ச் சொல் என்ன ? - என்று திரு செம்பியன் வளவன் தமிழ்ச் சொல்லாய்வு களத்தில் கேட்டார். அவருக்கான விடை இது.

kanda shasti என்பது kanda shasti tithi என்பதன் சுருக்கம். shasti என்பது சங்கதச்சொல். ஆறாம் என்பது அதன் பொருள். kanda shasti tithi என்ற சொற்றொடரில் tithi என்பதைத் தொக்கி இக்காலம் புழங்குகிறார். tithi என்பதைத் திகழி என்று தமிழில் சொல்லுவோம். இது நிலவின் ஒரு பிறை. அமையுவாவில் (அமாவாசையில்) தொடங்கி 15 வளர் பிறைகளும், பூரணையுவாவில் (பௌர்ணமியில்) தொடங்கி 15 தேய்பிறைகளும் உண்டு. 15 ஆம் தேய்பிறையும் முதல் வளர்பிறையும் ஆன திகழியை அமையுவா என்கிறோம். அதேபோல் 15 ஆம் வளர்பிறையும் முதல் தேய்பிறையும் ஆன திகழியை பூரணையுவா என்கிறோம்.

(திகழி, தாரகை போன்ற தமிழ்ச்சொற்களின் பிறப்பைத் தெரிந்து கொள்வோம். தழல் என்பது நெருப்பு. அழல் என்றாலும் நெருப்பே. ”தழலும் தாமரையானொடு” என்பது தேவாரம் 1215:27. “தழதழவென எரிகிறது” என்று நாம் சொல்லும் போது அடுக்குத்தொடர் ஆக்குகிறோம். ழகரத்திற்கு மாறி ”தளதளத்தல்” என்றாலும் ”விளங்குதல்” பொருளுண்டு. அப்புறம், ழகரம் பயிலும் பல்வேறு சொற்கள் மாற்றொலியில் ககரம் பயிலும். இங்கே “தழதழ” என்பதும் அதே மாதிரி, ”தகதக” என்று பலுக்கப்படும். ”தகதகவென எரிகிறது” என்பதும் நம் பேச்சுவழக்கில் உள்ளதுதான். பொதுவாக எரிபவை சூடும், ஒளியுங் காட்டும். தக>தகம்= எரிவு, சூடு. தகம்>தங்கம்= ஒளிரும் பொன். தக>திக>திகழ்= திங்கள், நிலா.

திகழ்>திகழி= திதி. நிலவின் ஒரு பிறை. சூட்டின் காரணமாய் தக>தகு>தகை = தாகம். தகம்>தாகம் = நீர்வேட்கை என்ற சொற்களும் எழுந்துள்ளன. தகல் = ஒளி என்பது அகராதியில் இன்றும் இருக்குஞ் சொல். தக>தகர்>தகரம் (tin) என்பது ஒளிகாட்டும் வெளிர்ந்த வெள்ளீயத்திற்கு இன்னொரு பெயர். தகர்>தார் எனப் பலுக்கல் திரிவுகொள்ளும். இதுபோல் நூற்றுக்கணக்கான தமிழ்ச்சொற்கள் பலுக்கல் திரிவு காட்டியுள்ளன. அவற்றில் மூன்றை மட்டும் இங்கு காட்டுகிறேன். பகல்>பால், அகல்>ஆல், நீளம்>நிகளம் இவை போலத் தகர்>தார் என்பது அமையும். பின் தார்>தாரகை என்பது அடுத்த நீட்சி. இதன் பொருள் எரியும், ஒளிதரும் விண்மீன். ]

தமிழர் கணக்கில், சந்திரமான மாதங்கள் அமையுவாவில் தொடங்கும். சந்திரமான கார்த்திகைத் திங்கள் அமையுவாவில் கந்தனின் ஆறாம் திகழி (kanda shasti tithi) விழா தொடங்குகிறது. இவ்விழாவை நான் இங்கு விவரிக்க வில்லை. இந்த ஆறாம் திகழி விழாவின் ஆறாம் நாள் (கிட்டத்தட்ட நாள், ஆனால் திகழிக் கணக்கின் படி இதைச் செய்யவேண்டும்.) இந்த ஆண்டு ஆறாம் திகழி (Shasti tithi) என்பது நவ.19 இல் பிற்பகல் 9:59 க்குத் தொடங்கி, நவ. 20 பிற்பகல் 9:29 க்கு முடிந்தது. இதைப் பொறுத்து சூர சம்மாரம் நடைபெற்றது.


5 comments:

Sundar.P said...

சிறப்பு ஐயா.. வாழ்க வளமுடன்

R.Shanmugham said...

நன்று ஐயா.. உடல் தகனம் என்பதில் வரும் தகனம் தமிழ்தானே ஐயா?.

இராம.கி said...

தகனம் தமிழே/

Anonymous said...

ஐயா, easy மற்றும் simple ஆகிய சொற்களுக்கான தமிழ்ச் சொற்களைக்கூற முடியுமா?

பா.ச.சுதர்சன் said...

திக்ழிக்கு வேறு இணைச்சைல் உணடா?