Monday, December 07, 2020

குருதயமும் (heart) குருதியும் (blood) - 1

"Heart-க்குத் தமிழில் புதுச்சொல் உருவாக்குவது குறித்து, நிகண்டியம் புலனக்குழுவில் ஒரு தருக்கம் நடந்தது. அதை இங்கு பகிர்கிறேன். Heartக்கு நெஞ்சு, நெஞ்சம், நெஞ்சாங்குலை போன்ற சொற்களிருந்தாலும், நெஞ்சுச்சளி, நெஞ்சகநோய் போன்றவற்றில் அது மார்பையே சுட்டுகிறது. நாளங்களுள் அரத்தம் பாய்ச்சும் கருவியை புதுப்பெயரால் அழைப்பது நன்று. கருவி அமைப்பு, செயல், தோற்றங் கருதிக் ’குருதியத்தை’ அங்கு பரிந்துரைத்தார். வேறுசொற்களைஒ பரிந்துரைக்க இயலுமா?” என நண்பர் பெஞ்சமின் பிராங்கிளின் முகநூலின் தமிழ்ச்சொல்லாய்வுக் குழுவில் கேட்டார். ”15 ஆண்டுகள்முன் யாகூக்குழுக்களில் ”’குருதயத்தைப்’ பரிந்துரைத்தேன். . http://valavu.blogspot.com/2006/09/blog-post.html. குருதியத்தை விட, குருதயம் பொருந்தும்” என மறுமொழித்தேன். உடன், குருதயத்தின் வேர்ச்சொல் விளக்கத்தை நண்பர் கேட்டார், 

”2006 க்குமுன் யாகூ மடற்குழுமங்களில் குறிப்பெழுதினேன். அம்மடல்களை இப்போது தேடுவது கடினம். என் பழங்கணிகளும் பழுதாகிவிட்டன. அகவை முற்றிய என்மூளையுள் மட்டுமே இப்போது விளக்கமுண்டு. (இதுவும் எவ்வளவு நாளைக்கோ?) மீண்டும் புதிதாய் எழுத முயல்கிறேன். இம்முறை கட்டுரையாக்கி வலைப்பதிவில் சேர்க்கிறேன். இக்கால மின்னாக்கச் சிக்கல் இதுவே. மின்னாக்கிய கட்டுரைகளின் அகவை கூடுவதிலை. புதுப்புது நுட்பியல், நடைமுறை வருவதால், பழைய ஆக்கங்கள் மாற்ற இயலாது போகின்றன. வெள்ளம் வந்த பின், போட்டது போட்டபடி வேறிடம் ஓடி, பழைய இடத்தில் இருந்தவற்றை நம் முன்னோர் தொலைத்தது போல் தான் இப்போதும் ஆகிறது. அது மண்ணுலகில். இது மின்னுலகில்” என விடையிறுத்தேன். இந்த இடுகையின் முதற்பகுதியில் குருதயத்தையும் அடுத்த பகுதியில்  குருதியையும் விளக்கமாய்ப் பாரப்போம். 

முன்மை, தோன்றல், பொருந்தல், நெருங்கல், குத்தல், தாக்கல், வளைதல், உள்ளொடுங்கல், கருமை போன்றவற்றைக் குல் எனும் வேர் குறிக்கும். முன்மையில் வழிப்பொருளாய் அசைவு, விரைவுப் பொருள்கள் வெளிப்படும். குல்>குலு>குலுங்கு, அசைதலைக் குறிக்கும். குலுங்கலின் பிறவினை குலுக்கல். குலுகுலுத்தல், இன்னொரு வளர்ச்சி. குலுகுலு, குறுகுறு என்றும் திரிந்து,  உறுத்தலை உணர்த்தும்.  குலுகுலுப்பு = தினவு. குறுகுறுத்தல்= முணுமுணுத்தல், மனமுறுத்தல், தினவுறல். குறுகுறுப்பு, சுறுசுறுப்பு, விரைவு, தினவு, சினம், அச்சம் ஆகியவற்றைக் குறிக்கும். குலுகுலு>குளுகுளு =  நீர்க்கொதியின் ஊடே ஆவிக்குமிழ் எழுந்து வெடிக்கும் ஒலி. “பார்ப்பான் குண்டிகை மிகுந்த நீரும் குளுகுளு கொதித்ததன்றே” என்பது கம்ப.வருணனை.61. 

ழகரம்/ளகரம், முதலில் டகரமாயும், பின் ரகரமாயும் திரிவது பல சொற்களிலுண்டு. காட்டு: தமிழ்நாடு> ஆந்திரம்> ஒடியா போனால், சோழமண்டலம்>சோடமண்டல> சோரமண்டல் ஆகிப் போகும். மேலையர் கோரமண்டல் என்பார், குளுகுளு>குடுகுடு>குருகுரு என்றாவது தமிழ்நாட்டிலும் உண்டு. குடுகுடுத்தல், ஒலித்தலையும் விரைவையும் குறிக்கும்.  அகவைகூடித் தளர்ந்து அசைவதையும் குடுகுடு என்பார். குடுகுடுப்பு= பரபரப்பு.  குடுக்குடுக்கெனல்= ஒலிக்குறிப்பு., குடுகுடெனல் = ஒலி, விரைவுக் குறிப்பு.  குருகுருத்தல்= நமைச்சல், நெஞ்சுறுத்தல், தொண்டை கொப்பளிக்கும் ஓசை எழல், வேர்க்குரு உண்டாதல். குகரம் ககரமாயினும் அதே பொருள்களைக் காட்டும்.  கடுத்தல்= விரைந்தோடல், சினத்தல், கடுகடுத்தல்= சினத்தல், விறுவிறுப்போடு வலித்தல், கடுகதி = விரைவு. கடுகுதல் = விரைதல். கடுகுடுத்தல் = துடிதுடித்தல்; கடத்தல் = நகரல், ஓர் இடத்தைவிட்டுப் போதல் கடிது = விரைந்து. கதித்தல் = விரைதல், கதி = velocity. 

நெஞ்சில் குருதயம் துடிப்பதை இந்தக் கால நாளிதழில், “லப்டப்” என்றும், ”லபக், படக்” என்றும் இலக்கணம் மறுத்து எழுதுவார். ”குளுக், பளுக்” என்பது இலக்கணத்தோடு எழுதும் ஒலிக்குறிப்பு ”குளுக்குளுக்” என்பது ”குடுக்குடுக்” என்றும், “குருக்குருக்” என்றும் திரியும். (பளுக் என்பதை blood பற்றிப் பேசும்போது பார்ப்போம்,) நெஞ்சில் காதுவைத்துக் கேட்டால் குளுகுளு>குடுகுடு>குருகுரு ஒலியோடு அரத்தம் ஓடுவதை உணரலாம். இவ்வோசை நமக்கு மட்டுமின்றி, நம்மோடு நெருங்கிய இந்தையிரோப்பியக் குடும்பத்தாருக்கும் புலப்படும். ஸ்கீட் என்னும் பேர்பெற்ற ஆங்கிலச் சொற்பிறப்பியலார் heart இற்கு க் கீழ்வந்தவாறு சொற்பிறப்பு சொல்வார். (AN ETYMOLOGICAL DICTIONARY OF THE ENGLISH LANGUAGE- SKEAT)

HEART, the organ of the body that circulates the blood. (E.) M. E. herte, properly dissyllabic. 'That dwelled in his herte sike and sore, Gan faillen, when the herte felte deth.' Chaucer, C. T. A.S. heorte, fern. (gen. heortan), Grein, ii. 69. + Du. hart. + Icel. Ajarta. + Swed. hjerta. -f- Dan. Aierte. +Goth. hairto. -f- G. Aerz, O. H. G. herzd. + Irish cridhe. -f. Russ. serdtse. + Lat. cor (crude form cordi-). + Gk. xfjp, mpoia. +Skt. Arid, hridaya (probably corrupt forms for frid, fiidaya). p. The Gk. icapbia is also spelt Kpaoia, (Doric) and upaSir; (Ionic) ; this is connected with KpaSativ, KpaSaivuv, to quiver, shake; the orig. sense being that which quivers, shakes, or beats. ^ KARD, to swing about, hop, leap ; cf. Skt.Iturd, to hop, jump ; Fick, i. 47 ; Benfey, 197. Der. heart-ache, Hamlet, iii. I. 62; 

இங்கு கூர்ந்தறிய வேண்டியது “orig. sense being that which quivers, shakes, or beats” என்பதே. குருதயத்தை அதன் துடிப்பால் தானே உணர்கிறோம்? அத்துடிப்பின் ஒலிக்குறிப்பு குடுகுடு>குருகுரு என்பதே. குடுகுடுத்தல், விரைவோட்டத்தையும் ஒலித்தலையும் குறிக்கும். கடுத்தல், கடுகுதல், கடிதல், கதித்தல் போன்ற சொற்களும் அதேபொருள் கொண்டவை.  இதே நீட்சியில் குடுத்தல்>குருத்தல் என்ற வினை ஒரு காலம் இருந்திருக்கலாம். ஏனெனில் கடுத்தல் வினை இன்றுமுள்ளது,  ”குருத்தல் இன்றில்லையே? ஏன் சிவப்பு நிறம் வழியாக குருதயத்திற்குப் பெயர் ஏற்படக்கூடாது?” என்ற கேள்விகளும் நமக்கெழலாம். என் விடை எளிது. எல்லா விலங்கு அரத்தமும் சிவப்பாக இல்லை. இருக்க வேண்டியதுமில்லை. ”அரத்தம் சிவப்பு” என்பது வேட்டுவ மாந்தப் புரிதலில் முகன்மைக் குறிப்பில்லை. சிவப்பு என்பது மாந்தருக்கு நேர்ந்த ஒரு விதப்பு. அவ்வளவு தான். 

விலங்குக் குருதிகள்  சிவப்பு (red), ஊதா (blue), பச்சை (green), மஞ்சள் (yellow), நரங்கை (orange), நீலம் (violet) போன்ற பல நிறங்களிலும், அன்றேல் நிறமிலாதும் கூட உண்டு. சில விலங்குகளின் அரத்தத்தில் மாந்தர்போல் செம்மைக் கோளங்களும் (hemoglobin), வேறுசிலவற்றின் அரத்தத்தில், வேறுவகை உய்ப்பு நிறமிகளும் (respiratory pigments), இன்னும் சிலவற்றில் எந்த உய்ப்பு நிறமிகள் இல்லாமலுமுண்டு, ஆனால் எல்லா விலங்குகளும் அரத்தவழி அஃககம் நகர்த்தும் (to transport oxygen) திறன் கொண்டன. பல விலங்குகளை வேட்டையாடிய மாந்தன் இதைக் கட்டாயம் உணர்ந்திருப்பான். சிவப்பை வைத்தே குருதிக்குப் பெயர்வந்தது என்பது பட்டறிவில்லாப் பார்வை. 

சிவப்பைக் காட்டிலும்  “குளுகுளு>குடுகுடு>குருகுரு” ஓட்டவொலி முகன்மை.  குடுத்தல்>குருத்தல் என்பது பிறவினை வடிவம் = ஓடவைத்தல் என்று பொருள் கொள்ளும். இறைத்தல் = நீர்மம் பாய்ச்சல் என்பதும் இதேபொருள் காட்டும். (இறைப்பவர்க்கு ஊற்றுநீர் போல மிகும்” குறள் 1161.) pump இற்குச் சொல்லாக்கையில் 1960 களில் இறைப்பியைப் பயன்கொண்டோம். வேகமாய்ச் சுழன்றாடும் பம்பரம் காணின், நீர்மத்தை  எம்பி ஏற்றும் செயலைப் பம்புதல் என்றும் சொல்லலாம். பம்பி கூடப் pump-இற்கு இன்னொரு இணைச்சொல்லாகலாம். (சிவகங்கை மாவட்டம் தேவகோட்டைக்கு அருகில் அங்குமிங்கும் விரவியோடும் ஆற்றைப் பம்பாறு>பாம்பாறு என்பார். ”ஏன் பம்முகிறான்?” என்ற கூற்றையும் இங்கு எண்ணிப்பாருங்கள்) 

குருதயம் என்பது பெரும்பாலும் பழந்தமிழில் இருந்திருக்குமென்றே ஊகிக்கிறோம். குருதயம், கெருதயம் என்றும் பேச்சுவழக்கில் சொல்லப்படும். அடுத்து, கெருதயம்> எருதயம்> இருதயம் என்று தமிழில் மீத்திருத்தம் பெறும். இது மேலும் பேச்சுவழக்கில் இருதயம்>இதயம்>இதம் என்று திரியும். [கெருதயம்>எர்தய>எர்தெ எனக் கன்னடத்தில் திரியும். எர்தெ>எழ்தே>எதே என்றும் அங்கு பலுக்கப்படும். தெலுங்கில் எத என்பதும் துளுவில் எதெ என்பதும் புழங்குகின்றன.] இதயம், இதம் என்ற சொற்கள் தேவாரம், திருவாசகத்தில் சொல்லாட்சி பெறும். 

17. சம்பந்தர் தேவாரம் சீகாழி : திருமாலைமாற்று: ”நேர் அகழ் ஆம் இதய ஆசு அழி தாய் ஏல் நன் நீயே நன் நீள் ஆய் உழி கா, காழி உளான் இன் நையே நினையே தாழ் இசையா தமிழாகரனே” 

50. சம்பந்தர் தேவாரம் திருத்தண்டலை நீணெறி: இகழும் காலன் இதயத்தும் என்னுளும் - தேவா-சம்:3332/1

87. அப்பர் தேவாரம் திருச்சிவபுரம் - திருத்தாண்டகம்: கானவன் காண் கானவனுக்கு அருள்செய்தான் காண் கருதுவார் இதயத்து கமலத்து ஊறும் - தேவா-அப்:2946/3

2 திருவாசகம் கீர்த்தித் திருஅகவல் 139 ஆம் அடி: இதம் சலிப்பு எய்தநின்று ஏங்கினர் ஏங்கவும் - திருவா:2/139

குருதயம், இருதயம், இதயம், இதம் போக தாமரைக்காய் (pericarp of the lotus. தாமரையில் நடுவில் ஊள்ள காய் போன்றது என்று நிறத்தாலும், அரத்த ஓட்டத்திற்கு நடுவம்  என்ற பொருளிலும் இச்சொல் எழுந்தது,குண்டிக்காய் [இது இதயம், நூவூறகம் (=சிறுநீரகம்), புட்டம் ஆகிய மூன்றிற்கும் ஒப்புமைப் பொரூளில் சொல்லப்படும்.]  என்ற இன்னொரு சொல்லும் உண்டு.  மார்பு பற்றிய சொற்களை அடுத்த பகுதியில் பார்ப்போம். அறிவியலில்  குருதயம், மார்பு போன்றவற்றைப் பயன்படுத்திக் கீழ்க்கண்ட சொற்களை உருவாக்கலாம். 

Thoracic Surgery மார்புக்கூட்டுப் பண்டுவம்

Congenital cardiac surgery கூடுற்ற குருதயப் பண்டுவம் (குருதியைக் கையாளுவது குருதயம். இது தமிழ் தான்.)

Pediatric cardiology குழவிக் குருதயவியல்

Cardiothoracic radiology குருதய மார்புக்கூட்டுக் கதிரியல்

Cardiovascular radiology குருதய நாளக் கதிரியல்

Chest radiology மார்புக் கதிரியல் 

Advanced heart failure & transplant cardiology குருதய இழப்பு, மாற்றுநடவுக்கான அடுவாங்கைக் குருதயவியல் (advance = அடுவாங்கை)

Cardiovascular Disease குருதய நாள நோய்

Clinical cardiac Electrophysiology ஆதுலக் குருதய மின்பூதிகையியல்

Cardiac Medicine குருதய மருத்துவம்

அடுத்த் பகுதியில் குருதி (blood) தொடர்பான சொற்களைக் காண்போம்.

அன்புடன்,

இராம.கி.