Monday, December 07, 2020

சேக்கிழான்

 "சேக்கிழான் என்ற சொல்லின் பொருள் என்ன?" என்று திரு.Karunakaran என்பார் தமிழ்ச்சொல்லாய்வுக் குழுவில் கேட்டிருந்தார். அதற்கு ம்றுமொழியாய், திரு தாமரைச்செல்வன்,  https://ta.wikipedia.org/s/69i = இனைச் சுட்டி விடையிறுத்தார், "சே என்பதற்கு காளை என்றும் சேக்கிழார் என்றால் காளைக்கு உரியவர் என்று பொருள் தருவதாகும். வெள்ளாளர்களில் காளையை வைத்து உழவுத் தொழில் செய்து வந்தோர்களில் அமைச்சராகவும், சிவனடியாராகவும் சிறந்து விளங்கியமையால் இயற்பெயரான அருண்மொழித்தேவர் என்பது மறைந்து சேக்கிழார் என்பதே பெயராக அறியப்படுகிறது" என்று விக்கிப் பீடியாவில் சொல்வதற்கு ஆதாரமில்லை. அங்கு இக்கட்டுரையை எடுவிப்பு (edition) செய்தவரே ”சான்று தேவை” என்று அருகில் எழுதியிருக்கிறார் - என்று நான் சொன்னேன்

-------------------------

மாறாக சுள்>செள்>சேள்* என்ற முன்னொட்டை எண்ணிப் பார்க்கலாம். சேள்*>சேளு*>சேடு என்பதும், சேள்*>சேண் என்பதுவும் ”பெருமை, திரட்சி, உயரம்” போன்ற பொருட்பாடுகளைக் குறிக்கும். சேட்டன் = தமையன், பெரியோன், சேட்சி = தொலைவு; சேட்டம் = மேன்மை; சேட்டா தேவி = மூத்த தேவி; சேட்டி = தமக்கை; சேட்டை = மூத்தவள்; சேட்படுதல் = தொலைவாதல்; சேட்புலம் = தொலைவிலுள்ள புலம்; சேடம் = பெருமை; சேடன் = பெரியோன், தோழன், சேடி= தோழி; சேடு= தோழமை; சேணம் = உயரம், துறக்கம், மெத்தை, குதிரையின் மேல் இடப்படும் தோலாசனம்; சேணி = ஏணி; சேணியர் = உயட் உலகிலுள்ள தேவர்; சேணோன் = உயரத்தில் இருப்பவன்; இத்தனை சொற்களையும் நீங்கள் அகரமுதலிகளில் பார்க்கலாம்.

பல நாட்டுப்புற ஊர்களில் இன்றும் ஒரு பெரியதனக்காரரும் (பெரிய வீட்டுக் காரரும்). சிறியதனக்காரரும் (சிறியவீட்டுக்காரர். இவர் முன்னவருக்குத் தம்பியாய்க் கூட இருக்கலாம்) இருப்பது வழமை தான். சில வட்டாரங்களில் பெரிய பண்ணை, சிறிய பண்ணை என்பார். (தேவர்மகன் திரைப்படம் நினைவுக்கு வருகிறதா?) இருவருக்கும் சண்டை வரவேண்டிய கட்டாயம் இல்லை. ஆனால் சில முரண்கள், போட்டிகள் போன்றவை இவரிடையே இருக்கும். (இந்தக் காலக் கட்சிகள், கழகங்கள் போல் இது நீறுபூத்த நெருப்பாய் இருக்கும்).பெரியது, சிறியது என்பதை சேள், அனு என்றும் இன்னொரு வகையில் சொல்லலாம். மலையாளத்தில் அண்ணனைச் சேட்டன் என்றும், தம்பியை அனுயன் என்றும் சொல்வர். ”அனுயன்” என்பான் சங்கதத்தில் அனுஜ என்றாவான். குன்றத்தூரில் சேள்+கிழார் = சேட்கிழார்> சேக்கிழார் குடும்பம் அண்ணன்காரக் குடும்பமாயும், அவரின் தம்பி, அல்லது சிற்றப்பா குடும்பம் அனுக்கிழார் குடும்பமும் ஆகலாம். இச்செய்தியை உறுதிசெய்ய அவர் காலத்துக் கல்வெட்டுகளை அங்குள்ள சுற்றுவட்டாரக் கோயில்களில் தேட வேண்டும். 

இப்படிப் புரிந்துகொள்வது எனக்கு இயல்பானதாய்த் தோன்றுகிறது. ஒரு பண்ணையார் அல்லது கிழார் ஏராளம் காளைகள் வைத்திருந்தது விதப்பான செய்தியாய் எனக்குத் தோற்ற வில்லை. எல்லாப் பண்ணயாரும் அக்காலத்தில் காளைகள் வைத்திருப்பர். அதுதான் அக்குமுகாய இயல்பு. செல்வம் ஒரு காலத்தில் மாடுகளால் அளக்கப்பட்டது. ஊரில் பெருங்கிழார் என்பது அப்படி யல்ல. அதிகாரம் கொண்ட குடும்பம் என்பது முகன்மையான செய்தி. இவர் முதலமைச்சர் ஆகுமளவிற்குப் பெரியவராய் இருந்துள்ளார். தொண்டை மண்டலத்தில், நிலவுடைமைக் குமுகாயத்தில், இவர்குடி பெரிதும் மதித்துப் போற்றப்பட்ட குடி எனவே சேக்கிழார் என்று ஒரு பெயர் இருந்ததில் வியப்பு இல்லை.

நான் இங்கு சொன்னது ஒரு முன்னீடே. முதலிரு குலோத்துங்கர் காலத்துக் கல்வெட்டுக்களை ஆழ்ந்து படிக்கவேண்டும். ஆதாரம் தேடவேண்டும். கல்வெட்டியலில் ஆர்வமுள்ளோர் இந்த முன்னீடு சரியா என்ற ஆய்வைச் செய்யலாம். . 

------------------------------

இதற்கு மறுமொழியாய், திரு .Karunakaran திருவண்ணாமலைக்கு அருகிலுள்ள ஆடையூர் செக்குக் கல்வெட்டில் உள்ள ”காட்டாம் பூண்டி:சகர ஆண்டு 877(கி.பி 955) வாணகோப்பாடி பெந்ணை வடகரைக்கு காட்டாம் பூண்டி உடைய சேக்கிழான் உலகளந்தான் வீரட்டன் இட்ட செக்கு இதிரெட்டினேன் தேவனார் கொருமுறள் யெண்ணை” என்ற வாசகத்தை வெளிப்படுத்தினார், இதுபோல் இன்னும் பல கல்வெட்டுக்களைத் தேடவேண்டும். சேக்கிழான் என்பது விதப்பான பெயரல்ல. ”ஊரில் இருக்கும் பெருங்கிழார்” என்று இக்கல்வெடில் பொருள் வருகிறது. எனவே சேக்கிழார் என்பது ஊர்மக்கள் கொடுக்கும் ஒரு title என்பது விளங்கும். தவிர இந்தக் கல்வெட்டு கி.பி.955 இல் அமைச்சர் சேக்கிழாருக்கு 200 ஆண்டுகள் முன்னேயே இருக்கும் கல்வெட்டு, அப்படி யெனில் சேக்கிழார் என்னும் பெருங்குடி விளிப்பெயர், ”மழவராயர், பழுவேட்டரையர்” போல்  நாட்பட்டதாகலாம். 

நாம் அறியாத, ஆயாத செய்திகள் வரலாற்றில் இன்னும் பல உள்ளன போலும்.  

அன்புடன்,

இராம.கி.  

             


No comments: