Thursday, November 26, 2020

அகம் 127 - இல் வரும் வரலாற்றுச் செய்தி.

 அண்மையில் மாமுலனார் பாடிய அகம் 127 இல் வரும் 3-5 ஆம் அடிகளைக் கொடுத்து ”எப்படிப் பொருள் கொள்வது?” என்று நண்பர் திரு. வேந்தன் அரசு கேட்டார். இதற்கு விடைசொல்ல, வரலாற்றை விளக்க, 3-10 ஆம் அடிகள் முழுமையும் பார்ப்பதே சரியாய் இருக்கும்.     

வலம்படு முரசின் சேரலாதன்

முந்நீர் ஓட்டிக் கடம்பு அறுத்து இமயத்து

முன்னோர் மருள வணங்கு வில் பொறித்து  5

நன் நகர் மாந்தை முற்றத்து ஒன்னார்

பணி திறை தந்த பாடு சால் நன் கலம்

பொன் செய் பாவை வயிரமொடு ஆம்பல்

ஒன்றுவாய் நிறையக் குவைஇ அன்று அவண்

நிலம் தினத் துறந்த நிதியத்து அன்ன  10

என்ற அந்த வரிகளின் திணை: பாலை. தோழி தலைவியிடம் சொன்னதாய்ப் பா அமையும். மாமூலனாரின் காலம் பெரும்பாலும் வானவரம்பன் பெருஞ் சோற்றுதியன் சேரலாதனின் முடிவுக் காலத்திற்கும் இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனின் தொடக்க காலத்திற்கும்  இடைப்பட்டதாகலாம்..

வானவரம்பன் பெருஞ்சோற்றுதியன் சேரலாதனின் காலம் பெரும்பாலும் பொ.உ.மு. 217-170 ஆகும். இவனை முரஞ்சியூர் முடிநாகராயர் புறம் 2 இல் பாடுவார். இவன் காலத்தில் அசோக மோரியனின் தாக்கம் சேரர்மேல் தொடங்கிவிட்டது. கூடவே மோரியரை வீழ்த்திய சுங்கரின்மேல் சேரருக்குக் கடுப்பிருந்தது நாட்பட்ட கதையாகும். (ஐவரான) சுங்கருக்கும் நூற்றுவர் கன்னருக்கும் இடைநடந்த வஞ்சி/தும்பைப் போரிற் கன்னரின் பக்கம் சேரரிருந்தார். உதியன்சேரல் காலத்திருந்தே 2,3 தலைமுறைகள் இவ்வுறவு தொடர்ந்திருக்கலாம். சேரருக்கும் நூற்றுவர் கன்னருக்கும் இடையிருந்த நல்லுறவு சிலம்பின் வஞ்சிக் காண்டத்தால் புரியும். என் ”புறநானூறு - 2 ஆம் பாட்டு” என்ற கட்டுரைத் தொடரையும் படியுங்கள்.

உதியன் சேரலாதன் பொதினியைச் சேர்ந்த ஆவியர் குலத்து வேண்மாள் நல்லினியை மணஞ்செய்தான். (இற்றைப் பழனியே பழம்பொதினி. அதன் அடிவாரத்தில் ஆவினன் குடியுள்ளது.) ஆவியர் குடியோடு சேரர் குடியினர் கொடிவழி தோறும் மணத்தொடர்பு கொண்டார். உதியனின் முதல்மகன் இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனாவான். இவனைக் குடக்கோ நெடுஞ்சேரல் ஆதன் என்றுஞ் சொல்வர். (குடக்கோ என்று பெயர்வைத்துக் கொண்டு கொங்குவஞ்சியில் இவனாண்டான் என்று சில ஆய்வறிஞர் சொல்வது நம்பக் கூடியதாய் இல்லை.) 

இவன் காலம் பெரும்பாலும் பொ.உ.மு. 187 - 131 எனலாம். இவனுக்கு 2 மனைவியர். தன் தாய் நல்லினியின் சோதரனான வேளாவிக் கோமானின் (இவன் மன்னனில்லை; வெறுங் கோமான்; கூட்டத் தலைவன். இமையவரம்பன் நெடுஞ்சேரலின் தாய்மாமன்) முத்த மகள் பதுமன் தேவியை இமையவரம்பன் நெடுஞ்செரலாதன் தன் முதல் மனைவியாகப் பெற்றான். குடக்கோ நெடுஞ் சேரலாதனின் பங்காளியான செல்வகடுங்கோ வாழியதன் வேளாவிக் கோமானின் இரண்டாம் மகளை மணந்தான். ஒருவகையில் செல்வக் கடுங்கோ வாழியாதன் குடக்கோ நெடுஞ்சேரலாதனுக்கு ஒன்றுவிட்ட தம்பி முறையாகவும் இன்னொரு வழியில் சகலையாகவும் ஆவான். 

நெடுஞ்சேரலாதனின் இரண்டாம் மனைவி உறையூர் ஞாயிற்றுச் சோழனின் மகள் நற்சோனை.  நெடுஞ்சேரலாதனின் மூத்த மனைவி வழிப் பெற்ற மக்கள் களக்காய்க் கண்ணி நார்முடிச் சேரலும், அவன் தம்பி ஆடுகோட்பாட்டுச் சேரலாதனும் ஆவர். இரண்டாம் மனைவி நற்சோணை வழி பெற்ற மகன் செங்குட்டுவன். இளங்கோ என்ற மகன் கிடையாது. அதற்குச் சிலம்பின் கடைசிக் காதை தவிர எந்த ஆதாரமும் கிடையாது, அந்தக் காதையில் நிறைய முரண்கள் உள்ளன. அது இளங்கோ எழுதியதா என்பதில் நிறையக் கேள்விகள் உண்டு.  

அகம் 127 இல் பேசப்படும் சேரலாதன் என்பான் பெரும்பாலும் இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனாகவே இருக்கமுடியும். (அவன் தந்தை உதியன்சேரலாய் இருக்கமுடியாது,) ஏனெனில் இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்காக, சேரன் செங்குட்டுவன் (தன் இளமைப் பருவத்தில்) கடல் பிறக்கோடிய செய்தியும், இலக்கத் தீவுகளில் இருந்த கடற்கொள்ளையரை ஒழித்துக் கட்டி அவருக்கு ஆதரவான (இன்றைக் கருநாடகம் சேர்ந்த) கடம்பரின் காவல் மரத்தை அறுத்ததும் இப்பாட்டின் 4 ஆம் அடியில் பேசப்படுகிறது.  இதே அடியின் தொடர்ச்சியில் இமையத்தில்  வில்பொறித்த  செய்தியும் பேசப் படுகிறது,  சிலம்பை ஆழ்ந்து படித்தால் கண்ணகிக்குக் கல் எடுக்க வடக்கே போனது இரண்டாம் முறை என்று விளங்கும். அதற்கு முன்னால், இமையத்தில் வில்பொறித்ததும், செங்குட்டுவனின் தாய் காசிக் கங்கையாற்றில் நீராடியதும் முதல்முறையாய்ப் பேசப்படும். 

செங்குட்டுவன் காலம் பெரும்பாலும் பொ.உ.மு.131-77 ஆகும். இத்தனை மன்னரின் காலங்களைப் பொருத்திப் பார்க்கும் போது, மாமூலனாரின் காலம் பெரும்பாலும்  பொ.உ.மு. 180-125 இல் அமைந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது  இந்தப் பாடல் பெரும்பாலும் பொ.உ.மு. 131-125 இல் பாடப் பட்டிருக்கலாம். இந்தப் பின்புலத்தோடு, குறிப்பிட்ட  பாடல் அடிகளுக்கு வரலாம்.

”வெற்றி கொள்ளும்  முரசத்தை உடைய சேரலாதன் கடற்கொள்ளையரைத் தாக்கியழித்துக் கடலைப் பிறக்கோட்டி (தனக்கென ஆகும் கடல் எல்லையைப் பின் தள்ளி), கடம்பரின் காவல்மரத்தை அறுத்து, தம் பெரியவர் வியக்கும் (=மருளும்) படி இமையத்தில் வளையும் வில் சின்னத்தைப் பொறித்து,  அப் பயணத்தால் தான் பெற்ற ஒன்னார் (= பகைவர்) அவன் நன்னகர் மாந்தையின் முற்றத்தில் பணிந்து திறையாகத் தந்த பாடு (=உழைப்பு, செய்நேர்த்தி) நிறைந்த அணிகலங்களும், பொன்னால் செய்த கட்டிகளும், வயிரமும்  என 10^9 அளவு பொருந்தியதாய்க் (இங்கே ஆம்பல் எனும்  எண்குறிப்பு எடையைக் குறிக்கிறதா? - என்பது விளங்கவில்லை. ஆம்பல் என்பது உயர்வுநவிற்சியும் ஆகலாம்) குவித்து அன்று அந்த நிலம் வருந்தும் படி உறந்த நிதியத்தைப் போல்” .  

ஒரு நிதியத்தைச் சம்பாதிக்க வடபால் இருக்கும் மொழிபெயர் தேயத்திற்குப் போன தலைவனைப் பற்றித் தோழி தலைவிக்குச் சொல்கிறாள்.

வரலாறுச் செய்தி மட்டும் இங்கு சொன்னேன். முழுப் பாட்டையும் நான் விளக்கவில்லை.

அன்புடன்,

இராம.கி.


5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான விளக்கம் ஐயா... நன்றி...

நிலவன் said...

இதைப்பற்றி உங்கள் கருத்து ஐயா,
மாமூலனாரின் சங்கப்பாடல்கள் குறித்து கே. ஏ. நீலகண்ட சாத்திரி அவர்கள், “மாமூலனார் கூறும் நிகழ்ச்சிகள் அசோகன் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே நடைபெற்றிருக்கக் கூடும் என்று நாம் கூறலாம்” எனவும் ‘வம்ப’ என்ற சொல்லுக்குரிய ‘புதிய’ என்பதன்படி, “மாமூலனார் தமது பாடலை இயற்றிய காலத்தில் மௌரியர்கள் தென்னாட்டிற்கு வந்தது அண்மையில் நடந்த நிகழ்ச்சியாய் இருந்திருக்கலாம்” எனவும் மாமூலனாரின் கூற்று நம்பத்தகுந்தவை எனவும் குறிப்பிடுகிறார்-(1). வரலாற்று ஆய்வாளர் ஆர். எஸ். சர்மா அவர்கள் தனது நூலில், “நந்தர்கள் மிகவும் செல்வச் செழிப்பில் செழித்தனர். மிகவும் வலிமை வாய்ந்தவர்களாய் விளங்கினர்” என்கிறார்-(2). இக்கூற்று மாமூலனார் 2300 வருடங்களுக்கு முன்பு கூறியதோடு ஒத்துப்போகிறது.
மௌரியர்களின் தமிழகப்படையெடுப்பு குறித்து டி.டி. கோசாம்பி அவர்கள், “அசோகரோ, அவரது தந்தையோ போர் நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடாமலேயே மைசூர் அவர்கள் வசமானது. பண்டைத்தமிழ்க் கவிதை இலக்கியம் குறிப்பிடும் வம்பமோரியர் என்பது, திருப்பித் துரத்தியடிக்கப்படும் முன்போ அல்லது தம் தேர்களால் கடக்க முடியாத ஒரு மலையால் தடுத்து நிறுத்தப்படும் முன்போ உள்ளபடியே மதுரையையே அடைந்திருந்த ஒரு மௌரியப்படையையே குறிப்பிடுவதாகலாம்” என்கிறார்-(3). மேலே தந்த சங்கப்பாடல்கள், மௌரியர்களின் தேர் முதலான பெரும் படையைக் கொண்டு செல்வதற்குத்தான் மலையை வெட்டி மௌரியர்கள் பாதை அமைத்தனர் என்கின்றன. ஆதலால் மௌரியப்படை மலையால் தடுத்து நிறுத்தப்படவில்லை, அவை தமிழர்களால் துரத்தியடிக்கப்பட்டது. ஆதலால், மௌரியர்கள் தமிழகம்வரை படையெடுத்தனர் என்பதையும் ஆனால் அவர்கள் தமிழரசுகளால் துரத்தியடிக்கப்பட்டனர் என்பதையும் டி.டி. கோசாம்பி அவர்களின் மேற்கண்ட சொற்களும் உறுதிப்படுத்துகின்றன.

நிலவன் said...

கே. ஏ. நீலகண்ட சாத்திரி:

மாமூலனாரின் சங்கப்பாடல்கள் குறித்து கே. ஏ. நீலகண்ட சாத்திரி அவர்கள், “மாமூலனார் கூறும் நிகழ்ச்சிகள் அசோகன் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே நடைபெற்றிருக்கக் கூடும் என்று நாம் கூறலாம்” எனவும் ‘வம்ப’ என்ற சொல்லுக்குரிய ‘புதிய’ என்பதன்படி, “மாமூலனார் தமது பாடலை இயற்றிய காலத்தில் மௌரியர்கள் தென்னாட்டிற்கு வந்தது அண்மையில் நடந்த நிகழ்ச்சியாய் இருந்திருக்கலாம்” எனவும் மாமூலனாரின் கூற்று நம்பத்தகுந்தவை எனவும் குறிப்பிடுகிறார்-(2). வரலாற்று ஆய்வாளர் ஆர். எஸ். சர்மா அவர்கள் தனது நூலில், “நந்தர்கள் மிகவும் செல்வச் செழிப்பில் செழித்தனர். மிகவும் வலிமை வாய்ந்தவர்களாய் விளங்கினர்” என்கிறார்-(3). இக்கூற்று மாமூலனார் 2300 வருடங்களுக்கு முன்பு கூறியதோடு ஒத்துப்போகிறது.

டி.டி. கோசாம்பி:

மௌரியர்களின் தமிழகப்படையெடுப்பு குறித்து டி.டி. கோசாம்பி அவர்கள், “அசோகரோ, அவரது தந்தையோ போர் நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடாமலேயே மைசூர் அவர்கள் வசமானது. பண்டைத்தமிழ்க் கவிதை இலக்கியம் குறிப்பிடும் வம்பமோரியர் என்பது, திருப்பித் துரத்தியடிக்கப்படும் முன்போ அல்லது தம் தேர்களால் கடக்க முடியாத ஒரு மலையால் தடுத்து நிறுத்தப்படும் முன்போ உள்ளபடியே மதுரையையே அடைந்திருந்த ஒரு மௌரியப்படையையே குறிப்பிடுவதாகலாம்” என்கிறார்-(4). மேலே தந்த சங்கப்பாடல்கள், மௌரியர்களின் தேர் முதலான பெரும் படையைக் கொண்டு செல்வதற்குத்தான் மலையை வெட்டி மௌரியர்கள் பாதை அமைத்தனர் என்கின்றன. ஆதலால் மௌரியப்படை மலையால் தடுத்து நிறுத்தப்படவில்லை, அவை தமிழர்களால் துரத்தியடிக்கப்பட்டது. ஆதலால், மௌரியர்கள் தமிழகம்வரை படையெடுத்தனர் என்பதையும் ஆனால் அவர்கள் தமிழரசுகளால் துரத்தியடிக்கப்பட்டனர் என்பதையும் டி.டி. கோசாம்பி அவர்களின் மேற்கண்ட சொற்களும் உறுதிப்படுத்துகின்றன.

நிலவன் said...

மகத அரசில் ஆட்சி மாற்றம்:
ஆகவே மாமூலனாரின் பாடல்கள் மகதஅரசில் கி.மு. 4ஆம் நூற்றாண்டில் நடந்த ஆட்சி மாற்றங்கள் குறித்தும், நந்தர்களுக்குப் பின்வந்த மௌரியர்களின் தமிழகப் படையெடுப்பு குறித்தும் பேசுகிறது. மாமூலனார் நந்தர்களைப் பற்றி அறிந்திருப்பதும், மௌரியர்களைப் புதியவர்கள் எனக் குறிப்பிடுவதும் அதே காலகட்டத்தில் அவர் வாழ்ந்து வந்தவர் என்பதை உறுதிப்படுத்துகிறது. கே. ஏ. நீலகண்ட சாத்திரி அவர்களின் கூற்றும் இதனை வலியுறுத்துகிறது. ஆகவே மகத அரசில் நடந்த இந்த ஆட்சி மாற்றங்களின் ஆண்டுகள் மாமூலனாரின் காலத்தை நிணயிக்கப் பயன்படும் எனலாம். கிரேக்க மாவீரன் அலெக்சாண்டர் கி.மு. 327 வாக்கில் இந்தியாவின் மீது படையெடுத்தான். அவன் கி.மு. 325 வாக்கில் இந்தியாவிலிருந்து திரும்பினான். கி.மு. 323இல் பாபிலோனியாவில் இறந்தான். அதன்பின் சந்தரகுப்த மௌரியன் நந்தர்களின் மகத ஆட்சியை வீழ்த்தி விட்டு கி.மு. 321 வாக்கில் மகத ஆட்சியைக் கைப்பற்றினான். இந்த ஆண்டுகள் ஆதார பூர்வமான உலக வரலாற்றுக்காலத்தோடு இணைக்கப்பட்ட ஆண்டுகள். இந்த ஆண்டுகளைக் கொண்டு தமிழக வரலாற்றுக்காலத்தை நிர்ணயிப்பதே சரியானதும் முறையானதும் ஆகும்.நந்தர்கள் சுமார் கி.மு. 365 முதல் கி.மு. 321 வரை சுமார் 44 ஆண்டுகள் மட்டுமே ஆண்டனர். அவர்களில் மகாபத்ம நந்தன் மிகவும் புகழ் பெற்றவனாக இருந்தான். அவனால் நந்தர்களின் புகழ் இந்தியா முழுவதும் பரவி இருந்தது. நந்தர்களின் புகழ் இந்தியா முழுவதும் பரவி இருந்த காலத்தில் இயற்றப்பட்டது தான் மாமூலனாரின் அகம் 265ஆம் பாடலாகும். கி.மு. 321இல் நந்தர்கள் வீழ்ச்சி அடைந்தனர் என்பதால், அவர்களின் புகழும் அத்தோடு வீழ்ச்சி அடைந்தது. அதற்கு முன்னர் கி.மு. 330 வாக்கில் தனது இளைய வயதில் மாமூலனார் நந்தர்களைப் புகழ்ந்து பாடிய பாடல்தான் அகம் 265ஆம் பாடலாகும். மௌரியர் ஆட்சியேற்ற பின்னரும் மாமூலனார் மிக நீண்ட காலம் வாழ்ந்தார். ஆகவே அப்பாடலைப் பாடியபோது அவரது வயது 25 எனக் கொள்வோம் எனில் அவர் கி.மு. 355 வாக்கில் பிறந்தார் என முடிவு செய்யலாம்.

நிலவன் said...

சோழர்களின் முதன்மை:
மௌரியர்களின் தமிழகப் படையெடுப்பு குறித்த மாமூலனார் குறிப்புகளுக்கு, அசோகன் கல்வெட்டுகளில் ஆதாரங்கள் உள்ளன. மெகத்தனிசு, சாணக்கியர் குறிப்புகளில் இருந்தும் அசோகரின் கல்வெட்டுகளில் இருந்தும் தமிழக வரலாற்றில் நடந்த ஒரு முக்கிய நிகழ்வை அறிய முடிகிறது. கி.மு. 325 முதல் கி.மு. 300 வரையான காலகட்டத்தில், அதாவது கி.மு. 4ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் தமிழக மூவேந்தர்களில் முதன்மையான அரசாகவும் ஒரே அரசாகவும் குறிக்கப்படுவது பாண்டிய அரசு தான். ஆனால் கி.மு. 3ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பொறிக்கப்பட்ட, அசோகன் கல்வெட்டுகளில் முதன்மை பெற்றிருப்பது சோழ அரசு தான். பாண்டிய அரசு அசோகனின் இரு கல்வெட்டுகளிலும் இரண்டாவது இடத்தில் தான் குறிக்கப்பட்டுள்ளது. அரை நூற்றாண்டுக்குள் மௌரிய அரசியலில் சோழர்கள் முதன்மை பெற்று, பாண்டியர்கள் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்ட நிகழ்வே மௌரியர்களின் தமிழகப் படையெடுப்புக்கான ஆதாரமாகும்.
1.நீலகண்ட சாத்திரி, சோழர்கள், தமிழில் கே.வி. இராமன், புத்தகம்-1, நவம்பர்-2009, பக்: 28, 37.
2.பண்டைக்கால இந்திய, ஆர். எஸ். சர்மா, தமிழில் மாஜினி, NCBH வெளியீடு, ஜூன்-2004, பக்:180.
3. டி.டி. கோசாம்பி, ‘இந்திய வரலாறு ஓர் அறிமுகம்’ தமிழில் சிங்கராயர், அக்டோபர்- 2011, விடியல் பதிப்பகம், பக்: 271.