Sunday, November 30, 2008

ஒட்டியாணம் - 4

”யா! ஒருவேர்ச்சொல் விளக்கம்” என்ற தலைப்பில், தமிழ்ச்சொற்களின் பிறப்பு பற்றி அறிய விழையும் பலரும் படிக்க வேண்டியதொரு பொத்தகமே எழுதினார் சொல்லாய்வறிஞர் அருளி. யா - என்னும் வேர்ச்சொல்லுக்கு கருமைப் பொருளும், பொருந்தற் பொருளும், வினாப் பொருளும் சொல்லி அந்தப் பொருட்பாடுகளை உணர்த்தும் பல்வேறு சொற்பிறப்புகளையும் அதில் தருக்கித்து நிறுவியிருப்பார். கூடவே பல சொற்களில் யா>ஞா>நா என்ற ஒலித்திரிவு
நடந்திருப்பதையும் பெருஞ்சான்றுகளோடு அவர் எடுத்துக் காட்டியிருப்பார். அந்தப் பொத்தகத்தின் வீச்சு மிக அருமையானது; தெளிவு தரக்கூடியது.

அவர் கூற்றுப்படி, இய் என்னும் அடிவேரில் இருந்து யா என்னும் பெரு வேர் பொருந்தற் கருத்தில் உருவாகுமாம். இயைதல்>இசைதல், இயைதல்>இழைதல், யாத்தல், யாக்கை, யாழ், ஆப்பு, ஆவம், ஆவித்தல், ஆவல்,
ஆவணம், ஆசு, ஆசை, நார், நரம்பு, ஆத்தி, ஆணி, யாண்>ஞாண்>நாண், சாணான், சணல், யாணம், ஆணை, ஆம், யாண் (=கவின், அழகு), யாணர், யானம் (=ஊர்தி), ஆடை, ஆம்பல், ஆமை போன்ற சொற்களையும், இவற்றோடு
சேர்ந்த மற்ற சொற்களையும் அந்தப் பொத்தகத்தில் அருளி விவரித்திருப்பார். இங்கு நாம் காண விழைவது பொருந்தற் கருத்து மட்டுமே என்பதால், அவர் பொத்தகத்தில் இருந்து ஆணி, யாண்>ஞாண்>நாண், சாணான், சணல், யாணம் என்ற
சொற்களின் பிறப்புக்களை மட்டுமே இங்கு விவரிக்க முற்படுகிறேன். [பெரும்பாலும் அவருடைய வாசகங்களையே இங்கு பயன்படுத்தியிருக்கிறேன். சில இடங்களில் என்னுடைய வாசகங்களும் இடையிடையே உண்டு.]

யா - த்தல் என்னும் வினை பொருத்துதல், சேர்த்தல், கட்டுதல், தைத்தல் என்று பலவாறாய் விரிந்த பொருட்பாடுகளைக் காட்டும். தமிழ் இலக்கணத்தில் யாப்பு என்று சொல்கிறோமே, அதுகூட ஒரு கட்டுத் தான். சொற்கட்டு; அடிக்கட்டு; பாக் கட்டு எனப் பல்வேறு அணிகளை அது காட்டும். இனி விளக்கங்களுக்கு வருவோம்.

யாத்தல் என்னும் வினையின் கீழ்ப் பிறக்கும் சொல் யாணி>ஆணி. இது யா>யாஅண்> யாண்> யாண்+இ> யாணி> ஆணி என்று உருவாகும். இரு பொருள்களை இறுகப் பிணைப்பதற்காக அடிக்கப் பெறும் தைப்புப் பொருள் ஆணியாகும். ஆணி தைத்தல் என்னும் வழக்கு, இரு பொருள்களை ஒன்றுடனொன்று பொருத்துதற்கான
ஆணியடித்தலைக் குறிப்பதாகும். மரப்பலகைகளை ஒன்றோடு ஒன்றாகப் பொருந்தச் செய்வதற்குப் பயன்பெற்ற செறிப்புறுப்பு (யாண்>) யாணி என்னப் பெற்று, பின் ஆணி என்றவாறு செப்ப வடிவுற்றது. மரப்பலகைகளை ஒன்றோடொன்றாகப் பிணித்துக் கட்டில் முதலியவற்றை உருவாக்கும் தச்சர் “யாணர்” என்று அழைக்கப்
பெற்றமையையும் இவ்விடத்தில் கருத்திற் கொள்ளுதல் வேண்டும்.

ஆணியின் பிறப்பைத் தெரிவித்து, பின் அதன் வழிப்பொருள்களான இரும்பாணி, சுள்ளாணி, கடையாணி, யாழின் உறுப்பாகிய மரவாணி, எழுத்தாணி, பொன்னின் மாற்று அறியக் கட்டளைக் கல்லில் உரைத்துப் பார்க்கப் பயன்பெறும் உரையாணி, தீயைத் தூண்டப் பயன்படும் சூட்டுக்கோல் ஆணி, நுகத்தின் நடுவில் அமையும் பகலாணி, துலையாணி, முறுக்காணி, உரலாணி (=உலக்கை), திருகாணி, வரிச்சாணி, வரிச்சலாணி, வலிச்சலாணி, கட்டாணி, வேம்பாணி, கையாணி, குடையாணி, சடையாணி, குமிழாணி, கூராணி எனப் பல ஆணிகளை திரு. அருளி விவரித்திருப்பார். கூடவே
ஆணி என்ற பயன்பாடு சங்கதம், பாலி, ஒரியா, மராத்தியில் அப்படியே இருப்பதையும், ஆனி என்று வங்காளியில் புழங்குவதையும், அவர் காட்டியிருப்பார்.

அவர் காட்டும் அடுத்த சொல் யா> யாஅண்> யாண்> ஞாண் ஆகும். இது கட்டுக்கயிறு என்னும் பொருளில் “திண்ஞாண் எழினி வாங்கிய” [முல்லை: 63] என்ற பயன்பாட்டிலும், வில்லின் நாண் என்ற பொருளில் “சாப நோன் ஞாண்” [புறம் 1:49] என்ற பயன்பாட்டிலும் வருவதை எடுத்துக் காட்டுவார். இனி, அரைஞாண் என்பது அரையில் கட்டுங் கயிறு, அரையணி [பிங்] என்று புழங்குவதைக் கூறி அரைஞாண் கயிறு என்னுங் கூட்டுச் சொல் “அண்ணாக் கயிறு” என்னும் வடிவில், கடுங்கொச்சைத் தொகுத்தல் திரிபாக இக்காலப் பேச்சு வழக்கில் பயிலப் பெறுவதையும் சுட்டுவார்.

{அரைஞாண் என்பதும் உடைஞாண்/ஒட்டியாண் என்பதும் மிக நெருங்கிய பொருட்பாடு கொண்ட சொற்கள். ஒன்று கயிறு, இன்னொன்று அணிகலன். அவ்வளவுதான் வேறுபாடு. -இராம.கி}

ஞாண்>நாண் என்னும் திரிவில் கயிறு என்னும் பொருளில் “மரப்பாவை நாணால் உயிர் மருட்டிற்று” - குறள் 1020” என்று வருவதையும், வில்லின் நாண் என்னும் பொருளில் “வஞ்சிலை வல்விற் புரிநாண் புடையின் - கலி: 15:2 என்று
வருவதையும் நோக்கலாம். தவிர, அரைஞாண் பொருளில் “நாணும் அரைத்தொடரும்” என்ற வகையில் திவ்யப் பெரியாழ்வார் 1,2,4 - -இலும், மங்கலக் கயிறு என்னும் பொருளில் “ உன் கழுத்தின் நாண் உன் மகற்குக் காப்பின் நாணாம் என்றான்” - கம்பர். நகர் நீங்கு:49 - இலும், நாண்>நாணி என்ற திரிவில வில்லின் நாண் என்னும் பொருளில் ”நாணியிற் கோலொன்றினால் - தேவா: 616:4” - இலும் வருகின்றன. தமிழிய மொழிகள் சிலவற்றில் ஞாண் (மலையாளம்), நூணி (=கயிறு; பெட்ட குருள), நொண் (தோடா), நேணு (கன்னடம்), நேண, நேணு (துளு),
நோனே (கோண்டி), நானு (a sort of necklace, தெலுங்கு), நோணொ (குவி) என்று இந்தச் சொல் அமைந்திருக்கிறது.

ஞாணுக்கு அடுத்த சொல் ஞாண்+அல்>ஞாணல்>நாணல் என்று அமையும் சொல். இது கட்டுக்கயிறு போன்ற தோற்றமுடைய புல், நாணற் புல், நாணற் கோரை என்ற பயன்பாடுகளையும், நாணல் (மலையாளம், கன்னடம்), நாஞ்சி (=Bambusa arundinacea, கோண்டி) என்ற பயன்பாடுகள் மற்ற தமிழிய மொழிகளில இருப்பதையும் நோக்கலாம். [நாணலைப் பற்றியும், அதை வைத்துத் தெப்பம் படகு கட்டியதையும் பின்னால் எழுத வேண்டும். அது ஒரு பெரிய ஆய்வு. எகிப்திய, சுமேரிய, சிந்து வெளி நாகரிகங்கள் ஆகிய எல்லாமே இந்த நாணற் படகில் இருந்தே தங்கள் நீர்வழிப் போக்குவரத்துகளைத் தொடங்கியிருக்கிறார்கள். நார்வேக்காரரான தோர் அயர்தால் இது பற்றிய விவரிப்பு நூல்களை
எழுதியிருக்கிறார்.]

அடுத்த சொற்கள் சாணம், சாணான், சணல் போன்றவையாகும்.

யாண்> யாண்+அம்> யாணம்> சாணம் [யகர - சகரத் திரிபு]; சாணம் = நாரால் ஆகிய
பொருள் [நன்னூல்: 266, மயிலைநாதர்], கட்டுக் கயிறு
சாணம் = சணற் கயிறு “ இறுக்கிய சாணமும் கட்டின கச்சும்” [ திவ்யப். திருநெடுந்: 21 வியாக்: பக்:170]
யாண்+அன்>யாணன்>சாணன் = கயிறு அல்லது நாரினைக் கொண்டு மரமேறிக கள்ளிறக்குநன்.
சாணன்>சாணான் [உயிரிசைவு மாற்றம்]

[குறிப்பு: தமிழகத் தொழிற் குலங்களுக்கிடையில் உயர்வு - தாழ்வு கற்பித்துக் கொண்டு இயங்கிய இடைக்கால மடத்தனப் போக்குக்கு எதிராகத் தம் தொழிற்குலப் பெயருக்கு ஏற்றம் தந்து கொள்ளும் முயற்சியாகவே அத்தொழில்
வகுப்பினர் “சான்றான் = (பண்பு நலங்கள் நிறைந்தோன்)” என்றவாறு ஒரு போன்மை ஒலிப்பீட்டினைக் கொண்டு தம்மைக் குறித்துக் கொள்வாராயினர் [காண்க: சான்றார் = சாணார் “சான்றான் மாட்டு மேனிப் பொன்னும்” - T.A.S. II, 67] [சான்றான் என்னும் சொல் சாணான் என்றவாறு திரிபடையவே அடையாது. இரண்டும் தனித்தனிச் சொற்கள். சாணார் என்றவாறு அத்தொழிற் குலத்தவரைக் குறிப்பிடுகையில் அக்குறிப்பீட்டை இழிவாகக் கருதுபவரும், அல்லது
பயன்படுத்துபவரும், அவர் எவராயினும் அன்னார் குமுக நல எதிரியரும், இழிஞரும், மாந்த நேயமற்ற மடையருமே ஆவர்.]

இனிச் சணல் என்னும் வளர்ச்சியைப் பார்ப்போம்.

யாண்> யாண்+அல்> யாணல்> சாணல்> சணல் = நார்ச்செடி வகை (sunn - hemp, Crotalaria juncea), அந்த நார்ச்செடியினின்று பிரிந்தெடுத்த கயிறு.
யாணம்> சாணம்> சணம் [நெடுமுதற் குறுகல்] = சணல் (மூலிகை அக.)
சணம் + பு = சணம்பு = சணல் “சணம்போடு பருத்தி” (காசிகண்டம் - பிரமச: 14)
சணம்பு> சணப்பு = சணல் (பதார்த்த. குண. 250)
சணப்பு + ஐ > சணப்பை = சணல்,
சணப்பை + நார் = சணப்பைநார் = சணல்நார் (Janapanaara - தெலுங்கு)
சணப்பு + அன் = சணப்பன் = சணலினின்று நாரெடுக்கும் தொழிற் குலத்தான் "சணப்பன் வீட்டுக் கோழி தானே விலங்கு மாட்டிக் கொண்டது” என்பது ஒரு தமிழ்ச் சொலவடை; பழமொழி!
சணம்> (Sanskrit) s'aNa = சணல்; s'aNaka = சணல்

சணல் என்னும் சணப்ப நாரைக் குறித்து மக்கள் வழங்கிய சொல், பொருந்துதற் கருத்து வேர் வழியில் தோன்றியமைக்குச் சான்றாகச் சணலைக் குறித்து ஆங்கிலத்தில் வழங்கும் Jute என்னும் சொல்லின் தோற்ற வரலாற்றையும் ஓர் ஒப்பு நோக்குக்காகக் காணுதலும் இவ்விடத்தில் தெளிவுக்கு வழி வகுப்பதாகும்.

அடு> அடு+ஐ> அடை = பொருந்து, சேர், சேர்ந்திறுகு
அடை> சடை = கற்றை, செறிவு, கற்றையாக அமைந்த மயிர்முடி, அடர்ந்த மயிர் “விரிசடைப் பொறையூழ்ந்து” பரிபா: 9:5, பின்னிய கூந்தல் (பிங்) சடை + முடி > சடை முடி = முடியாகப் புனைந்த சடைமயிர் “புன்மயிர்ச்
சடைமுடிப் புலரா உடுக்கை” [சிலம்பு:25:126] சடை> (Sanskrit) Jataa = matted hair

சடை என்னும் தூய செந்தமிழ்ச்சொல் சமற்கிருதத்தில் Jataa என்றவாறு திரிபெய்தி நிலைத்தபின் Juuta என்றவொரு வடிவம் புடை கொண்டது. பதப்படுத்தி அடித்துப் பிரிக்கும் நிலையில் சடை போன்ற தோற்ற அமைப்பில் இருந்த சணல்
நார்க் கற்றையை வங்காளியர் Jhoota என்றவாறு குறிக்கத் தொடங்கினர். இச்சொல் Juuta என்ற சமற்கிருதச் சொல்லினின்று தோன்றியதாகும். இது பின் Jute என்ற திரிப்பமைப்பில் ஆங்கில மொழிக்கண் உலகெங்கணும் பரவியது. இவ்வனைத்திற்கும் அடிப்படை தமிழ்ச்சொல்லாகிய சடை என்பதுவே. [Jute = fibre from bark of East Indian plants of genus Corchorus used for sacking, mats, cords etc.. f. Bengali Jhoto, fr.Skr.Juuta = Jataa = braid of
hair} C.O.D.

அடுத்த சொல் யாணம். இது யா> யாஅண்> யாண்> யாண்+அம்> யாணம் என்று விரியும். பின்னால் யாணம்>ஆணம் என்றும் விரியும்.உள்ளக்கட்டு, அன்பு, விருப்பம் [”ஆணம் சான்ற அறிவர்” - தொல்.பொருள்:491 இளம், “ஆணமில் பொருள் எமக்கு” - கலி: கடவுள்:17, “ஆணமில் நெஞ்சத்து அணிநீலக் கண்ணார்க்கு” - நாலடி:374, “புரிவு ஆணம்
நேயமும் பேர்” - சூடா.நி. 8:33] என்ற பொருளையும், பற்றுக்கோடு [”தேவரை ஆணமென்று அடைந்து” - திருமழிசை - திருச்சந்: 69] என்ற பொருளையும், அரணம், காப்பு [என் மம்மர் வெந்நோய்க்கு ஆணமாகிய ஆயிழை” - பெருங்: 3,22, 57-58 என்ற பொருளையும், கூட்டு, குழம்பு [”ஆணம் குழம்பு ஆம்” - பிங்.நி:1124, ஆமை அவியல் ஆணம் கண்டறியோம்” - திருவ. சித்து:66] என்ற பொருளையும் இன்னும் கஞ்சி, மணமுள்ள கூட்டுப்பொருள், காட்டுக் கறி என்ற பொருள்களையும்
காட்டுவார்.

{சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் வெந்தாணம்>வெந்தணம்>வெஞ்சணம் என்ற சொல்லால் கூட்டு, அவியல், பொரியல் எனச் சோற்றோடு சேர்த்துச் சாப்பிடும் மரக்கறி உணவைக் குறிப்பார்கள். “இன்றையச் சாப்பாட்டுக்கு வெஞ்சணம் என்ன?” - இராம.கி.}

அடுத்தது கட்டு என்னும் பொருள் கொண்ட யாணம். யா> யாஅண்> யாண்> யாண்+அம்> யாணம் = கட்டு

கலி + யாணம்> கலியாணம் = ஆரவாரத்தோடு கூடிய புதிய மண இணையரைக் கட்டுவிக்கும் மங்கல நிகழ்வு விழா.

{நான் இந்தச் சொல்லில் அருளியிடம் இருந்து வேறுபடுவேன். கலித்தல் = கூடுதல், புணருதல். கலவி என்ற சொல் ஆண், பெண் புணர்ச்சியைக் குறிக்கும் சொல். குலவு>கலவு>களவு என்ற சொல்லும் அதைக் குறிப்பதே. களவு என்பது
பெற்றோர் அறியாமல் கள்ளத்தனமாகக் காதலிப்பது என்று பலரும் பொருள கொள்ளுகிறார்கள். அதைக் காட்டிலும் கூடுதல் பொருள் மிகச் சரியாகப் பொருந்தும். கலியாணம் = கலிப்பதற்காக ஏற்படும் கட்டு என்பதே நான் கொள்ளும்
சொற்பிறப்பு. கலிகட்டு என்னும் சொல் திரிந்து கால்கட்டு என்று இன்றையப பேச்சு வழக்கில் இருப்பதைப் புரிந்து கொண்டால் கலியாணம் முற்றிலும் தமிழே என்பதை உணர்ந்து கொள்ளலாம். கலித்தல், யாத்தல் என்ற இரு வினைச்சொற்கள் இந்தக் கூட்டுச் சொல்லின் உள்ளே இருக்கின்றன. ”கல்யாண” என்ற சொல்லுக்குத் திருமணம் என்ற பொருள் மோனியர் வில்லியம்சு வடமொழி அகராதியில் கிடையாது. “கல்யாண குணங்கள்” என்ற பயன்பாட்டில் வரும் “நல்ல” என்றே பொருளே அதில் கூறப்பட்டிருக்கிறது. எனவே வடமொழிக் கல்யாணம் என்பது வேறு, தமிழ்க் கலியாணம் என்பது வேறு. இரண்டையும் குழப்பிக் கொண்டு “கலியாணம்” வடமொழிச்சொல் என்றே புரிந்து கொண்டு தொங்குகிறவர்களை என்ன சொல்வது, போங்கள்? அந்தளவிற்கு நம்மிடையே வடமொழித் தாக்கம் இருக்கிறது என்று மட்டுமே சொல்லுகிறேன். கால்கட்டு என்ற திரிவுச் சொல்லைப் பார்த்த பிறகாவது கலியாணம் தமிழ் என்று புரிய வேண்டாமா? - இராம.கி.}

அடுத்து ஒட்டியாணம் என்ற சொல்லை ”இடையை உள்ளொடுங்குமாறு ஒட்டிக் காட்டும் அரைவளை, அரையணி ஒட்டியாணம்” என்று அருளியார் எடுத்துக் காட்டுவார். அது பற்றி இந்தக் கட்டுரைத் தொடர் நெடுகிலும் நான் பேசியாகிவிட்டது. ஒட்டி யாணம் என்னும் கூட்டுச் சொல் முற்றிலும் தமிழ் என்பதே சரி. இதை வடசொல்
என்று சொல்லுகிறவர்கள் மேலோட்டமாய்ச் சொல்லுகிறார்கள். கேள்வி கேட்பவரில்லாமல், நாட்டுப்புறங்களில் “இன்னார் சொன்னால் சரியாகத் தான் இருக்கும்” என்று என்று அமைந்து விடுவது போல எத்தனை காலம் தாம் மற்றோர் அடங்கி நிற்பது? என்றோ ஒரு நாள் எழுந்து நின்று மறுக்க முற்பட்டால், நீண்ட கட்டுரைகள் எழுத வேண்டியிருக்கிறது. இப்படி ஒவ்வொரு சொல்லுக்கும் பாடுபட வேண்டியிருக்கும் போது, சலித்துப் போகிறது. அந்தளவிற்கு அடிமைத்தனம் நம்மிடையே ஊறிக் கிடக்கிறது. இப்பொழுது ஒட்டியாணம், இன்னும் அடுத்துக் குடும்பம்...... இப்படி நீண்டு கொண்டே போகும். நல்ல பிழைப்புப் போங்கள் :-).

அன்புடன்,
இராம.கி.

1 comment:

Anonymous said...

ஆணி,என்ற சொல்லுக்குத் தவறான
விளக்கமென்றே,நினைக்கிறேன்.
அடிக்கும்போது அகழ்ந்துக்கொண்டுச்
செல்வதால்,அகழ்+னி,அகழ்ணி>ஆணி
என்றானது.கணி+னி,என்பதை,
நோக்கவும்.