Monday, October 27, 2008

பொத்தகம் - 1

ஓரிரு மாதங்களுக்கு முன், விக்சனரிக்கான கூகுள் மடற்குழுவில், "பொத்தகம் என்ற சொல் தமிழீழத்தில் இப்பொழுது புழக்கத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. முன்பு புத்தகம் என்பதே இருந்தது" என்ற செய்தியைச் சொல்லி, "பொத்தகம் சரியா? புத்தகம் சரியா?" என்று திரு.T.K.அருண் என்பவர் கேட்டிருந்தார். அவர் கேள்விக்கு யாரும் அப்பொழுது மறுமொழிக்காததால், அப்படியே அது தொங்கி நின்றது. நானும் வேறு வேலைகளில் ஆழ்ந்திருந்ததால், உடனே அதற்கு மறுமொழிக்க முடியவில்லை.

இப்பொழுது, இங்கு தனிப்பதிவாக, "பொத்தகம்" பற்றியும் அதன் தொடர்பான செய்திகளையும் நான் அறிந்தவரையில், இடுகிறேன்.

இந்தக் காலத் தமிழ் அகரமுதலிகளில் பொத்தகம், புத்தகம் என இரண்டுமே சுட்டிக் காட்டப் படுகின்றன. ஆனாலும் பொத்தகம் என்ற சொல்லே முந்தையது; வேர்ப்பொருள் பொதிந்து வருவது; இணைச்சொற்கள் கொண்டது; நம் பனையோலை மரபோடும் ஒத்து வருவது. [பனை பற்றிய சிந்தனை இல்லாமல் பொத்தகம் பற்றி அறியமுடியாது.] புத்தகம் என்பது பொத்தகத்தின் மரூஉ. ஒகரம் உகரமாவது தென்மாவட்டங்களில் பெரிதும் உள்ள பழக்கம். ”கொடுத்தானா?” என்பதைக் ”குடுத்தானா?” என்று சொல்லுவது பெரும்பாலோருக்கு உள்ள
பழக்கம். ”குடுத்தல்” என்ற இந்தச் சொல்லாட்சி பேரரசுச் சோழர்களின் கல்வெட்டுக்களில் கூடப் பெரிதும் புழங்கும். இதுபோன்றதொரு பலுக்கற் சிதைவிற் பொத்தகம் என்பது புத்தகம் என்று ஆகும்.

சங்கதம் தவிர்த்த வடபால் மொழிகளிலும் (potthaka - Pali, Putha - Prakrit, Puuthi - Kashmiri, pothu - Sindhi, Pottha - Punjabi, Pothi - Kaumuni, Nepali, Assamese, Pothaa - Bengali, Oriya, Maithili, Poothi - Bhojpuri, Potha - Awadhi, Pothuu - Gujarati, Pothi - Marathi,), ஏன் சிங்களத்திலும் கூடப் (Pota) என்றே அமைந்து, பொத்தகம் எனும் பலுக்கிற்கு நெருங்கி வரும். சங்கதத்தில் மட்டுமே பொத்தகம் புத்தகம் ஆகிப் பின் மேலும் திரிந்து புஸ்தகம் ஆகும். இந்தக் கால வடபால் மொழிகளிற் சிலவும் “புஸ்தக்” என்ற சங்கதப் பலுக்கலையே எடுத்தாளுகின்றன. இது புரியாது, நம்மில் பலரும் புஸ்தகம் தான் தமிழிற் புகுந்து புத்தகம் ஆயிற்று என்று எண்ணிக் கொள்கிறோம். அதையே சிலர் சாதிக்கவும் செய்வார்கள். உண்மை அதுவல்ல.

தமிழராகிய நாம், நம்முடைய மூலங்களை உணராமல் எவ்வளவு காலத்திற்குத் தான் இருப்போமோ, தெரியவில்லை. அளவுக்கு மீறிச் சங்கத ஆளுமைக்கு நம்மிற் பலரும் ஆட்பட்டுப் போனதால், "புஸ்தகம்" தெரிந்தவர்க்கு "பொத்தகம்" என்னவோ புதிதாகவே தோற்றுகிறது. காலத்தின் கோலம் கண்டு நொந்துகொள்ளுவதைத் தவிர்த்து, வேறு ஒன்றும் எனக்குச் சொல்லத் தெரியவில்லை :-) எதைச் சொன்னாலும், ”அது எப்படிச் சங்கதம் வழிவந்ததை இவன் மறுக்கலாம்?” என்ற முட்டாள் தனமான பூசனைப் போக்கில், ”தமிழ்வெறியன்” என்று சாடுவதே நடக்கும் நிலையில் ’அளவிற்கும் அதிகமாகப் பிறசொற் பலுக்கல்களை நம்மொழியின் இடையே ஆளுவது’ பற்றி என்னைப் போன்றவர் கவலைப்பட்டு என்ன ஆகப் போகிறது,சொல்லுங்கள்?

(இன்னொரு திராவிட மொழியின் நிலையும் இங்கு எனக்கு நினைவிற்கு வருகிறது. பலோச்சி என்னும் மொழியை அளவிற்கு மீறிக் கலந்த திராவிடமொழியான பிராகுயி இன்று 10 விழுக்காட்டுக்கும் குறைவாகவே திராவிடச் சொற்களைக் கொண்டிருக்கிறதாம். ”இன்னும் சில ஆண்டுகளில் முற்றிலும் இல்லாமல் போகக் கூடிய திராவிடமொழி அது” என்றும் அறிந்தவர்கள் சொல்லுகிறார்கள். இதனால், கூடிய விரைவில் பிராகுவிக்கள் தங்களை பலோச்சி என்றே அடையாளப் படுத்திக் கொள்வார்களாம். இதே போல, அளவுக்கு மீறிய ஆங்கிலக் கலப்பைப் பற்றி இத்தாலி மொழியினர் கூடக் கவலைப் படுகிறார்கள் என்று பி.பி.சி. வலைத்தளத்தில் படித்தேன். இடைவிடாமல் ஆங்கிலம் பழகும் தமிழ் இளையர் கூட
எதிர்காலத்திற் தங்களைத் தமிழர் எனச் சொல்லாது தமிங்கிலர் என்று அடையாளப் படுத்திக் கொள்வார்களோ, என்னவோ?)

பொத்தகம் பற்றிப் புரிய வேண்டுமானால், நாம் பனையோலையில் இருந்து, (கூடவே பனை பற்றிய பல செய்திகளையும் அறிந்து கொண்டு) தொடங்க வேண்டும். பட்டம்>பத்ரம், தால்>
தாள்> தாளி, தாலம், சுவடி, பனுவல், பொத்துதல், ப(ன்)னை, பாளை, போந்தை போன்ற சொற்களின் வழி, நம் புரிதலைக் கொண்டுசெல்ல வேண்டும். [இந்தக் கட்டுரையில் பாவாணர
கருத்துக்கள் அடியூற்றாய் இருக்கச் சொல்லறிஞர் ப.அருளியின் ”தமிழ், சமற்கிருதம் மற்றும் பிற இந்திய மொழிகளின் ஆராய்ச்சி நிறுவனத்தில் அருளி ஆற்றிய மொழியல் உரைகள்” என்ற நூலில் உள்ள “புத்தகம்” என்னும் கட்டுரையில் வரும் பல செய்திகளும், புலவர் இரா. இளங்குமரனின் “தமிழ் வளம்-சொல்” என்ற நூலில் வரும் “பல்” என்னும் கட்டுரைச் செய்திகளும், முனைவர் கு.அரசேந்திரனின் “தமிழறிவோம்-தொகுதி 2” இல் இருந்து “தாளி” என்ற கட்டுரைச் செய்திகளும் கூட நிறைந்து உடன் வருகின்றன. இந்தச் செய்திகளின் ஊடே என் தனிப்பட்ட இடைப்பரட்டும், முன்னவர்களில் இருந்து மாறிவரும் கருத்துக்களும் இருக்கின்றன.]

செய்திகள், கருத்துக்கள், கணக்குகள், குறியீடுகள் ஆகியவற்றை மரம், கல், ஓடு போன்றவற்றில் எழுதிய தமிழன், ஒரு காலத்தில் ஓலையிலேயே பெரிதும் எழுதினான். துணைக் கண்டக் கடற்கரையை ஒட்டிய மாநிலங்களில் எல்லாம் பனை எனும் எழுது பொருள் பெரிதும் பரவியிருந்தது. எங்கெல்லாம் முல்லை, மருதம், நெய்தல், பாலைத் திணைகள் விரவிக் கிடந்தனவோ, அங்கெல்லாம் பனை பெரும்பாலும் வளரும். [ஆனாலும் அண்மையில் இரு மாதங்களுக்கு முன், வடபுலம் போன போது ஒரு வியந்தையைக் கவனித்தேன். மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில், இருவுள் பாதை (Railway), பெருவழிச் சாலைகள் (Highways) ஆகியவற்றின் இருமருங்கிலும் பனை மரத்தைக் கண்டேன் இல்லை; எனக்கு அது வியப்பாகவே இருந்தது; ஒருவேளை அம்மாநிலங்களில் பனை அரிதாகவே இருக்கும் போலும். ஆனாலும் பீகாரில் பனை பெரிதும் இருந்தது. (வங்காளத்திலும் அவ்வாறே இருக்கிறதாம்.) இந்தப் புதலியல் பட்டகை(fact)யைப் புதலியலார் - botanists - தான் உறுதி செய்யவேண்டும்.]

சரி, புலனத்திற்குள் வருவோம்.

அன்புடன்,
இராம.கி.

7 comments:

தமிழநம்பி said...

புல்லுதல் = பொருந்துதல்.
பொரு - பொருந்து - பொருத்து - பொத்து - பொத்து - பொட்டு.

பொத்துதல் = பொருந்துதல், சேர்த்தல், தைத்தல், மூட்டுதல், மூடுதல்.

பொத்து - பொத்தகம் = பொத்திய (சேர்த்த) ஏட்டுக்கற்றை,எழுதிய ஏட்டுத்தொ்குதி.

சுவடி சேர்த்தல் என்னும் வழக்கை நோக்குக.


-மேலே கண்டது பாவாணர் ஐயாவின் விளக்கம்.

இதன் தொடர்பாக மேலும் விளக்கம் பெற
புலவர் இரா.இளங்குமரனார் தொகுத்த "தேவநேயம்" தொகுதி - 11 பக்கம் 55 - 56 இல் பார்க்கவும்.

அன்பன்,
தமிழநம்பி.

Anonymous said...

இலங்கையில் வயது முதிர்ந்தவர்கள் (60 மேல்) எப்பொழுதும் புத்தகத்தை பொத்தகம் என்றே அழைத்து நான் கேட்டிருக்கிரேன். இந்த சொல் மீண்டும் பாவனைக்கு வருவது பற்றி நான் கேள்விப்படவில்லை. சிங்களவரும் புத்தகத்தை பொத்த என்று தான் அழைக்கின்றனர்.

தருமி said...

இராமகி,

//மறுமொழிக்க முடியவில்லை..//

மறுமொழிய முடியவில்லை என்பது தவறா?

//புலனத்திற்குள்// - பொருள் என்ன?

சுந்தரவடிவேல் said...

நெடுநாட்களுக்குப் பின் தங்களது பதிவைக் காண வாய்த்திருக்கிறது. மகிழ்ச்சி!

Anonymous said...

ஐயா, எனது முந்தய கருத்து ஏன் வெளியிடப்படவில்லை?

Anonymous said...

பெருவழிச் சாலைகள் = பெருவழிகள் என்பது தவறா?

HK Arun said...

அன்பின் இராம்கி ஐயா!

பொத்தகம் எனும் சொல்லுக்கான விளக்கத்திற்கும் விரிவானத் தகவல்களுக்கும் நன்றி. கூடவே ஒரு வேண்டுக்கோள்.

//தமிழராகிய நாம், நம்முடைய மூலங்களை உணராமல் எவ்வளவு காலத்திற்குத் தான் இருப்போமோ, தெரியவில்லை. அளவுக்கு மீறிச் சங்கத ஆளுமைக்கு நம்மிற் பலரும் ஆட்பட்டுப் போனதால், "புஸ்தகம்" தெரிந்தவர்க்கு "பொத்தகம்" என்னவோ புதிதாகவே தோற்றுகிறது. காலத்தின் கோலம் கண்டு நொந்துகொள்ளுவதைத் தவிர்த்து, வேறு ஒன்றும் எனக்குச் சொல்லத் தெரியவில்லை :-) //

இவ்வாறு நீங்கள் நொந்துக்கொள்ளத் தேவையில்லை என்றே கருதுகின்றேன்.

புத்தகம் எனும் சொல் இன்று தமிழீழத்தில் "பொத்தகம்" என்று புழக்கத்திற்கு வந்துள்ளது என்றால் அதற்கு தமிழ் பற்றாளர்களதும், உங்களைப் போன்ற நற்தமிழ் அறிஞர்களுமே காரணமாக இருக்க முடியும்.

எல்லா துறைகளுக்கும் எதிர்ப்பு இருப்பதுப் போன்றே இங்கே உங்களது பதிவுகளுக்கும் சில எதிர்கருத்துக்கள் தோன்றியிருக்கலாம். ஆனால் தமிழ் மீதுப் பற்றுக்கொண்டு நீங்கள் செய்துவரும் தமிழ் மொழிக்கானத் தொண்டு காலம் கடந்தும் பலனளிக்ககூடியது.

உங்கள் பணியைத் தொடருங்கள் ஐயா.

நன்றி

அன்புடன் அருண்