Thursday, November 13, 2008

பொத்தகம் - 3

இனிப் பனையின் பல்வேறு பெயர்களைப் பார்ப்போம். [இவற்றை அறிவது, பொத்தகத்திற்கும், பனைக்குமுள்ள தொடர்பைப் புரிந்துகொள்ள உதவும்.]

பெண்ணை, தாலம், புல், தாளி, போந்தை என்று
எண்ணிய நாமம் பனையின் பெயரே

என்று திவாகர நிகண்டின் 700 ஆம் நூற்பா சொல்லும்.

பனை என்ற சொல் பன்னை என்ற சொல்லின் தொகுப்பாய் இருந்திருக்கும்  என்று புலவர் இளங்குமரன் சொல்வார். பல் எனும் அடிச்சொல் முதலில் வெண்பொருளைச் சுட்டி உருவாகியிருந்தாலும், பின்னால் பொருள்நீட்சியில் பன்மை, கூர்மை ஆகிய பொருட்பாடுகளைச் சுட்டியதையும், பல்லினின்று பல வழிச்சொற்கள் உருவாகியதையும், அவர் எடுத்துக் காட்டுவார்.

தன் வாய் வெளியே நீண்ட கோரைப்பல் கொண்டிருக்கும் விலங்கு  பல்லின் காரணமாகவே (பல்+ந்+றி) பன்றி என்றே சொல்லப் படுகிறதல்லவா? அதே போல் மரத்தண்டு முழுதும், (வெள்ளைநிறமாய் இல்லாவிடினும்) பற்களைப் போன்ற கூர்ஞ் செறும்புகளை உடையதால், இம்மரத்தை பல்+நை = *பன்னை என்றே சொல்லியிருக்க முடியும். பின்னால், பன்னையைத் தொகுத்து பனை ஆகியிருக்கலாம். [இத்தொகுப்பு தொல்காப்பிய காலத்திற்கும் முன் நடந்திருக்கலாம்.] பன்னை எனும் சொற்பிறப்பு ஏரணத்திற்கு அணைவாகத் தென்னை, புன்னை என்ற மற்ற மரப்பெயர்களையும் இளங்குமரன் எடுத்துக் காட்டுவார். தெல்+நை = தென்னை; புல்+நை = புன்னை. தெல்>தெள்> தெளிவு, தெள்>தெளிவு என்பது கள்/பதநீரைக் குறிக்கும்.] தெல்> தேன்>தேம் என்பதெலாம் கள்ளைக் குறிப்பதே. அவ்வகையில் தெல்லை/தெள்ளை(=கள்ளை)க் கொடுக்கும் தெல்மரம்(=கள்மரம்) தெல்நை> தென்னை. [இம்மரம் தென்கிழக்கு ஆசியாவிலிருந்து நம்மூர் இறங்கியதாகப் புதலியலார் கூறுவார்].

அடுத்த சொல்லான பெண்ணையும் பன்னையின் திரிவே. பன்னை> பண்ணை>பெண்ணை என்ற வளர்ச்சி தமிழில் இயல்பாக அமையக் கூடியது. தென்பாண்டிப் பகுதியில் இன்றைக்கும் நாட்டுப் புறத்தினரால் பல ககரச்சொற்கள் கெகரச்சொற்களாய்ப் பலுக்கப் படும். (”இன்னாரைக் கட்டினான்” என்பதை ”இன்னாரைக் கெட்டினான்” என்பார்), இதுபோலப் பகரச் சொற்கள் பெகரச் சொற்களாய் ஆவதும் தமிழில் இயற்கையான பலுக்கற் திரிவே. (”கொஞ்சங்கூடப் பலமில்லாதவன்” என்பதைக் கூடக்“கொஞ்சங்கூடப் பெலமில்லாதவன்” என்று தெற்கே சொல்வார்.)

அடுத்தது புல் என்னும் சொல். இது ஒரு வகையாக்கச் (classification) சொல்; பனை, தென்னை, கமுகு, (ஏன், வாழை, பப்பாளியைக் கூடச் சொல்லலாம்.) போன்ற மரங்கள் அவற்றின் வளர்ச்சியில் கிளை, சினை, கொப்பு, இலை, பூ, காய், கனி, விதை எனப் பரவாமல், ஒரு புல்லைப் போல, வேர், அடித் தண்டு, இலைத் தொகுதி, பின் பூந்தண்டு, காய், கனி, விதை என்றே சினை, கிளை, கொப்பு இல்லாமல் வளருகின்றன. இவை ஒருவகையான, புல்லைப் போன்ற, விதப்பான, மரங்கள். பனை மரம் ஒரு புல் என்றே பொதுமையாய்ச் சொல்லப் பட்டது ஓர் இயல்பான புரிதல் தான். [இன்னொரு வகையில், பனை மரம் வேர், தண்டு, கிளை, ஈர்க்கு எனப்பிரிந்து ஒவ்வோர் ஈர்க்கிற்கும் இரு பக்க இலை இருப்பதாகவும் கொள்ள முடியும். இந்த இலைகள் பனையில் ஒன்றை ஒன்று ஒட்டிக்கொண்டு ஒலைத்தொகுதியைக் காட்டும். தென்னை. கமுகு போன்றவற்றில் இலைகள் ஒட்டாமல் ஒரு தோகையாய் நமக்குக் காட்டும்.]

புல்வகை உறுப்புகளைச் சொல்லும்போது, தொல்காப்பியம் பொருளதிகாரம் மரபியல் 1586 ஆம் நூற்பா,

தோடே மடலே ஓலை என்றா
ஏடே இதழே பாளை என்றா
ஈர்க்கே குலை என நேர்ந்தன பிறவும்
புல்லொடு வரும் எனச் சொல்லினர் புலவர்

என்று விவரிக்கும்.

அடுத்தது தாளி (மற்றும் அதன் வடபால் வழக்கான தாலம்) . இதைப் புரிந்து கொள்ள வாழைமரச் செய்திகளை ஓர்ந்து பார்க்கலாம். “வாழை குலை தள்ளியது” என்கிறோம் அல்லவா? அது என்ன குலை தள்ளுவது? ஒன்றின் உள்ளிருந்து இன்னொன்று வெளியே வருவதையும், ஒன்றின் இடத்தை மாற்றுவதையும் தள்ளுதல் வினையாற் சொல்லுகிறோம். பொதுவாகப் புல்வகை மரங்கள் தாங்கள் வாழும் காலத்தில் ஒருமுறைதான் குலை ஈனும். அந்தக் குலையிலேயே, பூ, காய், கனி வளர்ச்சியை அவை காட்டும். [காட்டாக வாழைப்பூவின் அடியில் வாழைக்காய் தோன்றுவதும், அது பழுத்துக் கனியாவதையும் ஓர்ந்துபார்த்தால், இவ்வளர்ச்சி புலப்படும். அதே போலத் தான், பனம்பூ, பனங்காய், பின் பனம்பழம். இளம்பனங்காய்ச் சுளையைத் தான் நுங்கு என்கிறோம்.]

புல்மரக் குலையைத் தார் என்கிறோம். (வாழைத்தார் என்பதை ஓர்ந்து பாருங்கள். தள்>தரு>தார் என்ற திரிவையும் எண்ணிப் பார்க்கலாம். தருதல் வினையையே தள் எனும் வேரில் தோன்றியதாகப் பாவாணர் காட்டுவார். இதேபோல் வருதலுக்கும் வள் எனும் வளைதல் வேரைக் காட்டுவார். கள்>கரு>கார் எனும் கருமைக்கருத்து வளர்ச்சியும் இதே போல் அமைந்ததே.) இனி ரகர/லகரப் போலியை எண்ணிப் பார்த்தால் தால் என்றசொல் தாரைக் குறிக்க முடியுமென உணரலாம். தால்>தாலம், தால்>தாள்>தாளி என்ற வளர்ச்சியும் இயற்கையானதே. தாளி என்ற சொல் பனையைக் குறித்தது இப்படித்தான். பனந்தார்/பனங்குலையைத் தரும் மரம் தாலம்/தாளி.

இனிப் பனையின் தாளியைக் கத்தி கொண்டு கீறினால் சற்றே பால் நிறத்தில் சருக்கரை நீர் அதனின்றும் இழியும். அதைப் பால் என்றே சொல்வார். பனம் பால், தென்னம் பால், கமுகம் பால் என்ற சொல்லாட்சிகளைக் கவனியுங்கள். (அரப்பர் - Rubber - பாலும் இதுபோற் பால் தான்; ஆனால் அது மரத்தைக் கீறி வருவது. தார் எனும் உறுப்பு அதற்குக் கிடையாது.] பால் வருவதால் தாளுக்குப் பால்>பாள்>பாளை என்றும் பெயர் உண்டு. பனம்பாளை, தென்னம்பாளை, கமுகம்பாளை என்ற சொற்களை அறிந்துள்ளீரா? பாளை கொண்ட மரங்களைப் பாளை மரங்கள் என்றே புதலியலார் சொன்னார். palmyra என்பது பாளை மரத்தின் ஆங்கில ஒலிபெயர்ப்பு. [நாம்தான் சொற்பிறப்பு அறியாமல் இருக்கிறோம்.] பின்னால் அதையே பொதுப்படையாக்கி வெவ்வேறு palm trees பற்றிப் புதலியர் சொன்னதும் இதன் வளர்ச்சிதான். புல்மரக் குடும்பங்களுக்கு புதலியற்பெயர் வந்தது தமிழின் அடிப்படையிலே தான்.

பெரும்பாலான பாளை மரங்களிலிருந்து பாளையைக் கீறி வடியும் பாலைச் சற்றுநேரம் ஒரு ஏனத்தில் வைத்தால், காற்றிலுள்ள சில நுண்ணுயிரிகள் அதனுள் புகுந்து தம் நொதிப்பொருள் (enzyme) கொண்டு பாற்சர்க்கரையை மிக எளிதில் வெறியமாக்கி (alcohol) விடும். இப்படி அமைவதே கள். [சரியான அளவுநேரம் நொதிப்பு இருந்தால், குறைச் சருக்கரையும், மிகு வெறியமும் சேர்ந்த இளங்கள்ளாய் இருக்கும். இன்னும் கூடநேரம் நொதிப்பு அமையும் எனில், வெறியத்தின் ஒருபகுதி மேலும் வேதிமாற்றம் அடைந்து, சாலியக் காடியாக (acetic acid) உருவாகி, மொத்தத்தில் அது கடுங்கள்ளாகும். கடுந் தன்மை உடையது காடி. காடியை ஆம்பலம்>ஆமிலம்>அமிலம் என்று சொன்னது புளியம்பழம் எனும் விதப்புப் பொருள் பற்றியாகும்.] தாளில் இருந்து கள் கிடைப்பதால் அது தாளியானது. வட மாநிலங்களில் தாளியைத் தாரி/தாடி என்று பலுக்குவார். வெள்ளைக்காரன் அதை toddy என ஒலி பெயர்ப்பான். நாமோ மூலந்தெரியாது திகைக்கிறோம். மூலம் காட்டினும், நம்மில் சிலர் ஏற்கமறுத்து, எகிறி ஏளனம் செய்வதிலேயே கருத்தாய் இருக்கிறோம். அந்த அளவிற்கு வடமொழி நம் கண்ணைக் கட்டுகிறது. :-).

பனையின் இன்னொரு பெயர் போந்தை (போந்து+ஐ). போந்தின் சொற்பிறப்புக் காணுவது சற்று சரவலானது. போத்து என்பது புதுக்கிளை அல்லது இளங்கிளை. ”போத்து விட்டிருக்கிறது” என்பது நாட்டுப்புற வழக்கு. பனம்பாளையைப் பனை இளங்குருத்து/இளங்கிளை என்றே சொல்லலாம். முதுகிளையிலும் பார்க்க, எந்த இளங்கிளைக்குள்ளும் நீர் கூட இருக்கும். பனையைப் பொறுத்தமட்டும், பாளையில் கிடைக்கும் (சருக்கரை) நீர் விதப்பானது. பனம்போத்தில்/பனம்போந்தில் (சருக்கரை) நீர் நிறைந்து கிடக்கிறது. அதனால் தான், பாளையைக் கீறினால் சருக்கரை நீர் இழிகிறது. முன்சொன்னதுபோல் பனம் பூ, பனங்காய், பனங்கனி வளர்ச்சியும் போந்தில் இருந்தே அமைகிறது. பொந்துதல் என்பது வினைச்சொல்; அது பொருந்துதல், விரிதல், பெருகுதல், சேர்தல், நிறைதல் என்று பொருட்பாடுகளைக் குறிக்கும். பொந்திக்கை = பொருந்துகை, பொந்திகை = நிறைவு, த்ருப்தி, பொந்தி = பருமை. இளங்கிளையை இளங்குருத்து எனும்போதும் குருத்தல் = தோன்றல் என்ற பொருள் தோன்றுவதைப் பார்க்கலாம். [குருத்து>குருந்து ஆகியவை தென்னை, பனை முதலியவற்றின் இளவிலையைக் குறிக்கின்றன.] பூத்தல் என்பதும் தோன்றுதலே.

புகு>பூ>போ>போத்து = இளங்கிளை,
போந்து = பனங்குருத்து,
போது = அரும்பிற்கும், மலருக்கும் இடைப்பட்ட நிலை. காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி, மாலை மலரும்இந் நோய் - குறள் 1227.

பாளை விரிந்த நிலையில் இருப்பதாலும் போந்து என்றசொல் பொருந்தும். போந்தி என்பது வீங்கிய காலைக் குறிக்கும்; வீங்குதல் = விரிதல், பெருகுதல், சேர்தல். போத்து என்பது பிங்கல நிகண்டின் படி, போதகம் என்றும் சொல்லப் படும். போந்தை என்ற சொல் தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் புறத்திணையியல் 1006 ஆம் நூற்பாவில் வெட்சித் திணையின் கரந்தை முதலிய பிற பகுதிகளைக் குறிக்கும் இடத்தில், வேந்தர்களின் பூவைச் சொல்லும் முகமாய்,
.......................................................உறுபகை
வேந்திடை தெரிதல் வேண்டி ஏந்துபுகழ்ப்
போந்தை வேம்பே ஆர் என வரூஉம்
மாபெருந் தானையர் மலைந்த பூவும்

என்று வருகிறது. இங்கே போந்தை என்பது பனையையே குறிக்கிறது. இதை விளக்கும் வகையில் இளம்பூரணர் குறிக்கும் வெண்பா:

குடையவர் காந்தள் தன் கொல்லிச் சுனைவாய்த்
தொடையவிழ் தண்குவளை சூடான் - புடைதிகழுந்
தேர் அதிரப் பொங்கும் திருந்துவேல் வானவன்
போர் எதிரில் போந்தையாம் பூ

-புறப். பொது 1

என்று அமையும். போந்தைப்பூ என்பது பனம்பூ. [வாழைப்பூ போல, ஆனால் மிகச் சிறியதும் மஞ்சள் நிறம் உடையதும் ஆகும். பனம்பூ சூடினான் என்பது பனம்பாளை சூடலே. நீர்க்கலசத்தில் பனம்பாளை செருகி வைப்பதை மதுக்குடம் என்று தென்பாண்டி நாட்டில் இன்றும் சொல்வார். இதேபோலத் தலைப்பாகையில் பனம்பாளையைச் சூடிக் கொள்வார். வேடிக்கையைப் பார்த்தால், பனை,ஆர், வேம்பு என்ற மூன்று பூக்களும் மிகச் சிறியவை. அக் குலைகளையே வேந்தர் சூடிக் கொண்டிருக்க வேண்டும்.]

நச்சினார்க்கினியத்தில் பனை பற்றிக் கூறிய வெண்பா

ஏழகம் மேற்கொண்டு இளையோன் இகல்வென்றான்
வேழம் இவனேற வேந்துளவோ? - ஏழுலகும்
தான் தயங்கு நாகம் தலை தயங்க வாடாமோ
போந்தையங் கண்ணி புனைந்து.

என்று அமையும்.

அன்புடன்,
இராம.கி.

2 comments:

Anonymous said...

Dear Rama. Ki,

I cannot understand why you insist on saying Thennai came from east asia when 45, 000 year old Thennai remains have been found in place of India. In fact these are the oldest ever remains of Thennai found anywhere on the planent!

The notion that Thennai came from East Asia is old theory that has been discarded by current botanists.

தமிழ் said...

ஐயா.. Soup எனும் சொல்லை 'ஆணம்' என்று தமிழாக்கலாமா?