Tuesday, December 23, 2008

குடும்பம் - 1

2008 திசம்பரில் மின் தமிழ் மடற்குழுமத்தில் மலேசிய எழுத்தாளர் திரு.ரெ.கா. "திருக்குறளில் குடும்பம் என்ற சொல் இல்லை. இது வள்ளுவருக்குப் பிற்காலத்திய சொல்லாக இருக்கலாம். 'இல்வாழ்க்கை', 'மனை மாட்சி' என்றே குறளில் ஆளப் பெறுகிறது. குடும்பம் என்ற சொல்லின் மூலம் என்ன? அறிந்தவர் சொல்லுங்கள்” என்று கேட்டிருந்தார். தவிர, அச்சொல் “தமிழில் இருந்து வடமொழிக்குப் போனதா, வடமொழியில் இருந்து தமிழுக்கு வந்ததா?” என்றும் கேட்டிருந்தார். உடனே, “குடும்பம், குடும்பகம் - இரண்டும் வட சொற்களே. ‘உதார சரிதாநாம் து வஸுதைவ குடும்பகம்’ என்று மனுவும், யாக்ஞவல்கியரும் சொல்கிறார். ’பரந்த மனமுடையோர்க்கு உலகம் முழுவதும் ஒரே குடும்பம்’ என்று பொருள் கொள்ளலாம். உறவினர், மக்கள், வம்சம் போன்றவற்றைக் குறிக்கவும் இச்சொல் பயனாகிறது" என்று திரு.தேவு சொல்லியிருந்தார். ஆனால்,

ayaM nijaH paroveti gaNanA laghu-chetasAm
udAra charitAnAM tu vasudhaiva kuTumbhakam ||

""This is my own and that a stranger" - is the calculation of the narrow-minded,
For the magnanimous-hearts however, the entire earth is but a family"

என்ற சொற்றொடர் மனு ஸ்மிர்தியில் ஆளப்படவேயில்லை என்று சர்வேஷ் திவாரி என்பவர் அழுத்தந்திருத்தமாகச் சொல்லுகிறார். (http://www.blogs.ivarta.com/Hoax-Called-Vasudhaiva-Kutumbakam-I-Hitopadesha/blog-148.htm). {மேலும், இவ்வாசகம் வரும் நூலாக யஞ்யவல்கிய ஸ்மிர்தியை திரு. திவாரி குறிப்பிடவில்லை. அதேபொழுது இச்சொற்றொடர் பல வடமொழி நூல்களில் ஆளப் பட்டிருப்பது உண்மை தான் என்று சில காட்டுக்களைத் தருகிறார். அவர் கட்டுரைகளைப் படித்தால், ஒரு பருந்துப் பார்வை கிடைக்கக்கூடும். பின், மூலங்களுக்குப் போய் முழு உண்மையைத் தெரிந்து கொள்ளலாம். ”வசுதெய்வ குடும்பகம்” என்ற சொற்றொடர் குறிக்கப் படும் நூல் விதப்பாக ஹிதோபதேசம் என்றும், அதற்குமுன் பஞ்ச தந்திரக் கதைகளிலும், அதற்கும் முன்னால் [இராமனுசரின் ஸ்ரீ பாஷ்யத்தின் இரண்டாம் அதிகாரத்தில் ஏழாம்  அதிகரணத்தில் கூறும் விளக்கங்கள் வழியாக, அரிதில் அறியப் பட்ட] மகா உபநிடதம் 6- ஆம் அதிகாரத்தில் வரும் 70-73 ஆம் வரிச் சொலவங்களிலும் இச் சொற்றொடர் ஆளப்பட்டதாக திவாரியின் கட்டுரைகள் சொல்கின்றன.} மனு ஸ்மிர்தியிலும், யஞ்யவல்கிய ஸ்மிர்தியிலும் எவ்விடத்தில் இச்சொற்றொடர் ஆளப்பட்டுள்ளதென அதிகாரம், வரிக்குறிப்புகளோடு திரு. தேவு கொடுத்தால் எடுகோளைப் பார்க்க ஏந்தாக இருக்கும்.

பொதுவாக இரண்டாம் வழிப்பட்ட பரப்புரைக் கட்டுரைகளைக் கொண்டு அடித்துச் சொல்லுவது நம்மை வழுக்கிவிடும். [அதே பொழுது, குடும்ப என்ற சொல் சந்தோக்ய உபநிடதம் தொடங்கி, பின் ஆபஸ்தம்ப தர்மசூத்ரம், மனுஸ்மிர்தி ஆகியவற்றில் ஆளப் படுவதாகத்தான் மோனியர் வில்லியம்சு அகரமுதலி குறிப்பிடுகிறது.]

மனு ஸ்மிர்தி முதல் நூற்றாண்டு நூலென்றே பெரும்பாலோர் கருதுகிறார்.  ஹிதோபதேசம் கி.பி. 5 ஆம் நூற்றாண்டு அளவில் எழுந்த, கதைகள் நிரம்பிய, நூல். பஞ்சதந்திரம் பல்வேறு காலப்பட்டது. அதன் தொடக்கம் புத்தருக்கும் முற்பட்டது என்பார். வேதநெறி பயிலாத (ஆசீவகம், சைனம், புத்தம் போன்ற) மாற்று நெறியாளரிடம் பெரிதும் புழங்கியவை பஞ்சதந்திரக் கதைகள். தொடக்ககாலத்தில் அவற்றைப் பயன்படுத்த வேதநெறி தயங்கியது. பின், நெடுங்காலம் கழித்தே, வேதநெறி தன் பரப்புரைகளில் ஒருசில பஞ்சதந்திரக் கதைகளைப் பயன்படுத்தியது. உபநிடதங்கள் கி.மு.800 தொடங்கி புத்தருக்கும் அப்புறம் கி.மு.400 வரைக்கும் எழுதப் பட்டிருக்கலாம் என்றே வரலாற்று ஆய்வாளர் சொல்கிறார்.

குடும்பம் என்ற சொல் சில வடநூல்களில் ஆளப்படுவதாலேயே அதை வடசொல்லென அறுதியிட்டுச் சொல்லமுடியாது. குடும்பம் என்ற சொல்லின் வேர், அந்த வேரடியில் பிறந்த மற்ற சொற்கள், அச்சொற்களின் வளர்ச்சி, அவற்றின் சொற்கூறுகள், சொற்கள் அமையும் பாங்கு போன்றவற்றைக் கருத்தில் கொண்டால், அப்படி அறுதியாய்ச் சொல்ல முடியாது. [குடும்பம் என்ற சொல்லின் தமிழ்மையைக் கீழே நிறுவுவேன்.]

பொதுவாக, நாவலந்தீவு தழுவிய பழந்தமிழின் விரிவை ஏதோ காரணங் கருதி மறுத்து (குமரியொடு வட இமயத்து ஒருமொழி வைத்து உலகாண்ட காலமும் ஒன்று இருந்தது, அது பல்வேறு காரணங்களால் மாலவன் குன்றத்திற்கும் கீழே சுருங்கியது.), ”வேதநெறிக்கும், மாற்று நெறிகளுக்கும் இடையே நடந்த தருக்கப் போராட்டத்தில் பல்வேறு சமய நெறியாளரும் அங்கும் இங்குமாய் ஓடி, முடிவில் தற்காப்பிற்காகத் தெற்கு நோக்கி பெருமளவில் வந்ததையும், குறிப்பாக வேதநெறியாளர் இரண்டு மூன்று அலைகளாய் ஓடி வந்ததையும் புறந்தள்ளி, [காண்க: பார்ப்பனரில் உள்ள பெருங்கணம் (ப்ருஹச்சரணம்), வடமர் போன்ற கூட்ட உட்பிரிவுகள்; தமிழக, இந்தியவரலாற்றில் ஒரு குறித்த பகுதி; ஆய்வுசெய்யாமல் அழிந்து கொண்டு உள்ளது. ”வரலாற்றுத் திருத்தங்கள்” தங்களுக்கு இடைஞ்சலானவற்றை மறைத்து அழித்துக் கொண்டுள்ளன.], பல சங்கத நூல்கள் தெற்கிருந்தே எழுதப் பட்டன என்பதையும் புரிந்து கொள்ள மறுத்து, வன்கண் வழக்குச் செய்வதாலேயே, பலரும் வேதகாலத்தில் சிறிதளவும், உபநிடதக் காலத்தில் பேரளவும் தமிழ்ச் சொற்கள் சங்கதத்துள் நுழைந்து ஆட்சி செய்திருக்க வாய்ப்புக்களுண்டு என்பதை மறுக்கிறார். [அப்புறம் காழ்ப்பு காழ்ப்பு என்று சொல்லுவதில் பொருளென்ன உள்ளது?] சிந்தனை மாற்றங்கள் ஏற்படாமல், ஒருபக்கமாகவே எண்ணிக் கொண்டிருந்தால், மொழியாய்விற்கு வடக்கு மட்டுமே வாசலென முட்டிக்கொள்ள வேண்டியது தான். மற்ற வாசல்களைத் திறந்தால் என்ன, குடி முழுகியா போய்விடும்? புதுக் காற்று தென்றலாய் வந்து அடிக்கட்டுமே?

அன்புடன்,
இராம.கி.

No comments: