Friday, November 14, 2008

பொத்தகம் - 4

இனி, பஞ்சை இழுத்து இழையாக்கி, அதை நீட்டி (நூலுதல்> நீலுதல்> நீளுதல்> நீளம்) நூலப்பட்டது நூல். இது ஒரு துகிற்துறைச் (textile) சொல். அதேபொழுது ஒரு குறிப்பிட்ட கருத்தை/கதையை/நிகழ்வை நீட்டிக் கூறுதலும் நுவலுதல் எனப்படும். அப்படி நுவலியதும் (நுவல்>நூல்) நூல் ஆகும். இந்நூலும் அந்நூலும் பார்க்க ஒன்றுபோல் இருந்தாலும் நுண்ணிய அளவில் சொற்பிறப்பில் வேறுபட்டவை யாகும். இனிப் பல இழைகளைச் சேர்த்துப் பன்னி, முறுக்கேற்றி வலிமை கொடுத்தது பனுவல் (= பன்னப் பட்டது; பல்>பன்னுதல்>பனுவல். இதே சொல்லை இந்தோயிரோப்பியம் (காட்டாக ஆங்கிலம்) spinning என்று சொல்லும்.) பருத்தியை விளைத்து நூலாக்கிய நாவலந்தீவின் சொற்களே துகலியற் தொடர்பில் உலகெங்கும் பெரிதும் பரவிக் கிடக்கின்றன. அவற்றை விவரித்தால் விரியும். (பனுவல் என்பது துகிற்துறையில் மட்டுமல்லாமல், சொல்/ யாப்பு/ நூல் ஆகிய துறைகளிலும் பழகிய சொல்லாகும். (நாலாயிரப் பனுவல்) இதுபோற் சொற்களின் இரட்டைத்தோற்றம் ஆழ்ந்து உணரப்பட வேண்டியதாகும்.

இனித் துல்லுதல் என்பது இணைத்தல், சேர்த்தல் பொருளை உணர்த்தும். துல்லுதல், துல்குதல் என்றுமாகும். அதன் அடுத்த வளர்ச்சியாய், லகரம் தொலைந்து துகுதல் என்றுமாகும். துகுத்தது துகில் = textile என்ற பெயர்ச் சொல் அப்புறம் விளையும். துகிலில் நூல் தொகுப்புமுறை துகுப்பு (texture) எனப்படும். வார்ப்பிலும் (warp) ஊடிலும் (weft) மாறி மாறி புதிய புதிய அடவுகளில் (designs) நூலைக கொடுத்து நெய்வது வெவ்வேறு துகுப்பை நமக்குத் தருகிறது. சட்டைத்துணியின் துகுப்பு ஒரு மாதிரியும், சேலையின் துகுப்பு இன்னொரு மாதிரியுமாக இருக்கிறதல்லவா? நூற்றுக் கணக்கான துகுப்புக்களைச் செய்யத்தெரிந்தன் பெருந் துகிலியலாளன் ஆகிறான்.

இதேபோலச் சொற்கள் பலவும் நேர்த்தியாய்ப் பொருந்திய வாக்கியங்களை அடுத்தடுத்து அடுக்கி ஒரு கட்டுரை/கதை/கவிதை எனத் துகுத்ததை text என்றே இந்தையிரோப்பியத்தில் சொல்கிறார். தமிழில் துல்கு என்று தேவைப் பட்ட இடங்களிற் சொல்லலாம். இனித் துல்ந்தது துன்னப் பட்டது என்றும் தமிழில் வரும். இக்காலத்தில் தையற்காரர் என்கிறோமே, அவரைச் சங்க காலத்தில் துன்னகாரர் என்றே சொன்னார். அதாவது வெட்டிய துணியைச் சேர்த்துத் தைப்பவர் துன்னகாரர். (துகைப்பவர் பேச்சுத்தமிழில் தைப்பவர் ஆவார்.) இவ்வளவும் ஏன் சொல்கிறேனெனில் சேர்த்தல், தொகுதியாக்கல் எனும் அடிக்கருத்து பலவிடத்தும் கிளைத்துப் புதிய புதிய சொற்களை உருவாக்கியுள்ளது என்று சொல்லத்தான். எழுத்திற்கு இணையான துகிலியல் துறைச் சொற்களை மட்டும் இங்கு எடுத்துக் காட்டினேன்.

அதேபோல பொத்துதல் என்ற வினையும், சேர்த்தல், பெருத்துதல், கட்டுதல், தொகுத்தல் என்ற பொருளை உணர்த்தும். பொத்தப் பட்டது பொதி (= தொகுதி). போத்து ஓலைகளை அடுக்கித் தொகுத்தது பொத்தகம். பெருங்கதை உஞ்சைக் காண்டத்தில் யாழ் கைவைத்த காதையில் (34 ஆம் காதையில்) 26 ஆம் வரியில் வரும், “நிறைநூற் பொத்தகம் நெடுமனை ஏற்றி” என்ற வாசகத்தை இங்கு எண்ணிப் பார்க்கலாம். நிறைநூற் தொகுதி இங்கு பொத்தகம் எனப்படுகிறது. இதே போல, நாலடியார் 318 ஆம் பாட்டில்,

புத்தகமே சாலத் தொகுத்தும் பொருள்தெரியார்
உய்த்தகம் எல்லாம் நிறைப்பினும் -- மற்றவற்றைப்
போற்றும் புலவரும் வேறே பொருள்தெரிந்து
தேற்றும் புலவரும் வேறு

தொகுத்தல் பொருள் வருகிறது. இந்தக் கால எடுவிப்பில் (edition) மேலே உள்ள நாலடியார் வெண்பாவில் “புத்தகம்” என்ற சொல்லாட்சி இருந்தாலும் அதன் முதற் பதிப்பில், ஏட்டுச் சுவடியில், பொத்தகம் என்ற சொல்லாட்சி இருந்ததா, புத்தகம் என்ற சொல்லாட்சி இருந்ததா என்று இக்காலத்தில் சொல்ல முடியாதுள்ளது. தொகுத்தற் பொருளை நோக்கும் போது, புத்தகத்தைக் காட்டிலும் பொத்தகமே பெரிதும் பொருந்துகிறது.

இதே போல ஏலாதி 63 ஆம் பாட்டில்

“ஊணொடு கூறை, எழுத்தாணி புத்தகம்
பேணொடும் எண்ணும் எழுத்திவை - மாணொடு
கேட்டெழுதி ஓதிவாழ் வார்க்கு ஈய்ந்தார் இம்மையான்
வேட்டெழுத வாழ்வார் விரிந்து

என்னும் பாட்டிலும் புத்தகம் என்றசொல் சுவடி என்ற பொருளிலேயே பயின்றிருக்கிறது. இங்கும் இதன் முதற்பதிப்பில் பொத்தகச் சொல்லாட்சி இருந்ததா, புத்தகச் சொல்லாட்சி இருந்ததா எனச் சொல்லமுடியாதுள்ளது.

இதுபோக, South Indian Inscriptions Vol III - இல் 80 ஆம் கல்வெட்டில் “பொத்தகப்படி குழி” என்ற சொற்றொடர் பயிலப்பட்டதாய் சென்னைப் பல்கலைக் கழக Tamil Lexicon சொல்லும். என்னால் அக்கல்வெட்டை இந்தியத் தொல்லியல் துறையின் நூலில் காணமுடியவில்லை. ஆழத்தேடிப் பார்க்கவேண்டும்.

பொத்தகம் எனும் இச்சொல் இன்று கிடைத்துள்ள சங்க இலக்கியங்களில் அப்படியே பயிலவில்லை தான். அதேபொழுது, சங்க இலக்கியம் என்பது தமிழில் அக்காலத்துப் பயின்ற எல்லாச் சொற்களின் அகரமுதலித் தொகுதி அல்ல. அது ஒரு சிறுதொகுதி என்று புரிந்துகொள்ள வேண்டும். இவை தவிர, நமக்குக் கிடைக்காமல் அழிந்துபட்ட நூல்கள் இன்னும் ஏராளம் என்றே தமிழ் ஆய்வாளர் கூறுகின்றனர். [இந்த அடிப்படைக்கருத்தை ஒதுக்கி, சங்க இலக்கியத்தில் நேரடி இல்லையெனில் ”குறிப்பிட்ட சொல் தமிழில்லை, அது வடமொழியிலிருந்து வாங்கிய கடன்” என முட்டாள் தனமாகச் சொல்லும் “வல்லாளர்” பலருமுண்டு. ஏனெனில் ”ஏழைசொல் அம்பலம் ஏறாது” என்ற நாட்டுவழக்கு அவருக்குத் தெரியும்.]

நாட்பட, நாட்படப் பனையோலையைச் செதில் அரிக்கத்தானே செய்யும்? அதனால், கிட்டத்தட்ட ஒரு 120-150 ஆண்டுகளுக்கு மேல் எந்த ஓலைச்சுவடியும் தாங்காது. அதை அடுத்த எடுவிப்பில் படியெடுக்க வேண்டும். 1900 வாக்கில் ஒரு சுவடி கிடைக்க வேண்டுமெனில் கி.மு.300 ஆம் ஆண்டில் முதற்பதிப்பு என்றால், கி.பி.1900ல் 15வது பதிப்பே கிடைக்கும். எனவே இன்றைக்கு நம் கையில் கிடைத்திருக்கும் சங்க நூற்சுவடிகள் பெரும்பாலும் 12, 13, 14, 15 ஆம் பதிப்புகளாகவே இருக்கும்.

ஓவ்வோர் எடுவிப்பிலும், ஏற்படும் கவனக்குறைவால் எழுத்துப் பிழைகளும், சொற்கூட்டுப் பிழைகளும் கூடிவர வாய்ப்புண்டு. இப் பட்டுமைகளால், ”பொத்தகம்”, ”புத்தகம்” ஆகப் பெரிதும் வாய்ப்புண்டு. சுருங்கச் சொன்னால் போத்தோலைகளைப் (பனையோலைகளைப்) பொத்திக்கட்டியது பொத்தகம். தவிர, ஏட்டுக் கட்டு, ஓலைச்சுவடி எனும் இணைச்சொற்களாலும் இச் சொற்பிறப்பை உணர முடியும்.பனையின்றிப் பொத்தகச் சொல் எழ வாய்ப்பில்லை. கூடவே பனைப் புழக்கமுள்ள பகுதியில் இருந்தே பொத்தகம் என்ற சொல் எழுந்திருக்க முடியும் என்பதையும் உணரலாம்.

சுருக்கமாகப் பொத்தகச் சொற்பிறப்பை ஒரு பத்தியில் எழுதியிருக்கலாம். இவ்வளவு விரிவாக தொடர்புடைய சொற்களோடு பொருத்தி இத் தொடரை 4 பகுதிகளில் எழுதியது மற்ற சான்றுகளை உணர்த்தவே என்று கொள்க!

அன்புடன்,
இராம.கி.

1 comment:

HK Arun said...

விரிவானத் தகவல்களுக்கு மிக்க நன்றி ஐயா.

// சுருங்கச் சொன்னால் போத்து ஓலைகளைப் (பனையோலைகளைப்) பொத்திக் கட்டியது பொத்தகம். ஏட்டுக் கட்டு, ஓலைச்சுவடி என்னும் இணைச்சொற்களால் இந்தச் சொற்பிறப்பை நாம் உணர முடியும்.பனையின்றிப் பொத்தகம் என்ற சொல் எழ வாய்ப்பில்லை. கூடவே பனைப்புழக்கம் உள்ள பகுதியில் இருந்தே பொத்தகம் என்றசொல் எழுந்திருக்க முடியும் என்பதையும் உணரலாம்.//

தமிழீழத்தில் "பொத்தகம்" எனும் சொல்லை புழக்கத்திற்கு கொண்டுவந்தோர் தெளிவும் மகிழ்வைத் தருகின்றது.

தொடரட்டும் உங்கள் தமிழ் பணி.

அன்புடன் அருண்