Monday, November 24, 2008

ஒட்டியாணம் - 3.

[ஓட்டியாணம் என்ற இக்கட்டுரைத் தொடரை ஒட்டி மின்தமிழ்க் குழுமத்தில் எழுந்த பின்னூட்டுக்களில், ஓட்டக்கூத்தரைப் பற்றிய பேச்சும் எழுந்தது. தமிழில் பெரும்பாலான புலவர் பெயர்கள் இயற்பெயர்களாய் இல்லாமல் காரணப்பெயர்களாகவே காட்சியளிக்கின்றன. ஒட்டக்கூத்தர் பெயரும் அப்படியிருக்க வாய்ப்புண்டு. அது 3 வகையால் ஏற்பட்டிருக்கலாம். ஒன்று, அவர் ஒட்டநாட்டின் கூத்தராய் இருந்திருக்கலாம். [ஒட்ட நாடு = ஒரிசா. இது கடற்கரையை ஓட்டிய ஒடுங்கிய நாடு. அதன் வடமேற்கில் காடுகளே மிகுத்து இருந்ததால், மக்கள்கூட்டம் ஒடுங்கிய பகுதியிலேயே வாழ்ந்தது. ஒட்டு என்று சிறு குன்றுகளையும் அழைப்பதுண்டு. சிறுகுன்றுகளால் ஆனநாடு, ஒட்ட நாடு என்று சொல்லப்பட்டிருக்கலாம். அதேபொழுது, சோழநாட்டுக்காரர் என்று பொதுவாக அறியப்படும் ஒட்டக் கூத்தர் ஒட்ட நாட்டாராய் இருக்க வாய்ப்புக் குறைவு.] இரண்டாவது பட்டுமை(possibility)யில், ஓட்டக் கூத்து, ஒட்ட நாட்டுக் கூத்தாக இருக்கலாம். ஒருவேளை இக்கால ஒட்டியக்கூத்து> ஒடியக்கூத்து>ஒடிசிக்கூத்து பேரரசுச் சோழர் காலத்தில் ஒட்டக் கூத்தாக அறியப் பட்டிருக்கலாம். ஒட்டக் கூத்து அறிந்தவர், அல்லது ஒட்டக் கூத்துக் கலையில் வல்லவரின் கொடிவழியில் வந்தவர் ஒட்டக் கூத்தர் என்று பொருள் கொள்ளலாம். மூன்றாம் வகையில் வேறுமாதிரிப் பொருள் கொள்ளலாம். ஒட்டு என்ற சொல்லிற்கு ஆணை, சூள், பந்தயம் என்ற பொருளுமுண்டு, ஒட்டேற்றுதல் என்பது சூளுரைத்தலைக் குறிக்கும். பலர்முன் ஒட்டேற்றி (சூளுரைத்துப்) பாடிவெல்லும் கூத்தராய் ஒட்டக்கூத்தர் இருந்திருக்கலாம். பலரோடும் புலமைப் பந்தயத்தில் இறங்கி அதில் தோற்றோர் காதுமடல்ளை ஒட்டக் கூத்தர் பறித்ததாகத் தொன்மக் கதைகள் உலவுகின்றன. 3 பட்டுமைகளுள் எது இங்கு சரியென என்னால் கூற முடியவில்லை. மேலும் பல தரவுகளைக் கொண்டு மற்ற ஆய்வாளர் ஆழ்ந்து நோக்கலாம்.]

இனி ஒட்டுதல் சொல்லுக்கு வருவோம். இச்சொல்லிற்கு ”ஒன்று சேரல், உடன் வரல்” என்ற பொருட்பாடுகள் உண்டெனினும், [அதேபோல் பந்தயப் பொருள் சொல்லப் பட்டுள்ளதெனினும்] அவற்றை ஒதுக்கி, முன்சொன்னது போல், ஒடுங்கற்பொருளை மட்டும் பார்ப்போம். ஏனெனில், ஓட்டியாணப் பொருள் புரிந்து கொள்ள ஒடுங்கற்பொருளே அடிப்படையாகும். மேற்சொன்ன ஒடுங்கும் பொருளை ஆழமாய் உணரும் வகையில் ஒட்டு என்ற சொல்லின் பொருளையும் மற்ற சொற்களையும் பார்க்கலாம்.

ஓட்ட = இறுக “ஓட்டக் கட்டு”
ஒட்டகம் = பாலைவனப் பயணத்தில் உதவும், நீண்டநாள் உண்ணாதிருக்கும்  விலங்கு; ஓட்டு = பட்டினி. ஒட்டகம் = பட்டினி கிடக்கவல்ல விலங்கு, அதாவது ஒடுங்கவல்ல விலங்கு.. ஒட்டுதல் = ஒடுங்குதல், பட்டினி கிடக்கையில் வயிறு ஒடுங்கிப் போகும். வயிற்றை இறுகக் கட்டுவதும் பட்டினியே. (ஒட்டகம் அவற்றோடு ஒருவழி நிலையும் - தொல்.பொரு.56. ஓங்குநிலை ஓட்டகம் துயில் மடிந்தன்ன - சிறுபாண் 154.)
இனி, அதுபோல் ஒருவிலங்கு நீள்கழுத்துப் பெற்றதனால், ஒப்புநோக்கி, நீண்ட கழுத்துப் பெற்ற நெருப்புக் கோழி ஒட்டகக் கோழி என வழிப்பொருளால் சொல்லப்பெறும். ஒட்டகப்பறவை, ஓட்டகச்சிவிங்கி என்ற சொல்லாட்சிகளும் இப்படி வழிப்பொருளில் அமைந்தவையே.
ஒட்டப் பிடித்தல் = இழுத்துப் பிடித்தல் (வின்சுலோ அகராதி)
ஓட்டப் போடுதல் = பட்டினிகிடக்கச் செய்தல் (வின்சுலோ அகராதி), மெலிய வைத்தல். ஓட்டிய வயிறு என்ற சொல்லாட்சியைக் கவனியுங்கள். வயிறும் இடுப்பும் ஒன்றோடு ஒன்றாகத்தான் அமைகின்றன.
ஒட்டற் காது = குறுகிய காது. (வின்சுலோ அகராதி)
ஒட்டறுதல் = வற்றுதல்
ஒட்டிப் போகுதல் = வற்றுதல் (கன்னம் ஒட்டிப் போயிருக்கிறது.)
ஒட்டு = சிறுமை (அற்பம்; சூடாமணி), ஓரம் (அந்தக் குழந்தை ஒட்டிலேயே இருக்கிறது.)
ஒட்டுக் காயம் = பட்டினி கிடக்கை (திருநெல்வேலி வழக்கு)
ஒட்டுக் குஞ்சு = சிறு குஞ்சு (வின்சுலோ அகராதி)
ஒட்டுக் குடித்தனம் = ஒட்டிய குடித்தனம், சிறு குடித்தனம்
ஒட்டுக் குடுமி = தலை உச்சியில் இருக்கும் சிறு குடுமி
ஒட்டுக் கை = துண்டுக் கை மரம்.
ஒட்டுத் திண்ணை = பெருந்திண்ணைக்குச் சார்பாகக் கீழ்ப்புறம் கட்டப்படும் சிறு திண்ணை; வாசலுக்கும் பக்கத்துச் சுவருக்கும் இடையில் உள்ள மிகச் சிறிய தெருத் திண்ணை. (சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இது இல்லாது ஒரு பெருந்தன வீடு இருக்காது.)
ஒடியல்>ஒடிசல் = ஒல்லி
ஓட்டியன்>ஒடியன் = ஆமை
ஒடியிடை = ஒடுங்கிய இடுப்பு
ஒடிவான் = அற்பன்
ஒடிவு = குறைவு “ஒடிவில் பொற்கிழி நல்கி” (திருவிளை. இரசவா. 10)
ஒடுக்கு எடுத்தல் = நெளிவு எடுத்தல் (ஒடுக்கு = நெளிவு)
ஒட்டியம் = ஓட்டியாணம்
ஒட்டில் = சிறுமை.

வின்சுலோ அகராதியைப் பார்ப்பவர் ஒருங்கு சேரப் பார்க்கவேண்டும். ஒரு சொல்லை மட்டும் பார்க்கக்கூடாது. இதேபோலக் கலைக்களஞ்சியம், சென்னைப் பல்கலைக் கழக அகராதி போன்று பார்ப்பவரும் ”ஆழ்ந்து பாருங்கள்” என்று நான் சொல்வேன்.

இனி அகராதிகளுக்கு முன்னிருந்த நிகண்டுகளுக்குப் போகலாம். திவாகரம், பிங்கலாம் எல்லாம் 8,9 ஆம் நூற்றாண்டு நிகண்டுகள். அண்மைக் கால (14 ஆம் நூற்றாண்டு) நிகண்டாய், சூடாமணி நிகண்டைச் சொல்ல முடியும். அதிலும் கூட எல்லா இடுப்புச் சொற்களும் பதிவு செய்யப்படவில்லை. இடை (waist) பற்றிய சொற்களாய், சூடாமணி நிகண்டு "நடு, நுசுப்பு, மருங்கு, மத்திமம், உக்கம்" என்ற 5 சொற்களையும், மருங்கின் பக்கத்துப் பெயராய் ஒக்கலையையும் (hip) காட்டும். [இதுபோக அரை, குறுக்கென்ற சொற்களை இடுப்பிற்கு மாற்றாய்ப் புலவோர் சொல்வார். சில ஆண்டுகளுக்கு முன் வைரமுத்தும் ஒரு திரையிசைப் பாடலில் “குறுக்குச் சிறுத்தவளே” என்றார்.]

இவற்றில் நடு என்பது உடம்பின் நடுப்பாகத்தைக் குறிக்கும். நடுவம்> நடுமம் என்பது நடுவிலிருந்து எழுந்த பெயர்ச்சொல்லாகும். வடக்கே போகக் போக, டகரம் அழுத்தி ஒலிக்கப்பட்டு, நகரியின் இரண்டாம் டகரமாகிப் ( நடுமம்>நட்டுமம்; அழுத்தி ஒலிக்கும்போது டகரம் இரட்டிப்பது தமிழிலும் உள்ள பழக்கமே; நட்ட நடு என்று சொல்லுகிறோமே, அதை இங்கு எண்ணிப் பாருங்கள்.) பின் வடபுலப் பேச்சுத்திரிவில் நட்டுமம் “நத்துமம்” ஆக ஒலிக்கப் படும்.  நகர, மகரப் போலிகள் தமிழில் மிகுதியும் உண்டு. நம் பேச்சில் நுடம் முடம் ஆகும், நுதல் முதல் ஆகும், நுப்பது/முப்பது, நுனி/முனி, நுணுத்தல்/முணுத்தல் போன்ற திரிவுகளும் தமிழில் பலவாறாக ஏற்படும். இதில் என்ன வியப்பென்றால், நகர/மகர தமிழியச் சொற்களில், இந்தையிரோப்பியத்தில் பொதுவாக இணை காட்டும் சொற்கள் மகர ஒலிப்பிலேயே அமையும். இவ்வகையில் நத்துமம்>மத்திமம் ஆகும். (குற்றியலுகரம் குற்றியல் இகரமாகப் பலுக்கப் படுவதும் இயல்பான திரிவே.) இதே போல, நட்டம்>  நட்யம்> நத்யம்> மத்யம்> மத்தியம்> median, நுணுத்து>minute போன்ற மாற்றங்களையும் பார்க்கமுடியும். பின்னால் நடு என்னும் தமிழ்ச் சொல்லின் வளர்ச்சியான மத்திமம் என்ற வடசொல் மீண்டும் இடைக்காலத் தமிழில் கடன்வாங்கப் பட்டு உடம்பின் நடுப்பாகத்தைக் குறித்திருக்கிறது. நடுமம் என்று சொல்ல நாம்தான் தடுமாறுகிறோம்.

அடுத்து இடை எனும் பாகம், நுணுகிய (=சிறுத்த) பகுதியாதலால், நுணுகலின் வேரான நுல்லிலிருந்து நுல்>நுரு>நுருங்கு>நருங்கு என்ற வளர்ச்சியும், நுள்>நுறு>நுறுங்கு>நறுங்கு என்ற வளர்ச்சியும் ஏற்பட்டு உடம்பின் நுணுகிய/ஒல்லிய பகுதியைக் குறிக்கும். ஒல்லியாய் இருக்கும் பெண்ணைச் சிவகங்கைப் பக்கம் “என்னது இந்தப் பொண்ணு கொஞ்சம் நருங்குனாப்/நறுங்குனாப் போல ஒடிசலா இருக்கு, பார்த்தா வாட்ட சாட்டமா இருக்க வேணாமா?” என்று சொல்வார். நருங்கு/நறுங்கு என்பது ஒடுங்கிய நிலை குறிக்கும் சொல். வழக்கம்போல மகர நகரப் போலியில் நருங்கு மருங்கு ஆகும். மருங்கு மருங்குல் என்றும் புடைத்து நிற்கும்.

இனி நுள்>நுசு>நுசுப்பு என்பதும் நுணுகிய மகளிர் இடையையே குறிக்கும். [பொதுவாகப் பேச்சுவழக்கில், ளகரவொலி யகரமாய்த் திரிந்து பின் சகரமாய் மாறும். வாழைப்பழம் வாயப்பயமென வட ஆர்க்காட்டாரால் ஒலிக்கப்படுவதை நோக்குக.]

இதேபோல, உக்கம், ஒக்கல், ஒக்கலை, ஆகியவற்றைப் பற்றி இத்தொடரின் முதற் பகுதியிலும், இடை, இடுப்பு ஆகியவற்றை இரண்டாம் பகுதியிலும் பார்த்தோம்.

அதேபொழுது, முன்சொன்னது போல், ஒடு, இடு என்பவற்றிற்கு அடிச்சொல் உடு என்பதே. இடுப்பு எனும் பொருள்கொண்ட இச்சொல் உடு>உடை, ஒடு>ஒடு என்று தமிழிலும், உடு>ஒடி எனத் தெலுங்கிலும், கன்னடத்திலும் திரியும். ஒடி = இடுப்பு. ஒடி என்பது வடபுல அழுத்தத்தில் ஒட்டி என்று பலுக்கப் படும். ஒட்டியாணத்தின் பழந்தமிழ்ப்பெயர் உடு யாண் / உடு ஞாண் / உடு நாண். உடு நாண்>ஒட்டு நாண் என்றும் திரியும். இதை உடை நாண் என்றும் சொல்லுவார் உண்டு. ”உடுத்த பஞ்சிமேற் கிடந்து உடைஞாண் பதைத்து இலங்க” - சீவக 2240. சீவக சிந்தாமணி இல்லையெனில் இச்சொல்லாட்சியை அறிந்திருப்போமோ? இடு>இடை என்பதுபோல உடு>உடை என்பதும் இடுப்பையே குறித்தது. மலையாளத்தில் உடஞாண், ஒட்டியாண், ஒட்டிஞாண் என்றும், கன்னடத்தில் உடேநேண், உடெ நூல், ஒட்ட்யாண, ஒட்யாணை என்றும், தெலுங்கில் ஒட்டாணமு, ஒட்யாணமு, ஒட்யாண்டு என்றும், துளுவில் ஒட்யாண என்றும் சொல்லப் படுகிறது. பலரும் புரட்டிப் பார்க்கும் பர்ரோவின் Dravidian Etymological Dictionary இதைத் திராவிடச்சொல் என்றே பதிந்திருக்கிறது.

அதேபொழுது வடமொழிச்சொல் என்று சொல்வது, அறியாமல் சொல்வது என்று மோனியர் வில்லியம்சின் Sanskrit English Dictionary பார்த்தால் புலப்படும். ஒட்டியாண(ம்) என்ற சொல்லை நான் பார்த்தவரை அங்குகாண முடிய வில்லை. நான் தவறாய்ச்சொன்னால் என்னைத் தெளிவுபடுத்துங்கள். [வடமொழியில் ஒகரம் கிடையாது, ஓகாரம் மட்டுமேயுண்டு. ஓகார வரிசையில் இச்சொல்லைக் காணோம். இச்சொல் உகரவரிசையிலும் பதிவு செய்யப் படவில்லை. அந்நிலையில் லலிதா சஹஸ்ரமநாமத்தில் எடுத்தாளப் படுகிறதெனில் அதன் கடன் வாங்கியதென்றே பொருள். வடசொல் என்பவருக்கு நான் மீள உரைப்பது: “கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர உசாவுவதே மெய்”.

இனி, உடைஞாணைப் போலவே, உடை தாரம் என்ற சொல்லும் தமிழிலுண்டு. அது அரையில் அணியும் வகையைக் குறிக்கும். இதே போல், உடை மணி = குழந்தைகளின் அரையணி, மேகலை. நம் எல்லோருக்கும் தெரிந்த இற்றைத் தமிழில் உள்ள உடைவாள் என்றசொல் உடையில் (இடுப்பில்) செருகும் வாளைக் குறிப்பதே. உடைவாளுக்கும் உடை ஞாணுக்கும் உள்ள நெருக்கம் கூடவா நமக்குத் தெரியாமற் போயிற்று? அப்புறம் எப்படி ஒட்டியாணை (உடையாண்/உடை ஞாணின் திரிவு தானே?) தமிழில்லை என்கிறோம்? [ஒட்டுஞாண் என்பது மலையாளத்தில் உள்ள பலுக்கல்.]

ஒட்டியாணம் என்பது முனிவர்கள் அணியும் ஓகப் பட்டையையும், மாதர் இடையில் அணியும் அணிகளில் ஒன்றையும் குறிக்கும். கிடைத்தவற்றுள் பழமையான குறிப்பு திருமந்திரத்திலேயே இருக்கிறது. திருமந்திரம் 811 ஆம் பாடல் கேசரியோகம், சகஸ்ராரத் தியானம் பகுதியில்

மண்டலத்துள்ளே மன ஒட்டியாணத்தைக்
கண்டு, அகத்து அங்கே கருதியே கீழ்க் கட்டி,
பண்டு அகத்துள்ளே பகலே ஒளி ஆகக்
குண்டலக் காதனும் கூத்து ஒழிந்தானே!

என்றுவரும். மன ஒட்டியாணக் கருத்திற்குள் நான்போக முற்படவில்லை. ஆனால் ஒட்டியாணச் சொல்லாட்சி தெளிவாக இடுப்புப் பட்டையையே குறிக்கிறது. இனி யாணத்தை அடுத்த பகுதியில் பார்க்கலாம். அது ஒரு தெரிதல்.

அன்புடன்,
இராம.கி.

No comments: