Monday, May 29, 2006

மின்னியல் உலகில் தமிழ் - 2

மொழியும் எழுத்தும்:

எனக்குள் இருக்கும் விழும்பம் --> வாயொலிச் சேர்க்கை --> கேட்பொலிச் சேர்க்கை --> உங்களுக்குள் வந்து சேரும் விழும்பம்

மேலே இருக்கும் நான்கு அலகுகளையும் ஒக்குவல அலகுகள் (ஒன்றோடு ஒன்று ஒக்கும் வலு உள்ள அலகுகள் - equivalent units) என்று சொல்லுகிறோம். இந்த அலகுகளில் எது பிறழ்ந்தாலும் நான் சொல்லுவது உங்களுக்குப் புரியாது. இந்த ஒக்குவலம் (equivalency) என்பது பேசுபவர் - கேட்பவர் இடையே முற்று முழுதுமாய் இருக்கத் தேவையில்லை; கிட்டத் தட்ட இருந்தால் கூடப் போதும். ஆனால் இந்த ஒக்குவலத்தில் ஏற்படும் பிறழ்ச்சி, கூடிவரக் கூடிவர, நான் சொல்லுவது உங்களுக்குப் புரியாமல் போகும்.

இதுவரை கருத்துப் பரிமாற்றத்தில் நானும் நீங்களும் அருகில் இருந்தால் தான், மேலே சொன்ன ஒக்குவல உறவுகள் (equivalent relations) ஏற்படும். ஒருவேளை, நானும் நீங்களும் கேட்கும் தொலைவில் இல்லாமலோ, அல்லது ஒரே பொழுதில் அமையாமலோ இருந்து, அந்த நிலையிலும் உங்களுக்கு ஒரு பொருளை அல்லது கருத்தைப் புரிய வைக்க வேண்டும் என்று நான் எண்ணினால், அதற்கு ஏந்தாக, இன்னொரு ஒக்குவல அலகை உள்ளே கொண்டுவந்து, இந்தச் சமன்பாட்டை நீட்ட முற்படுவேன். அப்படி நுழைக்கப் படும் புதிய ஒக்குவல அலகை, ஓர் இடைமுகம் (interface) என்று கூடச் சொல்லலாம். இந்த இடைமுகத்தால், மேலே காட்டிய சமன்பாடு முற்றிலும் புதிய வகையில் மாறுகிறது.

எனக்குள் இருக்கும் விழும்பம் --> வாயொலிச்சேர்க்கை --> எழுத்து --> கேட்பொலிச்சேர்க்கை --> உங்களுக்குள் வந்து சேரும் விழும்பம்

இந்தச் சமன்பாட்டில் உள்ள எழுத்து என்னும் இடைமுகம், சீனம் போலப் பட எழுத்தாய் (pictograph) இருக்கலாம், தமிழைப் போல அசை எழுத்தாய் (syllabic writing) இருக்கலாம், அல்லது ஆங்கிலம் போல உரோமன் அகரவரிசை எழுத்தாய் (alphabet) நிற்கலாம். எல்லாமே உள்ளுருமம் (information) புலப்படுவதற்கு உதவி செய்யும் இடைமுகங்கள் தான். [உள்ளே உருமித்தலைத் தான் உள்ளுருமம் என்று சொல்லுகிறோம்; அதாவது நம் உள்ளுக்குள்ளே உருவைக் (form) கொண்டு வர வேண்டும்; விளையாட்டாய்ச் சொன்னால் படங் காட்ட வேண்டும். உள்ளுருமம் என்ற சொல் இந்தச் செயலை நன்கு விளக்கும். இனியும் தகவல் என்ற உருதுச் சொல்லால் information என்பதைச் சொல்ல வேண்டுமா?]

இதுவரை மேலே எடுத்துக் காட்டிய இரண்டு சமன்பாடுகளைக் கூர்ந்து கவனித்தால் முதற் சமன்பாட்டில் மொழி மட்டுமே இருக்கிறது, இரண்டாவதில் மொழியும் எழுத்தும் சேர்ந்து நிற்கின்றன, தவிர எழுத்து என்பது மொழிக்கு ஓர் இடைமுகமாய், துணையாய் வந்து நிற்கிறது, என்பதும் புரியும்.

படிப்புச் சமன்பாடு:

இப்படி உள்ளுருமச் சமன்பாடுகள் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது, இன்னொரு முகமையான கருத்தை இங்கு சொல்ல வேண்டும். எழுத்தும் மொழிகளும் ஒன்றோடு ஒன்றெனத் தொடர்பு கொண்டவை அல்ல. ஒன்றிற்குப் பல, பலவற்றிற்கு ஒன்று, என்ற உறவுகளை எளிதிற் காணலாம். குறிப்பிட்டுச் சொன்னால், ஒன்றிற்கு மேற் பட்ட மொழிகளை ஒரே எழுத்தால் இடைமுகத்திக் காட்டலாம். காட்டாக உரோமன் எழுத்து இன்றைக்கு ஆங்கிலத்திற்கும் இடைமுகமாய் இருக்கிறது; மலாய் மொழிக்கும் இடைமுகம் ஆகிறது. அதே போல ஒரே மொழிக்கு இரண்டுவகை எழுத்துக்களும் இடைமுகமாய் இருக்கலாம். காட்டாக மலாய் மொழியை அரபி எழுத்திலும் எழுதலாம்; உரோமன் எழுத்திலும் எழுதலாம்.

இனிப் பழக்கப் பட, பழக்கப் பட, வாயொலியோ, கேட்பொலியோ இல்லாமல், எழுத்தை மட்டுமே வைத்துக் கொண்டு, விழும்பம் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியாதா என்ற கேள்வி எழுகிறது. இந்தக் கேள்விக்கு வரும் விடையும் நம்மை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லுகிறது. மேலே உள்ள சமன்பாட்டை இன்னொரு விதமாய்ச் சுருக்கிப் பார்க்கலாம்.

எனக்குள் இருக்கும் விழும்பம் --> எழுத்து --> உங்களுக்குள் வந்து சேரும் விழும்பம்

இந்த உள்ளுருமச் சமன்பாட்டிற்குத் தான் இந்தக் காலத்தில் படிப்பு என்று பெயர் (இங்கே நான் என்பது ஆசிரியர். நீங்கள் என்பது மாணவர்). பலரும் இந்தப் படிப்புச் சமன்பாட்டைப் பார்த்தவுடன் ஒலி என்று இது நாள் வரை இருந்ததையோ, அல்லது இருப்பதையோ, மறந்து விடுகிறார்கள். ஏதோ, மொழி என்பது எழுத்துக்களால் ஆனது என்றும், ஒலி என்பது இரண்டாந்தரம் என்றும், இவர்கள் எண்ணத் தொடங்கி விடுகிறார்கள். இது முற்றிலும் தவறான புரிதல். தமிழுக்கு இலக்கணம் வரைந்த ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியர் கூட எழுத்து என்ற சொல்லுக்கு ஒலியும் உருவமும் கொடுத்த பிறகு தான் மற்ற இலக்கணங்களை வரையறைக்கிறார். ஆழ்ந்து ஓர்ந்து பார்த்தால், எங்குமே ஒலியில்லாமல் மொழியில்லை. படிப்புச் சமன்பாட்டில் பெரும்பாலும் ஒலி என்பது வெளியே தெரியாமல் மறைந்து தொக்கி நிற்கிறது. அவ்வளவு தான். [அந்தக் காலத் திண்ணைப் பள்ளிக்கூடங்களில் எதையுமே சத்தமாக ஒலிக்க வைத்துக் கொஞ்சம் கொஞ்சமாய் ஒலிப் பழக்கத்தைக் குறைத்து வந்து எழுத்துத் தோற்றத்தைக் கொண்டு வந்து மாணவனை மனத்திற்குள் படிக்க வைப்பார்கள். (ஓஏய், மனசுக்குள்ளே படிச்சுக்கடா? அப்பத் தான் பதியும்ஔ என்ற பேச்சு அப்படித்தான் எழுந்தது.)] எழுத்தை மட்டுமே வைத்துக் கொண்டு கருத்துப் பரிமாறுவதாய் நாம் எண்ணிக் கொள்வது உண்மையில் வெறும் தோற்றம்.

(எங்கள் ஊரில் சிவன்கோயில் குடமுழுக்கு; நான்கு நாட்கள் ஊருக்குப் போவதால், உங்கள் பின்னூட்டுக்களுக்கு நான் மறுமொழி சொல்ல முடியாது போய்விடும். காரிக் கிழமை வந்துவிடுவேன். அதுவரை பொறுத்திருங்கள்.)

அன்புடன்,
இராம.கி.

5 comments:

தேசாந்திரி said...

தகவல் என்பது உருதுவா? நான் இத்தனை நாள் தமிழ் என்றே நினைத்திருந்தேன். நன்றி.

Anonymous said...

ஐய்யா உள்ளுருமம் ஒன்று சொல்லும் போது நீட்டம் கூடிவிட்டது. தகவல் போல் சிறிய சொல் இல்லையா??

ஞானவெட்டியான் said...

தகவல் என்பதற்குப் பகரியாக "தாக்கல்" எனக் கூறலாமா?

இராம.கி said...

அன்பிற்குரிய தேசாந்திரி மற்றும் ஞானவெட்டியான்,

தகவலும்,அதன் திரிவான தாக்கலும் (இது தென்பாண்டி மாவட்டங்களில் பெரிதும் புழங்குவது) உருதில் இருந்து தொடங்கியவை தான். நான் உள்ளுருமம் என்று சொன்னது அதன் வினைச்சொல் புழக்கத்தைத் தமிழில் கொண்டுவர விரும்பியதாலே. உள் என்னும் முன்னொட்டைக் கொஞ்சம் கொஞ்சமாய் விடுத்து உருமித்தல்/உருப்பித்தல் என்ற சொல்லைப் புழங்கலாம் என்பது என் பரிந்துரை.

have you informed him?

இப்பொழுது இதைப் பெரும்பாலும் "அவனிடம் நீ சொன்னாயா?" என்றே மொழிபெயர்க்கிறோம். பெரும்பாலான நேரங்களில் அது சரியாக இருக்கும். சில போது telling என்பதற்கும் informing என்பதற்கும் வேறுபாடு காட்டுவது நல்லது. telling என்பது வெறும் செய்தி சொல்லுவது. informing என்பது குறிப்பிட்ட செய்தியை உருப்படுத்தி (அல்லது உருப்பித்து) இதை நினைவில் வைத்துக் கொள், பின்னால் நினைவு படுத்திக் கொள்ள ஏதுவாய் இருக்கும் என்ற வகையில் சொல்லுவது. ஏதொன்றும் பின்னால் நினைவுக்குக் கொண்டுவர வேண்டிய செய்தியானால் அது information. Anything which requires recalling at the opportune time is information. This is more so, when there is a need for repeated recalling.

உருப்படியாகச் சொல்லப்பா என்னும் போது நம்மையறியாமல் information - யைத் தான் குறிக்கிறோம்.

have you informed him?
அவனிடம் நீ உருப்பித்தாயா? (அல்லது உருமித்தாயா?)

இந்தப் புழக்கம் கொஞ்சநாள் சரவலாக இருக்கும், சிறிது சிறிதாகச் சரியாகிவிடும்.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய பெயரில்லாதவருக்கு,

உள்ளுருமம் என்ற சொல் பார்க்கப் பெரிதாக இருக்கலாம். ஆனால் ஆங்கிலத்திலும் அது மூன்றசை தான், தமிழிலும் மூன்றசை தான். மேலும் வேறு ஏதாவது தோன்றினால் சொல்லுகிறேன்.

அன்புடன்,
இராம.கி.