Saturday, May 20, 2006

கருவம்

அன்பிற்குரிய குமரன்,

உருப்படியான செயலைச் செய்கிறீர்கள். வேற்றுமொழிச் சொற்களுக்கு ஈடாகத் தமிழ்ச் சொற்களைப் பரிந்துரைப்பது தேவையானது. கூடிய மட்டும் தமிழ்ச்சொல்லைப் பழகுவது நல்லது. தமிழ்ச் சொற்களைப் பழகச் சொல்லி உங்களைப் போன்றவர்கள் பரிந்துரைத்தால், அதற்குப் பிறமொழிச் சொற்களை வெறுத்து ஒதுக்குவது என்று பொருளில்லை. அப்படிச் சிலர் நினைத்தால் நினைத்துவிட்டுப் போகிறார்கள். கருமமே கண்ணாக இருங்கள்.

பொதுவாக மாந்தருக்கு மறதி என்பது ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கும். நம்முடைய சொற் குவையை நாம் புழங்காது வைத்திருந்தால், நாளாவட்டத்தில் நாம் ஒருசிலவற்றை மறந்துதான் போவோம். (இதனால் தான் சித்திரமும் கைப்பழக்கம்; செந்தமிழும் நாப்பழக்கம் என்று சொன்னார்கள்.) நமக்குத் தெரிந்த தமிழ்ச்சொற்கள் 1000 என்று வைத்துக் கொள்ளுங்கள். அதில் 2 விழுக்காடு அளவை நாம் மறந்தாலும், ஏழு தலைமுறைக்கு (175 ஆண்டுகளில்) அதே மேனியில் தொடர்ந்தால், அப்புறம் இன்று இருப்பதில் கிட்டத்தட்ட 15% தமிழ்ச் சொற்கள் பயன்படாது ஒழிந்தே போகும். அப்புறம் அந்தச் சொற்களுக்கு ஈடாய் இன்னொரு மொழிச் சொற்களை அன்றையத் தமிழர் கொஞ்சங் கொஞ்சமாய்ப் பயன்படுத்தத் தொடங்குவார்கள்; முடிவில் மொழி என்பது மாறிப் போகும். இப்படித்தான் தமிழியக் கிளைமொழிகள் எல்லாம் இந்த ஆயிரம், இரண்டாயிரம் ஆண்டுகளில் கொடுந்தமிழில் இருந்து மற்ற மொழிகளாய்க் கிளைத்தன. முடிவில், மகதம் வரை விரிந்திருந்த தென்மொழி, இன்று மாலவன் குன்றத்திற்கும் கீழே குறுகிப் போனது.

நம் மொழியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால், நம் முன்னோர் நம்மிடம் ஒப்படைத்ததை, 2000-3000 ஆண்டுகள் காப்பாற்றி வந்ததை, நாம் தொலைப்பது அவ்வளவு சரியாகத் தென்படவில்லை. நம் பெற்றோரின் கண்ணுக்கெதிரே தோட்டத் தொழிலாளராய்ப் போன தமிழர்கள் (அது போலத் தெலுங்கர்கள்) போன இடத்தில், ஓரளவு மக்கள் தொகை இருந்தும், தங்களின் அறியாமைப் போக்கால், தங்கள் மொழியைக் காப்பாற்றாது போனார்கள். விளைவு? தமிழும், தெலுங்கும் அந்த இடங்களில் தொலைந்து போயின. முத்தம்மா, முட்டம்மா ஆகி, தண்டபாணி தெண்டாபணி ஆகி, காளிச்சரண் கல்லிச்சரன் ஆகி, சரவணன் சர்வன் ஆகி மொத்தத்தில் தமிழ் அடையாளமே தொலைந்தது. தமிழனுக்குத் தமிழே முகவரி.

உங்களுக்குத் தெரியுமா? ஓலாவ் மொழியைத் தொலைத்த அமெரிக்கக் கருப்பர்கள் (ஓலாவ் மொழி மேற்கு ஆப்பிரிக்க மொழி. ஓலாவ் பேசும் பலர் கருப்பு அடிமையாக அமெரிக்க ஒன்றிய நாடுகளுக்கு அழைத்துச் செல்லப் பட்டார்கள்.) பெருமிதத்தையும் சேர்த்துத்தான் 400 ஆண்டுகளில் தொலைத்தார்கள். இன்றைக்கும் அவர்கள் முகத்தில் பெருமிதத்தைத் தேட வேண்டியிருக்கிறது. மாறாக, மொழியைக் காப்பாற்றியதால், சுரினாம், ஜமைக்கா, மொரிசியசு, பிஜி போன்ற இடங்களில் பத்தொன்பதாம் நூற்றாண்டு இந்தி இன்றைக்கும் நிலைத்து நிற்கிறது; இந்த இந்திக்காரர்கள் அரசியல், பொருளியல், கல்வி இன்ன பிற துறைகளில் அந்த இடங்களில் முன்னணியில் தான் இருக்கிறார்கள். அவர்கள் முகத்தில் பெருமிதம் (நீங்கள் சொல்லியிருந்த செருக்கு, கருவம்) இன்றும் இருப்பதைக் கூர்ந்து பார்த்தால் புரிந்து கொள்ளமுடியும்.

தமிழ் நடை, தமிழ்நாட்டிலேயே ஒருமுறை சீரழிந்து மணிப்பவளம் பெருகி, இப்பொழுது மீண்டும் இருபதாம் நூற்றாண்டில் உயிர்பெற்று வந்திருக்கிறோம். மீண்டும் ஒருமுறை அது அழிய வேண்டாம். நம் வீட்டை நாம் காப்பாற்றாமல், இன்னொருவரா காப்பாற்றுவார்? வரலாறு அறியாதவர்கள் பேச்சைப் பொருட்படுத்த வேண்டாம்.

இனி கருவம் என்ற உங்கள் சொல்லிற்கு வருகிறேன்.

கல் என்னும் வேரில் இருந்து எழுந்த இந்தச் சொல்லுக்கு எத்தனையோ பொருள்களில் (கருமை, கூட்டம், செறிவு, திண்மை, கனம், வெப்பம், கூர்மை, அசைவு எனப்) பலப் பலவாய்ச் சொற்கள் கிளைத்துள்ளன. அந்த விதத்தில், உயரம், பெருமை, பழைமை, செருக்கு, அகங்காரம் போன்ற பொருள்களும் கொண்ட கருவம் என்ற சொல்லும் தமிழ்தான். அது தமிழ் இலக்கியங்களில் அத்துணை புழக்கம் இல்லாத சொல். இருந்தாலும் அது தமிழில் தோன்றியிருப்பதற்கே வாய்ப்புக்கள் மிகுதி. தவிர, வடமொழி அகரமுதலியிலும் அவ்வளவு அகண்டு இல்லாமல் வெறும் ஒற்றைப் பொருளிலேயே அது பழகியுள்ளது. வடமொழியில் பாணினி, மோனியர் வில்லியம்சு ஆகியோர் சொல்லுவதற்கு இறுதியில் வருகிறேன்.

முதலில் தமிழ்ப் புழக்கத்தைப் பார்ப்போம்.

"அவர் சுத்தக் கருநாடகம் அப்பா! இந்தக் காலப் பாட்டெல்லாம் புடிக்காது" என்று சொல்லுகிறோமே? அது எதைக் குறிக்கிறது? சொல்லப் படுபவர் பழைமைப் போக்கு உள்ளவர் என்று குறிக்கிறது. "இந்தச் சரக்கு வெறுஞ்சரக்கு இல்லைங்க, கருஞ்சரக்கு" என்னும் போது கரு என்பது கருமை என்ற பொருளைக் குறிக்கவில்லை, "மேன்மையான சரக்கு" என்றே குறிக்கிறது.

காஞ்சிபுரத்தில் காமாட்சி அம்மன் கோயிலுக்கு அருகில் உள்ள தெப்பக் குளத்தின் கரையில் மூன்று நிலையுள்ள மாடக் கோயில் ஒன்று உண்டு; மூன்று மாடங்களில் "நின்றான், இருந்தான், கிடந்தான்" என்னும் மூன்று தோற்றத்தில் திருமால் படிமங்கள் இருக்கின்றன. [அந்தக் காலத்தில்னைந்த மாடங்களி மூன்று புத்த உருவங்கள் இருந்தன. காமாட்சி அம்மன் கோயிலே ஒரு புத்த யக்கினி கோயில் தான். இன்று இவையெல்லாம் மாறிக் கிடக்கின்றன. தமிழர் வரலாறு தோண்டத் தோண்ட வித விதமாக உருக் கொள்ளும். மயிலை சீனி வேங்கடசாமியாரின் "தமிழுக்கு வழங்கிய கொடை" என்ற பொத்தகத்தின் மூன்றாவது பகுதியை (வெளியிடுவோர்: எம்.வெற்றியரசி, மனை எண்: 9, கதவு எண் - 26, ஜோசப் காலனி, ஆதம்பாக்கம், சென்னை 600 088, தொலைபேசி: 22455954) பக்கம் 96-100 வரை படியுங்கள், விளங்கும்.] திருவிழாக் காலங்களில் குளக்கரை மாடக் கோயிலின் ஆக மேல்தளத்தில் இருந்து தாவிக் குதிப்பது ஒரு காட்சியாய் நடை பெற்றது. இதற்குக் கருமாடிப் பாய்ச்சல் என்று பெயர். மக்கள் வழக்கில் கருமாடிப் பாய்ச்சல் கருமாறிப் பாய்ச்சல் என்று சொல்லப் படும். காஞ்சிபுரத்தின் சிறப்புக்களில் இதுவும் ஒன்று. காளமேகப் புலவர் தனிப்பாடல் ஒன்று இதைக் குறிக்கும்.

"அப்பா குமரகோட்டக் கீரை செவிலிமேட்
டுப் பாகற்காய், பருத்திக் குளநீர் - செப்புவா
சற் காற்று, கம்பத் தடியில் தவம்,கருமா
றிப் பாய்ச்சல் யார்க்கும் இனிது."

கருமாடிப் பாய்ச்சலைக் கருமாறிப் பாய்ச்சல் என்று நாலாயிரத் திவ்வியப் பிரபந்த வியாக்கியானமும் கூறுவதாய் மயிலையார் கூறுவார். கருமாடி பற்றி நான் அறிந்தது மயிலையார் மூலமே.

கருமாடி என்றால் உயந்த மாடி (topmost floor); மாடியிலே உயர்ந்தது கருமாடி; கருமாடக் கோயில் என்றால் உயந்த மாடங்கள் கொண்ட மாளிகை என்று பொருள் உண்டு. (மாடம் உள்ளது தான் மாளிகை; மாள் என்பது சொல்லடி.) கருமாளிகை = உயர்ந்த கட்டடம். கருமை என்ற சொல்லுக்கே பெருமை என்ற பொருளை (excellence, greatness) திவாகர நிகண்டு (நூற்பா 1363) சொல்லும். கருடன் என்னும் பெயர் பெரிய பறவை என்ற பொருளில் கழுகுக்கு உள்ள பெயர். கருந் திடர் என்றால் பெரிய மேடு என்ற பொருள் உண்டு. கரு மாயம் என்றால் அதிக விலை என்று பொருள்.

இன்னும் இந்தக் கருத்தை ஏற்க மறுத்தால், கருவிற்கு முந்திய சொல்வடிவிற்குப் போகலாம். குல்>குரு>கரு = உயரம். குரு என்பவர் நம்மிலும் அறிவில், பட்டறிவில், இன்னும் பலவற்றில் பெரியவர். நம் ஆசான். குருவம் என்பது ஆசானின் பண்பு, நிலை. குருவர்>குரவர் = ஆசான் நிலையில் உள்ள தலைவர்; தேவார மூவரும், மாணிக்க வாசகரும் சமயக் குரவர்கள். குரவரின் பெண்பாலாகிய குரத்தியர் என்பது பெண் சமணத் துறவிகளைக் குறிக்கும் சொல். குரவம் வடமொழியில் ஒலிப்பு மாறிக் கௌரவம் (= honour) என்று நிற்கும். குருசில்>குரிசில் என்று திரிந்து தலைவனைக் குறிக்க கம்பனில் பயிலும்.

கருவம் என்ற சொல்லிற்குச் செருக்கு, ஆணவம் (= haughtiness, arrogance, pride) என்ற பொருள்கள் உண்டு. அது கன்னடத்தில் க(g)ர்வ என்றும், தெலுங்கில் க(g)ர்வமு என்றும் சொல்லப் படும்.

கரு வலி = மிகுந்த வலி என்ற பொருளில் "கருவலி ......காளையை" என்று சீவக சிந்தாமணி 2269 ல் பயிலும். பருமைப் பொருளில் குரு என்ற சொல் "குரூஉக் களிற்றுக் குறும்புடைத்தலின்" என்று புறம் 97ல் பயிலும். கனம் என்ற பொருளில், "பசுமட் குரூஉத் திரள்" என்று புறம்.32 ல் பயிலும். (ஆங்கிலத்தில் gravity என்ற சொல்லும் இந்தக் குருவித்த நிலையைக் - கனத்த நிலையைக் - குறிக்கும் சொல் தான். புறம் 32 இல்லாவிட்டால் இப்படி ஒரு பொருள் இருக்கிறது என்று கூட நாம் அறியாமற் போயிருப்போம். கூட்டப் பொருளில் குரல் (= கொத்து, கற்றை குரல் கூந்தல் கலித் தொகை. 72:20) என்பதும் குரவை என்பதும் (= chorus; குன்றக் குரவை -சிலப்பதிகாரம்) பயிலும்.

தலைக்கனம் என்று சொல்லுவது கருவம் தானே? கருவம் பிடித்தவர் என்பதும் தலைக்கனம் பிடித்தவர் என்பதும் ஒரே ஆட்சிப் பொருள் தான். கரு என்ற சொல்லடி கூட்டம்>செறிவு>திண்மை>கனம் என்ற பொருள் வளர்ச்சியில் பெருமிதம், ஆணவம், செருக்கு என்ற பொருள் கொள்ளும். ஆண் என்பது ஆளுகின்ற தன்மை; ஆணவம் என்ற சொல் எழுந்தது அப்படித்தான். செருக்கு என்பதும் தலை என்பதை ஒட்டியது தான் (சென்னி = தலை; செல் என்பது வேர்.). பெருமிதம் = பெருமித்து இருத்தல். பெருமித்தல் என்பது முன்னிலையில் இருப்பது. பெருமித்து இருந்தவர்கள் பெருமானர் = பிராமணர். பெருமானர் தமிழ்ச் சொல்லே. பெருவுடையார் = ப்ரகதீசர்.

இவ்வளவு ஒப்புமைகளையும், பொருள் வளர்ச்சியும் மோனியர் வில்லியம்சோ, பாணினியின் அஷ்டாத்யாயியோ காட்டாது. தமிழ் இலக்கிய, இலக்கண, நடைமுறை வழக்குகள் அறியாமல் கருவத்தின் உட்பொருளை அறிய முடியாது. பாணினியின் தாது பாடத்தில் 2000 க்கும் மேற்பட்ட வேர்களைப் பாணினி காட்டுவார். அவற்றில் ஒன்று garv = to be proud என்று பட்டியலிடப் படும். அது எப்படி பெருமிதம் என்ற கருத்துமுதற் பொருள் (idealistic meaning) இந்தச் சொல்லிற்கு வந்தது? இயல்மொழியில் (natural language) ஐம்புலனால் உணரக்கூடிய பொருள்முதல் வாதப் பொருள் (materialistic meaning) அல்லவா முதலில் ஏற்படமுடியும் என்று நமக்குக் கேள்வி கேட்கத் தோன்றுகிறது. சங்கத சொற்பிறப்பு அகரமுதலியான மோனியர் வில்லியம்சில் garbe (=honour, glory) என்ற Lithuanian சொல்லையும், gelban, gelf என்ற old German சொற்களையும் இணையாகக் குறித்திருப்பார்கள். garva = pride என்ற பெயர்ச் சொல்லையும், garvaya = to make any one proud, garvaaya = to show pride என்ற துணை வினை சேர்த்த சொற்களையும், garvara = hautiness என்ற இன்னொரு பெயர்ச் சொல்லையும், garvita = proud of என்ற பெயரெச்சத்தையும், garvishta = extremely proud என்ற இன்னொரு பெயரையும் மட்டுமே மோனியர் வில்லியம்சு காட்டும். ஆக பாணினி, மோனியர் வில்லியம்சைப் பார்த்து, garv என்பதின் ஆணி வேர் என்ன என்று வடமொழியின் வழியாக நமக்குத் தெரிந்து கொள்ள முடியவில்லை.

தமிழில் கூட்டப் பொருளில் இருந்து செறிவு, செறிவிலிருந்து திண்மை, திண்மையில் இருந்து கனம், கனத்தில் இருந்து பருமை, பருமையில் இருந்து எடை என்ற பொருள்முதற் சொற்களும், பிறகு எடையில் இருந்து வலிமை, அதே போலப் பருமையில் இருந்து பெருமை போன்ற கருத்துமுதற் சொற்களும் கிளைக்கும்.

தமிழ்ச் சொற்பிறப்புக்கள் எல்லாமே, ஐம்புலனால் உணரத்தக்க இயற்பொதுக்கை (natural bodies) களில் இருந்து உருவாகி பொருள்முதல் நிலையை வலியுறுத்திக் கொஞ்சம் கொஞ்சமாய் வளர்ச்சியடைந்த நிலையில் கருத்துமுதற் சொற்களை உருவாகும். (எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்பது தொல்காப்பிய நூற்பா 640. - பெயரியல், சொல்லதிகாரம்.)

த. கருவம்>skt. garva என்பதில் அய்யப்பாடு இருப்பதாய் எனக்குத் தெரியவில்லை. மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் அறியக் காத்திருக்கிறேன். (ருகரப் பலுக்கம் சங்கதம் போகும் போது உகரம் தவிர்த்து மெய்யாகவே போவது இயற்கை. காட்டு. கருப்பம்>கர்ப்பம்; பூருவம் = பூர்வம்)

அன்புடன்,
இராம.கி.

6 comments:

குமரன் (Kumaran) said...

அன்பிற்குரிய ஐயா,

உங்கள் வேலை அழுத்தத்தின் நடுவிலும் ஏதோ போகும் போக்கில் ஒரு வரி சொல்லிவிட்டான் என்று தள்ளிவிடாமல் தங்கள் நேரத்தை இந்தப் பதிவிடப் பயன்கொண்டதற்கு மிக்க மகிழ்ச்சி. கருவம் தமிழ்ச்சொல்லாய் இருக்கலாம் என்ற ஐயம் இருந்ததாலேயே அப்படி என் பதிவில் குறிப்பிட்டேன். நீங்கள் பல எடுத்துக்காட்டுகளும் சொற்பிறப்புகளைப் பற்றியும் சொல்லி கருவம் தமிழ்ச்சொல் என்பதைச் சொல்லியிருக்கிறீர்கள். நான் அறிந்த தமிழும் வடமொழியும் தங்கள் முன் எள்ளளவும் இல்லை. அதனால் இதனை மறுத்துக் கூறும் அளவிற்கு பயிற்சியோ அறிவோ முனைப்போ இல்லை. கருவம் என்ற சொல் தமிழிலிருந்து வடமொழி சென்றது என்பதனை ஏற்றுக் கொள்கிறேன். மிக்க நன்றி.

அன்புடன்,
குமரன்.

குமரன் (Kumaran) said...

நண்பர் ஒருவர் வடமொழியா என்று ஐயம் இருக்கும் சொற்களை உங்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்ற் ஆலோசனை சொல்லியிருந்தார். அதன் படி இது வரை 'சொல் ஒரு சொல்' பதிவில் வடமொழி என்று குறிக்கப்பட்டச் சொற்களையும் அதற்கு மாற்றாகப் பரிந்துரைக்கப்பட்டத் தமிழ்ச்சொற்களையும் இங்கே தருகிறேன். தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது அவற்றினைப் பற்றிய தங்கள் கருத்தினைக் கூறுங்கள்.

1. கர்வம் (வடமொழி) > செருக்கு (தமிழ்) இதற்கு நீங்கள் இந்தப் பதிவில் விளக்கம் கொடுத்துவிட்டீர்கல்.
2. அகந்தை வடமொழியா?
3. வேஷ்டி (வடமொழி) > வேட்டி (தமிழ்)
4. சந்தர்ப்பம், தருணம், சமயம் இவை வடசொற்களா?
5. கவிதல், கவித்தல், கவிழ்தல், கவிழ்த்தல் போன்ற சொற்களின் வேறுபாடு என்ன?
6. அவசியம் (வடசொல்) > கட்டாயம், தேவை
7. அனாவசியம் (வடசொல்) > வீண், தேவையற்றது
8. அத்தியாவசியம் (வடசொல்) > இன்றியமையாதது
9. சந்தேகம் வடசொல்லா, தமிழா?
10. விஷயம் (வடசொல்) > விடயம், செய்தி, கருத்து, சங்கதி
11. அர்த்தம் (வடசொல்) > பொருள் (இதுவும் கருவம் போல் தமிழிலிருந்து வடமொழிக்குச் சென்றதா?)
12. லிங்கத்திற்கு தமிழ்ச்சொல் என்ன?
13. சொல், வார்த்தை, வாக்கியம் இவற்றின் வேறுபாடு என்ன?
14. வார்த்தை வார்த்தா என்னும் வடசொல்லின் தமிழா?

தேசாந்திரி said...

மிகவும் நல்ல பதிவு.

Sri Rangan said...

நல்ல பதிவு.தமிழின் உயர்வுக்குப் பாடுபடும் உங்களுக்கு எனது நன்றி!

வெற்றி said...

இராம. கி அய்யா,
நல்ல அருமையான பதிவு. மிகவும் தேவையான பதிவும் கூட. அய்யா, தங்களைப் போன்றவர்கள் இப்படியான பதிவுகளைத் தந்தால் , தமிழறிவு குறைந்த என் போன்றோர்க்கு தமிழறிவை வளர்த்துக்கொள்ள நல்லதொரு வாய்ப்பாக அமையும்.
நன்றிகள்.

பணிவன்புடன்,
வெற்றி கந்தசாமி

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

மேலே குமரனது பட்டியலில் எனது சந்தேகங்களையும் சேர்த்து விடுகிறேன்.

1. வதனம் தமிழ்ச்சொல்லா?
2. "ப்ரியம்" என்பது "பரிவு" என்பதிலிருந்து வந்ததா?
3. பூரணம் > பூர்ணம் அல்லது பூர்ணம் தமிழ்ப்படுத்தப்பட்டு பூரணம் ஆனதா?

இன்னும் இருக்கிறது.. பிறகு கேட்கிறேன்.