Sunday, May 14, 2006

அம்மணம் - 3

முன்னாற் சொன்னது போல் அடுத்தல் என்பது அருகிருத்தல் என்ற பொருளைக் காட்டும். உடம்பிற்கு அடுத்திருக்கும் பொருள் உடம்பை பூட்டுகிறது; மறைக்கிறது; சாத்துகிறது; அடைக்கிறது. அப்படி அடைத்தது ஆடை எனப் பட்டது. அதுபோல் அண்ணி (அடுத்து) இருப்பது அணம். அட்டி (அடுத்து) இருப்பது அட்டம். இவையும் ஆடைப்பொருள் கொள்ளும்.

அதேபோல் என்னொடு, உன்னொடு என்றுவரும் சொற்களிலுள்ள  ஒடு என்ற இடைச்சொல்லும் உடு என்ற வேரில் கிளைத்ததே. உடு என்ற சொல்லில் இருந்து உடன் என்ற சொல்லும் ஏற்பட்டிருப்பதைப் பார்த்தால் இதைப் புரிந்து கொள்ள முடியும். மெய்யோடு உடுப்பது (சேர்த்து வைப்பது) உடை/உடுப்பு.

உடம்பு என்ற ஒன்றை மூடி நிற்பது உடை அல்லது ஆடை என்று வந்த பிறகு, சமய நிலையில் நான் என்பதை ஆன்மாவில் பொருத்தி, அந்த ஆன்மாவிற்கு மேற்பட்டதையும் உடு என்ற சொல்லடியில் இருந்தே உடல்/உடர்/உடன்/உடம்பு என்று சொல்லத் தொடங்குவது இயற்கை தான். ஆனால் இந்த உடல் என்ற சொல், நாகரிகம் பெரிதும் வளர்ந்து, மெய்யியல் ஏற்பட்ட பின்னால், அதாவது நெடுநாள் கழித்து ஏற்பட்டிருக்கக் கூடிய சொல்லாகும். தமிழில் உட(ல்)க்குதல் என்பதற்கு உள்ளீடின்றி இருத்தல் என்ற பொருளும் உண்டு. அதாவது உயிர் என்பது உள்ளீடு; உடல் என்பது அதைப் போர்த்தியிருப்பது.

இந்தச் சிந்தனை மெய்யியற் காலத்தில் (கி.மு.800 - 500) ஏற்பட்ட பிறகு, ஆடையற்ற நிலை. நம்மாணம்>நிம்மாணம் என்றால், உடலற்ற வீடு பேற்று நிலையும், தருக்க நெறியின் படி நிம்மாணம் என்ற சொல்லிலேயே சுட்டப் படுவதை உணர முடியும். நிம்மாணம்> நிர்வாணம் = வீடு பேறு என்ற சொல் நிம்மாணம் என்ற ஆடையற்ற நிலையில் இருந்து பெற்ற பொருள் நீட்சியே ஆகும். முதற்பொருள் ஆடையற்ற நிலை; வழிப்பொருள் வீடுபேறு.

அது எப்படி அம்மணர் சம்மணர் என்ற பெயர் பெற்றார்கள்? இதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

யம்மணர்>ஸ்யம்மணர்>சம்மணர்>சமணர் என்று ஆனதா? அல்லது முன்னே என்னுடைய சமயம் கட்டுரையில் சொன்னது போல், சம்மணமிட்டு அமர்ந்த நிலையில் தானம் பண்ணித் தவம் இருந்ததால் சமணர் என்ற பெயரைப் பெற்றாரா என்று சொல்ல முடியாது இருக்கிறேன். நான் சொல்ல வந்தது இயலுமை(possibility)களை; எப்படி நடந்தது, நடக்கவில்லை என்பதை இதுவரை நான் அறிந்த தரவுகளால் சொல்ல முடியவில்லை.

அம்மணர் என்பதற்கு இன்னுமோர் இயலுமை தமிழ்வழியே இருக்கிறது; அதைச் சங்ககால வழக்குகளில் இருந்தே காட்ட முடியும்.

மூடிக் கிடக்கும் மொட்டு விரியும் நிலை என்பது பூ மலர்தற்குச் சற்று முந்தியது; இதைத் தொல்காப்பியத்திலும், சங்க இலக்கியத்திலும் அம்பல் என்று சொல்லுவார்கள். பாவாணரும், தன் வேர்ச்சொற் கட்டுரைகளில்,
---------------------
உம்-அம். அம்முதல் = பொருந்துதல், கூடுதல், குவிதல், அம்-அம்பு-அம்பல் = குவிந்த அரும்பு "அம்பலும், அலரும் களவு வெளிப்படுத்தலின்" (தொல்.1085) அம்பல்-ஆம்பல் = பகலிற் குவிவதாய்ச் சொல்லப்படும் நீர்ப்பூ. அம்பல்- அம்பலம் = கூடும் கூட்டம், அவை. அம்பரம் என்பது வானத்தைக் குறிக்கும். உம்பரம் என்பதன் திரிபு. அதுவுந் தமிழ்ச்சொல்லே
---------------------
என்று சொல்வார். இதேசொல் காதலர் இருவரின் களவு நிலை வெளிப்படுவதற்கும் ஒப்புமை வகையில் பயன்படுத்தப் பட்டது. காட்டாக,

அலர்வாய்ப் பெண்டிர் அம்பல் தூற்ற (அகநா.70,6)
ஊரன் கேண்மை அம்பல் ஆகற்க என வேட்டேமே (ஐங் 9)

களவொழுக்கம் போன்றவை எல்லாம் மூடிக் கிடக்கும் வரைதான் கமுக்கம்.  ("அவளைப் பார்த்தியா, கமுக்கமாக் கிடக்கா? ஒரு செய்தி வெளியே வருதா? கல்லுழி மங்கி" என்ற பேச்சுவழக்கை ஓர்ந்து பார்த்தால் நான் சொல்வது புலப்படும். இப்படிக் கம்மிக் கிடப்பது, கமுங்கிக் கிடப்பது, கமுக்கம் எனப் பட்டது; அம்பலுக்கு நேர் எதிரான நிலை கமுக்கம்.) 

அம்பலின் நீட்சி அம்பலம்; எல்லோரும் பார்க்க, விரிந்து கிடக்கும் வெளியை அம்பலம் என்று சொல்வார். இறைவனின் கோயிலும் அம்பலம் தான். அரசன் இருப்பிடமும் அம்பலம் தான். உள்ளூரின் பொதியில் கூட அம்பலம் தான். மலையாளத்தில் நாலம்பலம், சுற்றம்பலம் (தமிழர் தான் நல்ல தமிழை மறந்து பிரகாரம் என்பர் :-)) என்றெலாம் சொல்வார். அப்புறம், மூடிக் கிடப்பதை வெளியே கொண்டு வருவதை, பலரும் அறியச் செய்வதை, அம்பலப்படுத்தல் என்று சொல்கிறோமே? அது இன்னுமொரு நீட்சி.

இனி, லகரமும் ரகரமும் தமிழில் போலிகள். கண்ணுக்கு மேலே வியல்ந்து (=விரிந்து) கிடக்கும் வெளியான ஆகாயத்திற்கும் ரகரம் திரிபுற்ற அம்பரம் என்ற சொல்லே புழங்கிற்று. அடுத்த நிலையில் இன்னும் ஒரு நீட்சி ஏற்படுகிறது.

வெளிப்படுதலும் மூடுதலும் இயங்கியல் பார்வையில் முரண் தொடைகளாய்த் தெரியும். வான் என்பது வெளி என்ற அளவில் அம்பரம். அதே போழுது மண் என்று பார்த்தால், வானம் மண்ணுக்கு ஆடை ஆகிறது. வான் எனும் அம்பரம் ஆடையாகவும் பொருள் கொள்ளுகிறது. திகைகளே (=திசைகளே) அம்பரமாகிப் போன செயினத் துறவி திக் அம்பரர் =திகம்பரர் என்று பாகதத்தில் சொல்லப் படுவார்; அப்புறம், அம்பரம் என்ற சொல்லுக்கு ஆடை என்ற பொருள் நிலை பெற்று, வெள்ளை ஆடை அணிந்த துறவிகள் சுவேத அம்பரர் எனப் பட்டார். [சுவேதமும் தமிழ் வேரில் கிளைத்து பெரிதும் திரிவுற்றுப் பாகதத்திலும், சங்கதத்திலும் உருக் கொள்ளும். சுல்>சொல் = ஒளி, சொலிக்கிறது என்ற சொல்லை எண்ணிப் பாருங்கள். சுல்>சுல்லு = வெள்ளி; சுடராக ஒளியாக வெள்ளையாகத் தெரியும் மாழை சுல்லுவம் எனப்படும். சுல்>சுல்வம் = வெள்ளி (இதைத் தான் ஆங்கிலேயன் silver என்று சுருக்கச் சொல்கிறான்.) சுல்வம்>சுல்வதம்>சுவேதம் என்பது வெள்ளையைக் குறிக்கும் பாகதச் சொல். அது தமிழில் சுல்லுவம் என்றே ஒலிக்கும்.]

பல போதுகளில் லகரம் ணகரமாகத் திரிவதும் தமிழர் பலுக்கில் இயற்கை. உலர்த்துவதை உணத்துவது என்று புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாத புரம் மாவட்டத்தினரும், (கொங்கு நாட்டாரும் கூட) பலுக்குவார்; இதேபோல பொட்டலம், பொட்டளம் ஆகி முடிவில் பொட்டணம் ஆகும்; சம்மளம்> சம்மணம் ஆகும்; கருமாளம்> கம்மாளம்> கம்மளம்> கம்பளம்> கம்பணம் ஆகும் (கருமாளர்>கம்மாளர்>கம்பளர் என்ற சாதிச் சொல்லையும் பாருங்கள்). இந்தத் திரிவைப் புரிந்து கொண்டால், அம்பலம் அம்பணம் ஆகியும் பொருள் மாறாமல் இருப்பதை அறிந்து கொள்ளலாம்.

அம்பணம் = அம்படலம் = மரக்கால்; அம்பண அளவை விரிந்து உறைபோகிய ஆர்பதம் (பதிற்றுப். 66,8)
அம்பண அளவையார் எங்கணும் திரிதர (சிலப்.14, 209)
அம்படலம் = வெளி
உம்பரம்>அம்பரம் = வெளி
சம்பரம் = ஆடை
கம்பல் = ஆடை "தறைந்த தலையும் தன் கம்பலும்" கலித் 65:6 கரும்பலம்>கம்பலம்
கும்பலம்>கம்பலம் = கருமுடியால் ஆன ஆடை (கும்புதல் = தீய்ந்து போதல், வேதல், எரிதல், to become overburnt; charred; கும்பி = தீ; குமுதம் = அடுப்பு; கும், குய் = எரிதல் கருத்து வேர்; குமைதல் = சமைதல். இந்தச் சொற்களின் பிறப்பைப் புரிந்து கொண்டால், கம்பலம் = கருமுடியால் ஆன ஆடை என்பாது புலப்படும். இதை ஒட்டியே கேச கம்பலர் என்ற ஓர் ஆசீவிகத் துறவிக்கும் பெயர் வந்தது. வெறுமே முடியால் ஆன கம்பலத்தைச் சுற்றிக் கொண்டவர் அவர். (ஆசீவிகம் பற்றி ஒரு கட்டுரை எழுதுவதாய் முன்னர் சொன்னேன். அது இன்னுஞ் செய்யாது கிடக்கிறது.)

அம்பணம் அம்மணமாய் மாறுவது மிக இயற்கை. தமிழில் வெவ்வேறு வட்டார வழக்குகளில் மெல்வல் இணை, மெல்லிணையாகவும், வல்லிணையாகவும் மாறி ஒலிக்கும். வந்து என்பது வந்நு என்று மெலிந்து ஒலிப்பதையும், செம்பு செப்பு என்று வலிந்து திரிவதையும் எடுத்துக் காட்டாய்ப் பாருங்கள்.

கட்டுரையை முடிக்குமுன் ஓரிரு தனித்த செய்திகளை இங்கு குறிக்கிறேன்.

கிரேக்க மொழியில் gumnos என்றால் அம்மணம் என்றாகும். இதைப் பற்றி என்னுடைய சமயம் என்ற கட்டுரையில் குறித்திருக்கிறேன்.

கழுகு என்ற பறவையின் பெயர் அதன் காள் நிறத்தால் (கருப்பு நிறத்தால்) ஏற்பட்ட பெயரே. சாம்பு>சம்பு என்ற சொல்லும் கருமை நிறத்தையே குறிக்கும். சம்பாதி என்ற சொல் கழுகு அரசனைக் குறிக்கும் சொல். (இராமாயணத்தில் சம்பாதி பற்றிய செய்தி வரும்.) சாம்பர்கள் என்பவர் காவிரியாற்றின் வடகரையில் இருந்து இன்றைய தென்னார்க்காடு மாவட்டம் முழுக்க வதிந்த மக்கள். இவரும் கருப்பரே. சாம்பர்கள் சாம்புவர்>சம்புவர் என்றும் சொல்லப் படுவர். (சாம்பர்களுக்குக் கழுகு குழு அடையாளமாய் இருந்திருக்கலாம்.) சம்புவர்களின் அரசர் சம்புவரையர். பொன்னியின் செல்வன் நெடுங்கதையின் தொடக்கம் சம்புவரையர் அரண்மனையில் தொடங்குமே நினைவிருக்கிறதா? சம்பர்களின் பதி சம்பா(ப)தி. இச்சொல் காவிரிப் பூம் பட்டினத்திற்கும், அதன் காவல் தெய்வத்திற்குமாய்ச் சிலம்பிலும், மணிமேகலையிலும் ஆளப்பட்டிருக்கிறது.

வேடிக்கையைப் பார்த்தீர்களா? காவிரி புகும் பட்டினமும் கருப்பரின் பட்டினம் (சம்பா பதி); அது மறைந்து சோழரின் துறைமுகம் ஆன நாக பட்டினமும் கருப்பர் பட்டினம் தான். (நாகர்களுக்கு நாகம் = snake, ஒரு குழு அடையாளமாய் இருந்திருக்கலாம்.)

மொத்தத்தில் கருப்பை அவ்வளவு எளிதில் தமிழர் தொலைத்து விட முடியாது.

அம்மணம், நக்கனம், நம்மணம்>நம்மாணம்>நிர்வாணம் எல்லாம் ஆடையிருந்தவர் ஆடை குறைந்து இருந்தவரைப் பார்த்து, அவர் கருப்பாய் இருந்ததாற் கூறிய சொற்கள். அவ்வளவு தான்.

அன்புடன்,
இராம.கி.

6 comments:

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

இப்பதிவும் சிறப்பாக அமைந்திருக்கிறது. நன்றி.

இராம.கி said...

மிக்க நன்றி செல்வாராஜ்.

ஒருவேளை இந்தப் பதிவு பொதுச் செய்திகளைத் தொடாமல் பெரிதும் ஒதுங்கிப் போய் விதப்பாக ஆனதோ என்னவோ, பெரும்பாலோரை இங்கு காணோம்.

சிலராவது படிப்பார்கள் என்று எண்ணிக் கொள்கிறேன்.

அன்புடன்,
இராம.கி.

வசந்தன்(Vasanthan) said...

இல்லை. படிக்கிறோம். பின்னூட்டம் தான் போடவில்லை.

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

ஐயா, உங்கள் ஒவ்வொரு இடுகையையும் நான் படிக்கிறேன். தவிர, பின்னோக்கியும் சென்று முந்தையவற்றையும் மீண்டும் படிக்கிறேன். அதையொட்டி...
முன்பொரு முறை பாடமை என்றும் இங்கே இயலுமை என்றும் possibility-ஐக் குறித்திருக்கிறீர்கள். இந்த 'இயலுமை' என்னும் சொல் எனக்குப் பிடித்திருக்கிறது.

கமுக்கம் என்ற சொல் கொங்கு வட்டாரத்திலும் வழங்கப் படுகிறது. அதன் எதிராக அம்பலம் என்பதை அழகாக நீங்கள் விளக்கியிருப்பதும் கவர்கிறது. இவையெல்லாம் பொதுவானவை தானே. இப்படியாகப் பல நல்ல சொற்களை அழிவில் இருந்து மீட்கவும், புழக்கத்தில் அதிகரிக்கவும் நீங்கள் ஆற்றி வரும் பணி மகத்தானது. தொடர வேண்டும்.

இரண்டு நாட்களுக்கு முன் influence என்பதற்கு என்ன சொல்லலாம் என்று யோசித்து, உங்கள் பதிவின் தாக்கத்தினால் fluid=பாய்மம் என்பதையொட்டி in-fluence = "உட்பாய்வு" என்று எழுதினேன். (தவறெனிலும் பிறகு திருத்திக் கொள்ளலாம்). இது போன்ற சிந்தனைகளை அதிகரிக்கவும் சொல்வளம் வளரவும் உங்கள் எழுத்துக்கள் உதவுகின்றன.

நன்றி.

சிவக்குமார் (Sivakumar) said...

என்னைப் போன்று பின்னூட்டமிடாமல் படிக்கும் வாசகர்களும் உண்டு ஐயா. தாங்கள் இது போன்று நிறைய எழுத வேண்டும் என்பதே எனது அவா.

R.Shanmugham said...

எல்லோரும் ஒரு நிலையில் சிந்திக்க தாங்கள் பல பரிமானத்தில் ஒரு செய்தியை பார்க்கிறீர்கள்.. அருமையான ஆய்வு கட்டுரை ஐயா.. நான் தற்போது உங்கள் கட்டுரைகளை ஒரு முறை படித்துவிட்டேன்.. இன்னும் பலமுறை படிக்கவேண்டும்.. எத்தனை முறை படித்தாலும் அலுக்காத நடை.. ஐயா.. விவசாயம் என்ற சொல் தமிழா இல்லை தமிழின் கொச்சை வடிவம் என்று சொல்லப்படும் சங்கதமா என்று விளக்க வேண்டுகிறேன்..