பல்பொருள் - ஒரு மொழி:
சரி, எழுத்து என்ற கருத்துத் தோன்றியாகி விட்டது. அடுத்த வளர்ச்சி என்ன? மொழிக்கும் எழுத்திற்கும் இடையே நடக்கும் இந்த முரணியக்கம் (dialectics), அடுத்து எந்தக் களத்திற்கு நம்மை இட்டுச் செல்லுகிறது? இதற்கான விடை கொஞ்சம் வியப்பானது, ஏனென்றால் மொழியை நிகராளுவதில் (to substitute) எழுத்து என்பது ஒரு கரு மிடையமாய் (core medium) ஆன பின்பு, அந்த எழுத்து எழுதும் முறை, எழுதப்படும் பொருள் இன்ன பிறவும் கூட, அடுத்து வரும் மொழி வளர்ச்சியைப் பாதிக்கத் தொடங்குகின்றன.
மாந்தன் விலங்காண்டியாய் இருந்தபோது, மலைப் பரப்புகளும், மண்ணும், குகைச்சுவர்களும் தான் எழுதப்படும் பொருள்களாய் இருந்தன. இந்தப் பரப்புகளில் நார்க் குச்சிகள், மயிர்க் குச்சிகள், இறகுகள் ஆகியவற்றின் மூலம் அரத்தம், நிலத்திணைச் சாயம் ஆகியவற்றில் தோய்த்து விலங்காண்டி மாந்தன் எழுதி வந்தான். இன்னும் கொஞ்சம் போய் சுண்ணாம்பும் கூடப் பயன்பட்டிருக்கிறது. இப்படி எழுதியவற்றில், சில உடனே அழிந்து போயின; சில குறைந்த காலத்திற்கு இருந்த, சில நெடுங்காலத்திற்கு இருந்தன. கணிசமான காலத்திற்கு அழியாதிருந்த எழுத்துக்களைச் செய்ய, மாக்கல்லில் கூர்ங்குச்சி கொண்டு கீறுவதும், கருங்கல்லில் ஆணி, உளி கொண்டு வெட்டுவதும் என இந்தப் பழக்கம் விரிந்திருக்கிறது. கல்லில் கீறியதைக் கல்வெட்டு என்றும், (முழைக்)கீற்று என்றும், கீற்றம் என்றும் சொன்னார்கள் (inscription என்னும் ஆங்கிலச் சொல் கூட கீறுதலை உள்ளுறுத்திக் காட்டுகிறது). இன்னொரு வகையில் கீரப் பட்டது கீர்ந்தம்>கிரந்தம் என்றும் சொல்லப் பட்டது. அடுத்த வளர்ச்சியாய் மரப் பட்டைகளில் எழுதுவது, தோலில் எழுதுவது, ஓலைகளில் எழுதுவது, தாழை மடலில் எழுதுவது என களனும், காலமும் பல்வேறு எழுது பொருட்களையும், எழுது கருவிகளையும் நாவலந்தீவில் உருவாக்கி இருக்கின்றன.
இந்த வளர்ச்சியில் எழுத்துக்கள் என்பவை மாறாமலே இருப்பதாகவும், எழுது பொருட்கள் மட்டுமே மாறிக் கொண்டிருந்ததாயும், நாம் கொள்ள முடியாது. மாந்த வரலாற்றில் எழுத்துக்களும், எழுது பொருட்களும் ஒன்றை ஒன்று பாதித்திருக்கின்றன. படங்கள் என்பவை முதலில் தொட்டுப் பார்த்து உணரக் கூடிய பூதியப் பொருள்களையே (physical objects) குறித்தன. பின்னால் இரண்டு மூன்று பூதியப் பொருட் படங்களை அருகருகில் வைத்துச் செயல்களையும் (processes), ஆற்றங்களையும் (actions) குறிக்கத் தொடங்கினார்கள். நாளடைவில் இந்தப் பூதியப் படங்கள் எளிமைப் படுத்தப் பட்டன; நாலைந்து கோடுகளிலேயே சிறு சிறு படங்களை உருவாக்கிக் கருத்தை வெளியிடத் தொடங்கினார்கள்.
அடுத்து ஒரே ஒலிச்சேர்க்கை கொண்ட இரண்டு மூன்று வெவ்வேறு கருத்துக்களை அவற்றின் இடம் பொருள் ஏவல் தெரிந்து ஒரே படத்தால் குறித்தார்கள். (காட்டாக, வேலின் படம் வேலன், வேளன் என்ற இருவரையும் இடம், பொருள், ஏவல் அறிந்து, அதற்குத் தக, குறிக்க முடிவதை, ஓர்ந்து பாருங்கள்.) இந்தப் பல்பொருள் ஒருமொழி உத்தியை ஆங்கிலத்தில் rebus என்று சொல்லுவார்கள்; ஏனென்றால் இந்தப் பல்பொருள்களிலும் ஏதேனும் ஒரு பொருள் படம் காட்ட வாய்ப்புள்ளதாக இருக்கும். இந்தப் பல்பொருள்-ஒருமொழி என்ற மாற்றத்தை, எழுத்து-மொழி என்ற இரட்டைக் கருவியின் வளர்ச்சியில் ஒரு பெரிய திருப்பு முனை என்று ஆய்வாளர்கள் சொல்லுகிறார்கள். முதன் முறையாக படம் என்பது ஒரு பொருளை, கருத்தைக் குறித்தது போக, ஒலி என்பதற்கும் பகரமாக (substitute) நிற்கத் தொடங்கியது.
இந்தத் தொடக்கம் வியக்கத் தக்கது; புரட்சிகரமானது. குறைந்த அளவுள்ள, எளிய முறையில் வரையக் கூடிய (தமிழில் எழுதுதல் என்பது முதலில் படம் வரைதலையும், கல்லில் கீறுவதையுமே குறித்தது.) ஒரு சில படங்களை வைத்துக் கொண்டு மொழியில் உள்ள அனைத்து ஒலிகளையும் நிகராள முடிந்தது. அப்படி அடிப்படையாய் உணரப்பட்ட ஒலிகளை அசையொலிகள் என்பார்கள்; தமிழில் உயிர், மெய், உயிர்மெய் ஆகிய எல்லாமே அசையொலிகள். இன்னும் சிறப்பாகச் சொன்னால் அவை திறந்த அசையொலிகள். காட்டாகச் சொன்னால், ம, கா, தி, சே, போ, ழு, நூ, ணை என்பவை எல்லாம் திறந்த அசையொலிகள்;
இதற்கு மாறாக மெய்யோசையைக் கடைசியில் கொண்டிருந்த மூடிய அசையொலிகளும் இருந்தன. இவற்றை நேரசை என்று தமிழ் யாப்பிலக்கணம் சொல்லும். அக். மூச், மெஞ், என இதைப் பெருக்கி அடையாளம் காட்ட முடியும். திறந்த அசையொலிகளை மெய்யும், உயிருமாய் யாரும் பிரித்து ஒலிப்பதில்லை. உயிர் ஊடே வரும் போதுதான் மெய்களை எளிதாகப் பலுக்கமுடிகிறது. ஒரு தனியசைக்கு அப்புறம் மெய் வரும் பொழுதெல்லாம் ஏதோ பேச்சைச் சட்டென்று நிறுத்தியது போல, அதாவது புள்ளியது போலத் தோன்றுகிறது. (புள்ளுதல் = நிறுத்துதல்; புள்ளி = நிறுத்தம்; பொறித்தது = நிறுத்தியது = period) பேச்சின் தொடர்ச்சிக்கு திறந்த அசையொலிகள் இயல்பாக உதவி செய்தன. இந்தத் திறந்த அசையொலிகளை அசையெழுத்துக்கள் உணர்த்திக் காட்டின.
தமிழில் அசையெழுத்துக்கள்:
தமிழில் அசையெழுத்துக்கள் என்பவை கிட்டத்தட்ட கி.மு. 1000 க்கும் முந்தித் தொடங்கியிருக்க வேண்டும் என்று ஊகிக்கிறோம். (கி.மு.500/600 அளவில் தமிழகத்திலும், இலங்கை அநுராதபுரத்திலும் இருந்த தமிழி மற்றும் பெருமி எழுத்துக்கள் அண்மையில் கண்டு பிடிக்கப் பட்டிருக்கின்றன. இன்னும் ஒருவகை வறட்டுப் பிடிவாதத்தில் ஒரு சிலர் ஓஅசோகர் சாலையின் இருமருங்கும் மரங்கள் நட்டார். கல்வெட்டுப் பொறித்தார்....ஔ என்று பாராயணம் பண்ணிக் கொண்டு, எழுத்து தோன்றியதற்கும் சேர்த்து, வடநாட்டையே முதற் காரணமாய்க் காட்டிக் கொண்டு இருப்பதை நாம் இனிமேலும் பொருட் படுத்தத் தேவையில்லை. நாவலந் தீவிலேயே பழமையான எழுத்துக்கள் தெற்கே தான் கிடைத்திருக்கின்றன என்று மிக ஆணித் தரமாகச் சொல்லலாம். நாவலந் தீவின் எழுத்தறிவு வரலாற்றை திருத்தி எழுத வேண்டிய காலம் உறுதியாக வந்து விட்டது.) இந்த அசையெழுத்துக்களில் ஓர் அடிப்படை மெய் எழுத்தை வைத்துக் கொண்டு அதில் மேலும் கீழும், பக்க வாட்டிலுமாய் ஒரு கோட்டை இழுத்து மற்ற ஒலிகளைக் கொண்டு வந்தார்கள். இந்த வளர்ச்சிக்கு நம்முடைய எழுது பொருளான ஓலையும் ஒரு காரணமாய் இருந்தது.
படவெழுத்து இருந்த சீனத்திலோ தோலும், பட்டுச்சீலையும், எழுது பொருள்களாய் இருந்தன. அசையெழுத்து இருந்த நாவலந் தீவிலோ, (சமயமோ, வேறு என்னவோ தெரியவில்லை,) முழவுக்குத் தோலைப் பயன்படுத்திய மக்கள், அதை எழுதுவதற்குப் பயன் படுத்தாது விட்டார்கள். பட்டுத் துணியை அல்லது பட்டு நூலைச் சீனத்தில் இருந்து இறக்க வேண்டிய காரணத்தால், அது விரிந்த அளவில் எழுது பொருளாக நம்மூரில் பரவ வில்லை. அதே பொழுது, நம்மூர்ப் பொருளான, பருத்தியில் நெய்த துணியில் கூர்மையாய் எழுதுவது என்பது மிகச் சரவலான வேலையாய் இருந்தது. பருத்தித் துணியில், பஞ்சுக் குழம்பில் தோய்த்து எழுதினால், அது கூர்மையாக இல்லாமல், விரவிக் கசிந்து, பரவி, வண்ணம் துணியெங்கும் அப்பினாற் போல், ஆகி விடும். தவிரப் பருத்தித் துணியும், பஞ்சுக் குழம்பும் வேதியலின் படி, நீர் வினையில் கரைந்து போகக் கூடியவையாக இருந்தன. நீரில் கரையாத வண்ணங்கள், மற்றும் சாயங்கள் உருவாக்க நெடு நாள் சரவற் பட வேண்டியிருந்தது. இந்த நிலையில் பருத்தித் துணியில் எழுதியதை நெடுநாள் காப்பாற்ற முடியாது இருந்தது. இத்தனை ஏன், பருத்தித் துணியில் எழுதியது நம்மூரில் ஒரு மழைக்குத் தாங்காது. ஆக, நம்மூர் வெதணத்திற்கு (வெள்+தணம் என்ற சொல்லின் கூட்டு, வெக்கையும் தண்மையும் இடையாடும் நிலை - climate என்ற சொல்லிற்கு திரு அருளி பரிந்துரைத்த அருமையான சொல்.) பருத்தித் துணியில் எழுதுவது உதவ வில்லை.
இந்த நிலையில் தான் நீண்ட, அகலமில்லாத வெறும் பனையோலை நறுக்கு, நாவலந்தீவின் தெற்கே பயன்பட்டது. ஓலையில் எழுத்தாணியால் கூர்மையாய் எழுத முடிந்தது. ஒவ்வொரு முறையும் எழுதினால் ஒரு பனையோலை நறுக்கு, குறைந்தது 150 ண்டுகளுக்காவது அழியாமல் இருந்தது. மழையில் வெய்யிலில் அதைக் காப்பாற்ற முடிந்தது. எனவே எல்லோரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய எழுது பொருளாய் பனை ஓலை நறுக்கு ஆனது.
அன்புடன்,
இராம.கி.
5 comments:
மிக நல்ல பதிவு. நன்றி ஐயா.
இராம.கி அய்யா,
இத் தொடரின் இரண்டாவது பாகத்தையும் வாசித்து முடித்து விட்டேன். அருமையான தொடர். அடுத்த தொடரை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன்.
நன்றிகள்.
அன்புடன்,
வெற்றி
அன்பிற்குரிய தேசாந்திரி மற்றும் வெற்றி,
உங்கள் பாராட்டிற்கு நன்றி.
அன்புடன்,
இராம.கி.
ஐயா,
கீற்றம் நீங்கள் ஆக்கிய சொல்லா அல்லது ஏற்கனவே அவ்வடிவில் வழக்கிலிருந்ததா?
நன்றி,
சுந்தர்
அன்பிற்குரிய சுந்தர்,
இது நான்படைத்த சொல்லில்லை. கீறு, கீறல், கீற்று, கிறுக்கல் என்பவையெல்லாமே எழுத்தைக் குறிப்பவை தான். அம் என்ற ஈற்றைச் சேர்த்தது மட்டுமே நான். அதுவும் தமிழில் உள்ள முறைதான். கீற்றிலும் பெரியது கீற்றம். விளக்கமாய் இன்னும் 4,5 நாட்களில் எழுதுகிறேன். இந்த நாட்களில் நான் ஊரிலிருக்க மாட்டேன். இணையத்தொடர்பு கிடைப்பதும் அரிது. சற்று பொறுத்திருங்கள்.
அன்புடன்,
இராம.கி.
Post a Comment