ஒருமுறை சமயம் எனும் என் தொடர் இடுகையில், பேரா. தொ.பரமசிவன் கூறுவதாக ஒரு மேற்கோளைக் காட்டி, அது பற்றிய என் முன்னிகையைத் தரச் சொல்லி, திரு. ஆறுமுகத் தமிழன் தன் பின்னூட்டில் கேட்டிருந்தார். அப்படிக் கேட்டதற்கான மறுமொழியை ஒரு தனிப் பதிவாக இடுகிறேன்.
முதலில் திரு. ஆறுமுகத்தமிழன் எடுத்துக் காட்டிய பேரா. தொ.பரமசிவனின் கூற்று:
---------------------------------------------------
''நிர்வாணம் என்பது வடசொல்லாகும். அதற்கு நிகரான தமிழ்ச் சொல்லாக அம்மணம் என்பது வழங்கப்படுகின்றது. அம்மணம் என்ற சொல் அந்தப் பொருளில் தமிழிலக்கியத்தில் எங்கும் காணப்படவில்லை. 'அம்மணம் பட்டிலா வையெயிற்று ஐயையைக் கண்டாயோ தோழி' என்னும் சிலப்பதிகாரம் (வரந்தருகாதை) இந்தச் சொல்லை எடுத்தாளக் காண்கிறோம். இந்தச் சொல் 'குறைவு' என்ற பொருளில் மட்டுமே அந்தக் காலத்தில் வழங்கியுள்ளது. 'ஆடையின்றி' என்ற பொருளில் மக்கள் வழக்கில் மட்டும்தான் காணப்படுகிறது, இலக்கியங்களில் காணப்படவில்லை.
குறைந்தது கி.மு. முதலாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் சமண மதம் நுழைந்து செல்வாக்குப் பெற்றுவிட்டதென்று சங்க இலக்கியம் காட்டுகின்றது. ஆனாலும் தமிழிலக்கியப் பரப்பில் சைவ, வைணவ இலக்கியங்களிலேயே ஜைனர்களைக் குறிக்கச் சமணர், அமணர் ஆகிய சொற்கள் வழங்கப் பட்டிருக்கின்றன. சமண மதம் துறவினைப் பெருமைப் படுத்திய மதமாகும். சமணத் துறவிகளில் திகம்பரர் (திசைகளையே ஆடையாக உடுத்தியவர், பிறந்தமேனியராய் இருப்பவர்), சுவேதம்பரர் (வெள்ளையாடை உடுத்தியவர்) என இரண்டு பிரிவினர் இருந்தனர். மலைக் குகைகளைப் பாழிகளாக மாற்றித் தவம் செய்து வந்தவர்கள் திகம்பரத் துறவிகளே. வெள்ளையாடை உடுத்திய துறவிகள் பள்ளிகளை (மடங்களை) அமைத்து வாழ்ந்தனர். அம்மணம் என வழங்கும் சொல் ஆடையில்லா அமணர்களைக் குறிக்கப் புதிதாகத் தோன்றுகிறது.
நிர்வாணம் என்ற செயலையும் கோட்பாட்டையும் தமிழ்ச் சமூகம் தனது வரலாற்றில் தொடர்ந்து ஏற்றுக்கொள்ள மறுத்தே வந்திருக்கிறது...'' (தொ. பரமசிவன், பண்பாட்டு அசைவுகள், காலச்சுவடு வெளியீடு, பக். 93-94).
------------------------------------------------
இனி இராம.கி.யின் மறுமொழி.
" 'ஆடையின்றி' என்ற பொருள் மக்கள் வழக்கில் மட்டும்தான் காணப்படுகிறது, இலக்கியங்களில் இல்லை" என்று பேராசிரியர் சொல்வது சரியில்லை. தேவாரத்திலும் நாலாயிரப் பனுவலிலும் பயிலும் அம்மணம் என்ற சொல்லில் ”ஆடையின்றி” என்ற பொருளும் உள்ளே தொக்கி நிற்கிறது. காட்டாக, தேவாரம் 6 ஆம் திருமுறையில், திருஅதிகை வீரட்டாணம் 7வது பாட்டில் (6.3.7), "குவிமுலையார் தம்முன்னே நாணமின்றி உண்டி உகந்து அமணே நின்றார்" என்று ஓர் அடி வரும். இங்கே, "நாணமின்றி" என்று சொல்லிப் பின் "அமணே நின்றார்" என்பதால், ஆடையிலா நிலையையே இங்கு அப்பர் குறிப்பிடுகிறார் என்பது புலப்படும். அதேபோல, "நீ உடனே இருக்கவே, நான் இவ்வமணக் கூத்தெல்லாம் அடித்தேன்" என்று தொண்டரடிப் பொடியாழ்வாரின் பாட்டுக்கு எழுந்த உரையிலும் (தொண்டரடி. திருமாலை 34 வியாக்.ப. 384) ஆடையில்லாக் கருத்து சொல்லப் படும். 5ம் திருமுறை, திருப்பூவனூர், 9ம் பாட்டிலும் "ஏவம் ஏது இலா அமண் ஏதலர்" என்ற அடியில் ஆடையிலா நிலை அமண் என்ற சொல்லிற்கு இணையாகத் தான் கூறப்படுகிறது. தேவாரம் எங்கணும், குறிப்பாகச் சம்பந்தர் திருமுறைகள், திருநாவுக்கரசர் திருமுறைகளில் இந்தப் பொருள் பரக்கவும் காணப்படுகிறது.
தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் அக்காலச் செயினத் துறவியர் அம்மணராகவே இருந்திருக்க வேண்டும். [தமிழ்நாட்டில் திகம்பர செயினமே ஓங்கி இருந்தது. வெள்ளாடை(சுவேதாம்பர)ச் செயினமோ, உருவிலாத் தொழுகை பழகும் செயினமோ அவ்வளவு பரவவில்லை.] அதனால், ”ஆடையற்ற” என்ற பொருள், அமணர் என்ற சொல்லின் உள்ளூற இருந்தே வந்தது புலனாகும். இதுபோக சீவக சிந்தாமணி பற்றி எழுந்த அம்மானை நூலில் (ப.80) இருந்தும் "அரையில் கலையுடுக்காள் அம்மணமுமாய் இருப்பாள்" என்ற மேற்கோளை பாவாணர் தம் நூலில் எடுத்துக் காட்டுவார்.
அம்மணம் என்ற சொல்லுக்கு "ஆடையின்றி" என்ற பொருள் ஆகி வந்திருக்கக் கூடுவதை 3 வழியில் நாம் காட்ட முடியும். இவற்றில் எது முதலில் தொடங்கியிருக்கும் என்பதை ஓரளவு சொல்ல முடியும் என்றாலும், முடிந்த முடிபாக ஒன்றைக் கூற முடியாதிருக்கிறது. ஒவ்வொரு வழியையும் அடுத்தடுத்துக் கீழே பார்ப்போம். கூடவே கி.பி.650க்கு முன்னால், அதாவது பத்தி (இறைவன் அடிகளைப் பற்றுவது பற்றி>பத்தி>பக்தி; தமிழ்த் தோற்றம் தெரியாமலே கிடக்கும் இன்னொரு சொல்.) இலக்கியங்களுக்கும் முன்னே, ஆடையற்ற நிலை பற்றிச் சொல்லுதற்குப் பழகிவந்த சொல்லான நக்கர்/நக்கம், நிர்வாணம் என்ற சொற்களையும், இங்கு அலசிப் பார்ப்போம்.
நாகரிகம் அறியாத விலங்காண்டி காலத்தில், ஆடையற்ற நிலைக்கு, ஒரு தனிப் பெயரை மாந்தன் வைத்திருப்பானா என ஓர்ந்து பார்த்தால், அது அரிது என்றே புலப்படும். ஆடை கொண்டவர் நடுவில் தான், ஆடையிலா நிலை வெட்கப்படத் தக்கதாயும், அதைச் சொல்ல ஒரு பெயர் வேண்டியதாகவும் அமையும். ("அம்மணாண்டிகள் மத்தியில் கோவணாண்டி பைத்தியக்காரன்" என்ற சொலவடையைத் தலைகீழாகப் பொருத்திப் பாருங்கள்; உண்மை புலப்படும்.)
ஆடை என்பதே, மாந்தனின் சூழமை(environment)வில் ஏற்படும் மாறுதலில், குறிப்பாகப் பெருங்குளிர்க் காலத்தில், உடம்பின் சூட்டைத் தக்க வைத்துக் கொள்ளுதற்காக, விலங்குகளின் தோல், மரத்தின் தழை, உரிகள், இப்படி ஏதோ ஒன்றை, உடம்பில் போட்டுக் கொண்டு, மூடிக் கிடப்பதாய் இருந்திருக்க வேண்டும். (பெருங்குளிர்ச் சூழமைவில் வாழ்ந்தவர் பஞ்சாடைத் துணி போட்டதாக வரலாறு இல்லை.)
ஏதோ ஒரு காலத்தில் சூழமைவு கருதியும், விலங்குகளிடம் இருந்து தம்மைப் பாதுகாக்கக் கருதியுமே, ஆடையின் தேவை மாந்தருக்கு ஏற்பட வாய்ப்புண்டு. பொதுவாக, குளிர் நாடுகளிலும், மணற் காற்று பெருவாரியாய் அடிக்கும் பாலை நாடுகளிலும், மாந்தர்களின் உடம்பெல்லாம் மூடி இருத்தலையும், மணலை வாரி அடிக்காத வெப்ப நாடுகளில் ஆடை குறைந்து, உடம்பின் மேற்பகுதியில் எதையுமே போர்த்தாமல் இருப்பதையும் காணலாம். ஆடை என்பது குளிர் நாடுகளிலும், மணல்வாரி நாடுகளிலுமே முகன்மை பெற்றதைப் புரிந்து கொள்க. பொதுவாக, குளிர் நாடுகளிலும், மணல்வாரி நாடுகளிலும் காற்றில் ஈரப்பதம் (humidity) குறைந்தேயுள்ளது; உடல் முழுக்கத் துணியைச் சுற்றியிருந்தாலும் வேர்வை அந்நாடுகளில் மாந்த உடம்பில் பெருக்கெடுக்காது. மாறாக, ஈரப்பதம் கூடிய நாடுகளில், அளவுக்கு மீறித் துணியை உடலிற் சுற்றிக் கொண்டால், வேர்த்து விறு விறுத்துப் போகும். ஈரப்பதம் கூடிய நாடுகளில், ஆண்டின் மிகுதியான காலங்களில் (9,10 மாதங்களுக்கு), மீக்குறைந்த ஆடைகளையே, அதுவும் இடைக்குக் கீழ் மட்டுமே, மக்கள் அணிகிறார்.
13ம் நூற்றாண்டில் கொற்கை, காயல் ஆகிய இடங்களின் பக்கம் வந்து, தென்பாண்டி நாட்டு முத்துக் குளிப்பைப் பார்த்த மார்க்கோ போலோ சொல்கிறான்: ஒரு குறுக்குத் தார்ப பாய்ச்சு வேட்டி மட்டுமே இடுப்புக்குக் கீழ் கட்டிக் கொண்டு, நகைகளைத் தவிர ஒரு பொட்டுத் துணி கூட இடுப்பிற்கு மேல் அணியாது, அரசன் சுந்தர பாண்டியன் காட்சியளித்தானாம்; பெண்களும் கூட அக்காலத்தில் தம் மார்பைச் சிறிதளவே சிறு கச்சை கொண்டு மூடியவராய் இருந்தனராம் (ஒரு நூற்றாண்டுக்கு முன் வரை, சான்றார் குலப் பெண்மக்களை மேற் சட்டை போடவிடாமல், சாதிக் குமுகாயம் தென்கேரளத்தில் கொடுமைப் படுத்தியுள்ளது. பெண்களின் மேற் சட்டையைக் குறிக்கக் கூடச் சரியான சொல் நம்மிடம் பல காலம் இல்லாதிருந்தது.); எல்லாம் சூழமைவு படுத்திய பாடு. (கூடவே வெள்ளையன் உணராத, ஆனால் நம்மூரில் இருந்த, சாதிக் கொடுமை.)
இது போன்ற நிலையில், சூழமைவு கருதி குறைந்த ஆடை அணிந்தவராய், இருந்திருக்கக் கூடியவராய் பழைய ஆப்பிரிக்க மாந்தரும் இருந்திருப்பர். இப்படி மேனி திறந்து கிடந்த பலரும், குறிப்பாக ஆப்பிரிக்கரும், பழந்தமிழரும், கருப்பாகவே இருந்தனர். (இற்றைத் தமிழரிலும் மிகப் பெரும்பாலோர் கருப்பரே என்று நம்மில் ஒப்புக்கொள்ளத் தயங்கிக் கிடப்பவர் பலர்.) மேனி திறந்து கிடந்தவர் கருப்பாய் ஆனதற்கு ஒரு வேதியியல் காரணம் உண்டு. வெய்யில் கூடக்கூட, தோலின் மேற்கிடக்கும் மெலனின் என்ற வேதிப் பொருள் தோலிலிருக்கும் நீர்மப் பொருளில் கரைந்து போகாமல், படிகத் துகள்களாய் திரைந்து போகிறது (திரைப்படுதல்>திரப்படுதல் = precipitation; திரப்பாடு = precipitate(n)). மெலனின் எனும் வேதிப்பொருள் திரையத் திரைய தோல் கருக்கும்; அது நீர்மத்தில் கரையக் கரையத் தோல் வெளுக்கும். ஆக நிறம் என்பது வெறுமே மெலனினுக்கு, தோலிலுள்ள கரைமையைப் (கரைமை = solubility; கரைவி = solute; கரைமம் = solvent) பொறுத்தது. இவ் வேதி வினையை ஊக்கப்படுத்தும் வினையூக்கி (catalyst) ஈரப்பதமும், சூரிய கதிரியக்கமும் (solar radiation) ஆகும். இவ் வேதிவினையால், உடலைச்சுற்றித் துணி போர்த்தியவரின் கொடிவழி பெரிதாகப் பெரிதாக, ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளில், அவர் இருந்த சூழமைவு காரணமாய், வடக்கே போகப் போக மாந்தரில் ஒரு சில இனத்தார் வெளுப்பாக மாறினர்; மொத்தத்தில், வெளுப்பும் ஆடையும் ஒன்றிற் கொன்று தொடர்பானவை (அவை ஒரு நாணயத்தின் இருபக்கம் போன்றவை).
நாளாவட்டத்தில், சூழமைவுகள் மாறிவர, மாந்தர் குறிஞ்சி வாழ்க்கையில் இருந்து இறங்கிவந்து முல்லை வாழ்க்கையில் நகரத் தொடங்க, வெம்மை நிலக் கருப்பரும், குளிர் நில வெள்ளையரும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் சூழ்நிலை ஏற்படத் தொடங்கியது. உடம்பைப் போர்த்திய வெள்ளையர், உடம்பைப் போர்த்தாத கருப்பரைப் பார்த்து ஏளனம் செய்வதும், அதன் விளைவால் போர்த்தாதவர் வெட்கப் படுவதும் பிறகுதான் ஏற்பட்டிருக்க வேண்டும். வெட்கம் என்ற உணர்வு, மாந்தக் குழுக்களின் உறுப்பினர் தொகை பெருகிய பின், வெவ்வேறு நிறம் கொண்ட குழுக்கள் சந்திக்கத் தொடங்கிய போது (ஓரளவு மொழி ஏற்பட்டிருந்த நிலையில்) தான் ஏற்பட முடியும்.
இச் சந்திப்பில், மாந்தரின் பேச்சு வழக்கில், ஆடை தோன்றிய காலத்தில், ஆடையுள்ள நிலைக்கு ஒரு சிந்தனையும் சொல்லும் ஏற்பட்டிருக்குமானால், ஆடையற்ற நிலைக்கும் ஒரு சொல்லும் ஏற்பட்டிருக்க வேண்டுமே என்ற கேள்வி நம்முள் எழும். அப்படி ஒரு சொல் ஏற்பட்டுத் தான் உள்ளது; ஆனால் அது நிறத்தை ஒட்டி ஏற்பட்டிருக்கிறது. 2 வெவ்வேறு குழுக்களும் ஒருவரை ஒருவர் இடையாடும் நிலை ஏற்பட்டு விட்ட காரணத்தால், அந்தப் பழைய நெடிய காலத்தில், உடம்பைப் போர்த்திய வெளுத்தவர், உடம்பைப் போர்த்தாத நிலையைக் "கருப்பர் நிலை" என்றே சொல்லத் தொடங்கினார். இது எப்படி என்றறிய சில இந்தையிரோப்பியச் சொற்களையும், தமிழியச் சொற்களையும் பார்ப்போம்.
அன்புடன்,
இராம.கி.
2 comments:
«ýÒûÇ ¸¢ðÎ «ñ½ÛìÌ,
¿¡ðÀð¼ À¢ýÉ¡Öõ ¿¢¨ÉÅ¢ø ¦¸¡ñÎ ±ýÛ¨¼Â À¢ýëðÎìÌ Å¢¨¼ ¾Ã Ó¨Éó¾¢Õ츢ȣ÷¸û. Á¸¢úÔõ ¿ýÈ¢Ôõ. þÐ ÌÈ¢ò¾ «Îò¾Îò¾ þΨ¸¸¨Ç ¬ÅÖ¼ý ±¾¢÷§¿¡ì̸¢§Èý.
¸Õ. ¬ÚÓ¸ò¾Á¢Æý
அன்பிற்குரிய ஆறுமுகம்,
வருகைக்கு நன்றி. ஓரளவாவது உன் கேள்விக்கு மறுமொழி இந்த இடுகைகளின் வழி கிடைக்கும் என்று எண்ணுகிறேன். உன் கருத்தைப் பின்னே எழுதுக.
அன்புடன்,
இராம.கி
Post a Comment