Monday, May 29, 2006

மின்னியல் உலகில் தமிழ் - 1

மொழியின் முகிழ்ப்பு:

மொழி என்னும் சொல் வாயிதழோடு இதழ் சேர்த்து, மூக்கொலி இழைய, எழும் "ம்" என்ற ஓசைக் குறிப்பில் தோன்றியது. இம்மைப் போலவே "ல்" எனும் இன்னொரு ஓசையும் தமிழில் முகமையானது. இல்லின் எச்சம் இன்றும் கூட நம்மிடையே (குறிப்பாகத் தமிழகத் தென் மாவட்டங்களில்) இருக்கிறது. நாவை மேலும் கீழும் அசைத்து மேல் அண்ணத்தைத் தொடுவதால் எழும் குலவை ஒலிக்கு, இந்த "ல்" என்பதே அடிப்படை. சுற்றத்தார், ஊரார் என எல்லோரும் கூடிக் கலந்து ஓபொலிகஔ என்று வாழ்த்துக் கூறும் தருணங்களில், குதித்து எழும்பும். குலவையை இந்தக் காலத்தில் "லுலுலுலு" என்று எழுத்து வடிவில் குறிப்பிடுகிறோம். லாலாலாப் பாடுவதும் ஆரோராப் பாடுவதும் கூடக் குலவையொலியின் நீட்சி தான்.

அறப் பழங்காலத்தில் இருந்தே, இம்மும் இல்லும் அ,இ,உ என்ற உயிர்களோடு உயிர்தரித்து (உச்சரித்து) வருவதாகவும், உயிரோசையை நிறுத்துவதாகவும், தமிழில் உணரப் பட்டன. இந்த வழியிலேயே இம்மும், இல்லும் உயிரோடு கலந்த சேர்க்கையாய் முல் என்ற வேர் (எப்படி எழுந்தது என்று இன்று விளக்க முடியாத படி) உருவாகி, ஓசை என்னும் பொருட்பாட்டைக் (meaning) குறிக்கத் தொடங்கின. ஓசை என்றவுடன், "அது நமக்குப் புரிவதாய் இருக்க வேண்டியதில்லை, ஆனால் நமக்குக் கேட்க வேண்டும்" என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும். இப்பொழுது கூட "என்னது, இவன் வாய்க்குள்ளே ஏதோ மொல்லுகிறான் (சில பேர் மெல்லுகிறான் என்று கூடச் சொல்லுவார்கள்), ஆனா நமக்கு விளங்கலையே" என்று சொல்கிறோம் இல்லையா? அந்த வாக்கின் பொருள் "சொல்பவனின் மொழி நமக்குப் புரியவில்லை" என்பதாகும். "மொலு மொலுவெனல்" என்பதை, இடை விடாது பேசுதல், தெளிவில்லாது பேசுதல் என்ற பொருட்பாடுகளில் அகர முதலிகள் பதிவாக்கி இருக்கின்றன. முல்>மொல்>மொலு>மொழு>மொழி என்ற வளர்ச்சியை தெளிவோடு பேசுதல் என்ற கருத்துக்கு இணையாக உணர்ந்து கொள்ள முடியும். மொழி என்ற சொல் மிக இயற்கையாக வாயொலிச் செய்கையைக் குறிக்க எழுந்தது.

முல் என்னும் வேரில் கிளர்ந்த சொற்கள் மிகப் பல. மூக்கோசை மிகுந்த ஒலிக் கலவையை, முக்குதல், முணங்குதல், முணுமுணுத்தல் என்ற சொற்களின் மூலமாய் முல் என்ற வேர் விரிக்கும். மொல்லுவது *மில்லுவதாக, மிழலுவதாக, மிழற்றுவதாக, மழற்றுவதாகத் திரிந்து இளங்குழந்தையின் மழலையைக் குறிக்கும். (மொழிக்கும் மழலைக்கும் உள்ள தொடர்பு இப்பொழுது புரிகிறதா?) அந்த முல் என்பதையே வாய் நிரம்ப வலுத்த ஓசையுடன் வெளியிடும் போது அது முழங்குவதாகவும், முழவுவதாகவும் சொல்லப் படும். மாந்த ஓசை மட்டுமல்லாமல், மொல் மொல் என்று மொத்தி வரும் ஓசையின் காரணமாய், ஒரு தோற் கருவி கூட முழவு என்றே சொல்லப் பட்டது.

மொழியின் உட்கிடக்கை:

இனி மொழி என்ற பொருளின் உட் கிடக்கையைச் சற்றே விரிவாகப் பார்ப்போம். மொழி என்பது மாந்தர் இருவருக்கிடையே நேரடியாக பரிமாறிக் கொள்ளும் ஒலிச் சேர்க்கைகளால் ஆனது என்று புரியும். ஆழமாகச் சொன்னால், சொல்ல விழையும் பொருட்பாடுகளை, நினைக்கும் கருத்துக்களை, இந்தச் சேர்க்கைகளின் வழியே ஒருவர் வாயால் வெளியிட, இன்னொருவர் அதைக் காதால் கேட்க, இருவரும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளுகிறார்கள். இந்தப் பரிமாற்றத்தில் ஒரு புரிதல் கிடைக்க வேண்டுமானால், இருவருக்குமிடையே ஏற்றுக் கொள்ளப் பட்ட ஒரு நடைமுறை (practice), ஒரு வழமை (tradition), ஒரு பின்புலம் (background) ஆகியவை இருக்க வேண்டும். நான் எந்தப் பொருளை, கருத்தைத் தெரிவிக்க ஒரு குறிப்பிட்ட வாயொலிச் சேர்க்கையை உருவாக்கினேனோ, அதே போல அந்தப் பொருளுக்கு, அந்தக் கருத்திற்கு நீங்களும் அதே போன்ற ஒரு கேட்பொலிச் சேர்க்கையை உருவாக்கி இருந்தால் தான் நான் சொல்லுவது உங்களுக்குப் புரியும். கேட்பொலிச் சேர்க்கையால் உங்கள் மூளையில் உருவாகும் விழும்பமும் (இந்தச் சொல் தான் பிம்பம் என்று வடமொழி உருவம் காட்டித் திரியும்), வாயொலிச் சேர்க்கையில் நான் எடுத்துக் கூறும் விழும்பமும் ஒன்றே போல் இருக்க வேண்டும்.

இந்த நடைமுறையும், வழமையும், பின்புலமும் ஓர் இனத்தின் நெடிய வரலாற்றால் ஏற்படுபவை. அப்படி ஒரு நடைமுறை, வழமை, பின்புறம் ஆகியவற்றை ஒருங்கே கொண்டவர்களை ஒரே மொழி பேசும் கூட்டத்தார், ஓரினம் எனச் சொல்லுகிறோம். எனவே மொழி என்பது ஆழ்ந்து பார்த்தால், இந்தக் காலத்தில் சிலர் விவரம் புரியாமல் சொல்லிக் கொள்வது போல, வெறும் மிடையம், பரிமாற்றம் மட்டும் அல்ல; இந்த ஒலிச் சேர்க்கை நம்முடைய நடைமுறை, வழமை, பின்புலம் ஆகியவை எல்லாம் பிசைந்த ஒரு கலவை. அதில் எது குறைந்தாலும் ஒருவர் சொல்லுவது இன்னொருவருக்குப் புரியாது. எங்கே எந்தப் பொழுதில் குலவை இடவேண்டும் என்பதும், எந்த இடத்தில் எந்த மாதிரிப் பேச வேண்டும் என்பதும், இன்னோரன்ன செயற்பாடுகள் எல்லாமும், ஒரு மொழியில் அடங்கியவை தான். மொழி என்பது வெறும் மிடையம் என்று சிலர் மேம் போக்காகச் சொல்லுவது சரியான கருத்தல்ல; ஆழ்ந்து ஓர்ந்து பார்த்தால் அந்தக் கருத்தின் பிழை நமக்குப் புரியும். இந்தப் புரிதலோடு இனி மொழி பற்றிய சமன்பாட்டைப் பார்ப்போம்:

அன்புடன்,
இராம.கி.

2 comments:

மஞ்சூர் ராசா said...

மின்னியல் உலகில் தமிழ் என்னும் அருமையான முக்கியமான பதிவை ஆரம்பித்திருக்கிறீர்கள்.

தமிழுக்கு நீங்கள் ஆற்றும் தொண்டை வெறும் வார்த்தைகளால் பாராட்டி தீர்க்க முடியாது.

விரைவில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்.

இராம.கி said...

அன்பிற்குரிய மஞ்சூர் ராசா,

உங்கள் கனிவிற்கு நன்றி. வாய்ப்புக் கிடைத்தால் சந்திப்போம்.

அன்புடன்,
இராம.கி.