Monday, May 29, 2006

மின்னியல் உலகில் தமிழ் - 4

உயிர்மெய் எழுத்துக்கள் எழுந்த காரணம்:

பனை ஓலை நறுக்கால் ஆன இந்த எழுது பொருள், உயிர்மெய் எழுத்தைக் கையாளுவதற்கும் மிகுந்த உதவி செய்தது. இந்தக் காலத்து அச்சில்,

அவனைச் சென்னையிலிருந்த போது பார்த்தேன்

என்று எழுதுவதை,

அவ்அன்ஐச்ச்என்ன்ஐய்இல்இர்உந்த்அப்ஓத்உப்ர்த்த்ஏன்

என்று மெய், உயிர் எழுத்துக்களை அருகருகில் எழுதி நீட்டாமல்

அவனசசனனயலரநதபதபரததன

என்று ஓலையில் எழுதி மேலும், கீழும், பக்கவாட்டிலும் சிற்சில குறியீடுகளைப் போட்டு, வெவ்வேறு உயிரொலிப்பைக் கொண்டு வந்து சொற்றொடர் நீளத்தைக் குறைக்க முடிந்தது. பெரும்பாலும் புள்ளியிடாமலே கூட, ஓலையில் எழுதவும் முடிந்தது. தமிழ்ச் சொற்களில் தனிமெய்யோடு அகரமேறிய மெய் எங்கெங்கு எப்படி வரும் என்ற ஒழுங்காலும், சொற்களும், சீருமாய் நிரையசைகள் எங்கு வரும், நேரசைகள் எங்கு வரும் என்ற ஒழுங்காலும், மெல்-வல் இணைகள் எங்கு வரும் என்பதில் இருந்த ஒழுங்காலும், எழுத்தில் புள்ளியைத் தவிர்ப்பதை நம்மவர் ஒரு பெரிய சிக்கலாய் உணரவில்லை. புள்ளிகள் இல்லாமலேயே ஓலைகளில் பல நூற்றாண்டுகள் எழுதினார்கள். (புள்ளி எப்பொழுது எழுந்தது என்ற வரலாற்றுச் சிக்கலுக்குள் நான் இப்போது போகவில்லை.)

ஓலையில் இப்படி அகரமேறிய மெய்களை எழுதி மேலும், கீழும், பக்கவாட்டிலும் ஒரு கோட்டை இட்டு (இந்தக் கோடே நாளாவட்டத்தில் கொக்கி, கொம்பு, கால், சுழி, கொண்டை எனச் சில குறியீடுகளாய் மாறியது) எழுதுவது, அன்றைய எழுது முறைக்கு ஒரு நேர்த்தியை, குறைந்த இடத்தில் நுணுக்கி எழுதி, நிறையப் புரிய வைக்கும் ஒரு சிக்கனத்தை, உருவாக்கிக் கொடுத்தது. இங்கே சுருக்கம் என்பது அன்றைய எழுது முறைக்கு ஒரு முகமையாகவே இருந்தது. சுருக்கம் கருதியே இலக்கியத்திலும், கல்வெட்டிலும், செப்பேடுகளிலும், சொல்லப் படுபவை பாக்கள் அல்லது பாக்களைப் போலவே ஆயின.

சுருக்கம் கருதியே தமிழ் போன்ற மொழிகளில் உயிர்மெய் எழுத்துக்கள் எழுந்தன. புணர்ச்சி இலக்கணமே, உயிர்மெய் எழுத்துகளுக்கு ஓர் அடையாளத்தைக் கொடுத்தது. (இந்தப் புணர்ச்சி இலக்கணம் அகரவரிசை எழுத்துள்ள மொழிகளுக்கு ஒரு பொருட்டாகவே தெரியாது.) மொத்தத்தில் எப்படி யோசித்துப் பார்த்தாலும், உயிர்மெய் எழுத்துக்கள் நம் மொழிகளுக்குள் புழக்கத்திற்கு வந்தது நாம் எழுதிய எழுது பொருளால் தான் என்பதை உணர முடியும். இதே வளர்ச்சி இன்னொரு வகையில் வேறு காரணங்களுக்காக, அரபி போன்ற மொழிகளிலும் ஏற்பட்டது. அடிப்படையில் மெய்களையே முன்னிறுத்தி உயிரை ஒட்டுக் குறிகளால் (அரபியில் அவை வெறும் புள்ளிகளும் சிறு கோடுகளும் தான்) குறிக்கும் பழக்கமும், வாக்கியம் அல்லது சில விதப்புச் சொற்களின் முதலில் மட்டுமே, உயிர் எழுத்து தன் உருவத்தைக் காட்டும் பழக்கமும் அந்த மொழிகளிலும் ஏற்பட்டன. (ஒட்டுக் குறிகளைக் கீற்றுக்கள் என்று என் தமிழ் இணையம் 2004 கட்டுரையில் குறித்திருக்கிறேன்.)

ஓலையில் இருந்து தாளுக்கு நகர்வு:

இந்திய எழுத்து முறைகள் எல்லாமும், இப்படி அகரமேறிய மெய்யோடு ஒட்டிய கீற்றுக்களால் அமைந்தன. நாளடைவில் மெய்யைச் சுற்றி இடப் பட்ட சிறுகோடுகள் பின்னிப் பிணைந்து வீச்செழுத்துக்களாய் மாறின. அதோடு இல்லாமல், ஓரெழுத்து இன்னொரு எழுத்தோடு பிணைந்து கூட்டெழுத்துக்கள் எனவும் ஆயின. பின்னாளில் அச்சு நுட்பம் வந்த பிறகு, வீரமா முனிவரின் முயற்சியால் தமிழ் மொழியில் இந்த வீச்செழுத்துக்கள் எல்லாம் அறவட்டாய் வெட்டப் பெற்று, கால், கொக்கி, சுழிக் கொக்கி, கீழ் விலங்கு, கீழ் விலங்குச் சுழி, கொம்பு போன்ற கீற்றுக்கள் அடையாளம் காட்டப் பட்டன. கிரந்தத்தின் நெருக்கத்தால் [கிரந்த எழுத்து நம்மூரில் எழுந்தது தான்; அது வடமொழியை எழுத, (கொஞ்சம் அழுத்திச் சொல்ல வேண்டும்; அது வடமொழியை எழுத உருவானது; தமிழை எழுத உருவானது அல்ல; தமிழரில் பலரே இதில் குழம்பிப் போய்க் கிடக்கிறார்கள்.) நம்மவரால் உருவாக்கப் பட்ட எழுத்து. கிரந்தத்தில் எழுதப்பட்ட வடமொழி நூல்களும் கணிசமானவையே. கிரந்தத்தை இன்றைய இந்தியவியல் புறக்கணித்துக் கொண்டிருக்கிறது. அதைத் தமிழ்கூறும் நல்லுலகம் தான் காப்பாற்ற வேண்டும்.] கொண்டை, சுழிக் கொண்டை போன்றவையும் ஏற்பட்டன. மேலே சொன்னவை போக, இரட்டைக் கொம்பு, ஐகாரக் கொம்பு, ஔகாரச் சிறகு போன்ற கீற்றுக்களை வீரமா முனிவரே முதன் முதலாய் உருவாக்கினார். ஆக இன்றைக்கு இருக்கும் உயிர்க் குறியீடுகள் வீரமா முனிவரின் தாக்கம் கொண்டவை. அந்த மாற்றங்கள் அச்சுத் தொழிலுக்கு பெருத்த உதவி புரிந்தன; ஏன், புரட்சியே புரிந்தன. நாமும் பெரியார் காலம் வரை அவற்றை எல்லாம் ஏற்றுக் கொண்டோ ம்.

இந்தக் கீற்றுக்களை, அகரமேறிய எழுத்துக்கு அருகில் எழுதத் தொடங்கியவுடன் எழுதும் வரியின் நீளம் கூடியது; இருந்தாலும் நாம் பொருட் படுத்தவில்லை. ஏனென்றால் நீளம் கூடிய காலத்தில், நம்முடைய எழுது பொருளும் அதற்குத் தக மாறி விட்டது; ஓலைக்கு மாறாக நம்மூரில், இதே காலத்தில், தாள் புழங்கத் தொடங்கியது. அச்சுத் தொழிலும் சம காலத்தில் வந்தது; தாளில் நீட்டி எழுதுவது, நமக்கு ஒரு பொருட்டாகவே அப்பொழுது தெரியவில்லை. இப்படி நீட்டி எழுதப்பட்ட மொழி, நடைமுறையில் இன்னும் மாறத் தலைப் பட்டது.

அந்த மாற்றத்திற்குப் போவதற்கு முன் ஒரு கருத்தைச் சொல்ல வேண்டும். எழுத்துக்கள் வெறுமே ஒருவழிப் பாதையாய் அல்லாமல், ஒருவரால் எழுதி இன்னொருவரால் படிக்கப் பிறந்தன. ஊடே வந்த அச்சுத் தொழில் இந்த மாற்றத்தை இன்னும் வேகப் படுத்தியது. வெவ்வேறு கையெழுத்துக்களை, அவற்றின் வீச்சுக் கூடும் போது, ஒழுங்கு முறை தவறி, கந்தர கோளமாய், கிறுக்கலாய் ஆகும் போது, எல்லோராலும் படிக்க முடியாமல் போக வாய்ப்பிருந்தது. இதை அச்சின் மூலம் தவிர்க்க முடிந்தது. ஏனென்றால் அச்சு எழுத்துக்கள் ஒரு செந்தர இடைமுகத்தைக் காட்டின. இப்பொழுது முன்னால் சொன்ன சமன்பாடு வேறொரு விதமாய் விரிந்தது.

எனக்குள் இருக்கும் விழும்பம் --> என் கை எழுத்து --> செந்தர அச்செழுத்து -> உங்களுக்குள் வந்து சேரும் விழும்பம்

செந்தர அச்செழுத்து, படிப்புச் சமன்பாட்டின் நேர்த்தியைக் (efficiency) கூட்டியது. தட்டச்சு முறை வந்த பின்னர், எழுதுதல் என்பது கூட பெரும்பாலான இடங்களில் மறைந்து விட்டது; அதற்கு மாறாக தட்டச்சில் உள்ள பொத்தான்களை அமுக்குவதன் மூலமாக, செந்தர அச்செழுத்துக்கள் நேரடியாகத் தாளில் கிடைக்கத் தொடங்கி விட்டன. இப்பொழுது படிப்புச் சமன்பாடு புதிய மட்டத்திற்கு வந்தது.

எனக்குள் இருக்கும் விழும்பம் --> தட்டச்சு --> செந்தர அச்செழுத்து -> உங்களுக்குள் வந்து சேரும் விழும்பம்

இந்த மாற்றம் கொஞ்சம் விதப்பான மாற்றம்; இதுவரை இருந்த கையெழுத்து வேறுபாட்டுத் தன்மை முற்றிலும் மறைந்து போயிற்று. முதன் முறையாக உயிர்மெய் எழுத்துக்களில் உள்ள ஒட்டுக் கீற்றுக்கள் முற்றிலும் ஒட்டி இருக்கத் தேவையில்லை, சற்று அருகிலும் இருக்கலாம் என்ற நிலை உருவாயிற்று. இந்த நிலையில், அதுவரை கீற்றுகள் ஒட்டியிருந்த ண், ற், ன் ஆகியவற்றின் ஆகார, ஒகர, ஓகார உயிர்மெய் வார்ப்புக்கள்(fonts), இன்னும் ல்,ள்,ன் ஆகியவற்றின் ஐகார வார்ப்புக்கள், ஆகியவற்றின் உருவங்கள் மாறத் தொடங்கின. தந்தை பெரியாரின் முயற்சியால், இந்தக் காலத்தில் உள்ளது போல், இந்த எழுத்து வார்ப்புகள் மாற்றப் பட்டன.

மேலும் ஒரு மாற்றமாய், இந்த வளர்ச்சியில் எல்லா உயிர்மெய் உகர, ஊகாரங்களும் வடிவ மாற்றம் பெற வேண்டும் என்று ஒரு சிலர் நெடு நாளாய்ச் சொல்லி வந்தார்கள். ஆனால் அது கடைசி வரை நடை பெறாமலே போய் விட்டது. இத்தனைக்கும் நமக்கு அருகில் உள்ள மலையாளத்தில், அந்த மாநில முதல்வர் அச்சுத மேனன் காலத்தில், எழுத்துச் சீர்த்திருத்தம் நடந்து உகர, ஊகாரங்கள் அங்கு மாறிப் போயின. இப்பொழுதும் கூட இளஞ் சிறாரைக் கருத்தில் கொண்டு, தமிழில் இந்த உகர, ஊகாரச் சீர்திருத்தம் வேண்டும் என்று சொல்லுவார் உண்டு.

அது வேண்டுமா, வேண்டாமா என்பது நுட்பியலைப் பொறுத்தது. இன்றைக்குத் தட்டச்சிற்கு அடுத்த நுட்பியலுக்கு நாம் போய் விட்டோ ம். தட்டச்சில் ணகரத்தையும், ஆகாரத்தையும் சேர்த்து அடித்தால், ணா என்றும் வரவழைக்கலாம்; அல்லது, இன்றையக் கணி வளர்ச்சியில் உருவான கீற்றொட்டு நிரலிகளை (collation programmes) வைத்துப் பழைய ணாகாரத்தையும் கொண்டு வரலாம். அதே போல ¸ (Àì¸ò¾¢ø ƒ¤ §À¡ýÈ ¦¸¡ñ¨¼¨Âô §À¡ðÎì ¦¸¡ûÙí¸û) என்றும் கொண்டு வரலாம்; கு என்றும் கொண்டு வரலாம். இதெல்லாம் கணி செய்யும் வேலைகள். அதாவது செந்தர எழுத்தைக் கணித் திரைக்குக் கொண்டு வரும் வேலையில் எத்தனையோ மாற்றங்களை நினைத்தபடி கொண்டு வரலாம் என்று ஆன பிறகு, உகர, ஊகார மாற்றம் தேவையில்லை என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. கணி என்ற ஒன்று, இந்த வேலையைச் செய்ய முடியாது என்றால், திரையில் வரும் உருவங்களைப் பிணைக்க முடியாது என்றால், இந்த உகர, ஊகார மாற்றங்களுக்கு ஒரு பொருள் உண்டு. நாம் தட்டச்சு, அச்சு என்ற நுட்பியலோடு மட்டுமே தேங்கி இருந்திருந்தால், இந்த மாற்றங்கள் தேவை தான். ஆனால், நாமோ கணி என்ற அடுத்த நுட்பியலுக்கு நகர்ந்து விட்டோ ம்; எனவே இந்த உகர, ஊகார மாற்றம் சிறார்களுக்கும் சேர்த்து தேவையில்லை என்பதே என் பரிந்துரை.

சரி இவ்வளவு முன்முகம் காட்டியபிறகு, மின்னியல் உலகிற்குள் தமிழ் என்னும் மொழி எப்படி வந்தது என்ற செய்தியைப் பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.

5 comments:

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

அருமையான தொடர். இனி வரும் பகுதிகளையும் ஆர்வமுடன் எதிர்நோக்குகிறேன். மொத்தமாகப் பல பகுதிகளையும் வெளியிட்டுவிட்டீர்கள் என்பதால் உடனடியாகப் படிக்க முடியாது போய்விட்டது.

உகர ஊகாரச் சீர்திருத்தங்கள் பற்றி நீங்கள் சொல்வது கவனிக்கத்தக்கது. பழகிய கீற்றுக்களில் இருந்து மாறிக் கொள்வதற்குச் சிரமமாய் இருந்தாலும், குழந்தைகளுக்காக என்று எளிமைப் படுத்தலாமே என்று தோன்றத் தான் செய்கிறது. வளரும் கணிநுட்பக் காலத்தில் அதற்கு அவசியம் இல்லை என்று சொல்கிறீர்கள். இருந்தும் ஆரம்பநிலை எழுத்து கற்றுக் கொடுக்க இன்னும் தாளையும் எழுதுகோலையும் தானே பாவிக்கிறோம்? வருங்காலத்தில் நேரடியாகக் கணினிக்குச் செல்லும் நிலையும் ஏற்படலாம்.

அயல் சூழலில் இருக்கிற எங்களின் குழந்தைகள் கூடப் போதுமான பயிற்சியளித்தால் உகர ஊகார உயிர்மெய்களை எழுதக் கற்றுக் கொள்கிறார்கள் என்பதைக் கவனிக்கிறேன். அந்த வகையிலும் சீர்திருத்தத்திற்கான காரணிகள் வலுவிழந்து போகின்றன. போதுமான நேரம் ஒதுக்கிப் பயிற்சியளிப்பதும், ஒரு உந்துதலை உருவாக்குவதும் தான் சவாலாய் இருக்கிறது.

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

அருமையான தொடர். இனி வரும் பகுதிகளையும் ஆர்வமுடன் எதிர்நோக்குகிறேன். மொத்தமாகப் பல பகுதிகளையும் வெளியிட்டுவிட்டீர்கள் என்பதால் உடனடியாகப் படிக்க முடியாது போய்விட்டது.

உகர ஊகாரச் சீர்திருத்தங்கள் பற்றி நீங்கள் சொல்வது கவனிக்கத்தக்கது. பழகிய கீற்றுக்களில் இருந்து மாறிக் கொள்வதற்குச் சிரமமாய் இருந்தாலும், குழந்தைகளுக்காக என்று எளிமைப் படுத்தலாமே என்று தோன்றத் தான் செய்கிறது. வளரும் கணிநுட்பக் காலத்தில் அதற்கு அவசியம் இல்லை என்று சொல்கிறீர்கள். இருந்தும் ஆரம்பநிலை எழுத்து கற்றுக் கொடுக்க இன்னும் தாளையும் எழுதுகோலையும் தானே பாவிக்கிறோம்? வருங்காலத்தில் நேரடியாகக் கணினிக்குச் செல்லும் நிலையும் ஏற்படலாம்.

அயல் சூழலில் இருக்கிற எங்களின் குழந்தைகள் கூடப் போதுமான பயிற்சியளித்தால் உகர ஊகார உயிர்மெய்களை எழுதக் கற்றுக் கொள்கிறார்கள் என்பதைக் கவனிக்கிறேன். அந்த வகையிலும் சீர்திருத்தத்திற்கான காரணிகள் வலுவிழந்து போகின்றன. போதுமான நேரம் ஒதுக்கிப் பயிற்சியளிப்பதும், ஒரு உந்துதலை உருவாக்குவதும் தான் சவாலாய் இருக்கிறது.

வெற்றி said...

இராம. கி அய்யா,
தங்களின் பதிவுகள் என்றாலே பல்கலைக்கழக பாடநூல்கள் போன்றவை. அருமையான பதிவு.
இப்படியான பதிவுகளைத் தரும் உங்களுக்கு என் நன்றிகள்.

நன்றி.

பணிவன்புடன்,
வெற்றி

இராம.கி said...

அன்பிற்குரிய செல்வராஜ்,

உங்கள் முன்னிகைக்கு நன்றி.

உகர, ஊகாரச் சீர்திருத்தங்கள் 1950 களில் நடந்திருந்தால், ஒருவேளை இன்றைக்கு ஏற்றுக் கொள்ளப் பட்டு நம்மவருக்குப் பழகிப் போயிருக்கும். இன்றைக்கு நுட்பம் மாறிப் போன நிலையில் இந்த மாற்றத்தால் பெரிதும் பயன் விளையப் போவதில்லை என்றே நான் எண்ணுகிறேன். நம்மில் பலரும், சிறார்களையும் சேர்த்துத் தான் சொல்லுகிறேன், பொத்தான்களை அமுக்கிக் கொண்டிருக்கிறோம். தூவல் வைத்து எழுதுவது என்பது குறைந்து போய்விட்டது. ஆவணங்களில் கையெழுத்துப் போடுவது, அச்சடித்த ஆவணங்களில் ஒரொரு சமயம் திருத்துவது போன்ற ஒருசில இன்றியமையாத வினைகளுக்கு மட்டுமே எழுதும் நிலை ஏற்பட்டு விட்டது.

ஆனாலும் சிலர் (குறிப்பாக நண்பர் நா, கணேசன் போன்றோர்) உகர, ஊகாரச் சீர்த்திருத்தம் பற்றிச் சொல்லிவருகிறார்கள்.

குழந்தைகளுக்கு எழுதப் பயிற்சி அளிப்பதில் நேரம் ஒதுக்குவதும், உந்துதல் ஏற்படுத்துவதும் பெற்றோரின் முனைப்பில் தான் இருக்கிறது.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய வெற்றி,

உங்கள் கனிவிற்கு நன்றி.

அன்புடன்,
இராம.கி.