Wednesday, May 03, 2006

தேர்தல் - 2006 : திருப்பு முனையாய் அமையுமா?

இன்னும் ஓர் ஐந்து நாட்கள் தான். ஊரெங்கும் கட்சிகளின் பரத்தம் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. (பரல்தல்>பரலுதல் = பேசுதல்; பர>பரையுதல் என்ற திரிவில் இன்னும் மலையாள மற்றும் ஈழ வழக்கில் இருக்கிறது. பரலுதல் என்பது பொதுவாகப் பலரும் அறியப் பரத்திச் சொல்லுவது. ஒருவருக்கு ஒருவர் சொல்லுவது அல்ல. பரல்த்தம்>பரல்த்தாரம்>பரத்தாரம்>பரச்சாரம் ஆகி அது வடமொழிப் பலுக்கில் ப்ரச்சாரம்>பிரச்சாரம் ஆகியிருக்கிறது) வாய்கிழியச் சத்தமாகப் பேசுவதும், அந்தச் சத்தத்தை இயல்பாகக் கொள்வதும், கேட்பதும் தமிழனுக்கே உரிய வழக்கம் தான். ஏதொன்றையும் மெதுவாகச் சொன்னால், தமிழர்கள் பொருட்படுத்த மாட்டார்கள்; "தம் குரலுக்குத் தாமே மயங்குபவர் தமிழர்" என்று கூட ஒரு சிலர் வேடிக்கையாகச் சொல்லுவது உண்டு.

இதற்கு இடையில், இரண்டு பக்கத்திலும் ஆட்கள் இடம் மாறிக் கொண்டிருக்கிறார்கள். கட்சிகள், முன்னணிகள், ஊர்வலங்கள், பேரணிகள், ஒலிபெருக்கிகள், பாட்டுக்கள், வசவுகள், வாக்குறுதிகள், தடந்தகைகள் (strategies), தந்திரங்கள் (tactics), சூழ்ச்சிகள், ஏமாற்றுக்கள், நடிப்புக்கள் என எல்லாமே மக்கள் முன்னால் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. மக்களாட்சி என்பது ஒருவகையில் கூத்துப் போலத் தான் இருக்கிறது. ஆனாலும் அது ஒரு சுகமான கூத்தோ, என்னவோ? யார் யாரோடு கூட்டுச் சேர்ந்திருக்கலாம், யார் தேருவார், யார் தேரமாட்டார், யார் தெரிவித்த தேர்தலறிக்கை நம்மைக் கவருகிறது, யாரார் எத்தனை கடைத் தேங்காயை வழிப்பிள்ளையாருக்கு உடைப்பார்கள், இலவயங்களை வீசியெறிவது எந்தப் பக்கம் கூடுதலாய் நடக்கிறது (நாளைக்கு எப்படி இந்த இலவயங்களைச் சரிக்கட்டுவார்கள் என்பது இன்னொரு கதை) என்ற அலசல்களும், உரையாடல்களும் நடக்கின்றன. இங்கு வலைப்பதிவுத் தளத்திலும் இவை எதிரொலிக்கின்றன.

தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று கணித்துச் சொல்லுவதைக் காட்டிலும், நாடு விடுதலை பெற்ற பின், தமிழ்நாட்டு அரசியல் களத்தில் நடந்திருக்கும் சில முகன்மையான (முகன்மை = main) நடப்புக்களை, திருப்பு முனைகளை, நினைவுக்குக் கொண்டு வந்து, இன்றையத் தேர்தல் என்ன வகையில் இன்னொரு திருப்புமுனையாய் ஆகமுடியும் என்ற எண்ணத்திலே இந்தப் பதிவை இடுகிறேன்.

1. 1930 களில் சென்னை மாகாணத்தில் இருந்த நயன்மைக் கட்சியோடு (நயம்>நயன்மை; நியாயம் என்ற வடசொல் பிறந்த வகை: நயம்>நாயம்>ந்யாயம்>நியாயம் = justice; நீதி என்னும் வடசொல் பிறந்ததும் அதே தமிழ் அடிச்சொல்லில் தான்; நயம்>நயதி>ந்யதி>நியதி>நீதி = justice; நீதிக் கட்சி - Justice party) மல்லாடிக் கொண்டிருந்த பேராயக் கட்சி (Congress party) 1942-ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்கு அப்புறம் அரசியல் அரங்கில் தலைமை நிலை எய்தி, நயன்மைக் கட்சியை ஒரேயடியாகச் சாய்த்து, அன்றைய மக்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்தது. அதற்கு அப்புறம் விடுதலை வரும் வரை, ஏன் 1957 வரையில் கூட, பேராயக் கட்சிக்கு ஏறுமுகம் தான். பேராயக் கட்சியின் தலைமையில் விடுதலை பெற்றது இங்கு முதல் திருப்பு முனை.

2. அதன் விளைவால், கொஞ்சம் கொஞ்சமாக நயன்மைக் கட்சி அரசியல் களத்தில் இருந்து பின்வாங்கி, குமுகப் போராட்டங்களில் மட்டுமே கருத்துக் கொண்டு, தன்னைத் திராவிடக் கழகம் எனப் பெயர் மாற்றிக் கொண்டு, செயலாற்றத் தொடங்கியது. இதுவும் நம் மாநில வரலாற்றில் ஒரு திருப்பு முனை தான். [இன்றைய இளைஞர்கள் பலருக்கும் திராவிடக் கழகம் (என்ற நயன்மைக் கட்சி) ஒரு காலத்தில் மாகாணத்தை ஆளும் அரசியல் கட்சியாகச் செயல்பட்டது என்பது தெரியாமல் இருக்கலாம். உண்மையில் பேராயக் கட்சி அளவிற்குக் கொடிவழி கொண்டவை திராவிட இயக்கங்கள். அவை நேற்று முளைத்த காளான்கள் அல்ல.]

3. நயன்மைக் கட்சி திராவிடக் கழகமாக மாறிய நேரத்தில், சென்னை மாகாணச் சட்டப் பேரவையில், பொதுவுடைமைக் கட்சியே முகன்மை எதிர்க்கட்சியாய் இருந்தது. ஒரு காலத்தில் பேராயத்திற்குள்ளேயே உட்கட்சியாக இருந்த பேராயச் சமவுடைமைக் கட்சியில் (Congress Socialistic Party), ஒரு சிலர் விடுதலைக்குச் சற்று முன்னால் தனியே பிரிந்து, இந்தியப் பொதுவுடைமைக் கட்சியை (Indian Communistic Party) உருவாக்கினார்கள்; மற்ற சமவுடைமையாளர்கள்,(Socialists) லோகியா போன்றோரின் முயற்சியில், சமவுடைமைக் கட்சியை (Socialistic Party) உருவாக்கினார்கள். இவர்கள் தான் பின்னாளில் உடைந்து இரண்டாகிப் பின் பலவாகி, மீண்டும் சேர்ந்து, முடிவில், சனதாக் கட்சியாய் மறுவுருவம் பெற்றார்கள். (இந்தியாவின் இன்றையப் பெரும்பான்மை அரசியல் கட்சிகள் பேராயக் கட்சியில் இருந்தும், நயன்மைக் கட்சியில் இருந்தும் தான் பிறந்தன). பேராயத்தில் இருந்து பொதுவுடைமைக் கட்சியும், சமவுடைமைக் கட்சிகளும் தனித்துப் போனது இன்னொரு திருப்பு முனை. (இன்றைய பாரதிய சனதாக் காட்சியின் முன்னாள் நிலையும், பேராயக் கட்சியின் வலது சாரி முனையில் இருந்து கிளைத்தது தான்.)

4. தேர்தல் அரசியலில் ஈடுபட்டு, முதலாளிய மக்களாட்சியில் ஈடுபடுவதாக முழங்கிய பொதுவுடைமையர், அவர்களின் செயலாளர் பி.டி.ரணதிவே யின் நிலைப்பாட்டிற்கு மாறி, 1949 தெலிங்கானாப் புரட்சியில் இறங்கினார்கள். இதன் விளைவாய், பொதுவுடைமைத் தலைவர் பலரும் நிலத்தடி (underground) வாழ்க்கைக்குப் போகத் தொடங்கினார்கள். இந்த நிலையில் சட்ட பூருவமான அரசியல் அரங்கில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டது. இது அடுத்த திருப்பு முனை; தமிழ்நாட்டையும், தென்னிந்தியாவையும் பொறுத்த அளவில் இது கொஞ்சம் ஆழமான திருப்பு முனை.

5. பேராயத்திற்கு எதிரான அரசியலில், நாடு விடுதலை பெற்றிருந்த தொடக்க காலங்களில், பொதுவுடைமைத் தலைவர்கள் பெரிதும் மக்களை, குறிப்பாகத் தென்னிந்திய மக்களை, ஈர்த்து இருந்தார்கள். ஒரு காலத்தில் தமிழ் பேசும் பகுதிகளும் மற்ற மொழி பேசும் பகுதிகளைப் போலவே, சென்னை மாகாணத்தில், இடது சாரிச் சிந்தனையில் பெரிதும் ஈடுபட்டு இருந்தார்கள். திடீரென்று பொதுவுடமைத் தலைவர்கள் நிலத்தடிக்குப் போனபின், நிலத்திற்கு மேலிருந்த அவர்களின் செயற்பாடுகளைத் தொடர்வதற்கு ஆட்கள் இல்லாமற் போனார்கள். இந்த இல்லாமையைத் தங்களுக்கு வாய்ப்பாய்த் திராவிட இயக்கங்கள் ஆக்கிக் கொண்டன.

6. விடுதலை பெற்று ஒன்றிரண்டு ஆண்டுகளில், திராவிடர் கழகம் அந்தக் கட்சிக்குள் இருந்த உள்முரண் காரணமாய் 1949ல் இரண்டாக உடைந்தது. ஒரு பக்கம் பேராயத்திற்கு எதிராக அதுகாலம் வரை இருந்த திராவிடர் கழகம், இன்னொரு பக்கம் திராவிடக் கழகத்தில் இருந்து எழுந்த கிளை இயக்கமாக திராவிட முன்னேற்றக் கழகம் என இருவேறு நிலைப்பாட்டில் கட்சி உடைந்தது. ஆனாலும் ஒரு கிடுக்க அளவைப் (critical size) பெறமுடியாமலே தி.மு.க. நெடுநாள் இருந்தது. நாளடைவில் தி.க. தன்னுடைய பார்ப்பனிய எதிர்ப்பின் காரணமாய், ஆச்சாரியாருக்கு மாறானவரான பெருந்தலைவர் காமராசரைத் தன் முன்னணியாக எண்ணி, பேராயத்தை ஆதரிக்கத் தொடங்கிற்று. தி.மு.க. பேராய எதிர்ப்பு நிலையைத் தொடர்ந்தது. (பின்னாளில் ஆச்சாரியாரின் ஆதரவையும் பெற்றது.)

7. நாடு தன்னாளுமை பெற்ற பிறகு, எங்கணும் பெரும்பான்மை பெற்று ஆண்டு வந்த பேராயக் கட்சி, முற்று முழுதாக நயன்மைக் கட்சியை ஒழித்துவிட்டோம் என்று செம்மாந்திருந்த பொழுதில், நயன்மைக் கட்சி திராவிடக் கழகமாக மாறிப்போன நிலையில், அது சூல் கொண்டு நயன்மைக் கட்சிக்கு ஒரு புதிய மகவு பிறக்கும், அது மீண்டும் ஒருமுறை தங்களைச் சாடும், என்று பேராயக் கட்சியினர் எதிர்பார்த்திருக்கவில்லை. 1949ல் பிறந்த தி,மு.க. கிளைத்துப் பின் 1952ல் சற்றே மலர்ந்து 1957ல் குறிப்பிடத் தக்க வகையில் சட்டப் பேரவையில் உறுப்புமை பெற்றார்கள்.

8. இடையில் பொதுவுடைமைத் தோழர்கள் நிலத்தடி வாழ்க்கைக்குப் போனநிலையில் ஏற்பட்ட வெற்றிடத்தை, தி.மு.க. பற்றிக் கொண்டது. வாய் நிறையப் பொதுவுடைமைக் கொள்கைகளை எடுத்தோதி, தோழர்களுக்கு முகவர்கள் போலவே தி.மு.க. தலைவர்கள் பங்காற்றினார்கள். கொஞ்சம் கொஞ்சமாய், பொதுவுடைமையர் மேலிருந்த ஈர்ப்பு இடம் மாறித் தி.மு.க. மேல் மக்களுக்கு ஏற்பட்டது. பின்னால் ரணதிவே பாதையை மறுதலித்து பொதுவுடைமையர் தேர்தல் அரசியலுக்கு வந்த போது தான், "எப்பேர்ப்பட்ட தவற்றைச் செய்தோம், எப்படி ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தி, அதில் ஒரு குட்டி முதலாளியக் கட்சியை ஊன்றி வைத்தோம்" என்று உணர்ந்தார்கள் ["காத்திருந்தவன் பெண்டை நேற்று வந்தவன் கொண்டு போனான்" என்று தமிழில் ஒரு சொலவடை உண்டு.] ஆனால் பொதுவுடைமையர் அதை உணரும்போது பாலத்தின் அடியில் வெள்ளம் பெருகி ஓடிவிட்டது. அன்று இழந்ததை இன்றுவரை பொதுவுடைமையரால் தமிழகத்தில் கைப்பற்ற முடியவில்லை. (பொதுவுடைமையர் அன்று இழந்ததை திராவிட இயக்கங்கள் எடுத்துக் கொண்டது போல், இன்று திராவிட இயக்கங்கள் இழந்து கொண்டிருப்பதில் கொஞ்சமேனும் தான் எடுத்துக் கொள்ள தே.மு.தி.க. முயலுகிறது.)

9. அன்றைக்கு எழுந்த தாக்கம் 1957ல் நல்ல விளைச்சல் கண்டு, அதன்பின் பத்தே ஆண்டுகளில், குறிப்பாக 1965 க்குப் பின் இரண்டே ஆண்டுகளில் வியக்கத் தக்க வளர்ச்சி பெற்று பேராயக் கட்சியைத் தலையெடுக்க விடாமல் திராவிட முன்னேற்றக் கழகம் 1967ல் சாய்த்தது. 1967ல் நடந்த ஒரு தேர்தல் மாநிலத்தின் தலை விதியையே தலைகுப்புற மாற்றியது. அதன் தாக்கம் இன்றுவரை பெரிது. பாவலர் ஏறு பெருஞ்சித்திரனார், பின்னால் அறிஞர் அண்ணாவைப் பற்றி இரங்கற்பா பாடியபோது சொல்லுவார்:

இவன்யார் என்குவீர் ஆயின் இவனே
பேராயம் என்னும் பெரும்பெயர் களிற்றை
ஆரமர்க் களத்தே அலறக் கிடத்தி
ஊராயத் திருத்தி உருக்குலைத் திட்டுத்
தமிழக வரசைத் தலைமுதல் நிறுத்திய
அமிழா நெடும்புகழ் அண்ணாத் துரையே!

உண்மை. பேராயக் கட்சி உருக்குலைந்தது. இத்தனை ஆண்டுகள் கழிந்தும் அது மீண்டு எழ முடியாமல் இருக்கிறது. அதனால் தான் 1967 தேர்தல் ஒரு முகன்மையான திருப்பு முனை என்று சொல்லுகிறோம்.

10. அறிஞர் அண்ணா கிட்டத் தட்ட 1 1/2 ஆண்டுகளே அரசு கட்டிலில் இருந்தார். அவர் என்ன செய்திருப்பார், எப்படி இந்த மாநிலம் மாறியிருந்திருக்கும், என்றெல்லாம் இன்று சொல்ல முற்படுவது ஒருவகையில் பார்த்தால் கற்பனை வாதமே; ஆனாலும் திடீர் என அவர் உயிர்பிரிந்த போது, மக்கள் அவர்மேல் இன்னதென்று சொல்ல முடியாத ஆழ்ந்த ஈர்ப்பைக் காட்டியது உண்மை. அப்படி ஓர் ஈர்ப்பை அவருக்கும், அவருக்குப் பின்னால் மா.கோ.இரா.விற்கு மட்டுமே தமிழ்நாட்டு மக்கள் காட்டினார்கள்.

11. அண்ணாவிற்குப் பிறகு அவர் கட்சியின் மேம்போக்கான, ஆழமற்ற, அரிதாரப் பூச்சுத் தனமும், ஒருவித மரபுசாரா கொத்துப் பாட்டாளி மனப் போக்கும் (non-traditional lumpen proletariat mentality) எப்பேர்ப்பட்ட விளைவுகளுக்குக் கொண்டு சேர்க்கும் என்று யாரும் உணரவில்லை. கட்சியில் இரண்டு அணிகள் எழுந்தன. ஒரு அணி பேராயக் கட்சியோடு சமதானப் போக்கு கொள்ளத் துடித்தது. முடிவில் அந்த அணி வலுவிழந்து அழிந்து போய், பேராயக் கட்சியில் போய்ச் சேர்ந்து கொண்டது. இன்னொரு அணி, கலைஞர் கருணாநிதியால் ஆளுமை செய்யப் பட்டு முன்நிலைக்கு வந்தது. இந்த அணி கொஞ்சம் கொஞ்சமாய் தன் கொள்கைகளை நீர்த்துக் கொண்டே வந்தது; வெறும் ஆரவாரங்களுக்கே தம்மை ஆட்படுத்திக் கொண்டு, தன் இருத்தலைக் காப்பாற்றுவது (self-preservation) மட்டுமே அரசியல் என்ற முறையில் திராவிட இயக்கங்கள் பின்னாளில் மாறிப் போயின. அவற்றிற்குக் கொள்கைகள் என்பவை ஒரு வாய்ப்பாக, ஏந்தாக இருந்தனவே தவிர, மயக்கத்திற்கு ஆட்படாத அடிப்படைகள் என்று கொள்ளப் படவில்லை.

12. கலைஞரின் அணுகுமுறை தொடக்க காலத்தில் சரியாகத் தான் இருந்தது; ஆனால் நாளாவட்டத்தில் அரசின் நடைமுறைகள், பணிகள், அதிகாரிகளின் தூண்டுதல்கள், அரசின் வளர்ச்சிப் பணிகளில் ஊடுவரும் ஒப்பந்தக் காரர்களின் தாக்கம் ஆகியவை கட்சிக்குள்ளும், குறிப்பாக மேலிடத்திலும், பெரிதும் இருந்தன. கொஞ்சம் கொஞ்சமாக கொள்கையில் நீர்த்தலும், தன்முனைப்புச் செயல்களும், பணம் ஒன்றே எல்லாவற்றையும் சாதிக்கும் என்ற எண்ணமும் மேலோங்கின. இந்த எண்ணங்கள் மேலோங்கினாலே, அப்புறம் யாருக்கு எது, எவ்வளவு பங்கு, என்ற பிரிவுகள் ஏற்படத்தானே செய்யும்? ஒரு மூன்று, நான்கு ஆண்டுகளிலேயே கட்சி மீண்டும் உடைந்தது. மா.கோ.இரா. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார். இந்த முறை ஏற்பட்ட உடைப்பு சம்பத் காலத்தைக் காட்டிலும் ஆழமாய் தி.மு.க.வைத் தாக்கியது. இன்றுவரை அதன் தாக்கம் நீடிக்கிறது.

13. பொதுவாக, கட்சி கட்டி ஏற்பட்ட இந்தப் பிரிவைப் பலரும் தென்மாவட்டங்களில் இருக்கும் ஒரு குமுகத்தில் அண்ணன்/தம்பிகளுக்கு இடையே ஏற்படும் சண்டைக்கு ஒப்பாகச் சொல்லிப் பேசுவார்கள். காரணம் இல்லாமல் "தேவர்மகன்" படம் தமிழ்நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அது ஒரு குமுக அரசியல் திரைப்படம். அதில் பெரிய தேவருக்கும், சிறிய தேவருக்கும் ஏற்படும் முரண்பாடுகளும், ஒருவருக்கொருவர் (இதில் பெரியவர் ஒழுங்கு, சிறியவர் மட்டுமே பிறழ்ச்சி கொண்டவர் என்பது ஒருபக்கச் சாய்வானது. இருவருமே ஒருவரின் நிலைப்பு, இன்னொருவருக்கு ஆகாது என்ற எண்ணம் கொண்டவர்கள் தான்.) ஊறுகள் செய்து கொண்டு, அதன் மூலம் ஊருக்கே கேடு விளைவித்துக் கொண்டிருப்பார்கள்; இந்தப் பங்காளிச் சண்டை, அண்ணன் - தம்பிச் சண்டை அப்படியே தமிழ்நாட்டு அரசியல் களத்திலும் நடைப்பெற்றது. கழகங்களுக்கு இடையே 1971-72 தொடங்கிய இந்தச் சண்டை, முன்னரே சொன்னது போல் இன்னொரு திருப்புமுனை

14. இரண்டு மூன்று ஆண்டுகளிலேயே, இந்தச் சண்டையின் வீச்சை மா.கோ.இரா. புரிந்து கொண்டார். இதைக் கட்டுக்குள் கொண்டுவர, ஓர் எழுதப் படாத சமதான உடன்படிக்கையை அவர் மேற்கொண்டார். சண்டையின் வெளிப்பாடு வரம்பு மீறி, வஞ்சம் தீர்க்கும் வகையில் போகாதவாறு, பார்த்துக் கொண்டார். எப்பொழுதெல்லாம் அது எல்லை மீறுவதாகத் தெரியுமோ, அப்பொழுது அமைதி நடவடிக்கை எடுத்துச் சண்டையை ஒரு கட்டுக்குள் வைத்துக் கொண்டார். இந்த ஏற்பாட்டில் 12,13 ஆண்டுகள் ஓடிப் போனது. எதிர்ப்பது போல் நடந்து கொள்வதும், அது ஓரளவிற்கு மேல் போகாமல் பார்த்துக் கொள்ளுவதும் நடைமுறையாயிற்று. அவர் இருக்கும் வரை தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரமுடியவில்லை.

15. இந்தக் கட்டுப்பாடான நடைமுறையைப் பின்னால் நெடுநாளைக்குத் தொடர முடியவில்லை. மா.கோ.இரா. விற்கு அப்புறம் ஏற்பட்ட அவர் கட்சிக் குழப்பத்தில் இரண்டு அணிகள் பிரிந்து, ஓரணி அழிந்து, முடிவில் செல்வி செயலலிதாவின் அணி முன்னிலைக்கு வந்தபோது, ஏற்கனவே செய்திருந்த சமதான நடவடிக்கை மறக்கப் பட்டு இரு கழகங்களின் போக்குகளும், வரம்பு மீறின; வஞ்சம் கொள்ளும் நிலைக்கு அவை போய்ச் சேர்ந்தன. ஆங்கிலத்தில் சொல்லுவது போல் "no holds barred" என்ற நிலைக்கு இருவருமே வந்து சேர்ந்தார்கள். புறநானூற்றில் நலங்கிள்ளிக்கும், நெடுங்கிள்ளிக்கும் இடையே நடந்த சண்டையில் கோவூர் கிழார் கூறிய வரிகள் இப்பொழுது நினைவிற்கு வருகின்றன.

இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்
கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்
நின்ன கண்ணியும் ஆர் மிடைந்தன்றே, நின்னொடு
பொருவோன் கண்ணியும் ஆர் மிடைந்தன்றே
ஒருவீர் தோற்பினும் தோற்பது நும் குடியே
இருவீர் வேறல் இயற்கையும் அன்றே, அதனால்
குடிப்பொருள் அன்று நும் செய்தி கொடித்தேர்
நும்மோர் அன்ன வேந்தர்க்கு
மெய்ம்மலி உவகை செய்யும் இவ்விகலே

16. இதற்கு இடையில் தி.மு.க.வின் தனி வாக்கு வங்கி கொஞ்சம் கொஞ்சமாய் ஒவ்வொரு தேர்தலிலும் குறையத் தொடங்கியது. இதே போல பேராயக் கட்சியின் வாக்கு வங்கியும் அதன் உட்குழப்பங்களாலும், திராவிடக் கட்சிக்களின் மேல் பச்சைக் குதிரை ஆடியே பழகியதாலும், குறையத் தொடங்கியது. இந்த நிலையில் எழுந்த ம.தி.மு.க, பா.ம.க., இன்னும் விடுதலைச் சிறுத்தைகள், ஓரளவு புதிய தமிழகம் போன்ற கட்சிகள் தங்கள் வாக்குகளைக் கொஞ்சம் கொஞ்சமாய்க் கூட்டிக் கொள்ள முயன்றார்கள்.

17. இன்றைக்கு இரண்டு கழகங்கள் தான் பெரிய கட்சிகளாய் இருக்கின்றன. அவர்களின் தலைமையில் தான் அணிகள் உருவாகின்றன. ஆனாலும் இவர்களுடைய பங்காளிச் சண்டையால் 1972- இருந்து 2006 வரை மாநிலம் இழந்தவை மிகப் பல.

18. இவர்களின் சண்டையைத் தங்களுக்கு வாய்ப்பாய்ப் பயன்படுத்திக் கொண்டு அண்டை மாநிலங்களும், நடுவண் அரசும் தமிழ் மாநிலத்தை ஏமாற்றியே வந்திருக்கின்றன. காவிரி நீர்ச் சிக்கல், முல்லைப் பெரியாறு, தெலுங்கு கங்கை, 1972-ல் இருந்து இன்றுவரை நடுவண் அரசின் பெருநிறுவனங்கள் ஒன்றைக் கூட தமிழ்நாட்டில் மானுருவாக்கம் (manufacture) செய்யும் வகையில் கொண்டு வராதது எனப் பல செயற்பாடுகளைச் சொல்ல முடியும். மிக அண்மைக் கால எடுத்துக் காட்டு: இரண்டு நாட்களுக்கு முன் நடுவண் அரசு பாறைவேதியல் ஆர மையங்களை (petrochemical radial hubs) அறிவித்திருக்கிறது. அதில் குசராத்-மகாராட்டிரத்திற்குத் தோதாய் தாகேஜ், கர்நாடகத்தில் மங்களூர், கேரளத்தில் கொச்சி, ஆந்திரத்தில் விசாகப் பட்டினம், ஒரிசாவில் பாரதீப், வங்காளத்தில் ஆல்தியா, பாஞ்சாலத்தில் பானிபட் என ஏழு இடங்களை அறிவித்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து, ஒரு எண்ணுரோ, சென்னையோ, கடலூரோ, தூத்துக்குடியோ ஒன்றுகூட இடம்பெறக் காணோம். இது எப்படி நடந்திருக்கக் கூடும் என்று எண்ணுகிறீர்கள்? "இந்தத் தமிழர்கள் அடித்துக் கொண்டு சாவார்கள், இவர்களில் ஒருவரை ஏவிவிட்டு இன்னொருவரைச் சாய்க்கலாம்" என்ற மிதப்புத் தான் காரணம். பொதுவாக மாநிலத்திற்குள் எத்தனை சண்டை போட்டாலும், மாநிலத்திற்கு வெளியில் ஒரே விதக் கருத்தைத் தான் அண்டை மாநிலத்து அரசியல்வாதிகளோ, இன்னும் மற்றவரோ சொல்லுவார்கள். நம்மவர்கள் சண்டையோ என்றும் மாறாத பங்காளிச் சண்டையாய் இருக்கிறது. விளைவு, எனக்கு ஒரு கண் போனால் மற்றவனுக்கு இரண்டு கண் போக வேண்டும் என்ற வெஞ்சினம் எங்கும் விரவிக் கிடக்கிறது.

19. இரண்டு கழகத்தாரும் தங்களுடைய கல்விக் கொள்கையில் பெரிதும் சரிந்து கல்வி வணிகர்களைப் பெருக்கி மடிக்குழைப் (matriculation) பள்ளிகளை இந்த 20, 25 ஆண்டுகளில் புற்றீசல் போல வர விட்டு தமிழை ஒன்றுமில்லாமல் செய்து விட்டார்கள். இவர்களுக்கு பேராயக் கட்சி ஒழுங்கு போலிருக்கிறது. அவர்களின் தேர்தல் அறிக்கையில் ஐந்தாவது வரை தமிழைப் பாடமொழியாய் மாநிலம் எங்கும் ஆக்குவோம் என்று உறுதி அளித்திருக்கிறார்கள். தமிழ், தமிழென்று பேசியே தமிழைத் தொலைத்தவர்கள் இந்த இரு கழகங்களே.

20. மாநிலத்தின் நீர்வளம் வெகுவாகக் குறைந்து வருகின்ற காலத்தில் அதை மேம்படுத்தும் வகையில் தடுப்பணைகள், நீர்த்தேக்கங்கள், காடுவளர்ப்பு போன்றவற்றை மேம்படுத்தாமல், ஒரே பயிராக இல்லாமல் பல்வேறு பயிர்களை மாநிலத்தில் பரப்பி, குறிப்பாகக் காய்கறிப் பயிர்களை பெரிதும் விளைவாக்கம் செய்து அவற்றைக் காப்பாற்றி, அவற்றின் நுகர்பருவத்தைக் (consumption period) கூட்டுமாப் போல குளிர்பதன அறைகளை (cold conditioning rooms) ஒவ்வொரு சிறுநகரத்திலும் ஏற்படுத்தாமல் - மொத்தத்தில் வேளாண் இயலில் எந்த நீண்ட கால முயற்சியும் எடுக்காமல், மக்களை இலவயங்களுக்கு ஏங்க வைத்தது மிகக் கொடுமை.

21. மாநிலத்தின் தொழில்துறையை வளர்க்காமல், இங்கேயே பலவற்றை மானுருவாக்காமல் (தான்நகர்ச்சி - automibiles - வண்டிகள் துறையும், இன்னும் ஒரு சிலவும் வளர்ந்தது ஒரு புறனடை) வெறுமே உள்ளுரும நுட்பியலையும் (information technology) , பொதினச் செலுத்த வெளியூறலை (Business process outsourcing) மட்டுமே நம்பிக் கொண்டிருப்பது ஒரு வீக்கமே ஒழிய வளர்ச்சியல்ல. இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் இந்தியத் தொழிற்துறைக்கு எந்தச் சேவையும் செய்யவில்லை; இவர்கள் எங்கோ இருக்கும் மேல்நாட்டுத் தொழிற்துறைக்கு சேவை செய்துகொண்டு இருக்கிறார்கள். இன்றைக்கு மணிக்கு 8 வெள்ளி என்று கூலி பேசும் இவர்கள், நாளைக்கு யாரோ ஒரு நாடு மணிக்கு 7 வெள்ளி என்ற கூலிக்கு ஒப்புக் கொண்டால் எல்லாவற்றையும் இழுத்து மூட வேண்டியிருக்குமே? பழைய மாமல்லபுரம் சாலை அப்புறம் என்ன ஆவது? நம்மூரில் தொழில் வளர்ச்சி ஏற்படாமல், வெறுமே உள்ளுரும நுட்பியல், வெளியூறலில் வளர்ந்து கொண்டிருந்தால் என்ன பலன்? இது பற்றி இரு கழகங்களுக்குமே கருத்து இருப்பதாய்த் தெரியவில்லை.

22. இந்த மாநிலத்தின் நெசவுத் தொழில் மிக முகன்மையானது. இந்தியாவில் விசைத்தறி அளவில் மூன்றாவது இடத்தை வகிக்கிறது. ஆனால் வெறுமே பருத்தித் துணி நெசவிலேயே தமிழ்நாட்டு விசைத்தறியாளர் இருந்து, பாலியெஸ்டர் நெசவிற்குள் ஆழமாகச் செல்லாமல், இந்த மாநிலத்தின் நெசவுத் தொழிலைச் சரி செய்யமுடியாது. பொதுவாக, இரண்டு கழகங்களுக்குமே நெசவுத் தொழில் பற்றிய நீண்ட கால நோக்கு இருப்பதாகத் தெரியவில்லை. இதிலும் இலவயங்கள், வரி மாற்றம் என்று செக்கில் சிக்கிய மாட்டைப் போலச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டே இருக்கிறார்கள்.

23. அடிப்படை வேலைகளில் மிகவும் தேவையானது போக்குவரத்து பற்றியது. இதிலும் ஒரு நீண்ட கால நோக்கு இருப்பதாகத் தெரியவில்லை. குறிப்பாக இரண்டு வகை பற்றிச் சொல்ல வேண்டும். ஒன்று நாட்டுப்புறங்களில் பயன்படும் சிறு பேருந்துகளின் சேவை பற்றியது; இன்னொன்று பெருநகரங்களில் இருக்கும் நகரப் பேருந்து சேவை பற்றியது; "கோரப் பசிக்குச் சோளப்பொரி" என்பது போல் தான் இந்த இரு சேவைகளும் இருக்கின்றன.

24. இப்படி ஒவ்வொரு தேவையையும் பற்றிச் சொல்லிக் கொண்டே போவது, இந்தப் பதிவின் நோக்கம் இல்லை. இந்த மாநிலம் முன்னேற வேண்டுமானால், முதலில் இங்கே நிலவும் பங்காளிச் சண்டை நிறுத்தப் படவேண்டும். அதற்கு ஒரே வழி இந்த இரு கழகங்களின் வல்லாண்மை குறைக்கப் படவேண்டும். அதாவது தனித்து இருந்து ஆட்சி அமைக்கக் கூடிய வல்லமை குறைக்கப் படவேண்டும்.

25. எனவே என்னுடைய பரிந்துரை: இன்றைய நிலையில் இரண்டு பெரிய கழகங்களைத் தவிர்த்து மற்ற கட்சிகளை, அதாவது பேராயக் கட்சி, இந்தியப் பொதுவுடைமைக் கட்சி, இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சீயர்), மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், இன்னும் சிறிய கட்சியினர் வெல்லுவது நல்லது என்றே நான் நினைக்கிறேன். இப்படி நடந்தால், தி.மு.க.வோ, அ.தி.மு.க.வோ ஆகிய எந்தக் கட்சி முன்னிலைக்கு வந்தாலும் அது தனிப் பெரும்பான்மை பெறமுடியாமல் போகும். அதன் விளைவால் அவர்கள் கூட்டணி அரசிற்கு ஒத்துப் போகும் மனப்பான்மை வந்து சேரும். தமிழர் குமுகாயம் அழிவுப் பாதையில் இருந்து மீண்டு வர ஒரு வாய்ப்புக் கிடைக்கும். பங்காளிச் சண்டை குறையும். அப்படி நடந்தால், இன்றையத் தேர்தல் இன்னும் ஒரு திருப்புமுனை ஆகமுடியும். நடக்குமோ?

அன்புடன்,
இராம.கி.

22 comments:

VSK said...

ஐயா!

இதையேதான் கிட்டத்தட்ட, ஒரு மாத காலமாக சொல்லிக்கிட்டு வந்தேனுங்க ஐயா!

என்ன, உங்களை மாதிரி ஒரு கோர்வையா, அழகா சொல்லலீங்கய்யா!

நம்மாலை முத்திரை குத்தி வcஉcஉட்டாங்கய்யா!

இன்னும் அஞ்சு நாள்ல இந்த செய்தி நம்ம மக்களைப் போயி சேரணும்னு வேண்டறேன்யா!

நல்லதே நடக்க நினைப்போமுங்கய்யா!

ரொம்ப நறி!

Anonymous said...

s.K,

நீங்கள் சொல்வதும் அவர் சொல்வதும் ஒன்றா? நீங்கள் சொல்வது கூத்தாடிக்கு ஓட்டு போட்டு இன்னொரு கலாட்டாக்கு வழி பண்றது.அவர் சொல்வது வேறு.

இராம.கி said...

அன்பிற்குரிய ராஜா,

எங்கள் தொகுதி தாம்பரம் தொகுதி. இந்தத் தொகுதியில் தினமலர் நாளிதழோடு ஒரு சாதிச் சங்கத்தின் பெயரைக் கூறி, அ.தி.மு.க.விற்கு வாக்குப் போடச் சொல்லி ஓர் ஒட்டுத் தாள் கொடுக்கப் பட்டதாகத் தான் கேட்டு அறிந்தேன். அந்தத் துண்டு பதிப்பு தினமலரே அடித்திருக்க வேண்டும் என்று தான் பலரும் சொல்லுகிறார்கள்.

மற்ற தொகுதிகளில் இது போல நடந்ததா என்று எனக்குத் தெரியாது.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய S.K.

ரொம்ப நறி என்பதை தட்டச்சுப் பிழை என்றே எடுத்துக் கொள்ளுகிறேன். ஆனாலும், இத்தனை அய்யா போட வேண்டுமோ? உங்கள் அகவைக்கு வெறும் இராம.கி. என்று அழைப்பதே போதுமே? உங்கள் முன்னிகையின் தொனி புரியவில்லை.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய பெயரில்லாதவருக்கு,

நான் சொல்லுவதின் ஆழம் புரிந்தால் நல்லது. எனக்கு திராவிடத்தோடு பிணக்கு இல்லை. அவர்கள் நீர்த்துப் போனது தான் வருத்தமாய் இருக்கிறது. அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி வேண்டும் அவ்வளவு தான்; இந்தப் பங்காளிச் சண்டை முற்றிலும் நின்று போகா விட்டாலும், பெரிதும் குறைய வேண்டும். மாநில முன்னேற்றம் என்பது மக்களின் முன்னே கொண்டு வரப் படவேண்டும்.

கூட்டணி அரசுக்குப் போகும் வழியில் குதிரை வணிகம் நடக்கக் கூடும் என்றாலும் நான் அந்த இக்கை (risk) எதிர்கொண்டு தான் பார்ப்போமே என்றே எண்ணுகிறேன்.

அன்புடன்,
இராம.கி.

VSK said...

உண்மையிலேயே தட்டெழுத்துப் பிழைதான், 'இராம.கி.'

அந்த 'அய்யா'க்களும் ஆதங்கத்தின் விளைவேயன்றி, வேறு ஏதும் தவறாக இல்லை எனவும் சொல்லிக்கொள்கிறேன்.

"தனித்து நிற்கும் தைரியம்" ஒன்றே எனக்கு சமாதானம்தான்.

மற்றவர்களை இதற்கு பதில் சொல்லிவிட்டு, பிறகு கிண்டல் பண்ண வருமாறு அழைக்கிறேன்!

krishjapan said...

அய்யா,

1996-2001 ல், கருணாநிதி ஒரு நல்ல ஆட்சியே தர முயன்றார், தந்தார். அவரை, மறுபடியும் வெற்றி பெற செய்திருந்தால், நல்லாட்சி செய்தாலே போதும் மீண்டும் வெல்லலாம் என்ற நினைப்பு அரசியல்வாதிகளுக்கு வந்திருக்கும்.( ஆந்திராவில் அப்படித்தான் மறுமுறை நாயுடுவுக்கு வாய்ப்பளித்தார்கள் - எதிர்தரப்பு, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தருவதாக சொன்னபோதும்).

ஆனால் இங்கே, பணப்புழக்கமில்லை என்ற சொத்தை வாதம், தேர்தலில் நிற்க முடியாமல் வஞ்சித்துவிட்டார்கள் என்ற ஏமாற்று புலம்பல், கூட்டணி பலம் வென்றது. பாடம் கற்றார் கருணாநிதி. அமைத்தார் பலமான கூட்டணி. அதன் பலத்தாலும்,அராஜக ஆட்சியின் மீதிருந்த வெறுப்பாலும் வென்றார் பா. தேர்தலில்.

ஆனால், ஒரு மாதத்திற்கு முன் எல்லா ஊடகங்களும் அம்மாவே மீண்டும் வரும்படி வலுவாக உள்ளார் என்றே எழுதின. ஏன், தானே செய்த அநியாயங்களை வாபஸ் பெற்றதற்காகவும், சுனாமி, வெள்ள நிவாரணங்களை பணமாகத் தந்ததற்காகவும், இலவசமாக சிலவற்றைத் தந்ததற்காகவும். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், இந்நிலையில், முக இந்த இலவசங்களை தருவதாக அறிவித்திருக்காவிட்டால், அம்மா, அம்மா ஆல் த வே என்றே ஆகியிருக்குமல்லவா. ஆக, இந்த தேர்தல் இப்படி ஒரு இலவச அறிவிப்பு சீரழிவானதற்கு, நல்லாட்சியை தட்டிக் கொடுக்காது குட்டியதே காரணமென்று கருதுகிறேன்.

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

நல்ல கருத்துக்கள். இரு கழகங்கள் தவிர்த்த கூட்டாட்சி என்று அமையாவிட்டாலும் கூட, இரண்டில் ஏதேனும் ஒன்று தனிப்பெரும்பான்மையின்றிச் சக கட்சிகளோடு கூட்டாக அமைந்தாலும் கூட நன்மை இருக்கும் என்று தோன்றுகிறது. நீங்கள் கூறியபடி கழகங்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் மிகவும் அவசியமான ஒன்று.

Anonymous said...

>ஐந்து நாட்கள்தான்>

இங்கே தானா, தாமா? எது சரி?

krishjapan said...

//"தனித்து நிற்கும் தைரியம்" ஒன்றே எனக்கு சமாதானம்தான்.

மற்றவர்களை இதற்கு பதில் சொல்லிவிட்டு, பிறகு கிண்டல் பண்ண வருமாறு அழைக்கிறேன்!//

முதல்ல, இவரும் முயற்சி பண்ணினார், எதிர்பார்த்த தொகுதி கிடைக்கவில்லை என்பதால் தனித்து நிற்கிறார் என்ற வாதத்தை, ஆதாரமில்லாததால் ஒதுக்கி வைத்து ஆராய்வோமா.

இவர் யாரோடெல்லாம் கூட்டு சேர்ந்திருக்க முடியும் என்று பார்க்கலாம். பா.ம.க., வி.சிக்களுடன் கண்டிப்பாக முடியாது. காங். மத்தியில் திமுக, பாமக தயவு தேவையென்பதால் இவரோடு சேர வாய்ப்பில்லை. ஆக மூன்றாவது அணி அமைப்பது என்றால் எஞ்சியவை, பா.ஜ.க, மதிமுக, ஓட்டில்லா லெட்டர் பேட் கட்சிகள்.

ஒரெ வாக்கு வங்கி பிரச்சினையினாலும், ஒரு பலமான கூட்டணியிலிருந்து எதிர்கூட்டணிக்கு செல்வதினால் கிடைக்கக் கூடிய அதிக தொகுதி வாய்ப்பினாலும் மதிமுகவும் இவருடன் கூட்டு சேரவில்லை. பா.ஜ.க. மத்தியிலும் ஆட்சியிலில்லை, சிறுபான்மை ஒட்டயும் இழக்க வேண்டுமென்பதாலும் அக்கட்சியுடனும் கூட்டு சேரவில்லை. ஆக மூன்றாவது அணிக்கு வாய்ப்பில்லை.

சரி, திமுக, அதிமுக கூட்டணிக்கு சென்றிருக்கலாமே....

ஏற்கனவே ஓவர்லோடினால், தொகுதிப் பங்கீட்டினால் அல்லோகலோகப்படும் திமுக கூட்டணியில் முதலில் இவரை சீந்துவாரில்லை. வைகோ போனபின்னர், உபயோகப்படுவார் என்றெண்ணி, சீண்டினார்கள் என்றே வைத்துக் கொண்டாலும் கிடைத்திருக்கக் கூடிய தொகுதிகள் அதிக பட்சம் போனால் 10. இந்த பக்கம், அம்மா, இருபதே கொடுத்தாலும், சென்று சேரும் நாள் மட்டுமே மதிப்பு. அதன் பின் காலடியில் வைத்தே ஒழித்துக் கட்டிவிடுவார்கள் - இன்னொரு சினிமா பிரபலத்தை வளர்த்தால் தனக்கு பின்னால் பெரும் கேடு என்பதால். இருந்தாலும், 20 கிடைக்க வாய்ப்பிருந்தது என்றே வைத்துக் கொள்ளுவோம். அவர் ஏன் அந்த பத்தையும், இந்த இருபதையும் நிராகரித்தார்ர்(!!)

இங்குதானய்யா இருக்குது அவரின் சூட்சுமம். இப்பொழுது அவர் புத்தம் புது கட்சியின் தலைவர். அவரின் பின் இருப்பது அவரின் ரசிகர்கள். அந்த ரசிகர்கள் அவரிடமிருந்து இம்முறை பெரிதாக எதயும் எதிர்பார்க்காத நேரம். அடுத்த முறை மதிமுகவினர் போன்று, நமக்கும் ஏதாவது கிடைக்க வழி செய்ய வேண்டும் கேப்டன் என நினைக்க வைக்க ஆரம்பித்து விடுவார்கள் இந்த தொண்டர்களாய் மாறியிருக்கும் ரசிகர்கள். அவர்களில் ஒரு சிலர் M.L.A. ஆக்குவது அவரது ஆசையல்ல. தான், தன் முனைப்பு ஒன்றே குறி. தனக்கு பின்னாளில் எது பலனளிக்குமோ அதன்படி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். ஆக, இதில் தைர்யம் எங்கே வந்தது. அவர் தனக்கு எது நலமானதோ அதைத்தான் செய்துள்ளார். தன் கட்சியில் தன்னைத் தவிர ஒரு பிரபலம் இருக்கலாகாது என்றிருக்கும் அவரிடம், ஜனநாயகவதியை அல்ல, சர்வாதிகாரியையே காண்கிறேன். அவர், குறைந்த பட்சம், ஒரு சில தொகுதிகளிலாவது, அத்தொகுதியில் பிரபலமாயிருக்கும் அல்லது, பொதுத் தொண்டு செய்து வரும் நல்லவர்களை ஆதரித்திருந்தாலாவது அவரின் நோக்கம் உயர்வானதென்று கருதியிருக்கலாம்.

ஆனால் ஒன்று. கார்த்திக் போன்று சினிமா அரசியல் செய்து கொண்டில்லாமல், மக்களைத் தேடிச் சென்று கொண்டிருக்கும் அவரின் உழைப்பைப் பாராட்டுகிறேன்.

Poobathy said...

ஐயா:

இகம்..பரம்/பராபரம்/பரமன்/பரப்பு/
பரபரப்பு/பரத்தல்/பரதம் எனப்
பாவிப் பரவிவரும் சொல்லை வில்லாக வளைத்து.. (hell-bent) பரந்து பரந்து தாங்கள் புதூ விளக்கம் (twist) பரவலாக எங்களுக்கு வியப்பினை ஏதும் தரவில்லை. அது போகட்டும் பர'வாயில்லை..
மேற்படி தங்களது 'கூற்றுக்கு தமிழ் இலக்கியத்தில் [தெலுங்கு மற்றும் மலையால ஒரம்பரைகளின் (அதாங்க..உறவுகளின்)பேச்சு இலக்கியத்தில்.. தமிழ் உச்சரிப்பு பரம்பரையாக.. பரஸ்பரம் எப்படியெல்லாம் மாறி மருவி/உருக்குலைந்து வந்திருக்கிறது என்பது வேறு)] இருந்து ஏதாகிலும் ஒரிரு எடுத்துக்காட்டுகள் தரமுடிந்தால்.. நன்றியுடையவனாய் இருப்பேன்....


பூபதி செ. மாணிக்கம்

இராம.கி said...

அன்பிற்குரிய கிருஷ்ணா,

நீங்கள் சொல்லுவது "மீண்டும் மீண்டும் விவரங்களுக்குள் போவது"; அப்படிப் போகக் கூடாது என்றில்லை. போகலாம். தேர்தல் அல்லாத நேரத்தில் அப்படி அலசுவது நல்லது.

நம்மில் பலரும் இப்படி ஒவ்வொரு செய்திகளாய் அலசி, அவரானால் இப்படிச் செய்திருப்பார், இவரானால் இப்படிச் செய்திருப்பார் என்று உரையாடிக் கொண்டிருக்கிறோம். நான் சொல்லுவது தடந்தகை; நீங்கள் சொல்லுவது விதப்பான அளவில் இருக்கும் போக்கு.

தேர்தல் நேரத்தில், ஒரு முடிவை நோக்கிப் போக வேண்டாமா?

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய செல்வராஜ்,

எனக்கு இரு கழகங்களுக்குள் யார் வந்தாலும் பொருட்டில்லை; ஆனால் அது கூட்டணி ஆட்சியாக அமைவது நல்லது என்று தோன்றுகிறது. அதன் விளைவால், மற்ற கருத்துக்களை இந்தக் கழகங்கள் காது கொடுத்துக் கேட்க முற்படும். தான்தோன்றிச் செயல்கள் குறையும்.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய பெயரில்லாதவருக்கு,

அதை "ஐந்து நாட்கள்தாம்" என்று எழுதியிருக்க வேண்டும். கவனக் குறைச்சலில் திருத்தாமல் பதிந்து விட்டேன். இது போன்ற பிழைகள் அவக்கரத்தில் ஏற்பட்டுவிடுகிறது. பின்னால் நாணமுற நேருகிறது. மன்னியுங்கள்.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய கிருஷ்ணா,

தே.மு.தி.க. பற்றிய உங்கள் அலசலைப் புரிந்து கொள்ளுகிறேன்.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

இங்கே முதலில் வந்த பின்னூட்டு நண்பர் KVR கொடுத்தது இல்லை என்று அவர் தன் வலைப் பதிவில் சொல்லுகிறார். அப்பொழுது அது போலி
போலிருக்கிறது.

அன்புடன்,
இராம.கி.

நந்தகுமார் பழனிசாமி said...

====| எனவே என்னுடைய பரிந்துரை: இன்றைய நிலையில் இரண்டு பெரிய கழகங்களைத் தவிர்த்து மற்ற கட்சிகளை, அதாவது பேராயக் கட்சி, இந்தியப் பொதுவுடைமைக் கட்சி, இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சீயர்), மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், இன்னும் சிறிய கட்சியினர் வெல்லுவது நல்லது என்றே நான் நினைக்கிறேன். இப்படி நடந்தால், தி.மு.க.வோ, அ.தி.மு.க.வோ ஆகிய எந்தக் கட்சி முன்னிலைக்கு வந்தாலும் அது தனிப் பெரும்பான்மை பெறமுடியாமல் போகும். அதன் விளைவால் அவர்கள் கூட்டணி அரசிற்கு ஒத்துப் போகும் மனப்பான்மை வந்து சேரும். தமிழர் குமுகாயம் அழிவுப் பாதையில் இருந்து மீண்டு வர ஒரு வாய்ப்புக் கிடைக்கும். பங்காளிச் சண்டை குறையும். அப்படி நடந்தால், இன்றையத் தேர்தல் இன்னும் ஒரு திருப்புமுனை ஆகமுடியும். நடக்குமோ?
|====

இராமகி ஐயா, மிகச் சரியாகச் சொன்னீர்கள். இந்த எண்ணம் நம்மைப் போன்று பல தமிழ் மக்களிடம் உள்ளது.

nayanan said...

//. சண்டையின் வெளிப்பாடு வரம்பு மீறி, வஞ்சம் தீர்க்கும் வகையில் போகாதவாறு, பார்த்துக் கொண்டார். எப்பொழுதெல்லாம் அது எல்லை மீறுவதாகத் தெரியுமோ, அப்பொழுது அமைதி நடவடிக்கை எடுத்துச் சண்டையை ஒரு கட்டுக்குள் வைத்துக் கொண்டார்.
//

அய்யா, அருமையானதொரு பதிவு.
மா.கோ.இராவின் இந்த அணுகுமுறை செயலலிதாவிற்கு
இல்லாததால்தான் மாற்றுக் கட்சிக்காரர்கள் சந்தித்துக்
கொள்ளக் கூட அஞ்சும் பண்பாட்டுச் சீர்கேடு
வளர்ந்துவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

பிரமோத் மகாசன் மறைவுக்கு இரங்கல் செலுத்த
முனைவர் மன்மோகன் சிங் நேரடியாக இல்லம்
செல்லும் அந்த வடவரின் பண்பு, தற்போதைய
தமிழகத்தின் பண்பாட்டை விட நன்றாக இருப்பதாகவேப் படுகிறது.

அன்புடன்
நாக.இளங்கோவன்

nayanan said...

அய்யா, தடந்தகை என்ற சொல் அருமை.
இந்த strategic என்ற சொல்லிற்கான தமிழுக்கு
தவித்திருக்கிறேன்.நன்றி. தகைமையையும் தடத்தினையும்
இணைத்திருக்கும் இச்சொல் அற்புதம் என்றுதான்
சொல்லவேண்டும்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

krishjapan said...

நாக.இளங்கோவன்,

ஊடகங்களையும் பாருங்களேன், எந்தளவுக்கு துவேஷங்களை வளர்க்கத் தூபம் போட்டுக் கொண்டேயிருக்கின்றன. பிரதமர் மகஜன் இல்லம் சென்றதைச் சுட்டியுள்ளீர். இங்கோ, ஒரு பத்திரிக்கை, மகஜனுக்கு அஞ்சலி செலுத்த மாறன் சென்றதையும் கேடுகெட்ட அரசியலாய்த் திரித்து எழுதியுள்ளது.

நாவலர் மறைவுக்குச் சென்ற எதிர்கட்சித் தலைவர்களை ஏளனமும் துவேஷித்தலும் செய்யுமளவுக்கு தரம் தாழ்ந்து போவதுதான் தலைமைக்குப் பிடிக்கும் என்றளவுக்கு உள்ளது நம்மவர் அரசியல்.

மா சிவகுமார் said...

இராமகி ஐயா அவர்களுக்கு,

வணக்கம்.

அருமையான பதிவு. பங்காளிச் சண்டை இல்லாமல் கழகங்கள் செயல்பட்டிருந்தால் தமிழகம் எவ்வளவு வளர்ச்சி அடைந்திருக்க முடியும் என்பதை எண்ணிப் பார்க்கும்போது பெருமூச்சுதான் வருகிறது. இப்போதும் காலம் தாழ்ந்தேனும், இவர்கள் தம்மைத் திருத்திக் கொள்வார்கள் என்று இறைவனை வேண்டிக் கொள்வதுதான் நம்மால் இப்போதைக்குச் செய்ய முடியும்.

அன்புடன்,

வன்னியன் said...

'பிரச்சாரம்' என்ற சொல்லுக்கு மாற்றாக 'பரப்புரை' என்ற சொல் வன்னியைத் தளமாகக் கொண்ட பகுதிகளில் பரந்தளவிற் பாவிக்கப்படுகிறது. (பரப்புரை அலுவலகம், பரப்புரைப் பிரிவு, பரப்புரைக் கூட்டம் போன்றன புலிகளின் கட்மானமும் அதனுடனிணைந்த சொற்களுமாகும்.)