Saturday, January 14, 2006

முகந்தம் தொடர்ச்சி

அண்மையில், முகந்தம் பற்றிய என் இடுகையைப் பார்த்து தமிழ் உலகம் மடற்குழுவின் மட்டுறுத்தர் சிங்கைப் பழனி "சான்று என்னும் சொல் ஏற்கனவே இருக்கிறதே? அது சரியில்லையா?" என்ற கேள்வி கேட்டிருந்தார். சான்று மட்டும் இல்லை; சாட்சியம் என்ற சொல்லும், ஆதாரம் என்ற இன்னொரு சொல்லும் கூட evidence என்ற ஆங்கிலச் சொல்லிற்கு இணையாய்ப் பயன்பட்டு வருகின்றன. திருக்குறள் 25, 245, 1060 ஆகியவற்றில் தோற்றம் காட்டும் கரி என்ற பழைய சொல்லும் உண்டு.

இருந்தாலும், துல்லியம் என்று பார்த்தால், முகந்தம், ஆதாரம், சான்று [சாட்சியம் என்பது சான்றின் பகரி (substitute) ஆகும்.] கரி ஆகிய இந்தச் சொற்கள் ஒன்றிற்கு ஒன்று பகரியாய் இருப்பன அல்ல. ஒவ்வொன்றும் சற்று வேறுபடுபவை. அவை வெவ்வேறு கூட்டுகையில் (context) வெவ்வேறு விதமாய்ப் புழங்க வேண்டியவையே.

ஆதாரம் என்பது அடிப்படை என்ற பொருளில் basis என்பதற்கு இணையாய்ப் புழங்கினால், மிகச் சரியாய் வரும்.

சாட்சியம் என்ற சொல் தமிழ் மூலத்தினின்று வடமொழியிற் போய் சாக்கு>சாக்கியம்>சாக்ஷியம்>சாட்சியம் என்ற முறையில் உரு மாறி மீண்டும் தமிழில் வந்த சொல். தென்பாண்டி வழக்கில் "நீதாம்பா சொல்றே! மத்தவுக சொல்லலையே! இப்படி நடந்தது என்பதற்குச் சாக்கி யாரு?" என்று கேட்பார்கள். சாக்கு>சாக்கி என்பது சாட்சியைத்தான் குறிக்கிறது. சாட்சி என்பவர் "கண்ணால் விஷயத்தைக் கண்டவர்" என்று அபிதான சிந்தாமணி கூறும். அந்த வகையில் சாக்கி என்பவன் ஒரு நிகழ்வு நடந்ததை நேரே இருந்து பார்த்தவன். சாக்கிரதை என்ற இன்னொரு சொல்லும் (ஜாக்கிரதை என்பது, சாமான் என்பதை ஜாமான் என்பது போன்ற, ஒரு வலிந்த பலுக்கல்) கூட ஒரு தொடர்பான பொருளில் புழங்கும் இருபிறப்பிச் சொல் தான். "போற இடத்துலே, பார்த்துச் சாக்கிரதையாகப் போ" என்னும் போது அங்கே ஓர் இரட்டைக் கிளவி (பார்த்துச் சாக்கிரதை) உள்ளே தொக்கி நிற்கிறது. நாம் தான் விளங்கிக் கொள்ளாமல் இருக்கிறோம். சாக்(கி)ரதை என்பது பேச்சு வழக்கில் விழிப்பைத் தான் குறிக்கிறது. பலுக்கும் போது ரகரம் உள் நுழைவதால் இந்தச் சொல்லும் நமக்கு வடமொழித் தோற்றம் காட்டுகிறது. (சாக்ரதை என்ற சொல்லில் இருக்கும் ஈற்றைக் கொஞ்சம் மாற்றிச் சாகரணம்/சாகரம் என்ற இன்னும் இரண்டு இருபிறப்பிச் சொற்கள் விழித்திருக்கையைக் குறிப்பதாய் அகரமுதலிகளில் இருக்கின்றன.) "கண்கூடாக, வெளிப்படையாக" என்ற பொருளில் கையாளப்படும் சாட்சாத்து என்ற சொல்லிற்குள்ளும் சாக்கு என்பதின் வேர் இருக்கிறது. இந்தச் சொற்களுக்கெல்லாம் முதலாய்ச் சாக்கு என்ற அடிப்படைச் சொல்லைக் கவனிக்க வேண்டும்.

சாக்கு என்பதற்கும் சான்று என்பதற்கும் சால் என்பதே சொல்லடி ஆகும். அதனால் தான் இவை இரண்டையும் ஒரு பொருட்சொற்கள் என்று சொல்லுகிறோம். சால் என்பது கருமைப் பொருளையும், கூர்மைப் பொருளையும், நிறைவுப் பொருளையும் குறிக்கும் ஒரு பக்கவேர். முதல் இரண்டு பொருள்களின் காரணமாய் கண் என்னும் உறுப்பையும் அந்தச் சொல் குறித்திருக்க வேண்டும் என்றே நாம் முடிவிற்கு வரவேண்டியிருக்கிறது. (அதே பொழுது அகரமுதலிகளில் சால் என்பதற்கு கண் என்று நேரடியாகப் பொருள் குறிக்கவில்லை என்பதை நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.) மாறாக ஒரு சில கூட்டுச் சொற்களில் கண் என்னும் பொருள் உள்தொக்கி நிற்கிறது. காட்டாக, சாலகம் என்ற சொல் கட்டடங்களில் அமையும் பலக(ண்)ணியைக் குறிக்கும். சாலகம் என்ற இந்தச் சொல் சாலேகம், சாளரம் என்றும் கூடத் திரியும். சால் என்பதற்கு வழி என்ற பொருளைச் சொல்லி "சாலகம் = காற்றுவரும் வழி" என்று ஒருசிலர் ஆற்றுப் படுத்துவார்கள். அது பொருந்தக் கூறும் கூற்று; சரியான விளக்கம் அல்ல. இன்னொரு சொல் சல்லடை. ச(஡)ல்களைக் கொண்டு அடைப்பது சல்லடை. அதில் கண் கண்ணாக அடைந்து கிடக்கிறதல்லவா? சல்லடையின் வழியாய் அரிசியையும் உமியையும் பிரிப்பது ச(ல்)லித்தல் என்ற வினையாய் பொருள் நீட்சி பெறும். கண்கட்டு வித்தைதையைச் சாலம் (>ஜாலம்) என்று பேச்சு வழக்கில் குறிப்பிடுவார்கள். மாய சாலம் என்பது "மறைப்பதால் கண்கட்டும் வித்தை". இது போன்ற காட்டுகளால், சால்>சல் என்பது கண்ணைக் குறிக்கும் சொல் தான் என்பதை ஓர்ந்து பார்த்துப் புரிந்து கொள்ளுகிறோம்.

சல்>சல்க்கு>சக்கு என்பது கண்ணைக் குறிப்பதாய் நிகண்டுகள் குறிக்கும். சக்கு என்பதில் இருந்து சகரம் தவிர்க்க வரும் சொல் அக்கு. இதன் வழிப்படும் அக்கம், அக்கி என்பனவும் கண்ணைக் குறிப்பனவே. அக்கு, அக்கம், அக்கி என்பன கூர்மைப் பொருளையும் முள் என்ற உறுப்பையும் குறிக்கும் சொற்கள் தான். மீன் அக்கி>மீனாக்கி>மீனாக்ஷி>மீனாட்சி = கயற்கண்ணி, வியல அக்கி>விசல அக்கி>விசாலாக்கி>விசாலாக்ஷி>விசாலாட்சி = தடங் கண்ணி, காம அக்கி>காமாக்கி>காமாக்ஷி>காமாட்சி = காமக் கண்ணி என்பனவெல்லாம் இந்த அக்கியின் உட்பொருளைக் காட்டும்.

சால் என்பதற்கு வேராக கருமைப் பொருளில் யா என்னும் ஓரொழுத்து ஒருமொழியைச் சொல்லலாம். யா பற்றிய விளக்கங்களைச் சொல்லியல் அறிஞர் ப.அருளியின் பொத்தகத்தில் விரிந்து காணலாம். யா என்னும் ஓரெழுத்து ஞா>நா என்று திரிவது போலவே சா என்றும் அது திரிவது இயற்கை தான். தமிழில் பல சொற்களின் முதல், இடை, கடை நிலைகளில் வரும் யகரம் சகரமாகத் திரிவதைப் பரக்கக் காணலாம்.

யாமம்>சியாமம்>சாமம் என்று கருமையான இரவைக் குறிக்கும் சொல் எப்படிப் பிறந்ததோ அதே போல யா>யால்>சியால்>சால் என்றும் பிறக்க வழியுண்டு. (சாமம் என்ற சொல் சாமளம் என்றும் நீண்டு, விண்ணவனின் கருமை நிறத்தைக் குறிக்கும்.) சால் என்ற சொல்லுக்குப் பல வழிப்பொருள்கள் இருந்தாலும், அடிப்படையில் அது கருமை, கூர்மை, நிறைவு என்ற பொருள்களை மட்டுமே குறிக்கிறது. இங்கே கூர்மைப் பொருளுக்கு நான் அழுத்தம் கொடுக்கவில்லை. (ஏரால் உழும் போது அமையும் சால் கூர்மைப் பொருளில் இருந்து பெறப்பட்டதே! தவிர சால் = போக்கு, சாக்கு = வீண்காரணம், சாக்கிடுதல் = போக்குச் சொல்லுதல், சாகாடு = வண்டி, வண்டியுருளை என்பவையும் அதே பொருளில் பெறப்படும் மற்ற சொற்கள். சால் என்ற சொல்லின் உள்ளே இருக்கும் கூர்மைப் பொருளில் சாலினி என்பவள் வேட்டுவ மகளாயும், தேவராட்டியாயும் ஆவாள். அதே கூர்மைப் பொருளில் துணி நெய்வோன் சாலியன் எனப்படுவான்); நிறைவுப் பொருளையும் நான் பேசவில்லை. (நீரிறைக்கும் சால், சாதித்தல் = நிறைவேற்றுதல், நிலைநாட்டுதல், சான்றோன் = அறிவு நிறைந்தவன் போன்ற சொற்களும் இந்த நிறைவுப் பொருளில் எழுந்தவையே!)

சால் என்ற சொல் கருமைப் பொருளில் வந்து கருநிற ஆச்சா மரத்தைக் குறிக்கிறது. யாவகம்>சாவகம் எனப் புழங்கியதை எண்ணிப் பார்க்க வேண்டும். யா மரங்கள் நிறைந்த தீவு யாவகத்தீவு என்னும் சாவகத்தீவு ஆகும். பனி மலையில் இருந்து வழிந்தோடும் கண்டகி நதிக்கரையில் சால மரங்கள் நிறைந்த கம்மம் (கம்மம் என்றால் ஊர்) சாலக்கம்மம்>சாலக்கமம்>சாலக்கிராமம்>சாளக்கிராமம் என்று ஆகும். சாலக் கமம் என்பது இன்னொரு விதத்தில் கண்டகி ஆற்றில் கிடைக்கும் ஒரு விதக் கருஞ் சாயற் கல்லையும் குறிக்கும். It is a black stone containing a fossil ammonite. சாலி என்பது கருஞ்சிவப்பு நிற அரிசி (கவுணி அரிசி என்று செட்டிநாட்டுப் பகுதியில் சொல்லுவார்கள். மலேசியாவின் காழக மாநிலத்தில் - கடார மாநிலத்தில் - விதப்பாகக் கிடைப்பது.). இந்த அரிசி யாவகத்தீவிலும் சிறப்பாகக் கிடைப்பதால் அந்தத் தீவிற்குச் சாலித்தீவு என்றும் பெயர். மணிமேகலையில் சாலித்தீவு என்றே இது குறிப்பிடப் பெறும்.

சால் என்னும் சொல்லைப் பார்த்து அது கண்ணைக் குறிப்பிட இயலுமை (possibility) உண்டு என்று பார்த்த நாம், முடிப்பதற்கு முன் சுருக்கமாய் கண் என்ற பொருளில் நிகண்டுகளில் வரும் "நயனம், நேத்திரம், நாட்டம், நோக்கம், சக்கு, அக்கம், அக்கி, திருக்கு, திட்டி, திருட்டி, தாரை, விழி, விலோசனம், பார்வை, அம்பகம், கோ" என்ற சொற்களையும் மேலோட்டமாய்ப் பார்ப்போம்.

இதில் நயனம், நேத்திரம், நாட்டம், நோக்கம் ஆகிய நாலும் யா>ஞா>நா என்ற நீட்சியில் திரிந்து கருமைப் பொருளில் எழுந்த சொற்கள். இவற்றை ப.அருளி தன் பொத்தகத்தில் விரிவாகச் சொல்லியிருப்பார்.

சக்கு, அக்கம், அக்கி ஆகியவற்றை மேலே சொன்னபடி கருமைப்பொருளில் சால்>சல் என்ற வேரின் வழி பார்க்க முடியும்.

துல் என்னும் வேரில் இருந்து தெல்>தெர்>தெரி>தெரிதல் = காணுதல் என்ற வளர்ச்சி ஏற்படும்; தெரி என்னும் சொல்லடியில் இருந்து மற்ற பெயர்ச்சொற்கள் பிறக்கும். தெரியி>தெரிஷி>தெருஷ்டி>திருட்டி>திட்டி; தெரிக்கு>திருக்கு.

கண்ணில் நீர் உகுக்கும் காரணம் பற்றிப் பின்னாளில் தாரை என்ற சொல்லும் கண் என்னும் உறுப்பைக் குறிப்பால் உணர்த்தும்.

அடுத்தது விழி, விலோசனம் போன்றவை. வில்>வில்லி>விலி>விரி; விலி>விழி; இமைகளை விரித்துக் காண்பதால் கண் விழியாயிற்று. விரியின் திரிவு தான் விடி>விடியல். தமிழில் விடிதல் என்ற வினைக்கும் இலத்தீனில் உள்ள vidi என்ற சொல்லுக்கும் உள்ள இணை வியந்து பார்க்கக் கூடியது. evidence என்ற சொல்லுக்குள்ளூம் இந்த vidi இருப்பதை ஆழ்ந்து பார்த்தால் உணரலாம். நேரில் பார்த்து வெளிக்காட்டுதே evidence என்று ஆகும். விலியம்>விலயம்>விலசம்>விலோசம்>விலோசன்>விலோசனம் என்ற முறையில் வடமொழியிலும் இருபிறப்பியாய் விரியும். வி என்னும் முன்னொலியைத் தவிர்த்து லோசனம் என்றே வடமொழியில் பெரிதும் பயன்படத் துவங்கும். மீனலோசனி என்று கயற்கண்ணி அழைக்கப் படுவாள். சு லோசனி என்று எழிற்கண்ணி அழைக்கப் படுவாள்.

இனி, இமைகள் பரந்து நிற்பதும் விரிந்து நிற்பதே என்ற காரணத்தால் பரவை>பார்வை என்ற சொல்லும் புதிதாய்க் கிளைக்கும்.

கூர்மைப் பொருளில் அம்பகம் என்ற சொல்லும், கோ என்ற சொல்லும் எழுந்து கண்ணைக் குறிக்கும்.

முடிவாக சான்று/சாட்சியம் என்பன ஏற்கனெவே நிகழ்ச்சி நடந்ததைத் பார்த்திருந்த eye-witness என்ற பொருளையே தரும். (wit என்பதற்குள்ளே vidi என்பது இருப்பதை ஓர்ந்து பார்க்க வேண்டும்.). முகந்தம் என்பது நிகழ்வு நடந்திருக்கலாம் என்பதை அங்கிருக்கும் பொருள்கள் இன்னும் மற்றவைகளை வைத்து ஏரண வழி உய்த்தறிந்து பார்ப்பது. இங்கே நேரே கண்டிருக்க வேண்டிய கட்டாயம் கிடையாது. ஆனால் முன்வருதல் என்ற நிலை ஏற்படவேண்டும். கிட்டத்தட்ட inference என்றே பொருள் கொள்ளலாம். ஆதாரம் என்பது basis. கரி என்பது அடையாளம் (tell-tale signs). கருதல்/கருத்தல் என்ற வினையில் இருந்து பெறப்பட்டது.

சான்றிதழ் (certificate) என்பது ஒன்று நடந்ததை நான் பார்த்திருக்கிறேன் என்று ஒருவரைப் பற்றி இரண்டாமவர் மூன்றாமவருக்குக் கொடுப்பது.

அன்புடன்,
இராம.கி.

5 comments:

ஞானவெட்டியான் said...

தங்களின் சொல்லாய்வு எமக்கு வியப்பூட்டுகிறது ஐயா.

Boston Bala said...

நன்றி.

வசந்தன்(Vasanthan) said...

உங்கள் விளக்கத்துக்கு நன்றி.

"சாட்சி" பற்றி பண்டிதர் பரந்தாமன் அவர்களின் சொற்பிறப்பியல் அகரமுதலியிற் சொல்லப்பட்டதைக் கீழே தருகிறேன்.
----------------------------

சாட்சி > சாள் – சார் – சார்ச்சி (– சாற்சி) / சாள் – (சாள் + சி) [சாய்தல், சேருதல்]
= 1.கரி, சான்று. 2.ஆதாரம்.

[சார் – சார்ச்சி = 1.சாய்வு. 2.சேருகை 3.தொடர்பு. 4.சார்விடம் (ஆதாரம்) 5.சார்த்திக் கூறல். எ–டு: சார்ச்சி வழக்கு (உபசார வழக்கு) (வே.சொ.க.234).
சார் – சார்ப்பு = ஆதாரம் “சார்ப்புக் கொண்ட தஞ்சிறக ரால்”(கந்தபு.திருநாட்டுப்.45).

சார் – சார்பு = 1.சாய்ப்பு 2.கிட் டினது. 3.கூட்டுறவு 4.பற்று 5.ஒரு தலைப்பற்று 6.புகலிடம் 7.துணை (ஆதாரம்) 8.ஆட்பக்கம் அல்லது கட்சிப் பக்கம் 9.இடம் 10.சேர்ப்பு 11.ஒருபுடையொப்பு.

சார் – சார்வு = சார்பு
சார் – சார்த்து – சாத்து. எ–டு: கைச்சாத்து. சார்த்து – சாட்டு. ஒ.நோ. துவர்த்து – துவட்டு (வே.சொ.க.235)

ஆக, சாட்சி என்பது, சாள் – சார் – சார்ச்சி என்பதன் வழிப்பிறந்து ஒன்றைச்சார்ந்து நின்று ஆதாரம் ஆவதை உணர்த்துமாறு காண்க.
சாள் + சி = சாட்சி.
ஒ.நோ. மீள் + சி = மீட்சி.]
-------------------------------------

Pasug said...
This comment has been removed by a blog administrator.
Pasug said...

அருமை! வாழ்க
உம் தமிழ்த் தொண்டு!
www.Saivaneri.org