Tuesday, January 17, 2006

மரக்கறி - 1

பொதுவாகச் சிவகங்கை மாவட்டத்தார் பலரும் ஓர் இருப்புக் கொள்ளாதது போல, ஆண்டின் பல நாட்கள் ஏதாவது ஒரு காரணத்தை வைத்துக் கொண்டு ஊருக்குப் போய் வந்த வண்ணம் இருப்பார்கள். தனியார் பேருந்து, அரசினர் பேருந்து, இன்னும் இருவுள் நிர்வாகம் (railway administration) எனப் பணம் பண்ணுபவர்கள் இவர்களைப் போன்றவர்களாலேயே பயனடைகிறார்கள். சட்டென்று எங்கள் ஊருக்குப் பயணச்சீட்டுப் பெறுவதென்றால் மாத முழுத்த (முகூர்த்த) நாட்களில் கிடைப்பது குதிரைக் கொம்புதான். இப்படி அரக்கப் பரத்தல் என்பது மற்ற மாவட்டத்தாரைப் பார்க்க எங்கள் மாவட்டத்தவரிடம் அதிகம் என்றே எனக்குத் தோன்றுவது உண்டு. நான் மட்டும் புறனடையா என்ன, இப்படித்தான் ஒரு முழுத்த நாளுக்கு முந்திய இரவு ஊருக்குப் புறப்பட்டுப் போய், மொய், அன்பளிப்பு என்று முழுத்த நாளில் என் முகத்தைக் காட்டிவிட்டு அடுத்த நாள் காலை சென்னைக்குத் திரும்பி வந்தேன்.

ஊருக்கு அவ்வப் பொழுது போகும் போது பெரும்பாலும் தனியார் ஒப்பந்தப் பேருந்துகளில் போவதுண்டு. இந்தப் பேருந்துகள் சில குறிப்பிட்ட இடங்களில் சாப்பிடுவதற்கோ, மற்றபடி சிறுநீர் கழிப்பதற்கோத் தோதான வகையில், திருச்சி, உளுந்தூர் பேட்டை போன்ற இடங்களில் நிறுத்துவார்கள்.

ஒரு முறை போய் வந்தது K.P.N பேருந்து. இது சென்னை நோக்கி வரும் பொழுது, திருச்சியில் உள்ள புறவழிப் பாதையில் "ஆர்யாஸ்" என்னும் உணவகத்தின் முன் நிற்கும். பலமுறை அப்படி நின்றிருந்த போதும் கூர்ந்து கவனிக்காத நான், ஒருமுறை உணவகத்தின் பெயர்ப்பலகையில் கவனித்தேன்.

அப்படிக் கவனித்த போதுதான், மாறுகடையியல் (marketing) என்பது பெரிதும் வளர்ந்துவிட்டது என்பதைப் பெயர்ப் பலகையின் வழி உணர்ந்தேன். அந்த உணவகத்தின் முன்னால், பெயர்ப்பலகை தமிழ், ஆங்கிலம், மலையாளம் என்ற மூன்று எழுத்துகளில் எழுதியிருக்கும். "ARYAAS Vegetarian family restaurant" என்று ஆங்கிலத்தில் எழுதியிருப்பதை "ஆர்யாஸ் உயர்தர சைவ உணவகம்" என்று தமிழிலும், மலையாளத்தில் வெறுமே எழுத்துப் பெயர்ப்பாய் "ARYAAS family restaurant" என்று மலையாள எழுத்தில் எழுதி இருந்தார்கள்.

இப்படி எழுதியிருப்பதற்கு மேலோட்டமான பொருள் இருந்தாலும், உள்ளூற இருக்கும் சில பொருட்பாடுகள் எனக்கு அப்பொழுது புலப்பட்டன. அவற்றை உங்களோடு பரிமாறிக் கொள்ளுகிறேன்.

ஆங்கிலத்தில் vegetarian family என்பதை தமிழில் சைவக் குடும்பம் என்று எழுதினால் பொருளே பிறழ்ந்து போய்விடுவதைப் பார்த்தீர்களா? ஏதோ சைவப் பிள்ளைமாருக்கு இருக்கும் உணவகம் போலத் தோற்றமளித்து விடுகிறது அல்லவா? பார்த்தார் மொழிபெயர்த்தவர், குடும்பம் என்ற சொல்லையே தவிர்த்துவிட்டு உயர்தர என்ற அடையைச் சேர்த்துவிட்டார். இப்பொழுது சாதிப் பொருள் போய் பொதுப்பொருள் வந்துவிட்டது.

அந்த "உயர்தர" என்ற அடையிலும் ஒரு சூக்குமம் இருக்கிறது. அது மாறுகடையாளர்களுக்கு (marketers) நன்றாகத் தெரியும். இந்தியாவில் பெரும்பாலான விரைவாய் நகரும் நுகர் பொருட்களில் (fast moving consumer goods) உயர்ந்த தரம் உள்ளவை தென்னகத்திலும், குறிப்பாகத் தமிழ்நாட்டிலும், தரம் குறைந்தாலும் சரி, விலையில் சல்லிசாய் இருப்பதே வடநாட்டிற்குமாய் விலைபோகின்றன. காட்டாக, நிர்மா சவர்க்காரக் (detergent) கட்டி வட நாட்டில் போகும் அளவு தமிழ்நாட்டில் போகாது, விலை கூடியிருந்தாலும், சர்வ் (Surf), ஏரியல் (Ariel), எங்க்கோ(Henko) போன்றவை தான் இங்கு விற்கின்றன. இத்தனைக்கும் நம்மூரில் "பொன்வண்டு, பவர், டிஸ்கவுண்ட்" எனப் பல உள்ளூர்க் கட்டிகளும் இருக்கின்றன. ஓரளவு இவை ஊர்ப் புதுக்கு (local product) என்ற அளவில் போகத்தான் செய்கின்றன. இருந்தாலும் சர்வ், ஏரியல், எங்க்கோ அளவிற்குப் போவதில்லை. இது போலத்தான் மற்ற நுகர் பொருட்களும்.

என்னமோ தெரியவில்லை, உயர்தரத்தைத் தேடும் குணம் தமிழர்களிடையே இருக்கிறது என்பது மாறுகடையைப் பொறுத்து முற்றிலும் உண்மை. இதை அறிந்து தமிழரிடையே ஒரு ஆதரவான நெருங்கிய உணர்வையே உருவாக்குவதற்காக தமிழ்நாட்டு விளம்பரங்களில் "உயர்தர" என்ற சொல்லைப் புழங்கப் பலரும் தயங்குவதில்லை.

சரி, மலையாளத்தில் மொழிபெயர்க்காமல் ஏன் எழுத்துப் பெயர்ப்புச் செய்கிறார்கள்? அதற்கு அவர்களின் பழக்கத்தைத்தான் சொல்லவேண்டும். பொதுவாக எழுத்துப் பெயர்ப்பு என்பது அங்கு ஏற்றுக் கொள்ளப் படுகிறது. தமிழர்கள் அளவுக்கு "மொழிபெயர்ப்பு வேண்டும்" என்று அவர்கள் அழுத்துவதில்லை. சரி, vegetarian என்ற சொல்லை மலையாளத்தில் மொழிபெயர்க்காமலேயே ஏன் விட்டார்கள் என்பது அடுத்த கேள்வி. தமிழ்நாடு அளவுக்கு vegetarian என்ற கருத்தீடு கேரளத்தில் அதிகம் பரவவில்லை என்பதே காரணமாய்த் தோன்றுகிறது. கேரளத்தில் பாலக்காடு ஐயர்களின் உணவகம் தவிர்த்து வேறு எங்கு போனாலும் பொதுவாய்க் கறிச் சாப்பாடுதான். "மாம்சம் இல்லாத்த ஊணு கழிக்கான் உண்டோ ?" அங்கு vegetarian என்ற சொல்லைப் போடுவதனால், ஆட்கள் அதிகம் வரப்போவதில்லை. இப்படி ஓர்ந்து பார்த்தால் மாறுகடை உளவியல் தான் உள்ளே வேலை செய்கிறது என்று புரியும்.

சரி மரக்கறி என்ற சொல் என்ன ஆயிற்று? "மரக்கறி, குடும்ப உணவகம்" என்று சொன்னால் ஆங்கிலப் பொருள் வந்து விடுமே என்று எனக்குத் தோன்றாமல் இல்லை. ஆனால் இப்பொழுது யாரும் அப்படிப் போடுவது அரிது தான். ஒரு 50, 60 ஆண்டுளுக்கு முன் இருந்த நல்ல தமிழ்ச் சொல் போயே போச்சு; தமிழ்நாடெங்கும் இப்பொழுதெல்லாம் ஒரே சைவம் தான், மரக்கறி என்ற சொல் பெரிதும் புழங்கிய தென்பாண்டி மண்டலத்தையும் சேர்த்துத் தான் இந்த நிலை.

என்னவோ தெரியவில்லை, மரக்கறி என்று சொல்லத் தயங்குகிறோம். "சைவம்" என்ற சொல்லை உணவிற்கும் நெறிக்குமாய் குழப்பிக் குழப்பிப் பயன்படுத்திக் கொண்டே இருக்கிறோம்.

அன்புடன்,
இராம.கி.

7 comments:

வசந்தன்(Vasanthan) said...

'முகூர்த்தம்' தமிழல்லாத சொல்லா? பரந்தாமன் அவர்கள் தன் நூலில் இதை விளக்கி (முழுத்தம் -> முகுத்தம் -> முகுர்த்தம் ->முகூர்த்தம்) உள்ளதோடு முகூர்த்தம் என்றே பயன்படுத்தலாமென்று சொல்லியுள்ளார்.
-----------------------------------
சம்பந்தமில்லாத கேள்வி:

பன்மையைக் குறிக்க 'கள்'ளைச் சேர்க்கும் போது வலிமிகுமா மிகாதா என்ற குழப்பம் சில சொற்கள் மட்டில் இருக்கிறது.
வாழ்த்து என்பதோடு கள்சேர்த்தால் எப்படி வரும்? (வாழ்த்தைப் பன்மையிற் சொல்ல வேண்டிய தேவையில்லையென்றாலும்கூட விளக்கமறிய ஆவல்)
முக்கியமாக குற்றியலுகரச் சொற்களுக்குக் 'கள்' சேர்க்கும்போது எப்படிப் புணரும் என்று விளக்கினால் நன்று.

சிரமத்துக்கு மன்னிக்கவும்.

குமரன் (Kumaran) said...

நல்ல பதிவு ஐயா. பல தமிழ்ச் சொற்களை கற்றுக் கொண்டேன்.

வசந்தன் கேட்ட சந்தேகம் எனக்கும் உண்டு. கொஞ்சம் விளக்குகிறீர்களா? நன்றி.

Anonymous said...

http://harimozhi.com/Article.asp?id=319

eagerly waiting to hear from you too sir.

icarus prakash said...

//இப்படி அரக்கப் பரத்தல் என்பது மற்ற மாவட்டத்தாரைப் பார்க்க எங்கள் மாவட்டத்தவரிடம் அதிகம் என்றே எனக்குத் தோன்றுவது உண்டு//

அய்யா, இல்லை. பல்லவன், வைகை, சேது, கம்பன், முத்துநகர் என்று எந்த வண்டியும், எப்போதும் முழு capacity இல் தான் ஓடிக்கொண்டிருக்கின்றன. தமிழனுடைய பொதுக்குணம் என்று அபாண்டமாக எதை எதையோ சொல்வார்கள். இதை நிச்சயமாகச் சொல்லலாம் :-)

//ஒரு 50, 60 ஆண்டுளுக்கு முன் இருந்த நல்ல தமிழ்ச் சொல் போயே போச்சு; தமிழ்நாடெங்கும் இப்பொழுதெல்லாம் ஒரே சைவம் தான், மரக்கறி என்ற சொல் பெரிதும் புழங்கிய தென்பாண்டி மண்டலத்தையும் சேர்த்துத் தான் இந்த நிலை.//

சைவம் என்ற சொல்லுக்கும், உணவுப் பழக்கத்துக்கும் தொடர்பே இல்லையா? அப்படி என்றால், இது எப்படி புழக்கத்துக்கு வந்தது?

G.Ragavan said...

ஐயா! மிகவும் நல்ல பதிவு. சைவன் நிச்சயமாக மரக்கறி மட்டுமே உண்பவனாக இருக்க வேண்டியதில்லை.

பிறகு, வசந்தனின் கேள்விக்கும் விடை சொல்லுங்கள். இது குறித்து பெரிய விவாதமே இருக்கிறது. ஆனால் இலக்கணம் சொல்லி முடிவு சொல்ல ஆளில்லாததால் அவரவர் முடிவை அவரவர் பின்பற்றிக் கொண்டிருக்கிறோம். ஏதாவது செய்யுங்கள் ஐயா!

ஞானவெட்டியான் said...

அன்பு ஐயா,

கசாப்பு, மரக்கறி ஆகியவை எல்லாம் நம்பக்கத்திலேதான் காணவியலும்.

அரக்கப் பரக்க எனும் சொல்லிலேயே அதன் அவசரம் தெரிகிறதே.

இன்னும் சொற்களின் பட்டியலைப் புதுப்பித்து வருகிறேன்.

நன்றி.

sivan said...

Mr.,
you are wrong with the comment on marakkari. The term Marakkari itself a wrong word. The term "kari" itself denotes it is vegetable based and it is a Tamil word (Ref:Oxford Dictionary). Foolish Non-vegetarians who are also selfish in making Non-veg foods into a high-class one, they have added the new term "marakari" and "kari" to denote meat. Actually they should call meat as "maamisam" only. But they won't.