Monday, January 09, 2006

முகந்தம்

Is there any evidence for what you say?

evidence என்ற சொல்லை முதலில் ஆங்கில மொழியில் ஓர் ஆவணத்தில் ஆண்டது 1382 என்று சொற்பிறப்பியல் அகரமுதலி குறிக்கும். சொற்பிறப்பு இப்படிக் குறிக்கப் படுகிறது.

from L. evidentem (nom. evidens) "perceptible, clear, obvious," from ex- "fully, out of" + videntem (nom. videns), prp. of videre "to see." Evidence (c.1300) is L.L. evidentia "proof," originally "distinction." After c.1500 it began to oust witness in legal senses.

இனி இதைத் தமிழில் எப்படிச் சொல்லுவது? ஊடே வரும் வேர், தொடர்ச்சொற்களையும் பார்ப்போம்.

"முன்வருதல்" என்ற பொருளில் உள்ள ஒரு தமிழ் வினைச் சொல் முகுதல் எனப்படும்; முல் என்பது அந்தச் சொல்லின் வேர்; முல் என்னும் வேரில் இருந்து பிறந்தது மூலம் என்ற சொல். ஒரு செடிவேரின் அடியும் கூட மூலம் தான்.

முகுதலில் இருந்து கிளைத்த சொற்கள் முகம், முகனை போன்றவை. முகுதலில் பிறந்த இன்னொரு சொல் முதல் எனப்படும்.

முகுதல் என்பது தன்வினை; முகுதலின் பிறவினை முகுத்தல். முகுத்தலின் திரிவு மூத்தல்; மூத்தலில் இருந்த பிறந்த சொல் மூத்தவன் (முன் வந்தவன்). ஆதாரம், மூலம் என்ற பொருட்பாடுகள் முகுத்தலுக்கு வந்ததும் இப்படித்தான்.

முகுதலின் மெலிவுத் திரிவு முகுந்தல் = முன்வருதல்; முகுந்தல் என்ற சொல்லில் இருந்து பிறந்த பெயர்ச்சொல் முகுநை. முகுநை>முகநை>முகனை என்று மாறும்; முகனையின் திரிவு மோனை. முதலெழுத்து யாப்பில் பொருந்தி வருதல் மோனை என்றாகும்;

முகுந்தம்>முகந்தம்>முகாந்தம்>முகாந்த்ரம் என்று, வழக்கம் போல் வடமொழிக்குச் சென்று ஆகாரம் கூட்டி, கூடவே ரகரத்தை நுழைத்து, பின் தமிழுக்கு திரும்பவும் கொண்டுவந்து முகாந்திரம் என்று திரித்துதழைப்பார்கள். அப்படி வந்து சேர்ந்தவுடன், நம்முடைய மூலம் நம்மில் பலருக்கும் சட்டென மறந்து போகும். விளைவாக இது வடசொல் என்று நம் உறவை ஒருசிலர் வெட்டிவிடுவார்கள்; இப்படியாகத் தமிழிற் தொலைத்த சொற்கள் பல்லாயிரம் தேறும்.

நல்ல தமிழில் சொல்ல வேண்டுமானால் evidence என்பதற்கு முகாந்திரம் என்று சொல்லாமல், முகந்தம் என்று அழைப்பதே சரி.

"Is there any evidence for what you say?"
"நீ சொல்வதற்கு ஏதேனும் முகந்தம் இருக்கிறதா?"

தமிழ் மிக இயல்பான மொழி. கொஞ்சம் கொஞ்சமாய் நம்முடைய மூலங்களை நாம் மீட்டுக் கொண்டு வருவோம்.

அன்புடன்,
இராம.கி.

9 comments:

சிவக்குமார் (Sivakumar) said...

உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வருபவன் நான். நல்ல பதிவு!

ஞானவெட்டியான் said...

அன்பு ஐயா இராமகி,
நலமா?
வெகுநாட்களுக்குப்பின் சந்திக்கிறோம்.
"முகந்தம்" நல்ல ஒரு சொல்லாட்சி.

Anonymous said...

"முகாந்திரம்" is also used to mean headman in sri lanka, can you please clarify this please??

Anonymous said...

//"முகாந்திரம்" is also used to mean headman in sri lanka, can you please clarify this please??//

In which place of Sri Lanka is this used?

Anonymous said...

evidence = "aadhaaram"?

இராம.கி said...

அன்பிற்குரிய நண்பர்களுக்கு,

உங்களுடைய முன்னிகைகளுக்கு நன்றி. முகாந்திரம் என்ற சொல் இலங்கையில் headman என்பதைக் குறிக்கும் என்பது எனக்குத் தெரியாது.

நம்பி கூறிய யோசனையைப் பலரும் கூறியிருக்கிறார்கள். வாய்ப்புக் கிடைத்தால் செய்வேன்.

ஆதாரம் என்பது பற்றி என்னுடைய அடுத்த இடுகையில் கூறியிருக்கிறேன்.

எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.

பொங்கலோ பொங்கல்.

அன்புடன்,
இராம.கி.

Anonymous said...

http://www.ibctamil.co.uk/thuyar.php?start_from=172&ucat=&archive=&subaction=&id=&

இதில் குறிப்பிடப்படும் முகாந்திரம் அப்புக்குட்டியாபிள்ளை என்பவர் குறிப்பிடப்பட்டுள்ள நகரில் நகரத் தலைவராக இருந்தவர், அவர் தனது சொந்தப் பணத்திலிருந்து மகப்பேறு மருத்துவமனை ஒன்றும் கட்டிக்கொடுத்துள்ளார்.

Athee said...

தமிழ் முந்து மொழியின் வடமாக (கயிறு)நீட்சியுற்ற சமகருத்தம் பாணினி என்ற பாலிமொழி அறிஞரால் தமிழ் நாட்டில் பச்சைமலைத் தொடர் வாழ்ந்த பதஞ்சலி முனிவர் துணையுடன் உருவாக்கியது ! சமகருத்தம்(சமஸ்கிருத்) எந்த நிலப்பரப்பு மக்களுக்கும் தாய்மொழி இல்லை ! தமிழர்களின் வேத விவேக கருவூலங்களைத் திருடி மாற்றி எழுத சமைத்த ஒரு இரகசிய எழுதி ஓதும் மறைமொழி !(தொல்காப்பியம்)

இராம.கி said...

ஐயா, தமிழ்முறைப்படி அது சம்+கதம் = சங்கதம் இந்தச்சொல் ஞானசம்பந்தரால் தேவாரத்தில் பயன்படுத்தப் பட்டது. கலப்புப் பேச்சு என்பது அதன் பொருள். பல்வேறு வட்டாரப் பேச்சுக்களைக் கலந்து செய்தது. கதம் = பேச்சு. ஈழத்தில் “என்ன கதைச்சான்?” என்றால் ”என்ன பேசினான்?” என்பது பொருள். சம்கதம் என்ற சொல் வடமொழிப் பலுக்கலில் ஸகரமும் ரகரமும் உள்நுழைந்து சம்ஸ்க்ருதம் ஆனது. இந்த விளக்கமே மொழியலின் படி சரியானது. (சங்கத மொழியை ஓரளவு அறிந்தவன் நான்.) உங்களின் நோக்கத்தின் படியெல்லாம் சொல்லமுடியாது. சமகருத்தம் என்றால் என்னவென்று எனக்குத் தெரியாது. பாணினி என்பார் பாலிமொழி அறிஞரில்லை. அவர் இற்றை இலாகூருக்கருகில் பிறந்தவர். அவருடைய நூல் சந்தசு என்ற இலக்கியமொழிக்கும். பாஷா என்கிற வழக்குமொழிக்குமாய்ச் சேர்த்து எழுதப்பட்ட இலக்கணம். பதஞ்சலி என்பவருக்கும் பாணினிக்கும் இடையில் குறைந்தது 300/350 ஆண்டுகளாவது இருக்கும். பதஞ்சலி பாணினியின் அஷ்டாத்யாயிக்கு விருத்தியுரை எழுதினார். அவ்வளவு தான். பதஞ்சலியின் காலம் கி.மு.150-100. பாணினியின் காலம் கி.மு.450 என்பார். பாணினியின் நூலுக்கும் தொல்காப்பியத்திற்கும் சில ஒப்புமைகள் உண்டு தான். ஆனால் இரண்டும் வெவ்வேறு மொழிகளுக்கு எழுதப்பட்ட இலக்கணங்கள். நீங்கள் உங்களுக்குத் தெரிந்தபடி ஏதேதோ கற்பனைகளை எழுதிக்கொண்டு போகிறீர்கள். என்னால் அவற்றிற்கு விடையளிக்க முடியாது. நீங்கள் பாணினியும் படித்தவராயில்லை. தொல்காப்பியமும் படித்தவராயில்லை. உங்களுக்கு வரலாறும் தெரியவில்லை. சொற்பிறப்பியலும் தெரியவில்லை. கற்பனையில் நீங்கள் மிதந்துகொண்டுள்ளீர்கள். என்னை இந்த ஆட்டத்தில் அருள்கூர்ந்து சேர்க்கவேண்டாம்.