'கொல்' எனும் அடிவேர்:
-------------------------------
ககர வரிசை:
----------------
இப்பக் கொன்றையோட வேர்ச்சொல்லுக்கு வருவோம். கொன்றைங்கிறதை மலையாளத்திலே "கொல்+நை = கொன்னை" ங்கிற முறையிலே சொல்லுவாக. தமிழ்லெ "கொல்+ந்+தை = கொன்றை" ங்கிற முறையிலே வரும். மலையாளத்துலே கொல்தை>கொருதை>கிருத மலம் 'னு ஒரு வட மொழிப் பேரும் இருக்கு. மதுரை நகரத்துக்கு முன்னாடி, வையை ஆறு ரெண்டாப் பிரிஞ்சு மறுபடியும் மதுரைக்கு வெளியே சேர்றதாச் சொல்லுவாக. நம்ம மருத்துவர் செய பாரதி கூட முன்னாடி மடற்குழுக்கள்லெ சொன்னாகள்லெ, ஞாபகம் இருக்கா? இப்படிப் பிரிஞ்ச வைகைக் கிளைக்கு கிருத மால்' னு வடமொழிப் பெயர் சொல்லுவாக. அதுவும் கொன்றை மரம் ரெண்டு கரையிலே இருந்ததாலே வந்ததோன்னு நினைக்க வேண்டியிருக்கு. இதே ஒலியோட கூர்ச்சரத்துலெ, கர்மாடோ ன்னு கொன்றைக்கு ஒரு பேரும் இருக்கு.
கொன்னை, கொன்றை என்ற ரெண்டுக்குமே 'கொல்'ங்கிறது தான் வேர்ச்சொல். 'கொல்'லை வச்சு ஏகப்பட்ட சொற்கள் தமிழ்லெ இருக்கு அண்ணாச்சி!. எல்லாமே மஞ்சள், ஒளி, பொன்னுங்கிற பொருளும் அதுலேந்து கிளர்ந்த பொருள்களும் தான். இது எப்படின்னா, பொல்>பொன், பொல்>பொல்லம்>பொலம் - கிறாற் போல வரும்.
கொல்>கொல்லம்>கொலம்>கோலம். கோலம்னா தங்கம் தான். பின்னாடித் தான் மகிழ்ச்சி, அழகுங்கிற பொருள் எல்லாம் வந்திருக்கு கோலாகலமாக இருந்தான்னு சொன்னா, செல்வத்தோட மகிழ்ச்சியா இருந்தான்னு அருத்தம்.
கோலாள புரம் தான், குவலாளபுரம்னு ஆயிப் பின்னாடி கோலார்-னும் ஆச்சு. நம்ம நாட்டுலெக் கால காலமாத் தங்கம் கிடைக்கிற ஊரே அது தானுங்களே (இல்லைன்னா, 3 கிலோ மீட்டர் ஆழத்துக்குச் சுரங்கம் இருக்குமா; எவ்வளவு காலம் எத்தனை பேரு தோண்டியிருக்கோணும்; உலத்துலெ ரொம்ப நாள்பட்ட சுரங்கம் இதுதான்னு சொல்றாக, அண்ணாச்சி).
இந்த ஊருதான் ஒரு காலத்துலே கங்கர்களின் தலைநகர். [கொஞ்ச காலம் தான் காவிரி பொறக்கிற தலைக்காடு (இல்லை, சிலபேரு சொல்றாப்புலெ தழைக்காடு) ஊரு தலைநகரா இருந்துருக்கு.] அன்னையிலேந்து இன்னை வரைக்கும் கோலாரைப் புடிச்சவன்தான் தென்புலத்துலே பேரரசன். இதப் புடிக்க தமிழ் மூவேந்தர்கள் எல்லாக் காலமும் சண்டை போட்டுத்தான் இருந்திருக்காக. சங்க காலத்திலேந்து வரலாத்தைப் பார்த்திங்கன்னா தெரியும், அண்ணாச்சி. தமிழ் நாட்டிலே பெரும்பாலான சண்டை கொங்கு நாடு, கங்கர் நாடு, கட்டியர் நாடு இப்படி எங்கெல்லாம் உலோகம் கிடைக்குதோ அதுக்குத்தான் சண்டை. இந்தக் கோணத்திலே, பொருளியல் நோக்குலே, தமிழக வரலாத்தைப் பார்த்தாப் பல சங்கதி விளங்கும். ஆனா, நாம பார்ப்போமா?
இந்தக் கொல்-தான், தாதுன்னு இல்லாமேத் தானாகவே கிடைக்கிற உலோகம். முதல்லே கிடைச்சதும் கூட இதுதான். அதனாலே பின்னாடிக் கிடைச்சதுக்கெல்லாம் இதுவே பொதுமைப் பெயராச்சு. விதப்புப் (special) பெயரோடெ இதச் சேர்த்துக்குவாக
பொன் - தங்கம். இதையே உலோகங்கிற பொதுப்பெயரா ஒருகாலத்துலே பயன்படுத்தியிருக்காக. பின்னாடி,
செம்பொன்- - செம்பு - சிவந்த மாழை - தாம்பரம் (copper),
வெளிம்பொன் - வெண்பொன் - வெளிரிய மாழை - வெள்ளி (silver),
இரும்பொன் - இருண்ட, கருத்த மாழை - இரும்பு (iron)
இப்படிப் பயன்பாடு கூடியிருக்கு. பாருங்களே! இங்கிலீசுக்காரன் சொல்லுற சொல்லும் இரும்பை அப்படியே அச்சடிச்சாப்பிலே இருக்கு பாருங்க. எங்கேயோ தொடர்பு இருக்கோணும்ட்டு தோணலை. இரும்பு நுட்பம் எங்கேர்ந்து கெளம்பிருக்கோணும்னு பார்க்கோணும்; (செம்பொன்கிறதுக்கு செம்பு மட்டுமில்லாமத் தூய்மையான, மாத்துக் கொறையாத, பொன்னுன்னும் ஒரு பொருள் உண்டு.)
அதே போல 'கொல்' லை வச்சு வேலை செய்ஞ்சவன் கொல்லன். இன்னைக்கு 'பொற் கொல்லன்'னு சொல்லுறது 'நீள வரிசை'ன்னு சொல்ற மாதிரி. வரிசைன்னாலே நீளம்தானே அண்ணாச்சி! இருந்தாலும் சேத்துச் சொல்றோம்லே!. அதே சமயம் இந்தக் காலத்துலே எத்தனை பேருக்கு 'கொல்' லுன்னா தங்கம்னு விளங்கும்? இரும்புக் கொல்லன்-னு நினைச்சுக்குவோம். அப்படியே பயன்படுத்தவும் செய்வோம். பின்னாடிக் கொல்>கொழு ன்னு ஆனப்புறம் இரும்பு மாழைங்கிற பொருளிலே, ஏர்லெ பூட்டியிருக்கிற கொழுவையும் சொல்ல ஆரம்பிச்சாக. இரும்புங்கிற பொருள் வந்த பிறகுதான், 'கொல்' ங்கிற இறப்புப் பொருள் கூட வந்திருக்கணும்! இறப்புப் பொருளை இன்னோரு வாட்டி பார்த்துக்கலாம். இப்ப மங்கலமா வர்றதப் பாப்போம், அண்ணாச்சி.
கொல்>கொலு; அரசன் கொலு வீற்றிருக்கிறான்னா தங்கக் கட்டில்லே திருவோலக்கமா உக்கார்ந்திருக்கிறான்னு அருத்தம். (திரு ஓலக்கம் = தர்பார்); திரு ஓலை மந்திரம் - அரசன் சொல்றதை எழுதுறவர். அத்தாணி மண்டபத்துலே தான் அரசன் கொலு இருக்குறது.
கொல்-லுலே ஆனது தான் கொலுசுங்கிற காலணி. சின்னப் பொம்பிளைப் புள்ளைக கொலுசுன்னா உசுரை விட்டுறுவாக. பின்னாடி வெள்ளிக் கொலுசுன்னு ஒண்ணு வந்துச்சு, கிட்டத்தட்டக் கடலை எண்ணெய் மாதிரி. எத்தனை பேருக்கு எள்ளின் நெய் தான் எண்ணெய்-னு தெரியும்? விதப்புச் சொல் பொதுமைச் சொல்லா மாறிப் பின்னாடி இன்னொரு பெரிய அளவிலே மீண்டும் விதப்புச் சொல்லாத் தென்படும். இது புரியாம, மேலோட்டமா பார்த்தா எல்லாம் கடலை எண்ணெய் மாதிரி முரணாத் தான் தெரியும்.
கொலு>கொழு. கொழு கொழுன்னு இருக்கான்னா செல்வத்தோடு இருக்கான், சதை போட்டிருக்கான்னு அருத்தம். கொழுத்தாலே கொஞ்சம் மஞ்ச நிறம் ஊடெ போட்டிரும்லே அண்ணாச்சி, பசலை நிறம் மாதிரி. பசலைக்குத்தான் கொன்றையை உவமையாச் சொல்லியிருக்காகளே! கொழுத்தவன் செழுத்துருவான். தமிழ்லே கொ-வும் சொ/செவும் போலி. செழுப்புலே பொறந்தது செழிப்பு.
கொழிக்கிறது - ன்னா, சொளகுலே அரிசி புடைக்கிறப்ப, எடுத்துப் போடுறது, தெளிக்கிறது தான். கொழிக்கிறதுங்கிற சொல்லே, நம்மூர்லே தங்கம் கிடைச்சு panning பண்ணிருக்கோம்னு காட்டுது. அப்படி இல்லைன்னா, இந்தச் சொல்லு வரவே வாய்ப்பில்லை. செல்வம் கொழிக்கிறதுங்கிற பொருளும் தங்கம் இருப்பதைத்தான் சொல்லுது.
கொன்றை மரம் முல்லை நிலத்தைச் சேர்ந்தது. முல்லைக் காட்டிலே கொன்றையா, மஞ்சப்பூவாக் கொட்டிக் கிடந்தா, 'கொல்லை'ன்னுதானே சொல்லுவோம். கடைசிலே கொல்லைன்னாலே காடுன்னு ஆச்சு. இப்பக் கொல்லைக் காடுன்னு சொல்றோம். மறுபடியும் டிரங்குப் பொட்டி கதைதான்.
இன்னும் பாருங்க, கொழுந்துன்னா புதிய இளவட்டான இலைன்னு அருத்தம்; புதிய இலை மஞ்ச வட்டாக் கிளிப்பச்சையா, அதே சமயம் குராலும் (brown அல்லது light red) கலந்து தானே இருக்கும். தீ கொழுந்து விட்டு எரியுதுன்னாலும், மஞ்சளா எரியுதுன்னு பொருள். (கொழுஞ்சோதி - நம்மாழ்வார், நாலாயிரப்பனுவல் 3102).
இதையே தான், கொழுந்து>கொழுது = gold -ன்னு இங்கிலீசுக்காரன் தங்கத்துக்குச் சொல்லுறான்.
கொழு>colour = நிறம்; கொழு>கோழ் = கொழுமை; கொழுமை - ன்னாலே நிறம் - கிற பொதுவான பொருள்தான். கொழு>கோழ் = கொழுமை; கொழுமுதல்ங்கிறது கழுமுதலாவும் மாறும்; நிறைஞ்சதுன்னு அருத்தம்.
கொழுது>கொழ்து>கோது>கோதுமை = மஞ்சளா இருக்குற ஒரு கூலம் (ஒரு காலத்துலே வடபுலத்துலே தமிழ் உறுதியா இருந்திருக்கோணும் அண்ணாச்சி; காரணமில்லாம தமிழ்ச்சொற்கள் எழுவது இல்லை.)
கொழு>கூழை= பொன். கொழு>கொழிஞ்சி = கிச்சிலி; நாரத்தை மரம்; மஞ்சள் சாயல் உள்ளதுதான் நாரங்கை நிறம் (நாரங்கை நிறத்தைத் தான் Orange நிறம்னு சொல்றோம்.)
பொறப்புட்ட இடத்துலேந்து பொன் துகளையெல்லாம் சேர்த்துக்குணு வர்ற ஆறு பொன்னின்னு ஆனாப்புலே, கோழியூர் = உறையூர் -ன்னு சொல்லுறதுக்கும் தொடர்பு இருக்கோன்னு தோணுது. (கோழிப் பறவை வந்துது; யானையை எதுத்துது; அதுனாலே வீரம் விளைஞ்ச மண்ணுன்னு சொல்லி சோழன் தலைநகரை அங்கே வச்சாங்கிற புனைகதையை என்னாலே ஏத்துக்க முடியலை.)
'கோழித்தலைக் கந்தகம்' னா சிவந்த கந்தகம் னு அருத்தம். கோழியோட கொண்டை சிவந்ததுதானே! அப்பக் "கோழி"ன்னா சிவந்தது; பொன்னிறம்னு அருத்தம் இருக்கப்படாதா? இதுனாலே தான் கோழியூர் = உறந்தை = பொன்னிக்குப் பக்கத்துலே இருக்குற பெரிய ஊருங்கிற எண்ணமே எனக்கு மேலே வந்தது. இருந்தாலும் இப்போதைக்கு என்னாலெ உறுதியாச் சொல்ல முடியலை.
இந்தப் பொன்னியாறு எத்தனையோ தரம் தடம் மாறி ஓடியிருக்கிறதா புவியியலார் கூறியிருக்காங்க. பொன்னிக்கு பக்கத்திலே இருந்ததாலே தில்லைக் கோயில் பொன்னம்பலம் ஆச்சுதோ, பின்னாடி பொன் வேய்ஞ்சாங்களோன்னும் தோணுது. கொள்ளிடம் பத்தியும் நல்லாப் பார்க்கோணும்.
கொல்+கை = கொற்கை; கொன்றை மரம் நெறைய இருந்திருக்கோணும். "கக்கெகிடா" ங்குறது கொன்றைக்குக் கன்னடத்துலெ பேரு.
இதே போல கேரளத்துலே இருக்குற கொல்லத்திலும் கொன்றை நெறையப் பூத்திருக்கோணும். மங்களூருக்கு (இதுவும் மஞ்சள் தான் அண்ணாச்சி)ப் பக்கத்துலே இருக்குற கொல்லூர் (அதாங்க மூகாம்பிகை கோயில்) கூட மஞ்சளை ஒட்டித்தான்.
கொல்லி மலை - கொன்றை மரம் நிறைஞ்சு கிடந்த மலை; ஒரு வேளை கொல்-பொன் அந்தக் காலத்திலே இங்கே கிடைச்சுதோ, என்னவோ? எனக்குத் தெரியாது. தகடூர் அதியமான், குதிரை மலைக்குச் சொந்தக்காரன். அதியமான் நாட்டுக்குள்ளெ தான் கோலாரு இருந்துருக்கு; இன்னைக்கும் 24 காரட் தங்கத்தை எங்க பக்கம், அந்தக் காலத்துப் பொம்பிளைக 'குதிரைப் பொன்'னுன்னு சொல்லுவாக. (இல்லை, இது இரட்டைக் கிளவியா கொழுதுப் பொன்னான்னு தெரியலை; குதிரையும், குருதையும் போலியாச்சுதுங்களே! கொழுது>குருது>குருதை?) மாப்பிள்ளை வீட்டிலேர்ந்து பொண்ணு வீட்டுக்குப் பொன் கொண்டு போற போது குதிரைப் பொன்னாப் பாத்து வாங்கிட்டுப் போகணும். இல்லைன்னா மதிக்க மாட்டாக.
கொல்>கொலுவை>கொலவை; தென் தமிழ் நாட்டுலே, மறவர் பகுதி எல்லாம், மங்கலமான நேரத்துலே வளமா இருங்கன்னு வாழ்த்துறதுக்கு பொம்பிளைக கூட்டமா நின்னு தங்கள் வாய்க்குள்ளேர்ந்து ஒரு விதமான ஒலியைக் கிளப்புவாக, அதுதான் இந்தக் கொலவை. மங்கலமான ஒலி. கேட்டாத்தான் விளங்கும். படிச்ச நாம தான் புரியாமப் பொத்தகத்தைப் புத்தகம் ஆக்கி, பின்னாடிப் புஸ்தகம்னு ஆக்கிப் புட்டொம்லெ, அது மாதிரி இதெக் குலவைன்னு சொல்லிப் பொருள் விளங்காமெக் கிடக்கோம்.
கொல்>கொள்>கொள்ளி; ஒளி=நெருப்பு---> நெருப்புக் கட்டை
கொள்>கொளு = விளக்குதல், தீப்பற்ற வைத்தல்
கொளூ>கொளூந்து = தீச் சுவாலை
கொல்>கல்> கல்லம் = கல்லாரம் = மஞ்சள்; இதெக் 'கலேயம்'னு வடமொழிலே சொல்லுவாக.
கல்>கலை/களை = ஒளி, அழகு
கல்>கலன் - தங்கத்தால் ஆன அணி, பூண்
கல்>கலாதன் - தங்க வேலை, அணிகலன் செய்கிற தட்டான்
கல்>கலிப்பு - பொலிவு
கல்>கழு>கழுகு - கழுத்திலே பொன்னிறம் கொண்ட பறவை.
கல்>கழு>கழஞ்சு - பொன்னுக்கான ஒரு எடுத்தல் அளவை
கழு>கெழு>கேழ் =நிறம்; கொழு>colour = நிறம்; கெழுமிய = நிறைந்த = செல்வம் பொருந்திய. நிறத்துக்கும் நிறைவுக்கும் தொடர்பு மாதிரி கெழுவுக்கும் 'கெழுமிய'ன்னு ஒரு தொடர்பு. "அன்பு கெழுமிய மனைவிக்கு, அம்மாவுக்கு, அப்பாவுக்கு....," அப்படின்னு எழுதுறது ஒரு காலத்துலெ பழக்கம். அன்பு நிறைந்த - ன்னு பொருள்.
கல்>கன்>கனி; கன்னிப் போச்சுன்னா, சிவந்து போச்சுன்னு அருத்தம். மஞ்சளா ஆனாத்தானே காய் கனியும்.
கல்>கன்>கனகு>கனகம் = பொன்
கல்>கன்>கனம்>கணம் = ஒளிக்கதிர், 'கணகண'ன்னு எரியுதுன்னா ரொம்பவும் சுவாலையிட்டு எரியுது'ன்னு அருத்தம்.
கணம்>க்ரணம் (வடமொழி)>கிரணம் (மீண்டும் தமிழ்ப்படுத்தப்பட்டது)= ஒளிக்கதிர், (இப்படித் தமிழில் மூலம் இருந்து வடமொழி போய்ப் பின்னாடி மீண்டும் தமிழுக்கு வந்து சேர்ந்தது எக்கச் சக்கம், அண்ணாச்சி; கொஞ்சம் ஆழ்ந்து பார்த்தா, மூலம் விளங்கிரும்.)
க்ரணம்>ஹ்ரணம்>ஹ்ரண்ய = தங்கம் (வடமொழியில்)
ஹ்ரண்ய>ஹ்ரண்யன்>ஹ்ரண்ய கசிபு>இரணியன் (மீண்டும் தமிழ்ப் படுத்தப்பட்டது) = பொன்னவன் என்ற அரக்கன்
கணம்>காணம் = பொன், பொற்காசு
கல்+யாணம் = கல்யாணம் = மங்கலமான நிகழ்வு, நிறைந்த அழகு, பொன் (யாணம் =அழகு)
கல்>கால்>காலை; காலைன்னா, ஒளி மஞ்சளா, மெதுவா, கொஞ்சமா, வர்றது தானே? கால்தல்'னாத் தோன்றுதல்னும் அருத்தம். இருள் போய் ஒளி வர்றது, பொருட்கள் கண்ணுக்குத் தோன்ற வகை செய்யுது, இல்லைங்களா? காலைன்னா சூரியனும் கூட. (இந்த நேரம், காலம், நாள் பத்தி ரொம்பவே சொல்லலாம் அதை, இன்னோருதரம் பார்த்துக்கலாம் அண்ணாச்சி.).
கால்>காய்>காய்ஞ்சனம்>காஞ்சனம்>காஞ்சனி = மஞ்சள், பொன் (ல்/ய் போலி)
காஞ்சி = கரூருக்குப் பக்கத்துலெ இருக்குற நொய்யலாற்றுக்கு இன்னொரு பெயர், ஆக, மறுபடியும் கொன்றை மரத்தோடும், இரும்பொறை என்ற சேர அரசக் கிளையோடும் தொடர்பு.
காஞ்சிபுரம் = "நகரேஷு காஞ்சி"ங்குறது வடமொழிச் சொலவம்; நகரங்கள்லெ சிறந்தது காஞ்சின்னு சொல்லுவாங்க
கெழு>கிழு>கிழி = பொன்; (பொற்கிழின்னா ரெண்டு வகை. ஒண்ணு: பொற்சரிகையாலெ ஆகிக் கிழிச்சது; இன்னோண்ணு இரட்டைக் கிளவியா பொற்கிழி- பொன்னால் ஆன பொருள்)
கல்>கெல்>கில்>கிள்>கிள்ளி = சோழர்கள் பொதுமைப் பேர்லெ ஒண்ணு. கிள்ளி - ஒளியுடையவன்; சூரிய குலத்தவன்னு அருத்தம்.
கில்>கில்வலி = இந்திலே கொன்றைக்கு உள்ள பெயர்; இதைக் கிரால், சினார்னும் கூட அவுக சொல்றாக.
கிள்>கிளர் = ஒளி; கிளர்தல் = விளங்குதல்
கிள்>கிளத்தல் = சொல்ல வந்ததைப் புலப்படக் கூறுதல். (அதாவது தெளியவைக்கிறது, வெளிச்சம் போட்டு காட்டுறதுன்னு அருத்தம்.) கிளத்திக் காட்டுதல்>கிளச்சிக் காட்டுதல் (glass ன் தொடர்பு விளங்குதா/)
அன்புடன்,
இராம.கி.
6 comments:
அருமையான விளக்கம் ஐயா ! நிறையத் தெரிந்து கொள்ள முடிகிறது. ஆச்சரியமாகவும் இருக்கிறது. சேர்த்து வைக்க வேண்டிய பதிவு. நன்றி.
அருமையான தகவல்கள். மிகவும் அருமை.
அன்பிற்குரிய செல்வராஜ், மற்றும் இராகவன்,
உங்கள் பின்னூட்டிற்கு நன்றி. அவ்வப்போது ஒரு சிந்தனையில் எழுதுவது; பின்னால் அதைத் தொடரமுடியாமல் போவது - இப்படிப் போய்க்கொண்டு இருக்கிறது என் கதை. இந்தக் கொன்றையை ஒட்டிய சொற்கள் விடாமல் தொடர்ச்சியாய் எழுத முடிந்தது நிறைவாக இருக்கிறது.
பொதுவாக நம் வேர் நமக்குப் புரியாமல், இருப்பதையும் தொலைத்துக் கொண்டே இருக்கிறோம். நண்பர்கள் பலரும் தாங்கள் அறிந்த தமிழ்ச்சொற்களின் தொகுதியைக் கூட்டிக் கொண்டு அவற்றைப் பயன்படுத்தத் தொடங்கினால் மகிழ்வேன்.
அன்புடன்,
இராம.கி.
சமீப காலமாக நீங்கள் நிறைய எழுதி வருவது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.
நன்றி, திரு.சிவகுமார். சில பொழுது எழுதுவதும், சில பொழுது தொய்வதும் மாறிமாறி நடக்கிறது.
அன்புடன்,
இராம.கி.
கிளர்ந்தேன்...
Post a Comment