சகர வரிசை:
----------------
இப்பச் சகர' வரிசைக்கு வருவோம். க்/ச் தான் போலி'ன்னு முன்னாடியே சொன்னேன்லெ அண்ணாச்சி!
கொல்>சொல் = சொலிப்பு, ஒளி
சொல்>solar = சூரியன் ஒளி
சொல்+ஐ = சொலை>சோலை>சுவாலை= flame; சொலி>சுவாலி = ஒளியிடு; இப்படித்தான் இங்கே, தமிழ்ச்சொல் வடமொழியாட்டம் பலுக்கப் படும்; நாமளும் இது அங்கேர்ந்து வந்தது போலிருக்குன்னு நெனச்சிக்கிடுவோம். இப்படித்தடுமார்ற சொற்கள் பல.
சொலை>சோலை = பொன்னிறப் பூக்கள் மலரும் மரங்களைக் கொண்ட காடு. இப்படித்தாங்க சோலைமலை = அழகர்கோயில்; மேலே பெரியாழ்வார் பாட்டுப் படிச்சீகளா?
சொல்=ஒளி, நெல் (மஞ்சளா இருக்கிற கூலம்).
சொல்>சொன்>சொன்றி = சோறு
சொல்>சோல்>சோலு>சோறு; மங்குனாப்புலே தான் இயற்கை அரிசிச் சோறு இருக்கும்; இந்தக் காலத்துலே வெள்ளை வெளேர்னு பாசுமதியோ, பொன்னியோ இருந்தாத்தான் பலருக்குப் புடிக்குது; இதுல்லாம் அறிவியல் பண்ண வேலைகள்.
சொல்>சோல்>சோலு>சோளு>சோளம் = இதுவும் மஞ்சளாக இருக்கும் இன்னொரு கூலம்
சொல்>சோல்>சோழன் = பொன், ஒளிதரும் சூரியனின் குலத்தவன்; பாண்டியன், சேரன் என்பதுக்கெல்லாம் வேரை வேற இடத்துலே பார்க்கலாம்.
சொல்+நம் = சொன்னம்>சொர்னம்>சொர்ணம் = தங்கம், நாணயம்; வழக்கம் போல வடமொழிப் பலுக்கு உள்ளே வந்துருது பாருங்க.
சொர்ணம்>சுவர்ணம்>சுவர்ணகா = வடமொழியிலெ கொன்றைக்கு உள்ள பேரு.
சொன்னம்>சொன்னல்>சொனாலி = வங்காளிலெ கொன்றைக்குப் பேரு. சொன்னல்> சொந்தல்>சொந்தால்னும் வங்காளிலெ வரும். அசாமியிலே சொனாறுன்னு பேரு (அந்தக் காலத்துலே அறுபதுகள்லெ "சோனாரே, சோனாரே" ன்னு ஒரு பேர் பெற்ற இந்தித் திரைப்படப் பாட்டு, ஆராதனான்னு நினைக்கிறேன். தங்கமானவளேன்னு காதலியக் கூப்பிடுவான்.)
சொன்னம்>சொன்னகாரன் = பொன் வேலை செய்யுற தட்டான்
சொல் +நை = சொன்னை>சோனை>சோணை= தங்க நிற ஆறு. விகாரை மாநிலத்துலே (பீகாருலெ), பாடலிபுரத்துக்கு பக்கத்துலே இருக்குற ஆறு. கங்கையும் சோனையும் அங்கே பண்பாட்டுலே முகமை. கங்கை கருப்பு; சோணை வெளுப்பு; தங்க நிறம்; (நிறம் வச்சு ஆத்துக்குப் பெயரிடுறது நெடுக உள்ள வழக்கம் தான். நம்மூர்லே பொன்னி = தங்கம், வையை = வெள்கை = வெள்ளி, தாம்பர பெருநை = செவப்பு; ஆறுகள் பத்தி ஒரு முறை சொல்லியிருக்கேன், அண்ணாச்சி; அதை இன்னொரு முறை வேற சமயத்துலே பார்க்கலாம்.)
சோணம் = பொன், தீ, சிவப்பு
சோண அசலம்> சோணாசலம் > சோணேசலம் = திருவண்ணாமலை (அசலம்னா மலை; அசையலம்>அசலம் = அசையாதது; வடமொழிலே பெருகிய வழக்கு; இந்த ஊருக்கும் சோதிக்கும் உள்ள தொடர்பு தெரிஞ்சது தானே; நெருப்பை வச்சு இந்த ஊரு ரொம்பப் பெரிசாச்சு; எல்லாரும் இப்ப "கிரிவலம்" போகத் தொடங்கிட்டாக! அஞ்சு பூதத் தலத்துலே இது நெருப்பு. திருக் காலத்தி = காற்று; கால்னாக் காற்று; திருக் கச்சி = காஞ்சிபுரம் = மண்; திரு ஆனைக்கா = நீரு; தில்லை = காய வெளி; ஒண்ணொன்னும் ஒவ்வொரு மாதிரி; ஆனாப் பார்த்துட்டு வாங்க. விட்டுராதீங்க! நான் பார்த்துட்டேன்.)
சொர்ண பூமி = சுமத்திராத் தீவு. இயற்கை எழிலோட, தங்கநிற பூக்கள் சிதறிக் கிடக்கிற தீவு; (இல்லை தங்கமே அங்கு கிடைச்சுதோ என்னவோ தெரியாது.)
சொல்+கு = சொக்கு = தங்கம். (சொக்குத் தங்கம்' ங்கிறது இரட்டைக் கிளவி.) மதுரைச் சொக்கன் பொன்னானவன்; ஏன்னா அதுதான் அவன் நிறம்.; சொக்கிப் போனான் என்றால் சொலிப்பைக் கண்டு வியந்து போனான்னு பொருள்; சொக்கம்>சொர்க்கம் = 'பொன்னுலகு'ங்குற கற்பிதமான மேல் உலகு; இங்கேயும் வடமொழிப் பலுக்குங்குறதாலே நாம குழம்புறோம். தங்கம் கிடைக்காத, தங்கம் கொறச்சுப் புழங்குன நாட்டுலே சொக்கம்னு சொல்லு வராது அண்ணாச்சி; பொன்னுலகுங்குற கற்பிதம் முழுக்க முழுக்கத் தமிழ்க் கற்பிதம் தான்.
சொக்கம்>சொகம்>சுகம் = பொலிவோடு மலர்ச்சியோடு இருக்கும் தன்மை; சுகமா இருக்கீங்களா என்றால் சோர்வில்லாமல் முகத்திலே ஒளிவிடுறாப்புலே இருக்கீங்களான்னு அருத்தம். health ங்குறதுக்கு இப்ப நாம அந்தச் சொல் தான் புழங்குறோம். வெள்ளைக்காரன் கொழிதா இருக்கீங்களான்னே கேக்குறான். கொழுது>கொழிது = health = செழிப்பு, நலம், சுகம்.
சொல்+தி = சொல்தி>சோதி = ஒளிவிடுகிற நெருப்பு
சொல்தி>சொல்தகம்>சோதகம்= தூய்மை செய்தல்
சோதனை = உலோகங்களின் தரத்தைச் சோதித்தல். (அந்தக் காலத்துக் கல்லூரிப் புகுமுக வகுப்புலெ (Pre-University), அல்லது இந்தக் காலத்து +2 படிப்புலெ, flame test னு ஒரு வேதியல் முறை. Bunsen சுவாலையில், தெரியாத உப்பைக் காட்டி, சுவாலையின் நிறம் மாறுறத வச்சு, இந்த மாழையின் உப்பாக இது இருக்கும்னு சொல்றோம்லெ, இது தான் அண்ணாச்சி சோதிக்கிறது. பாருங்க, அடிப்படை வேதியல், தமிழ்ச் சொல்லைச் சொன்னாலெயெ நெருப்போட தொடர்பைக் காட்டி வெளிப்படுது! இதுக்குத்தான் தமிழ்லெ அறிவியல் வரணும்னு சொல்றோம். "எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே"ன்னு சரியாத்தான் தொல்காப்பியர் சொல்லியிருக்கார். யாரு செய்யுறம்கிறா? உள்ளதுக்கே தொள்ளைக் காதான்னு ஆயிப் போச்சுது; அஞ்சாப்பு மட்டுக்கும் கூடத் தமிழ் இருக்குமான்னு ஆயிப் போச்சு; என்னத்தச் சொல்றது, விளங்காத பயக, கோட்டிப் பயக, பெருகிட்டாய்ங்க.)
சோதி>சோதியர்>சோதிஷர்>சோதிடர் = விண்ணிலெ ஒளிவிட்டு இருக்குற விண்மீன்கள், கோள்களை வச்சு எதிர்காலத்தைக் கணிக்கிறவர்.
சொல்>சொலு>சொலுவு>சொருவு>சொரூவம்/சொரூபம் = சொலிக்கிற திருமேனி/படிமம்/தோற்றம்; சொல்லு வடமொழி; வேரு தமிழு.
சொருபு>சோபு>சோபை>சோபிதம் = ஒளி; மறுபடியும் வடமொழிச் சொல்
சொல்>சோதி>சோடிப்பது= ஒளி பொருந்திய வகையில் அலங்காரம் பண்ணுவது; மதுரய்க்காரய்ங்க சாமானை ஜாமான்னு, மதுரையை மெஜுரான்னு ஏதோ ஒப்பனையாச் சொல்றாப்புலே சொல்லுவாய்ங்க; அது மாறி சோடியை ஜோடின்னு சொல்லி அதன் அடிப்படையை நாம மறந்துட்டம்.
சொலி>சொலித்து >சொத்து = பொன். அந்தக் காலத்தில் பொன்னு தாங்க சொத்து; மத்ததெல்லாம் பின்னாலெதான்; ஏன்னா பொன்னு தானே செலாவணியா இருந்துது. பணமே பொன்னு தானுங்களே!; பொன்னு இல்லைன்னா மனுசனை மதிக்க மாட்டான்; பொன்னுக்கு வீங்குற ஆளு உலகத்துலேயே தமிழங்க தான். இப்போ சமீபத்துலெ Time தாளிகை ஒரு கட்டுரை போட்டிருந்தது, படிச்சீகளா? பொன்னுன்னா நம்மாட்களுக்குப் பித்து.
சொல்>சொய்>சொய்ம்>சொம் = சொத்து= பொன் (ல்/ய் போலி); சொத்துக்குரியவன் சொந்தக்காரன். (எங்கூர்ப்பக்கம் தந்தை வழியைப் பங்காளிம்பாய்ங்க. தாய் வழியை தாய புள்ளைக'ம்பாய்ங்க. பங்காளி சொந்தக்காரன்; தாயபுள்ளை - உறவுக்காரன்; உறவுக்காரனுக்குச் சொத்து இல்லை. சொந்தக்காரனுக்குச் சொத்து வரலாம்; அண்ணன், தம்பி, பெரியப்பா புள்ளெ, சித்தப்பா புள்ளெ இப்படித் தானுங்களே சொத்துப் பிரிக்கிறது. மாமன், மச்சானுக்கு அன்பாலே கொடுத்தாத் தான் உண்டு);
சொல்>செல்>செல்வம் = சொத்து, அழகு, செழிப்பு, பணம், பொருள்; செல்வந்தன் னா பொன்னு போல நிறைய வச்சிருக்கிறவன்னு பொருள்.
செல்>செலியம் = தங்க நிற ஊடாடும் பசிய இலாமிச்சைப் புல்
சொல்>சால் = நிறைவு; சாலுதல் = நிறைதல்; சாலி = செந்நெல் (இது ஒருவகை கருஞ் சிவப்பு; ரத்தம் ஓடுற போது சிவப்பாத் தெரியும்; ஆனாச் செறிந்து (concentrated) உறையுற போது கருப்பாக் காட்டும். சிவப்புக் கருப்பின் தொடர்ச்சியை மாந்தன் புரிஞ்சிக்குனதே ரத்தத்தெ வச்சுத் தான்), சாலிங்குறது நெற்பயிரின் பொதுப்பெயர். இந்தோனேசியாவுலெ இருக்குற சாவகத் தீவுக்கு சாலித் தீவுன்னும் ஒரு பேரு. (சாவகம்'கிற பேரு இன்னோடு வகையிலே 'யா' - 'சால்' - 'ஆச்சா' மரத்தோட தொடர்பு; அதை இங்கே நான் சொல்லலை; அதுவும் தெரிஞ்சுக்க வேண்டியது தான். வேறொரு முறை பாக்கலாம்.) கவுனி அரிசின்னு ஒரு அரிசி கருப்பாவும், கருஞ் சிவப்பாவும், சிலப்போ வெளிறிய சிவப்பாவும், பருக்கை ஒண்ணுக்கொண்ணு ஒட்டிக்கிறாப்புலெ இருக்கும். அது மலேசியா, இந்தோனேசியா, மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ரொம்பக் கிடைக்கும். இந்தப் பக்கங்கள்லேர்ந்து எங்கூருக்கு இதை விரும்பிக் கொண்டாருவாக. அண்மையிலே போன வருசக் கடைசியிலே மலேசியாவின் காழக (காடக>கெடாக>kedah) மாநிலத்துக்குப் போன போது நானும் விரும்பி வாங்கியார்ந்தேன்; சீனி, தேங்காய்ப் பூ, எல்லாம் போட்டுச் செய்ஞ்சா, நல்லாச் சுவையா இருக்கும் அண்ணாச்சி; இப்பச் சென்னையிலும் கிடைக்குது. ஆனா, இது கேரளாவிலே கிடைக்குற சிவப்பரிசின்னு நினச்சிடாதீக, இது வேறே வகை. ஒரு தடவை வாங்கிச் சாப்பிட்டுப் பாருங்க. இந்தக் கவுனி அரிசி தான் அந்தக் காலத்துச் சாலி அரிசி);
சாலேயம் = செந்நெல் விளையும் நிலம்
சால்>சால அக்கரம்> சால அக்ஷரம் > சாலாக்ஷரம் >சாலேக்ஷரம்> சாளேக்ஷரம் >சாளேட்சரம் = வெள்ளெழுத்து. மங்கிப் போன எழுத்து. மறுபடியும் ஒளி, மஞ்சள் தொடர்பு (அக்கரம் னா எழுத்து; அகரம், ஆகாரம், ஈகாரம்னு சொல்றோம் இல்லியா; அந்தவகையிலே இது அக்கரம்; இது தமிழ் தான், அண்ணாச்சி; அட்சரம்னு சொல்லி மூலம் தெரியாமப் பலர் இருக்கோம். தமிழ் மூலம் தொலச்சு, உருப்படாமப் போனது, போதும். இனிமேல் ஆகப் பிடாது.)
சால்>சாய்>சாயம்= நிறம், வண்ணம்; காலை நேரம் எப்படி ஒளியோடு தொடர்பு இருக்கோ, அப்படித்தான் சாயுங் காலமும்; பொழுது சாயும் போது மஞ்சளா ஆகும். மஞ்சள் தானே நிறம்கிறதுக்கு பொதுவான சொல்லா ஆயிருக்கு (கெழு'ங்குற சொல்லை முன்னாடிப் பாத்தமே!); பொழுது சாய்கிறச்சேங்குறதெ சில ஆட்கள் சாய்கிறச்சே>சாய்ரட்சை என்று எழுதி அதையும் வடமொழின்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாய்ங்க. வடமொழிக்குத் தெண்டனிட்டே நாம பெருமிதத்தை இழந்து தடுமாறிப் போயிட்டோ ம்.
சாய்>சாயல் = நிறம், அழகு, மஞ்சள்; சாய்>சாய்மி>சாமி= பொன் நிறம்; சாமி>சுவாமி = பொன் நிறம் கொண்ட சிவன்; இதெப் பெரும்பாலும் பெருமாளுக்குச் சொல்றதுல்லே; ஓரொரு சமயம் விதிவிலக்காச் சிலர் விண்ணவனுக்குப் பயன்படுத்துவாக; அந்தப் புழக்கம் அருகியது.
சாய்>சாய்ம்புதல்>சாம்புதல் = நெருப்பு அடங்கிப் போதல்
சாம்பு>சாம்பல் = நெருப்பு அடங்கிய பின் கிடைக்கும் பொடி; கங்கின் மேல் சாம்பல் கிடக்குறதாலெ தான், சிவன் சாம்பல் பூசியவன் ஆகுறான்; சாம்ப சிவன் என்ற சொல்லாட்சியும் அப்படித்தான்; தொன்மம் பிறக்குறது இப்படித்தான். இயற்கைலெ ஒண்ணப் பார்ப்போம்; அப்புறம் கற்பனை பறக்கும்; கொஞ்சம் அலங்காரம் பண்ணுவோம்; தொன்மம் பிறந்திடும். சிலர் அதை அப்படியே எழுதியிருக்குற படியே நடந்ததா நம்பிருவான். என்ன பண்றது சொல்லுங்க?
நெருப்பின் சுவாலை ஆடுவதால் தான் சிவன் நடவரசன். சுவாலையின் அடியும் முடியும் காண முடியாததால் தான், சிவனின் அடியும் முடியும் காணமுடியாது என்ற தொன்மம் பிறந்தது. (திருவண்ணாமலையில் தான் இந்தத் தொன்மம் உண்டு.) நெருப்பும், கரியும் கூடச் சேர்ந்து இருப்பதால் தான் அவன் அறுத்த(அர்த்த) நாரி; ஆணும் பொண்ணும் சேர்ந்ததா ஓர் உருவகம். குளிர்ச்சியான நீர் நெருப்பை அணைப்பதும், குளிர்ச்சி/பச்சையை அம்பாளுக்கு உரியதாச் சொல்றதையும் எண்ணிப் பாருங்க அண்ணாச்சி. இந்தத் தொன்மங்களுக்கு ஒரு ஆதிகால அடிப்படை இருக்கோணும்லெ. தொன்மங்களெத் தூக்கி எறியோணும்னு நான் சொல்லலை; அதனோட பொருளைச் சரியாப் புரிஞ்சுக்கோணும்னு சொல்றேன். தொன்மம் ஒருவகையில் நம்ம பண்பாட்டு வளர்ச்சியின் தொகுப்பு.
சம்பா நெல் = மஞ்சள் நிறம் கூடிய ஒரு வகையான உயர்ந்த வகை நெல். (சம்பா நெல்லெல்லாம் எங்கேயோ போயிருச்சு அண்ணாச்சி, நான் சின்னப் புள்ளையா இருந்த போது சாப்பிட்டிருக்கேன்; இப்போ ஐயார் எட்டும் (IR 8), இருபதும், பொன்னியும் தான் பலருக்குத் தெரியுது; ராமஞ் சம்பா சாப்பிட்டு இருக்கீகளோ? சுவைன்னா அதுதான் சுவை; பாசுமதி கணக்கா இருக்கும். குங்குமச் சம்பா'ங்கிறது இன்னோரு வகை; சம்பா பழைய காலம் அண்ணாச்சி.)
சம்பா>ஜம்பா = மராத்திலெ கொன்றைக்கான பேரு.
சொல்>சுல்>சுல்லு = வெள்ளி; சுடரா ஒளியா வெள்ளையாத் தெரியுற மாழை; சுல்>சுல்வம் = வெள்ளி (இங்கிலீசுக் காரன் silver னு சுருக்காச் சொல்லிருவான்.) சுல்வம்கிறது வடமொழியிலும் இருக்கும் ஒரு பலுக்கு.
சுல்>சுழியச்சு = பொன்னை உருக்கி வார்க்கும் அச்சு
சுழியாரை>சுழாரை = பொன்னா விரைச் செடி
சுல்>சுள்>சுள்ளி = மயிற் கொன்றை மரம் (இதைத் தமிழ்லெ சொல்லாம, பல ஆளு gul mohar னு சொல்லிட்டுத் திரியுறாக. கொஞ்சம் உள்ளே போங்க அண்ணாச்சி. கொல் தான் கொன்றையின் வேர்னு சொன்னேன்லே; கொல் gul ஆகிருக்கு. மயில்>maur>mohar னு ஆகும். (லகர, ரகரப் போலி) maurya என்பதும் மயில்லே வந்தது தான். வேறே ஒண்ணுமில்லே, அவுங்க கருப்பு, அவ்வளவு தான். அதுவரைக்கு இருந்த சில அரச பரம்பரை சிவப்பு; உயர்ந்த சாதி; இவய்ங்க கருப்பு; தாழ்ந்த சாதி; ஆனாலும் தோள் வலியால் அரசனாயிட்டாய்ங்க; மக்கள் இவுங்களைக் கருப்பு ராசான்னு ஆக்கிப் புட்டாய்ங்க. gul mohar ங்குறது நம்ம மயில் கொன்றையைத் தலைகீழாப் போட்டது தான்.
சுள்>சுளுந்து = தீப்பந்தம்; சுள்ளி, சுளுந்துங்குற சொற்களைப் பார்த்தா மயிற் கொன்றையையும் ஏன் flame of the forest ன்னு சிலர் சொல்றாங்கன்னு விளங்குதா? உண்மையுலே flame of the forest ங்குற பெயர், முருக்க மரம் / பலாச மரம் / புரச மரத்துக்குத் தான் சரி வரும்; ஆனாலும் பலர் மயிற் கொன்றையையும் அப்படிச் சொல்றாக.
ஒண்ணு சொல்லோணும் அண்ணாச்சி! நீங்கள்லாம் கோவிச்சுக்கப் படாது. நம்மூரு மரங்களை, படம் விளக்கமெல்லாம் கொடுத்து, நம்மூருப் பெயர்களோடும், புதலியல் (botany) பெயரோடும் போட்டுப் பொத்தகம் எல்லாம் வந்திருக்கு; கொஞ்சம் வாங்குங்க; படிங்க. நம்மூரு இயற்கையைப் படிக்காம, செடார், பைன் அப்படின்னு ஊசியிலைக் காடு பத்தியெல்லாம் சட்டுப் புட்டுன்னு இந்தக் காலத் தமிழ்ப் புள்ளைக சொல்லுது.
அட, மக்கா புள்ளெ, கொன்றைன்னா தெரியாமக் கிடக்கியேன்னு மனசுக்குள்ளே வருத்தமாக் கிடக்கு. நம்மூரு மரம், செடி, கொடி, பூ, காய், பழம் தெரிய வைக்காம, நம்ம குழந்தைகளுக்கு, நம்முர எப்படிப் புடிக்க வைக்க முடியும், புரிஞ்சிக்க வைக்க முடியும்னு சொல்லுங்க?
அன்புடன்,
இராம.கி.
4 comments:
//சுல்>சுள்>சுள்ளி = மயிற் கொன்றை மரம் (இதைத் தமிழ்லெ சொல்லாம, பல ஆளு gul mohar னு சொல்லிட்டுத் திரியுறாக.//
எங்கள் ஊரில் சுள்ளிப்பூ என்று ஒன்றைச் சொல்வார்கள். இதன் நிறமும் இளஞ்சிவப்புத் தான்.
சுள்ளிப்பூ பற்றி இப்பொழுது தான் கேள்விப் படுகிறேன். நினைவில் வைத்துக் கொள்ளுவேன். ஆனாலும் சுள்ளி என்ற சொல்லின் பொருள் இதற்கும் பொருந்தி இருப்பது அறிந்து மகிழ்ச்சி.
சுள்ளிப்பூவின் புதலியல் பெயர், படம், விளக்கம் பற்றி எழுதி ஒரு பதிவைப் போடுங்களேன். எல்லோரும் தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக நம்மூர் மரஞ்செடி கொடிகளை நாம் எல்லோரும் தெரிந்து கொள்ளாது இருக்கிறோம் என்ற குறை எனக்கு நெடுநாளாக உண்டு.
அன்புடன்,
இராம.கி.
சென்ற மாதம் ஈரோடு - கோவை செல்லும் நெடுஞ்சாலையில் சுள்ளிப்பூவைக் கண்டேன். கூடிய விரைவில் அதனைப் படம் பிடித்துப் போடுகிறேன். மேலும் ஒரு ஐயம்: சுள்ளெறும்பு என்று சொல்வதும் இதனால் தானோ?
நம்ம ஊர் செடி கோடி மரங்களை தெரிந்து கொள்ள "அலசல்" என்று தேடுங்கள்.
Post a Comment