Friday, January 27, 2006

கொன்றையும் பொன்னும் - 5

உயிரெழுத்து வரிசை:
----------------------------
தமிழ்லெ ஒரு பழக்கம். பல இடங்கள்லெ 'க'வை மெலிஞ்சாப்புலே 'ஹ' ன்னு ஒலிப்போம் (தென் தமிழ் நாடு வந்தீங்கன்னா தெரியும்.). இது பெரும்பாலும் சொல்லுக்கு நடுவிலேயும், சில வேளை முதல்லேயும், சிலவேளை கடேசியிலேயும் வரும். இதே போல கன்னடத்துலே 'ப'வை 'ஹ'ன்னு ஒலிப்பாங்க. கன்னடப் பழக்கத்துக்கு ஒருவகையான ஆதாரம் கிரந்த எழுத்து. அதப் பத்தி இங்கே எழுதுனா விரியும்கிறதாலே விட்டுர்றேன். அந்தக் காலத்துலே தக்கணத்துலெ எழுத்து ரெண்டு வகை; ஒண்ணு வட தமிழ் நாட்டுலேயும், வடுகு நிலத்துலேயும் (அதாவது இன்னைய ஆந்திரா, கர்நாடகா), சோழர், சாதவா கனர், பல்லவர் அரசுகள்லே புழங்கியது; இன்னோண்ணு தென் தமிழ் நாடு, கேரளாவுலெ, பாண்டியர், சேர அரசுகள்லெ இருந்த வட்டெழுத்து. ரெண்டுக்குமே தமிழிங்குற பழைய எழுத்து அடிப்படை. வட்டெழுத்துத் தான் கிரந்த எழுத்தா மாறுனது. இதுலேர்ந்து தான், தெலுங்கு, கன்னடம், ஒரியா, சிங்களம், பின்னாடி தென்கிழக்கு ஆசியா நாடுகள்லே இருந்த பர்மிய எழுத்து, தாய்லாந்து எழுத்து எல்லாம் வந்துச்சு. இந்தக் கிரந்த எழுத்தோட தாக்கம் தமிழுக்கும், திராவிட மொழிகளுக்கும் ரொம்பவே இருக்கு. அது இந்த நாட்டோ ட கண்டு பிடிப்புத்தான். ஆனாக் கிரந்த எழுத்து வந்தது வடமொழியை எழுதுறதுக்கு; தமிழ் என்னும் மொழியை எழுதுறதுக்கு அல்ல.

சரி, நம்ம புலனத்துக்கு வருவோம்.

கொல்>ஒல்>ஒல்வை = காலம், நாள், பொழுது
ஒல்>ஒள்>ஓளி= சோதி, விளக்கம், சூரியன், சந்திரன், விண்மீன், மின்னல்
ஒளிமரம் = இதைச் வட மொழியுலே சோதிவிருட்சம்'னு சொல்லுவாக. வைரமுத்துக் கூட ஒரு திரைப்படப் பாட்டுலே 'சோதிமரங்கள்' பத்திச் சொல்லியிருக்காரு. இந்த இராமர் பிள்ளை கூட மூலிகை எரி பொருளுக்கு இதைத்தான் காட்டுனார்னு சொல்லுவாக.
ஒளி>ஓளிறுதல் = ஒளிகாட்டுதல்

ஒல்>அல்>அலர் = மஞ்சள், மஞ்சள் பூ
அல்>அலங்கல் = ஒளி, பூமாலை
அலங்கல்>அலங்காரம் = ஒளி நிறைஞ்சாப்புலெ தங்கம், பூ - இப்படிப் பலதும் வச்சுச் சோடிக்கிறது அலங்காரம்

அல்>அழு>அழல்= நெருப்பு
அழல்>அழி = அழிக்கிறது = தீக்கிரையாக்குவது.

அல்>அழு = அப்புவது. அழு>அழகு = மஞ்சள் பூசியது. அழகு' ன்னாலே ஒளிவிட்டாப்புலெ bright -ஆ இருக்கோணும். beauty -ங்கிறதெ அது தாணுங்களே. 'அழகிய முக'ங்குற போது 'அழகிய'ங்குற முன்னொட்டு ஒரு வினைச் சொல்லக் காட்டுதுல்லெ; அப்படின்னா அழகுவதுன்னா என்ன? அழகுவதுங்கிறதே மஞ்சப் பூசுறது தான், அண்ணாச்சி. மஞ்சளைப் பூசிக்கிட்டா, நம்மூர்லே யாருமே அழகுதான் அண்ணாச்சி, வியப்பா இருக்குல்லெ. அழகுக்குள்ளே மஞ்சள் இருக்குன்னு பலரும் விளங்கிக்கிர்றது இல்லெ.
அல்>அளர்= மஞ்சள்

அல்>அல்தம்>அத்தம்>அத்தாணி மண்டபம் = அரசன் கொலு வீற்றிருக்கும் பொன் வேலைப்பாடு கொண்ட மண்டபம்; பொன் வேலைப்பாடுன்னா, பொன் தகடு வேலைப்பாடுன்னு அருத்தம்.

அல்>எல்= ஒளி, சூரியன். (கிரேக்கக்காரன் helios னு சொல்லுவான். கொஞ்சம் தொடர்பைப் பாருங்க.)
எல்லி,எல்லை, எல்லோன் = சூரியன்.
எல்லை = yellow = மஞ்சள்; ஆங்கிலச் சொல்லு புரியுதா?
எல்லம்மா = ஒளித் தோற்றம் உள்ள கொற்றவை
எல்>ஏல்>ஏழல்>ஏரல்>ரேல = தெலுங்கில் கொன்றைக்கான பேரு.

எல்>எலும்பு = வெளிறிய மஞ்சள் தோற்றம் அளிக்கும் bone
எலுமிச்சை = வெளிறிய மஞ்சள் நிறம் கொண்ட ஒரு பழம்.

எல்>எழு>எழில்= அழகு (மறுபடியும் மஞ்சள் தொடர்பு), தோற்றப் பொலிவு
எழி>எழினி = அதியமானின் குடும்பப் பெயர், மஞ்சள் நிறக் காடு, மலைப் பகுதிகளுக்குச் சொந்தக்காரன். (ஏற்கனவே குதிரை/கொழுதை மலை பத்திச் சொன்னோமே)

ஒல்>உல்>உல்லரி = மஞ்சளான தளிர்
உல்>உலோகு>உலோகம் = மஞ்சளான பொன், மாழையின் பொதுப் பெயர், தாம்பரத்துக்கும் (செம்பு) இதுவே வட மொழியில் பெயராச்சு
உலோகம்> உலோகிதம் = செம்பு (வடமொழியிலெ இந்தச் சொல் லோகிதம்னு ரொம்பவே புழங்கி இருக்கு.)

எல்>இல்> இலகுதல் = விளங்குதல், ஒளி செய்தல்
இலகுதல்>இலங்குதல் = ஒளி விடுதல்
இலகுதல்>இலவுதல்>இலவம்>இலாவம்>இலாபம் = விளச்சல்லேயும், வணிகத்துலேயும், பொலிவா, மிகுதியாக் கிடைக்குறது. அதுனாலே இன்னைக்கும் , களத்துமேட்டுலெ நெல் அளக்குற போதோ, வணிகஞ் செய்யுறவுங்க எண்ணுற போதோ, இலாபம், ரெண்டு, மூணு.... அப்படின்னு எண்ணுவாக. தமிழ்லே profit என்பதற்கு இரண்டு சொற்கள் உண்டு அண்ணாச்சி, அதுலெ ஒண்ணு இலாவம், இன்னொண்ணு பொலிவு/பொலிவூட்டு
.
இலங்கு>இலங்கை = ஒளிவிடுற இடம்; காடெல்லாம் மஞ்சளாப் பூத்துதோ, என்னமோ தெரியாது. ஈழத்துக்காரங்க என்ன சொல்றாங்கன்னு பார்க்கோணும். இல்லை, தங்கமே கிடைச்சுதோ, தெரியாது. இலம்>ஈலம்>ஈழம் = இதுவும் ஒளி விடுற இடம் தான். இலங்கை/ஈழம் பற்றிய பெயர்க்காரணம் இன்னும் பலவிதமாச் சொல்றாக' அதனாலெ, இந்த இலங்கை/ ஈழம் பத்தி நேரம் கிடைக்குற போது பார்க்கலாம்.

இல்>இலங்கு>இலக்கு>இலக்குமி = ஓளி விடுகிற தெய்வப் பெண் = திருமகள்

இலங்கு>இலிங்கு>இலிங்கம் = ஓளித் தோற்றம் காட்டும் சிவனின் அடையாளம். திருவண்ணாமலை பார்த்தவங்களுக்குப் புரியும். ஓளிதான் சிவனின் முதல் அடையாளம்; அதை இன்றைக்கு இருக்குற இலிங்கப் படிமத்தோடு ஒன்றுபடுத்துற தொன்மங்கள இங்கே சொன்னா கட்டுரை நீண்டுறும்; இலிங்கம் பத்தி விவரம் புரியாம, திரு.மலர் மன்னன் திண்ணை இதழ்லெ, இந்த வாரம்னு நினைக்கிறேன், எழுதியிருக்கார்; அதைப் பற்றி ஒரு கட்டுரை எழுத ஆரம்பிச்சேன், அப்படியே நிக்குது. அண்ணாச்சி, ஓரளவு மேலெ சொல்லியிருக்கு; மிச்சத்தை இன்னோரு நாள் தான் பார்க்கொணும்.

'யால்'னா தமிழ்லெ இருட்டு, கருமைன்னு அருத்தம். ஏகப்பட்ட சொற்கள்லெ யகர எழுத்து முதல்லெயோ, நடுவிலெயோ வந்து பின்னாடி ய>ஞ>ந அப்படின்னு பல இடத்துலே மாறி இருக்கு. மேலெ கூட ரெண்டு மூணு இடத்துலெ பார்த்தோம். இதப்பத்தி விவரமாப் பாக்கோணும்னா ப.அருளியோட "யா" ங்குற பொத்தகத்தை நீங்க படிக்கொணும். இதைப் பத்தி இணையத்துலே ஏற்கனவே நான் சொல்லியிருக்கேன், அண்ணாச்சி. தஞ்சாவூர் பல்கலைக் கழகத்துலெ இருக்குற திரு.அருளி ஒரு தலை சிறந்த ஆய்வாளர், அண்ணாச்சி. அவரு மாதிரி இன்னும் பல பேரு வரணும்.

யாழல் = இது ஒளி மங்கி வர்ற நேரம்; மாலைன்னு அருத்தம் (மாலைன்னாலும் ஒளி மங்கி இருட்டிக்கிணு வர்ற நேரம் தான்; மால் = கருப்பு)
ஒருபக்கம் இருட்டினா, இன்னோரு பக்கம் ஒளி மங்கி மஞ்சளா ஆவுதுன்னுதானே பொருள்.
யாழல்>ஞாழல் = பொழுது சாயுற நேரம், மஞ்சள் பூக் கொண்ட ஒரு மரம், அதாவது மயிற்கொன்றை மரம், புலிநகக் கொன்றை மரம். இங்கே ஒரு சிறப்புப் பாருங்க. ஒரு பக்கம் மஞ்ச நிறம்; இன்னோரு பக்கம் மயில் மாதிரி ஒரு கருப்புக் கலந்த பொட்டு/சாயல். இந்த நிறச் சேர்க்கைக்கு, ஞாழல்னு பேர் வச்சிருக்காங்க. ஞாழல்>நாழல்

எல்>யெல்>ஞெல்>ஞெலி = தீ; ஞெலிகோல் = தீ உண்டாக்கும் கோல்
ஞெல்>நெல் = மஞ்சளாக உள்ள கூலம்
நெல்>நல்>நலம் = மங்கலமான நடப்பு, (நெல்லு விளஞ்சு அறுவடை ஆச்சுன்னா நலம் தானே, அண்ணாச்சி! நலம், நல், நன்மை எல்லாமே இப்படித்தான் அண்ணாச்சி; நல்லதா முடியோணும்னா மங்கலமா முடியோணும்னு அருத்தம். நலமா இருக்கியான்னா, கெடுதல் இல்லாமெ மங்கலமா இருக்கியான்னு அருத்தம்.)

நல்>நல்கை>நகை = பொன்னால் செய்த அணி
நெல்>நில்>நிலவு>நிலா = மஞ்சள் ஒளி தரும் சந்திரன்
நெல்>நெல்லி = மஞ்சள் காய் தரும் மரம்.

அன்புடன்,
இராம.கி.

No comments: