Saturday, January 28, 2006

கொன்றையும் பொன்னும் - 6

'பொல்' எனும் அடிவேர்:
-------------------------------
'கொல்'லைப் போலவே ரொம்பவும் பயனுள்ள வேர் இந்தப் 'பொல்'. இதுலேர்ந்தும் ஏகப்பட்ட சொற்கள் பிறந்துருக்கு.

பொல் = மஞ்சள் நிறம்;
பொல்>பொலிவு>பொலிதல் = தோற்ற அழகு கூடுதல் (மஞ்சள் சேர்ந்தாலே, வெளிச்சம் சேர்ந்தாலே, ஆங்கிலத்துலே bright-ஆ ஆனா, தோற்ற அழகு கூடுனதா நாம நினைச்சுக்குறோம்.)
பொலி>பொலிவுதல்>பொலிகுதல்>பொலுகுதல்>பொலுவுதல் = அதிகப்படுதல்
பொல்>பொலம்>பொலங்கலம் = பொன்னால செஞ்ச நகை
பொல்>பொன்; பொன்னுங்குறதை தெலுங்குலெயும் கன்னடத்துலேயும் ஹொன்னுன்னு சொல்லுவாங்க; கன்னடத்துலெ 'பொ' ன்னு
தொடங்குற சொல்லு 'ஹொ' ன்னு ஆயிரும்.

பொன்னுலெ நாலு வகை இருக்கு, அண்ணாச்சி!
முதல் வகை - சாதரூபம் - பிறந்தபடியே இயற்கையா இருக்குறதுக்கு உள்ள பேரு இது.
ரெண்டாவது - கிளிச்சிறை - கிளிச்சிறகு போல கொஞ்சூண்டு பசியச் (பச்சைச்) சாயல் கொண்ட பொன்
மூணாவது - ஆடகம் - கொஞ்சூண்டு குங்குமச் சாயல் கொண்டது; ஆடகன் = பொன்னிற முடைய இரண்ய கசிபு, ஆடக மாடம் னா பொன் பதிச்ச உப்பரிகை. திருவனந்த புரத்துப் பெருமாளை ஆடக மாடத்துப் பெருமாளாச் சொல்லுவாரு; சிலப்பதிகாரத்துலே வஞ்சிக் காண்டத்துலே வரும். நாக. இளங்கோவன் சிலம்பு மடல்லெ படிச்சிருப்பீங்களே!
நாலாவது - சாம்பூநதம் - ஒளி சாம்பி, மங்கிப் போன பொன்.

(மேலெ ரெண்டு பேரு - சாதரூபம், சாம்பூநதம் - வடமொழி வடிவத்துலே இருக்குறது மனசுக்கு ஒரு மாதிரியாத்தான் இருக்கு; என்ன பண்ணுறது அண்ணாச்சி, இடைக்காலத்துலே, நம்மாளுக அளவுக்கு மீறி வடமொழியைப் பயன்படுத்திட்டாக. இதுக்கெல்லாம் தமிழ் எதுவோ, அது தெரியாமலெ போச்சு. வேணுமின்னாப் புதுசா இப்ப வச்சிக்கிடலாம். என்ன பண்றது, தமிழ்லெ பேசுனா இளக்காரம், தஸ்ஸு புஸ்ஸுன்னு பேசினா ஒசத்தின்னு நெனைக்கிற அடிமைப் புத்தி நம்மள விட்டுப் போகலியே!)

பொன் செய்தல் = நற்செயல் செய்தல்
பொன்பாவை = திருமகள்
பொன்வரை = மா மேரு மலை, மேருமலைங்குறது ஒரு கற்பிதமான மலை; இது இருந்துதுன்னு சிலர் சொல்றாக; ஆனா நமக்குப் புரிபடலை.

பொல்>பொக்கன் = தோற்றப் பொலிவுள்ளவன்; இது போக பணத்தக் கையாளும் treasurer என்ற பொருளும் உண்டு. பொக்குன்னா பை. பொக்கன் பொக்கியன் ஆகிப் பொக்கிஷன்னும் ஆகும். பணம் வச்சிருக்கிற பை பொக்கு. கல்வெட்டுக்கள்லெ இந்தச் சொல் பயனாகி இருக்கு.

பொக்கம்>போக்கம் = பொலிவு

பொற்கோள் = வியாழன்; (செவ்வாய் = சிவப்பு நிறம் கொண்ட கோள்; வெள்ளி = வெளிறிய நிறம் கொண்டது. சுல்வத்தில் இருந்து வந்த சொல்லுதான் அண்ணாச்சி, சுக்கிரன்; அதே போல பொன் நிறம் கொண்ட கோள் = வியாழன்; கரு நிறம் கொண்டது = காரி என்ற சனி, நம்மாளுங்க சரியாத்தான் பேரு வச்சிருக்காங்க. புடவி (earth) தவிர்த்து மற்ற கோள் எல்லாமெ நிறத்தை வச்சுத்தான்.)
பொன்னவன் = வியாழன், இரணிய கசிபு

பொன்னுலகாளி = இந்திரன்; ஏற்கனவே பொன்னுலகு = சுவர்க்கம் னு பார்த்தீங்கள்லெ அண்ணாச்சி. சுவர்க்கத்தின் தலைவன் இந்திரன்னு தானே தொன்மம்!

பொற்சுண்ணம் = மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்து செய்த தூள்; (பெருமாள் கோயில்லே தாயார் (சீதேவி) கருவறைக்கு முன்னாடிக் கொடுக்குறது பொற்சுண்ணம்; ஆண்டாள் (பூதேவி) கருவறைக்கு முன்னாடிக் கொடுக்குறது குங்குமம். பொற்சுண்ணத்துக்கும் குங்குமத்துக்கும் செய்முறையிலெயும் மஞ்சள், சுண்ணாம்பு கலக்குற விழுக்காட்டுலேயும் கொஞ்சம் வேறுபாடு. பொற்சுண்ணத்துலே மஞ்ச நிறம் தூக்கித் தெரியும்; பொற்சுண்ணத்துக்கும் குங்குமத்துக்கும் வேறுபாடு தெரிஞ்சு, எந்தக் கருவறையிலெ எதைக் கொடுக்கோணும்கிறது கூடத் தெரியாத பட்டர்கள் விண்ணவக் கோயில்லே கூடிட்டே வர்றாங்க. பொதுவா, எங்கெ பார்த்தாலும், நம்மோட நெறி அடிப்படை தெரியாம, கோயில்கள் எல்லாமெ வணிகமா மாறியிருக்கு.
(இப்படித்தான் போன வாரம் இங்கே பக்கத்துலே ஒரு முருகன் கோயிலுக்குப் போனேன். "ஏறுமயில் ஏறிவிளை யாடுமுகம் ஒன்றே" என்ற பாடல் எழுதிப் போட்டு இருந்துது. எல்லாருக்கும் நல்லாத் தெரிஞ்ச பாட்டுத் தான். "மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே"ங்குற வரியை "மாறுபடை சூரரை வதைத்த முகம் ஒன்றே"ன்னு போட்டிருந்துது. அங்கே இருக்கிற குருக்கள்ட்டெ- கருவறைக் காரியம் கவனிப்பவர் சிவன் கோயில்லே குருக்கள், பெருமாள் கோயில்லே பட்டர், பெருமானர் அல்லாத அம்மன் கோயில்லெ பூசாரி, முருகன் கோயில்லெ பண்டாரம்ன்னு சொல்லொணும் அண்ணாச்சி - "ஐயா, இது தப்பில்லியா, கொஞ்சம் நிர்வாகத்துலெ சொல்லித் திருத்தி எழுதுங்க"ன்னேன். அவரு, இள அகவை, அதைக் காதுலே வாங்கிக்காம, முன்னாடி எழுதியிருக்கிறதே சரின்னு வாதாடுனாரு. தலையிலெ அடிச்சுக்கிட்டு வந்துட்டேன். முட்டாப் பயக கூடிப்போனாய்ங்க; இப்படித்தான் மூட நம்பிக்கை நம்ம கோயில்கள்லெ கூடீட்டே வருது. விவரம் தெரிஞ்ச ஆட்கள் குறஞ்சு போனாக! எல்லாமே ஏனோ தானோன்னு போயிட்டிருக்கு.)

பொல்+பு = பொற்பு = அழகு, பொலிவு, மிகுதி
பொற்பு>பொற்பித்தல் = அலங்கரித்தல்

பொற்பிதிர் = பசலை

பொல்>பொறு>பொறி = புள்ளி, சிதறிய தீப்பொறி
பொறு>பொறுக்கு = சிதறிய துகள், சிதறிய துகளைத் தெரிந்தெடுத்தல். கொழிச்செடுக்கும் போது பொன்னைப் பொறுக்கித்தானே ஆகணும்? தங்கம்னா கவனம் வேணுமில்லெ?

பொறையன் = பொன், பொன்னன்; சேரரின் ஒரு கிளைக்கு இரும்பொறைங்கிற பெயரைப் பார்த்தா, பொறைங்கிறது மாழைங்கிற பொதுப் பொருளை அடைஞ்சிருக்கொணும்.. இரும்பொறை = இரும்பு மாழையைப் போன்ற உறுதி கொண்டவன், அல்லது இரும்பு கிடைக்கும் இடத்துக்குச் சொந்தக்காரன். இரும்பொறைக்காரங்க இந்தக் காலத்து தமிழ் நாட்டுக் கரூர்/சேலம் பகுதிகளில் இருந்து ஆட்சி செஞ்சாங்கன்னுதான் பலரும் சொல்றாங்க. சேலத்துக்குப் பக்கத்துலெ தானே இரும்பு கிடைக்குது. (கொஞ்சம் கூர்ந்து பாத்தா, சேரலம்>சேலம்; சேரல்ராயன் மலை>சேர்வராயன் மலை; சேரர் காடு>சேரக்காடு>ஏரக்காடு>ஏர்க்காடு எல்லாம் புரியும்.)

பொல்>பொலி=தூற்றாத நெற்குவியல், தூற்றிய நெல், களத்தில் நெல் அளக்கும் போது முதல் மரக்காலுக்கு மங்கலமாக வழங்கும் பெயர். முன்னாடிச் சொன்ன மாதிரி, பொலி, ரெண்டு, மூணுன்னு களத்துமேட்டுலெ நெல்லு அளக்குற போது எண்ணுறதும் ஒரு பழக்கம் தான். தென்பாண்டி நாட்டுப் பொறத்துலே, வளம் ஏற்படுறதுக்கு பல இடங்கள்லெ, கல்யாணம், காட்சின்னா, சொல்ற சொலவம் " பொலியோ பொலி"
பொலி>பொலிப்பாட்டு, மேலே சொன்ன 'பொலியோ பொலி"ங்குற சொலவம்.

பொலியோ பொலி தான் பொங்கலோ பொங்கல்னு இன்னைக்கும் இருக்குது. அரிசிப் பொங்கல் பொங்குற போது பொலியோ பொலி, இல்லாட்டிப் பொங்கலோ பொங்கல்ன்னு சொல்லிச் சங்கூதுறது எங்க பக்கத்துப் பழக்கம். இந்தச் சமயத்துலே குலவைகூட களத்து மேட்டுலெ பொங்குனா உண்டு; சிவகங்கைப் பக்கம் சங்குங்குறது மங்கலத்துக்கும் உண்டு; அமங்கலத்துக்கும் உண்டு. எதுக்குன்னாலும் சங்கே முழுங்குதான். யாரும் சங்கூதுறதுக்குக் கூச்சப் பட மாட்டாக! ஒவ்வொரு வீட்டுலெயும் கத்தி, கவடா, அரிவாள் மாதிரி, ஒரு சங்கு இருக்கும். சின்னப் புள்ளைக சங்கூதக் கத்துக்குறது முக்கியம்.

பொலி>பொலிக்கொடி = மஞ்சள் நிற வைக்கோல்

பொல்>பொலியை>பொலிசை = விளைச்சல்லே ஆதாயமா வர்றது பொலிசை. ஒரு முதல் போட்டு அதுலெ வர்ற வட்டியும் பொலிசைதான்; வட்டிங்குற சொல்லும் (வட்டமான தட்டு) அளந்து போடுறதைக் குறிக்கும், கடகம் (= ஓலைக் கூடை; கடகம்/கடாகம்கிறது எங்கூர்ப் பக்கத்து வட்டாரச் சொல்) போல வட்டிலெ நெல்லை அளந்து போடுறது தான். (சாப்பிடுற தட்டையும் எங்கூர்ப் பக்கம் வட்டின்னு சொல்லுவாக. அதுக்குப் பக்கத்துலே கறிகாய் வச்சுக்குற சின்னத் தட்டைக் கிண்ணின்னு சொல்லுவாக. கிண்ணம்னா பெருசு; கிண்ணின்னாச் சிறுசு.) வட்டி/பொலிசை தான் வெள்ளைக்காரன் சொல்ற interest. வட்டிச்சு வர்றதுன்னாத் திரும்பித் திரும்பிப் பெருகி ஒவ்வொரு ஆண்டுக்கும் வர்றது.

பொலிசை>பலிசை; இதுவும் கல்வெட்டுகள்லே நெடுக வர்ற சொல். ஒவ்வொரு மண்டகப் படிக்காரரும், கோயில் பண்டாரத்துலே (களஞ்சியம், treasury) குறிப்பிட்ட பணம் செலுத்தி, அதுலெ வர்ற பொலிசை/பலிசை (interest)யிலேந்து, அரிசி, உளுந்து, நெய், மிளகு, உப்பு, கறி(காய்), வெத்திலை, அடைப்பக்காய் (அதாங்க கொட்டைப்பாக்கு), சந்தனக் காப்பு, இன்னும் பலது வாங்குறதுக்கு பயன்படுத்தி கொள்வதாகக் கல்வெட்டுலே பதிஞ்சிருக்காக. இந்தக் கல்வெட்டெல்லாம் நம்மள்லெ எத்தனை பேரு படிக்கிறோம்? ஆனா, தமிழ் பிழைக்கோணும், வரலாறு தெரியோணும் னு நீங்க நினைச்சீகன்னா கல்வெட்டெல்லாம் யாராவது படிச்சு, இந்தக்காலத்துத் தமிழ்லெ மாத்திச் சொல்லோணும் அண்ணாச்சி. இது ஒரு பெரிய வேலை; செய்யுற ஆளத்தான் விரலை விட்டு எண்ணிறலாம் போலேருக்கு.

பொல்>பொலியூட்டு = பொலிசை கிடைக்க வைக்குற முதல் = அதாவது capital. தமிழ்லே மூலதனம்னு ஒரே ஒரு சொல் மட்டும்தான் இருக்குன்னு நினச்சுக்குறோம். இன்னோண்ணு இந்தா இருக்கு அண்ணாச்சி, மூல தனத்திலேயும் தனம்குறது தங்கம் தான். பொலியூட்டுலெயும், பொலிகுறது தங்கம் தான். ஆகத் தங்கம் இல்லாம எதுவுமே இல்லை.

பொலி>பொலிவிடு>பொலிவூடு>பொலுவூடு = இதுதான் அண்ணாச்சி, வெள்ளைக்காரன் சொல்ற புரோவிடு =profit; சுருக்கமாப் பொலுவு/பொலுவம் னே சொல்லலாம். இலாவம், பொலுவு/பொலுவம் ஆக ரெண்டு சொற்கள் இருக்கு. ரெண்டுக்கும் தமிழ்தான் அடிப்படை.

பொலிகை>பொயிகா>பெயிகா>பேகவா = மராத்திலெ கொன்றைக்கான பேரு.

பொலிதல்>பொழிதல் = நிறையக் கொட்டுதல்
பொல்>பொழில் = பொன் போல பூத்துக் குலுங்கும் சோலை
பொல்>பொழு>பொழுது= காலையில் சூரியன் தோன்றும் போதோ, மாலையில் சூரியன் மறையும் போதோ உள்ள நேரம். பொழுது புலர்ந்தது'ன்னா மஞ்ச நிற ஒளி வந்துருச்சுன்னு அருத்தம். அதே போல பொழுது சாயுதுன்னா, ஒளிதர்ற சூரியன் சாய்றான்னு அருத்தம்; பொழுதுங்குற சொல்லே சூரியனாகவும் பொருள் குறிக்குது. பின்னாடித்தான் வெறுமே நேரங்கிற பொதுப் பொருள் வந்திருக்கு.

பொல்>புல்>புன்>புனை = அழகு, பொலிவு
புல்>புல்லை=மங்கலான மஞ்சள் நிறம்
புல்>புலம் = ஒளியிருந்தாக் கண்ணுக்குத் தெரியுற இடம்.
புல்>புலத்தி = வண்ணாத்தி = அழுக்கான உருப்படிகளைத் தூய்மை செய்து வெளிற வைப்பவள்
புல்>புலவர் = அறிவுத் தெளிவு உள்ளவர், பிறருக்குத் தெளிவு ஏற்படுத்துபவர்

புல்>புலம்பல் = ஒளி
புல்>புலர்தல் = ஒளியின் வருகையால் பொருள்கள் தோன்றுதல்
புலர்>புலரி = சூரியன் = புலர வைப்பவன்
புல்>புலன் = புலப்பட வைக்கும் அறிவு, sense

புல்>புழகு = செந்நிறப் பூவுள்ள செடி
புல்>புலவு = செந்நிறங் கொண்ட தசை
புல்>புலது = குருதி (blood; இங்கிலீசுக்காரன் சொல்லும் அதே மாதிரித்தான் இருக்கு)
புலவு>புலாவு = ஊன், புலவுசோறுங்குறது தான் 'பிரியாணி'யைக் குறிக்கும் தமிழ்ச்சொல். அப்புறம் சைவப் பிரியாணி = மரக்கறிச் சோறு.

புல்>புலை>புலையன் = அரத்தப் பொருள்களைக் கையாளுபவன்; இன்றைக்குச் சாதியப் பொருள் வந்து கிடக்கு. அந்தப் பொருளைத் தொலைச்செறிஞ்சா, ஊரு விளங்கும்.
புலை>புலைத்தி = புலையனின் பெண்பால்

புல்>புலவு>புலவூட்டு>புலவூட்டம் = pollution (மாசு படுத்தல்னு இந்தக் காலத்துலெ சொல்றோம்.) எங்கு பார்ர்த்தாலும் புலவூட்டிக் கொண்டிருக்கிறோம். இயற்கையைப் பேண மாட்டோ ங்குறோம்.

புல்>பூ = தீப்பொறி, மலர்
பூத்தல் = பொலிவு பெறுதல், தோன்றுதல்

பூ>பூஞ்சை>பூஞ்சி = மஞ்சள் நிறம்
பூஞ்சை>பூஞ்சணம் = மஞ்சள் நிறம் கொண்ட நுண்ணுயிர்த் தொகுதி,

பூங்கதிர் = ஒளி, வெண் நிறம்
பூதி = பொன்

பூந்துகள்>பூந்தூள்>பூந்தாது = பொன்னிறமான துகள்

பூத்துப் போதல் = கண்பார்வை மங்கி, வெளிறிப் போதல்
பூலித்தல்>பூரித்தல் = நிறைதல், பொலிதல்
பூரணம் = முழுமை, நிறைவு, முற்றிலும் மஞ்சள்
பூரி = பொன்

பூவல் = சிவப்பு

பொழு>பழு = பொன்னிறம்
பழுக்கக் காய்ச்சுதல் = நிறம் ஏறப் பொன்னைத் தீயில் காய்ச்சுதல்
பழுக்குதல் = நிறம் மாறுதல்
பழுப்பு = பூங்காவி நிறம், பொன்னிறம், சிவப்பு, முதிர்ந்து மஞ்சள் நிறங் கொண்ட இலை
பழு>பளபளத்தல் = ஒளிர்தல்
பளிச்சிடுதல் = ஒளிவீசுதல்
பளிங்கு = ஒளிவீசும் பொருள்

புல்லை>பில்லை = மங்கிய மஞ்சள் நிறம்
புல்>பில்>பிறங்கு>பிறங்கல் = ஒளி
பில்>பிறு>பிறை = சந்திரனின் மங்கிய ஒளி
பிறு>பிறகிடுதல் = தோற்றதல்
பிறு>பிறத்தல் = தோன்றுதல்
பில்>பீலி = பொன்

அன்புடன்,
இராம.கி.

No comments: