Monday, January 30, 2006

கொன்றையும் பொன்னும் - 7

மகர வரிசையும் வகர வரிசையும்
--------------------------------------------
மல்>மல்லல் = பொலிவு, அழகு, செல்வம்
மல்குதல் = பொலிதல், அதிகப் படுதல்; இந்த அதிகப்படுதல் என்ற பொருளில் தான் multiply என்ற ஆங்கிலச்சொல் புழங்குகிறது. multi என்ற முன்னொட்டுக்கு இணையானது நம்முடைய மல்கு/மல்கிய என்னும் முன்னொட்டு.

மல்>மலர்>மலர்தல் = பொலிவு, பூ விரிதல்,
மச்சப் பொன் = மாற்று அறிய வைத்திருக்கும் மாதிரிப் பொன்; மாற்று = தூய்மையின் அளவு
மட்டப்பொன் = மாற்றுக் குறைவான பொன்
மல்>மால்>மாழை = பொன், உலோகம்;

மல்>மள்>மளி>மளிகாரம் = வெண்காரம்
மள்>மண் = புழுதி, சுண்ணச் சாந்து, தரை

மள்>மாள்>மாளம் = கத்தூரி மஞ்சள்
மாள்>மாடு = பொன், சீதனம், செல்வம்
மாடு>மாடை = பொன், அரை வராகன், உலோகம்; மாழையின் திரிவாக மாடை என்ற இந்தச் சொல் கூட நாணயம் என்ற பொருளில் புழங்கியிருக்கிறது. குறிப்பாக பெருஞ்சோழர் காலத்தில்.

மல்கு>மலுகு>மலிகு= பெருகுதல்;

மலிகு>மலிங்கு>மயிங்கு>மய்ங்கு>மங்கு>மங்கல் = ஒளி பெருகி மஞ்சளாகக் காட்சி அளிப்பது.
மங்கல்>மங்கள்>மஞ்சள் = நிறம், மஞ்சள் பொருள்
மங்கல்>மங்கலம் = சிறப்பான நிகழ்வு, பொலிவு
மங்கு>மங்கை = மங்கலமாகிய மணப்பருவம் அடைந்த பெண்.
மங்கலம்>மங்கல வாரம் = வட மொழியில் செவ்வாய்க் கோள் (மங்கல் என்பது இங்கே சிவப்பு என்ற பொருள்லெ வந்திருக்கு)
மங்கல்>மங்கலியம் = பொன்
மங்கலியம்>மாங்கலியம் = பொன்னால் ஆன தாலி
மஞ்சள்>மஞ்சுளம் = அழகு
மஞ்சு>மஞ்சுதல் = மஞ்சள் நீரால் முழுக்காட்டுதல்
மஞ்சுதல்>மஞ்சனம் = நீராட்டு.
மஞ்சுதல்>மஞ்ஞுதல்> மண்ணுதல் = நீராட்டுதல், அலங்கரித்தல்
மண்ணுநீர் = மஞ்சன நீர்
மண்>மணிகம் = நீர்க்குடம்
மணம் = கல்யாணம்; இந்தக் காலத்துலே மாப்பிளை, பொண்ணுக்குத் தாலிகட்டுறது தான் கல்யாணம்னு நினைச்சுக்கிட்டு இருக்கோம். ஆனாச் சங்க காலத்துலெ அப்படி இல்லை; தாலியப் பத்தியெ பேச்சே இல்லை. அகநானூறு 86-லே ஒரு திருமணக் காட்சி வருது.

உச்சிக் குடத்தர், புத்து அகல் மண்டையர்,
பொது செய் கம்பலை முது செம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தர
புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று
வால் இழை மகளிர் நால்வர் கூடி
'கற்பினின் வழாஅ, நற்பல உதவிப்
பெற்றோன் பெட்கும் பிணையை அக!/ என
நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி
பல் இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க
வதுவை நல் மணம் கழிந்த பின்றை

தலை உச்சிலெ குடத்தை வச்சுக்கிட்டுச் சில பெண்கள், புதிய மண்பாண்டத்தை (அதுக்கு உருண்டையா இருக்குற மண்டைன்னு பேரு.) வச்சுக்கிட்டிருக்குற இன்னுஞ் சில பெண்கள், ஆரவாரம் பண்ணிக்கிட்டுச் சடங்கு செய்ய மங்கலமான பெரிய அம்மாக்கள், இவங்கள்லாம் ஒண்ணொண்ணா பொருள்கள எடுத்துத்தர, புள்ளைகளப் பெத்தெடுத்த நாலு மகராசிகள் (பசலை போட்டிருக்குற அவங்க நகையெல்லாம் அணிஞ்சிருக்காங்க) " அம்மாடி, பொண்ணே, சொல்லுத் திறம்பாம (சொன்ன சொல்லு மாறிடாதே), எல்லாருக்கும் உதவி செஞ்சு, கொண்டவன் விருப்பத்துக்கு தக்க நடந்துக்குறவளா இரும்மா" ன்னு வாழ்த்தி கூந்தலுக்கு மேலெ, நீரைச் சொரிஞ்சு, ஈரப் பூவிதழ்களையும், நெல்லையும் சேர்த்துத் தூவி கல்யாணம் முடிஞ்சுது. அவ்வளவு தாங்க! மொத்தத்துலே மஞ்ச நீர் ஆடுறதும், பூ, நெல் சொரியுறதும், வாழ்த்துறதும் தாங்க, மண்ணுதல்-ங்குற மணம்.

[சொல்லுத் திறம்பாம இருக்குறது தாங்க கற்புங்குறது. இது ஆண், பெண் ரெண்டு பேருக்கும் உள்ளது தான். கொஞ்ச நாளைக்கு முன்னாடி இந்தப் புலனத்துலே ஒரே கூச்சலும், குழப்பமும் எழுந்துது. பெண்ணின் தொடைகளுக்கு நடுவே கற்பைத் தமிழர்கள் காணலை. இந்தக் கற்பு பத்தித் தனியே ஒரு கட்டுரை எழுதணும். அத இன்னொரு நாள் பார்ப்போம்.]

கல்யாணத்துக்கு முதநாளே, நெல்லோட பல கூலங்களையும், சில பயறுகளையும் கலந்து ஈரத்தோட முளைக்க விட்டு அதைப் பாலோட கலந்து வைக்குறதுக்கு முளைப் பாலிகைன்னு பேர். இந்த முளைப்பாலிகையையும், பாலிலெ பூவிதழ்களைப் பிச்சுப் போட்டு வைக்குறதையும் தான் மணமக்கள் மேலே சொரியுறதுக்குப் பயன்படுத்துறது. அதே போல மஞ்சநீர் ஆடுறதும் முக்கியம். மஞ்ச நீர் ஆடுறது, 60-ம் கல்யாணத்திலேயும் செய்யுறது தான். இந்த மஞ்ச நீர் ஆடுறது இன்னைக்கும் 60-ம் கலயாணத்துலெ இருக்கு.

உல்>வல்>வல்லிகம் = மஞ்சள்
வல்>வல்லியம் > வல்லியம் பொருப்பு = கொல்லிமலை
வல்> வழு>வழகம் = பவளம்

வல்>வன்>வன்னி = நெருப்பு, சிவப்பு
வல்>வன்>வன்னம் = தங்கம்
வன்னம்>வண்ணம் = நிறம், ஒளி
வண்ணம்>வண்ணன்>வண்ணான் = அழுக்கைப் போக்கித் துணியை வெளுப்பவன்

வன்னி>வன்னியர் = முல்லை நிலத்தார், சோழ நாட்டு வீரர்
வன்னி>வன்னிக்காடு = அடர்ந்த பொற்பூக்களைக் கொடுக்கும் மரங்கள் அடங்கிய காடு.
வன்னம்>வனம் = பொற்பூக்களைக் கொடுக்கும் மரங்கள் நிறஞ்ச காடு.

வல்>வள்>வளம் = பொலிவு பட இருத்தல்
வள்>வாள் = ஒளி
வல்>வழு>வழுத்தல் = பாராட்டுதல்
வழு>வாழ்= வளம் பட இருத்தல்

வள்>வெள்>வெளுத்தல் = ஒளி படக் காட்சியளித்தல்
வெள்>விள்>விளங்கு = ஒளிர்தல்
வெள்>விள்>விளர்தல் = வெளுத்தல்
வல்>வரம் = மஞ்சள்
வராகம் = வார்த்தெடுத்த பொன் நாணயம்

இன்னும் நிறையச் சொல்லலாம் ஆனா இப்பவே ஊரம்பட்டுக்கு வந்திருச்சு. இதுக்கு மேலே போனா நீங்க அடிக்க வந்துருவீக. ஒவ்வொரு சொல்லுக்கும் விளக்கம் எழுதலெ; அப்படிச் செய்ஞ்சா நீண்டுரும். இந்தத் தொகுதியை ஒரு சீராப் பார்த்தா உள்ளே உள்ள அடிப்படை புரியும்னு தான் கொடுத்துருக்கேன். அடுத்த பகுதிலே கொன்றை பத்திப் படம், புதலியல் விவரம் - இன்னும் சிலவற்றைச் சொல்றதோட நிறுத்திக்கிறேன்.
இன்னோரு வாட்டி கடம்ப மரம் பத்திப் பாக்கலாம் அண்ணாச்சி! அதுவரைக்கும் வரட்டுங்களா?

அன்புடன்,
இராம.கி/

No comments: