Monday, January 23, 2006

கொன்றையும் பொன்னும் - 1

(அமீரகத்தில் வெளிவரும் கானல் ஆண்டுமலரில் முன்னால் வெளிவந்தது.)

அண்ணாச்சி,

ஆவணி புரட்டாசிலே, மஞ்ச மஞ்சளா, கொத்துக் கொத்தா, பளபளன்னு நெருப்புக் கணக்கா கொன்றை பூக்குமே, அந்தப் பூவுக்குளே தங்கப் பொடியாட்டம் தாது இருக்குமே, எப்பவாவது பார்த்திருக்கீகளோ? இலைகூடச் சின்னச் சின்னதா, அழகா, அச்சடிச்சாப்புலே, பளபளன்னு இருக்கும். சித்திரை வைகாசிலெ, ரொம்பவுமே இலையை உதுத்து, ஆனாலும் மலர்ந்துக்கிட்டே இருக்குமே, அந்த மரத்தைப் பார்த்ததில்லையா? பழம் (இல்லை..காயோ) கூட குழல் கணக்கா கருப்பா, கரும் பழுப்பா, பளபளன்னு (3-வது தடவை 'பளபள' சொல்லிட்டேன்லே! ஒரு சொகம்தான்) இருக்கும். அந்தப் பழத்தின் தோலெ உரிச்சு, உள்ளே பாத்தீகன்னா அடுக்கடுக்கா, உள்ளீடே இல்லாமே, இத்துணியோண்டு தப்பட்டை, தட்டுக் கணக்கா சுளைக, பழுப்பா விதையோடெ இருக்கும். ஓரொரு தட்டையும் எடுத்து, ஊசி வச்சு, ஓட்டை போட்டு, உதட்டுலெ வச்சு, ஊதிப் பார்த்திகன்னா, விதை துடிதுடிக்க, அதிலே வர்ற வீளை (whistle), காதப் பிச்சிட்டுப் போகும். இல்லைன்னா, தோலை உரிக்காமலேயே, குழலுக்குள்ளே நீளமா ஒரு ஓட்டையைப் போட்டு எல்லா விதையும் உதுத்துட்டு, ஊதாங்குழையாட்டம் (புல்லாங்குழலை இப்படிச் சொன்னாக் கொஞ்சம் தரங் குறைச்சலாத் தெரியுதோ?) ஊதிருக்கீகளா? அந்த ஓசை கூட ஓவியந் தான்.

சின்னப் பையனா இருந்த காலத்திலேந்து இந்தக் கொன்றையை இன்னமும் நான் மறக்கலை. எங்கூர்லெ பெரிய பள்ளிக்கூடத்துக்கு முன்னாடி ரெண்டு மரம். பின்னாடிப் பொட்டல்லெ ரெண்டு மரம். அந்தப் பூ, குழல், இவையோட பளபளப்பு, பொன் போலெ நிறம், ஒளி, தாது, கார்காலம், மழை அப்படியே மனசிலே ரொம்பி இருக்கு. இவ்ளோ நாள் கழிச்சுத் திடீர்னு ஞாபகம் வந்துருச்சு. மனசு கொள்ளலை; எழுத ஆரம்பிச்சுட்டேன்.

கொன்றையப் பத்தியும் அதோட வர்ற உறவுச் சொற்களையும் பத்திச் சொல்ல நிறையவே இருக்கு. அண்ணாச்சி, உங்களுக்குத் தான் பொழுது இருக்கான்னு தெரியலை! நீங்கள்லாம் 'கடுதாசியப் பாத்தமா, உடனெ படிச்சிட்டு போனமா'- ங்குற விரசான ஆளுக. இருந்தாலும், கோடீசுவரன் ஆகுறதுக்கு ஆலாப் பறக்குறதுக்கு இடையிலெ, கொஞ்சம் நேரம் எடுத்துப் படிங்க அண்ணாச்சி! இந்தக் காலத்துலேயும் பொன்னுன்னாக் கசக்குமா? நான் ready, நீங்க ready-யா?

சங்க காலத்துக் கொன்றை:
-------------------------------------
கொன்றையிலெ சரக்கொன்றை, சிறுகொன்றை, புலிநகக் கொன்றை, மயிற்கொன்றை அப்படின்னு பலது இருக்கு. இதை இதழி, கடுக்கை- என்றெல்லாம் சங்க காலத்துலேந்து சொல்லியிருக்காக. ஞாழல்/நாழல்னு கூடப் பெயர் இருக்கு. இதப் பத்தி ரொம்பவே இருக்குன்னாலும், கொஞ்சம்தான் இங்கே எடுத்து விடுறேன். பல இடங்கள்லெ மூலத்தை மட்டும் காட்டுறதோட விட்டுர்றேன், எல்லா இடத்தையும் விளக்கிச் சொன்னா நல்லாத்தான் இருக்கும். ஆனா சொல்ல வர்ற செய்தி நெறைய; அதனாலே நீங்கதான் பார்த்துக்கோணும். உங்களுக்குப் புரிஞ்சுக்க முடியாதா, என்ன? இல்லை, இதுக்காகவே சங்க இலக்கியப் பொத்தகங்களை வாங்கிப் படிக்க மாட்டிங்களா' ன்னு ஒரு நப்பாசை.

கீழே வர்றதெல்லாமே பொன்னோடெ தொடர்பு வச்சு வர்ற வாசகங்கள். வாசகங்களில் வர்ற சொற்களைக் கண்டு, அண்ணாச்சி, விலகிராதீங்க. பக்கத்துலே அந்தந்தப் பொத்தகத்தை வச்சுக்கிட்டு ஆழ்ந்து படிங்க. கொஞ்சம் கொஞ்சமாப் புரிபடும். நாம தொலைச்சது எல்லாம் நமக்குப் புரியும். விளாம்பழத் தோடை உடைக்காம விழுதைச் சாப்பிட முடியுமோ?

கார்விரிக் கொன்றைப் பொன் நேர் புது மலர் - அகநானூறு கடவுள் வாழ்த்து (1-2),
பைங் காற் கொன்றை - அகநானூறு 4 - (1-2)
ஒள் இணர்ச் சுடர்ப் பூங் கொன்றை - அகநானூறு 115.11-12
இணர் ததை கடுக்கை ஈண்டிய தாதின் குடவர் புழுக்கிய பொங்கு அவிழ் புங்கம் - அகநானூறு 393 9-16
ஒலுகு நிலைக் கடுக்கை அல்கு நிழல் அசைஇ - அகநானூறு 399 10
பொன் என மலர்ந்த கொன்றை - ஐங்குறு நூறு 420,
குறுங்கால் கொன்றை அடர்பொன் என்னச் சுடர் இதழ் பகரும் - ஐங்குறு நூறு -430,
சுடுபொன் அன்ன கொன்றை - ஐங்குறு நூறு - 432,
பொலன் அணி கொன்றை - ஐங்குறு நூறு - 435,
நன்பொன் அன்ன சுடர் இணர்க் கொன்றை - ஐங்குறு நூறு - 436,
செல்வச் சிறாஅர் சீறடிப் பொலிந்த தவளை வாஅய பொலம் செய் கிண்கிணிக் காசின் அன்ன போது ஈன் கொன்றை - குறுந்தொகை 148
கவலை கெண்டிய கல்வாய்ச் சிறுகுழி கொன்றை ஒள் வீ தாஅய், செல்வர் பொன் பெய் பேழை மூய் திறந்தன்ன - குறுந்தொகை 233
பொன் தொடர்ந்தன்ன தகைய நன் மலர்க் கொன்றை ஒள் இணர் கோடு தொறும் தூங்க - நற்றிணை -221,
பொன் வீக் கொன்றை - நற்றினை 246,
சுடர் வீக் கொன்றை - நற்றிணை 302,
தூங்கு இணர்க் கொன்றை - குறிஞ்சிபாட்டு 85-89,
முறி இணர்க் கொன்றை நன் பொன் கால - முல்லைப் பாட்டு 91-96,
தேறு வீப் பொன் கொன்றை - பொருநர் ஆற்றுப்படை 199-204,
கொன்றை மென் சினைப் பனி தவழ்பவை போல் பைங் காழ் அல்குல் நுண் துகில் நுடங்க - பெரும்பாணாற்றுப் படை 328-329
நாள் இணர்க் கொன்றை - பதிற்றுப்பத்து 67.13,
கொன்றைத் தார் சுவற் புரள - கலித் தொகை - கடவுள் வாழ்த்து
வயங்கு இணர்க் கொன்றை -கலித்தொகை 102,
மெல் இணர்க் கொன்றை - கலித்தொகை 103,
அயம் திகழ் நறுங் கொன்றை அலங்கல் அம் தெரியலான் இயங்கு எயில் எயப் பிறந்த எரி போல - கலித்தொகை 150,
வயங்கு இணர்க் கொன்றை -கலித்தொகை 102,
மெல் இணர்க் கொன்றை - கலித்தொகை 103,
தூங்கு இணர்க் கொன்றை - சிலப்பதிகாரம் காட்சிக் காதை 17-20
கோடெலாம் பொன்னாய்க் கொழுங்கடுக்கைக் காடெலாம் - திணைமாலை நூற்றைம்பது 120-

கீழே, சிலதுக்கு மட்டும் சுருக்கமா விளக்கம் தந்திருக்கேன்.

கொன்றைப் பூ:
--------------------
தலைவனை எண்ணி ஏங்குற தலைவிக்கு பசலை தட்டிப் போச்சுன்னு ('வெளிறிப் போச்சு'ன்னு) சொல்றாகள்லே அதுக்கு இந்தக் கொன்றைய உவமையா ஓர் இடத்திலே சொல்லியிருக்கு. (கொன்றை ஊழுறு மலரின் பாழ் பட முற்றிய பசலை மேனி நோக்கி, அகநானூறு 398. 4-5).

கண் இமைக்கு மேலே கூட 'வெளிறிப் போயிரும்'னு சொல்லுறாங்க (கொன்றைப் பூவின் பசந்த இண்கண்- ஐங்குறு நூறு -500).

இன்னொரு இடத்துலேத் தலைகீழாச் சொல்றாங்க; "நெய்க்குத் தொன்னை ஆதாரமா, தொன்னைக்கு நெய் ஆதாரமா" ன்னு கேள்விப்பட்டிருக்கீகளா! 'கொன்றை மாதிரி நமக்குப் பசலை' ங்கிறதுக்குப் பதிலா, நமக்குப் பசலை வர்ற மாதிரி மரத்துலே கொன்றை பூத்திருக்காம். எப்படி இருக்கு கதை! (சென்ற நாட்ட கொன்றைஅம் பசு வீ நம் போல் பசக்கும் காலை - குறுந்தொகை 183)

மேலே உள்ளதுலெ, பூவையும் பசலையும் தானே பார்த்தோம்; இனிமேப் பழத்தைக் கொஞ்சம் பார்ப்போம்.

கொன்றைப் பழம்:
-----------------------
கொத்தாக் கிடக்குற குழற்பழம் முதுந்து போச்சாம் (துணர்க்காய்க் கொன்றைக் குழற்பழம் ஊழ்த்தன - ஐங்குறு நூறு - 458).

பாணர் பறையை முழக்குற குறுந்தடியோன்னு ஐயம் வர்ற மாதிரி கொன்றைக் கனிகள், காம்போட பாறையிலெ அறைஞ்சு விழுறாப்போல, கிளைகள் அசையுதாம் (பாணர் அயிர்ப்புக் கொண்டன்ன கொன்றை அம் தீம் கனி, பறை அறை கடிப்பின் - நற்றிணை 46).

யானையோடெ ஒடம்பு பட்டுப் பொரிஞ்ச அடிமரமும், நெரிஞ்ச உள் தொளையுள்ள காயும் இருக்குற கொன்றை மரங்க, நீண்ட சடை, நீராடாத உடம்போட குன்று மேலே இருக்குற சாமியார் போல இருக்காம் (யானையின் மருங்குல் தீண்டி, பொரி அரை ஞெமிர்ந்த புழற் காய்க் கொன்றை, நீடிய சடையோடு ஆடா மேனிக் குன்று உறை தவசியர் போல - நற்றிணை 141).

இலுப்பை மரத்திலே உதுத்த புதுப் பூவை எடுத்துக் தின்ன கரடி, தூசிபறக்கக் கொன்றைப் பழத்தைச் சிதறடிச்சுதாம் (அத்த இருப்பை ஆர் கழல் புதுப் பூத் துய்த்த வாய, துகள் நிலம் பரக்க கொன்றை அம் சினைக் குழற்பழம் கொழுதி - அகநானூறு 15. 13-15).

இன்னொருத்தர் சொல்றபடி "கொற்றவையின் குழல் கொன்றையம் பூங்குழல் போல இருக்காம்" (வென்றி மழவிடை யூர்ந்தாற்கு உரியள் இக் கொன்றையம் பூங்குழ லாள் - சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவை - கொளு)

கொன்றையும் காரும்:
-----------------------------
காருன்னா மழை காலம் அண்ணாச்சி.

கொன்றைக்கும் காருக்கும் அப்படி ஒரு தொடர்பு சங்க இலக்கியங்கள்லெ பல இடத்திலெ சொல்லியிருக்கு. (குறும்பல் கோதை கொன்றை மலர நெடும் செம் புற்றம் ஈயல் பகர மா பசி மறுப்பக் கார் தொடங்கின்றே - ஐங்குறு நூறு - 497,

பொன் எனக் கொன்றை மலர், மணி எனப் பல் மலர் காயாங் குறுஞ் சினை கஞல, கார் தொடங்கிற்றே - நற்றிணை 242,

கார் என்று அயர்ந்த உள்ளமொடு, தேர்வு இல பிடவமும், கொன்றையும், கோடலும் மடவ ஆகலின், மலர்ந்தன பலவே - நற்றிணை 99)

நேரங்கெட்ட நேரத்திலே மழை பெய்ஞ்சிருச்சாம்; கொன்றை மரம், கார்காலம்னு தப்பா நினச்சு பூத்துருச்சாம்; (ஏதில பெய்ம்மழை காரென மயங்கிய பேதையங் கொன்றை - ஐங்குறு நூறு - 462)

மழை/கொன்றை பற்றி இன்னோரு அருமையான காட்சி திணைமாலை நூற்றைம்பது - 98ம் பாட்டில் வருது, அண்ணாச்சி!

மழைக்கும் கொன்றைக்கும் இருக்கிற ஊடாட்டை கொஞ்சம் விளக்கமாகவே பார்க்கலாம்.

வீயும் வியப்புறவின் வீழ்துளியான் மாக்கடுக்கை
நீயும் பிறரொடுங்காண் நீடாதே - ஆயுங்
கழலாகிப் பொன்வட்டாய்த் தாராய் மடலாய்க்
குழலாகிக் கோல்கரியாய்க் கூர்ந்து.

சிறுமியர் கழற்சிக் காயை வச்சு விளையாடிட்டு இருக்காங்க. (காய்களைத் தூக்கிப் போட்டு கீழே விழுறதுக்குள்ளே அடியிலே இருக்கிற காய்களை ஒண்ணொண்ணா, ரெண்டிரண்டா, மூணுமுணா, மத்த காயைத் தொடாமக் கழந்து (நீக்கி) ஆடுற சொட்டாங்காய் விளையாடிருக்கீங்களா? (கொன்றை விதை தான் இங்கே சொட்டாங்காயா உருமாறுது; கழல்ந்து ஆடும் காய் கழற்சிக் காய்; கழல்+சி = கழற்சி)

என்னது, பொம்பிளைப் புள்ளைகளோட எப்படி ஆடுறதுன்னு கேக்கீணகளோ? என்ன அண்ணாச்சி, பொம்பிளை, ஆம்பிளை எல்லாம் ஒண்ணாத் தானே சின்னப் பருவத்துலே விளையாடி இருக்கோம். நீங்க மட்டும் வேறேயா, என்ன?)

கார்கால மழை பெய்யுது; நீர்த்துளிக பட்டு, நிலத்திலெ கிடக்கிற கழற்சிக் காய்க, முதல்லெ தெரியுது; மழை இன்னம் விழுது; கொன்றை வீ (மலர்ந்து முதிர்ந்து விழும் பூவுக்கு வீ -ன்னு தமிழ்லே பேரு.) கீழே விழுந்து சின்னப் புள்ளைங்க விளையாடுற இடம், சூதாடுற இடமாட்டம், பொன்வட்டா மாறுது; மேலும் மேலும் மழை; இன்னும் வீ கீழே விழுது. இப்போ, கொன்றைப் பூவெல்லாம் சேர்ந்து மாலையாக மாறிட்டுது. வீ உதிர்ந்து மடலாகுது (மடல்னா பூவிதழ்); பொடி சிதறுது; இன்னும் மழை; கொன்றைப்பழம் கொத்துக் கொத்தாய் விழுது. தலைவியோட குழற் கத்தை மாதிரிக் காட்சியளிக்குது.

விவரிப்பு எப்படி இருக்கு, பார்த்தீங்களா, அண்ணாச்சி! இன்னோரு காட்சி ஐந்திணை எழுபது -18-ல் வருது.

கதழுறை வானம் சிதற இதழகத்துத்
தாதிணர்க் கொன்றை எரிவளர்ப்பப் பாஅய்
இடிப்பது போலும் எழில்வானம் நோக்கித்
துடிப்பது போலும் உயிர்.

வானம் சிதறுது; மழை வருது. அந்த நேரத்திலே எரி வளர்க்கிறாப் போல கொன்றை, பூத்துக் கிடக்குது. "இது எப்படி, மழையும் நெருப்பும் ஒண்ணா இருக்க முடியுமுன்னு வானம் என்னை இடிக்கிறது, என் உயிரும் துடிக்குது" ன்னு தோழிக்கிட்டெ சொல்றாளாம் தலைவி.

மேலுமொரு காட்சி குறுந்தொகை 21-ல் வருது.

வண்டு படத் ததைந்த கொடி இணர் இடையிடுபு
பொன் செய் புனை இழை கட்டிய மகளிர்
கதுப்பின் தோன்றும் புதுப் பூங் கொன்றைக்
கானம், கார் எனக் கூறினும்,
யானோ தேறேன் அவர் பொய் வழங்கலரே

இங்கேயும் ஓர் ஏமாத்துத் தான், கார்காலத்திலே வந்திருவேன்னு தலைவன் சொல்லிட்டுப் போயிருக்கான். திடீருன்னு மழை பெய்ஞ்சிருச்சு; மரம் ஏமாந்துருச்சு, கொன்றையும் பூத்துருச்சு, பக்கத்திலே குழற்பழமும் இருக்கு, "நான் என்ன மக்கா, எனக்குத் தெரியும்டி, என்னை ஏமாற்ற முடியாது, அவர் பொய் சொல்லமாட்டார், இது கார்காலம் இல்லை"ங்கிறா தலைவி.

இதே போல இன்னோரு ஏமாந்த காட்சி தோழி தலைவிக்குச் சொல்ற மாதிரி குறுந்தொகை - 66 - இலும் வருது. தலைவனை விட்டுக் கொடுக்காம, இன்னொரு காட்சி நற்றிணை 296-ல் வருது.

என் ஆவது கொல்? தோழி! - மன்னர்
வினை வல் யானைப் புகர் முகத்து அணிந்த
பொன் செய் ஓடை புனை நலம் கடுப்ப,
புழற்காய்க் கொன்றைக் கோடு அணி கொடி இணர்
ஏ கல் மீமிசை மேதக மலரும்,
பிரிந்தோர் இரங்கும் அரும் பெறல் காலையும்,

யானையோட புள்ளி முகத்திலே பொன்னால் செய்த முகபடாம் போல கொன்றை பூத்திருக்கு; "இது கார்காலம்னு என் தலைவருக்குத் தெரியாதா? எனக்குத் தெரியுமடி, அவரு வந்துருவாரு, நீ சொல்லாதே"ன்னு தலைவி தோழிக்குச் சொல்றாளாம்.

இன்னோரு இடத்திலே (நற்றிணை 371) தலைவன் தேர்ப்பாகனுக்குச் சொல்றான்.

காயாங் குன்றத்துக் கொன்றை போல
மா மலை விடர் அகம் விளங்க மின்னி
மாயோள் இருந்த தேஎம் நோக்கி
வியல் இரு விசும்பு அகம் புதையப் பாஅய்,
பெயல் தொடங்கினவே,

"அப்பா, பாகனே! கொன்றை பூத்துருச்சு, மழையும் வந்திருச்சு, கார்காலமாச்சே, என்னைக் காணுமே'ன்னு தலைவி அழ ஆரம்பிச்சுருவா, நான் வேகமாப் போகணும்பா, வண்டிய ஓட்டு"

சொல்லச் சொல்ல நீண்டுக்குணே போகும். அடுத்து சமய நூல்களுக்கு வருவோம்.

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

10 comments:

Unknown said...

பூவரச மரந்தான்., கொன்றை மரமோ?., எங்கூர்ல கொன்ன மரம்னு ஒரு மரத்தை சொல்வார்கள் அதுதான் கொன்றை மரமோ என்னமோ?. நல்ல பதிவு. இரசித்துப் படித்தேன். நன்றி.

வசந்தன்(Vasanthan) said...

நீங்கள் சொல்லியதை வைத்துப்பார்த்தளவில் எங்கள் ஊரில் 'கொண்டல்' என்று அழைக்கப்படும் மரத்தைப் பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் கொன்றை என்ற பேரில் இன்னொன்றுண்டு. அது நீங்கள் சொன்ன மரமன்று (மஞ்சட்பூ, நீளக்காய் எல்லாம் அதிலில்லை.)

எது சரியென்று தெரியவில்லை. 'வாகை' மரம் பற்றி இங்கே குளறுபடி. அண்மையில் தருமியின் பதிவிலிட்ட 'நித்தியகல்யாணிப் பூ' பற்றி எனக்குக் குழப்பம். பூ, மரங்கள் மட்டில் மிகப்பெரிய வித்தியாசம் ஏன் வந்ததென்று தெரியவில்லை. ஓரிடத்தில் வழங்கப்படும் பெயர், இன்னோரிடத்தில் இன்னொன்றைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

--------------------------------
அப்படிப்போடு,
பூவரச மரத்துக்கும் இதற்கும் எங்கே பொருந்துகிறது?

இராம.கி said...

அன்பிற்குரிய அப்படிப் போடு,

பூவரசமும் கொன்றையும் வெவ்வேறானவை. கொன்றையும், நீங்கள் சொல்லும் கொன்னையும் ஒன்று. நம்மூர் மரம், செடி, கொடிகளைப் பற்றி நாம் எல்லோருமே தெரிந்து கொள்ளவேண்டும். பொதுவாக நம்மில் பலரும் புதலியலில் (botany) ஆர்வம் காட்ட மாட்டேன் என்கிறோம்.

அன்பிற்குரிய வசந்தன்,

உங்கள் ஊரின் கொண்டல் மரத்தின் படத்தை வலையில் போடுங்கள், அது நாங்கள் சொல்லும் கொன்றையா என்று பார்த்துச் சொல்கிறேன். கொன்றையில் பலவகை உண்டு. இந்தத் தொடரின் முடிவில் படங்களையும் மற்ற விவரங்களையும் பதிவேன்.

வாகை பற்றிய குளறுபடி என்ன என்று எனக்குத் தெரியவில்லை. நித்திய கல்யாணி பற்றிய தருமியின் பதிவைப் படித்தேன். அது தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் சாகுபடியில் உள்ளது. அதில் உள்ள alkaloid பொருளுக்காகச் செருமனிக்கு ஏற்றுமதி செய்கிறார்கள்.

இப்படி நிலத்திணை, மரங்கள், செடிகள், கொடிகளின் பெயர் வட்டாரத்துக்கு வட்டாரம் சற்று மாறுபடுவது இயற்கை. அதுவும் கூட மொழிக்கு ஒரு வளம் கொடுக்கிறது. நாம் செய்யவேண்டியது பெயர்கள் பரிமாற்றமே. நாம் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள, நெருக்கமாக வந்து சேர, இந்தப் பரிமாற்றம் தேவை. யாரும் யாருக்கும் குறைந்தவர்கள் அல்லர். வட்டார வழக்குகள் தனித் தீவுகளாய் ஆகக் கூடாது.

அன்புடன்,
இராம.கி.

சிவக்குமார் (Sivakumar) said...

புதலியல் என்ற வார்த்தையைக் கொஞ்சம் விளக்கினால் நன்று.

வசந்தன்(Vasanthan) said...

பதிலுக்கு நன்றி.
தற்சமயம் கொண்டலின் படம் என்னிடமில்லை. ஊருக்குச் சொல்லி எடுக்க முயற்சிக்கிறேன். ஆனால் சரிவருமா தெரியவில்லை. இப்போதைக்கு அதைப்பற்றிய சிறுகுறிப்பைத் தருகிறேன் பாருங்கள்.

மஞ்சட்பூக்கள் கொத்தாய் இருக்கும். இக்கொத்து தலைகீழாகத் தொங்கும்.
முருங்கைக்காய் போன்று அதன் காய்கள் இருக்கும். காய் பச்சையாக இருந்து பின் மண்ணிறத்தை அடையும். மரத்தின் பட்டையின் நிறம் பழுப்பாயிருக்கும் (மங்கிய மஞ்சள்). வேம்பு, மலைவேம்பு போன்று ஆகப்பெரிய மரமாக வளராது.

வசந்தன்(Vasanthan) said...

தருமியின் பதிவில் நித்தியகல்யாணியென்று சொல்லப்படும் பூ, யாழ்ப்பாணத்தில் பட்டிப்பூ என்று சொல்லப்படுகிறது. (சவக்காலைப் பூ என்றும் சிறுவயதில் நாம் சொல்வதுண்டு) அதை வீடுகளில் வளர்ப்பதில்லை. ஏன் வீட்டுக்குள் கொண்டுவரக்கூட அனுமதியில்லை. இடுகாடுகளிலும், மக்கள் பழகாத பற்றைகளிலும் தான் அவை இருக்கும்.

நித்தியகல்யாணி என்ற பெயரில் அழைக்கப்படுவது வெள்ளைநிறப் பூவைக்கொண்ட செடி. கிட்டத்தட்ட நந்தியாவட்டை போன்றிருக்கும். இந்தப்பூ மட்டில்தான் மிகப்பெரிய வேறுபாட்டை நான் உணர்கிறேன்.

இராம.கி said...

அன்பிற்குரிய சிவகுமார்,

புதலியல் = botany. இது தொடர்பான சொற்கள் பற்றி ப.அருளி சிறப்பாக ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதைத் தட்டச்சு செய்து போடுவது பெரிய வேலை.

புதல் என்பது மரம், செடி, கொடி, புல், பூண்டு போன்ற எல்லா நிலத்திணைகளையும் குறிக்கும் சொல். சங்க இலக்கியங்களில் சரியான முறையில் இது ஆளப்பட்டிருக்கிறது.

அன்பிற்குரிய வசந்தன்,

கொன்றையைப் பற்றிய படத்தை இந்தக் கட்டுரை முடிவில் பதிகிறேன். நித்ய கல்யாணியை வேறு ஒருமுறை பதிவேன்.

அன்புடன்,
இராம.கி.

சிவக்குமார் (Sivakumar) said...

விளக்கத்திற்கு மிக்க நன்றி ஐயா.

ஜெயஸ்ரீ said...

கை நொடியில் பொன்னிதழி மாலை வருங்காண்

இனி கக்கத்தில் இடுக்குவாயோ வெட்கத்தை அம்மே

இந்தக் குற்றாலக்குறவஞ்சி பாட்டில் வரும் பொன்னிதழி கொன்றை அல்லவா?



மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே ...

பழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504 said...

அருமையான பதிவு நட்பே ! பொற்கொன்றைப்பூ என அகத்திய சித்தர் பதிவில் படித்தேன் , பொற்கொன்றைப்பூ படம் எதுவாக இருக்கும் ? படம் இருந்தால் எமக்கு அனுப்ப முடியுமா? palamathesu@gmail.com