Thursday, August 09, 2018

சங்கம் - 3

’சங்கத்’திற்குச் சங்கத மூலங் காட்டுவதிலுஞ் சிக்கலுண்டு. 

மோனியர் வில்லியம்சின் படி, 

அதர்வண வேதம் [அருத்த சாற்றம் (Arthasastra) வேதங்களைத் த்ரயீ என்பதால் அதர்வணக் காலம் என்பது பொ.உ.மு. 300க்கு அப்புறமே], 

மகாபாரதம் [பொ.உ.300/400இல் எழுத்துற்றது. http://en.wikipedia.org/wiki/Mahabharata], 

பாகவத புராணம் [https://en.wikipedia.org/wiki/Bhagavata_Purana பொ.உ 800-1000. சிலர் ~பொ.உ.600 என்பர்] 

ஆகியவற்றிற்கு முன்னால் தேடினால் ”சங்கத்”திற்குச் சங்கதத்தில் நேரடிப் பொருளில்லை. 

இருக்கு வேத (~பொ.உ.மு.1200) வழியிற் பார்த்தாலும் சுற்றி வளைத்தே பொருள் வரும். ஆயினும், தமிழ் - சங்கதப் பரிமாற்றங்களுக்குச் சங்கத மூலங் காட்டச் சிலர் விழைகிறார். 

ஒரே நிலத்து 2 மொழிக் குடும்பங்களின் இடையே எழுதா வரலாற்றின் முன்னும் சொற்கள் பரிமாறியிருக்கலாமே? அவற்றை எப்படிக் கணக்கிடுவது? எழுத்துப் பயன்பாட்டை மட்டும் வைத்து ’இது இம்மொழி’ என்று சொல்ல வலுத்த ஆதாரம் தேவையில்லையா? 

அவையின்றிச் ’சங்கம்’ சங்கதவழி எழுந்து, தமிழிற் கடன் என்று சொல்வது எப்படி? 2 மொழிக் குடும்பங்களுக்கும் இது பொதுவாகலாமே?. ஆய்வு வலுப்படும் வரை இதுபோன்ற சொற்களைத் தொகுப்பதைத் தவிர்த்து வேறு ஏதேனும் வழியுண்டா?.

தமிழ் வழி பார்த்தால், ’சங்கத்திற்கு’ 3 பொருட்களுண்டு. 

முதலாவது வளைவுப் பொருள். இதன் வழி உருவான சொற்கள்: சங்கு, 9 குபேர நிதிகளுள் ஒன்று, கைவளை, நெற்றி, குரல்வளை, கைக்குழி, கணைக்கால், அழகு ஆகியவற்றைக் குறிக்கும். 

இரண்டாவது கூட்டப் பொருள். இதன் வழி ஈறாறு கூடுமிடம், ஆறு கடலோடு கூடுமிடம். சேர்க்கை, அவை, புலவர் கூட்டம், முச்சங்கங்கள், செயின புத்த சங்கங்கள், அன்பு, புணர்ச்சி முதலிய சொற்களமையும். 

மூன்றாவது கூட்ட நீட்சியான எண்ணிக்கைப் பொருள். இதன்வழி எழுந்தவை: இலக்கங்கோடி, படையிலொரு தொகை என்பன. 

இனி நெய்தல் வழி வந்த வளைவுப் பொருளைப் பார்ப்போம். சொற்பிறப்பினுள் நேரே செல்லாது, பலவிடங்களில் இருந்து தொகுத்த பழைய நெய்தற் செய்திகளையே முதலிற் சொல்கிறேன். சற்று நீளம் தான். பொறுத்துக் கொள்க!.

70000 ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவிலிருந்து அரேபியா, இரான் வழி, பழங்குடிச் சிந்தை மாந்தர் (Homosapiens Sapiens) இந்தியாவினுள் நுழைந்ததாய் இசுபென்சர் வெல்சின் (Spencer wells) ஈனியலாய்வு சொல்லும். Y குருமிய (Chromosome) அடையாளப் படி இவரை M130 என்பார்; 1,50,000 ஆண்டுகள் முன் இந்தியா நுழைந்த (இப்போது 3,00,000 ஆண்டுகள் என்று சொல்லப்படுகிற) அத்திரம்பாக்க நிமிர்ப்பு மாந்தனிலும் (Homo Erectus) இவர் வேறு பட்டவர். 

”M130 எனும் இந்த நெய்தலார் (coastal people) பேசியது தமிழா?” என்பது தெரியாது. ஆனால் உறுதியாக ஏதோவொரு மொழியை இவர் பேசினார் என்றே இற்றை அறிவியல் சொல்கிறது. (இன்னொரு வகையாய் 30,000 ஆண்டுகளுக்கு முன் உள் நுழைந்த M20 என்பவர் தான் தமிழரா?) மொத்தத்தில் இப்பழங்குடிகளிடம் தமிழ் உருவாகி இருக்கலாம். அதையெல்லாஞ் சொல்லச் சரியான தரவுகள் நம்மிடம் இல்லை. ஆனாலும் இன்று தமிழ் பேசுவோரின் மரபுகள் பல பழங்குடிக் கூறுகளைக் கொண்டுள்ளது உறுதி. 

இந்தியாவுள் நுழைந்து இவர் குமரி சேர்ந்தது பெரும்பாலும் 2000 ஆண்டுகளுக்குள் இருக்கலாம். இவரின் இருப்பை உறுதி செய்யும்படி இற்றைக்கு 35000 ஆண்டுகள் முந்தைய தொல்லியல் அடையாளம் இலங்கையிற் கிடைத்தது. 

இந்தியாவிலும் இவர் இருப்பை உறுதி செய்வதாய், 2001 அக்தோபரில் விழுப்புரம் மாவட்டக் கடற்கரையில் 1 கி.மீ தள்ளிய ’ஓடை’யெனும் ஊரில் இரும்புக்காரை மத்திகைக்குள் (ferricrete matrix; ferruginous and concrete matrix.-இரும்பு மண்ணூறலும் காரையுஞ் சேர்ந்து கற்காரை போல் அமையும் மத்திகை) புதைந்து கிடக்கும் குழந்தையின் தலைப் படிமம் (fossil) கிடைத்தது. 

பாறையை உடைத்து, மண்டையோட்டை எடுக்கவியலாக் காரணத்தால் நேராத (indirect) முறையில் ஆய்வுகள் நடந்தன. தலைப் படிமத்தின் காலம் பெரும்பாலும் மீப்பெரும் பனிக்காலத்தின் (Pleistocene epoch) நடுவில் அமையலாமென்றே இவ்வாய்வின் முடிவு சொல்கிறது. அப்படியெனில் ஏறத்தாழ இற்றைக்கு 70,000 ஆண்டுகளுக்கு முந்தைய தலைப் படிமம் இதுவாகும். ஆக ஈனியல் முடிவிற்கும், தொல்லியல் ஆய்விற்கும் முரணில்லை.

இப்பழங்குடி மாந்தரே, ஏறத்தாழ 55000 ஆண்டுகள் முன் (பர்மிய, தாய்லந்திய, கம்போடிய, இந்தொனேசியா சேர்ந்த) சுந்தாலந்து (Sundaland) வழி உதிரிக் குடும்புகளாய் (100 கி.மீக் கடற்பயணந் தவிர) நடையாய் நகர்ந்து, வடக்கு ஆத்திரேலியா வரை போய்ச் சேர்ந்தார். இவரே இற்றை ஆத்திரேலியப் பழங்குடியாரின் முன்னோர் ஆவார். 

ஒரு வகையிற் பார்த்தால் ஈனியல் வழி தமிழருக்கும், ஆத்திரேலியப் பழங்குடிகளுக்கும் பெருத்த உறவுள்ளதாம். (தேனியைச் சேர்ந்த நம்மூர் விருமாண்டி பற்றிப் பலரும் அறிந்திருப்பார்.) இற்றைக்கு 9000 ஆண்டுகள் முன்னுங் கூட ஆத்திரேலியப் பழங்குடிகளுக்கும் தமிழருக்கும் இடையே இரண்டாம் முறையும் ஒரு  கலப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று அண்மை ஈனியல் ஆய்வுகள் சொல்கின்றன. 

இதுவரை நம்மூர் அறிவியலார், மொழியியலார் யாரும் இவ்வாய்வுகளைத் தொட்டுக்கூடப் பார்க்கவில்லை. குமரிக்கண்டம் என்ற, அறிவியற் சான்றுகள் அதிகமில்லாத, 19ஆம் நூற்றாண்டுத் தேற்றையே சொல்லிச் சொல்லி, ஆழ்ந்து கிடக்கிறார். 

(நானும் ஒரு காலத்தில் அப்படியிருந்தேன். இப்பொழுது இம் மாயையில் இருந்து வெளிவந்து மாற்றுக் கோணம் நாடுகிறேன். அழிந்து போன குமரிக் கண்டம் என்பது தவறு; ஆனால் அழிந்து போன குமரி நிலம் என்பது வேறு செய்தி. அது உறுதியாய் நடந்தது.) 

ஆப்பிரிக்காவில் நெய்தலார் விட்டு வந்த தொடர்புகளையும் எத்தியோப்பியா, சோமாலியா போன்ற இடங்களில் தேட வேண்டும். மாந்தவியல் (anthropology) வழியான ஆய்வுகளும் தொடர வேண்டும்.
     
அடுத்த செய்தி இந்தியப் பெருங்கடலின் ஆழம் பற்றியது. 

16500 ஆண்டுகள் முன் 130/140 மாத்திரிகள் (metres) கடல் ஆழங் குறைந்து இந்தியக் கடற்கரை என்பது இன்னுந் தள்ளிக் கடலுள் இருந்தது. வெதண மாற்றத்தில் (climate change)  உலகெங்கும் உள்ள பனிப் பாறைகள் உருகிக் கடலுயர்ந்தது. அப்போது சில இடங்களிற் கூடவும், சிலவற்றில் குறைந்தும், இந்திய நிலம் அழிந்தது. குமரியின் தெற்கே 250 கி.மீ வரை நிலம் அழிந்தது உண்டு. 

இது போல் கடலுயர்ந்ததால், பழங்குடி மாந்தன் இந்தியத் துணைக்கண்டத்துள் வந்து சேர்ந்த  தடயங்கள் (கிடைத்திருக்கக் கூடிய) அழிந்து போயிருக்கலாம். நினைவு கொள்ளுங்கள். முன்சொன்ன ’வரலாற்றிற்கு முந்தைய’ தமிழக, இலங்கைத் தடயங்கள் தொடர்பின்றி உள்ளன. எண்ணிக்கை கூடுமுன் இந்தியப் பழங்குடிகள் நெடுங்காலம் நெய்தலில் வாழ்ந்திருக்கலாம் என்றே சொல்ல வேண்டியுள்ளது. 

தவிர, தீவக்குறையின் திணையொழுங்கால் நருமதைக் கழிமுகந் தாண்டித் தெற்கே வந்தால், நெய்தலும், குறிஞ்சியும், முல்லையும் சில அயிர மாத்திரிகள் (கி.மீ.) அகலத்திலேயே நெய்தலை அடுத்து இருப்பதால், ஒரு திணையிலிருந்து இன்னொரு திணைக்குத் தாவிப் போவதும், மாறிமாறி நகர்வதும் அவ்வளவு ஒன்றுங் கடினமல்ல. தென்னிந்திய மேற்குக்கரையின் பூகோள அமைப்பு அப்படி இருக்கிறது. இது இயற்கை நமக்குக் கொடுத்த வரம்..

ஒவ்வொரு திணையாக காலவோட்டத்தில் அடுத்தடுத்து மக்கள் நகர்ந்ததாய் இடது சாரியர் சொல்வர். ஆனால் எல்லாத் திணைவாழ்க்கைகளும் சம காலத்தில் இருந்தனவோ என இப்போது சிந்திக்க வேண்டியுள்ளது. இசுபென்சர் வெல்சின் தேற்றஞ் சொல்லும் நெய்தல் முகன்மை சற்று வியப்பானது., 

அதே பொழுது (குறிஞ்சி. முல்லை, மருதம், நெய்தல் என்று படித்து வளர்ந்த) நம்மூர் ஆய்வாளருக்கு, குறிப்பாகக் குமரிக்கண்டம் எனும் முனையாருக்கும், வேதம், சங்கதம் எனும் இன்னொரு முனையாருக்கும் பேரதிர்ச்சி தரலாம். 

ஈனியலாய்வை முடிந்த முடிவாய்க் கொள்ளாவிடினும் அறிவியல் அடிப்படையில் நான் பெரிதாய்க் கருதுவேன். திராவிட மொழியார் 8000 ஆண்டுகள் முன் இரான், பலுச்சித்தான், சிந்து சமவெளிவழி தெற்கு வந்தார் எனும் Dravidian Descent தேற்றத்தை விட Coastal Descent and subsequent Dravidian Ascent எனும் மாற்றுத் தேற்றம் மாந்தவியல், தொல்லியல் தடயங்களுக்குச் சரியாய்ப் பொருந்துகிறது. 

இதன் நெளிவு சுழிவுகளையும் என் புரிதலையும் வேறு ஒரு கட்டுரையில் விளக்குவேன். (குறிப்பாக அண்மையில் வெளிவந்த 

Ancient Ancestric South Indians (AASI) உம், இரானிய மருத நிலத்தாரும், கலந்து பிறந்த Ancestric South Indians (ASI), பின் ASI-யும் steppe pastoralists உம் கலந்து பிறந்த Ancient North Indians (ANI), ஆகியோர் பற்றியும், அரியானாவில் பெற்ற Rakhigarhi மாந்தரின் ஈனியல் முடிவுகள் பற்றியும் என் கேள்விகள் பலவுண்டு. இவற்றை வேறொரு கட்டுரையில் தான் வெளிப்படுத்த வேண்டும்.)
 
ஆயிரம் ஆண்டுகளில் மேற்கிலிருந்து தெற்கு சுற்றிக் கிழக்குக் கடற்கரை வழி நடந்த முகன மாந்த நகர்ச்சியில் நெய்தலாருக்கு கடலோடு கூடிய நெய்தற் பட்டறிவு சிச்சிறிதாய்க் கூடிவந்திருக்கலாம். அதனால் நீரைக் கடக்கப் பயன்படும் புணை, கலம், ஓடமெனப் பல்வேறு ஏந்துகள் வடிவெடுத்தன. இத்தனை வடிவுகள் இக்கடற்கரைப் பகுதியிலெழ, மேற்சொன்ன திணைகள் அருகிருந்ததும் ஒரு காரணமாகும். 

காட்டாய், ஆற்றுக் கழிமுகத்தில் விளையும் கோரைப் புற்கட்டைக் கடலில் இட்டால் மிதந்தது கண்டு, புணை>பிணை செய்ய முற்பட்டார். [கொடு> கோடு> கோரை எனச் சொல்லெழும். 

தமிழ்நாட்டிற் பலவிடங்களில் - சென்னைப் பள்ளிக்கரணை, சிதம்பரம்-சீர்காழி வழி கொள்ளிடந் தாண்டி வரும் தைக்கால், திருநெல்வேலி-செங்கோட்டைச் சாலையில் சேரன்மாதேவிக்கு முந்தையப் பத்தமடை- எனப் பல பகுதிகளிற் கோரை செழித்து வளர்கிறது. 

மேற்குக் கடற்கரையிலும் கோரைகளுண்டு. சிந்தாறு (Indus) கடலிற் சேருமிடத்திலும் இவை வளர்ந்தன. கனம், கோல், சன்னம், நாணல் எனக் கோரைகளிற் பல விதப்புகள் உண்டு. உலோத்தல் போன்ற சிந்துவெளித் துறைமுகத்தில் இது போன்ற புணைகள் செய்யப் பட்டிருக்கலாம். நம்மூர்க் கோரைகளை வைத்து ஆழமான ஆய்வுகளும், செய்து பார்த்துப் பிழை தவிர்க்கும் முயற்சிகளும் எழ வேண்டும்.]

கோரைக் கட்டுகளைப் பிணைத்தது புணை. அகம் 186-12 இல் கொழுங்கோல் வேழத்துப் புணையைப் பற்றிப் பரணர் சொல்வார். கொழுங்கோல் வேழம்= கொழுத்த கொறுக்கம் புல் தட்டை (கரும்பிற்கும் வேழம் என்றதால் நாம் குழம்புகிறோம் வெள்ளை நார்த் தட்டை வேழமாகும்.) 

38 இடங்களுக்குமேல் புணை பற்றிய சங்கநூல் குறிப்புகளுண்டு. (எகிப்து, சுமேரியா, சிந்து, அசிரிய, பாபிலோனிய. பொனீசிய, அசுடெக், மாய, இங்க்கா, ஈசுடர் தீவு, பாலினீசியப் பழம் நாகரிகங்களிற் புழங்கிய) கோரைப் புற் கட்டுகளாலான. reed-ship, read boat போன்றதே நம்மூர்ப் புணை. 

அழகன் குளத்தில் கண்டெடுத்த ஓட்டுச் சில்லிற் கீறிய ஓவியமும் இப் புணையைக் காட்டியது. மேற்சொன்ன நாடுகளில் எல்லாம் புணை நுட்பியல் தனித்தனியாய் எழ வாய்ப்பில்லை. அதே பொழுது முதலில் எங்கு எழுந்தது? அறியோம். 

இவற்றைக் கட்டும் நுட்பம் இன்று சில நாடுகளில் மட்டுமே எஞ்சியுள்ளது. எகிப்திய, சுமேரிய, இங்க்கா சான்றுகளைக் காண்கையில் 100 பேர் பயணஞ் செய்யவும், பெருஞ்சுமை கொண்டு செல்லவும் புணை நுட்பியல் உதவியது புரிகிறது. ஒரு காலத்தில் இவற்றைக் கொண்டு மாந்தர் பென்னம் பெரிய கடலையுங் கூடக் கடந்திருக்கலாம். இற்றைக் கப்பல் நுட்பியல் கூடப் புணைகளிலிருந்தே வளர்ந்திருக்கலாம். 

அடுத்தது கல்லப் (=தோண்டப்) பட்ட கலம்/ dug-out canoe. கடற்கரையில் உயர்ந்து வளர்ந்த மரத்தைத் தோண்டி உருவாக்கிய தொள்ளையும், தொண்டலும், தோணியுங் கூடத் ”தோண்டற்” பொருளின. 

குயவன் தோண்டியதும் தோண்டியே. களிமண் தோண்டிக் குடஞ் செய்யவும், மரந் தோண்டி கலஞ் செய்து நீரைக் கடக்கவும் முடிந்தது. உண்கலன், கொள்கலன், அணிகலன், படைக்கலன், அறைகலன், மென்கலன் என்று பொருட்பாடு பின்னால் விரிந்தது. 

கலமென்ற சொல் வளர்நிலையிற் dug-out canoeவை மட்டுங் குறியாது, பலவகைக் கடலோடங்களையும் குறித்தது. தோணியும், புணையும் கலந்து செய்த ஓட(raft) நுட்பியல் வந்தது. அதற்கு அப்புறம் அடித்தண்டோடு (நெஞ்செலும்புகளைப் போன்று) இரு பக்கம் மரச் சட்டம் பொருத்திக் குவியும் கூட்டுச் சட்டம் வந்தது. 

(கூட்டிற்கும் hull ற்கும் சொற் பொருட் தொடர்புண்டு. நம்மூர் சீரை> சீலையே sail ஆனது. கப்பல் நுட்பியல் பற்றிய உலகின் பல்வேறு சொற்களுக்கும் தமிழுக்குமான ஆழ்ந்த தொடர்பைப் பாவாணர் சொல்வார்: இச் சொற்களை விரித்தால் அவையே ஒரு தனிக்கட்டுரையாக முடியும்.)

முடிவாக (நெஞ்சாங் கூட்டைத் தசைகளாலும், தோலாலும் மூடுவது போல்) நீர் நுழையாத படி மரப்பலகைகளை இழைத்துப் பொருத்தி, கயிறு, மர ஆணிகளாற் (இரும்பாணிகள் அப்புறம்) கூட்டை மூடி/ கவ்வி/கப்பிச் செய்யும் கப்பல் நுட்பியல் உலகெங்கும் பரவியது (”கப்பல்” என்ற சொல் எழுந்த வகை இப்போது புரிகிறதா?) 

பொதுவாக மரத்தில் கல்லியது என்றாலும், விதப்பாக மரச் சட்டங்களின் மேற் கப்புகளை வைத்து மூடும் நுட்பியலாற் கப்பல் செய்யப் பட்டது. குறைக் கொண்மையால் (carrying capacity), மரத்தோணி நுட்பியல் பெரிதும் வளர வில்லை. 

தமிழருக்கும் கப்பல் நுட்பியலுக்குமான தொடர்பு வரலாற்றில் பலவிடங்களில் வெளிப்பட்டது. பொ.உ.1421 இல் சீனவேந்தர் ஆணையால் உலகைச் சுற்ற முற்பட்ட சீன மாநாய்கன் செங்ஃகோ தன் கலங்களுக்கான ஏவலை (order) கோழிக்கோட்டிற் (முன்னாளையச் சேரரின் மாந்தை பெரும்பாலும் இது தான். பழைய சேரர் தொண்டி இதற்கு மிக அருகில் கடலண்டியில் இருந்தது) கொடுத்து, ஓராண்டு அங்கு தங்கி தனக்கு வேண்டியபடி கப்பல் செய்து போனானாம் 

ஏன் இங்கு வந்து கப்பல் செய்ய வேண்டும்? திறமை கருதித் தானே? (வாஸ்கோட காமாவும் இங்கே தான் வந்திறங்கினான். மாந்தை/தொண்டியின் புகழ் அவ்வளவு பெரிது.)

சாலி ஆற்றங்கரையும் அதனருகே இருந்த சேரர் தொண்டியும் தெளிந்த கப்பல் நுட்பத்தால் சிறப்புற்றன போலும். (சேரலர்> கேரளர் அப்போது வட்டாரத் தமிழே பேசினார்.) தொண்டி> தோண்டியும், தோணியும், கப்பலுஞ் செய்ததால் தொண்டி என்ற பெயர் அத்துறைக்கு ஏற்பட்டிருக்கலாம். (ஒரு சிலர் தொள்ளப் பட்ட நிலமெனப் பொருள் கொள்வர். அச்சிந்தனை பொருத்தம் இல்லாதது.) பல்வேறு விதமாய் ஆய்ந்து பார்த்தால், சேரரின் பழந்தொண்டி, மேலே சொன்னபடி பெரும்பாலும் கோழிக்கோட்டிற்கு அருகில் இருந்திருக்கலாம். 

பன்னாட்டுக் கடல்நுட்பக் கலைச்சொற்கள் தமிழ்மூலம் காட்டுமென்று முன்னாற் சொன்னேன். (நுட்பந் தெரிந்தோரின் சொல் உலகெங்கும் பரவாதா? இந்தையிரோப்பிய மொழிகளின் ”ship” நம் கப்பலோடு s சேர்த்துத் தமிழ்த் தொடர்பு காட்டும். 

Old English scip "ship, boat," from Proto-Germanic *skipam (cognates: Old Norse, Old Saxon, Old Frisian, Gothic skip, Danish skib, Swedish skepp, Middle Dutch scip, Dutch schip, Old High German skif, German Schiff), "Germanic noun of obscure origin" [Watkins]. Others suggest perhaps originally "tree cut out or hollowed out," and derive it from PIE root *skei- "to cut, split.")

அன்புடன்,
இராம.கி.

சங்கம் - 2

ஒரு சொல் தமிழெனில், ”சங்க இலக்கியத்தில் இதுவுண்டா?” எனக் கேட்கும் விந்தைப் பழக்கஞ் சிலரிடமுண்டு. அப்படிக் கேட்பது தவறில்லை. ஆனால் ”நாலு வேதங்களிற் குறிப்பிட்ட சொல்லுண்டா?” எனச் சங்கதம் நோக்கி இவர்கள் கேட்டு நான் பார்த்ததில்லை. 

இருக்கு வேதந் தொடங்கி பொ.உ.400 வரை வந்த சங்கிதை (ஸம்ஹித); ஆரணம் (ஆரண்யக), பெருமானம் (ப்ராஹ்மண), உள்வநிற்றம் (உபநிஷத) என எல்லாவற்றையும் வேத இலக்கியம் என்றாக்கி, பொ.உ.1400 வரையுள்ள மகாபாரதம், இராமாயணம், காளிதாசம், புராணங்களையுஞ் சேர்த்துக் ”குறித்த சொல்” எங்கு வந்தாலும் அதைச் சங்கதம் என்பது மட்டும் எப்படிச் சரியாகும்? 

பெரும் ’பக்தி’யில் சங்கத இலக்கியக் காலத்தை இப்படி அகட்டுவது பற்றிக் கேள்வியே எழாது. சங்க இலக்கியங்களுக்கு மட்டும் மனத்தடை எழும். எவ்வளவு முடியுமோ, அவ்வளவிற்குச் சங்க இலக்கியப் பரப்பைக் குறைத்துக் காலத்தைப் பின் நகர்த்துவார். 

கல்வெட்டு, பானைப் பொறிப்புக்களையும் உடன் அழைப்பார். ஒப்பிலக்கிய ஆய்வு பார்க்கலாம் எனில் அந்தப் பருப்பும் இவரிடம் வேகாது. சங்கதத்தில் இருந்தே தமிழ் copy எனக் காரணமின்றிச் சொல்லிச் சண்டித் தனமும் செய்வார். ஒரு கண்ணிற் சுண்ணாம்பு; இன்னொரு கண்ணில் விளக்கெண்ணெய் காட்டத் தயங்கவே மாட்டார். அவ்வளவு தான்.

(இத்தனைக்கும் தமிழிற் பானைப்பொறிப்பு பொ.உ.மு.490 இக்கும் முன்னால் தொடங்கியது; இதையுஞ் சிலர் பூசி மெழுகிச் செயினத்தைத் துணைக்குக் கூப்பிடுவர். 

(செயின நூல்கள் எழுத்தானது பொ.உ.மு. 200 க்கு அப்புறமே. பார்க்க: The Jaina sources of the History of Ancient India - Jyotiprasad Jain. Munshirm Manoharlal publishers. அதுவரை அவரும் மனப்பாடமே செய்து வந்தார்.) 

செயினத் துறவிகளால் தமிழகத்தில் எழுத்துப் பரவியது என்பது உரையாசிரியரால் நெடுநாள் தமிழ்நாட்டில் பரப்பி விட்ட தொன்மம். உருப்படியான ஆதாரம் அதற்கில்லை. இத்தொன்மம் 20 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டியலுக்குஞ் சென்றது. அற்றுவிக (ஆசீவிக) இயலுமைகளை முற்ற ஒதுக்கி, எல்லாமே செயினம் என்பது ஒருவித முன்முடிவே.

(பேரா.க.நெடுஞ்செழியனும், குணாவும் விடாது வினவ, கல்வெட்டாளர் சற்றே இப்போது செவி மடுக்கிறார்.) என்னைக் கேட்டால், சங்ககாலக் கல்வெட்டுக்களின் மீது நமக்கு ஒரு மீளாய்வு தேவை. (செயினத் தாக்கத்தை யாருங் குறைக்கவில்லை.) 

இது வரை கிடைத்த தரவுகளின் அடிப்படையில் தமிழியே முதலானது. பெருமிக் கல்வெட்டுக்கள் பிந்தையனவே. தமிழியும், பெருமியும் (Brahmi) ஒன்று எனச் சொல்ல முற்படுவதும் ஒரு குழப்ப வாதமே. எல்லா நேரமும் வறட்டுத் தனம் பேசினால் எப்படி? சங்கதக் கல்வெட்டோ பொ.உ.150 இல் தான் எழுந்தது.)

இன்னொரு சிக்கலும் உண்டு. சங்கதக் காப்பிய மரபுகளையும், பரத நாட்டிய சாற்றத்தையும் முன்னோடியாக்கி, அதன் வழி தமிழ்த்திணைகள் எழுந்ததாய்ச் சொல்லி, 9 ஆம் நூற்றாண்டில் பிற்றைப் பாண்டியர் ஆணையில் 5/6 plagiarist புலவர் room போட்டு ஓர்ந்து, “மாமூலனார், கபிலர், பரணர்” என்று கற்பனையில் புலவர் பெயர் உருவாக்கி, பெருத்த ஏமாற்றுத் திட்டமொடு சங்கத நூல்களைப் படியெடுத்துச் சங்க நூல்களைப் படைத்ததாய் நெதர்லாந்துப் பேராசிரியர் எர்மன் தீக்கன் ஆதாரமில்லாது ‘ஞானங்’ கூறுவார். உடன் தமிழருந் தண்டனிட்டு “சாஷ்டாங்கமாய்க்” கீழே விழுவார். 

இதற்கு உறுதுணையாய், சங்கத ஆடி விழும்பமே (mirror பிம்பம்) தமிழ் என நம்மூர் இரா.நாகசாமியுங் கூறுவார். அவருக்குஞ் சிலர் “ததாஸ்து” போடுவார். இவற்றை மறுத்துச் சொன்னால், சற்றும் வாதச் சமம் அற்று (assymmetrical), ”தமிழ் ஓதிகளா? தாழ்வு மனத்தர், வெறியர்” எனும் உளத் தாக்கலும் அவ்வப்போது நடக்கும். 

”யார் வெறியர்?” என்பதில் அறிவு தடுமாற வைத்து விட்டால், அதிகார வருக்கம் ஆர்ப்பாட்டம் இடலாமே? சங்கதம்-தமிழ் அறிவுய்திகள் (Intelligentia) இடையே வாதாடுவது என்பது (அதன் பகுதி ’சங்கச்’சொல் பற்றிய வாதம்) இப்போது எல்லாம் சென்னையில் நடக்கும் நீர்க்குழாய்ச் சண்டைபோல் ஆகிவிட்டது. 

இன்னொரு வேடிக்கை தெரியுமோ? சங்க இலக்கியங்கள், தமிழுக்காக முன்னோர் படைத்த அகரமுதலிகள் அல்ல. அற்றைத் தமிழில் 100 சொற்கள் எனில் அத்தனையும் சங்க இலக்கியத்துள் வருமா, என்ன? (சங்க இலக்கியங்கள் பலவற்றைப் பலவாறாய் அழித்தோமே?) 

அவை சொல்லாத நிகழ்வுகள், நடைமுறைகள், சொல்லாட்சிகள் உண்டு. (காட்டாகச் சங்கிற்கு இணையான பிற சொற்களே சங்க இலக்கியத்தில் பெரிதும் பயின்றன. தொடக்க இலக்கியங்களில் ’சங்கு’ குறைந்தே வரும். ஆனாற் பேச்சு வழக்கிலோ சங்கே இன்று உள்ளது. மற்ற “இலக்கியச் சொற்களை” பேச்சு வழக்கில் நாம் பழகவே இல்லை. விந்தை அல்லவா?) பல சொற்கள் பிற்கால இலக்கியங்களிற் பதிவாகலாம். 

(பெயர், வினை, இடை, உரி என) எவற்றை பெய்ய வேண்டுமோ அவற்றைக் கொண்ட சங்கப்பாடல்களில் உள்ளடக்கம் பெரிதே தவிர, அவற்றின் சொற்றொகுப்பு அவ்வளவு பெரிதல்ல. தாமறிந்த சொற்களைக் கொணர்ந்து கொட்டுவதும் சங்கப் புலவரின் குறிக்கோள் அல்ல. 

பாடல் தொகுத்தோரும் அவற்றை நாடித் தொகுக்கவில்லை. (சங்க இலக்கியத்தில் ஒரு சொல் வந்துள்ளதா?- என்ற கேள்விக்கு விடை தரும் முகமாய், பேரா. பாண்டிய ராஜாவின் sangam concordance போல இன்று தான் சிலர் சொவ்வறை / software மூலஞ் செய்கிறார்.)

ஒரு சொல்லின் சங்க இலக்கியப் புழக்கத்தை ஏரணத்தோடு தமிழ்க் கிடுக்கியரிடம் (critics) நிறுவுவதிலுஞ் சிக்கலுண்டு. 

பொது இயலுமைகளைப் (possibilities) பார்க்க மாட்டார். குறிப்பிட்ட வட்டாரப் புழக்கம் பிடித்துக் கொண்டு, மற்றவற்றை ஒதுக்குவார். பேச்சையும், எழுத்தையும் பொருத்திக் காணார். ஒரு பொருள் குறிக்க 4 சொற்களிருந்தால் மரபு கருதி ஒரு சொல் பாடல்களில் திரும்புவதை “stock phrases" என்று கேலி செய்து ’மற்றவை கடன், குறிப்பாய்ப் பாகதம்’ என்பார். (சங்கதப் பேச்சு சிலரிடம் அருகிவிட்டது.) 

தமிழிலிருந்து பாகதம் ஏன் கடன் வாங்கக் கூடாது?- என்பதற்கு இவரிடம் விடை கிடையாது. வினைச்சொல் இருப்பின் அதன்வழி உருவான பெயர்ச் சொல்லை ஏற்கார். பெயர்ச் சொல்லிருப்பின் உள்ளிருக்கும் ஊற்று வினைச் சொல்லை ஏற்கார். இடை, உரிச்சொற்களுக்கும் இவரிடஞ் சிக்கலுண்டு. விகுதி -பெயர்த் தொடர்பு சொன்னால் அதை ஏற்க மறுப்பார். ஆண்பாற் பெயர் இருந்தால் பெண்பாற் பெயரில்லை என்பார். மொத்தத்தில் ”வேண்டாத மருமகள் கை பட்டாற் குற்றம், கால் பட்டாற் குற்றம்” என்றே நடக்கும்.

நான் விளையாட்டிற்குச் சொல்லவில்லை. ஒரு சமயம் ctamil மடற் குழுவில் பேரா. செல்வக்குமார் ”அச்சி” என்ற சொல் தமிழில் அம்மாவைக் குறிக்கும் என்றார். நானும் அதை ஏற்று ”தமிழ் மன்றம்” மடற்குழுவில் ”அத்தன்/அச்சன் இருந்தால் அத்தி/அச்சியென்று பெண்பாற் சொல் இருக்குமே?” என்றேன். ”ctamil" குழுவிலோ சிலர் ‘கிடையாது’ என்று சாதித்தார். 

அதே பொழுது புருஷவெனுஞ் சங்கத ஆண்பாற் சொல்லிற்கு புருஷியென்ற பெண்பாற் சொல்லைப் பொதுவானது என இவரே ”மின்தமிழ்” மடற்குழுவிற் கற்பித்துச் சொன்னார். (சங்கதம் நன்கு தெரிந்த இன்னொருத்தர் ”புருஷி” என்ற சொல் சங்கத இலக்கியத்துள் இல்லையென்றார்.) எங்கே ஒருவனுக்கு ஒருவளென்று தமிழில் சொல்லிப் பாருங்களேன்? 

புருஷியைப் பரிந்துரைத்தவரே ஏற்க மாட்டார். ’ஒருத்தி மட்டுமே’ என்று அடம் பிடிப்பார். தமிழ் இவருக்குத் தெரிந்ததல்லவா? அப்படியானால் ’ஒருத்தன்’ என்பது என்னாவது? மொத்தத்தில் தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால். இப்படித் தான் தமிழ்-சங்கத முன்னுரிமை வாதங்களும் நடக்கின்றன.  . 

2000 ஆண்டுகளுக்கு முன் பெரிதான பாகதமும் தமிழும் பல கலைச் சொற்களைச் சங்கதத்திற்கு அளித்துள்ளன. சொற்பிறப்பியல் பலருக்கும் தெரியாக் காரணத்தால், பல சங்கதச் சொற்களின் அடியில் தமிழ்வேர் இருப்பதை அறியமாட்டார். அவை வடபுலப் பூச்சுப் பெற்ற இருபிறப்பிகள் என்பதுந் தெரிவதில்லை. (காட்டாகத் தமிழ் உணவும், சங்கத அன்னமும் தமிழ் வேரால் தொடர்புற்றவை.) தெரியாததை ஏற்க உறுதி வேண்டும். 

அறிவியற் புலமை பெற்றதாலேயே அறிவியற் சொல்லின் வேர் எங்கெனச் சொல்ல முடியுமோ? அகழாய்வு போலமையும் சொற்பிறப்பியல் ஒரு தனித் துறை. பலகாலம் ஆழ்ந்தவரையும் கூட வழுக்கி விடும். புதுப் பழஞ்செய்திகள் தெரிகையில் இதுவரை கட்டிய கோட்டை சீட்டுக் கட்டாகும். 

அண்மையில் “தமிழிற் கையாளும் பிரபஞ்சம், சக்தி, அக்கினி, உஷ்ணம், பூமி, சூரியன், சந்திரன், வாயு, விஞ்ஞானம் போன்ற சொற்களின் வேர் வடமொழி” என ஒரு பெரியவர் அடம் பிடித்தார். 

ஆழ்ந்து பார்த்தால், 

பெருவியஞ்சம்> பிரபஞ்சம், 
சத்தி>சக்தி, 
அழனி>அக்னி, 
உருநம்> உஷ்ணம், 
பும்மி>பொம்மிக் கிடப்பது பூமி (புடவி போன்ற சொல்), 
சுள்>சுர்> சூரன்>சூர்யன் = சுள்ளென எரிப்பவன், 
சாந்து>சந்து>சந்தன்>சந்த்ரன் = குளிர்ச்சியானவன், 
வாயில் வருங் காற்று வாயு, 
ஞாதலில் வருவது ஞானம்” 

என்று புலப்படும். ”தமிழ் விஞ்ஞானம் கையாளும் இச்சொற்கள் தமிழ்வேர் கொண்டவை” என்பதும் அந்தப் பெரியவருக்குப் புரிந்திருக்கும். ஆனால் சங்கதத்தின் மேலுள்ள பற்று அவர் போன்றவரைச் சிந்திக்க விடாது செய்கிறது. . 

இதே போற் 
பூருவ நுண்ணாய்ந்தை > நூணாய்ஞ்சை> mimaamcai= investigation), 
உத்தர நுண்ணாய்ந்தை, 
சார்ங்கம் (> சார்ங்க்யம்> சாங்க்யம்> caankyam= எண்ணியம்), ஓகம்(> யோகம்> yoogam), 
யாயம்> ஞாயம்(> ஞ்யாயம்>ந்யாயம்>nyaayam), 
விதத்திகம் (> விதேத்திகம்> விதேஷிகம்> விஷேஷிகம்> visheeshikam), 

என்ற 6 தெரியனங்களைச் (தெரியன> தெரிசன> தர்சன> dharsana) சங்கதம் பெரிது என்போர் விதந்து பேசுவார். 

கொஞ்சம் பொறுமையும், நீண்டநேரமும், பரந்த மனப்பான்மையும் இருந்தால் இவற்றின் அடியிலுள்ள தமிழ்ப் புலங்களை விளக்க முடியும். அதற்கு மாறாய், எல்லாமே சங்கதம் என மூடுமனங் கொண்டால் அப்புறம் என் செய்வது? 

”சரி, எல்லாமே பின் தமிழா?”- என்று கேட்டால் "அதுவுமில்லை. (இப்படி நான் சொல்வதால் தனித்தமிழார் கவலுறுவார்.) இரண்டிற்கும் கொடுக்கல் வாங்கலுண்டு. சற்று ஆழக் கவனியுங்கள்” என்பேன். 

2 செம்மொழிகளில் சங்கதமே மேடு, தமிழ் பள்ளமெனும் ஓரப்பார்வை சரியில்லை. இரண்டிற்கும் இடையே ஒரு சம நிலம் வேண்டும். 

”தமிழ்ச் சொற்பிறப்பை பலரும் பல விதங் காட்டுகிறாரே? இவற்றில் நெல்லெது? பதரெது? ஏரண முறை எது?” என நண்பர் நா.கண்ணன் ஒரு முறை கேட்டார். எளிதில் மறுக்கக் கூடிய உலகு தழுவிய உன்னிப்புச் சொற்பிறப்பு (folk etymology), ’கதா காலாட்சேபப் பௌராணிகர்’ போல் சொற்களைப் பொருளிலா ஒற்றசைகளாய்ப் பிரித்துப் பொருள் சொல்லல் ஆகியனவற்றைக் கண்டு அரண்டு விட்டார் போலும். 

நெல்லின் இறுகிய பால்பிடிப்பைக் கண்டு கொள்ள வெறுஞ் சொல்லொலிப்புப் பற்றாது, மரபு, வரலாறு, இலக்கியம், இலக்கணம், ஏரணமெனப் பல்வேறு கோணங்களில் சொல்லை அலசவேண்டும். ஆழப் பார்த்தால், சொற்பிறப்பு ஆய்விற்கு செயினத்திற் சொல்வது போல் ’அநேகாந்தப்’ பன்முனைப் பார்வை கட்டாயந் தேவை. இவ்வளவு நீண்ட பின்புலப் புரிதலோடு ’சங்கத்திற்கு’ வருவோம்.

அன்புடன்,
இராம.கி.

சங்கம் - 1

மொழிவளர்ச்சி என்பது, சிக்கே இல்லாத ஒரு நூற்கண்டை நீள வலிப்பது போல் எண்ணுற்று (quantify) நிகழ்வதில்லை. கால மாற்றத்தில் மொழி பேசுவோரின் எண்ணிக்கை கூடக்கூட ஒரு மொழியின் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பனவற்றில் மாற்றம் ஏற்படலாம். மக்கள் வாழும் ஓரிடத்தின் விதப்பு (specialized) வழக்கு இன்னோரிடத்துப் புரியாது போகலாம். ஒரு சொல்-பல பொருள், பல சொல்-ஒரு பொருள் தன்மை என்பது வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு விதமாய் மிகுத்து வரலாம். 

இதுவரை இல்லாத பொருட்பாடுகள் கூட ஒரு சொல்லிற்கு ஏற்படலாம். ('நாற்ற'ப்பொருள் என்பது இற்றைத் தமிழில் மாறியுள்ளதே?) மொழி வளர்ச்சி தெரியாவிடில் சொல் தோற்றம் எப்படியென முடிவு செய்வதில் முரண்பாடு வரலாம். மொழித் தொனியும் இடத்திற்கிடம் மாறலாம் (ஈழம், தென்பாண்டி, கொங்கு, வட தமிழகத் தொனிகள் என்பன வேறானவை.) மொழிக் கிளைகளின் இத்தகைய இயல்பு வேறுபாட்டைத் தான் இயல்மொழிக் கிளைப்பென்றும் முரணியக்க மொழிவளர்ச்சி (dialectic language development) என்றுஞ் சொல்கிறார்.

20ஆம் நூற்றாண்டில் எழுந்த ”சங்கவிலக்கியச்” சொற்கூட்டின் தோற்றம் பற்றி சில மாதங்கள் முன்னால் மின்தமிழ்க் குழுவில் ஓர் உரையாட்டு எழுந்தது. சங்க இலக்கியம் என்ற சொற்கூட்டை முதலில் யார் சொன்னார் என்பது ஒரு விதயமெனில் ”சங்கச்” சொல்லிற்கு மரபுப் பின்புலத்தில் தமிழ் வேரைச் சுட்டுவது இன்னொரு விதயம். 

தமிழ்போலும் மொழிகளில் ஒரு சொல்லின் பொருட்பாடுகள் ஒன்றில் இருந்து இன்னொன்று என்றபடி வெவ்வேறு காலங்களில் சரம்போல் எழும். (சில பொருட்பாடுகள் ஒரு சரத்தில் விலகித் தோன்றின், ஒன்றிற்கு மேலும் சரங்கள் உண்டென்றோ, அன்றேல் செய்யப்படும் அலசலில் தவறென்றோ, பொருள் ஆகும். "சங்கப்" பின்புலம் தெரிந்து கொள்ளுமுன் தமிழ், பாகத, சங்கத மொழிகளின் ஊடேவரும் இடையாற்றத்தைத் தெரிந்து கொள்வது தேவை ஆனது.)

தமிழிற் பயனுறும் சில சொற்களின் மேலோட்ட வடமொழித் தோற்றங் கண்டு, அவற்றின் வேர் சங்கதத்தில் உள்ளதெனத் தமிழரிற் பலரும் கருதுகிறார். இக் கருதுகோளின் பின்னுள்ள தரகுவருக்கப் புரிதல், தமிழர் பண்பாட்டுத் தளத்தை அவ்வளவு ஆழமாய் ஆள்கிறது. ”இது மெய்யியலா? அறிவார்ந்த உரையாடலா? பழைய அறிவியற் கருத்தா? சங்கதத்திலிருந்தே மாநிலங்களுக்குப் போகும்” என இந்தியா எங்கணும் ஒரு கற்பிதம் அழுத்தமாய்ச் சொல்லப் படுகிறது. 

இதை மறுப்போர் குமுகாயத்தில் ஒதுக்கப் படுகிறார். மாநில மொழிகளுக்கும், சங்கதத்திற்குமான இரு வழிப் போக்குவரத்தைப் பலரும் உணர்வதில்லை. இத்தனைக்கும் பழங்கலைஞர், தொழில்முனைவோர் என்போர் அவரவர் மாநில மொழிகளிலேயே தத்தம் வித்தைகளைத் தம் மாணவர்க்குச் சொல்லிக் கொடுத்தார். பல கலைச்சொற்களின் வேர்கள் நம் வட்டார மொழிகளிலே தாம் உள்ளன. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பரிமாற்ற மொழியாய் (exchange language) இருந்த சங்கதம் இவற்றையே இந்திய வட்டாரங்களில் இருந்த படித்த மக்களிடையே பரப்பியது. இருப்பினும் பல சொற்களின் ஊற்று, சங்கதம்  என்றே சொல்லப் படுகிறது. 

ஒரு முறை மின்தமிழ் மடற்குழுவில் “வடமொழி என்பது சங்கதமா?” என்ற கேள்வியை திரு.பானுகுமார் கேட்டு குழுமக் கருத்தறிய விழைந்தார். அவர் கேள்வி கீழே:
----------------------------------------
தொல்காப்பியத்தில் “வடமொழி” என்பதற்கு சங்கதம் (சமஸ்கிருதம்) என்றே பல்வேறு உரையாசிரியர் எழுதிச் சென்றுள்ளார். ஆனாலும் சில அறிஞர் (குறிப்பாக, கார்த்திகேசு சிவத்தம்பி, தெ.பொ.மீ) அதைப் பிராகிருதம் என்றே பொருள் கொள்வார். http://tamilvu.org/courses/degree/a051/a0514/html/a051452.htm. 

”தொல்காப்பியர் காலத்திருந்தே தமிழோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்ட மொழி சமஸ்கிருதம் எனப்படும் வடமொழியாகும். தொல்காப்பியர் வடக்கிலுள்ள மொழி பற்றிப் பொதுவாக வடசொல் என்றே குறிப்பிடுவார். அதனால் இச்சொல் பிராகிருதம், பாலி ஆகிய 2 மொழிகளையும் குறிப்பதாக வேண்டும்” என்று தெ.பொ.மீ. குறிப்பிடுவார். 

1. உண்மையில் வடமொழி யென்பது சங்கதம் மட்டுமா? அல்லது பாகதமுஞ் சேர்த்துப் பொருள் கொள்ள வேண்டுமா? 

2. அப்படிச் சேர்த்துப் பொருள்கொள்ள வேண்டுமெனில், நமக்குக் கிடைத்த கல்வெட்டுகளின் படி தமிழுக்கும், பாகத்திற்கும் மட்டுமே கி.மு காலத்தியக் கல்வெட்டுக்கள் இருக்கின்றன. சங்கதக் கல்வெட்டோ,  மிகப் பிந்திய காலத்தில் எழுந்தது. தொல்காப்பியம் எழுந்த காலம் கி.மு. என்றால், அக்காலத்தில் சங்கதக் கல்வெட்டுக்கள் என்பன கிட்டவே இல்லை. அதிகாரப் பூர்வ சங்கதக் கல்வெட்டின் காலம் கி.பி.150ஆம் நூற்றாண்டு. எழுத்தில்லாத ஒரு மொழிக்கு இலக்கணம் படைக்க முடியுமா?"
-------------------------------------
பலருக்கும் இக்கேள்வி எழலாம். சங்கதக் கட்சியார் பலருங் கவனமாய், பாகதச் சங்கத ஊடாட்டத்தை ஒதுக்கி, ”சங்கதம் தாய், பாகதம் மகள்” எனத் தலைகீழ்ப் பாடமே படிப்பார். பொ.உ.மு. 1000-200 இல், குறிப்பாய், சனபதக் காலத்தில் (பொ.உ.மு.1000-600), வடக்கே பாகதமே பரந்தது. 

பாகதம் என்ற சொல்லின் பொருளை முதலில் அறிவோம். கத்துவதைத் தமிழில் கத்தம்>கதம் என்று சொல்லலாம். ஈழப் பேச்சில் கதைத்தல் என்பது, பேசுதலைக் குறிக்கும். பா+கதம்= பரவற் பேச்சு. இதைப் பெருகதம் (prakrit), மாகதம்/ மாகதி என்றுஞ் சொல்வார். தமிழைத் தனித்துச் சொல்வதில் எத்தனை அருகதையுண்டோ, அதே அருகதை பாகதத்திற்கும் உண்டு. 

அகண்ட மகதப் பேரரசின் கிளைவழக்குக் கலவையாய் (முகலாயப் பேரரசில் எழுந்த பிற்கால இந்துத்தானி போல்) சம்+கதம் என்ற மொழி  எழுந்தது. சங்கதத்தின் திருந்திய மொழி செங்கதம் (செம்+கதம்). இந்துத்தானியில் இருந்து எழுந்த சர்க்காரி இந்தி போல் இதைக் கருதலாம். சங்கதமும் செங்கதமும் ஒரே மொழியின் 2 வேறு வழக்குகள். இன்றோ பேச்சு மொழி இன்றி, ஏட்டுச் செங்கதத்தையே சங்கதமாய்க் கொள்கிறார். அதிற்றான் குழப்பமே தொடங்குகிறது! (பேச்சுத் தமிழின்றிச் செந்தமிழ் மட்டும் எஞ்சினால் எப்படி? - என ஓர்ந்து பாருங்கள்.)

ஒரு மொழிக் கிளைகள், கால இடைவெளியால், வட்டாரப் போக்குவரத்து இல்லாததால், நுட்பியல் பரிமாறாததால், பொருளியல், வணிக, ஆட்சித் தாக்கங்களால், அரசியல் குமுக நடைமுறையால், தனித் தனி மொழிகளாய் எழுந்தன. 2000/3000 ஆண்டில் தமிழுக்கும் அது நடந்தது. அருவத் தமிழ் தெலுங்காகி. கொங்கணத் தமிழ் துளுவாகி. கங்கர் தமிழ் கன்னடமாகி, சேரலத் தமிழ் மலையாளமாகி, எழுத்து/சொல்/ பொருளில் சிச்சிறிதாய் மாறிப் பங்காளி மொழிகளாயின. 

”இவ்விடங்களிற் புழங்கிய தமிழிலிருந்தே, இவை தோன்றின” என்பதை மறுத்து, நொதுமலாய்ச் (neutral) சில ஆய்வாளர் முந்து / தொடக்கத் திராவிடம் (proto-/early Dravidian) என்று சொல்வார். நான் அப்படிச் செய்யேன். தயங்காது திராவிடத்தைத் தமிழியம் என்பேன். நான் அறிந்தவரை முந்து திராவிடம் 95/98 % தமிழே. இதை ஏற்க மறுப்போரே முந்து திராவிடக் கதை படிப்பார். [அதே பொழுது, அறிவுப்புலப் போட்டியில், கல்விச்சாலை அரசியலால் (academic politics) எழும் ’முந்து திராவிடத்தை’ நான் புரிந்து கொள்கிறேன். மொழித்தொடர்ச்சி, விதப்பு, நுணுக்கம் போன்றவற்றில் நமக்கு எவ்வளவு உரிமையுண்டோ, அதே உரிமை பழந்தமிழ்ச் சேய்களான மற்ற திராவிட மொழிகளுக்கும் உண்டு.]     

பாகதத்திலும் பாஷை (இதுவும் ’பேச்சு’ம் ஒன்றே; பொ.உ.மு.1500-1200 களில், வேத மொழி, வழக்கு மொழிப் பங்களிப்பில், இற்றை இலாகூர் சுற்றி சந்தசு/பாஷை மொழி எழுந்தது. பொ.உ.மு.500 இல் இதற்கே பாணினி இலக்கணஞ் செய்தான்), 

பாததம் என்பது பல்வேறு கிளைகளைக் கொண்டது.  இதில் மாகதி என்பது 2500 ஆண்டுகளுக்கு முன் பிம்பிசாரன் தொடங்கி நந்தர், மோரியர், சுங்கர், கனகர் என மிகப் பலரும் புரந்த, பேச்சுமொழியாகும். தேரவாத இலக்கியப் பாலி இதில் இருந்து கிளைத்தது. மகாயானமோ பொ.உ.500களில் சங்கதங் கலந்த பாலியில் தொடங்கி முடிவில் சங்கதத்திற்கே வந்து சேர்ந்தது), 

அடுத்தது அருத்தமாகதி (மகததின் வடக்கே வச்சிரம் புழங்கிய, மகாவீரர் பேசிய, மொழி. திகம்பரச் செயினம் இன்றும் இதைக் காப்பாற்றும். சுவேதாம்பரம் சங்கதங் கலந்த அர்த்தமாகதிக்கு மாறியது), 

இதற்கும் அடுத்தது மராட்டி என்ற பெயர் கொள்ளூம் (படித்தானத்தின்-Paithan அருகில் இருந்த மொழி.), 

அங்க மொழி (வங்கத்தின் முந்தைமொழி), 

கூர்ச்சரி (குசராத்தியின் முந்தை வடிவம்), 

சூரசேனி [வடமதுரையின் பேச்சு மொழி. இதன் கீழ்வந்த காடிபோலியின் (அங்காடிப் பேச்சின்) திரிந்த வடிவமே இன்று அதிகாரத்தில் ஈல்ல நடுவணரசின் முற்றாளுமையாற் பரவும் இந்தி, 

மைதிலி (பீகார் மிதிலையிற் பரவிய பேச்சு. இந்தித் தாக்கத்தில் இது இன்று குன்றியது), 

அவந்தி, காந்தாரி போன்ற வழக்குகளும் வடக்கேயுண்டு. 

மேலே சொன்னவற்றைத் தனி மொழிகள் என்று சொல்லவிடாத அளவிற்கு ஆங்காங்கே மொழி ஏமாற்றும் இன்று தீவிரமாய் நடக்கிறது.

2500 ஆண்டுகளுக்கு முன் வடக்கே பாகதர், தெற்கே தமிழரெனக் கிடந்த நாவலந் தீவில், விண்டம்> விந்தம்> விந்தியம் வரையில் தமிழாட்சியிருந்தது. (விள்ளல்> விண்டல் = பிரித்தல். விண்ட மலை தமிழ் வரலாற்றோடு தொடர்பு கொண்டது. அதுவே வெள்ங்+கடம்> வெங்கடம்> வேங்கடம் (வெள்+து= வெட்டு; கடம்=மலை) என்றானது. (வேங்கடத்தையே வேங்குன்றம்> வேகுன்றம்> வைகுண்டம் என்று தெலுங்கின் வழி வைகுண்டம் ஆக்கினார். 

விண்டம், வேங்கடத்தின் பழைய அடையாளங்களை வெங்காலூர்க் குணாவின் “தமிழரின் தொன்மை” என்ற பொத்தக வழி அறியலாம். அந்நூலின் எல்லா வரைவுகளையும் நான் ஒப்புக் கொள்ளாவிடினும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் என்றே சொல்வேன். 

இதையே ”வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்” என்று தொல்காப்பியர் காலப் பனம்பாரனார் பாயிரங் குறிக்கும். அப்புறம் என்ன முந்து திராவிடம்? ஆழ்ந்து நோக்கின், தமிழாட்சி என்பது மூவேந்தர் எல்லைகளை விடவும் பெரியது. (இன்றுந் தமிழின் ஆட்சியெல்லை, தமிழ் நாட்டை விடப் பெரியது.)

பழ இலக்கியத்தை அலசின், விண்டத்தின் தெற்கு நாடுகள் பற்றி வடவருக்கு நெடுங்காலந் தெரியாதது புரியும். பொ.உ.மு.500-200களில் மோரியரும், பொ.உ.மு. 230-பொ.உ..220 களில் (இற்றை ஔரங்காபாதருகே கோதாவரிப் படித்தானத்தில் எல்லையதிகாரிகளாய் அரசாண்ட) நூற்றுவர் கன்னருமே விண்டப் பிரிப்பை இந்தத் துணைக்கண்டத்தில் முதலில் உடைத்தார். 

’மொழி பெயர் தேயமெ’ன்ற மாமூலனாரின் சங்கச் சொற்றொடர் மூலமும், கன்னரின் நாணயங்களின்  இரு புறங்களிலும் இரு மொழிகளில் அச்சடித்ததாலும், கன்னராட்சியில் தமிழும் பாகதமும் ஆண்டது புரிபடும். இந்திய வரலாற்றில் வடபுல/ தென்புல நாகரிக, பண்பாட்டு ஊடாட்டம் அறியக் கன்னராட்சியை உறுதியாக ஆய வேண்டும். இதையறியாத தனித்தமிழ் ஆர்வலர் பலரும், நூற்றுவர் கன்னரைக் குறைத்துப் பேசுவார். “வடுகரெனும்” கண்ணோட்டம் நம் கண்ணை மறைத்துவிடக் கூடாது.

தாய்வழி உறவுற்ற அவர் நாட்டில் அகநானூறு போலவே ’அகம் எழுநூறு (கஹ சத்தசை; ’கதா சத்தசை’ என்றுஞ் சொல்வர்.)’ என்ற நூலெழுந்தது. தமிழரிடை பரவிய பெருங்கதை (உஞ்சை உதயணன் கதை) கன்னரவையில் எழுந்தது. வேதநெறி/மறுப்பு நெறிகளை ஒருசேரப் புரந்ததும் இவர் கல்வெட்டுக்களிற் புலப்படும். 

இவர் நாட்டின் வழியே தான் செயினமும், புத்தமும் தெற்கில் நுழைந்தன. தென்னக அற்றுவிகமும் (ஆசீவிகம்) எதிர்த்திசையில் வடக்கே சென்றது. தமிழகம் போல் சமயப் பொறை கன்னர் நாட்டிலும் இருந்தது. மகதம் போகும் தென்னகச் சாத்துகள் படித்தானத்தின் வழியே சென்றன. 

தவிரக் கன்னர், சேரரின் மேலைத் துறைமுகங்கள் மேலை வணிகத்திற்கும், சோழ, பாண்டிய, கலிங்க, மகதரின் கீழைத் துறைமுகங்கள் தென்கிழக்காசிய வணிகத்திற்கும் கால்கோலின. பல்வேறு ஒற்றுமைகள் கொண்ட கன்னருக்கும் தமிழர்க்குமான நட்பைச் சிலப்பதிகாரம் பேசும். (இச்சான்றுகளை மறுத்துத் தமிழர் வரலாற்றைக் குலைக்க முற்படுவோரே சிலப்பதிகாரத்தை ஒரு புதினம் என்பார். கூடவே கொங்கு வஞ்சியை குடவஞ்சியோடு குழப்புவார்)..

கன்னர் ஆட்சியின் தென்கிழக்கிற் பாகதமும், அருவத் தமிழும் ஊடிப் பிறந்தது பழந் தமிழருக்கு வடுகாயும், பாகதர்க்குத் தெலுகு/தெனுகாயும் ஆனது; [தெல்/தென்/தெற்கு) இதைத் தக்கணம் என்றுஞ் சொல்வர். ’திரிகலிங்கின்’ திரிவு ’தெலுங்கு’ என்பதற்கு ஆதாரமில்லை.] 

வடுகு/தெலுகுப் பெயர் விளையாட்டே மொழியுண்மையைக் காட்டும். கன்னர், பிந்தைச் சளுக்கர் தொடர்பால், ஒரு காலத்தில் கன்னடமும் வடுகெனப் பட்டது. தமிழ்ப் பலுக்கின் படி படகரும் வடகரே. சிலம்பிற் பயிலும் ’கொடுங் கருநாடர்’ என்பது, ”கொடுகிய (தமிழைப்) பேசும் கருநாடரைக்” குறித்தது. [கொடுகு = வளைவு, திரிவு. எதிலிருந்து கொடுகியது?- என்று கேட்டால், பொ.உ.மு.80களில் உருவான பழங் கன்னடத்தின் தொடக்கம் புரியும். இப்படிக் கேள்வி கேட்க நாம் தயங்குகிறோம்.] 

ஒரு காலத்தில் மலையாளிகள் தமிழ்த் தொன்மை பற்றிப் பேசத் தயங்குவார். இன்றோ அவர் பெரிதும் மாறிவிட்டார். சங்கப் பின்புலத்தை அவருஞ் சொல்கிறார். 

நாம் கேள்வி கேட்கக் கேள்வி கேட்கக் கன்னடரும் சங்கப் பின்புலத்தை ஏற்றுக் கொள்வார். இந்தியெதிர்ப்பை இப்பொழுது புரிந்துகொள்கிறாரே?

வரலாற்றோட்டத்தில், தெற்கே தமிழர் சுருங்க, தெலுங்கரும்/கன்னடரும் விரிய, வேங்கடப் பொருள் சிச்சிறிதாய் மாறியது. முதற் பொருளான விண்ட மலையைக் குறியாது, வடபெண்ணையை ஒட்டி வெய்யில் கொளுத்தும் இராயல சீமையை இரண்டாம் பொருளாய்க் குறிக்கத் தொடங்கியது. வேம்+ கடம் = வேங்கடம் = வெய்கடம் என்பார் ந.சுப்புரெட்டியார். 

இன்று இதுவும் மாறி மூன்றாம் பொருளில் திருமலையை வேங்கடம் என்கிறார். ஏற்கனவே கடத்திற்கு மலைப்பொருள் உண்டெனில் (காடு, பாலைநில வழி என்ற பொருள்களும் உண்டு) வேங்கடாசலம் என இன்னோர் அசலம் (மலை) எப்படி வந்தது? - என்று நாம் கேள்வி கேட்பதில்லை.  

இந்த.அசலச் சேர்ப்பே, திரு மலை = வேங்கடம் என்பதைப் பிந்தைப் புரிதலாய்க் காட்டும். (விண்ட மலையில் விண்டு கோயில் உண்டா?- என்பது ஆய வேண்டிய கேள்வி.) தமிழக வடகிழக்கின் உள்ளதோர் ஓர் ஓரமலை சங்க காலத்தில் எப்படி நமக்கு முழுதான  வடக்கெல்லை ஆகும்? காலங் காலமாய்த் தமிழ் நிலமும், சிந்தனையுஞ் சுருங்கிச் சுருங்கிக் காலப் பிறழ்ச்சியில் பொருட் பிறழ்ச்சியும் ஆகி இதுவே உண்மையென எல்லோரும் மயங்கிக் கிடக்கிறோம்.

சங்க காலத்தில் கடற் பக்க ஆந்திரம் என்பது ஒரு பெருங்காடு. (அதனுள் சாலை போட்டு வடக்கே போனது, பேரரசுச்சோழர் காலத்தில் தான்.) சங்க காலத்தில் வடக்கு ஏகிய சாத்துகள் எல்லாம் இராயலசீமையின் வேங்கடங் கடந்து படித்தான (>பைத்தான்) வழி, தக்கணப் பாதையில் மகதம் போயின. 

சங்க நூல்களில் நூற்றிற்குப் பாதி பாலைப் பாட்டுகளே. (தக்கண, உத்தரப் பாதைகள் அறியாது இந்தியத் தொன்மை புரியாது. தமிழ் ஆய்வும் விளங்காது. தமிழறிஞர் என்று இதை உணர்வாரோ அன்றே தான் முன் நகரலாம். இன்றேல் குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்ட வேண்டியது தான்.) 

பாலை தாண்டி வடக்கே மகதம் போகாது, தென்கிழக்கு, மேற்கு நாடுகளுடன் கடல் வாணிகஞ் செய்யாது, தமிழகம் வளர வில்லை, நம் ’அகமும் புறமும்’ ஆழ்ந்து சொல்வதை எப்போது புரிந்து கொள்வோம்.? பொருளியல் புரியாது வரலாறு புரியுமா?

பல்வேறு கிளைமொழிகள் கலந்து பாணினிக்கு அப்புறம் கி.மு.300களில் வடமேற்கின் பாஷாவை (சந்தஸ்) அடிப்படையாக்கிச் சங்கதம் (கலப்புமொழி) எனும் எழுதாக் கிளவியைப் படிப்பாளிகள் உருவாக்கினர். 

பாணினி சங்கதப் பெயரை எங்கும் பகரவில்லை. பிற்காலத்தில், குப்தரின் ஆட்சிமொழியாகிச் சங்கதம் செங்கதமானது. குப்தவரசு பெற்ற அகண்ட வளர்ச்சியில் வட்டார இலக்கியங்கள் எல்லாம் கலப்பு மொழியான சங்கதத்துள் பெயர்க்கப் பட்டன. (பஞ்சதந்திரம், பெருங்கதை போன்றவை குப்தர் காலத்தில் சங்கதத்துள் வந்த மொழிபெயர்ப்புகளே.) 

வட்டார மொழிகளைச் சிச்சிறிதாய்ச் சங்கத மொழி விழுங்கிப் பரவியது. காளிதாசன் முதல் பல்வேறு புலவர் குப்தர் அவையிற் சங்கத இலக்கியம் படைத்தார். (குப்தரும், ஓரளவு பல்லவரும் இல்லாது போயிருந்தால் இன்று சங்கதம் இல்லை.) பொ.உ.150 களில் பாகத எழுத்தால் (பெருமி; brahmi) இதை எழுதினார். பொ.உ.9-10 ஆம் நூற்றாண்டில் பெருமி என்ற எழுத்து நகரியானது. வெவ்வேறு அரசுகளின் எழுத்து முறைகள் வெவ்வேறு காலங்களில் இதுபோல் தோன்றின.

சாதவாகனரின் கீழ் அதிகாரிகளான பல்லவர் இராயல சீமையில் இருந்து இறங்கி வந்து வடதமிழக ஆட்சியைப் பிடித்துக் கொண்டார். இவர் ஆட்சியில் பாகதம் கொஞ்சங் கொஞ்சமாய் வெளியேறிச் சங்கதப் புழக்கங் கூடியது. 

தமிழியிலிருந்து கிரந்தத்தை உருவாக்கிச் சங்கதம் எழுதினார். கிரந்தம், நகரி எழுத்திற்கும் முந்தியது. இவ்வரலாற்றைக் கூடத் தமிழர் மறந்தார். கிரந்த ஆர்வலரும் பேசக் காணோம். நம் உரிமைகளை ஒரு பக்கம் விட்டுக் கொடுத்து, இன்னொரு பக்கம் ”கிரந்தத்திலிருந்து தமிழெழுத்துப் பிறந்தது” என்று தலைகீழ்ப்பாடம் ஓதுவார். 

வேறொன்றும் இல்லை இருக்க இடங் கொடுத்தாற் படுக்க இடங் கேட்பது வாடிக்கை. வெற்றி பெற்றோர் வரலாறு எழுதுவது போல் எல்லாவற்றிற்கும் சங்கதமே ஊற்றென இன்று மாற்றி உரைக்கிறார். (மீண்டும் குப்தர் காலத்தை இந்தியா எங்கும் கொண்டு வர இந்துத்துவர் துடிக்கிறார்.)

வட மொழி என்பது இடத்தை வைத்துப் பெயரிட்ட சொல். வட புலத்தின் தொலைவில் உள்ள நமக்கு அது ”வடக்கிருந்த/இருக்கும் மொழி” அவ்வளவு தான். குப்தர் காலத்தில் மட்டுமே இது சங்கதம். சங்க காலத்தில் இது பெரிதும் பாகதம்; 

படித்தோர் வழிச் சிறுபான்மையிற் பாஷா/சந்தஸ். வரலாற்றுப் பொருள் காலத்திற்கேற்ப மாறியது. நாளா வட்டத்தில் பல்லவர் தாக்கத்தில் பாகதப் புரிதல் குறைந்தது. பின் ஏற்பட்ட கருத்துமாற்றத்தைச் சங்ககாலத்திற் கொண்டு போய் வலிந்து பொருள் கொள்வது தவறு. அக்காலத் தென்னக மொழி, தமிழே. இன்றுள்ள மற்ற தென்மொழிகள் அக்கால வட்டாரக் கிளை மொழிகள். ஆகவே இருந்தன. (இன்றோ, வெறும் தென்மொழியெனத் தமிழைப் பொதுப்படச் சொல்வது தவறு.) 

அன்புடன்,
இராம.கி.

Monday, August 06, 2018

Scutoid


அண்மையில் scutoid என்றொரு புது வடிவம் பற்றி ஓர் இடுகை தமிழ்மன்றம் மடற்குழுவில் வந்தது. அதன்பின், திண்ம வடிவியலின் பல செய்திகளை இணையத்தில் அலசியபோது ஆர்வுமூட்டும் பல கலைச்சொற்கள் என் நினைவிற்கு வந்தன. அவற்றை இங்கே தொகுக்கிறேன். ஆர்வமுள்ளோர் பயனுறுத்துக.

பல்வேறு பிளேட்டோனியத் திண்மங்களைக் குறிக்கையில், tetrahedron, cube, octahedron (8), Dodecahedron (12), icosahedron (20) என்று பல திண்மங்களைக் காட்டுவார். இவற்றில் hedron க்கு இணையான தமிழ்ச்சொல்லை இதுவரை கண்டேனில்லை. பெரும்பாலோர் இதை முகமென்றே சொல்லிவருகிறார். இதுவும் ஒருவகையில் சரி தான். (அதைக் கீழே விளக்குவேன்) இருப்பினும், இதன் கிரேக்க அடிப்படைவேறு. 

tetrahedron (n.) என்பதை ஆங்கிலச் சொற்பிறப்பு அகர முதலியில் "triangular pyramid, solid figure contained by four triangular surfaces," 1560s, from Late Greek tetraedron, noun use of neuter of tetraedros (adj.) "four-sided," from tetra- "four" (from PIE root *kwetwer- "four") + hedra "seat, base, chair, face of a geometric solid," from PIE root *sed- (1) "to sit." என்று சொல்வர்.

”குல்> குள்> குந்து” என்பது இன்றும் வட தமிழகத்தில் ”உட்கார்” தான். நெல்லை வட்டத்தில் “புட்டம்” நிலத்திற் படியுமாறு உட்கார்தல். புட்டத்திற்கே குதமென்ற சொல்லுண்டு. குதத்தின் இன்னொரு விகாரமாய்க் குண்டி என்ற சொல்லும் உண்டு, 

வில்லினடியில் இருப்பது குதை. 
குத்தகை = இன்னொருவர் இடத்தில் உட்கார்ந்து பயிர்செய்தல். lease. குந்தவைத்தல்> குத்தவைத்தல். 
குந்து= உட்காருகை. squat என்பது நம் ’குத்திற்கு’ச் சமம். 

’குத’த்தில் ரகரத்தை உட்சேர்த்தால் குத்ரம்>குத்ரன் என்பது வந்துவிடும். hedron இணைச்சொல் கிடைத்ததா? 

நாம் முகமென்பதை அவர் குதமென்றார். அவ்வளவுதான். நாம் தரையில் உட்காரும் திண்மத்தின் மேற்பட்டையைப் பார்த்துச் சொல்கிறோம். கிரேக்கர் திண்மத்திற்கும் நிலத்திற்கும் உண்டாகும் தொடுகை குதக் கீழ்ப்பட்டையில் வருவதால் அவர் அப்படிச் சொல்கிறார். 

அறிவியற்படி நிலத்தொடுகையே திண்மங்களுக்கு stability கொடுக்கிறதாம். வேறுபாடு இவ்வளவே. அவை நாகரிகம், பண்பாடு கருதிக் குதம் வேண்டாம் எனில் குந்தமென்று கொள்ளலாம். எந்தச் சிக்கலும் இல்லை. 

tetrahedron (4) நாலக்குந்தம், (வேண்டுமெனில் நாலமுகம்.) 
hexahedron (6) = அறுகக்குந்தம், அறுகமுகம். 
octahedron (8) = எண்ணக்குந்தம் 
Dodecahedron (12) = பன்னீரக்குந்தம். 
icosahedron (20) = இருபதிற்குந்தம்
hexahedron (6) = அறுகக்குந்தம், அறுகமுகம் 

அறுகமுகம் என்பதற்கு cube (6) எனுஞ் சிறப்புப் பெயருண்டு. தமிழில் கன சதுரமென்போம். கனம், சதுரம் இரண்டுமே தமிழ் தான். (இரண்டையும் ஆய்ந்து தெரியாதோர்  சங்கதம் என்பார்.) ஆனால் ’கன’ என்பதில் தடுமாறி volume, weight ஆகிய இரண்டிற்கும் ஒரே சொல்லைப் பயன்படுத்துகிறோம். 

இச்சிக்கலை ஓர்ந்து இப்போதெல்லாம் கன என்பதை எடையோடு தொடர்புறுத்தியே  பயில்கிறேன். volume-இற்கு வெள்ளம், பருமன் என்றவற்றையே பயனுறுத்துகிறேன். 

square prism = சதுரப் பட்டகம் என்றுஞ் சொல்லலாம் (பட்டகத்தைக் கீழே விளக்குவேன்.) 

ஆங்கிலத்தில் இதைக் cube (n.) 1550s, "regular geometric body with six square faces," also "product obtained by multiplying the square of a quantity by the quantity itself," from Middle French cube (13c.) and directly from Latin cubus, from Greek kybos "a six-sided die," used metaphorically of dice-like blocks of any sort, also "cake; piece of salted fish; vertebra," of uncertain origin. Beekes points out that "words for dice are often loans" and that "the Lydians claimed to have invented the game" of kybos. என்பார்.

உலகத்திற்கே சூதாடச் சொல்லிக் கொடுத்தது பெரும்பாலும் இந்தியா. குறிப்பாகத் தமிழகம் ஆகலாம். தாயக்கட்டை என்பது வருமுன் சோழிகளை/கவறுகளைத் (cowries) தூக்கிப் போட்டுச் சூதாடினார். 

பகடை எப்படி வந்தென எண்ணுகிறீர்கள்? பல்கட்டை>பகட்டை>பகடை. சோழியைத் தூக்கிப் போடும் போது 2 விதமாய் விழலாம்.

1. குப்புறக் கவிழல் 
2. மல்லாக்க விழல். 

மல்லாக்க விழும் சோழியின் மதிப்பு சுழி. குப்புற விழும் சோழியின் மதிப்பு ஒன்று. பன்னிரண்டு சோழிகளை உருட்டையில், எத்தனை சோழி குப்புற விழுகிறதென்று பார்ப்போம். கவறென்ற சொல்லே எத்தனை சோழி கவ்வுற்றதெனக் கணக்குப் போடுவது தான். 

குவ்வு>கவ்வு, குவை>கவை என்றும் திரியும். சோழிக்கு மாறாய்ச் சதுரப் பட்டகம் பயனுறுத்துகையில் ஒவ்வொரு கட்டையையும் கவை என்றே சொன்னார் போலும். 2 கவைகளை உருட்டிப்போட்டு மேலே தெரியும் முக மதிப்பை எடுத்துக்கொண்டார். குவை/கவை, வ/ப போலியில் குபையென மாறும். யாரிடமிருந்தோ கிரேக்கர் சூதாட்டங் கற்றிருக்கிறார். எனவே சொல் மூலம் தெரியவில்லை என்று சொல்லி விட்டார். 

அந்தக் காலத்தில் தாயக்கட்டையும், சோழியும் புழங்கிய ஒரேயிடம் தமிழ்நாடு தான். இரண்டின் சொல் மயக்கம் இங்கே தான் இருந்தது. எனவே தான் cube சிந்தனை என்பது பெரும்பாலும் இங்கிருந்து எழுந்திருக்கும் என்கிறேன். குவ்வின் நீட்சியாய் குவ்வம், (குவ்வு>குப்பு, சோழி குப்புறக் கிடத்தல்) என்ற சொல்லை நாம் புழங்கலாம்.

இனி prism என்பதற்கு வருவோம். பல்வேறு பட்டைகளை (செவ்வகம்/rectangle, நாற்கரம்/quadrangle, நாற்பதியம்/trapezium என வெவ்வேறாகலாம்) சுற்றுச் சுவராக்கி, மேலுங்கீழும் ஒரே மாதிரி 2 ஒழுங்குப் படிவுகளைக் கொண்டு இத்திண்மம் உருவாவதால் பட்டகம் என்ற சொல், prism த்திற்கு இணையானது. 

triangular prism= முக்கோணப் பட்டகம். 
rectangular prism= செவ்வகப் பட்டகம். 

இதைச் சிலர் rectangular solid= செவ்வகத் திண்மம் என்பார். சுற்றுச்சுவர்கள் செவ்வகமாகி, மேலுங் கீழுமுள்ள தளங்கள் சதுரம்,  செவ்வகம் போலவும் ஆனால் மொத்தத் திண்மத்தைக் ”குவ்வம்போல” என்று சொல்ல மாட்டோமா? 

cuboid (adj.) "cube-like, resembling a cube in form," 1829, a modern coinage; see cube (n.) + -oid. As a noun, short for cuboid bone, by 1839. இச்சொல்லில் வரும் oid, ஆகியது, ஆயது, அது, ஆனது என்றும் பொருள் கொள்ளும். 

என்ன பார்க்கிறீர்கள்? ”நூல்மூட்டையைப் பந்தாகியது/ பந்தானது/ பந்தாகுது/ பந்தாவுது” எனப் பல்வேறு விதமாய்ச் சொல்ல மாட்டோமா? தமிழிய மொழிகளுக்கும் இந்தியிரோப்பிய மொழிகளுக்கும் தொடர்புள்ளது என்றால், நம்ப மாட்டேம் என்கிறீர்கள். இங்கு இன்னொரு காட்டு. தமிழில் து என்று முடிப்பது பெயர்ச் சொல்லிற்குச் சரி வராது என்பதால் ஆக்கம் என்பதை ’ஆகி வந்தது’ எனும் பொருளுக்கு இணையாய்ப் பரிந்துரைக்கிறேன். cuboid = குவ்வாக்கம்.
   
இனிச் சதுரத் தளமும், நாலு முக்கோணமும் கொண்ட வடிவத்தைச் pyramid (square base) = சதுரக் கூம்பகம் என்பார். triangular pyramid = முக்கோணக் கூம்பகம். rectangular pyramid = செவ்வகக் கூம்பகம். இதுபோல் ஐங்கோணக் கூம்பகம், அறுகோணக் கூம்பகம், பன்னிருகோணக் கூம்பகம் என்று விதவிதமாய் அழைக்கலாம். 

அடுத்த சொல் frustum. எந்தப் பட்டகத்தையும், கூம்பகத்தையும் தரைத் தளத்திற்கு இணையாகவும், தரைத்தளத்திற்குக் கோணமாகவும் வெட்டலாம். அப்போது வெட்டகம் (frustum) என்பது கிடைக்கும். பட்டக வெட்டகம், கூம்பக வெட்டகம் என்பவற்றின் முன்னால் தேவையான பெயரடை சேர்த்துக் கொள்ளலாம். 

காட்டாக ஐங்கோணப் பட்டக வெட்டகம், அறுகோணக் கூம்பக வெட்டகம் என்று இங்கு சொல்லலாம். 

அடித்தளமாய் சதுரம், செவ்வகத்திற்கு மாறாய் வட்டத்தைக் கொண்டு, மேற்றளத்திற்கு வட்டங் கொண்டு, சுவர் எழுப்பினால், cylinder = உருளை அமையும். மேற்றளத்திற்கு எப் பரப்பையுங் கொள்ளாது ஒரு புள்ளி மட்டுங் கொண்டால் அது கூம்பாகும். உருளை, கூம்பு ஆகிய இரண்டிலும் கூட வெட்டகஞ் செய்யலாம். 

தரைத் தளத்திற்கு கோணமாய் வெட்டுகையில் நமக்கு ஒரு நீள்வட்டம் (ellipse) மேற்றளமாய்க் கிட்டும். வெட்டும் தளம் தரைத்தளத்திற்குக் குத்துத் தளமானால் ஒரு பரவளை (parabola) கிட்டும். வெட்டுத்தளம் கூம்பின் குத்துக்கோட்டை (vertical axis) சாய்வாய் வெட்டினால் மீவளை (hyperbola) கிட்டும். நீள்வட்டம், பரவளை, மீவளை ஆகிய மூன்றையும் கூம்பின் குறுக்குச் செகுத்தத்தால் (cross sections) கிடைக்கும் சுருவைகள் (curves) என்பார்.

மேலே பட்டகங்களைச் சொல்லும் போது தரைத்தளமும், மேற்றளமும் ஒரே மாதிரி ஒழுங்குள்ள இருபரிமான வடிவங்களாய்க் கொண்டிருப்போம் என்று சொன்னோம். இதில் சற்று மாற்றஞ் செய்தால் என்னவாகும்? மேற்றளம் அறுகோணம், கீற்றளம் ஐங்கோணம் என்று வையுங்கள் இப்போது சுற்றுச் சுவர்கள் 5 செவ்வகமும் ஒரு முக்கோணமும் ஆகும். 

இவற்றால் அடைக்கப்பட்ட திண்மத்தைப் ”பட்டகம் போல” என்று சொல்ல மாட்டோமோ? ஆங்கிலத்தில் 6,5 - prismatoid என்பார். தமிழில் 6,5 பட்டகவாக்கம் என்போம். இன்னும் 4 செவ்வகம், 2 முக்கோணங்களைச் சுற்றுச் சுவர்களாய்க் கொண்ட 6,4 பட்டகவாக்கம். 3 செவ்வகம், 3 முக்கோணங்களைச் சுற்றுச் சுவர்களாய்க் கொண்ட 6,3 பட்டகவாக்கம் என விதம் விதமாய்ச் செய்யலாம்.

வேண்டுமென்றால் இன்னும் கூடக் கொஞ்சம் பலக்கிப் பார்க்கலாம். அதற்கு முன் கடகம் என்ற சொல்லைப் பார்த்துவிடுவோம். இது ஒரு கத்திச் சண்டை வீரன் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக வைத்துக்கொள்ளும் கேடகம் என்பார். குடகம்>கடகம்>கேடகமாயிற்று. 

குடகம் குடம் என்றும் வடக்கே சொல்லப்படும். ஆங்கிலத்தில் Scutum என்பதை Scutum constellation, added 1687 by Polish astronomer Johannes Hevelius, originally Scutum Sobiescanum "Shield of (King John) Sobeski," the 17c. Polish monarch famous as the savior of Christendom for his victory over the Ottomans at the Battle of Vienna (1683). The name was later shortened. From Latin scutum "shield" என்று சொல்வர். 

குடகம்/குடம் என்பதற்கும் Scutum என்பதற்கும் மிகுந்த வேறுபாடில்லை. நம்மூர்க் கடகத்தின் முன் மேலை இந்தையிரோப்பியப் பழக்கமான s ஐச் சேர்த்து விடுங்கள். Scutum வந்துவிடும்.

கேடகம் என்பது வேறெதுவும் இல்லை ஒரு செவ்வகத்தையும் முக்கோணத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். முக்கோண அடிநீளமும் செவ்வக நீளமும் ஒன்று போல் இருக்கவேண்டும். கடகத்தின் மொத்த வடிவம் செவ்வகமும் முக்கோணமும் சேர்ந்த ஐங்கோண வடிவமாகும். காட்டாக ஒரு செவ்வகத்தின் நீளம் 6 ” என்றும் அகலம் 4” என்றுங் கொள்ளுங்கள். இப்போது இந்த அலகுள்ள 3 செவ்வகங்களையும் 2 கடகங்களையும் (அகலம் 4 ”, நீளம் 6”. கூர்ப்புக் கோணப்பகுதி உங்கள் உகப்பு.). 

இனி 4 ” பக்கங் கொண்ட ஐங்கோணத்தைத் தரைத் தளமாக்கி மேலே சொன்ன ஐந்து பட்டைகளைப் பொருத்துங்கள். இனிச் சுவர்களுக்கு மேலே ஒரு அறுங்கோணத் தளத்தைப் பொருத்துங்கள் சுவர்களின் ஒரு பக்கத்தில் முக்கோணமாய் ஒரு திறவைப் பக்கம் (open side) கிடைக்கும் அவ்விடத்தில் ஒரு முக்கோணம்  பொருத்தினால், ”கடகம் போல” ஒரு திண்மங் கிடைக்கும். இதைக் ”கடகவாக்கம் (scutoid)”  எனலாம்.       

scutoid = கடகவாக்கம்

அன்புடன்,
இராம.கி.

Sunday, August 05, 2018

சட்டினி

"சட்னி என்பதன் தமிழ்ச்சொல்? துவையல் தமிழா? அது தமிழில்லை எனின் சட்னியை நீர்த்துவையல் எனலாமா?" என்றொரு கேள்வி முகநூல் சொல்லாய்வுக் குழுவில் எழுந்தது. இதற்கு விடைசொல்லாது ஊடே புகுந்து பேச்சை இட்டவி, பிட்டு என்பவற்றின் பக்கம் திருப்புவோர் இருந்தார். இருக்கிறார். 

அது என்னவோ தெரியவில்லை. தமிழர் மரபு என நினைப்பவற்றை எல்லாம் கேள்வி கேட்டு, ”இட்டவி இந்தோனேசியன், இடியப்பம், சீனக்கொடை, பிட்டு தமிழருக்குத் தெரிய வாய்ப்பில்லை, ஏனெனில் யுவான் சுவாங் நீராவிப் பாத்திரம் இங்கில்லை என்கிறார்”. என்றெல்லாம் ஒருவர் உரைத்ததைக்/ உரைப்பதைக் கேட்டால் ஏதேதோ எண்ணத் தோன்றுகிறது. இன்னதென்ற கேள்வியின்றி, எல்லாமே இங்கேன் குதறப் படுகின்றன? இது போன்ற பேச்சுகளின் ஆழ, அகலம் தான் என்னவென்று புரிய வில்லை. 

பொ.உ. 6 ஆம் நூற்றாண்டிற்கு முன் (அதாவது பல்லவருக்கு முன்) தமிழர் வெறும் வெற்று வேட்டு என முடிவு செய்வதில் இவ்வளவு கவனம் எதற்கென்றும் புரியவில்லை. “திராவிடக் கட்சிகள்” அப்படி ஏதேனும் சொல்கின்றனவா? இதிலுள்ள அரசியல் தான் என்ன?
    .   
முதலில் சட்டினி பற்றிப் பேசிவிட்டு இட்டளி, இடியப்பம், பிட்டென வருகிறேன். 

சட்டினியும் துவையலும் சற்று வேறானவை. இரண்டையும் குழப்பிக் கொள்ளக் கூடாது. சமையல் தெரியாத ஆண்கள் தம் அம்மா, மனைவி போன்றோரிடம் உசாவி அறிக. சமையல் பற்றித் தெரிந்து கொள்ளாது, ”அச்சொல்லை, இதற்கு மாற்றாய்ப் பயனுறுத்தலாம்” என்பதும் ”அது வடசொல், இது தமிழ்ச்சொல்” என்பதும் சற்று அதிகப்படிப் பேச்சு. சாப்பிடுவோர் எல்லோருக்கும் சமையற் பெயர், உணவுப் பெயர் புரிவதில்லை. கொஞ்சம் மெனக்கிட வேண்டும்.

சட்டினி அரைக்கு முன், அதன் எல்லா உள்ளுறு பொருள்களையும் (ingredients). வாணலியில் இட்டு வதக்குவதில்லை கறட்டு (raw) நிலையிலேயே சில பொருட்களை சிச்சிறிதாய் வெட்டி அரைத்து விடுவது வழக்கம். 

காட்டாகத் தேங்காய்ச் சட்டினியின் உள்ளுறு பொருள்களான தேங்காய்த் துருவல், பொட்டுக் கடலை, பச்சை /வறல் மிளகாய் (மிளகாயில்லாக் காலத்தில் மிளகையும் எலுமிச்சைச்சாறையும் வைத்துச் செய்திருக்கிறார். எப்படியென்று விவரமானவர் தாம் கூற வேண்டும்.), உப்பு, தேவையான நீர் போன்றவற்றை இட்டு, அரைத்து வைத்துக்கொண்டு, வேறொரு பக்கம் கடுகு, உளுந்தம் பருப்பு, கருவேப்பிலை, சிறிதளவு எண்ணெய் ஆகியவற்றை வாணலியில் இட்டுத் தாளித்து, (அரைப்பு, தாளிப்பு ஆகிய) இரண்டையும் கலந்து விட வேண்டும். உள்ளிடும் தண்ணீரின் அளவைப் பொறுத்து சட்டினி கெட்டியாகவும், களிமிதவையாகவும் (suspension) இருக்கும். கெட்டிச் சட்டினி வேண்டுமா, நீர்ச் சட்டினி வேண்டுமா என்பது நம் உகப்பைப் பொறுத்தது.

தக்காளிச் சட்டினியில் தேங்காய்க்கு மாறாய்த் தக்காளியும், பொட்டுக் கடலைக்கு மாறாய் சின்ன வெங்காயம், பூண்டு போன்றவையும் சேர்க்கப் பட்டு, முன் செய்தது போல் பச்சையாய் அரைத்துப் பின் முன்சொன்ன தாளிப்பைக் கலந்து விடுவர். இது போல் சின்ன வெங்காயம் நிறையச் சேர்த்து வெங்காயச் சட்டினியும் செய்யலாம். (பெரிய வெங்காயம் இதற்குச் சரி வராது.) எல்லாம் உங்களின் செய்துபார்க்கும் திறமை பொறுத்தது. சட்டினியில் ஒன்று மட்டும் மாறாது. பச்சை அரைப்பு, தாளிப்பு, பின் இரண்டின் கலப்பு,    .

துவையல் (இதைத் துகையல் என்றுஞ் சொல்லலாம்.) செய்வது வேறு மாதிரி. இதன் உள்ளுறு பொருள்களான தேங்காய்த் துருவல், சின்ன வெங்காயம், பூண்டு, புளி, வறல்மிளகாய் (துகையலில் பச்சை மிளகாய் சேராது. மிளகாய் இல்லாக் காலத்தில் இதில் மிளகு பயன்பட்டுள்ளது. எப்படியென்று தெரிய வில்லை), 

கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயம், கருவேப்பிலை, சிறிதளவு எண்ணெய் ஆகியவற்றைக் கலந்து வாணலியில் வதக்கிப் (தாளிப்பு என்பது எண்ணெயில் ஒரிரு வெடிப்பு வருவது. வதக்கல் என்பது எண்ணையில் உள்ளுறு பொருள்கள் ஊறி, தத்தம் நீர்ச்சத்தை வெகுவாய் இழந்து வதங்குவது.) பின் அரைக்க வேண்டும். துகையலில் தேங்காயின்றி, அல்லது தேங்காயோடு சேர்த்து, கருவேப்பிலை, புதினா. கொத்துமல்லி, பீர்க்கங் காய், கத்திரிக் காய், முட்டைக் கோசு போன்றவற்றைச் சேர்த்து வெவ்வேறு வகைத் துவையல்களை உருவாக்கலாம்.

சட்டினி, துவையல் ஆகியவற்றின் உள்ளுறு பொருள்களும், செய்முறைகளும் வெவ்வேறு. ஒரு சொல்லிற்கு மாறாய் இன்னொன்றைப் பயனுறுத்தக் கூடாது. உங்களிடம் உறையூட்டி (refrigerator) இல்லையென்றால், சிக்கல் தான். சற்று உயர்ந்த ஊதும வெம்மையில் (atmospheric temperture) ஒரு வேளைக்கு மேல் (4 மணி நேரத்திற்கு மேல்) சட்டினி நொதியுறாது (enzymatic action) நிற்காது. (நொதியுற்ற சட்டினி கெட்டுப் போகும். உடலுக்கும் கெடுதி.). 

(வதக்கிய பின் அரைக்கப் பட்டதால்) சற்றுயர்ந்த ஊதுமை வெம்மையில் 2 வேளைகளுக்கும் மேல் (குறைந்தது 8-10 மணி நேரத்திற்கு) துவையல் என்பது நொதியுறாது நிற்கும். இப்படி, நிறைய நேரம் நிற்கும் தன்மையில் இந்த இரண்டுமே ஒன்றிற்கொன்று வேறுபட்டவை.

சரி சட்டினி, துவையல் என்ற சொற்கள் எப்படியெழுந்தன? 

முதலில் துவையலைப் பார்த்து விடுவோம். அது துவட்டுவதாலும், அரைப்பதாலும் ஏற்பட்ட சொல். துவட்டுதல் என்பது துவள்தலின் பிறவினைச் சொல். (துவர்த்தலும் துவட்டைக் குறிக்கும்.) குறிப்பிட்ட உள்ளுறு பொருள்கள் (தேங்காய், கருவேப்பிலை, புதினா, கொத்துமல்லி, பீர்க்கங்காய், கத்திரிக் காய், முட்டைக் கோசு போன்றவை) துவள்கின்றன. பின் அரைபடுகின்றன. அரைத்தலும் பிறவினைச் சொல்லே.)

சட்டினிக்கும் துவையலுக்கும் (உட்செயல்களின்) செய்முறை ஒழுங்கு மாறுகிறதெனினும் இரண்டின் உட்செயல்கள் ஒன்றே. இவற்றில் ஒன்றைத் தமிழனுடையது என்றும் இன்னொன்றைத் தமிழனைச் சேர்ந்ததல்ல என்பதும் ஏரணத்திற்கு ஒத்து வருமா? 

ஆனாலும் ”சட்னி என்ற சொல் தமிழ் மாதிரித் தெரியவில்லையே?” என்று சிலர் கேட்கிறார். என் எதிர்க் கேள்வி, “இனாபா என்பது தமிழா?” சொல்லுங்கள். 
“என்னப்பா?” எனும் தமிழ்த் தொடரை வட ஆற்காட்டுத் தமிழர், குறிப்பாகச் சென்னைத் தமிழர் என்னாப்பா> இன்னாப்பா> இனாபா என்று பேச்சுத் தமிழில் ஆக்கிவிட்டார். இருப்பினும் அதைத் தமிழில்லை என்போமா?

நெல்லையில் சவட்டுதல் என்பது மிதித்தல், மொத்துதல், அடித்தல், அழித்தல், மெல்லுதல், உருவில்லாது அழித்தல். தேங்காய்த் துருவல் என்பது அம்மியிலும், ஆட்டுக்கல்லிலும் என்னவாகிறது? சவளப்பட்டுப் போகிறதல்லவா? சவட்டுதல் என்பது வகர/ககரப்போலியில் சகட்டுதல் என்றுஞ் சொல்லப்படும். ”சகட்டு மேனிக்கு அடிச்சுத் தள்ளிட்டான்” என்கிறோம் அல்லவா? 

தமிழ் இலக்கணத்தில் சொல்திரிவு விதிகளுண்டா? என ஒரு சிலர் கேட்கலாம். உண்டு. ஆனால் சொற்பிறப்பிலுக்கெனத் தனி நூல்கள் எழுதப்படவில்லை. ஞானப் பிரகாசர், பாவாணர், அருளி, அரசேந்திரர், அடியேன் போன்றோர் வழிப்பெற்ற விதிகளை யாரும் தொகுக்கவில்லை. 

ஏற்கனவே ”c1v1c2v2 என்று தொடங்கும் சொற்களில், c2v2 என்பது க - வாக இருந்தால் அது மறைந்து c1V1 என்று பல சொற்களில் நெடிலுருவம் எடுக்கும்” எனப் பல தடவை நான் சொல்லியுள்ளேன். இங்கு v1 என்பது குறில். V1 என்பது நெடில். 

பகல்>பால் என்றாவது போல் சகட்டுதல்> சாட்டுதல் என்றாகும். சாட்டுதலுக்கும் மேற்சொன்ன பொருள் தான். சவட்டுதற்கான ஒரு கருவி சவட்டை>சாட்டை. மற்ற தமிழிய மொழிகளிலும் ம. சாட்ட. க. சாடி, வாசடி, ம சாவுடி, தெ.சாடி, கோத. சாட் என உண்டு. சாடுதல் எனும் தமிழ்ச்சொல்லுக்கு இணையாய் ம. சாடு, க.சாடிசு, து.சாண்டினி (ஈட்டியை அசைத்தல்) குரு. சாட்காரை போன்றவை உண்டு. 

சாண்டுதல் எனும் தமிழ்ச் சொல்லுக்குக் குற்றுதல் பொருள் சொல்வர். இதன் இணைச் சொற்கள் ம.சாண்டுக, க.சாடிக, தெ.சாடின்சு, து; சாண்டுனி

துளுச்சொல் எப்படி அமைகிறதெனக் கூர்ந்து பாருங்கள். தமிழில் கற்பி என்பது வினைச்சொல். கற்பனை என்பது பெயர்ச்சொல். ஆனால் ஒரு சிலர் வியப்பாக கற்பனி என்ற வினைச்சொல்லையும் உருவாக்குவார். மரி என்பது வினைச் சொல். மரணம் பெயர்ச்சொல். சிலர் மரணி- என இன்னொரு வினைச்சொல் உருவாக்குவார். 

இனித் தமிழுக்கு வருவோம். சாட்டு>சாட்டுணை என்பது சாட்டுணி> சாட்டினி என்றாகிச் சட்டினி ஆனதோ? - என்று தோன்றும். முழுதும் தெரிய வில்லை. துளு/தமிழ் உறவாட்டம் பார்க்க வேண்டும். குறிப்பிட்ட வேர்ச்சொல் நன்கு புரிகிறது. சட்டினி என்ற இறுதி வடிவம் எப்படியெழுந்தது என்றுதான் தெரிய வில்லை. (ஒரு வேளை துளுவின் தாக்கம் இச்சொல்லில் இருக்குமோ? இன்னும் ஆய்வு செய்ய வேண்டும் என்பதை நான் மறுக்கவில்லை.) ஆனால் சவட்டுதற் காரணத்தால், தமிழ், துளு வழியில் சட்டினி என்ற சொல் உறுதியாய்  தமிழியச் சொல் தான்.

பொதுவாய்த் தேங்காய்ச் சட்டினி என்ற முறையில் அது தென்னகத்தில் எழுந்த சொல் தான், வேண்டுமானால் மராட்டி, ஒடிசா, வங்கம் என்று சேர்த்துக் கொள்ளலாம். அம்மியும் ஆட்டுக்கல்லும் தொல்பொருள் ஆய்வுகளில் கிடைத்துள்ளன. சட்டினியின் சேர்பொருள்களான மிளகாயைத் தவிர்த்து. மற்ற எல்லாமே நம்மூர்ப் பொருள்கள் தாம். மிளகாய்க்கு மாற்றாய் மிளகு எப்படிச் சேர்க்கப்பட்டது என்பதற்குச் சேர்மானக் குறிப்பு தேவை. 

துவையலுக்கு ஆன சொற்பிறப்பே சட்டினிக்கும் அமைகிறது. ஒரு பக்கம் துவட்டல், இன்னொரு பக்கம் சவட்டல். துவட்டல் தமிழ், சவட்டல் தமிழல்ல என்பது எனக்கு ஏரணமிலாதது போல் தெரிகிறது. வேறெந்த வடபுலத்தாராவது சட்டினி தம்முடையது என்கிறாரா? பெயரைக் கண்டு தடுமாறாதீர் சட்னி என்பது இன்னொரு “இனாபா” வகை. (துளு வழியில் சொற்கள் அமையலாம்.

அப்புறம் இட்டளி, இடியப்பம், பிட்டு பற்றிய ஓரிழை 2008/2009 களில் தமிழ் மடற்குழுக்களில் ஓடியது. அதில் என்னவெல்லாம் கருத்து வைத்தாரோ, அதே கருத்தைப் 10 ஆண்டுகள் கழித்தும் திரு. மணிவண்ணன் வைக்கிறார். அது அவர் உரிமை. ஆனால் ”இப்படியோர் உரையாடல் நடந்தது, இன்னார் இப்படிச் சொன்னார், நான் ஏற்றுக்கொள்ளவில்லை” என்றாவது சொல்லியிருக்கலாம். இராம.கி.யைக் கண்டுகொள்ளாமல் (ignore) இருப்பதே சரியான அரசியல் என்பது அவர் நினைப்போ தெரியவில்லை. மனம் கொஞ்சம் நெருடுகிறது..
 
http://valavu.blogspot.com/2009/07/1.html
http://valavu.blogspot.com/2009/07/2.html
http://valavu.blogspot.com/2009/07/3.html

மேலேயுள்ள பதிவுகளைப் படித்தபின் இட்டளி/வி, இடியப்பம், பிட்டு என்ற சொற்கள்/ உணவுகள் பற்றிக் கேள்விகள் இருப்பின் வேறொரு இழை எழுப்பிக் கேளுங்கள். சொல்கிறேன்.

அன்புடன்,
இராம.கி.

Thursday, August 02, 2018

பனுவலும் text உம் ஒன்றா? - 4

கலிங்கமென்பது நான் பார்த்தவரை ஒரு கணப்புப் (generic) பயன்படாகவே தெரிகிறது. அரசர், செல்வரிலிருந்து வறிய மக்கள் வரை, அவர் உடம்பின் உச்சி முதல் உள்ளங்கால் வரை, பொதுவாய் அணியுந் துணியே கலிங்கம் ஆகும். இதற்கான விவரிப்பு எடுத்துக் காட்டுகளை ஐந்தைந்தாய் “வாசகம், எடுகோள் (reference), அடைப்புக் குறிப்பில் முன்னிகை” என்ற கீழேயுள்ள  வரிசையில் அடுக்கியுள்ளேன்..

”கலிங்கம் துயல்வர” நற்.20-4 [கலிங்கம் அசைய; இங்கே சொல்லப்படும் கலிங்கம் கனத்ததில்லை; அசையுமளவிற்கு மெல்லியது தான்.] 

”புன்பூங் கலிங்கமொடு” நற்.90-4 [விலை குறைந்த மெல்லிய கலிங்கமொடு; பூங் கலிங்கம் = பூப்போன்று மெதுவான கலிங்கம். புன் = cheap]  

”நெய்யுங் குய்யும் ஆடி, மெய்யொடு மாசுபட்டன்றே கலிங்கமும் தோளும்” நற்.380-2 [நெய்யும் புகையும் மேல் விழுந்து உடம்போடு கலிங்கமும் தோளும் மாசு பட்டன. நெய்யும், புகையும் பட்டால் பருத்தியாடை இன்றும் மங்கும்.]

”கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ” குறு.167-2 [துவைக்க வேண்டிய கலிங்கத்தை கழற்றாது உடுத்து; பருத்தியைத் துவைத்துக் கட்டுவது நெடுங்காலப் பழக்கம்.] 

”பனித்துறைப் பகன்றைப் பாங்குடைத் தெரியல் கழுவுறு கலிங்கம் கடுப்பச் சூடி” பதி 76-13 [துவைக்க வேண்டிய கலிங்கம் போல் நீர்த்துறை மலர்ந்த பகன்றையைத் தலையிற் சூடி உழுகிறார். கலிங்கம் இங்கே உழவரின் தலைப்பாகையாகிறது. அழுக்குத் துண்டு தலைப்பாகை ஆனது. பகன்றை மலர் வெண்கலிங்கத்திற்கு உவமையானது.]

”சில்பூங் கலிங்கத்தள்” கலி.56-11 [சில்லெனும் பூப்போன்ற மெது கலிங்கம் அணிந்தவள்; பூப்போல துணியென்பது தென்பாண்டிப்பேச்சு. துணியின் மெதுவான பரிசத்தைச் சொல்ல பூ விதப்பான குறியீடு.] 

”கலிங்கத்துள் ஒடுங்கிய மாதர்கொள் மான்நோக்கின் மடந்தை” கலி.69-3 [கலிங்கத்துள் ஒடுங்கிய (காதல் கொள் மான்நோக்குடைய) மடந்தை வெட்கம் பிடுங்கித் தின்பதால், ஆடையுள் ஒளிகிறாள்] 

”அடிதாழ் கலிங்கம் தழீஇ” கலி.92-42 9 [காலின் அடிவரை தாழும் கலிங்கத்தைப் பிடித்து; கலிங்கமென்பது இங்கே தோள், இடுப்பு, தலையில் அணியும் துணியல்ல. காலின் அடிவரையுள்ள ஆடை. முகன்மையான குறிப்பு இங்கே கிடக்கிறது. Kalingaam is not a fancy fabric.]

“கோடிக் கலிங்கத்து ஒடுங்கினள்” அக.86-21 [கரை கட்டிய கலிங்கத்துள் ஒடுங்கினாள். கோடிக் கலிங்கம் = கரையுள்ளபடி நெய்த கலிங்கம். இதைப் புதுக் கலிங்கமென்றுஞ் சொல்லலாம். இன்றைக்கும் ஊர் விழாக்களில் புதுத் துணியைக் கோடியென்பர்.] 

”முருங்காக் கலிங்கம் முழுவது வளைஇ பெரும் புழுக்குற்ற” அக.136-20 [கசங்காக் கலிங்கம் உடம்பைச் சுற்றியதால் பெரும் புழுக்கம் அடைந்த; கசங்குதலென்றே இற்றைக் காலத்திற் சொல்கிறோம். முருங்குதல் வழக்கு கொஞ்சமும் இல்லை. கோடை காலத்தில் உடம்பு முழுக்கக் கலிங்கத்தாற் சுற்றின் புழுங்கத் தானே செய்யும்? இங்கே கலிங்கம் = outer garment cloth. So this cloth is nothing special to be imported from far away Kalinga.]

“பாம்புரி அன்ன வடிவின காம்பின் கழைபடு சொலியின் இழைஅணி வாரா ஒண்பூங் கலிங்கம் உடீஇ” புற 383-11 [பாம்புரி போன்ற வடிவானதாய், மூங்கிலில் உட்கிடக்கும் மென்தோலின், இழையணி தென்படாத, ஒளிமிகு, மெது கலிங்கத்தை உடுத்தி. இழையணி = threadline அருமையான கலைச் சொல் The cloth is so fine that one can’t find threadlines. Very fine count ஆல் நெய்த துணிகளை இப்படிச் சொல்லலாம்.]  

”நேர்கரை நுண்ணூற் கலிங்கம் உடீஇ” புற.392-15 (நேரான கரையுடைய நுண் நூற் கலிங்கம் உடுத்தி. நுண்ணூல் = fine count. கரை வைத்த துணிகளின் மேல் இன்றும் தமிழருக்கு ஈர்ப்பு. காஞ்சிபுரம் புடவைகள் கரைக்குப் பெயர் பெற்றவை.] 

”போதுவிரி பகன்றைப் புதுமலர் அன்ன அகன்றுமடி கலிங்கம் உடீஇ” புற.393-18 [பதி 76-13 இன் தலைகீழ் ஒப்புமை. போதுவிரிப் பகன்றையின் புதுமலருக்கொப்பாய் அகன்றுமடிந்த கலிங்கத்தை உடுத்தி;]

”பாம்புரித்தன்ன வான்பூங் கலிங்கமொடு” 397-15 [பாம்புரிபோல் மீமெது கலிங்கத்தோடு; எப்போதும் துணிகளுக்குச் சொல்லப் படும் ஒப்புமை பாம்புரி. கணக்கற்ற பாம்புகள் திரிந்த காலம் போலும்.] 

”புரையோன் மேனிப் பூந்துகில் கலிங்கம்” புற.398-28, [உயர்ந்தோன் மேனியில் மெது துகில்/கலிங்கம்; நாட்டாமையின் தோளிற் கிடக்கும் துண்டு உணர்த்தப்படுகிறது. it must have been a fine fabric.]

”தொன்றுபடு சிதாஅர் மருங்குநீக்கி மிகப்பெருஞ் சிறப்பின் வீறுசால் நன்கலஞ்.............லவான கலிங்கம் அளித்திட்டு புற.400-12-13 [நாட்பட்ட கந்தையை மடியில் நீக்கி, மீப்பெருஞ் சிறப்பின் வீறு சால்ந்த நன்கலம் ........லவான கலிங்கம் அளித்திட்டு. கந்தையை நீக்கிக் கோவூர்க் கிழாருக்கு நலங்கிள்ளி கலிங்கம் அளித்தது சொல்லப் படுகிறது. ஓலை செல் அரித்ததால், கலிங்கப் பெயரடை தெரியவில்லை.] 

”நலம்பெறு கலிங்கத்து குறங்கின் மிசை அசைஇயது ஒருகை” திரு-109 [தொடையின்மேற் கிடந்த கலிங்கத்தில் அசைகிறது ஒருகை; இது மேலாடையல்ல. கீழுடம்பில் அணியும் பருத்தியாடை. முழுக்கவும் மெலிதாக, see through ஆக இருக்க முடியாது. எனவே நல்ல பயன்பாடுள்ள, run of the mill vEtti cloth. How can this be imported from Kalinga?]

”கானமஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்” சிறு 85 [காட்டு மயிலுக்கு கலிங்கம் கொடுத்த அருந்திறல் அணங்கிய ஆவியர் பெருமான் பேகன். இந்தக் கலிங்கம் அரசன் போர்த்தி யிருந்த உயர் போர்வை. must be very valuable.] 

”நின்அரைப் பாசியன்ன சிதர்வை நீக்கி ஆவியன்ன அவிர்நூல் கலிங்கம்” பெரு-469 [நின் இடுப்பில் இருக்கும் பாசிவேர் போன்ற கந்தையை நீக்கி ஆவிபோலமைந்த, ஒளிதரும் நூலாலான கலிங்கம்; பாசிவேர்க் கந்தை என்பது வலிய ஒப்புமை. அழுக்குப் பாண்டற் கந்தலாய்ப் புலவர் துணி உள்ளது. அதேநேரத்தில் பாலாவிபோல வெள்ளை வெளேரென்று ஒளிவிடும் புதுக்கலிங்கம் கொடையாகிறது.] 

”வெயிற் கதிர் மழுங்கிய படர்கூர் ஞாயிற்றுச் செக்கர் அன்ன சிவந்து நுணங்கு உருவின் கண்பொருபு ஊகூஉம் ஒண்பூங் கலிங்கம்” மது.433 [வெயில் மழுங்கி மாலையிற் படரும் செக்கல் நிறம்போல் அசையும் உருவின் கண்பொருது உகுக்கும் ஒளிபூத்த கலிங்கம்]

“கலிங்கம் பகர்நரும்” மது.513 [கலிங்கம் விற்போரும்; இன்றும் சேலை விற்போர் நம் வீதிகளில் கலிங்கம் பகர்ந்து வருகிறார்.] 

”மென்நூற் கலிங்கம் கழன் புகை மடுப்ப” மது.554 [மென்நூற் கலிங்கம் கழுலும் அகிற்புகையில் மணஞ்சேர்க்க; துணிக்கு மணஞ்சேர்ப்பது இன்றும் சில பொரிம்புகளிற் (brands) செய்யப்படுகிறது.] 

”இணையணை மேம்படப் பாய்அணை இட்டு காடிகொண்ட கழுவுறு கலிங்கத்துத் தோடமை தூமடி விரித்த சேக்கை” நெடு 134 [இணையான அணை மேம்பட, பாயணையிட்டு, அதன்மேல் துவைத்துக் கஞ்சி தடவிய, சுருக்கமில்லாத, கலிங்கத்தை விரித்து, ஒட்டினாற் போல் அமைந்த தூய மடி விரிந்த படுக்கை. (மடியும் பருத்தித் துணி தான். மடி பற்றிப் பல தவறான கருத்துக்கள் உலவுகின்றன. கீழே பார்ப்போம்.) கஞ்சி தோய்த்த துணிகள் இன்றும் படுக்கை விரிப்பாய்ப் பயன்படுத்துவதுண்டு. குறிப்பாகத் தங்கும் ஆடம்பர விடுதிகளில், செல்வர் வீட்டுப் படுக்கைகளில். இது போன்ற துணிப் பழக்கம் 2000 ஆண்டுகள் கழித்து இன்றுந் தொடர்வது வியப்பே.]

”பூந்துகில் மரீஇய ஏந்துகோட்டு அல்குல் அம்மாசு ஊர்ந்த அவிர்நூற் கலிங்கமொடு” நெடு. குறிப்பாக146 (பூப்போன்ற துகிலைத் தழுவியேற்ற வளை அல்குல். (அல்குல் என்ற உறுப்பு பெண்களுக்கு மட்டுமானதல்ல. ஆண்களுக்கும் உண்டு. இடுப்பிற்குங் கீழே தொடைகளுக்கும் மேலே முக்கோணமாய் அமைந்து, முன்னும் பின்னும் புடைத்து நிற்கும் பகுதி அல்குலாகும். அதற்கும் பெண்ணுறுப்பிற்கும் தொடர்பில்லை. அல்குலின் பின்பகுதியைப் புட்டமென்பார்.) அம்மாசு ஊர்ந்து கிடந்த ஒளிநூற் கலிங்கத்தோடு.. எம்மாசு என்பது வெளிப்படச் சொல்லப்படவில்லை. அல்குலின் மேல் துகில் கிடக்கிறது. அல்குலின் கீழ் கலிங்கங் கிடக்கிறது. இரண்டின் வேறூபட்ட உருவகத்தை ஆழப் புரிந்துகொள்ள வேண்டும்.]

”இழைமருங்கு அறியா நுழைநூற் கலிங்கம்” மலை 561 [இதுவும் புற.383-11 போன்ற இழை மருங்கு அறிய முடியாத நுண்ணிய நூலாற் செய்த கலிங்கத்தைக் குறிக்கிறது. நுழைநூல் = micro filament]

இனிச் சங்கநூல்கள் அல்லாதவற்றிற்கு வருகிறோம். இதில் ஓரிரண்டு விளக்கங்கள் மட்டுமே கொடுக்கிறேன்

”கல்லுண் கலிங்கம் நீக்கி” (பெருங். 4:16:23). 

“மணிமுடி கலிங்க மாலை” என்ற மேருமந்.123 வரிகள் பொதுக் குறிப்பே. 

”சேலை புடவை கலிங்கம்” என்ற உரிச்சொல் நி 147 வரிகள் பொதுக்குறிப்பே. 

”வாம வருங்கலம் ஆடை கலிங்கமும் கோசிகமும்” பது. பரிண. 8.25. 

”உற்ற உதிரம் செழிப்பான் கலிங்கத்தை மற்று அது தோய்த்து” வளையாபதி 43. 
”கண்டத்தில் இட்ட கலிங்கத்தால் கால்வருந்த” பாரதவெண்.296. 
”நொம்மென் கலிங்கம்” பட்டினத்தார். பா, கோவை 19, 46 (நொய்மையான கலிங்கம்) 
”காஞ்சி யிருக்கக் கலிங்கம் குலைந்த” கலிங்கத்துப் 64 [இங்கே ஒரு சிலேடையுள்ளது. காஞ்சி= ஒட்டியாணம். மேகலையென்ற அணியைக் குறிக்கும்.

புத்த இலக்கியங்களில், குறிப்பாகத் திபெத்திய வயிரயான நூல்களில் காஞ்சி நகரம் ஒட்டியாண நகரென்றே பேசப்படும். 

மணிமேகலை காஞ்சி நகரத்தில் முடிவதும் புத்தக் குறியீடே. மணிமேகலைத் தொடரில் அதைக் குறிப்பிடுவேன். இடுப்பில் மேகலை குலையாதிருக்க, அதன்கீழ் அணிந்த கலிங்கம் குலைந்து போனதாம். இன்னொரு பொருள்: காஞ்சியான் (கருணாகரத் தொண்டைமான்) பிடித்ததாற் கலிங்க நாடு குலைந்து போயிற்றாம்.] 

”முலைமேல் கலிங்கம் ஒன்றிட” திருப்புக. 1079 (மேல்வருக்கத்தார் முலைமேற் கலிங்கம் தரிப்பது திருப்புகழ் காலத்தில் வந்துவிட்டது போலும்.) 

”கலிங்கமாங் காலிந் துயிலையும்”  கோலாசல.பு.12 

”ஈழமும் நீடுகலிங்கமும் மன்றற் இயந் துவைப்ப” கோடீச் கோவை 292 

”கலாம் பெறும் கலிங்கம் கலையுடன் தரித்து” விராலி. குற. 6

ஆகக் கலிங்கம் என்ற சொல் என்றுமே ஒரு விதப்புச்சொல் அல்ல, அதுவொரு கணப்புச் சொல். 

சொற்பிறப்பியல் வழி காணுமுன் தமிழிலக்கண ஒழுங்கைப் புரிந்து கொள்ளவேண்டும். தமிழில் ”ங்கு” என வரும் சொற்களை “lingering verbs" எனலாம். ஆங்கிலத்தில் வரும் present continous போல இது தோற்றினும் முற்றிலும் அப்படியில்லை. கீழே எடுத்துக்காட்டுக்களைப் பாருங்கள்.

"அசங்குதல், அடங்குதல், அணங்குதல், அரங்குதல், அலங்குதல், இசங்குதல், இடங்குதல், இணங்குதல், இயங்குதல், இரங்குதல், இலங்குதல், இளங்குதல், இறங்குதல், ,உடங்குதல், ,உணங்குதல், உயங்குதல், உலங்குதல், உழங்குதல், உறங்குதல், கசங்குதல், கரங்குதல், கலங்குதல்" - இதெல்லாம் ஒருவகை.

இவற்றில் அங்குச்சாரியை உள்வந்து நிற்கும். ”அணுங்குதல், அதுங்குதல், அமுங்குதல், அலுங்குதல்,  அழு/ளுங்குதல், அறுங்குதல், இடுங்குதல், இணுங்குதல், இறுங்குதல், உருங்குதல், உழுங்குதல், உளுங்குதல், உறுங்குதல், ஒடுங்குதல், ஒதுங்குதல், ஒருங்குதல், ஒழுங்குதல், கருங்குதல்” என்பது இன்னொருவகை இவற்றில் உங்குச்சாரியை உள்வந்து நிற்கும்.

இவையிரண்டுந்தான் தமிழில் பெரிதுமுண்டு. ஆனால் “இழிங்குதல், கலிங்குதல்”என மூன்றாம் வகையில் இங்குச்சாரியை ஓரோவழி உள்வந்து நிற்பதும் உண்டு. 

இங்குச்சாரியை பயிலுஞ்சொற்கள் தமிழிற் குறைவு அதேபோது அவை இல்லாமலுமில்லை. பலவிடங்களில் இவை உங்குச்சாரியைச் சொற்களோடு போலிகாட்டும்.

நம் பேச்சிற் சாரியைகள் இல்லாதும் வினைச்சொற்களைப் பயிலலாம். மேற்சொன்னவற்றில் அங்குச்சாரியை விடுத்துப்பார்த்தால், ஊடே ஐகாரஞ் சேர்த்து, “அசைதல், அடைதல், அணைதல், அரைதல், அலைதல், இசைதல், இடைதல், இணைதல், இயைதல், இரைதல், ..........., இளைதல், இறைதல், உடைதல், உணைதல், ............, உலைதல், உழைதல், உறைதல், கசைதல், கரைதல், கலைதல்” என்பவை கிடைக்கும். 

[நடுவே 2 இடங்களில் சொல்தெரியாது அல்லது இற்றைப்புழக்கமின்றி இடைவெளி காட்டி யுள்ளேன்.) 

அதேபோல் உங்குச்சாரியை விடுத்துப்பார்த்தால், உகரத்தோடு “அண்ணுதல், அத்துதல், அம்முதல், அல்லுதல், அழு/ளுதல், அறுதல், இட்டுதல், இண்ணுதல், இறுதல், ..........., உழுதல், உள்ளுதல், உறுதல், ஒடுதல், ஒதுதல், ஒருதல், ஒழுதல், கருதல்” என்பவை கிடைக்கும், (இங்கும் இடைவெளி விட்டுள்ளேன்.) 

அதேபோல இங்குச்சாரியை விடுத்துப்பார்த்தால் இகரஞ்சேர்த்து “இழிதல், கலிதல்” போன்றவை கிடைக்கும்.

அதாவது, கலிங்குதலின் சாரியையில்லா வினைச்சொல் கலிதலே. கலிதல் என்பதற்குக் தோன்றுதல் என்றும் பொருளுண்டு, (ஊடும் பாவும் கலந்து பிணைந்து கட்டுப்பட்டு துணியெனும் புதுப்பொருள் தோன்றுகிறதல்லவா? 

கலித்தல்= செழித்தல், தழைத்தல், வளர்தல், முகுதல், பெருகுதல், கலித்தலுக்குச் செலுத்தல் பொருளுமுண்டு, 

கலிங்கல் என்ற பெயர்ச் சொல்லைக் கலிங்கு, கலுங்கு என்று வெவ்வேறு விதமாய்ச் சொல்வர். கலித்தலைச் செய்யும் கருவியும் கலிங்கெனப் பெயர் பெற்றது. இதோடு ஒப்பும் ஏரி மடுகும்>மதகும் அதே பெயர்பெற்றது. மதகில் வெளிவரும் நீர்ப்பாய்வும் கலிதமானது. 

ஏரி மதகு கொள்ளாமற் நீரோட்டம் பொசியலாம்; வெடிக்கலாம், கக்கலாம், தமிழில் கலிதத்திற்கு, “கக்குகை, வெடிக்கை, பொசிகை” என்ற 3 பொருள்கள் உண்டு. கலிங்கு என்ற சொல், கலிஞ்சென்றும் பேச்சுவழக்கிற் சொல்லப்படும்.

மடுகு எனுங் கருவியில் விளைந்தது மடியெனும் கலிங்கம். இன்னும் இருவிதப் பொருண்மைகளாலும் இப்பெயர் ஏற்பட்டது. ”இத்துணி மிகவும் நீளமானது (18 முழம் புடவை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்) இதை மடித்து வைக்கவேண்டும்” அடுத்தது ”இதை மடியிற்றான் கட்டிச் செருகிக்கொள்ள வேண்டும்”.இப்படியாக ஆக்கம், பேணல், பயன்பாடு என்ற மூன்றாலும் மடி எனும் பெயர் ஏற்பட்டது. சங்க இலக்கியம் படித்தால் துணிப் பொருண்மையில் வேறு விதப்புப் பொருள் கிடையாது.

”துறைபோகு அறுவைத் தூமடி அன்ன” நற்.70-2, [நீர்த் துறைகளில் துவைத்து உடுத்தும் தூய்மையான மடி அறுவையைப் போல”  
”தூது ஒய் பார்ப்பான் மடிவெள் ஓலை” அக.337-7 [தூதாகச் செல்லும் பார்ப்பானின் மடிக் கலிங்கத்தில் ஒருக்கும் வெள்ளோலை”] 
”..... என்னரை முதுநீர்ப் பாசி யன்ன உடைகளைந்து திருமலர் அன்ன புதுமடிக் கொளீஇ” புற.390-15 அதியமான் ஔவையார். [இதே கருத்து மேலே கோவூர்க் கிழாருக்கு நலங்கிள்ளி கலிங்கம் அளித்ததையொட்டி வந்தது. இங்கே அவருக்கு முற்பட்ட காலத்தில் அதியமான் நெடுமானஞ்சியால் ஔவையாருக்கு அளிக்கப்பட்டது. அங்கே கலிங்கம். இங்கே மடி. அவ்வளவு தான் வேறுபாடு. அங்கும் முதுநீர்ப் பாசிபோல சிதறிய உடை களைந்து பகன்றை மலர் போன்ற பொது மடி கொள்ளப்படுகிறது. மடி என்பது கணப்புச் சொல் என்றறிய இந்த ஓர் எடுத்துக்காட்டு போதும். அதற்கும் பார்ப்பனருக்கும் ஏற்பட்ட கணுக்கம் பின்னால் வந்தது. “உடுக்க மடி கொண்டு வா” என்பது இங்கே துவைத்த ஆடை என்றே பொருள்படும். “நான் மடியாய் இருக்கிறேன்; என்னைத் தொடாதே” என்பது சாதி வழக்கத்தில் ஏற்படும் தவறான நிலை. மடிச்சீலை என்பது தூய ஆடை, அது கோவணத்தைக் கூடக் குறிக்கலாம்.]

”தெண்திரை அவிர் அறல் கடுப்ப ஒண்பகல் குறியவும் நெடியவும் மடி தரூஉ விரித்து” மது 520, [தெள்ளிய திரையில் விளங்கும் கருமணலைப் போல ஒன்றியதாய், சிறியதும் பெரியதுமான மடிப் புடைவைகளை விரித்து. ஆகப் புட்டாப் போட்ட புடைவைகள் அன்றும் இருந்திருக்கின்றன.] 

இன்னொரு காட்டு நெடு 135 இல் உள்ளது. அதை கலிங்கத்தைப் பற்றிச் சொல்லுகையில் சொல்லிவிட்டேன். அதில் கலிங்கத்தோடு, மடியும் உள்ளது. உடம்பின் மேலே கலிங்கம், உடம்பின் கீழே படுக்கையின் மேலே மடி.]

இதுவரை கலிங்கம், மடி என்பவற்றைப் பார்த்தோம். இனித் தென்கிழக்கு ஆசியாவில் ”கலிங்” என்ற பெயர் தமிழர்க்கு எப்படி ஏற்பட்டதென்று பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.

உறவுகள் - தொடர்ச்சி

”தனக்குப்பின் பிறந்த பெண்மகவை தங்கை என்று அழைப்பதே இலக்கிய வழக்கு. பேச்சுவழக்கில் தங்கச்சி என்று சொல்வர். நண்பரொருவர் தங்கச்சீ என்ற விளியைத் தானெழுதிய கவிதையொன்றில் பயன்படுத்தி இருந்தார். அச்சொல்லாட்சி ஆர்வத்தைத் தூண்ட மேலும் அது பற்றி ஆராயலானேன்.

தங்கை தங்கச்சி இரண்டில் எது சரி?” என்று முகநூல் சொல்லாய்வுக் குழுவில் ஓர் அறி வினா கேட்கப்பட்டது. அக்கட்டுரையைப் படித்த நான் அதனின்று பெரிதும் வேறுபட்டேன். ”உறவுகள்” பற்றிச் சில செய்திகளை ’வளவு’ வலைப்பதிவில் http://valavu.blogspot.com/2005/04/blog-post_18.html என்ற இடுகையின் மூலம் 13 ஆண்டுகள் முன் அளித்திருந்தேன். மேலே வருங் கேள்வி அதன் தொடர்ச்சி. எனவே மீண்டும் வலைப்பதிவிற் பதிகிறேன்.

தமிழ்க்குமுகாயத்தில் உறவுப்பெயர்கள் எப்போது எழுந்தன? தெரியாது. தொடக்கம் பார்த்தால், தமிழ்க்குமுகாயமும் ஒரு தாய்வழிக் குமுகாயமே..50000/60000 ஆண்டுகள் முன்னால் இந்தியா நுழைந்த (ஏதோ வொரு மொழி பேசிய) M130 எனும் பழங்குடி மாந்தர் தாய்வழிக் குடியினரே! அவர் மொழி தமிழென ஒரு சாராரும், ”இல்லை, அவர் மொழியோடு தமிழுக்குத் தொடர்பிருக்கலாம்” என வேறு சிலரும் சொல்வார். 

இன்றைக்கு அருவருப்பாயினும் (எகிப்து அரசகுலத்தில் இருந்தது போல்) அப்பழங்குடியில் தலைமுறை கடந்த பாலுறவு இருந்திருக்கலாம். குடும்பம், குலம், கணம் பெரிதானபிறகு, தலைமுறைகளுக்கிடை பாலுறவு கூடாதெனுங் கட்டுப்பாடு வந்தது. இன்னும் சில ஆயிரமாண்டுகள் கழித்து, உடன்பிறந்தோர், பெரியப்பா/சிற்றப்பா மக்கள், பெரியம்மா/சின்னம்மா மக்களோடு புணர்ச்சி கூடாது என்றானது. இன்றோ, அக்காள் மக்கள், அத்தை/மாமன் மக்கள் உறவுங் கூடாதெனும் நிலைக்கு வந்துள்ளோம். 

இக்கட்டுப்பாடு முற்றிலும் பழக்கத்திற்கு வரவில்லை. ஆனாற் பெரிதுங் குறையத் தொடங்கியுள்ளது. இத்தனை மாற்றமும் மெதுவாய் 60000, 70000 ஆண்டுகளுக்குள் நடந்தவை. மேலே சொன்னவற்றின் மிச்சசொச்சத்தை நம் உறவுப்பெயர்கள் இன்றும் காட்டுகின்றன.

பொதுவுடைமைத் தலைவரான வெடரிக் எங்கல்சு, ”குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் (The origin of Family, Private property and state)” என்ற நூலிற் பழங்குடிக் குடும்பத்தை விவரிக்கும் 2ஆம் அதிகாரத்தில், ”பொதுக் குடிவழியில் வரும் 200 க்கும் மேற்பட்ட உறவுகளைச் சிக்கலின்றி அடையாளங் காட்டும் தமிழர் இலாவகத்தை விதந்துகூறியிருப்பார். அவர் கூற்று கீழே.

And these are not mere empty names, but expressions of actual conceptions of nearness and remoteness, of equality and difference in the degrees of consanguinity: these conceptions serve as
the foundation of a fully elaborated system of consanguinity through which several hundred different relationships of one individual can be expressed. What is more, this system is not only in full force among all American Indians (no exception has been found up to the present), but also retains its validity almost unchanged among the aborigines of India, the Dravidian tribes in the Deccan and the Gaura tribes in Hindustan. To this day the Tamils of southern India and the Iroquois Seneca Indians in New York State still express more than two hundred degrees of consanguinity in the same manner. And among these tribes of India, as among all the American Indians, the actual relationships arising out of the existing form of the family contradict the system of consanguinity.

என்ன போகூழோ தெரியவில்லை, நம்மூர்ப் பொதுமையர் இக்குறிப்பை ஒரு நாள் கூட விதந்து ஓதியதில்லை. இந்தியாவில் பொதுவுடைமை கட்டுங் கவலையே அவருக்குப் பெரிதானது போலும். தமிழ்த் தேசிய இனமெல்லாம் அவருக்குப் பொருட்டில்லை. 

”சேயோன், பூட்டன், பாட்டன், தந்தை, தான், மகன், பெயரன், கொள்ளுப் பெயரன், எள்ளுப் பெயரன்” என ஒவ்வொரு தமிழனும் தன்னோடு 8 தலைமுறைகளைப் பொருத்தவியலும் பெருமையை ஏன்சொல்ல வேண்டும் என நினைத்தாரோ என்மவோ?..(இதேபோல் பெண்களில் 8 தலைமுறையினரையும் பொருத்த இயலும்.)

முந்தைய இடுகையில், அம்மா>அம்பா>அப்பா என்ற சொற்கள் எழுந்ததை முதலிற் சொன்னேன். பின் ஆய் என்ற சொல்லுக்கு செலுத்தல், நடத்தல், தலைவி என்றெல்லாம் பொருள் ஏற்பட்டதைச் சொன்னேன். தாய்வழிக் குமுகாயம் மாறித் தந்தைவழிக் குமுகாயம் ஆனபோது அப்பன் ஆயன் ஆனதையும், அம்மை ஆயியானதையும் சொன்னேன். 

ஆயன்= மந்தைகளின் தலைவன். ஆயின் கூட்டம் ஆயமானது; அதாவது கணம் ஆனது. ஆய்த்தி>ஆய்ச்சி> ஆச்சி>அச்சி, ஆய்த்தன்>ஔத்தன்>அத்தன்>அச்சன் என்ற வளர்ச்சிகளையும் பேசினேன் அப்பனை அப்பு என்று தென்பாண்டியில் நெருக்கங் காட்டி அழைப்பது போல் அச்சன் அச்சு என்றும் அழைக்கப்பட்டார். 

அய்யை> அய்ஞை>அய்நை>அந்நை>அன்னை என்பது ஆய்க்கான இன்னொரு வளர்ச்சி. அய்யை>அய்ஞை>அய்ங்ஙை>அங்கை>அங்கை> அக்கை; அங்கை= தாய் என்பது மேலுமொரு வளர்ச்சி. பழங்குடிக் கணத்தில் குழந்தைக்குத் யார்தாயென்பது ஓரளவு தெரிந்தாலும் தாய் அக்காளாகவும் இருக்கலாமே?. அக்கைக்கும் அங்கைக்கும் வேறுபாடு தெரியாத காலம் அது. அத்தன்>அந்தன் என்றுஞ் சொல்லப்பட்டான்,. அந்தை என்பதும் அப்பனைக் குறித்தது.

இனி இன்னொருவகைப் பார்வையைப் பார்ப்போம். இது பழங்குடி மனப்பான்மைக்கு மாறானதில்லை. ஆனால் தனிச்சொத்து ஏற்பட்டபிறகு எழுந்தசொல். தனிச்சொத்து ஏற்பட்டபிறகு சொத்திருப்போர், சொத்திலாதோர் என்ற பிரிவு முல்லை நாகரிகத்தில் ஏற்பட்டது. 

மாடுகள், கால்நடைகளே அற்றைச் சொத்துக்கள். மேல், கீழ் என்ற கருத்து இக் குமுகாயத்தில் ஏற்பட்டது. முன்பிறந்தானைக் குறிக்க ஐயன் என்ற சொல் பற்றாமற் போனது. தலைமுறைப் பாலுறுவு தடுக்கப்பட்டதால், அள் எனும் வேர்ச்சொல் மேல், முன், முந்தைய என்ற பொருள்களைக் குறிக்கும் அள் எனும் வேர்ச்சொல்லில் இருந்து அள்நன்= அண்ணன் என்ற சொல் எழுந்தது. 

அண்ணன் என்பது தனிச்சொத்து ஏற்பட்டபிறகு உருவான சொல். அள்+க்+கு என்ற சொல் மேல்நிலையைக் குறித்தது.. வடக்கு, தெற்கு, குடக்கும், குணக்கு போல் அள்க்கு>அக்கு என்பது உயரத் திசையைக் குறித்தது; அக்கு +ஆள் = அக்காள் ஆனாள். ’அத்து’ நெருக்கத்தைக் குறித்ததால், ”அத்தான்” எழுந்தது.

அக்கு எழுந்தபிறகு அதன் எதிர்ச்சொல் எழாதுபோமா? தாளென்பது அடி, கீழ் என்று பொருள் கொள்ளும். கிழாரியக் காரணங் காட்டி நம்மைத் தாழ்த்திக் கொள்ள எண்ணின் அடியேன் என்கிறோமே? தாளேன்> தாள்ன்> தான், தாளேம்> தாள்ம்> தாம். என்பன இயல்பான வளர்ச்சி.. இவையும் தனிச்சொத்து எழுந்தபின் உருவான சொற்கள் தாம். 

போன்ம் என்ற சங்ககாலச்சொல் இன்று போம், போன் என ஆகுகிறதே? தானும், தாமும் இன்னும் திரிந்து தன், தம் என ஆவது நெடில்>குறில் ஆகும் நிலை. தாள்ங்குதள்>தங்குதல் = கீழிருத்தல். இருத்தல்

ஆளுக்கு மாறாய் ஐ என்ற சொல்லும் பெண்ணைக் குறிக்கும் ஈறாக மாறியது. அக்கு+ ஆள்= அக்காள் என்பதுபோல் அக்கு+ஐ = அக்கை ஆயிற்று. கை என்பதற்கான சிறுமைப் பொருள் நாலடியார் காலத்திற்றான் (பொ.உ.400-500) ஏற்பட்டது. அக்+கை எனப்பிரிப்பது பொருளற்றது. 

என்னைக் கேட்டால் ஐயையைப் பெண்பால் விகுதியாய்க் கொள்வது நல்லது. அடுத்தது தங்கு+ஐ = கீழிருக்கும் ஐ. தனக்குப்பின் பிறந்தவள். தங்கின் வலிப்புச்சொல் தக்கு. அதிற் கிளர்ந்தது தக்கணம். 

தம்+ ஆய் >தம்மாய்>தவ்வாய்>தவ்வை (மகர, வகரப் போலி)> தய்யை (வகர, யகரப் போலி)>தாய் தம்+ அப்பன்> தமப்பன்> தகப்பன்; தம்+ அந்தை= தம்மந்தை>தவ்வந்தை>தய்யந்தை> தய்ந்தை>தந்தை; தம்+ அய்யன்= தமய்யன்>தமையன் (பழங்குடிப்பெயரான ஐயன் தனிச் சொத்துக் காலத்தில் பொருள் மாற்றமுற்றது) தம்+ அக்கை = தமக்கை (இதுவும் அப்படித்தான்.) தம்+பின் =தம்பின்>தம்பி. தம் அங்கையைத் தம்+ அங்கை= தமங்கை>தவங்கை>தய்ங்கை>தங்கை என்றும் புரிந்து கொள்ளலாம்.

தான், தாமிற்கு முந்தைய சொற்கள் யான், யாம். யாத்தல் = கட்டுதல்; யாம் கட்டப்பட்ட கூட்டம், கணம். யான் = கட்டிய கூட்டத்தில் ஒருவன். யான், யாம் என்ற சொற்கள் என், எம் என்ற சொற்களை உருவாக்கும். இதேபோல் நாம், நான் என்பது நெருங்கிய தன்மையைக் காட்டும். நள்ளுதல் = நெருங்குதல், நட்பாதல். நள்+ங்+கை = நங்கை இதை நம் + அங்கை >நங்கை = மங்கை (நகர, மகரப் போலி; நுப்பது - முப்பது, நுனி - முனி என்ற போலிகளை நோக்குங்கள்) என்றும் புரிந்துகொள்ளலாம். நம்+பின் = நம்பின்>நம்பி

அக்கச்சி, அத்தாச்சி, அண்ணாச்சு (அண்ணாச்சி என்பது இதன் பேச்சுவழக்கு), அப்பச்சு (>அப்பச்சி), அம்மச்சி என்ற கூட்டுப்பெயர்கல் எல்லாம் நெருக்கங் காட்டும் இயல்பான பெயர்கள். இவை ஏதோ கொச்சை என்பது மேல்தட்டுப் பார்வை. மேல்தட்டு மக்கள் அச்சி போட்டுப் பயன்படுத்தவில்லை என்பதால் அச்சி போடுவது கொச்சை வழக்காகாது. நாளாவட்டத்தில் னகர ஈறு ஆனைக்
குறிக்கவும், ளகர ஈறு பெண்ணைக் குறிக்கவும் தொடங்கியது. நல்ல தங்காள் என்ற கதை உங்களுக்கு ஞாவகம் வருகிறதோ? இதேபோல் அம்மாள் என்பதும் ஏற்றுக்கொள்ளக் கூடியதே.

அன்புடன்,
இராம.கி.

.