Monday, February 18, 2008

மீள்தொடங்கல்

தமிழகத்தில் தெரியும் அரசியல் தடுமாற்றம், ஈழம் பற்றிப் பேசுவதில் விரவிக் கிடக்கும் அச்சப் போக்கு, "என்னை ஒட்டாது இருந்தால் போதும்" என்னும் தாமரையிலைத் தண்ணீர்மை, தமிழகம் - ஈழம் பற்றிய வரலாற்றுத் தெளிவில்லாமை - இது போன்ற கருத்துகள் குறித்துத் துண்டும் துணுக்குமாய் நான் கேட்ட ஒரு உரையாடலும், இதன் முடிவில் தமிழர்போக்கு பற்றியிருந்த சில முன்னிகை(comment)களும் என் மனத்தை உறுத்திக் கொண்டு இருப்பவை.

முதலில் உரையாடலைப் படிப்போம். [உரையாடல் அதே சொற்களில் கீழே இல்லாவிட்டாலும், கிட்டத்தட்ட அமையுமாறும், அதே பொழுது படிக்கச் சுவை கருதியும், கொஞ்சம் எடுவித்துக் (edit) காட்டியிருக்கிறேன்.]
----------------------------------------------
இங்கே பாருங்க தம்பி, பாலைலே வானம் பார்க்குறது ..... மழைக்காகவும் இருக்கலாம், நாள்காட்டு, கோளுன்னு ராத்திரி வெளிச்சத்துக்காகவும் இருக்கலாம். நல்ல வேளையா, மழைக்கு வானம் பார்க்குற சோகம் இந்த வருசம் இல்லை; கொட்டோ கொட்டுன்னு கொட்டி, குளம், கம்மாய்ன்னு வெள்ளமாக் கிடக்கு. இருந்தாலும் வெல வாசிதான் கன்னாப் பின்னான்னு ஏறிக் கிடக்கு.

ஆமாண்ணே! பொன்னி வெல கிலோ இருவத்தஞ்சு சொல்றான். ஒரு நாளைக்கு நூறு ரூவா இருந்தாலும் ஒரு குடும்பம் ஒழுங்காச் சாப்பிட முடியாது போலெ. பக்கத்துலே ஏதாச்சும் வாங்கிவருவோம்னு பார்த்தா, பேருந்துக் காசு 4 ரூவா, 5 ரூவா இருக்கு. ஓர் இளநீ 8 ரூவா, 10 ரூவா விக்குது. நன்னாரி "சர்பத்" கூட, அஞ்சு ரூபாய்க்குக் குறையமாட்டேங்குறான். எங்கேயும் குடிக்கிறதுக்கு நல்ல தண்ணியை காணோம். தவிச்ச வாய்க்குத் தண்ணீர், மோர் குடுக்க, இப்ப யார் பந்தல் வைக்குறா, சொல்லுங்க? கடைசிலே எல்லாப் பயலுகளும் ஆளுக்கு ஒரு புட்டில் (bottle) தண்ணியைக் கையிலே தூக்கிட்டே அலையுறாய்ங்க..... "கலி காலத்துலே, காசுக்கு தண்ணி விப்பாக"ன்னு கேள்விப் பட்டிருக்கேன்; இப்ப அது உண்மையாப் போச்சு.

என்ன தம்பி, நாமளாவது அன்னாட வாழ்க்கையிலே அல்லாடறதைப் பத்திப் பேசிட்டிருக்கோம். தெற்கிலும் தெற்கே (புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.) உசிருக்குல்லே அல்லாடுறாக. அதப் பேச மாட்டேங்குறீயேப்பா?

பேசப் படாதுன்னு இல்லைண்ணே! நம்மளை யாரு பேச விடறாக? வேரோடே அவுகளை அழிச்சுப்புடத்தான் ஒரு கூட்டமே கருவங் கட்டிக்குனு அலையுதே! நம்மூர்க்காரவுகளும் இதுக்கு தொணையாயில்லெ போறாக! கத்தி, கபடா, தளவாடம்னு எல்லாம் இங்கேர்ந்து தான் போகுதுன்னு பரவலாச் சொல்லிக்கிடறாக.

என்னப்பா நாயம்? நம்ம பங்காளிகளைக் கொல்ல நாமளே துணை போகலாமா? கேக்க ஒரு நாதியில்லையா?

ஆமாண்ணே! தெக்கத்திகாரவுகளைப் பத்தி வெளிப்படையா யாருண்ணே நம்மூர்லே பேச முடியுது, சொல்லுங்க? ஒரு நாளிதழ், ஒரு தாளிகை, ஒரு தொலைக்காட்சி இப்படி ஏதாவது ஒண்ணு வெளிப்படையா நம்மூர்லே ஆதரிச்சுப் பேச முடியுதா? உடனே "தேசத் துரோகம்"னு சொல்லி அமத்தியர்றாய்ங்க. (எந்த அரபு நாட்டுலேயாவது பாலத்தீனியனைப் பத்திப் பேசமுடியாமல் இருக்க முடியுமான்னு யோசிச்சுப் பாருங்க. வடக்கு அயர்லாந்து பத்தி தெற்கு ஐரிசுக்கார பேசாம இருந்திருக்காகளா? போசுனியா பத்தி யுகோசுலாவுக்கார? ஏன் நம்ம மட்டும் இப்படிப் பேசமுடியாம இருக்கு?) தெற்கத்தியாட்கள் பேரைச் சொன்னாலே, அவுக நாட்டுப் பேரை எடுத்தாலே, ஒரு மாதிரியா இங்கே பார்க்குறாய்ங்களே? அது ஏன்? ஒரு விலங்கு பேரைச் சொன்னாலே "உள்ளே போடுறா"ன்னு பயமுறுத்துற அளவுக்கு, நம்முரைக் கெடுத்து வச்சிருக்காய்ங்களே, அது ஏன்?. இதுலே பேராயம், பாரதிய சனதா, அய்யா கழகம், அம்மா கழகம், மத்த கழகங்கள்னு பேருகள் தான் வேறேயெ தவிர, எல்லாரும் ஒரே குட்டையிலே ஊறுன மட்டைகளாட்டம் தான் நடந்துக்குறாய்ங்க. தமிழ், தமிழன்னு சொல்றதெல்லாம் ஒரு பாவலாத் தான். மனசுலே இருக்குறதை வெளியிலே சொல்ல முடியாம, மருகிக்கினே பயந்து சாகுறாய்ங்க. அவனவன் சம்பாதிச்சதைக் காப்பாத்திக்கோணுமில்லெ. இவுனுக போடுற கட்டியத்துலே (condition), அண்ணன், தம்பி, தவறிப் போனா, ஒப்பாரி வச்சு பாடப்புடாதாமே? "என்னடா இது, வாழ்றது நம்முர்லே தானா?"ன்னு சந்தேகம் நமக்கு அப்பப்ப வந்துருது; மொத்தத்துலே, நாடு போற போக்குச் சரியில்லெண்ணே.

ஆமா தம்பி, உடுத்துன துணியோடு எல்லாத்தையும் இழந்து ஓடியாரவுகளையும் "ஊடுருவல்"ன்னு சொல்லிடுறாய்ங்க. என்னய்யா இது, பொழைப்புக்கா ஓடியார்றாக, உசிரு நாளைக்கு நிலையில்லெ, "வானத்துலேர்ந்து குண்டு போட்டுக்குணே இருக்கான்"னு பதறியடிச்சு ஓடியார்றாக - அப்படின்னாலும் அவுகளை ஆதரிக்குறவுகளுக்கு இங்கே தடா, பொடா தான். சரி, ஓடியாறத்தான் வழி விடலை. கொல்லுறதுக்கு வழிபண்ணாம இருக்கலாமில்லியா? அதுவுமில்லியே? "இந்தாடா, மாப்புளே, இதையும் வச்சுக்க, எங்க பங்காளிகளை நீயே வெட்டிச் சாய்ச்சுரு, அப்பத்தான் ஒழுங்கா இருப்பாய்ங்க"ன்னு அரிவாள், கத்தியை எதிரிக்கு அணுக்கம் பண்ணிக் குடுத்தா எப்படி?

அண்ணே சரியாச் சொல்றீக! நம்மூர்லேர்ந்து சிங்களக்காரனுக்கு ஆயுதம் கொடுக்குறது கொஞ்சம் கூடச் சரியில்லேண்ணே. உடம்பிறந்தானுக்கு நாமளே உலை வெக்கலாமா?

நல்லாக் கேட்டுக்க தம்பி, சிங்களக்காரனுக்கு ஆயுதம் கொடுக்கறதை மட்டும் பார்த்தா நமக்கு நிலைமை புரியாது; இன்னும் ஆழப் போனாத்தான், சிக்கல்லே இருக்குற சூழ்க்குமம் புரியும். சிங்களத்துக்கும் இங்கேயும் ஏதோ ஒரு விட்ட குறை தொட்ட குறை இருக்கு போலிருக்கு. அங்கே தமிழரசு ஒண்ணு ஏற்படப்படாதுண்ணு தடுக்குறதுலே, நம்ம நடுவணரசு உறுதியாவே இருக்கு. நம்மளைப் போன்ற தமிழ்க்காரவுக மனசு நடுவணரசுக்கு மாறியிருக்குன்னு கூட அது உணர்ந்ததாத் தெரியலை.

அதெப்படிண்ணே! தமிழராகிய நாமளும் சேர்ந்தது தானே நம்ம நடுவணரசு? நம்ம உணர்வை உதறித் தள்ளிருமா?

பாக்குறதுக்கு நடுவணரசில் நாம சேர்ந்து இருக்குறோம்குறது ஒரு தோற்றம் தம்பி, உண்மையிலே நம்ம ஆட்கள் அங்கே எதுவும் மாறிச் சொல்லலை; நடுவணரசு கேட்கவும் இல்லை. இவய்ங்க ஒரு பக்கம் சில அமைச்சுகள்லெ பரிபாலனம் பண்ண, இன்னொரு பக்கம் நடுவணரசு எடுக்குற முடிவுகள் நம்ம எண்ணத்துக்கு மாறித்தான் இருக்கு. அதோட மட்டுமில்லை; இன்னொரு பக்கமும் பாரு, படகு எடுத்துக்கினு நம்மூர்க்கரவுக கடலுக்கு மீன்பிடிக்கப் போனா, "அங்கே புடி, இங்கே புடி"ன்னுனு சிங்களத்தான் தென் கடல்லேயும், கீழக் கடல்லேயும் குண்டு போடுறான். இந்தக் குண்டுமாரிலே மாட்டிக்கிணு கொஞ்சம் கொஞ்சமா நம்ம ஆளுகளும் செத்துப் போறாக. போனவாரம் கூட இப்படித்தான் ஓராளு போயிட்டாரு; என்னாச்சு, ஏதாச்சுன்னு கேக்கக் கூட தமிழக அரசலே யாரையும் காணோம். செய்தித்தாள்லேயும் எங்கேயோ ஒருமூலையிலே பத்தி போடுறான். கடைசிலே, "இந்தாங்கப்பா, ஒரு லெச்ச ரூவா வச்சுக்குங்க, இனிமே அந்தப்பக்கம் படகுலெ மீன்புடிக்கப் போகாதீக"ன்னு போதனை மட்டும் கொடுத்தர்றாக. "என்னய்யா இது, தெரிஞ்ச தொழில் மீன்புடிக்குறது மட்டும் தானே! அங்கே போகாதேன்னா, எப்படி? நம்மூருக்கும் அந்தக் கடல் உரிமைதானே? மீன்புடிக்காம, நாங்க உயிர்வாழ்றது எப்படி? ஆக, ஒண்ணும் நமக்குப் புரிய மாட்டேங்குது. எந்த நாட்டுலே நாம இருக்கோம்? நாம தமிழ் தான் பேசுறமா, இல்ல, சிங்களம் பேசுறமா?"

சரியாச் சொன்னீக அண்ணே! வணிகம் அது இதுன்னு சொல்லி நம்மூர்க் கப்பல் நம்முர்த் துறைகள்லே அணையலாம்னு, கடலுக்குள்ளே நம்ம அரசே வாய்க்கால் வெட்டப் போனா, "அய்யோ, எங்க சாமி போட்ட பாலத்தை வெட்டுறாய்ங்களேன்னு" முட்டாப் பயக சிலர் நம்மூர்லேயே ஒப்பாரி வைக்குறாய்ங்களே? அதையும் கவனிங்க.

அதே ஏன் கேக்குறே, தம்பி, வெவரங் கெட்ட பயலுகளுக்குச் சேதுன்னா என்ன பொருள்னு கூட வெளங்கலெ! வடக்கத்திக்காரன் இராமர் அது இதுன்னு சொன்னான்னா, இவய்ங்களும் ஆமாஞ்சாமியா? நம்மூர் இயற்கை நமக்குல்லே புரிபடோணும். "சேதுன்னா தமிழ்லே பாலமில்லைப்பா; கரை; சேற்றாலே சேர்த்தது சேது. கம்மாய்க்கரை மாதிரி கிழக்குக் கடலுக்குச் சேது ஒரு கரை; சேதுக்கரைக்குத் தெக்கெ இருக்குறது தென்கடல்"னு சொல்லியும் விளங்கலே. அந்தக் கரை வழியா பத்தாயிரம் வருசத்துக்கும் முன்னாடி, விலங்கு, மனுசனெல்லாம் ஊர்ந்து, நடந்து போய் தெற்கே இருக்குற தீவை ரொப்பியிருக்காய்ங்கப்பா, ஒரு காலத்துலே அது பழந்தமிழ் நாடுய்யா. அதுலே ஒரு பகுதி ஏழ்பனை நாடு, இன்னைய யாழ்ப்பாணம். எப்படிப் பார்த்தாலும் அந்தத் தீவு நம்ம ஊருக்கு நெருக்கமய்யா. இன்னைக்கி எப்படியோ அது மாறிப் போயிருச்சு. சிங்களனும் தமிழனும் சேர்ந்திருக்குறாப்புலே ஆயிப் போச்சு. பின்னாடிச் சண்டையும் ஆயிப்போச்சு. இதெயெல்லாம் விளங்கிக்காம, இராமர்தான் பாலங் கட்டுனார்னா, தீவுக்குள்ளே அவருக்கு முன்னாடி விலங்குகளும், மக்களும் எப்படிப் போனாங்க, பாலம் கட்டியா? - ன்னு ஒரு பய கேக்க மாட்டேங்குறான். இல்லெ, யானை, பூனையெல்லாம் பத்தாயிரம், இருபதாயிரம் வருசத்துக்கு முன்னாடி, உப்புத் தண்ணியிலே நீச்சலடிச்சுப் போய்ச் சேர்ந்துதா?

சேதுங்குறது ஒரு இயற்கை மேடுய்யா; நீரோட போக்குக்குத் தக்க மாதிரி அதன் மட்டம் கூடும், குறையும். கால மாற்றத்துலே ஏற்கனவே இருந்த கரையையும் (=சேதுவையும்) மீறி கொஞ்சங் கொஞ்சமா கடல் மட்டம் இப்ப உயர்ந்து போச்சு; இயற்கையான மேடும் (=சேதுவும்) கூட இப்பக் கடலுக்குள்ளே முழுகிப் போச்சு. "சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்" னு அந்தக் கடல்மேட்டுக்கு மேலே இன்னும் கரையை உயர்த்தி வீதி போடுங்கப்பான்னு பாரதி பாடினானே? இந்தப் பயலுகளுக்கு அதாவது புரியுதா? "ஆகா, பாட்டுக்கு ஒரு புலவன் பாரதி"ன்னு மேடையிலே பேசுனா மட்டும் போதுமா? அடப் புரியாத பயலுகளா, இராமயணக் கதைக்கும் இந்தச் சேதுவுக்கும் தொடர்பில்லைன்னு தலைலே அடிச்சிக்கினு சொன்னாலும் கேக்குறாப்புலே தெரியலையே. வேணுமின்னாச் சாமியை நல்லாக் கும்பிடுங்கப்பா! அதுக்காக, இல்லாத கதையெல்லாம் சாமி மேலே இட்டுக் கட்டாதீக.

ஆமாண்ணே! இந்த அடிப்படையைப் புரிஞ்சுக்காம, உச்ச நய மன்றம் (supreme court) வரைக்கும் வழக்குப் போடுறாய்ங்க! முட்டாப் பயலுகன்னு இவய்ங்களைச் சொல்லாம, வேறே யாரைச் சொல்லுறது போங்க? தேர்தலுக்காகப் பயந்துக்குணு பேராயக் கட்சிக்காரங்களும் உண்மையை இழுத்து மூடிருவாய்ங்க போலேருக்கே; மருத்துவரய்யா வேறெ, கூட இப்பச் சேர்ந்துக் கிட்டாரு.

ஆமா தம்பி, யாரோ சொன்னாய்ங்க! அவரவருக்கு அவரவர் அரசியல்னு. இது ஒருபக்கம் இருக்க, இன்னொரு பக்கம் இதுதான் சாக்குன்னு சிங்களக்காரன் தன்னூர்லேர்ந்து 30 இடங்களைப் பட்டியல் போட்டு "இதெல்லாம் இராமாயணத்தோட தொடர்புள்ள இடங்கள்"னு குழம்புன குட்டையில மீன்புடிக்கிறான். இங்கெ சில கேணப்பயல்களும் அதெ எடுத்துக்கிட்டு கேக்காய்ங்க: "பார்த்தீகளா, நாங்க சொன்னது சரியாப் போச்சு, இராமர், சீதையோட பாதங்கள் இங்கெல்லாம் பட்டிருக்கு; அப்பேர்க்கொத்த பாலத்தை வெட்டலாமா?" கூறு கெட்ட நம்ம பயல்களும் இதெக் கேட்டுக்கிட்டு இருக்காய்ங்க. அட மடப்பயலுகளா! சிங்களனுக்குத் தேவை - வாய்க்கால் அமையக் கூடாது; அப்படி அமைஞ்சா, கொழும்புத் துறைமுகம் சுத்தமாப் படுத்துரும்; அவன் பொருளாதாரம் பெரிசா அடிபட்டுரும்; தூத்துக்குடித் துறைமுகம் இதுக்கு மாறா ஓங்கி எழுந்திரும்; அதனாலெ, அதெ நிறுத்தணும்னு சொல்லி "போடுறா அனுமாரு"ன்னு குட்டிக் கரணமே அடிக்குறான். அவன் சூழ்ச்சி இவய்ங்களுக்குப் புரியலை. பொருளாதாரம் பேசுறாய்ங்க பொருளாதாரம், ரொம்ப வக்கணையா.....

ஆமாண்ணே, போற போக்கைப் பார்த்தால், மொத்தத்துலே சேதுக் கால்வாய்த் திட்டம் இனிமேப் பிசிபிசுத்துரும் போலேருக்கு. ஒருபய கண்டுக்க மாட்டான்னு நினைக்கேன்.

ஆமா தம்பி, தமிழன் தான் ஏமாளியாச்சே. "ஊரு ரெண்டானாக் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்"னு சொல்லுவாக. இந்தக் கழகங்கள் தான் இங்கே ரெண்டாகிக் கிடக்கே, அய்யா சொன்னா, அம்மாவுக்கு ஆகலை; அம்மா சொன்னா அய்யாவுக்கு ஆகலை. அப்புறம் என்ன? எல்லாக் கூத்தாடிகளும் தனக்கு என்ன தேறும்னு கும்பல் போட்டு கூடி வர்றானுக. இவுக சண்டை என்னைக்கி நிக்குதோ, அன்னைக்குத் தான் நமக்கு விடியல்னு ஆகிப் போச்சு. அதுக்குப் பொறவுதான் ஊருலகமும் நம்ம மதிக்கும். 

பொதுவா, தமிழ், தமிழன்னாலே இந்தியாவுலே, உலகத்துலே, ஏகப்பட்ட பேருக்கு இளக்காரமாய்த்தான் இருக்கு. அதுக்கு முதற் காரணம் நமக்குப் பெருமிதமில்லே; நம்ம வரலாறு நமக்கே தெரியலை; எதுக்கெடுத்தாலும் உணர்ச்சி வசப்படுறோம். கட்சி அரசியல்லே வெட்டுக் குத்துன்னு ரொம்பவே சண்டையடிச்சுக்குறோம். 

இத்தனை நாள் பெரியாருக்கு அப்புறமும் எது மூட நம்பிக்கை, எது பின்பற்ற வேண்டியதுன்னு தெரிஞ்சுக்கிறதில்லெ. பாழாப் போன திரையுலகுலே தெரியுற நிழழை எல்லாம் நிலைன்னு நினச்சு, ஆகா, ஓகோன்னு குதிக்குறோம். 

நம்மில் பலருக்கும் ஊறிப்போன சாதியுணர்வும் தடுக்குது. தமிழன்குற உணர்வாக்கம் இன்னும் சரியா அமையலெ. இந்தியன்குற அடையாளத்துக்கும், தமிழ்ன்குற அடையாளத்துக்கும் உள்ள உறவைப் புரிஞ்சுக்கலே; ஒண்ணைப் பேசுனா, இன்னொண்ணு அதுக்கு எதிருன்னு ஊரெல்லாம் பரப்புரை நடக்குது. மொத்தத்துலே தமிழன்குற முகவரியை மறந்துருங்கிறாக.
-------------------------

இந்த உரையாடலின் கடைசியில் வரும் முன்னிகைகள் என்னுள்ளும் ஆழ்ந்து இருப்பவையே. தமிழரின் தற்போதைய நிலைக்கு உள்ளிருக்கும் முரண்பாடுகளே காரணம் என்று நான் எண்ணுகிறேன். அதோடு, வெளிமுரணைக் காட்டிலும் உள்முரண் ஆழ்ந்து கவனிக்கப் பட வேண்டியது என்று இயங்கியலில் (dialectics) சொல்லுவார்கள். தமிழரின் இன்றைய அவலம் பற்றிய சிந்தனைகள் எழும்போதெல்லாம், தமிழ் - தமிழர் என்ற பெருமிதத்தைக் கூட்டும் வகையில் எனக்குத் தெரிந்ததை அவ்வப்போது என் பதிவில் எழுதிக் கொண்டுதான் வருகிறேன். எது மூட நம்பிக்கை, எது பின்பற்ற வேண்டியது என்றும் எனக்குத் தெரிந்த வகையில் தெளிவுறுத்தி வருகிறேன். கூடவே நம் வரலாறு பற்றியும் சொல்லி வருகிறேன். இருந்தாலும் இப்படிச் சொல்லுவதைத் தடுத்த நிறுத்தும் முயற்சி, ஒரு சிலரால் தொடர்ந்து வலைப்பதிவுலகில் செய்யப் பட்டே வருகிறது.

நடுவில் கொஞ்ச காலம் ஒரு மாதிரி சலிப்பு வந்ததிலும், ஊர்சுற்றியதிலும், என் பதிவு தொய்ந்து போனது. அப்படித் தொய்ந்தது சரியில்லை என்ற எழுச்சியாலும், "செய்தக்க செய்யாமையானும் கெடும்" என்ற எண்ணத்தாலும், கிளர்ந்து, மீண்டும் ஒருமித்து எழுத வேண்டும் என்று முனைந்த போது, தமிழ்மண நிர்வாகத்திடமிருந்து நாள் காட்டச் சொல்லி ஓர் அழைப்பு வந்தது. அதையே ஒரு தூண்டுகோலாய் எடுத்துக் கொண்டு மீண்டும் இப்பொழுது எழுதத் தொடங்குகிறேன்.

சென்ற காரிக்கிழமை (= சனிக்கிழமை) மாலை நேரத்தில் மக்கள் தொலைக்காட்சியில் தேனிசைச் செல்லப்பாவின் இசை நிகழ்ச்சியைத் தற்செயலாகக் கொஞ்ச நேரம் கேட்டேன். பிடித்திருந்தது. அவரைப் போன்ற பாடகர்கள் பெருகவேண்டும். அந்தப் பாடல்வரிகளாவது நமக்கு உறைக்கட்டும்.

உலகத் தமிழினமே எண்ணிப்பார் - நீ
உறங்கினால் வரலாற்றில்
யாருன்னை மன்னிப்பார்?
................

- தேனிசைச் செல்லாப்பா பாடிய ஒரு பாடலின் தொடக்க வரிகள்.. (இந்தப் பாடலை முழுக்கவும் mp3 வடிவில் யாரேனும் வலையில் ஏற்ற முடியுமோ?)

அன்புடன்,
இராம.கி.

Tuesday, January 29, 2008

காலங்கள் - 7

சூரிய மானத்து ஞாயிறுகள்

இராசிப் பெயர்களை ஆய்ந்து பார்க்கத் தொடங்கி, இதுவரை மூன்று பெயர்களைப் பாத்த்தோம். இந்த இராசிப் பெயர்கள் சூரிய மான வழக்கத்தில் ஞாயிற்று மாதப் பெயர்களாகக் குறிக்கப் படும். இந்த இடத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது சோழர், பாண்டியர் காலக் கல்வெட்டுகளாகும். அவற்றில், தைத் திங்கள், சுறவ ஞாயிறு என்று திங்கள் மாதப் பெயர்களும், ஞாயிறு மாதப் பெயர்களும் சேர்த்துக் குறிக்கப்படும்.

[இந்தக் கல்வெட்டுக்களில், பல காட்டுகளில், இங்கு நான் எழுதுவது போலத் தனித்தமிழில் அமையாமல், சங்கத மொழிபெயர்ப்பே மணிப் பவளமாய்ப் பயிலப் படும். அப்படிச் சங்கதம் பயின்றதற்கு காரணம் அன்று பெருமானருக்கு அரசர் கொடுத்த முகன்மையும், அதன் வழியாய் வேதநெறி பெற்ற பலன்களுமே காரணமாகும். காரணமில்லாமல் பிற்கால அரசர்கள் சதுர்வேதி மங்கலங்களைப் பெருமானருக்குத் தானமாய்க் கொடுக்கவில்லை. தெரிந்தோ, தெரியாமலோ சென்ற 1800 ஆண்டு காலத் தமிழக வரலாறு கிழாரிய வரலாறு - feudal history ஆகவே இருக்கிறது. அதில் பெருமானர் குமுகாய அறிவுய்திகளாய் - societal intelligentia - இருந்து குமுகாய நடைமுறையைச் சரியென்று சொல்லும் இடைப்பரலியராய் - interpreters - இருந்தனர். முடிவில் சோழராட்சியில் நடந்த இடங்கை, வலங்கைப் போராட்டங்கள், பழக்கங்களுக்கும், இவர்கள் ஆயக்காலாய் இருந்தனர். (கோயிலில் உள்ள ஊருலவுத் திருமேனிகளை வெளியே தூக்கி வரும் போது முட்டுக் கொடுத்து ஆங்காங்கே நிறுத்தும் கால்களுக்கு ஆயக் கால்கள் என்று எங்கள் பக்கம் சொல்வார்.) இந்த 1800 கால வரலாற்றைப் புரியாமல், இன்றையப் பெருமானோர் அல்லாதாரின் எதிர்வினைகளை விளங்கிக் கொள்ளவும் முடியாது.]

இனி அடுத்து இன்னும் மூன்று பெயர் விளக்கங்களைப் பார்ப்போம்.,

கடகம்:

வலயச் சுற்றின் நான்காம் பகுதி கடகம், அதாவது நண்டு; பார்ப்பதற்கு நண்டு போல் இந்தத் தொகுதி பழந்தமிழனுக்குக் காட்சி அளித்திருக்கிறது. அதுவும் ஓர் உருவகம் தான். இந்தச் சொல்லின் வரலாற்றைப் பார்ப்போம். குணவுதல், குடவுதல் என்பன தமிழில் குல் என்னும் வேரில் வளைதல் என்ற பொருளில் பிறந்த வினைச் சொற்கள். குடவிக் கிடக்கும் கடல் குடா என்று ஆகும். குடவிக் கிடக்கும் கலம் குடம். குடவுதல் என்ற சொல் திரிந்து குடகுதலும் ஆகும். குடகம் என்பதும் வளைந்து கிடப்பதே. குடகம் கடகம் என்று திரிந்து பெட்டியைக் குறிக்கும். பனையோலைக் கடகம் சிவகங்கைப் பக்கத்தில் பேர் பெற்றது. (அதைப் பேச்சு வழக்கில் கடகாம் என்று அழைப்பர்) கடகம் என்ற சொல், வளைந்த மதில் கொண்ட கோட்டை (இதுவும் வளைந்ததுதான்) என்ற பொருளும் கொள்ளும். அந்தக் கால ஒட்டர நாட்டுத் (ஒரிசாத்) தலைநகரம் கடகம் (இன்று கட்டாக் என்று சொல்லப் படுகிறது.) வாள்சண்டை போடுவாரின் மெய்யைக் காப்பாற்றுதற்கான வளைந்த கேடயமும், கடகத்தில் இருந்து பிறந்த சொல் தான். வளைந்த, வட்டமான, கையில் போட்டுக்கொள்ளும் கங்கணத்திற்கும், வளையலுக்கும், அரைஞாணுக்கும் கூடக் கடகம் என்ற பெயர் உண்டு. குடகிக் கிடக்கும் வால் கொடுக்கு என்று ஆகும். நண்டு தன் கால்களையும், கைகளையும் எப்பொழுதும் வளைத்து நிற்பதால் அதற்கும் கடகம் என்றே பெயர். நண்டைப் போல உருவம் காட்டி கையில் உள்ள பெருவிரலைச் சுட்டுவிரல் தொட, மற்ற விரல்கள் உள்நோக்கி வளைந்து நிற்கும் நாட்டிய முத்திரையைக் கடக முத்திரை என்று சொல்வர். நண்டு என்ற அடிப்படைச் சொல்லோ தோண்டுதல் என்ற பொருளில் நெண்டுதல் என்ற வினையின் கீழ் பிறக்கும். கடகிய கால்களையும், கைகளையும் கொண்டு மற்றவற்றை கவ்விக் கொள்ளும் உயிரியானதால் கப்பு என்ற பெயரையும் நண்டிற்கு இடலாம். "கப்பித்த காலையுடைய ஞெண்டினது" என்று பெரும்பாணாற்று 208 ம் வரிக்கு உரைகாரார் பொருள்கூறுவார். மேலும் கப்புதல் என்பது தோண்டுதல் என்ற பொருளையும் கொள்ளும். கப்புக் கால் என்பது வளைந்த காலை உணர்த்தும். கப்பு என்ற சொல் மேலை மொழிகளில், வழக்கம் போல் ரகரம் நுழைந்து, crab என்று திரிவுகொள்ளும்.

மடங்கல்:

வலையச் சுற்றின் ஐந்தாம் பகுதி மடங்கல் என்ற சிகையம் அல்லது சிங்கம்; இந்த உருவகத்தை ஏன் கொண்டார்கள் என்று கேட்டால் எனக்குக் காரணம் தெரியாது. செங்கண் மா> சிங்க மா> சிங்கம் = அங்கும் இங்கும் அலைபாயாது நேரிய செம்மாந்தப் பார்வை கொண்ட விலங்கு.செம்மாத்தல் >சிம்மாத்தல் = இறுமாத்தல் செம்மம்> சிம்மம்; செங்கம்> சிங்கம் 

ஆனால் மடங்கல்/சிகையம் என்ற சொற்களின் வரலாற்றைக் கோடி காட்டத் தெரியும்; பழந்தமிழன் பார்த்த விலங்குகளில் ஆண்விலங்கு ஒன்று தலையில் முடியோடு, சிகையோடு சிறந்து காட்சியளித்தது. அந்த விலங்கிற்குச் சிகை விதப்பாகத் தெரிந்ததால் அதுவே பெயராயிற்று.; சிகை மா; சிகைமா>சிகமா>சிம்ஹா (metathesis) >சிம்ஹம்>சிம்மம். சிகை மா என்ற விலங்கு நாவலந்தீவில் பெரிதும் பரவியிருந்த விலங்கே. [இருப்பினும் சிந்தாற்றங்கரை (சிந்து நதி) நாகரிகத்தினருக்கு சிகை மாவைப் பற்றியே தெரியாது என்று சொல்லுவாரும் உளர்.] சிகைமா (சிகைக்காய் சீயக்காய் ஆவது போல) சீயமா ஆகிச் சீயம் என்றுஞ் சுருங்கும்; சிகைமாவுக்கு வேறுபல சொற்களும் தமிழில் உள. நீண்டு வளர்ந்த சிகை முடங்கிய குழலாகத் தொங்கும். சிகையைக் குறிக்க இன்னொரு சொல் குழல்/குழை என்பதாகும். இந்தச் சொல் குளை என்றும் திரியும். முடங்கிய குலை முடங்குலை>முடங்குளை என்று இணைந்து பிடரி மயிரையும் பிடரி மயிர் உள்ள சிகைமாவையும் குறிக்கும். முடங்குலை மா >முடங்கல் மா> மடங்கல் மா என்றாகும். இதே போல சிகையின் இன்னொரு பெயரான கேசத்தை முன்னொட்டாக்கி கேச அரிமா>கேசரி மா என்றாகும். சிகைமாவிற்கு இன்னொரு பெயரான அரிமா கொல்லுந் தொழிலாகிற அரிதலை ஒட்டி எழுந்த சொல். வயமா என்பது சிகை மாவின் வலிமை பற்றி வந்த சொல். சிகை மாவின் குடும்பத்தைச் சேர்ந்த புலி, சிறுத்தை, பூனை போன்றவற்றின் சொற்பிறப்புகள் இன்னொரு இடத்தில் பேசவேண்டியவை; எனவே தவிர்க்கிறேன்.

கன்னி:

வலையச் சுற்றின் ஆறாம் பகுதி கன்னி; இந்த விண்மீன் தொகுதி ஏன் கன்னியாக உருவகிக்கப் பட்டது என்றும் எனக்குத் தெரியாது. ஆனால், கன்னி, கன்னிமை என்ற கருத்துக்கள் அந்தக் கால மாந்தனைப் பெரிதும் பாதித்திருக்கின்றன. கன்னுதல் என்பது பழுத்தல், முதிர்தல் என்று பொருள்படும்; ஒரு செடியில் இருக்கும் காய் பழுக்கும் போது அந்தக் காய்க்கு கொஞ்சம் மஞ்சள், சிவப்பு போன்ற பொலிவான நிறம் சேர்ந்துவிடுகிறது. காய் என்பது இயல்பாக, "அடர்ந்தது" என்ற பொருளில் கருத்த பச்சையைக் குறிக்கும். இளங்காய் இளம்பச்சையையும், முற்றிய காய் கரும் பச்சையையும் குறிக்கும். கருத்த பச்சை நிறக் காய் சிவந்து போவதை, அல்லது பொலிந்து போவதைப் பழுத்தல் என்று சொல்லுகிறோம். உள்ளங்கை அழுத்தப் பட்டோ , வெப்பங் கண்டோ , சிவந்து போவதைக் கன்னிப் போயிற்று என்று சொல்லுவதில்லையா? அது போலத்தான் பழம் பழுத்தலும் புரிந்து கொள்ளப் பட்டது. கன்னித்து பழுத்த பொருள் கனி என்று சொல்லப் பட்டது. கனியைப் போலவே உடலால் ஒரு சில மாற்றம் பெற்றுப் பொலிவடைந்து, மகப்பேறு பெறுதற்குரிய முதிர்ச்சியைப் பெறுகிற சிறுமி, கன்னி எனப் பெயர் பெறுகிறாள். கன்னிக்குப் பொலிவு (இங்கு விண்மீனின் வெளிச்சப் பொலிவு - brightness of the star சொல்லப் படுகிறதோ என்ற ஐயப்பாடு உண்டு. விண்ணியலாளர்கள் தான் சொல்ல வேண்டும்.) கணிசமாகவே உண்டு.

பிங்கலம் என்பது தமிழில் உள்ள நிகண்டுகளில் திவாகரத்திற்கு அடுத்துள்ள நிகண்டு. இதன் காலம் 9-ஆம் நூற்றாண்டு என்று சொல்லுவார்கள்; அதில் இராசிப் பெயர்கள் பற்றிச் சொல்லியதைக் கீழே தந்துள்ளேன். தமிழ்ச் சொற்கள் வடமொழி முலாம் பூசிக் காட்சியளிப்பதைப் பார்க்கலாம். அந்த முலாமை விலக்கித் தமிழை அடையாளம் காண்பது தஞ்சைப் பெரிய கோயிலில் நாயக்கர் காலத்து ஓவியங்கலை விலக்கிச் சோழர் காலத்து ஓவியங்களை இனங் காண்பது போல என்றே சொல்ல வேண்டும்.

மேட வீதி, இடபவீதி, மிதுனவீதி ஒரு மூன்றே,
அவை தாம் இரு சுடர் முதலிய இயங்கு நெறியே (பிங்.2:182)
இடபம், சிங்கம், மிதுனம், கடகம்
இணைய நான்கும் மேடவீதி (பிங்.2:183)
மீனம், மேடம், கன்னி, துலாமும்
ஆன இடபவீதிக்கு அமைந்தன (பிங்.2:184)
வில்லு, மகரம், குடமே, விருச்சிகம்
சொல்லிய மிதுன வீதித் துறையே (பிங்.2:185)

அடுத்த அதிகாரத்தில் இன்னும் மூன்று இராசிப் பெயர்களைப் பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.

Friday, January 25, 2008

காலங்கள் - 6

இராசிச் சிதறலும் உருவகப் பெயர்களும்

(முன்னே சிங்கை இணையம் வலையிதழில் நான் எழுதிவந்த காலங்கள் தொடரின் ஐந்தாம் அதிகாரத்தை சில மாதங்கள் முன் இங்கு வெளியிட்டேன். வானியலோடு தொடர்பு உள்ள இந்தத் தொடரை வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தொடருவதாகச் சொன்னேன். இப்பொழுது ஆறாம் அதிகாரம்.)

கோள்களின் நகர்வைக் கண்டும், அது நம் வாழ்வை என்ன செய்யும் என்றும், படபடத்துத் தவிக்கும் ஒரு குமுகாயம் நம்மூரைப் போல வேறெங்கேனும் உலகில் இருக்குமா என்பது ஒரு பெருங்கேள்வியே! ஆண்டு முழுக்கக் காரி (சனி)ப் பெயர்ச்சி, குருப் பெயர்ச்சி, ஏறகை (இராகு) - கீழதை (கேது)ப் பெயர்ச்சி, ஏறகைக் காலம் (இராகு காலம்), யம கண்டம், புறத்தோயக் காலம் (ப்ரதோஷ காலம்), செவ்வாய்த் தோயம் (செவ்வாய் தோஷம்) என ஒவ்வொன்றிலும் நமக்கு நடக்கக் கூடிய நல்லது கெட்டது என்ன என்று விளைவு அறியத் துடித்துத் தடுமாறிக் கொண்டே இருக்கிறோம்.

இத்தனைக்கும் "இறைவன் நம் உளம் புகுந்த பின்பு கோள்ப் பெயர்ச்சிகள் நம்மை என்னப்பா செய்யமுடியும்? அவற்றை எல்லாம் நல்லாக வையுங்கள்" என்று திருஞான சம்பந்தர் கோளறு பதிகம் பாடுகிறார். (நல்லுதல் என்பது இங்கே நல்லது அல்ல; விளக்கை நல்லாய் வை என்றால் அணைத்து வை என்று பொருள்; சிவகங்கை/புதுக்கோட்டைப் பக்கம் அப்படிச் சொல்லுவார்கள். இந்த வினையை தெலுங்கு மொழி கூடத் தொடர்ச்சியாய்க் கையாளுகிறது; நாம் தொலைத்து விட்டு நிற்கிறோம்; நல்லுதலின் திரிபான நல்லித்தல்> நலித்தல்> நலிதல் மட்டும் இன்றும் தமிழில் இருக்கிறது. நல்லுதல் என்ற பழைய வினை அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஒரு சில வட்டார வழக்குகளில் மட்டும் நிற்கிறது. நல்ல மரம் என்ற சொல் கருப்பு நிற மரம் என்று ஒரு சில இடங்களில் பொருள் கொள்ளும். இங்கே "கோள்களை ஒதுக்கி அந்தச் சிந்தனையை அறுத்து அணைத்து வையுங்கள்" என்றே பொருள் கொள்ள வேண்டும்).

வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி
சனிபாம்பு இரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே!

இந்தப் பாடலைக் கேட்ட பிறகும், ஓதிய பிறகும், கூடச் சோதியரை நம்மில் பலர் நாடிக் கொண்டே இருக்கிறோம்; ஊரெங்கும் சோதியர்கள் பலன் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்; முடிவில் சோதியம் என்பது நல்ல வருமானம் உள்ள ஒரு தொழிலாக இந்தக் காலத்தில் மாறிவிட்டது; இப்படி நான் சொல்லுவதற்கு நண்பர்கள் அதிர வேண்டாம்; சோதியத்திற்குள் நான் நுழையவில்லை. ஆனால் வானியலுக்கும் சோதியத்திற்கும் இடையில் உள்ள விளிம்பு வரை வந்து உங்களோடு உரையாட முற்படுகிறேன்.

இன்று நேற்று இல்லாமல் எல்லா நாகரிகங்களும், ஏன் தமிழ் நாகரிகமும் கூட, விடிய விடிய விண்ணை உற்றுப் பார்த்தே வந்திருக்கின்றன. கோள்களின் நகர்வுகளும் அவற்றின் பின்புலங்களும் தமிழனை எப்பொழுதும் ஈர்த்திருக்கின்றன. இந்தக் கோள்ப் பெயர்ச்சிகள் எல்லாம் கிட்டத்தட்ட அசையாமல் இருக்கும் (?) பின்புலங்களை வைத்தே அளக்கப் படுகின்றன. அப்படி அளக்கும் போது ஒரு குறிப்பிட்ட விண்மீனைப் பற்றுகோளாக்கி மற்ற கோள்களின் நகர்வுகளைப் பார்க்கிறோம். புவியின் தன்னுருட்டிலும் வலையத்திலும் பல்லாயிரக் கணக்கான விண்மீன்களை நாம் 360 பாகைச் சுற்றில் பின்புலங்களாகப் பார்க்கிறோம். இந்த 360 பாகைச் சுற்றை 12 பகுதிகளாய்ப் பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் 30 பாகையாக்கி. அந்த 30 பாகைக்குள் முன்னின்று தெரிந்து அடையாளம் காண வைப்பது போல ஒரு சில விண்மீன் கூட்டங்களை மட்டும் உருவகம் செய்து வானை நம் வசப் படுத்திக் கொள்ளுகிறோம். நாகரிகத்திற்கு நாகரிகம் இந்த உருவகங்கள் மாறுபடலாம்; ஆனாலும் என்னவோ, நம்மூர் உருவகம் நாவலந்தீவு எங்கணும் பரவி மேலைநாடுகள் வரை சென்று கிடப்பது ஒரு வியப்புத்தான்.

முதலில் வரும் இராசி "மேயம்" என்று சொல்லப் படுகிறது.

இந்த 360 பாகைச் சுற்றின் முதற் பகுதி மேய இராசி; இதைத் தமிழில் இன்றைக்கு மேழம் என்றும், வடமொழியில் மேஷம் என்றும் சொல்லுகிறோம். மேயத்தை ஒட்டிய சொற்களுக்கு எல்லாம் அடித்தளமும் தமிழே தான். இருந்தாலும் பலருக்கு இது புரிவதில்லை; இது போன்ற சொற்களை வடமொழியோ என்று நம்மில் பலர் விவரம் புரியாமல் தடுமாறி எண்ணிக் கொண்டிருக்கிறோம்.

"மேஏஏஎ......" என்ற ஆட்டின் கனைப்பு ஒலியை, விலங்காண்டி மாந்தன் தன் காதில் கேட்டுக் கேட்டு, அதையே தானும் குரைத்துக் காட்டி, அந்த ஒலியையே அந்த விலங்கின் பெயராகவும் சூட்டித் தன் எண்ணத்தில் அவன் ஏற்றி இருக்க வேண்டும். ஏனென்றால் இன்றைக்கு இருக்கும் ஒரு சில சொற்கள் அப்படி ஒரு வேரை நமக்கு உணர்த்துகின்றன. அதே போல ம்........யே>ஞ்.......யே என்ற சற்று மூக்கொலி கலந்த கனைப்பு ஒலியும் ஆட்டையே குறித்திருக்க வேண்டும். அந்த மூக்கொலி கலந்த கனைப்பு ஒலியையையும் அப்படியே இயம்பிக் காட்டி நாளடைவில் அதே ஒலியாலே யேடு/யாடு/ஆடு என்ற சொல்லாலும் தமிழ் மாந்தன் இந்த விலங்கைக் குறிக்கத் தொடங்கியிருக்க வேண்டும். ஏற்கனவே என் கட்டுரைகளில் முன்னர் சொன்ன மாடும், மானும் போல, ஆடும் தன் ஊன் காரணமாய் தமிழ் மாந்தன் வாழ்வில் தனியிடம் பெற்றது. ஊன்களின் தாக்கம் ஆதி மனிதன் வாழ்வில் மிக அதிகம். அதை மறுப்பதும், மரக்கறித் தாக்கத்தை அழுத்திச் சொல்வதும், நம்மை மாந்தவியற் புரிதலில் வெகுதூரம் கொண்டு செல்லாது.

மேய்>மை>மய் என்பது இன்றும் ஆட்டைக் குறிக்கும் சொற்கள். ஆட்டின் நிறம் கூடப் பின்னாளில் யே>யா என்றே குறிக்கப் பட்டது. மொழி ஓரளவு வளர்ச்சியடைந்த நிலையில் "மா" வென ஒலிக்கும் விலங்கை மாடு என்றது போல், யே>யா வென ஒலிக்கும் விலங்கும் யாடு என்று பின்னாளில் அழைக்கப் பட்டது போலும். மாட்டூன் என்பது மாட்டு இறைச்சியைக் குறிப்பது போல், மையூன் என்பதும் மைந்நிணம் என்பதும் ஆட்டிறைச்சியைக் குறிக்கும். மைவிடை என்பது ஆட்டை மாட்டோ டு பொருத்திக் கருவிலங்கு என்று ஏற்றிச் சொன்ன சொல். மேய் எனும் விலங்கு செய்யும் தொழில் மேய்கை அல்லது மேயம் அல்லது மேயல். மேய்கின்ற புல்லும் தமிழில் மேயல் என்றே கூட அழைக்கப் பட்டது. மேய்கை என்னும் தொழிற் பெயரை மேய்தல் என்றும் சொல்லுவது உண்டு. தானாய் மேயாத ஆடுகளை மேய வைக்கும் செயல் மேய்த்தல்; இந்தப் பிறவினைச் சொல் ஆடு எனும் விலங்கைத் தமிழ் மாந்தன் உடமித்தவுடன் (domestication) வந்திருக்கக் கூடிய சொல்; மேய்த்தலைச் செய்ய வைப்பவன் மேய்ப்பன் (கிறித்தவத்தில் பெரிதும் அழுத்தப்படும் சொல்.); மேய்த்தல் என்பதின் பேச்சு வழக்கு மேய்ச்சல்; ஆட்டிற்கு இன்னொரு பெயர் மேய்த்தம்; அது இயல்பான விதிகளின் படி மேய்த்திரம் என்று வடமொழிக்குப் பாய்ந்து ஆட்டுக்கடாவைக் குறிக்கும்.

மேய்த்தம் மேய்ச்சம் என்று திரிந்து (பேச்சு என்ற சொல் பாஷையாய் ஆனது போல்) ஷகரம் பெற்று மேஷமும் ஆகி வடமொழிக்குள் நிலைக்கும்; மேய்ந்தம்>மேண்டம் என்று திரிந்த சொல்லும் ஆட்டையே குறிக்கும். மேய்த்தை>மோத்தை என்பதும் ஆட்டுக்கடா, வெள்ளாட்டுக் கடாவைக் குறிக்கும். (கடா என்பது கூட goat என்ற திரிவில் ஆட்டையே ஆங்கிலத்தில் குறிக்கிறது.) ஆடு என்பது கருப்பாக இருந்து முதலில் விதப்புப் பொருளைக் குறித்து பின் பொதுமையான பின்னர் வெள்ளாடு என்ற முரண் சொல்லும் (கடலை எண்ணெய் போல) ஏற்றுக் கொள்ளப் படுகிறது. மேய்த்தம்>மேத்தம்>மேதம் என்பது கொழுகொழு என்ற ஆட்டிறைச்சியைக் குறிக்கும். [மேத்தம்>மேதம் என்பது mutton என்று மேலை மொழிகளில் திரியும். மேயைப் போல இன்னொரு விலங்கொலி "குக் குக்" என்னும் கோழியொலி. குக்கிடும் ஒலியால் குக்கம் என்றும் குக்குடம் என்றும் கோழியைக் குறிக்கும் தமிழ்ச் சொற்கள் எழுந்தன. குக்குகின்ற பறவை குக்கம் என்றே குறிக்கப் பெற்று இன்று மேலை மொழியில் chicken என்று சொல்லப் படுகிறது. (கோழிக்கறி சாப்பிடும் பழக்கம் பெரும்பாலும் தென்னிந்தியாவில் இருந்தே உலகெங்கும் பரவியிருக்க வேண்டும் என்று விலங்கு ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.) இப்படி ஊனைக் குறிக்கும் சொற்களான மேத்தமும், குக்கமும் எழுந்த கதை மிக இயற்கையானது]. வாயைப்பயம் வாழைப்பழம் ஆனது போல (நம்மில் பலரும் என்னவோ இதைத் தலை கீழாய் உணர்ந்து கொண்டிருக்கிறோம்.) மேயம் என்பது மேழம் என்று மீத் திருத்தமும் பெறும். முடிவில் மற்ற தமிழிய மொழிகளில் ழகரம் டகரமாய் ஒலிக்கப் பெறும்போது மேடம் என்றும் விரிவு கொள்ளும்.

இவ்வளவு விரிவான சொல் விளக்கம் ஏன் சொல்லுகிறேன் என்றால் மேயம் என்ற சொல்லுக்கு தமிழ் அடிப்படை இருந்தால் மட்டுமே இத்துணை பொருட்பாட்டு அகலத்தைக் காட்ட முடியும் என்பதை உணர்த்துவதற்குத் தான். நம்மில் ஏனோ பலரும் இதைப் புரிந்து கொள்ள மறுத்து வடமொழியிலேயே விளக்கம் தேடிக் கொண்டு இருக்கிறோம். அந்த அளவிற்கு நம்மொழியின் வேரை நம்மிடையே காண மறுத்து, மனத்தால் அடிமைப் பட்டிருக்கிறோம்.

மேய் என்ற கனைப்பு ஒலியைப் போல யே>யா என்ற கனைப்பு ஒலியில் இருந்த பிறந்த சொல்லே யேடு>யாடு>ஆடு என்ற வளர்ச்சி; மற்ற தமிழிய மொழிகளில் யேடு>ஏடு>ஏடி என்றெல்லாம் இந்தச் சொல் விரியும். ஏடு என்ற அடியில் இருந்து பிறந்த சொல்லே ஏடையன்>எடையன்>இடையன் என்ற சொல். இது போல யாட்டில் இருந்து பிறந்த சொல்லே யாதவன் என்ற வடசொல்லும். தமிழகத்திலும், நாவலந்தீவிலும் வேறு இடங்களில் இருக்கும் பல்வேறு குடிமக்களின் முன்னாள் தொழிற்பெயர்கள் தமிழ் மூலம் கொண்டவையாகவே இருக்கின்றன. (அதையெல்லாம் சொன்னால் கேட்கப் பொறுமை இருக்குமோ? நாவலந்தீவின் இன்னொரு அடிப்படையைக் காண எத்தனை பேர் முன்வருகிறோம்? :-))

இந்த மேய இராசி தமிழன் பார்வையில் நம்மைச் சுற்றியுள்ள பின்புலத்தின் முதல் இராசி; விண்ணில் தெரியும் இந்தக் குறிப்பிட்ட பகுதிக்குள் முன்னொளிரும் சில விண்மீன்களின் தொகுதி தமிழ் மாந்தனுக்கு ஆடு என்னும் விலங்கை நினைவுறுத்தி இருக்கிறது. எனவே இதை மேய இராசி என்றான். இதெல்லாம் ஒரு அடையாளம் என்ற அளவில் நாம் புரிந்து கொள்ளவேண்டும். முன்பு உள்ள அதிகாரங்களில் மேழ விழு பற்றிச் சொன்னதை இங்கு நினைவு கூருங்கள். மேழத்தில் ஒவ்வொரு ஆண்டையும் தொடங்கும் முறையில் அது ஆட்டை என்றும் சங்க இலக்கியங்களில் சொல்லப் பட்டது; ஆட்டு என்ற சொல்லுள் முக்கொலி நுழைந்து ஆண்டு என்றும் நம் வழக்கில் ஆனது; மேலை மொழிகளில் மூக்கொலி இன்னும் கூடி annum என்று சொல்லுவதும் இதே பொருளில் தான். (உடனே தமிழ் ஆண்டுத் தொடக்கம் சித்திரையா, தையா என்ற புதிருக்குள் போகவேண்டாம். அதைப் பற்றி இன்னொரு முறை பார்க்கலாம்.) மேலை மொழிகளில் இருக்கும் வானியற் சொற்கள் பலவும் நம் நாகரிகத்தோடு தொடர்பு கொண்டுள்ளன. ஆழப் பயின்றால் அவற்றை நாம் அடையாளம் காணலாம்.

அடுத்தது விடை:

வலயச் சுற்றில் அடுத்த பகுதி விடை இராசி; இதை விடவ/இடப இராசி என்று தமிழிலும், வடமொழிப் படுத்தி (வ்)ரிஷப இராசி என்றும் சொல்லுகிறோம். விடை என்பது எருது. எப்படிக் காளை என்பது மாட்டின் ஆணைக் குறிக்கிறதோ, அது போல எருது என்பதும் மாட்டின் ஆணையே குறிக்கிறது. எருது என்பதை ஏறு என்றும் குறிக்கிறோம்; ஏலுதல் என்பது உயர்தல்; ஏலேலோ ஐலசா என்று கூறுகிறோம் இல்லையா? எருதின் கழுத்தின் மேல் உயர்ந்து கிடக்கும் உறுப்பு எருத்து என்றும், பிடரி (பிடிக்க முடியாதது) என்றும், அது திமிரிக் கிடப்பதால் திமில் என்றும் அழைக்கப் படுகிறது. உயர்ந்து, ஏல்ந்து கிடக்கும் அந்த உறுப்பே இந்தியக் காளைக்கு இன்னும் ஒரு சிறப்புப் பெயரைக் கொடுக்கிறது. ஏல்து>ஏர்து>எருது. இந்தப் பெயரும் விதப்பில் இருந்து பொதுமைக்கு வந்த பெயர்தான். எருது வேளாண்மைக்குப் பெரிதும் பயன்பட்ட பிறகு, குறிஞ்சி மற்றும் முல்லை நிலையைக் குறிப்பதற்கு காட்டெருது என்றே சொல்லுகிறோம். (எழுந்து, உயர்ந்து முன்வந்து முதலில் இருக்கும் கலிப்பாவின் ஓர் உறுப்புக்கு எருத்து என்றே பெயர். அந்த எருத்து பின்னால் தொகையறா, பல்லவி என்ற பெயரில் மாறி இன்றைய சீர்த்தனைப் பாடல்களிலும் திரைப்பாடல்களிலும் இருக்கிறது. சீர்த்தனை, திரைப்பாடல் வடிவங்களின் அடியூற்று கலிப்பாவில் இருக்கிறது.)

விலங்கினங்களில் ஆண் உயிரி பெண்ணுயிரியைக் காட்டிலும் விடைத்துப் பெருத்து இருப்பதாலேயே விடை என்ற சொல் காளையைக் குறிக்க எழுந்தது. வேட்டைக் குமுகாயத்தில் விடைத்திருக்கும் விலங்குகள், குறிப்பாக ஆண் விலங்குகள், அவற்றின் ஊன் பெருக்கிற்காகவே கொல்லப் பட்டன. பொலிந்து இருந்த காளை பொலி காளை, அதாவது பருத்த காளை; இப்படி காளைகளுக்கு பருத்த என்ற பொருள்படும் அடைகள் தமிழில் பெரிதும் உள்ளன. விடை என்பது அப்படி ஒரு பெயரடை; விடை மா என்ற பெயருக்கு, பருத்த விலங்கு என்ற பொருள்; பழந் தமிழ்மாந்தனின் ஊன்விலங்குகளில் தலையாயது விடை மா; எனவே தான் மாட்டு மந்தைகளை அவன் வளர்த்தான். விடை மா என்ற தமிழ்ச் சொல் தமிழிய மொழிகளில் விடைமா> விடமா> விடமம்>விடவம்>விடபம் என்று ஆகும்; வடமொழியில் வழக்கம் போல் ரகரம் உள்வந்து ஷகரத் திரிபு பெற்று (வ்)ரிஷபம் என்றும் ஆகும்.

மூன்றாவது ஆடவை:

வலயச் சுற்றின் மூன்றாம் பகுதி ஆடவை; இது ஆடு+அவ்வை>ஆடவ்வை>ஆடவை என்று பிரியும். ஆடூஉவும் (ஆணும்) மகடூஉவும் (பெண்ணும்) புணர்ந்திருக்கும் இரட்டை உருவகம் ஆடவை. இந்தப் பகுதியில் பழந் தமிழ் மாந்தன் பார்த்த சில குறிப்பிட்ட விண்மீன்களின் தொகுதி ஒரு ஆணும் பெண்ணும் புணர்ந்திருப்பது போல் தோற்றம் அளித்திருக்கின்றன. புணருதல் என்ற பொருளை உணர்த்தும் இன்னொரு தமிழ்ச் சொல் முயவுதல்/ முயக்குதல் /முயத்துதல் என்று வரும்; இந்தச் சொல்லுக்குத் தழுவுதல் என்ற பொருள் உண்டு. "போழப்படா முயக்கு" என்ற வள்ளுவர் அடி பற்றி முன்னரே சொல்லியிருக்கிறேன். முயத்துதலின் பெயர்ச்சொல் ஆன முயத்துனம் என்பது புணர்ச்சி என்ற பொருளைக் கொள்ளும். முயத்துனத்தை மைத்துனம் ஆக்கி மிதுனம் என்று வடமொழி திரிக்கும். முயத்தன் மைத்தன் ஆகிப் பின் பேச்சு வழக்கில் மச்சானும் ஆவான் (முயத்துதற்கு/புணருதற்கு உரியவன் மச்சான், அவ்வளவு தான்). இது போலவே மைத்துனி/மச்சினி போன்ற சொற்கள் எழும்; மயலுதல் என்பதும் கலவிக்கு இணங்குதலே. (புணர்ச்சி செய்யும் ஆண்/பெண் உறுப்புக்களும் புள் என்னும் வேரால் உருவாகிப் புகர மெய்யிலேயே குறிக்கப் படுவதுண்டு. ஆனால் பெரும்பாலான தமிழ் அகரமுதலிகளில் தான் அவை பதிவு செய்யப் படாமலே போயின. :-))

மேலே ஆள் அல்லது ஆணைக் குறிக்கும் ஆடு என்ற சொல் இன்றைக்கும் தெலுங்கில் வழக்கில் இருக்கிறது. ஆள்+து>ஆடு. இது போல அவ்வை என்பது பொதுவாகப் பெண்ணைக் குறிக்கும் சொல். இது கன்னடத்தில் விரவியது. அவ்வை என்ற பாடினியைப் பற்றி நமக்கு எல்லாம் தெரியும்; அவள் இயற்பெயர் நமக்கு எங்கு தேடினும் தெரியாமற் போயிற்று. அவ்வை என்ற சொல்லை "அவை" என்று தொகுத்து பெண்பாற் பெயர்களில் ஈற்றாகப் பயன்படுத்துவதும் உண்டு. காட்டு: குந்தவை;

இன்னும் உள்ள ஒன்பது பகுதிகளின் பெயர்கள் பற்றி அடுத்துப் பார்ப்பதற்கு முன் கோள்கள் இராசிகளில் வந்து சேருகிற நிலையும் கார்காலம் தொடங்கும் காலத்தையும் பற்றிய பரிபாடலின் ஒரு பகுதியைப் பார்ப்போமா? ஓவ்வொரு முறையும் பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் பாடலைக் கொடுத்து இந்தத் தொடரில் ஒரு அதிகாரத்தை முடிப்பது எனக்கு வழக்கம்; இந்த முறை மாறுபட்டுத் தருகிறேன்.

"விரி கதிர் மதியமொடு வியல்விசும்பு புணர்ப்ப,
எரி, சடை, எழில்வேழம் தலையெனக் கீழ் இருந்து
தெரு இடைப்படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள்
உருகெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர,
வருடையைப் படிமகன் வாய்ப்ப, பொருள்தெரி
புந்தி மிதுனம் பொருந்த, புலர்விடியல்
அங்கி உயர் நிற்ப, அந்தணன் பங்குவின்
இல்லத் துணைக்கு உப்பால் எய்த, இறை யமன்
வில்லின் கடை மகரம் மேவ, பாம்பு ஒல்லை
மதியம் மறைய, வரு நாளில் வாய்ந்த
பொதியில் முனிவன் புரை வரைக் கீறி
மிதுனம் அடைய, விரிகதிர் வேனில்
எதிர்வரவு மாரி இயைக என இவ் ஆற்றால்
புரைகெழு சையம் பொழிமழை தாழ
நெரிதரூஉம் வையைப் புனல்"

இந்தப் பாடலில் வரும் வானியல் நிகழ்வு கி.மு.161 ஆம் ஆண்டு, கலியாண்டு 2941, பிரமாதி ஆவணித்திங்கள் 12 ஆம் நா: வியாழக்கிழமை, சதுர்த்தசி திதி அவிட்ட நாள்காட்டு கூடிய நாள் என்று சொல்லுவதாக 1969 ல் வெளிவந்த சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக பரிபாடற் பதிப்பு கூறுகிறது. நாம் வேறொரு நாளில் இதைப் பற்றிப் பேசுவோம்.

இப்போதைக்கு வரட்டுங்களா!

அன்புடன்,
இராம.கி.

Saturday, December 01, 2007

பண அட்டைகள்

பல்வேறு பண அட்டைகள் குறித்து ஓர் உரையாடல் தமிழுலகம் மடற்குழுவில் முன்பு ஒருமுறை எழுந்தது. சில விளக்கங்கள் கொடுத்து அங்கு தந்த சொல்லாக்கங்களை இங்கு தருகிறேன்.

swipe card:- வயப்பு அட்டை; வயப்படுத்தல் = தனதாக்கிக் கொள்ளல், தன்பக்கம் சாரவைத்தல்; வயம்>வசம். வயம் என்பதன் வேர்ப்பொருள் வளைத்தலே; "என்ன, அவுங்களை வளைச்சுப் போட்டாச்சா?" என்பது வயப்படுத்தியதையே குறிக்கும். [The old English word for sweep was swaapan, which evolved into Middle English swope. Modern English sweep, which began to emerge in the 13th century, probably came from the old past tense swepe, a descendent of old English sweop. Swaapan itself came from the prehistoric Germanic base *swei 'swing, bend' which also produced German schweifen 'wander' and English swift. Swipe probably originated as a dialectal variant of sweep.]

affinity card:- a credit card where a certain amount of money is given by the credit card company to a charity everytime the card is used
பயன்கொடை அட்டை (இன்னும் ஓர்ந்து பார்த்தால் இதைவிட நல்ல சொல் ஒன்று கிடைக்கலாம்.)

cash card:- காசு அட்டை

charge card:- பற்று அட்டை

cheque guarantee card:- காசுறுதி அட்டை

credit card:- கிட்டிப்பு அட்டை (Creed was the first of a wide range of English words borrowed from Latin credere 'believe'. Others include credible, credence, credential, credit, credulous.); நம்புதல் என்பது நெருக்கத்தை ஓட்டியது. "நமக்கு வேண்டப் பட்டவருங்க, பணங் கொடுங்க, ஒண்ணும் ஆகாது.!" "நம்ம பக்கம் தான்; எங்கூர்க்காரர் தான்; கடன் கொடுக்கலாம். திருப்பி வந்துரும்." "நமக்கு நெருக்கம்." "நமக்கு அண்மை;" அண்ணுதல் = நெருங்குதல்; அண்ணுதலில் இருந்து பிறந்த சொல்லே அண்பு>அன்பு. அவனோடு அன்பாக இருக்கிறேன் என்றால் நெருக்கமாக இருக்கிறேன் என்று தான் பொருள். நண்ணுதல் என்பதும் நெருங்குதலே. நள் என்ற வேர்ச்சொல்லில் இருந்து பிறந்தது நண்ணுதலாகும். நள்>நட்பு. நள்ளில் இருந்து பிறந்த இன்னொரு சொல் நண்பு>நம்பு; நம்புதல் என்பதும் நெருங்குதலே. நம்பிக்கை = நெருக்க நிலை. இந்த நெருக்க நிலைக்கு இன்னொரு சொல் கிட்ட நிலை. "கிட்டக்கவே இருந்துட்டு நம்பாமல் இருந்தா எப்படி?" நெருக்கத்தில் பிறப்பது நண்பிக்கை>நம்பிக்கை. கிட்டித்தல் என்பதும் நெருங்குதலே. இந்தையிரோப்பியச் சொற்களுக்கே ஆன ரகரப் பலுக்கத்தை முதல் எழுத்தில் நுழைத்தால் credit வந்துவிடும். [சொல் பிறந்திருக்கக் கூடிய கதையைச் சொன்னேன்.] உனக்கு எவ்வளவு கிட்டியது என்ற கேள்வி உனக்கு எவ்வளவு credit வந்தது என்றே பொருள்படும். கிட்டக் கூடியது பொன்னா, பொருளா, பணமா என்பது முகமையில்லை. அது இன்னொருவரிடம் இருந்து வருவதாய் இருக்கவேண்டும். கிட்டியதின் நீட்டமே கிடைப்பு. கிடைப்பின் இன்னொரு தோற்றம் get/got போன்றவை.

debit card:- கடவிப்பு அட்டை (debt originated as debita, the plural of Latin debitum 'that which is owed', a noun formed from the past participle of the verb debere, 'owe') கள்>கழு கழுக்கப் பட்டது கட்டப் பட்டது என்ற பொருள் கொள்ளும். கட்டுதல் என்பது பிணைக்கப் படுதலாகும். இன்னொருவோரோடு பணத்தால் பிணைக்கப் பட்ட நிலை கட்டம் பட்ட நிலை. கட்டம்>கடம்>கடன் என்று விரியும். கழுவோடு இகரம் சேர்ந்தால் அதன் பொருள் எதிர்மறையாக மாறிவிடும் இழு என்ற வினையில் இரண்டு பொருள்களுக்கு இடையே தொடர்பு இருக்கிறது என்று புரிபடும். ஒன்று இன்னொன்றை நகர்த்துகிறது என்று இங்கே பொருள். இழி என்றானால், ஒன்று இன்னொன்றில் இருந்து பிரிந்தது என்று பொருள் வரும். இது போன்ற சொற்களில் வரும் இகரத்தின் தாக்கம் அவ்வளவு. எதிர்மறைப் பொருளைக் கொண்டு வந்துவிடுகிறது. இன்னும் இதுபோன்ற காட்டுக்களைக் காட்ட முடியும். நீக்குதலுக்கான வேரடி கழி என்ற சொல்லில் இப்படி வருகிறது. கழு+இ>கழி = எடு என்னும் பொருள். ஐந்தில் இருந்து இரண்டைக் கழிக்க மூன்று கிடைக்கும். கடவுதல் என்றாலும் இழுத்தல் என்றே பொருள் கொள்ளும்; அங்கே வகர உகரம் போய்விட்டால், கடத்தல் என்பதும் நீங்குதல், கழிதல் என்ற பொருளே கொள்ளுகிறது. வகரம் பகரமாவுதும் தமிழிய மொழிகளிலும், இந்தையிரோப்பிய மொழிகளில் இயற்கையே. கடவித்தல் என்பது கடத்தல் என்ற தன்வினைச் சொல்லில் இருந்து பிணைக்கச் செய்தல் என்ற பொருள் கொண்ட பிறவினைச் சொல்லை உருவாக்கும். நீங்கள் ஒரு பொருளை வாங்கும் போது அதற்கான பணத்தை உங்கள் வங்கிக் கணக்கோடு கடவித்துக் கொடுக்கும் அட்டை கடவிப்பு அட்டை.

gold card:- பொன்னட்டை

store card:- கடையட்டை

அன்புடன்,
இராம.கி.

Monday, October 01, 2007

அரக்கனும், தமிழும், இராமர் சேதுவும் - 5

இராமர் சேது என்று இன்று தவறாகச் சொல்லப்படும் மண்திட்டு ஒரு பக்கம் இராமேசுரத்தையும் (1964 புயலில் நம் கண்ணறிய அழிந்து போன பழைய தனுக்கோடி) இன்னொரு பக்கம் தலைமன்னாரையும் இணைத்துக் கொண்டிருக்கிறது. இதே போல இன்னொரு திட்டும் அந்தப் பக்கம் கோடிக்கரையில் இருந்து யாழ்ப்பாணம், நயினார் தீவு வரை இருக்கிறது. அந்தத் திட்டும் தான் உயர்ந்து கிடக்கிறது. இந்தப் பக்கம் இராமேசுவரத்திற்கு அருகில் இருப்பதை மட்டும் இராமர் கட்டியதாகச் சொல்லும் கூட்டம், அந்தப் பக்கத்தில் கிடக்கும் இன்னொரு சேதுவை (அதை ஆதி சேது என்பார்கள்.) யார் கட்டியதாகச் சொல்லுவார்கள்? கடல்மட்டம், கடலியல் வரைவு தெரிந்தவர்கள் "இந்த இரண்டு சேதுக்களும் இரட்டையானவை" என்றே சொல்லுவார்கள். ஒன்றை மட்டும் உயர்த்தி, இன்னொன்றைக் கண்டுகொள்ளாமல் விடுவது எப்படி? அப்படி என்ன ஓரவஞ்சனை? வலது கண்ணுக்கு மையும், இடது கண்ணுக்குச் சுண்ணாம்புமா உங்கள் ஊரில் அப்புவார்கள்?

அடுத்தது அகம் 70 இல் மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார் பாடிய நெய்தல் திணைப் பாடலில் இராமன் திருவணைக் கரைக்கு வந்து இருந்ததாய் ஒரு செய்தியைப் பார்ப்போம். தலைவியிடன் காதல் தொடர்பாக ஊரார் பேசுவதைப் பற்றித் தலைவியிடம் சொல்லும்போது கீழ்க்கண்டவாறு குறிப்பிடுவதாகப் புலவர் பாடுவார்:

கொடுந்திமில் பரதவர் வேட்டம் வாய்த்தென
இரும்புலாக் கமழும் சிறுகுடிப் பாக்கத்துக்
குறுங்கண் அவ்வலைப் பயம் பாராட்டி
கொழுங்கண் அயிலை பகுக்கும் துறைவன்
நம்மொடு புணர்ந்த கேண்மை முன்னே
அலர்வாய்ப் பெண்டிர் அம்பல் தூற்றப்
பலரும் ஆங்(கு)அறிந்தனர் மன்னே; இனியே
வதுவை கூடிய பின்றை, புகுவது
பொன்வீ ஞாழலொடு புன்னை வரிக்கும்
கானலம் பெருந்துறைக் கவினி மாநீர்ப்
பாசடைக் கலித்த கணைக்கால் நெய்தல்
விழவு அணி மகளிர் தழை அணிக் கூட்டும்
வென்வேற் கவுரியர் தொல்முது கோடி
முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன்துறை
வெல்போர் இராமன் அருமறைக்(கு) அவித்த
பல்வீழ் ஆலம் போல
ஒலிஅவிந் தன்(று)இவ் அழுங்கல் ஊரே. (அகநானூறு:70:5-17)

இந்தப் பாடலில் வரும் பரதவர் என்ற இனக் குழுவினர் தொடக்க காலத்தில் சோழநாட்டுக் கடற்கரையிலேயே இருந்தவர். (என் இடுகையின் முதற்பகுதியில் இளஞ்சேட்சென்னி பரதவரை வெற்றி கொண்ட செய்தியைக் குறிப்பிட்டு இருப்பேன்.) பாண்டிய நாட்டில் பரதவர் அவ்வளவாக விரிந்து இருந்தது இல்லை. பாக்கம் என்று முடியும் நெய்தல் ஊர்ப் பெயர் சோழநாட்டிலும், பின்னால் அதனின்றும் விலகிய தொண்டை நாட்டிலுமே உள்ள பெயராகும். பாண்டிய நாட்டில் இது போன்ற பெயர்கள் மிகவும் அரிது. ஞாழல், புன்னை ஆகிய மரங்கள் விரவிய கானலம் பெருந்துறை (காடு பின்புலமாக இருக்கும் பெருந்துறை) என்ற குறிப்பு கோடிக்கரையையே உணர்த்துகின்றது. இன்றும் இங்கு ஞாழலும், புன்னையும் நிறைந்து கிடக்கின்றன. கோடிக்கரைக் காடு என்றுதான் இந்தப் பக்கம் சொல்லுகிறார்கள். இது போன்ற விவரிப்பு இராமேசுவரத்துக்கோ, இராமநாதபுரத்துக்கோ ஒத்து வராது. அவை பாலை நிலத்தின் கூறுகள் என்பது அங்கே வசிக்கிறவர்களுக்கு நன்றாகவே தெரியும். இது போகத் தொல்முது கோடி என்பது ஆதி சேது என்ற குறிப்பையும் உணர்த்துகிறது.

அதையும் மீறி வென்வேல் கவுரியர் என்று பாண்டியரைச் சுட்டுவதால் பாண்டிநாட்டுத் தலத்தைக் குறிக்க முடியுமா என்றால் "சற்றுப் பொறுங்கள்" என்றே சொல்ல வேண்டும். இன்றைக்கு தொண்டி, மீமிசல் எனக் கிழக்குக் கடற்கரை ஊர்களைக் கடந்து முத்துப் பேட்டை வரை போனால் கோடிக்கரை வந்துவிடும். இந்த ஊர்களுக்கு உட்பரப்பில் இருக்கும் அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, ஆவுடையார் கோயில் ஆகிய ஊர்கள் எல்லாம் ஒரு காலத்தில் முத்தூர்க் கூற்றத்திற்கு அண்மையும் சேர்ந்தவையுமே. புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்றைக்கும் இருக்கும் இந்தப் பகுதிகள் காலம் காலமாய் சோழருக்கும் பாண்டியருக்கும் இடையே பந்தாடப் பட்ட பகுதிகள். இம்மென்றால் சோழன் பாண்டியனிடமிருந்து இவற்றைப் பிடுங்கிக் கொள்ளுவான்; இல்லையென்றால் சோழனிடமிருந்து பாண்டியன் பிடுங்கிக் கொள்ளுவான். கடைசிக் கடற்கோளில் தன் நாடு கணிசமாகக் குறைந்ததால் சோழனிடமிருந்து முத்தூர்க் கூற்றத்தையும், சேரனிடமிருந்து குண்டூர்க் கூற்றத்தையும் பாண்டியன் பறித்துக் கொண்ட கதை கலித்தொகை 104.4 ல் கீழ்வருமாறு சொல்லப்படும்.

மலிதிரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவலின்
மெலிவு ௾ன்றி, மேல்சென்று, மேவார் நாடு ௾டம்பட
புலியொடு வில்நீக்கி, புகழ்பொறித்த கிளர்கெண்டை
வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன்

இந்த இரு கூற்றங்களின் பெயரை உரையாசிரியர் வழியாகவே நாம் அறிகிறோம். தவிர மணிவாசகர் காலத்தில் பரி வாங்கப் போகும் திருப்பெருந்துறையும் (ஆவுடையார் கோயிலும்) இந்தக் கூற்றத்தில் தான் உள்ளது. (பரிவாங்கிய போது இது பாண்டியர் கூற்றமாகவே இருந்திருக்கிறது.) இன்றும் கூட இந்தப் பகுதிகளில் சோழ, பாண்டிய நாடுகளின் இரண்டு பக்கத் தாக்கங்களின் மிச்சம் கணிசமாகவே இருக்கிறது. அதனால், கோடிக்கரை ஓரோர் சமயம் பாண்டியரின் ஆட்சிக்கு வந்ததில் வியப்பு இல்லை. (அகம் 70 ஆம் பாடல் தனுக்கோடியைக் குறிக்கிறது என்று சொல்லுவாரும் உண்டு. என்னால் மேலே சொன்ன காரணங்களுக்காக ஏற்க முடியவில்லை.)

இனி அகம் 70 ஆம் பாடலில், வரும் செய்தியைப் பார்ப்போம். தோழி சொல்லுகிறாள்: (இங்கே அட்லாண்டா பெ.சந்திரசேகரனின் சொற்களை அப்படியே பயனாக்கி "கோடிக்கரை" என்று ஊர்ப்பெயரை மட்டும் மாற்றித் தருகிறேன். அவர் தனுக்கோடி என்ற கருத்தாளர்.)

"உன்னைத் திருமணம் செய்துகொள்ளுமுன் அவருக்கும் உனக்கும் இருந்த காதலைப் பற்றி ஊர்ப் பெண்கள் ஊரார் பலரும் அறியுமாறு அலர் (கிசுகிசு!) பேசிச் செய்தியைப் பரப்பினர். ஆனால், திருமணம் ஆன பின்னரோ [நிலைமை வேறு]; வெற்றி தரும் வேல் ஏந்திய கௌரியர் குலத்துப் பாண்டியருக்குரிய மிகப் பழமையான கோடிக்கரையில் முழங்கும் பெருங் கடல் அலைவீசும் துறையில் வெற்றியன்றி வேறேதும் அறியாத இராமன் தன் இலங்கைப் படையெடுப்புப் பற்றி ஆராய்வதற்காக ஓர் ஆல மரத்தடியின் அடியில் அமர்ந்திருந்தான்; அப்போது அமைதியை வேண்டி ஆல மரத்தில் அமர்ந்திருந்த பறவைகளை ஒலியெழுப்பாமல் இருக்கச் செய்ததுபோல், ஊர் அமைதியாகிவிட்டது!" என்றாள்.

ஆலமரத்தில் அமர்ந்திருந்த பறவைகளை இராமன் கையுயர்த்தி ஒலி எழுக்காமல் இருக்கச் செய்தது கம்பனில் கிடையாது; வான்மீகியிலும் கிடையாது. இப்படி ஒரு செய்தி கோடிக்கரையில் சொல்லப் படுவதில் இருந்தே, கடைச் சங்க காலத்திலேயே இன்றைய இலங்கைக்கும் இராம காதையில் சொல்லப்படும் இலங்கைக்கும் இடையே ஒரு புரிதல் குழப்பம் ஏற்படத் தொடங்கிவிட்டது என்று அறியலாம். ஆனாலும் ஒருசிலர் இராமர் சேது என்று தங்களுக்குத் தோன்றியபடி கற்பனை வாதம் பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.

"இராவணன் ஆண்ட ௾லங்கை எது?" என்ற தலைப்பில் சைவசித்தாந்த வெளியீட்டுக் கழகத்தின் செந்தமிழ்ச் செல்வி இதழில் "சிலம்பு 23" (volume 23) ல் மயிலை. சீனி வேங்கடசாமியார் மற்ற ஆய்வாளர்களின் முடிவுகளைத் தெரிவித்திருப்பார். ஏகப்பட்ட வட இந்திய ஆய்வாளர்கள் இராவணனின் இலங்கையை இன்றைய சத்திஸ்கர், ஜார்க்கண்ட் பகுதியில் ஒரு ஏரிக்கு நடுவில் காட்டுவார்கள். தவிர இன்றைய இலங்கையின் மகாவம்சத்தில் பழஞ்செய்தியாக, தொன்மக் கதையாகக் கூட, இராவணன், இலங்கை என்னும் பெயர்கள் கூறப்படவில்லை.

இனி அடுத்து இராமநாதபுரத்துக்கும், இராமேசுரத்துக்கும் நடுவே பாம்பன் வாய்க்கால் ஏற்பட்டது பற்றிப் பார்க்கலாம். இதை நான் சொல்லுவதைக் காட்டிலும், இராமநாத சுவாமி கோவில் கும்பாபிசேக மலர் 1975ல் "இராமேசுவரத் தீவு" என்னும் தலைப்பில் மயிலையார் எழுதிய ஒரு கட்டுரையை அப்படியே தட்டச்சித் தருகிறேன்.
------------------------------
இராமேசுவரம் என்னும் இச்சிறு தீவு முற்காலத்தில் இராமநாதபுரத்தோடு இணைந்த ஒரு நிலமாக இருந்து பிறகு சிறு தீவாக மாறிற்று என்னும் வரலாறு பலருக்குத் தெரியாது. இச்செய்தி பலருக்கு வியப்பாக இருக்கும். ஆனால் இராமேசுவரம் தீவும் இராமநாதபுரமும் ஒரு காலத்தில் இணைந்திருந்தன என்பது உண்மை.

தென்னிந்தியாவின் கடற்கரை ஓரங்கள் எக்காலத்திலும் ஒரே மாதிரியாக இருந்ததில்லை. கடற்கோள்களினாலும், கடல் அரிப்பினாலும் நமது நாட்டுக் கடற்கரைப் பக்கங்களில் எத்தனையோ மாற்றங்கள் நெடுங் காலமாக நடந்துள்ளன. இன்றும் நடந்து கொண்டிருக்கிறது. இப்போது பாண்டிய நாட்டுக்கு அருகில் இருக்கிற இலங்கைத் தீவு முன்னொரு காலத்தில், பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்னே, தமிழகத்தோடு இணைந்து ஒரே நிலமாக இருந்தது. இந்தப் பெரிய நிலப்பரப்பு, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே கடற்கோளினாலும், கடல் அரிப்பினாலும் சிறிது சிறிதாகச் சிதைந்து போய்க் கடைசியில் தனித் தீவாகப் பிரிந்து போய், பிற்காலத்தில் இலங்கைத் தீவாக மாறிப் போயிற்று. நில ஆராய்ச்சி செய்யும் அறிஞர்கள் இந்த வரலாற்றுச் செய்தியைக் கூறுகிறார்கள். இலங்கை, தனித் தீவாகப் பிரிந்து போன பிறகுங் கூட, கொழும்புக்குத் தெற்கேயுள்ள கடலோரங்களில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு அந்தப் பகுதி நிலங்கள் கடலில் முழுகிப் போயுள்ளன என்று மகாவம்சம் என்னும் இலங்கை வரலாற்று நூல் கூறுகிறது.

கன்னியாகுமரி இப்போது தமிழகத்தின் தெற்கெல்லையாக அமைந்திருக்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னே, கன்னியாகுமரிக்குத் தெற்கே ஒரு நிலப்பரப்பு தமிழகத்தோடு இணைந்திருந்தது. அந்த நிலப்பரப்பு ஏறத்தாழ இரண்டு மாவட்டங்கள் (ஜில்லாக்கள்) அளவு இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அந்த நிலப்பரப்பு பிற்காலத்தில் கடற்பெருக்கினாலும், கடல் அரிப்பினாலும், பையப் பைய கடலில் மூழுகிப் போய்விட்டது. அந்த நிலப்பரப்பு முதல்தடவை ஏற்பட்ட கடல் கொந்தளிப்பினால் ஒரு பகுதி மறைந்து போய் எஞ்சியிருந்த இன்னொரு பகுதி நிலம் மற்றுமொரு கடற்பெருக்கினால் மறைந்து போயிற்று, இந்த வரலாற்றுச் செய்தியைச் சிலப்பதிகாரமும், கலித்தொகையும் கூறுகின்றன. இறையனார் அகப்பொருள் உரைப் பாயிரமும், கடற்கோளினால் முழுகிப் போன இந்த நிலங்களைக் கூறுகிறது.

திருப்பதி என்னும் திருவேங்கடமலையை எல்லோரும் அறிவார்கள். வேங்கடமலையைச் சூழ்ந்திருக்கும் நாடுகளுக்கு வேங்கடக் கோட்டம் என்பது பழைய பெயர். இந்த வேங்கடக் கோட்டத்துக்குக் கிழக்கே கடற்கரையோரமாகப் பவத்திரிக் கோட்டம் என்னும் ஒரு நிலப்பரப்பு இருந்தது. பவத்திரிக் கோட்டம் ஒரு ஜில்லா (மாவட்டம்) அளவுள்ள நிலம். இந்தப் பவத்திரி நாட்டை 1800 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நக்கீரர் அகநானூறு 340ம் செய்யுளில் கூறுகிறார். இந்தப் பவத்திரிக் கோட்டம் கி.பி.11ம் நூற்றாண்டில் கடலில் மூழ்கிப் போயிற்று. கடலில் முழுகிப் போன பவத்திரிக் கோட்டம் இப்போது திருவேற்காடு ஏரி (பழவேற்காடு ஏரி - இராம.கி) என்று பெயர் பெற்று பெரும் நீர்ப்பரப்பாக இருக்கிறது. பவத்திரிக் கோட்டம் இருந்ததையும், அது கடலில் முழுகிப் போனதையும் பிற்காலத்துச் சோழ அரசர்களின் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. பவத்திரிக் கோட்டத்தில் இருந்த ஊர்களில் ஒன்று காகந்தி என்பது. "கடல்கொண்ட காகந்தி" என்று சோழர் கல்வெட்டுகள் கூறுகின்றன. நெடுங்காலமாகத் தொண்டைநாடின் கடற்கரையொரமாக இருந்த பவத்திரிக் கோட்டம் கடலில் முழுகிப் போய் இப்போது திருவேற்காடு ஏரியாய் மாறிப் போய்விட்டது. இந்த ஏரியின் தென்பகுதி இப்போது தமிழக அரசாட்சிக்கு உட்பட்டும், வடபகுதி ஆந்திர அரசுக்கு உட்பட்டும் இருக்கின்றன. (ஸ்ரீஹரிக் கோட்டா என்று இன்று சொல்லப்படும் விண்வெளி ஏவுகணைத் தளத்தின் பெயரில் பின்னுள்ள "கோட்டா" இந்தக் கோட்டமாய் இருக்க வாய்ப்பு உண்டு. ஸ்ரீஹரி என்னும் திரிவு எப்படி வந்தது, பவத்திரிக்கும் அதற்கும் உள்ள ஓசைத் தொடர்பு என்ன, என்று இன்னும் அறிந்தேன் இல்லை; தேடுகிறேன் - ௾ராம.கி)

தமிழகத்தின் தெற்கே பாண்டிநாட்டிலே கிழக்குக் கடற்கரையையடுத்து கொற்கைக்குடாக் கடல் இருந்தது. கொற்கைக் குடாக் கடல் நிலத்தில் புகுந்து உள்கடலாக அமைந்திருந்தது. கொற்கைக் குடாக் கடலின் மேற்கே கொற்கைப் பட்டினம் இருந்தது. இது துறைமுகப் பட்டினமாகவும் முத்துக் குளிக்கும் இடமாகவும் இருந்தது. கொற்கை நகரத்தைப் பற்றிச் சங்கப் பாடல்கள் சிறப்பாகக் கூறுகின்றன. தாமிரபரணி ஆறு அக்காலத்தில் கொற்கைக் குடாக் கடலில் சென்று விழுந்தது. கடற்கரையில் இருந்து ஐந்து மைல் தூரம் உள்புகுந்து உள்நாட்டுக் கடலாக இருந்த கொற்கைக் குடாக் கடல் பிற்காலத்தில் ஏறத்தாழ 10 ஆம் நூற்றாண்டில் மண்மூடி மறைந்து போய்விட்டது. கடற்கரைப் பக்கமாகக் கடல் அலைகள் மணலைக் கொண்டு வந்து கொற்கைக் குடாக் கடலின் ஒரு புறத்தைத் தூர்த்து விட்டன. தாமிரபரணி ஆறு மணலை அடித்துக் கொண்டு வந்து கொற்கைக் குடாக் கடலின் இன்னொரு புறத்தைத் தூர்த்துவிட்டது. இவ்வாறு இருபுறமும் மணல் தூர்ந்து கொற்கைக் குடாக்கடல் அடியோடு மறைந்து போய் இப்போது அது இருந்த இடம் நிலமாக மாறிவிட்டது. தாமிரபரணி ஆறும் இடம் மாறிவிட்டது. இவ்வாறு கடற்கரையோரங்களில் கடல் அரிப்பினாலும், கடல்பெருக்கினாலும் பல இடம் கடல்மாறிப் போனதற்குப் பல சான்றுகளைக் காட்டலாம். (மாமல்ல புரத்திற்கு அருகில் ஏற்பட்ட மாற்றங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். - இராம.கி.)

இராமேசுவரம் ஒரு காலத்தில் இராமநாதபுரத்தோடு இணைந்திருந்ததென்றும், அது பிற்காலத்தில் தீவாகப் பிரிந்து தாய்நாட்டில் இருந்து பிரிந்து போய்விட்டதென்றும் கூறுகிறோம். அதனை விளக்குவோம். இராமேசுரம் இராமநாதபுரத்துடன் இணைந்திருந்த காலத்தில் இராமேசுவரக் கோயிலில் இருந்து இராமலிங்கப் பெருமானை இராமநாதபுரத்துக்கு எழுந்தருளிவித்து ஒரு வாரம் தங்கிப் பிறகு மீண்டும் இராமேசுவரத்துக்குக் கொண்டு போவது வழக்கமாய் இருந்தது. இவ்வாறு இராமேசுவரம் தீவாக மாறுவதற்கு முன்பு வரையில் இது நடந்து வந்தது. தீவாக மாறிப் போனபிறகு இராமேசுவரர் இராமநாதபுரத்துக்கு எழுந்தருளுவது நின்றுவிட்டது. ஏறத்தாழ கி.பி.12ம் நூற்றாண்டில் இலங்கையை ஆண்ட சிங்கள அரசன் தமிழ்நாட்டின் மேல் படையெடுத்துப் போர் செய்ய வந்தபோது, அவனுடைய சேனையைக் கப்பல்களில் ஏற்றிக் கொண்டுவந்து இராமேசுவரத்தில் இறங்கிப் பிறகு அந்தச் சேனையை இராமநாதபுரத்துக்கு அழைத்து வந்தான் என்று சுல்லவம்சம் (=சூளவம்சம் - இராம.கி) என்னும் இலங்கைநூல் கூறுகிறது. இதனாலும் இராமநாதபுரமும் இராமேசுவரமும் முற்காலத்தில் ஒன்றாக இணைந்திருந்தன என்பதை அறிகிறோம்.

ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கு முன்பு இராமநாதபுர வட்டத்தில் போர்ச்சுகீசியர் வந்து கப்பல் வணிகம் செய்தார்கள். அக்காலத்தில் பெரும் புயலடித்துக் கடல் கொந்தளித்துக் கடலில் நீண்டுகிடந்த இராமேசுவரத்தைத் தீவாகப் பிரித்துவிட்டதும், கடல்நீர், சிறு கால்வாய் போலப் பாய்ந்து இராமநாதபுரத்தையும், இராமேசுவரத்தையும் பிரித்துவிட்டது. சிலகாலம் வரையில் இந்தச் சிறு கால்வாயைக் கடந்து இராமநாதபுரத்துக்குப் போக்குவரத்து இருந்தது. பிறகு இந்தக் குறுகலான கால்வாயில் கடல்நீர் புகுந்து அதை அகலமாக்கி விட்டது. அப்போது போர்த்துகீசிய வாணிகர் தங்களுடைய வணிகக் கப்பல்களின் போக்குவரத்துக்காக இந்தக் கால்வாயை ஆழமாகவும் அகலமாகவும் செய்துவிட்டார்கள். அதற்காக அவர்கள் ஆயிரக்கணக்கான வராகன்களைச் செலவு செய்தார்கள்.

புயல் அடித்து காற்று மழையினாலும் கடல் கொந்தளிப்பினாலும் இயற்கையாக உடைப்புண்ட இராமேசுவரம் பிறகு பையப் பைய உடைப்பு அகலமாகிக் கால்வாய் ஆகிவிட்டது. அந்தக் கால்வாயை போர்த்துகீசிய வாணிகர் கப்பல் போக்குவரத்துக்கு ஏற்றதாக அகலமும் ஆழமுமாகச் செய்து விட்டனர், இவ்வாறு இராமேசுவரம் தனித்தீவாகப் பிரிந்து போயிற்று. இராமநாதபுரத்துக்கும், இராமேசுவரத்துக்கும் உள்ள கால்வாய் இப்போது பாம்பன் கால்வாய் என்று பெயர் கூறப்படுகிறது. இராமேசுவரமும், இராமநாதபுரமும் முன்னொரு காலத்தில் இணைந்து ஒரே நிலமாக இருந்தது என்பதைப் பிற்காலத்தவர் மறந்து விட்டார்கள்.
----------------------------------

இராமநாதபுரத்துக்கும், இராமேசுரத்துக்கும் இடையில் பாம்பன் கால்வாயை போர்த்துகீசியர் வெட்டிய போதும், பின்னால் ஆங்கிலேயர்கள் அதை அகலப் படுத்திய போதும், இராமர் சேது என்று சொல்லி அதை நிறுத்த ஆட்கள் இல்லை. இன்றோ, சேதுக் கால்வாய் வெட்டுவதை நிறுத்துவதற்கு இராமனைக் காரணம் காட்டுகிறார்கள்.

இனி ஆதி சேதுவுக்கும், இப்பொழுது பேசப்படும் இராமர் சேதுவுக்கும் இடையிலான நிலம் கடற்கோளில் அழிந்த செய்தியை அடுத்த பகுதியில் பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.

அரக்கனும், தமிழும், இராமர் சேதுவும் - 4

"அரக்கனும் தமிழும்" என்ற முன்பாதித் தலைப்பைப் பற்றி இதுகாறும் பேசிய நாம், "தமிழும், இராமர் சேதுவும்" என்ற பின்பாதித் தலைப்பிற்குள் சென்று பார்த்துவிட்டு, மீண்டும் முன்பாதித் தலைப்பிற்குப் போகலாம். (வான்மீகியையோ, அல்லது கம்பனையோ, ஒழுங்காகப் படித்தாலே, சேது பற்றி விளங்கிப் போகும் என்றாலும் திருகு வாதங்களையும், சூழ்ச்சிகளையும் சேர்த்து வைத்து, ஓர் இயற்கை மண்திட்டை இராமர் சேது என்று சொல்லிக் கொண்டு, அரசியலுக்காக எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று இருப்பவர்களுக்கு நாம் ஒன்றும் சொல்வதற்கு இல்லை. நொதுமலாய் இருக்கும் பொதுவானவர்களுக்கு நிலையை ஓரளவாவது புரிய வைக்க வேண்டும் என்றே இந்தக் கட்டுரைத் தொடரைத் தொடங்கினேன்.)

"இராவணன் எங்கே சீதையைத் தூக்கிக் கொண்டு போனான்?" என்று தேட முற்பட்ட வானரர்களை நான்கு திசைகளுக்கும் பிரித்து அனுப்பும் சுக்ரீவன், தென்திசைக்கு அனுமனையும், அங்கதனையும், சாம்பவனையும் இன்னும் சிலரையும் அனுப்புவான். அவர்களுக்கு, எங்கு தேடவேண்டும் என்றும், எப்படி போக வேண்டும் என்றும் கட்டளை பிறப்பிக்கும் சுக்ரீவன் தென்கடல் வரைக்கும் அவர்களைப் போகச் சொல்லியிருப்பான். இங்கு வான்மீகியை எடுத்துரைக்காமல், அவரைப் பெரும்பாலும் ஒட்டிச் சென்ற, நமக்கு நன்கு தெரிந்த கம்பனில் இருந்தே, குறிப்புத் தருகிறேன். கிட்கிந்தா படலம் நாடவிட்ட படலத்தில்

தென்தமிழ் நாட்டு அகன்பொதியின் திருமுனிவன் தமிழ்ச்சங்கம்
சேர்கிற் பீரேல்
என்றுமவன் உறைவிடமாம் ஆதலினால் அம்மலையை
இறைஞ்சி ஏகி
பொன்திணிந்த புனல்பெருகும் பொருநையெனும் திருநதிபின்
பொழிய நாகக்
கன்றுவளர் தடஞ்சாரல் மயேந்திரமா நெடுவரையும்
கடலும் காண்டிர்

என்ற பாடல் வரும். இதில் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டிய செய்தி "பொதிகை மலையைத் தாண்டி, பொருநையையும் (தாம்பர பெருநையும்) தாண்டிச் சென்றால், மகேந்திர மலையடுக்கையும், அதன் அருகில் கடலையும், காண்பீர்கள்" என்று சுக்கிரீவன் கூற்று மட்டுமே. இதே கூற்றின் படி அனுமனும் மற்றவரும் மகேந்திர மலை போய்ச் சேர்ந்ததை, ஆறுசெல் படலத்தின் கடைசிப் பாடலில் கம்பன் சொல்லுவான்.

வன்திசைக் களிறு அன்ன மயேந்திரக்
குன்று இசைத்தது வல்லையில் கூடினார்
தென்திசைக் கடற்சீகர மாருதம்
நின்றிசைக்கும் நெடுநெறி நீங்கினார்

தென்திசைக் கடலில் இருந்து வரும் ஈரக்காற்று, நின்று ஒலிக்கும் வழிகளைக் கடந்து, தென் திசையைத் தாங்கும் யானை போன்ற மகேந்திர மலையை அடைந்த அனுமனும் மற்றவர்களும், அடுத்து சம்பாதியோடு உரையாடி இலங்கை பற்றி அறிகின்றனர். அதற்குப் போகுமுன் தென் கடல் பற்றிய செய்தியைப் புரிந்து கொள்ளுவோம்.

ஒரு 300/400 ஆண்டுகளாய், வங்காள விரிகுடா என்று சொல்லப்படும் கடல், தமிழ் இலக்கியம் நெடுகிலும் குணகடல் அல்லது கிழக்குக் கடல் என்றே சொல்லப்பட்டு வந்திருக்கிறது. அதை ஒருநாளும் தென் கடல் என்று யாரும் அழைத்ததில்லை. அப்படி அழைத்ததற்கு தமிழில் ஆவணப் பதிவும் கிடையாது. அதே போல அரபிக்கடல் என்று வாஸ்கோட காமா காலத்தில் இருந்து சொல்லப்படும் கடல், குட கடல் அல்லது மேற்குக் கடல் என்றே தமிழ் இலக்கியம் நெடுகிலும் பதிவு செய்யப் பட்டிருக்கிறது.

தென் கடல் என்பது இன்றைக்கு இந்துமாக் கடல் என்று சொல்லப் படுகிறது. வேத காலத்துச் சில வடபால் நூல்களிலும், பிராமணங்கள், ஆரண்யங்கள் போன்றவற்றில், தென்கடல் என்ற கருத்து அரபிக் கடலைக் குறிப்பதாகவும் சில வடமொழி அறிஞர்கள் கருத்துச் சொல்லுகிறார்கள். (ஏனென்றால் சப்த சிந்துவுக்கு அது தென்பகுதி.) அந்த ஆதாரங்கள் வடமொழி இலக்கியங்களைத் தேடினால் கிடைக்கும். வடமொழி இலக்கியத்தில் கிழக்குக் கடல் என்பது "சகரனின் மைந்தர்கள் தோண்டிய செயற்கைக் கடல்" என்றும், அதனால் சாகரம் என்ற பெயர் ஏற்பட்டதாகவும், ஒரு தொன்மக் கதை உண்டு. (பின்னால் சாகரம் என்ற சொல் பொதுமைப் பெயராகி மற்ற கடல்களுக்கும் பயன்பட்டது.) ஆனால் வடமொழி இலக்கியங்களிலும் கூடக் கிழக்குக் கடல் ஒரு காலத்தும் தென் கடல் என்று சொல்லப் பட்டது இல்லை.

அடுத்து மகேந்திர மலை என்பது இன்றைக்குக் குமரி மாவட்டத்தில் மகேந்திர கிரி என்ற சொல்லப்படும் இடத்திற்கு (Liquid propulsion centre இருக்கும் இடத்திற்கு) அருகில் உள்ள மலையடுக்கு என்று சொல்லுவார்கள். பின்னால் இந்த மகேந்திர மலையில் இருந்து தான் அனுமன் இலங்கைக்குத் தாவிப் போனதாக இராம காதை சொல்லும். (நெடுங்காலம் கழித்து வந்த மாணிக்க வாசகரும் கூட மகேந்திர மலையை சிவனின் இருப்பிடமாகக் கீர்த்தித் திரு அகவலில் "மன்னும் மாமலை மகேந்திரம் அதனில், சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும்" என்று குறிப்பிட்டுச் சொல்லுவார். ஏதோ ஒருவகையில் மகேந்திரம் என்பது தமிழருக்குச் சிறப்பானதாக இருந்ததோ, என்னவோ? மகேந்திர மலை பற்றிய இலக்கியச் செய்திகளும், மற்ற தரவுகளும் ஆய்வு செய்யப் படவேண்டியவை.)

அடுத்து நெடுங்காலத்திற்கு முன்னால் அழிந்த குமரி நிலம் பற்றிப் பேசவேண்டும். தெற்கே கடற்கோளால் நிலம் அழிந்தது உண்மை. "அது கண்டமா? குறுநிலமா?" என்பதில் தமிழ் அறிஞர்களிடையே பெருத்த வேறுபாடுகள் உண்டு. அந்தக் கருத்தாடலுக்குள் நான் இப்பொழுது போகாமல் அதைத் திரு. சு.கி.ஜெயகரன் (குமரிநில நீட்சி, காலச்சுவடு பதிப்பகம், திசம்பர் 2002. இந்தப் பொத்தகத்தோடு நான் வேறுபட்டாலும், அதே பொழுது, படிக்கவேண்டிய பொத்தகம் என்று சொல்லுவேன்.) சொல்வது போலக் குறுநிலம் என்றே இப்போதைக்கு எடுத்துக் கொண்டு பார்த்தால், இன்றுள்ள குமரிமுனைக்கும் தெற்கே கிட்டத் தட்ட 80 கி.மீ அளவுக்கு கணிசமான நிலம் (குமரிக் கண்டம் என்ற கருத்தைக் காட்டிலும் குமரிநிலம் என்ற சொல்லைப் பயனாக்குவது நல்லது.) அழிந்து போயிருக்கலாம் என்று கொள்ளலாம். (இந்த நீளத்தை சட்டென்று நான் ஒப்ப முடியவில்லை. இன்னும் நீண்டு இருக்கக் கூடும் என்றே எண்ணுகிறேன். அது பற்றிய கடல் ஆய்வு தொடர வேண்டும்.) ஜெயகரன் சொல்லும் இன்னொரு கருத்து (இதில் பெரும்பாலும் யாருமே வேறுபட மாட்டார்கள்.) தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடையிலுமான நிலப்பரப்பும் கூட கடல்மட்ட உயர்ச்சியால் அழிந்து போனது. இதைப் பற்றி விரிவாகக் கீழே பார்ப்போம். இந்த இரு அழிவுகளும் கடல் மட்டம் உயர்ந்ததனால் நடந்திருக்கின்றன.

இற்றைக்குப் 15000 - 12000 ஆண்டுகளூக்கு முன்னால் இருந்த பனியுகத்தில் (ice age) கடலின் மட்டம் இன்று இருப்பதைக் காட்டிலும் 80-100 மீ. குறைந்து இருந்தது. அதனால் நீரின் அடியில் இன்று இருக்கும் பல நிலங்கள் (பெரும்பாலும் பெருநிலக் கடற்கரை, தீவுகள் ஆகியவற்றை ஒட்டியவை) அன்று வெளிப்பட்டு நிலமாகவே இருந்தன. இத்தகைய நிலை இந்தியத் துணைக் கண்டத்திலும் இருந்தது. அப்படிக் கடற்கரை பெரியதாக இருந்த போது, M130 ஆட்களும் (நாகர், இயக்கர் போன்ற பல்வேறு கருப்பு இனத்தவரும்), பொதுவாக இந்தியர் என்று சொல்லப்பெறும் (என்னைப் போன்ற ஒரு சிலர் திராவிடர் என்றே சொல்ல விழையும்) M20 ஆட்களும் (The Journey of Man - A Genetic Odyssey by Spencer Wells, Penguin Books. M20 ஆட்கள் உலகில் இந்தியத் துணைக் கண்டத்திலேயே தான் மிகுந்து இருக்கிறார்கள் என்றும், இவர்களில் 50% தென்னிந்தியாவிலே இருக்கிறார்கள் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.), இவர்களுக்கு இடையே கலந்து உருவான ஆட்களும், ஆகப் பெரும் கூட்டமே இந்த அழிந்து போன கடற்பரப்பு நிலங்களில் வாழ்ந்து இருப்பார்கள். (இந்த ஆட்களின் வாழ்க்கை எச்சங்கள் தான் சென்னையில் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு அருகில் இருக்கும் அச்சரப் பாக்கத்தில் கிடைக்கின்றன.)

பின்னால் வெவ்வேறு காரணங்களில் தூண்டப்பட்டு பனியுகம் முடிந்து, பனிப் பாறைகள் உருகி, கடல் மட்டம் உயரத் தொடங்கி இருக்கிறது. பொதுவாகக் கடல் மட்டம் கொஞ்சம் கொஞ்சமாய் உயரும் போது அது அங்கு வாழும் மாந்தரின் மரபில் கதைகளை உண்டு பண்ணாது. மாறாகச் சில இலக்குச் சார்ந்த புவியியல் அமைப்புகளால் (localized geographical formations) திடீரென்று நீர் பிளந்து கொண்டு வெள்ளமாய்ப் பெருக்கெடுத்துக் கொட்டும் போது, அது மாந்தர்களின் குமிந்த மரபில் (common traditions) அழிக்கமுடியாத தொன்மத்தை உருவாக்கும். அப்படி ஒரு காலம் கி.மு. 5600 ஆகும்.

இந்தப் பொழுது திடீரென்று துருக்கிக்கு அருகில் உள்ள பாஸ்பரஸ் நீரிணை பிளந்து, மத்திய தரைக் கடலின் நீர், வெள்ளமாய், ஒரு பெரும் அருவி போல, கருங்கடலுக்குள் கொட்டி கருங்கடலின் நீர்மட்டத்தை உயர்த்தியிருக்கலாம் என்று பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் William Ryan என்பவரும், Waltar Pitman என்பவரும் சேர்ந்து ஒரு தேற்றை (theory) 1998 அளவில் வெளியிட்டார்கள். (அவர்களுடைய பொத்தகம் Noah's Flood, Simon& Schister, Rockefeller Centre, 1230 Avenue of the Americas, New York NY 10020 - கட்டாயமாகப் படிக்க வேண்டிய ஒன்று.) மற்ற ஆய்வாளர்கள் இந்தத் தேற்றின் ஒரு சில விவரங்களையும் முடிவுகளையும் மறுத்தாலும், முற்றிலும் ஒதுக்கி விடவில்லை. இவர்களின் முன்னீடு, ஆய்வாளர்கள் மனத்தில் ஒரு புதிய பார்வையைக் கொண்டு வந்திருக்கிறது.

இது போன்ற ஒரு நில அழிப்பு தமிழகக் கடற்கரையிலும், குறிப்பாக இன்றையக் குமரிமனைக்குத் தெற்கிலும் நடந்திருக்கலாம். இந்த நிலங்கள் அழிந்ததை ஒரு இயக்கப் படமாக வலையில் போட்டிருந்தார்கள். அதன் சுட்டி கீழே.

http://www.grahamhancock.com/underworld/AshCF1.php?p=1

(மேலே உள்ள தளத்தில் அடுத்தடுத்து 5 பக்கங்கள் இருக்கும். வலைத்தளத்தில் சொல்லுவதை நான் ஏற்கிறேன் என்று பொருள் கொள்ளாதீர்கள். நான் சுட்டி கொடுத்தது அதில் வரும் இயக்கப் படத்திற்காகவே.)

அந்தப் படத்தில் பார்க்கும் போது குமரிமனைக்குக் கீழே தீவு ஒன்றும் தெரியும். அது தான் இராமாயணத்தில் சொல்லப் படும் இலங்கையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் கம்பனில் சொல்லப்படும் அடையாளங்கள் குமரி முனைக்கும் தெற்கேதான் கொண்டு போகின்றன. தவிர "குரங்கு செய்கடல் குமரியம் பெருந்துறை" என்று சீத்தலைச் சாத்தனார் மணிமேகலையிலும் கூறியிருக்கிறார்.

இனி மீண்டும் கம்பனுக்கே வருவோம். மகேந்திர மலைக்கு வந்து சேரும் அனுமனும் மற்றவர்களும் சீதையைக் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கும் தங்கள் இயலாமையைப் பேசிக் கொண்டிருப்பதைச் சம்பாதிக் கழுகு கேட்கிறது. அப்பொழுது தன் உடன்பிறந்தான் சடாயு இறந்ததை அறிந்து மிகுந்த வருத்தம் உறுகிறது. பின்னால் இராவணன் சீதையை இலங்கைத் தீவுக்குக் கொண்டு போன செய்தியை வாணரருக்குச் சம்பாதிக் கழுகு சொல்லுகிறது. இலங்கையின் இருப்பிடத்தையும் அதன் தொலைவையும், இராவணனின் நகர் பற்றியும் கூடச் சொல்லுகிறது. இதைத் தொடர்ந்து, கிட்கிந்தா காண்டம், சம்பாதிப் படலத்தில் "ஓசனை ஒருநூறு கொண்டால் ஒலிகடல் இலங்கை" என்ற வாசகமும், கிட்கிந்தா காண்டம் மயேந்திரப் படலத்தில் "ஓசனை ஒன்று நூறும்" என்ற குறிப்பும் கம்பனால் சொல்லப் பெறும்.
ஆக மகேந்திரமலையில் இருந்து இலங்கைநகரம் 100 யோசனைத் தொலைவு இருந்தது. இந்தத் தொலைவை அனுமன் தாவிக் கடந்ததாக இராம காதை கூறும். சரி, யோசனை என்ற தொலைவு இன்றையக் கணக்கில் எவ்வளவு ஆகும்?

பொறிஞர் கொடுமுடி சண்முகம் "பழந்தமிழர் பொறியியல் நுட்பத் திறன்" என்ற ஆய்வுப் பொத்தகத்தில் (படிக்க வேண்டிய இரு பொத்தகங்கள்; மீனா கோபால் பதிப்பகம், மனை எண் 9, புதிய கதவு எண் 26, குறுக்குத் தெரு, சோசப் குடியிருப்பு, ஆதம்பாக்கம், சென்னை -88, தொலை பேசி: 22533667)

1 விரல் = =1 3/8 inch = 3.5 cm (3.48958 cm)
6 விரல் = 1 சாண் =8 1/4 inch = 21 cm
2 சாண் = 1 முழம் =16 1/2 inch = 42 cm
2 முழம் = 1 கோல் =33 inch = 84 cm
4 கோல் = 1 தண்டம் =11 ft = 3.35 m
500 தண்டம் = 1 கூப்பீடு= 1 mile 220 ft = 1.675 Km
4 கூப்பீடு = 1 காதம் = 4 mile 1 furlong 220 ft = 6.7 Km
4 காதம் = 1 யோசனை =16 mile 5 furlong 220 ft = 26.82 Km

இந்த அளவீடுகள் கிட்டத்தட்ட சிற்சில மாற்றங்களுடன் சிந்து சமவெளி நாகரிக காலத்தில் இருந்து நாவலந்தீவு எங்கணும் (தமிழகமும் சேர்த்து) இருந்ததாகத்தான் பல ஆவணங்களும் (கௌடில்யரின் அர்த்த சாத்திரம் கூட) சொல்லுகின்றன.

100 யோசனை என்பது 2682 கி.மீ. ஆகும். அதாவது மகேந்திர மலையில் இருந்து இலங்கை நகரம் 2682 கி.மீ தொலைவில் இருக்க வேண்டும். சரி கம்பன் காதத்திற்கு மாறாக யோசனை என்று தவறாகச் சொல்லிவிட்டான் என்றால் 670 கி.மீ. தொலைவில் இலங்கை இருக்க வேண்டும். இப்படி ஒவ்வொன்றாகக் கம்பனின் அறிவைக் குறைசொல்லி நாம் குறைத்துக் கணக்கிட்டுக் கொண்டே போகலாம்.

எப்படி முட்டிப் பார்த்தாலும், இன்றைய இலங்கை பற்றிய கணக்கே ஒட்டிவராது. வால்மீகியோ, கம்பரோ தாங்கள் என்ன சொல்கிறோம் என்று தெரியாதவர்களா?

அடுத்த செய்திகளுக்குப் போவோம்.

அன்புடன்,
இராம.கி.

Thursday, September 27, 2007

அரக்கனும், தமிழும், இராமர் சேதுவும் - 3

"அரக்கர் என்பவர் கருமைகூடிய சிவந்த நிறத்துத் தனி இனத்தார் (tribe); நாவலந்தீவில் இருந்த பல இனத்தவர் போல இவரும் ஒருவர்" என்ற செய்தியோடு, இன்னுஞ் சில பழம் பாடல்களை அடுத்துப் பார்க்கலாம்.

பழைய இராமாயணம் ஒன்று தமிழில் இருந்திருக்க வேண்டும் என்பது "ஆசிரிய மாலை" என்னும் தொகுப்பு நூலின் வழி தெரிகிறது. ஆசிரியப் பாக்களினால் ஆன நூல்களிலிருந்து சில பாடல்கள் தொகுக்கப்பட்ட செய்யுள்களைக் கொண்ட நூல் ஆசிரியமாலையாகும். 

எத்தனையோ தமிழ் இலக்கியங்களை நம்முடைய கவனமின்மை காரணமாயும், பல்வேறு மூடத் தனங்களாலும், இழந்தது போல், இந்த ஆசிரிய மாலையும் நமக்கு முழுமையாகக் கிடைக்காதபடி ஆயிருக்கிறது. நல்ல வேளையாக, ஆசிரிய மாலையில் இருந்து ஒரு சில பாட்டுக்களையாவது புறத்திரட்டு என்னும் தொகைநூலில் சேர்த்திருக்கிறார். 

இது தவிர, தொல்காப்பியத்திற்கான நச்சினார்க்கினியர் உரையிலும் ஓரிரு பழைய இராமாயணப் பாட்டுக்கள் கிடைக்கின்றன. புறத்திரட்டு என்பது திரு. வையாபுரிப் பிள்ளையின் எடுவிப்பில் (editing), சென்னைப் பல்கலைக் கழக வாயிலாய் வெளியிடப்பட்டிருக்கிறது. (அண்மையில் கூட இதன் மறுஅச்சு வெளி வந்திருக்கிறது.). இதே போல "மறைந்து போன தமிழ்நூல்கள்" என்ற தலைப்பில் மயிலை. சீனி. வேங்கடசாமியாரால் வெளிவந்த பொத்தகத்திலும் இந்தப் பழைய இராமாயணப் பாடல்கள் கொடுக்கப் பட்டிருக்கின்றன.

[இந்தப் பாடல்களை இணையத்தில் எங்களைப் போன்ற பலருக்கும் அறிமுகம் செய்து விளக்கியவர் நண்பர் அட்லாண்டா பெரியண்ணன் சந்திர சேகரன் ஆவார். Remnants of Tamil Works lost over the years - I, pazaya rAmAyaNam (in Tamil Script, TSCII format) என்று தேடினால் அவர் வலையில் இட்டது கிடைக்கும். (அவரைப் போன்றவர்கள் இன்று தமிழ் இணையத்தில் இல்லாதது ஓர் இழப்பே!) 

இந்தப் பாடல்கள் வால்மீகி இராமாயணத்தில் இல்லாத நிகழ்ச்சிகளைக் குறிப்பிடுவது பற்றி பெர்க்லி பல்கலைத் தமிழ்-வடமொழிப் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட்டு (George Hart) "The Poems of Ancient Tamil: their milieu and their Sanskrit counterparts", (1975) எனும் நூலில் சொல்வதாக பெ.சந்திரசேகரன் சொல்வார்.]

பழைய இராமாயணம் என்று மேலே சொன்னாலும், கிடைத்தது என்னவோ, ஐந்து பாடல்கள் தாம். இந்தப் பழைய இராமாயணம், கம்ப ராமாயணத்திற்கும் முந்தி இருந்திருக்க வேண்டும்; எந்தக் காலமென உறுதியாக சொல்ல முடிய வில்லை. அதன் நடையையும் (தேவாரம், நாலாயிரப் பனுவல்களுக்கும் முந்திய காலங்களில் தான் அகவல் நடை பெரிதும் விரும்பப் பெற்றது. பிற்காலங்களில் விருத்தப் பாக்கள் கூடிவிட்டன), சொல்லாட்சிகளையும் பார்த்தால், பெரும்பாலும் சங்ககாலக் கடைசியில் உருவாகி இருக்க வாய்ப்புண்டு என்றே ஊகிக்கிறோம். ஆசிரிய மாலையில் வரும் பழைய இராமாயணப் பாக்கள் எல்லாமே போர்க்களம் பற்றியதாய் உள்ளன. மற்ற பாட்டுக்கள் எல்லாம் சுவடி அழிந்ததில் தொலைந்தன போலும்.

முதற்பாட்டு:

மாமுது தாதை ஏவலின் ஊர்துறந்து
கான்உறை வாழ்க்கையில் கலந்த இராமன்
மாஅ இரலை வேட்டம் போகித்
தலைமகள் பிரிந்த தனிமையன் தனாது
சுற்றமும் சேணிடை அதுவே முற்றியது
நஞ்சுகறைப் படுத்த புன்மிடற்(று) இறைவன்
உலகுபொதி உருவமொடு தொகைஇத் தலைநாள்
வெண்கோட்டுக் குன்றம் எடுத்த மீளி
வன்தோள் ஆண்தகை ஊரே அன்றே
சொல்முறை மறந்தனம் வாழி
வில்லும் உண்(டு)அவற்(கு) அந்நாள் ஆங்கே
மாதர்க் கெண்டை வரிப்புறத் தோற்றமும்
நீலக் குவளை நிறனும் பாழ்பட
இலங்கை அகழி மூன்றும் அரக்கியர்
கருங்கான் நெடுமழைக் கண்ணும் விளிம்(பு)அழிந்து
பெருநீர் உகுத்தன மாதோ வதுவக்
குரங்குதொழில் ஆண்ட இராமன்
அலங்குதட(று) ஒள்வாள் அகன்ற ஞான்றே.

இராமனின் தனிமை இலங்கையின் அழிவில் முடிந்ததை இந்தப் பா சொல்லுகிறது. இனிக் கீழே ஒவ்வொரு பாவுக்கும், நானறிந்த வகையில் உரை சொல்லி என் புரிதலையும் கொடுத்துள்ளேன். இந்த உரைகளுக்கும், புரிதலுக்கும் நானே பொறுப்பு. ஒருவேளை கம்பனை இன்னும் ஆழ்ந்து படித்தால், சிற்சில இடங்களில் மாறுபட இயலும். நண்பர்கள் முயன்று உரிய பொருளைப் பலருக்கும் உணர்த்தினால் நல்லது.

--------------------------
அகவையில் மூத்த தந்தையின் ஏவலால், ஊரைத் துறந்து, காட்டுவாழ்க்கையில் கலந்துபோன இராமன், பெரிய கலைமான் வேட்டையில் ஈடுபட்டுத் தன் தலைவியைப் பிரிந்த தனிமையாகி, தன்னுடைய சுற்றத்தையும் விட்டுத் விலகுமாறு முடிந்ததால், நஞ்சுகறைப் பட்ட கழுத்துடைய இறைவன், உலகாளும் அம்மையொடு சேர்ந்திருந்த தலைநாளில், பனிமலை இமயத்தை அசைத்தெடுத்த பெரும் வன்தோள் ஆண்தகையின் (அதாவது இராவணனின்) ஊர் முற்றுகையுற்றது.

கொலைக்குரங்குகளின் தொழிலை ஆண்ட இராமனின் ஒளி மின்னும் வாள் அதன் உறையை விட்டு அகன்ற பொழுது, நீண்டமழையில் கருங்காடு எல்லையில்லாமல் நீர் உகுப்பது போல, அரக்கிப் பெண்களின் சிவந்தவரிப் புறத் தோற்றமும், குவளை மலர் போன்ற நிறமும் பாழ்பட, இலங்கையின் மூன்று அகழிகளும், பாழ்பட்டன. சொல்முறை மறந்தோமோ! வாழி ! அவன் வில்லும் அந்த நாளில் அங்கு தான் இருந்தது.
------------------------

மேலே சொன்ன விவரிப்புச் செய்தியில் முகன்மையானது, இராவணனின் கோட்டை மூன்று பக்கம் அகழி கொண்டது என்று சொல்வதாகும். இதன் மூலம், கோட்டையின் இன்னொரு பக்கம் கடலாக இருந்திருக்கக் கூடும் என உணர்கிறோம். இவ் விவரிப்பு கம்பனின் இராம காதைக்கு முற்றிலும் மாறுபட்டது. 

(இராமாயணத்தில் பல்வேறு வேற்றங்கள் -versions - உண்டு என்பது தமிழிலும் இதன்வழி உண்மையாகிறது. ஆசிரிய மாலையில் வரும் பழைய இராமாயணத்திற்கும், கம்பராமாயணத்திற்கும் இடையே வேறுபாடுகள் உள்ளன.) 

கம்பனில் இராவணனின் கோட்டைக்கு 4 பக்க அகழியும் வாயில்களும் சொல்லப் படும். மேலே "வன்தோள் ஆண்டகை" என்று இராவணன் சிறப்பாகவே சொல்லப் படுகிறான். அரக்கிப் பெண்களின் நிறம் குவளை மலர் போன்று சொல்லப் படுகிறது. செங்கீற்றுப் பாய்ந்த கருநிறம் குவளை நிறமாகும். ("அவன் பெருமானர் மகன் (son of a brahmin); அவனைப் போய் இவர்கள் ஆதரிக்கிறார்களே?" என்ற இந்துத்துவக்காரர்களின் சதுரப் பேச்சு - smart talk - இங்கு எடுபட முடியாது. அரக்கர் தனி இனம் என்று தான், அரக்கியரின் நிறம் குறிப்பது வழியாக, அறிகிறோம்.)

இனி இரண்டாம் பாட்டிற்கு வருவோம்.

இருசுடர் இயங்காப் பெருமூ(து) இலங்கை
நெடுந்தோள் இராமன் கடந்த ஞான்றை
எண்(கு) இடை மிடைந்த பைங்கண் சேனையிற்
பச்சை போர்த்த பலபுறத் தண்ணடை
எச்சார் மருங்கினும் எயிற்புறத்(து) இறுத்தலின்
கடல்சூழ் அரணம் போன்றது
உடல்சின வேந்தன் முற்றிய ஊரே.

-----------------------------------
கதிரும் நிலவும் உலவாத, பெரும் முது இலங்கையை பெருந்தோள் இராமன் வெற்றி கொண்ட போது, கரடிகள் இடைநிறைந்த, சினத்தால் பசித்த சேனை, மதிற்புறத்து எந்தப் பக்கம் நெருங்கினாலும், பச்சை போர்த்திய பல்வகை மருத நிலப்புறம் இருந்ததால், உடல் சினந்த வேந்தன் முற்றுகையிட்ட ஊர் கடல் சூழ்ந்த அரணம் போன்று ஆனது.
-----------------------------------

பாடலின் வழி நாம் கூர்ந்து கவனிக்கும் செய்திகளுக்கு வருவோம். முற்றுகையின் போது இராமனின் உடல் சினந்து காணப்படுகிறது. அவன் இயல்பான ஒரு மாந்தனாகவே, (கம்பனில் சொல்வது போல் கடவுள் அல்ல,) இந்தச் சொல்லாட்சியில் அறியப் படுகிறான். போர் வெற்றி கொண்ட நாள் அமையுவா நாளாக (கதிரும் நிலவும் உலவாத அமாவாசை நாளாக) அறியப் பெறுகிறது. (கம்பராமாயணத்தில் இச் செய்தியை நான் இன்னும் ஒத்துப் பார்க்கவில்லை)

கோட்டையின் மூன்று பக்கத்திலும் சுற்றி இருந்தது மருத நிலப்புறம். கம்பன் சொல்லுவது போல மலையும் காடும் சூழ்ந்த அணுக்கம் நான்கு திசையிலுமாய் விவரிக்கப் படவில்லை. திரிகூடமலை இங்கு உணர்த்தப் படவில்லை. 

(கம்பன் விவரிக்கும் யுத்த காண்டத்தில் மரா மரங்களும், கடம்ப மரங்களும் கணக்கற்று குரக்கினத்தால் பிடுங்கப் படுகின்றன; கல்லும், பாறைகளும் பெயர்க்கப் படுகின்றன.) 

கம்பன் விவரிக்கும் இடமும், இந்த இடமும் வேறுபடுகின்றன. மருத நிலப்புறம் என்பது "பலபுறத் தண்ணடை" என்ற சொல்லாட்சியால் இங்கு உணர்த்தப் படுகிறது. இக் குறிப்பு கம்பனோடு ஒப்பிட்டால் முற்றிலும் வேறுபடுகிறது. கம்பன் சொல்லும் இடம் வேறு எதோ விவரிப்பைக் குறிக்கிறது. 

கம்பன் கூறும் இடம் இன்றைய இலங்கையாக இருக்க வாய்ப்பில்லை என்றே கம்பனை ஆழ்ந்து படிப்போர் உணரமுடியும். (இற்றை இலங்கையின் புவியியல் தெரிந்தவர் அதை ஆய்வு செய்யவேண்டும். இலங்கையின் புவியியல் குறிப்பு பற்றி நான் தெரிந்தவற்றைப் பின்னால் சொல்கிறேன்.)

மூன்றாவது பாட்டு இராவணனின் வள்ளன்மையையும், மள்ளரின் வீரத்தினால் நொச்சித் தடந்தகையை (strategy) அவன் வகுத்ததையும் பாடுகிறது.

மேலது வானத்து மூவா நகரும்,
கீழது நாகர் நாடும் புடையன
திசைகாப் பாளர் தேயக் குறும்பும்
கொள்ளை சாற்றிக் கவர்ந்துமுன் தந்த
பல்வேறு விழுநிதி எல்லாம் அவ்வழிக்
கண்நுதல் வானவன் காதலின் இருந்த
குன்(று)ஏந்து தடக்கை அனைத்தும் தொழிலுறத்
தோலாத் துப்பின் தாள்நிழல் வாழ்க்கை
வலம்படு மள்ளர்க்கு வீசி வகுத்த இலங்கையில்
வாடா நொச்சி வகுத்தனன்
மாலை வெண்குடை அரக்கர் கோவே.

---------------------------------
மேலே வானத்தில் அழியா நிற்கும் அமராவதி நகரிலும், கீழே நாகருடைய நாட்டிலும் பெருகிக் கிடப்பவற்றையும், எட்டுத் திசை காப்பாளர்களின் தேசக் கோட்டையையும், சூறையாடுவதாய்ச் சூளுரைத்து, அவற்றைக் கவர்ந்து, முன்பு பெற்ற பல்வேறு விழுநிதியெல்லாம், அந்த வழியில், நெற்றிக்கண் முதல்வனின் மேல் உள்ள பற்றிமையால் (பக்தியால்) கயிலைக் குன்றை ஏந்திய தடக்கைகள் இப்பொழுது தொழிற்படும்படி, தோலா வலிமையோடு, தன் நிழலுக்குக் கீழே வாழ்ந்த வல்லமை பொருந்திய மள்ளருக்கு அள்ளிக் கொடுத்து ஏற்படுத்திய இலங்கையின் மருதப் புறத்து மதிலைக் காக்கும் படி நொச்சி ஏற்பாட்டை வகுத்தான், மாலையொடு வெண்கொற்றக் குடையிந் கீழ் வீற்றிருக்கும் அரக்கர் அரசன்.
---------------------------------

மேலே வானம், கீழே பாதலம் (இதற்குப் புவியின் அடியில் என்ற பொருளை மட்டும் கொள்ள வேண்டியதில்லை. இவர் இருக்கும் புவிமட்டத்திற்குக் கீழே உள்ள இடம் கூடப் பாதலம் தான். பாதலம் என்பது கிட்டத்தட்ட இன்றையப் பொருண்மையான பள்ளத்தாக்கையே குறிக்கிறது. காட்டாக மலை மேட்டிலிருந்து பார்த்தால் கீழுள்ள இடத்தைப் பாதலம் என்றே பேச்சுவழக்கில் சொல்லுவார்.), சுற்றிலும் எட்டுத் திசையிலும் இருக்கும் நாடுகளில் இராவணனின் அதிகாரம் நிலவியதாக புலவர் சொல்கிறார்.

இப் பத்துத் தலையிலும் (தலை என்பதற்குத் தமிழில் திசை என்றும் பொருள் உண்டு.) இவன் ஆட்சி எடுபட வேண்டுமானால், இராவணன் பத்துத் தலையான் என்று சொல்லுவது இயல்பே. பின்னால் பத்துத் தலையான் என்று உடல் அமைவோடு குழம்பினரோ, என்னவோ?

இவன் பத்துத் தலையிலும் சூறையாடியது கூட வியப்பில்லை. "ஆ, அரக்கன், அதனால் சூறையாடினான்" என்று அச்சடித்துப் பார்க்கும் வேலையெல்லாம் தேவையில்லை. சூறையாடும் செயலை நாவலந்தீவில் பல அரசரும், தலைவரும் வெவ்வேறு கால நிலைகளில் செய்திருக்கிறார். வேண்டுமானால் புறநானூற்றுப் பாட்டுக்கள் சிலவற்றைப் படித்துப் பார்க்கலாம். ("ஆகா, தமிழனைச் சொல்லிவிட்டான்" என்று தேவைக்கு மீறி உணர்ச்சி வயப் படாமல், இயல்பான முறையில் மேலே உள்ள பாவின் வரிகளைப் புரிந்து கொள்வது நல்லது. எந்தக் காலத்திலும் தடியெடுத்தவன் எல்லாம் தண்டற்காரன் தான். இந்தத் தடியெடுப்பை இராவணனும் செய்வான், இராமனும் செய்வான்; செய்திருக்கிறான்.)

இராவணன் கயிலையை அசைத்ததும், அவன் சிவநெறியாளன் என்பதும் இப் பாடலில் பெரிதும் பேசப் படுகிறது. தமிழரின் இலக்கியத்தில் இராவணன் ஒரு சிவ வழிபாட்டாளன் என்பது அழுத்தமாகவே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்த எண்ணம் நெடுநாட்கள் தமிழரிடையே இருந்திருக்கலாம். (கலித்தொகை 38 இலும், இராவணன் இமயமலைக்கு அடியில் சிவனின் அழுத்தலால் சிக்கிய கதை சொல்லப் படும்.

இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்
உமையமர்ந்து உயர்மலை இருந்தனன் ஆக
ஐயிரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப்பொலி தடக்கையிற் கீழ்புகுத்து அம்மலை
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல - கலி 38:1-5

---------------------------
அந்தணன் என்ற சொல்லைப் பார்த்துப் "பெருமானராய்ச் சிவனைச் சொல்லிவிட்டார் இந்தப் புலவர்" என்று படையெடுத்துக் கொண்டு யாரும் வர வேண்டாம். அந்தன்> அந்தனன்> அந்தணன் என்ற சொல் சங்க இலக்கியத்தின் பல இடங்களில் பார்ப்பனரைக் குறிக்கவில்லை. அப்படிக் குறிப்பதாகப் பலரும் பரப்புரை செய்கிறார்கள்; அது தவறு. 

பெருமானர், பார்ப்பனர், அந்தணர் என்ற சொற்களின் பொருண்மைகள் பல்வேறு நிகழ்ப்புக்களுடன் (agenda) விதம் விதமாக நம் முன்னால் திரிக்கப் படுகின்றன. பொதுவாக, அத்தன் = தலைவன், ஐயன், பெரியவன் என்ற பொருளையே அந்தணன் என்ற சொல் குறிக்கிறது. தமிழறிஞர் இளங்குமரன் "அந்தணன்" என்ற சொற்பிறப்பை அழகாக எடுத்துரைப்பார். என் முந்தையக் கட்டுரைகளில் அவரை எடுத்துரைத்து வழி மொழிந்திருக்கிறேன்.)
-------------------------------

கலித்தொகைப் பாடலை விடுத்து, ஆசிரிய மாலையில் வரும் மூன்றாவது பழைய இராமாயணப் பாடலுக்கு மீண்டும், வருவோம்.

தன்னால் வாழும் படையினருக்கும், மக்களுக்கும் பல நிதியங்களை இராவணன் அள்ளிக் கொடுத்திருக்கிறான்; அவர்களோடு பெரிதும் ஒன்றியிருக்கிறான். அவர்களால் தான் அவன் தலைநகரே கட்டப் பட்டிருக்கிறது. (அவனுக்காக உயிர்கொடுக்கவும் தயங்காதவராய் அவர் இருந்திருக்க வேண்டும். அவன் கொடுங்கோலனாய் இருந்திருந்தால் இது முடியாது.)

மள்ளர் என்பது மேலே வீரரைக் குறிக்கும் கடைந்தெடுத்த தமிழ்ச்சொல். அது மட்டுமல்லாது, கோட்டை மதிலைக் காக்க இராவணன் நொச்சித் தடந்தகையை (strategy) வகுத்தான் என்று சொல்லும் போது தொல்காப்பிய வழித் தமிழ்ப் போர்முறை இங்கு குறிக்கப் படுகிறது. கம்பரும் கூட யுத்த காண்டத்தின் அணிவகுப்புப் படலத்தில், இராவணன் முன்னே நிகும்பன் தம் பகைவரை இகழ்ந்து கூறுவதாக ஒரு பாடலை வைப்பார்:

எழுபது வெள்ளத் துற்ற குரக்கினம் எயிலை முற்றும்
தழுவின என்று செய்யத் தக்கது சமைதி போலாம்
அழவநீர் வேலை அன்னது ஆயிர வெள்ளம் அன்றே
உழிஞையைத் துடைக்க நொச்சி உச்சியில் கொண்டது உன் ஊர்

என்று அது வரும். "குரக்கினம் எழுபது வெள்ளம் சேனை வைத்து இருந்தால் என்ன? உன்னிடம் ஆயிரம் வெள்ளம் சேனை இருக்கிறது. அவருடைய உழிஞைத் தடந்தகையை (strategy) முறியடிக்க நொச்சித் தடந்தகையை (strategy) தன் உச்சியில் உன் ஊர் கொண்டுள்ளது" என்று சொல்லும் இந்தக் கம்பர் பாடல் ஆசிரிய மாலையின் தாக்கம் கொண்டதாகவே உள்ளது. இந்தப் போர் தமிழ்முறைப் படியே தான் இரு புலவராலும் புரிந்து கொள்ளப் படுகிறது. [மிண்டும் சொல்லுகிறேன். இங்குள்ள "போர்முறை" தமிழ்முறைப் படியே சொல்லப் படுகிறது. "இராவணன் தமிழனா, தமிழன் இல்லையா?" என்று தொங்கிய வண்ணம் தாவ நினைப்போர், மேலே கொடுத்துள்ள பட்டகைகளை - facts - குழப்பிக் கொள்ளக் கூடாது.]

அடுத்து நான்காம் பாட்டிற்குப் போவோம்.

இருபால் சேனையும் நனிமருண்டு நோக்க
முடுகியல் பெருவிசை உரவுக்கடும் கொட்பின்
எண்திசை மருங்கினும் எண்ணிறைந்து தோன்றினும்
ஒருதனி அனுமன் கைஅகன்று பரப்பிய
வன்மரம் துணிபட வேறுபல நோன்படை
வழங்கி அகம்பன்தோள் படையாக ஓச்சி
ஆங்க,
அனுமன் அங்கையின் அழுத்தலில் தனாது
வன்தலை உடல்புக்குக் குளிப்ப முகம்கரிந்(து)
உயிர்போகு செந்நெறி பெறாமையின்
பொருகளத்து நின்றன நெடும்சேண் பொழுதே.

-----------------------------
பெரும்விசையோடு, முடுகி எறிந்த வலிந்த கடுஞ் சுழற்சியில், எட்டுத் திசை மருங்கிலும் எண்ணமுடியாத படி தோன்றினாலும், தனி ஒருவனான அனுமன் தன் கையை அகற்றி வீசிய வலியமரம் உடைந்து போக, பல்வேறு நோன்புகளால் பெற்ற படைகளை வீசியும் அழியாததால், பெருமான் (பிரமன்) கொடுத்த வேற்படையை வீசிப் போதியதாக்க, அனுமன் உள்ளங்கையின் அழுத்தலால் தன்னுடைய வலிந்த தலையோடு உடல் புகுந்து தைக்க, முகம் கரிந்து, உயிர் போகும் விதி பெறாமையால், இருபக்கத்துச் சேனையும் மிகுந்து மருண்டு நோக்கிய படி, நெடிதுயர்ந்த பொழுதுக்கும், போர்க்களத்து நின்றன.
-----------------------------

இங்கே முன்னால் பிரமனிடம் தான் பெற்ற படையை வீசி  இராவணன்  இலக்குவனை அயரச் செய்தது கூறப் படுகிறது. (பெருமான் என்ற வடபுலத்துத் தெய்வக் குறிப்பு இங்கே பதிவு செய்யப் படுகிறது.) இந்தப் படையை வீசும் போது, குறுக்கே அனுமன் தடுத்திருக்கிறான் என்றும் தெரிகிறது. (அந்தச் செய்தி கம்பனில் கிடையாது.) ஆனால் யார் மேல் இராவணன் எறிந்தான் என்று இப் பாடலை வைத்துச் சொல்ல முடியவில்லை. நல்ல வேளையாக, கம்பனின் இராம காதை உதவிக்கு வருகிறது. இராவணன் எறிந்த அகம்பன் (=நான்முகன்) வேல் இலக்குவனை மயங்க வைத்ததாக இரு பாட்டுக்கள் கம்பனில் (யுத்த காண்டம், முதற் போர்புரி படலத்தில்) இருக்கின்றன.

வில்லினால் இவன் வெலப்படான் எனச் சினம் வீங்க
கொல்லும் நாள் இன்று இது எனச் சிந்தையில் கொண்டான்
பல்லினால் இதழ் அதுக்கினன் பருவலிக் கரத்தால்
எல்லின் நான்முகன் கொடுத்த ஓர் வேல் எடுத்து எறிந்தான்

எறிந்த கால வேல் எய்த அம்பு யாவையும் எரித்துப்
பொறிந்து போய் உக, தீ உக, விசையினின் பொங்கி
செறிந்த தாரவன் மார்பிடை சென்றது சிந்தை
அறிந்த மைந்தனும் அமர்நெடுங் களத்திடை அயர்ந்தான்.

இந்த 2 பாட்டுகளின் உதவியோடு ஆசிரிய மாலையின் பாட்டைப் பார்த்தால் பொருள் சட்டென்று விளங்குகிறது. "வன்தலை உடல்புக்குக் குளிப்ப முகம் கரிந்(து)" என்ற இலக்குவனின் நிலை கம்பனில் சொல்லப் படவில்லை. அங்கு இலக்குவன் ஆதிசேடனின் அவதாரம் என்பதால் இலக்குவன் பட்ட வலியும், முகம் கரிதலும் சொல்லப் படாது "அவன் அயர்ந்தான்" என்று மேலோட்டமாய்ப் பூசியதுபோல் சொல்லப் படும். இரண்டு சேனையும் இச் சண்டையைக் கவனித்து மருண்டு போய் நிற்கின்றன.

இனி ஐந்தாம் பாட்டிற்கு வருவோம்.

கடலும் மலையும் நேர்படக் கிடந்த
மண்ண வளாக நுண்வெயில் தகளினும்
நொய்தால் அம்ம தானே இஃ(து)எவன்
குறித்தன நெடியான் கொல்லோ மொய்தவ
வாங்குசிலை இராமன் தம்பி ஆங்(கு)அவன்
அடிபொறை ஆற்றின் அல்லது
முடிபொறை ஆற்றலன் படிபொறை குறித்தே.

இடுகையை வேகமாய் முடிக்க வேண்டிய நிலையில் இந்தப் பாடலின் உரையை கம்பனோடு ஒப்பிட்டு "எந்த நிகழ்வை இது குறிக்கிறது?" என்று ஆய்ந்து எழுத முடியாது இருப்பதால், பாட்டை மட்டுமே தருகிறேன். இலக்குவன் பெயரை நேரே குறித்த தமிழ்ப் பழம்பாடல் இது ஒன்றாகத் தான் இருக்கும்.

"அரக்கர் என்பவர் வெறுக்கப் படத்தக்கவர்" என்ற சுமையேற்றிய பார்வை இந்தியத் துணைக் கண்டத்தில் பெரிதும் பரப்பப் பட்டுள்ளது. மேலே உள்ள 5 பாக்களைப் படித்தால், அந்தப் பார்வை ஒரு பக்கப் பார்வை என்பதைக் குறிப்பால் அறியமுடியும். ஒருபக்கம் குரக்கினமும், இராமனும், அவனைச் சார்ந்தவரும்; இன்னொரு பக்கம் அரக்கர் என்ற அளவிலேயே நொதுமலாய்ச் (neutral) செய்திகள் சொல்லப் படுகின்றன.

இனி அடுத்த இடுகையில் அரக்கர் பற்றிக் கொஞ்சமும், சேது பற்றி நிறையவும் பேசுவோம். (அகம் 70 பற்றிய செய்தி அங்குதான் வருகிறது)

அன்புடன்,
இராம.கி.

Sunday, September 23, 2007

அரக்கனும், தமிழும், இராமர் சேதுவும் - 2

புறம் 378 கீழ்வருமாறு போகிறது.

தென்பரதவர் மிடல் சாய
வடவடுகர் வாள் ஓட்டிய
தொடையமை கண்ணித் திருந்துவேல் தடக்கைக்
கடுமா கடைஇய விடுபரி வடிம்பின்
நற்றார்க் கள்ளின் சோழன் கோயில்
புதுப்பிறை அன்ன சுதைசெய் மாடத்துப்
பனிக்கயத்து அன்ன நீள்நகர் நின்றுஎன்
அரிக்கூடு மாக்கிணை இரிய ஒற்றி
எஞ்சா மரபின் வஞ்சி பாட
எமக்கென வகுத்த வல்ல மிகப் பல
மேம்படு சிறப்பின் அருங்கல வெறுக்கை
தாங்காது பொழி தந்தோனே! அதுகண்
இலம்பாடு இழந்த என் இரும்பேர் ஒக்கல்
விரல் செறி மரபின செவித் தொடக்குநரும்
செவித் தொடர் மரபின விரல் செறிக்குநரும்
அரைக்கு அமை மரபின மிடற்று யாக்குநரும்
மிடற்று அமை மரபின அரைக்கு யாக்குநரும்
கடுந்தெறல் இராமன் உடன் புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை
நிலஞ் சேர் மதரணி கண்ட குரங்கின்
செம் முகப் பெருங்கிளை இழைப் பொலிந்தாஅங்(கு)
அறாஅ அருநகை இனிதுபெற்(று) இகுமே
இருங்கிளை தலைமை எய்தி
அரும்படர் எவ்வ முழந்த தன் தலையே

இந்தப் பாடலின் காலத்தில், சோழரின் அரசு தெற்கே கடற்கரையை ஒட்டிப் பரவவொட்டாமல், தடுத்ததில் பரதவரின் பங்கும், வேங்கடத்திற்கும் வடக்கே பரவவொட்டாமல் தடுத்ததில் வடுகரின் பங்கும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை. (முன்னே சொன்னது போல் இளஞ்சேட்சென்னி - கரிகாலன் II ஆகியோர் தான் பெருஞ்சோழர் அரசை உருவாக்கியவர்கள். அதனால் தான் கரிகாலனுக்கு அவ்வளவு பெயர் தமிழர் வரலாற்றில் ஏற்பட்டது. பரதவரை வென்றி கொண்டதெல்லாம், சோழ அரசின் தொடக்க காலங்களில் நடந்திருக்க வேண்டும். ஒரு பேரரசின் தொடக்கம், நிலைப்பு, முடிவு ஆகியவற்றைச் சரியாகப் புரிந்து கொண்டால், இந்தப் பாட்டைச் சங்கம் முடிகின்ற காலத்துக்கு அருகில் கி.பி. 150-க்குத் தள்ளுவது கொஞ்சமும் சரி வராது. மீண்டும், மீண்டும், கி.மு. 200ல் இருந்து கி.பி. 200 என்ற 400 ஆண்டு காலத்தையே சுற்றிக் கொண்டு சங்க காலத்தைக் கொள்ளுவது, முன்னே சொன்ன செங்குட்டுவன் - கயவாகு என்னும் சம காலப் பொருத்தத்தால் அமையும் செக்குமாட்டுச் சுற்று. அதைவிட்டு வெளியே வந்தால் தான், சங்க காலம் என்பது ஆய்வாளருக்குச் சரியாகப் புலப்படும்.

குறிப்பாக, அண்மைக்கால அகழ்வு ஆய்வுகளும், தமிழிக் கல்வெட்டு ஆய்வுகளும், சங்க காலத்தை கி.மு.400-கி.பி.200 என்ற 600 கால அகண்ட இடைவெளிக்குக் கொண்டு சென்றிருக்கின்றன. இன்னும் கொடுமணலும், ஆதிச்ச நல்லூரும் முழுதாக ஆயப்படவில்லை. இது வரை இங்கு நடந்த 5% ஆய்வுகளே தமிழக வரலாற்றை அசைத்து, 200 ஆண்டிற்கு அகலப் படுத்தியிருக்கின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நண்பர்கள் பலரும் இன்னும் கி.அ. நீலகண்ட சாத்திரியாரிடமும், ஐராவதம் மகாதேவனிடமும் இருந்து கொண்டிருந்தால் எப்படி? ஆற்றில் பெரும்நீர் சாத்திரியாருக்கும் அப்புறம், திரு. மகாதேவனின் தமிழிக் கல்வெட்டு ஆய்வுக் காலத்திற்கு அப்புறம், ஓடிவிட்டது. அண்மைக்கால 10, 15 ஆண்டு ஆய்வுகளைக் கூர்ந்து கவனிக்குமாறு சொல்லுகிறேன். முனைவர் கா.ராஜனின் "தொல்லியல் நோக்கில் சங்க காலம்" - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2004 ஆம் ஆண்டு வெளியீட்டை படித்துப் பார்த்தால் நான் சொல்லுவது புரிபடும்.)

புறம் 378 ஆம் பாடலின் முதற் பன்னிரு வரிகளில் இளஞ்சேட் சென்னியைப் புகழும் புலவர் (அவற்றை நான் இங்கு விளக்கவில்லை), அதற்கு அடுத்த வரிகளில், அரசன் தனக்கு முன்பு தந்த நகைகளைத் தன் சுற்றத்தார் அணிந்து கொள்ளத் தெரியாமல் தடுமாறிய காட்சியை விவரித்துச் சிரிக்கிறார். "இப்பொழுது இவன் கொடுக்கப் போகும் செல்வம் என்ன பாடுபடும்?" என்பதே அவர் உள்ளத்தே எழும் குறுகுறுப்பு.

"வறுமையைச் சட்டென்று இழந்த தன் சுற்றத்தார் விரலிற் செறிந்து கொள்ளுவதைச் (அதாவது மோதிரத்தை) செவியிற் தோடாய்ப் போட்டுக் கொண்டும், செவியிற் போடும் தோட்டை, மோதிரம் ஆக்கியும், அரையில் போடும் இடுப்புச் சங்கிலியைக் கழுத்திற் போட்டும், கழுத்துச் சங்கிலியை அரையில் போட்டுக் கொண்டும், தடுமாறியது எப்படி இருந்ததாம்?"

மிகுந்த கோவத்தில் (கருந்தெறல் என்றால் அது ஒரு பொருள்) இருக்கும் இராமனின் மனைவி சீதையை வலிமிகுந்த அரக்கன் கவர்ந்து கொண்டு போன போது, நிலத்தின்மேல் நகைகளைத் தூக்கி விட்டெறிந்தாளே (இங்கே கொஞ்சம் ஊன்றி ஓர்ந்தால், வான்வழி சீதையைக் கொண்டுபோன செய்தியும் கூட இந்தப் பாட்டில் மறைந்து நிற்பது புலப்படும்), அந்த ஒளிமிகுந்த நகைகளை அள்ளி, இப்படித் தாறுமாறாக அணிந்து கொண்ட, வான் கலத்திற்குக் (aircraft) கீழே இருந்த குரங்குகளின் செம்முகப் பெருங்கிளை இழைப் பொலிந்தது போல இருந்ததாம்.

இந்தக் குரங்குகளை எப்படி நாம் புரிந்து கொள்ள வேண்டும்? வெறும் சிறு குரங்குகள் என்றா? அல்லது மாந்தக் குரங்குகள் என்றா? இந்தப் பாட்டில் அதற்குக் குறிப்பில்லை. (செம்முகப் பெருங்கிளை என்பது உறுதியாகச் சிறு குரங்குகளைக் காட்டவில்லை. மாந்தக் குரங்குகளா, காட்டு மனிதர்களா என்பது அவரவர் விழைவு :-)) ஆனால் வலித்தகை அரக்கன் என்பது குறிப்பிடப் படுகிறது. இந்த அரக்கனுக்குப் பொருள் காணும் போது ஒருமையை வைத்துப் பார்ப்பது சரியாக அமையாது. அரக்கர் என்னும் பன்மைச் சொல்லாட்சியை வைத்துப் பார்க்க வேண்டும். "இந்த அரக்கன் சீதையைக் கவர்ந்து போனான்" என்பது கதைப்படி சரியான கூற்றுத் தான். இதற்கு மறுதலைக் கூற்றாய் "பெண்ணைக் கவர்பவன் எல்லாம் அரக்கன்" என்று சொல்ல முடியுமோ? அப்புறம் என்ன இராட்சதன், இராக்கதன்? ஓர் அரக்கன் கவர்ந்தது விதப்பான செயல். அதே பொழுது அரக்கன் என்பது பொதுமைப் பெயர்.

எப்படி வெள்ளைக்காரர், பார்ப்பனர், தேவர், கருத்தர், கருப்பர், நாகர், இயக்கர், மாந்தர் என்பவை பொதுமைப் பெயரோ, அதைப் போல அரக்கர் என்பதும் பொதுமைப் பெயரே! பொதுவாகப் பொதுமைப் பெயர்கள் எல்லாம் விதப்பான பொருளில் எழுந்து நாளாவட்டத்தில் பொதுமைப் பட்டுப் பின் மற்ற விதப்பான பொருண்மைகளையும் குறிக்குமாப் போலப் பேச்சில் பயன்படுவது பல மொழிகளிலும் நடப்பது தான்.

அமெரிக்காவில் கருப்பர் அல்லாதவருக்கு, கருப்பர் மேல் இருக்கும் ஓர் சுமையேற்றிய பார்வையை இங்கு குறிப்பிட விழைகிறேன். 1980ல் ஒருமுறை மாண்ட்ரியாலில் இருந்து என் குடும்பத்துடன் அமெரிக்காவின் கிழக்குக் கரை நகரங்கள் சிலவற்றைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்படியே வாசிங்டன் நகருக்கும் போக முற்பட்டேன். மாண்ட்ரியாலில் என்னோடு இருந்த பல தமிழரும்/இந்தியரும், கனேடிய வெள்ளைக்காரர்களும், என்னைக் கலவரப்படுத்தி "வாசிங்டன் என்பது கருப்பர்நகரம். நீ கவனமாக இருக்க வேண்டும்; பொது இடங்ளிலும், பேருந்து, தொடரி (train) போன்றவற்றிலும் உன் உடமை, குடும்பம் ஆகியவற்றின் பாதுகாப்பில் கண்ணும் கருத்துமாய் இருக்க வேண்டும்" என்றெல்லாம் அவரவரின் பொதுப் புத்திக்கு ஏற்பச் சொல்லி கருப்பர் மேல் ஒரு பூதகரத் தன்மையை எனக்கு ஊட்டினார்கள். நானும் கலவரப்பட்டுத் தான் வாசிங்டன் போனேன். ஆனால் அங்கு நடந்ததே வேறு கதை. (அதை இங்கு சொன்னால் தடம் மாறிவிடும்). பின்னால் என் முட்டாள் தனம் கண்டு நானே வெட்கப் பட்டுப் போனேன். "கேப்பையில் நெய்வடிகிறது" என்று சொன்னால், கேட்பவனுக்கு எங்கே புத்தி போயிற்று? - என்று நினைத்து அமைந்துகொண்டேன். வெகு எளிதில் ஆதிக்கப் பார்வை என்பதைப் பொதுப்புத்தி மூலம் புதியவருக்கும் பரவி விடும் உலகம் இது.

பொதுவாக ஆதிக்கக்காரர்கள் தங்களுடைய குமுகப் பார்வையை தாங்கள் கையாளும் மொழிக்குள்ளும் சுமையேற்றி வைப்பார்கள். விவரம் தெரியாத மற்றவரும் தற்சிந்தனை இல்லாமல் அந்த ஆதிக்கப் பார்வையை தம்மை அறியாமலே கைக்கொள்ளுவார்கள். "கருப்பரா? கவனம்" என்ற தொடர் எவ்வளவு சுமையேற்றிய பார்வையோ, அதே போல "கிராதகன்" என்ற சுமையேற்றிய பார்வையும் வேத நெறியின் காலத்தில் இருந்தே நாவலந்தீவில் பரப்பப் பட்டிருக்கிறது. (எப்படி மேல்சாதி இளைஞரிடம் ஆதிக்கச் சிந்தனையாளர் கீழ்சாதியார் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி ஒருசார்ப்பட இயக்கி வைப்போர்களோ அதே போல, இன்னொரு மதத்தாரை "கொம்பு முளைத்தவர், பயங்கரவாதிகள்" என்று பொதுப்புத்தியில் சுமையேற்றி வைக்கும் அடிப்படை மதவாதிகள் போல) "கிராதகன்" என்ற சொல்லும் இந்தியர்களின் அடிமனத்தில் சுமையேற்றப் பட்டிருக்கிறது.

கிராதர் என்பவர் கருத்தவர்களே - கருப்பானவர்களே! இவர்களைத்தான் இன்றைய மாந்தவியல் Mon-khmer என்றும். முண்டா மொழி பேசுகிறவர்கள் என்றும் கூறும். இவர்களே இன்றைக்கும் வடபுலத்தின் ஆதிக் குடிகள். கருத்தர் என்ற நிறவழிச் சொல்லை நாளாவட்டத்தில் சுமையேற்றி வடமொழியின் வழியாக இந்திய மொழிகள் பலவற்றிலும் "கிராதகன்" என்ற கொடுமைப் பொருள் கொண்ட சொல்லை உருவாக்கவில்லையா? கிராதகன் கொடுமையானவன் என்ற இரண்டாம் வழிப் பொருளை வைத்துக் கொண்டு முதற்பொருளை விட்டொழிப்பது சிந்தனைத் தாக்கம் தானே? முதற்பொருள் கருப்பு என்பதே. "அவன் கருப்பா, அப்பொழுது கிராதகன் என்பது சரிதான்" என்று எத்தனை மக்கள் மனத்தில் அனிச்சைச் செயலாய் சொற்கள் ஆளப்படுகின்றன? இத்தனைக்கும் இன்று புனிதம் என்று சொல்லப்படும் கங்கை எனும் கருப்பு ஆற்றிற்குக் கூட முதலில் கிராத் என்ற பெயர்தான், இருக்கு வேதம் முடிந்த காலத்தில், இருந்திருக்கிறது.

இருக்கு வேதத்தின் நாயகர்களான திவோதசும், அவன் மகனான சுதாசும் கி.மு.1200 களில் ஆரிய சப்தசிந்துவில் இருந்த சம்பரனென்னும் கிராத அரசனுடன் போர் புரிந்து அவர்களை மலைக்கு ஓடச் செய்து தங்கள் ஆட்சியை நிலைத்துக் கொள்ளுவார்கள். இருக்கு வேதத்தின் குறிப்பிடத்தக்க பகுதி இதைப் பற்றித் தான் பேசுகிறது. "வேதத்தில் அது இருக்கிறது, இது இருக்கிறது" என்ற கற்பனை வாதங்களைத் தூக்கி எறிந்து இருக்கைக் கூர்ந்து படித்தால், "அது வெற்றி பெற்றவர் எழுதிய இலக்கியம், தாங்கள் வெற்றிபெறுவதற்காகத் தங்கள் தெய்வங்களிடம் வேண்டிக் கொண்ட முல்லைநிலப் பாடல்களின் தொகுப்பு" என்பது புரியும். (வேதம் அநாதியானது; அது 4000, 5000 ஆண்டுகளுக்கு முந்தியது என்ற கருத்தை நான் ஏற்பவன் அல்லன். எனக்குக் காதுகுத்தி மிகுந்த ஆண்டுகள் ஆயிற்று. பல ஆய்வாளர்களும் கி.மு.1200 யைத்தான் இருக்கு வேதத்தின் தொடக்க காலமாகவும் கி.மு.1000 ஐ அதன் இறுதிக் காலமாகவும் சொல்லுகிறார்கள்.)

வரலாற்றிற்குச் சற்று முற்பட்ட காலத்தில் இந்தியத் துணைக் கண்டத்தில் மக்கள் பெரும்பாலும் நிறம் பற்றியும், ஓரளவு இடம் பற்றியுமே, அறியப் பட்டார்கள். இனக்குழுக்கள் காலத்தில் அது இயற்கையே. மேலே கொடுத்த பட்டியலில் வெள்ளைக்காரர், பார்ப்பனர், தேவர், கருத்தர், கருப்பர், நாகர், இயக்கர், மாந்தர் என்ற எல்லாச் சொற்களுமே நிறத்தை ஒட்டி ஏற்பட்ட பழைய சொற்கள் தான்.

ஒவ்வொரு சொல்லாக எனக்குத் தெரிந்ததைச் சொல்லுகிறேன்.

முதலில் வரும் சொல் பார்ப்பனர். கீற்று வலைத்தளத்தில் வரும் செய்திமடல் சூலை 2006ல் "பார்ப்பனர் வரலாறு அந்தணர் வரலாறு ஆகுமா?" என்ற கட்டுரையை இரா.மதிவாணன் எழுதியிருப்பார். அதில் பால்-பார்ப்பு-பார்ப்பார் என்று வெண்மைநிறம் கருதியே பார்ப்பனர் என்ற சொல் எழுந்தது என்று அழுத்தமாக நிறுவியிருப்பார். (இன்றையப் பார்ப்பனர் பலரும் நிறம் மாறிக் கிடப்பது வரலாறு 3200 ஆண்டுகள் நகர்ந்துவிட்டதை உணர்த்துகிறது.) பேரா. இராகுல சங்கிருத்தியாயனும், "ரிக்வேத கால ஆரியர்கள்" என்ற தன் பொத்தகத்தின் மூன்றாம் அதிகாரத்தில் (வர்ணமும், வர்க்கமும்) இருக்கு வேதத்தின் பல செய்யுட்தொகுப்புகளை எடுத்துரைத்து ஆரியரின் வண்ணம் பால்நிறம் என்றே நிறுவுவார். (ஆரியர் என்று ஒருவரும் இல்லை; ஆரியர் அல்லாதவர் என்று ஒருவரும் இல்லை என்று பூ சுற்றப் பார்க்கும் வாதத்தைப் புறம் தள்ளுவோம்.) ஆரியரின் முடி வண்ணம் இரோப்பியர் பலரைப் போலத் தீ நிறம் - பொன் நிறம் தான்; blonde.

தேவர் என்ற சொல் தீயென்னும் சொல்லில் இருந்து கிளைத்தது என்று பாவாணர் தன் நூல்களில் ஆணித்தரமாக நிறுவியிருக்கிறார். தேவர் என்பவர் பொன் நிறத்தவர்; பொன் முடியாளர்.

(வெள்ளைக்காரர் என்ற சொல்லுக்கு நான் பொருள் சொல்ல வேண்டியதில்லை. அதே போலக் கருத்தர், கருப்பர் என்பதற்கும் நான் பொருள் சொல்ல வேண்டியதில்லை.)

நாகர் என்பவரும் கருப்பரே. யா என்னும் கருமைக் கருத்தில் இருந்து ந்யா>ஞா>நா என்ற வளர்ச்சியில் நாகர் என்ற சொல் பிறக்கும். (தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக் கழகப் ஆய்வறிஞர் ப.அருளியாரின் "யா" என்ற கருவூலம் படித்து ஓர்ந்து பார்க்க வேண்டிய பொத்தகம்.) நாகரின் சுருக்கம் தான் நக்கர் என்பது ஆகும். நக்கவாரம் என்னும் nicobar -இல் வசிக்கும் மக்களை நக்க சாரணர் என்றே மணிமேகலை குறிக்கும். நக்கர் என்ற சொல் தெரிந்தோ தெரியாமலோ இந்தையிரோப்பிய மொழிகள் எங்கும் பரவி இன்று உலகெங்கும் nigger, negro என்று பரவிக் கிடக்கிறது. (இதையெல்லாம் சொன்னால், இது என்ன அபத்தம், மம்போ-ஜம்போ என்று சொல்லுவதற்கும் கேலிசெய்வதற்கும் பெயரில்லாத சிலர் முன்னிகை தர முன்வருவார்கள். இவர்களின் வறட்டுத் தனத்திற்கு எல்லை இல்லை. நாவல் பற்றிச் சொல்ல வேண்டியது நிறையக் கிடக்கிறது. அதற்கும் இன்னொரு நாள் வரவேண்டும்.)

இயக்கர் என்ற ஈழத்தீவின் பழங்குடிகளும் (இவர்களின் தலைவனாகக் குபேரனை வடமொழித் தொன்மங்கள் உருவகஞ் செய்யும்) கருப்பரே. யா என்னும் வேரின் வழி யக்கர் இயக்கராவர்.

யாவகர் (கருப்பர்) இருந்த தீவு யாவகம்>ஸ்யாகவகம்>சாவகம் = java என்னும் இந்தோனேசியத் தீவு. வாரணர் என்பரும் கருப்பரே. வாரணத் தீவு = borneo தீவு.

(இன்னும் சொன்னால் சேரர், சோழர், பாண்டியர் என்பவை கூட நிறத் தொடர்பில் பண்பாடு ஒட்டிய பெயர்கள் தான். அவற்றின் விளக்கத்தை இங்கு சொல்லாமற் தவிர்க்கிறேன்.)

ஆகக் கருப்பர் தென் ஆசியாவிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் மிகுந்தே இருக்கிறார்கள். ஆப்பிரிக்காவில் கி.மு. 60000 ல் தொடங்கிய கருப்பர் சோமாலியா, தெற்கு அரேபியா, ஈராக், ஈரான், கூர்ச்சரம், மாராட்டியம், கொண்கானம், சேரலம், பாண்டியம் (அங்கிருந்து ஒரு ஈற்றாக ஈழம்), சோழம், கலிங்கம், அங்கம் எனக் கடற்கரை வழியே போய், பின் தென்கிழக்கு ஆசியா வழியாக முடிவில் ஆத்திரேலியா வரை இன்னொரு ஈற்றாக அங்குள்ள பழங்குடிகளாக கி.மு.40000த்தில் முடிந்ததாக அண்மைக்கால Y chromosome மாந்த ஆய்வு ஒரு முடிவிற்கு வந்திருக்கிறது. நம்முடைய பிரான்மலைக் கள்ளரை ஆய்வு செய்திருக்காவிட்டால் இந்த மாந்தப் பரம்பல் தெரியாமலே போயிருக்கும். இந்த ஆதிக் கருப்பரை M130 வகையினர் - கடற்கரை மக்கள் - coastal people - என ஈனியல் (genetics) குறிக்கும்.

கருப்பரும் வெளுப்பரும் இந்தத் துணைக்கண்டம் வந்தது போக இன்னும் சில இடைப்பட்ட நிறத்தவரும் இங்கு வந்து சேர்ந்த மற்றவர்களில் குறிப்பிட வேண்டியவர்கள் M20 எனப்படும் இந்தியர்கள் (இவர்கள் இங்கு வந்து சேர்ந்து 35000 ஆண்டுகள் ஆகிவிட்டன; திராவிடர் எனப்படுவோர் இவர்தான். என்னதான் இந்துத்துவக் காரர்கள் "திராவிடம் என்பது மொழி பற்றிய கருத்தீடு; அதை இனங்கள் பற்றிய முடிவிற்குள் நுழைக்கக் கூடாது" என்று முறுக்கிக் கொண்டாலும் அறிவியல் அப்படித்தான் போகிறது), 9000 ஆண்டுகளுக்கு முன்வந்த ஒரு குழுவினர், 3500 ஆண்டுகளுக்கும் முன்னால் வந்த இன்னொரு குழுவினர் ஆகியோராகும்.

"Language of Harappans", "The Civilized Demons: The Harappans in Rgveda" என்ற இரு பொத்தகங்களின் வழியாக அசுரர்/அரக்கர் என்போரை ஆரியருக்கு முன்வந்த கூட்டத்தார் என்று மாலதி J ஷெண்கேயும், "Deciphering the Indus Script" என்ற தன் பொத்தகம், மற்ற கட்டுரைகள் மூலமாய் திரு. அசுகோ பர்போலாவும் இரட்டை நிலைக் குடியேற்றத்தை உணர்த்தியிருப்பார்கள். ஈனியல் குறித்துக் காட்டும் 9000, 3500 ஆண்டுகள் இந்த இரட்டை நிலைக் குடியேற்றத்திற்கு அடையாளம் காட்டுகின்றன.

அரக்கர் (அசுரர்) என்பவருக்கும், தேவர் என்பவருக்கும் இடையே இருந்த போராட்டம், துருக்கியில் ஹிட்டைட் தொடங்கி பாபிலோனியாவில் அசூர் நாகரிகம் வழி (இன்றைய சிரியா அசூர்களின் நினைவில் எழுந்த பெயர்தான். பாபிலோனிய அரசன் அசுர் பனிபால் - இப்படி அடுத்தடுத்துச் சொல்லிக் கொண்டே போகலாம்), இரானில் செண்ட் அவத்தா வரை பல தெற்றுக்கள் தென்படுகின்றன. இந்தியத் துணைக் கண்டத்திலும் அடையாளம் தென்படுகிறது. அசுரர்-தேவர் போராட்டம் பற்றிய பல தொன்மங்கள் ஒன்றுக்குள் ஒன்றாய் இந்த நீண்ட நிலப்பகுதியில் உருவெடுத்திருக்கின்றன. இந்த நிலப்பகுதியில் இந்தியத் துணைக்கண்டமும் ஒரு பகுதியே!

அரக்கர் என்பவர் அரக்கு நிறத்தவர். - கருஞ்சிவப்பு. தமிழ்ப் பொருண்மை தான் சரியான புரிதலுக்கு இட்டுச்செல்கிறது. இன்றைக்குக் கருப்பருக்கும் வெள்ளைக்காரருக்கும் இடையில் coloured என்று சொல்லுகிறார்களே, அந்த கலப்பினத்தவர் போல இருப்பது அரக்கு நிறம். அமெரிக்காவில் coloured என்பவரை வெள்ளை நிறத்தாருடன் யார் சேர்த்துப் பேசுகிறார்கள்? அவரும் கருப்பு நிறத்தாரின் தாயாதியாகத்தானே எண்ணப் படுகிறார்?

வருணம் பற்றி இவ்வளவு எழுதியதற்கு நண்பர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும். நான் வருணம் நிலைக்க வேண்டும் என்று சொல்பவன் அல்லன். நம்மை அறியாமலேயே வருணச் சொற்கள் சுமையேற்றிய நிலையில் நம்மால் பயன்படுத்தப் படுகின்றன என்பதை இங்கு உணர்த்த வேண்டியிருந்தது. அரக்கன் என்ற சொல்லை ஏரணத்தோடு புரிந்து கொள்ள வேண்டும்.

நடைமுறையில் "அரக்கன் கருப்பனோடு சேர்த்தே எண்ணப் படுவான்". இருக்கு அப்படித்தான் சொல்லுகிறது. அடுத்த செய்திக்குப் போவோம்.

அன்புடன்,
இராம.கி.

Saturday, September 22, 2007

அரக்கனும், தமிழும், இராமர் சேதுவும் - 1

அண்மையில் "இராவணனை அரக்கன் என்று சொல்லும் புறநானூறு" என்ற இடுகையில் திரு.குமரன் சங்க இலக்கியத்தில் வரும் இராம காதைச் செய்தியைச் (புறம் 378) சொல்லியிருந்தார். அரக்கன் என்ற சொல்லாட்சி அந்தப் பதிவிலும், அதன் பின்னூடங்களிலும் பெரிதும் பேசப்பட்டது. "அப்படி ஒரு கவனிப்பு அந்தச் சொல்லுக்கு ஏன் வந்தது?" என்று முதலில் எனக்குப் புரிபடவில்லை. "வௌவியவன் தமிழன் அல்லன், அரக்கனே! தமிழரையும், அரக்கரையும், (அதே போல தமிழரையும், குரங்குகளையும்) ஒன்றாய் எண்ணிக் குழம்பலாகாது" என்ற கருத்தும் அந்த இடுகையில் உணர்த்தப் பெற்றது. இந்த உணர்விப்பினுள், "அரக்கருக்கும் தமிழருக்கும் தொடர்பு இருப்பதாய்ச் சான்றுகள் உண்டா?" என்ற கேள்வியும் கூடத் தொக்கி நிற்கிறது. (பொதுவாய் இராட்சசன், இராக்கதன் என்ற சுமையேற்றிக் கிடக்கும் வட சொற்திரிவுகளைக் காட்டிலும் அரக்கன் என்ற எளிய தமிழ்ச் சொல்லின் பொருண்மையை நேரடியாய்ப் பார்ப்பது நம்மைச் சரியான புரிதற் பாதையில் கொண்டு செல்லும். எங்கும் வடமொழிக் கண்ணாடியை வைத்துக் கொண்டே, வழி தேடுவது நம்மில் பலருக்கும் வாடிக்கையாகி விட்டது. இதில் திராவிடச் சிந்தனையாரும் விதிவிலக்கல்ல போலும். வேதநெறி, மனுநீதிகளின் இடைவிடாத் தாக்கத்தால், ஒருசார்க் கோடலாய்த் தமிழர், தம் சிந்தனை இழப்பது வருத்தமாய் இருக்கிறது.)

"அரக்கர் என்பவர் யார்?" என்ற கேள்விக்கு நாம் போகுமுன்னால், குறிப்பிட்ட புறம் 378 பாடலின் காலத்தைப் புரிந்து கொள்ளுவது நலம் பயக்கும். இந்தப் பாடல் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னியை முன்னிறுத்தி, ஊன்பொதி பசுங்குடையார் பாடியது (பாடாண் திணை, இயன்மொழித் துறை).

[ஊன்பொதி பசுங்குடையார் என்பது புலவரின் இயற்பெயரல்ல; காரணப் பெயர். தென்பாண்டி நாட்டில் இன்றும் கூடப் பெரும் விழாக்களில் (காட்டாக கோயில்களில் ஆடி மாதம் நடைபெறும் படையல்களில்) பெரும் பானைகளையோ, மாழைக் (metallic) கலசங்களையோ, தேடிக் கொண்டு இருக்காமல், பச்சைப் பனையோலையில் பின்னிய கூடைகளையே, விழாச்சோறு முகந்து கொள்ளவும், ஊன் போன்றவற்றைப் பொதிந்து கொள்ளவும், பயனுறுத்துவார்கள். பசுங்குடை என்ற சொல்லாட்சி பசுங்கூடையை உணர்த்தும் திரிவாகும். பூக்குடல் என்பது பூக்கூடையை உணர்த்துமல்லவா? அதைப் போல குடை என்ற சொல் இங்கு கூடையை உணர்த்தியது. ஊன்பொதி பசுங்குடை என்ற அழகான சொல்லாட்சியைத் தன்னுடைய வேறொரு பாவில் இந்தப் புலவர் பயன்படுத்தியிருக்க வேண்டும்; ஆனால் அந்தச் சொல்லாட்சி உடைய பாடல் நமக்குக் கிடைக்கவில்லை. தொகுப்பாளரின் உரையை வைத்தே புலவரின் பெயர்க்காரணத்தை நாம் அறிந்து கொள்ளுகிறோம்.] இதே அரசனை இதே புலவர் புறம் 10 (பாடாண் திணை, இயன்மொழி, பூவைநிலைத் துறை), புறம் 203 (பாடாண் திணை, பரிசில் துறை), புறம் 370 (வாகைத் திணை, மறக்கள வழித் துறை) ஆகிய பாடல்களிலும் பாடியிருக்கிறார். இது தவிர இடையன் சேந்தன் கொற்றனார் பாடிய அகம் 375 இலும் இளம்பெருஞ்சென்னி என்ற குறிப்பு இருக்கிறது.

இளஞ் சேட்சென்னியும், இளம் பெருஞ்சென்னியும் ஒரே ஆளாகத்தான் இருந்திருக்க வேண்டும் என்பது தமிழிய மொழிகளின் சொல்வளத்தைக் கவனித்துப் பார்த்தால் புரிபடும். சேடு, சேட்டு என்பவை உயர்வு, பெரியநிலை, தொலைவு போன்றவற்றைப் பழந்தமிழிற் குறிக்கும். சேண்மை என்ற சொல்லும் கூட இன்றைக்குத் தொலைவைக் குறிப்பது தான். மலையாளத்தில் பெரியவனைக் குறிக்கச் சேட்டன் என்றும், பெரியவளை சேட்டத்தி என்றும் சொல்லுகிறார்கள் அல்லவா? சேள் என்பது தான் இதன் வேர். மூவேந்தர்களில் பெருஞ்சேரல், நெடுஞ்சேரலாதன், பெருவழுதி, நெடுஞ்செழியன், பெருங்கிள்ளி, பெருவளத்தான், மாவளத்தான், பெருஞ்சோழன் என்று சொல்லப்படும் பெயர்கள் பெருஞ்சென்னி - சேட்சென்னி என்ற பெயரையும் இயலுமை ஆக்குகின்றன. இளஞ்சேட்சென்னி என்பவன் இன்னொரு சேட்சென்னியின் இளவலாய் இருந்திருக்கலாம்.

இந்தச் சோழன் இளஞ்சேட்சென்னியை, செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி என்றும், பாமுளூர் எறிந்த இளஞ்சேட்சென்னி என்றும், புறநானூற்றுத் தொகுப்பாளர் குறிப்பிடுவார். பாழி என்ற பெயரில், தமிழ்கூறும் நல்லுலகில், சங்க காலத்தில், பல ஊர்கள் இருந்திருக்கின்றன. பொதுவாய்ப் பாழி என்பது இயற்கைக் குகையைக் குறிக்கும். (ஆசீவகத் துறவிகளின் வாழ்விடங்கள் பாழி என்றே நம் இலக்கியங்களில் குறிக்கப் பட்டிருக்கின்றன. பள்ளி என்பது பொதுவாய்ச் செயினர், போதியர் ஆகியோரின் இருப்பிடங்களைக் குறிக்கும்.) செருப்பாழி என்பதில் வரும் செரு என்பது திரு என்ற பொருள் கொண்ட ஒரு முன்னொட்டு. (சேரே திரட்சி என்பது தொல்காப்பிய உரியியல்; செருப்பாழி என்பது பெரிய, திரண்ட குகை என்ற பொருள் கொள்ளும்.) செரு என்ற முன்னொட்டு திரு என்ற பொருளைக் குறித்ததற்குச் சான்றாக, திருத்தணிகையையைச் செருத்தணி என்று சொல்லும் வழக்கம் அகரமுதலிகளில் பதிவு செய்யப் பட்டிருக்கிறது. வடுகரைப் பெருஞ்சென்னி வெற்றி கொண்ட செய்தி புறம் 378 இலும், அகம் 375 இலும் வருவதால், வேங்கடத்தை ஒட்டி இந்தச் செருப்பாழி இருந்திருக்கலாம். (சரியான இடத்தைக் குறிக்க முடியவில்லை.)

சென்னி என்பது ஓர் இனக்குழுப் பெயர். (சென்னியர் என்ற சொல்லும் செம்பியர் என்ற சொல்லும் ஒரே வேரில் உருவானவை தாம்.) சோழர்கள் தொடக்க காலத்தில் பல்வேறு பகுதிகளில் (அழுந்தூர், ஆமூர், கழார், குடந்தை, பருவூர், பெருந்துறை, போர், வல்லம் ஆகிய ஊர்கள்) தனித் தனி இனக்குழுக்களாய் கி.மு. 500/400க்கு முன்னால் இருந்திருக்கிறார்கள். பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் ஒவ்வோர் இனக்குழுவும் இன்னொன்றை வென்றி கொண்டு, இணைந்து, பின்னர் பெரும் இனக்குழுக்களாகி, சென்னி, கிள்ளி என்று இரு பெரிய இனக்குழுக்கள் மட்டுமே கடைசியில் அமைந்து, முடிவில் பெருஞ்சோழராய் உருவாகி இருக்கிறார்கள்.

கி.மு. 500/400க்கு அண்மையில் அழுந்தூரில் தொடங்கிய சென்னி வகைச் சோழர் கொஞ்சம் கொஞ்சமாய் பெருஞ்சோழராகி, நெய்தலங்கானலுக்கு வந்து (நெய்தலங்கானல் என்பது காவிரிப்பூம் பட்டினத்திற்கு மிக அருகில் உள்ள ஊர்), முடிவில் காவிரிப் பூம்பட்டினத்தைத் தலைநகராய்க் கொண்டு ஆண்டதும், கிள்ளி வகைச் சோழர்கள் இதே போலச் வேறு சிறிய ஊர்களில் தொடங்கி, முடிவில் உறையூரைத் தலைநகராக்கி ஆண்டதுமாய் இருக்கும் தொடக்க காலச் சோழர் வரலாற்றை சங்க இலக்கியங்களின் மூலம் புரிந்து கொள்ளலாம். அதே பொழுது சேரர், சோழர், பாண்டியர் என்ற பேரினக்குழுவின் தலைவர்களாய் வேந்தர்கள் கி.மு.7 ஆம் நூற்றாண்டு அளவில் இருந்ததைத் தொல்காப்பியம் மிகத் தெளிவாகப் பதிவு செய்திருக்கிறது.ஆகச் சங்க இலக்கியம், தொல்காப்பியம் என்ற இரண்டு தரவுகளையும் பார்க்கும் போது, கி.மு.700ல் இருந்து கி.மு.500 வரை ஒரு 200 ஆண்டு காலத் வரலாறு இன்னமும் தெளிவு படாமல் இருக்கிறது.

சேரர், சோழர், பாண்டியர் என்ற பேரினக் குழுக்களின் தோற்றம், வரலாறு, மரபுகள், தொன்மங்கள் பற்றி இந்த இடுகையில் நான் விவரிக்கவில்லை. அதற்கு இன்னொரு இடுகைதான் செய்ய வேண்டும்.

சங்க கால வரலாறு என்பது சரியாக எழுதப் படாமல், கால முரண்பாடுகளோடேயே தான் இன்றும் இருக்கிறது. குறிப்பாக செங்குட்டுவன், கயவாகு என்ற தவறான சமகாலப் பொருத்தலால், கி.பி.171-193 என்று செக்கில் சிக்கிக் கொண்டு, முன்னேற முடியாமல், தமிழக வரலாறு சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது. அண்மைக் காலத்தில் கிடைக்கும் தமிழிக் கல்வெட்டுக்களையும், அகழாய்வுச் செய்திகளையும், சங்க கால அரசர்களின் நாணயங்களையும், சங்க இலக்கியங்களோடு பொருத்திப் பார்க்கும் போது, "செங்குட்டுவன் - முதலாம் கயவாகு ஆகியோர் சம காலத்தவர்" என்ற முன்னீட்டை முற்றிலும் ஒதுக்கினால் தான் தமிழர் வரலாறு சரியாகும் போல் தெரிகிறது. சிலப்பதிகாரத்தின் பதிகத்திற்குப் பின்னாலும், புகார்க் காண்டத்திற்கு முன்னாலும் வரும் உரைபெறு கட்டுரைக்கும், சிலம்பின் கடைசியில் வரும் வரந்தரு காதைக்கும் இடையே தெரியும் பெருத்த உள் முரண்பாடுகள் நம்மைப் பெரிதும் ஓர்ந்து பார்க்க வைக்கின்றன. பெரும்பாலும் வரந்தரு காதை என்பது காப்பியத்தோடு ஒன்றுபடாமல், பின்னோர் செய்து ஒட்டியதோ என்று எண்ண வைக்கிறது. அதே போல உரைபெறு கட்டுரையும் ஆசிரியர் இளங்கோவடிகளால் சேர்க்கப் படாமல், பின்னவர்களால் இணைக்கப் பட்டிருக்கக் கூடும். [சிலம்பு பற்றி இங்கு பேசினால் அது வேறு புலனத்திற்குக் கொண்டு போகும் என்பதால் அதைத் தவிர்க்கிறேன்.]

இந்த முரண்பாடுகளைத் தீர்க்கும் வகையில் எழுந்த அண்மைக்கால இரு வரலாற்று முயற்சிகள் ஆவணப்படுத்தப் பட்டு இருக்கின்றன. [அவற்றில் முதல் ஆவணம் பேரா. பே.க. வேலாயுதம் (பெரியார் ஈவெ.ரா. கல்லூரி, திருச்சி) ப.சீனிவாசன் (திருச்சி நாணயவியல் கழகம்) ஆகியோர் இணைந்து திருச்சி நாணயவியல் கழகத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழாவில் 23/2/1997 வெளியிடப்பட்ட "சங்க கால மன்னர் வரிசை" என்னும் சிறு கையேடு ஆகும். இரண்டாவது, "சங்க கால மன்னர்களின் காலநிலை - தொகுதி 1" மற்றும் "சங்க கால மன்னர்களின் காலநிலை - தொகுதி 2" என்ற இரு பொத்தகங்களாய், டாக்டர் பத்மஜா ரமேஷ், வி.பி. புருஷோத்தமன் ஆகியோரால் எழுதப்பட்டு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சிஐ.டி. வளாகம், தரமணி, சென்னை மூலம் 2000 த்தாம் ஆண்டில் வெளியிடப் பட்டது.]

மேலே சொன்ன ஆய்வாளர்களில், திருவளர். பத்மஜா ரமேஷ், திரு. புருஷோத்தமன் ஆகியோர் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னியும், உருவப்பல் தேர் இளஞ்சேட்சென்னியும் ஒருவரே என்ற கருத்துக் கொள்கிறார்கள். உருவப்பல் தேர் இளஞ்சேட்சென்னியை முதற் கரிகாலனின் மகனாகவும், இரண்டாம் கரிகாலனின் தந்தையாகவும் பொருநராற்றுப் படை ஆதாரத்தின் மூலம் இவர்கள் அடையாளப் படுத்துவார்கள். அவர்கள் கூற்றின் படி, உருவப்பல் தேர் இளஞ்சேட் சென்னியின் காலத்தில், கிள்ளி வகைச் சோழர்களின் ஆட்சி ஓர் அண்ணுமுடிவிற்குக் (near end) கொண்டு வரப்படுகிறது. இளஞ்சேட்சென்னியின் பேரன், இரண்டாம் கரிகாலனின் மகன் ஆன நலங்கிள்ளி - இளஞ்சேட்சென்னி என்ற இரட்டைப் பெயரெடுத்து, கிள்ளிவகை அரசரின் கடைசி அரசனான நெடுங்கிள்ளியைத் தொலைத்தெறிவதோடு, கிள்ளிகளின் குல ஆட்சி உறையூரில் முற்றிலும் முடிந்து போகிறது. தலைநகரும் அதற்கு அப்புறம் காவிரிப் பூம்பட்டினத்தில் இருந்து உறையூருக்கே மாறுகிறது.

முன்னே சொன்ன இரண்டு ஆவணங்களையும் படித்தால் ஒன்றிற்கொன்று முரணாகச் சில காலநிலைகளும், உடன்பாட்டில் சில காலநிலைகளும் இருப்பதை அறிந்து கொள்ள முடியும். இந்த ஆவணங்களை ஆழ்ந்து படித்து அதில் இருக்கின்ற ஒன்றாமைகளை (inconsistencies) உணர்ந்ததால், மூல இலக்கியங்களையும், கல்வெட்டு விவரங்களையும், மீண்டும் படித்து, சங்க கால நிலையை நான் தற்போது ஆய்ந்து கொண்டு இருக்கிறேன். சங்க இலக்கியப் பாடல் எழுதியோரையும், பாடப்பட்டவரையும் பொருத்தி இந்தக் காலத்தியப் பிணைய அலசல் (network analysis) முறை மூலம் என் ஆய்வு நடத்தப் படுகிறது. ஆய்வு முடியச் சற்று காலம் ஆகலாம்.

இப்போதைக்கு நான் முந்தைய ஆய்வாளர்களின் முடிவுகளையே இங்கு கொடுக்கிறேன். ஊன்பொதி பசுங்குடையாரின் பாடற்காலத்தை, மேலே சொன்ன முதல் ஆவணத்தின் மூலம் கிட்டத் தட்ட கி.மு.325 - 250 என்றும், இரண்டாம் ஆவணத்தின் மூலம் கி.மு.250-225 என்றும் முடிவு செய்யலாம். ஆக இராமகாதை பற்றிய செய்திகள் கி.மு.250 அளவிலேயே தமிழில் பதிவு செய்யப் பட்டதாகச் சொல்ல வேண்டும்.

சங்க இலக்கியத்து இராம காதைச் செய்திகளுக்கு புறம் 378 தவிர, அகம் 70, கலி - 38 என இன்னும் இரு சான்றுகளும் உண்டு. சங்கம் மருவிய காலத்தில் எழுந்த பழமொழி நானூற்றிலும் ஒரு குறிப்பு உள்ளது. "இராமகாதை வரலாற்றுச் செய்தியா, அன்றி தொன்மச் செய்தியா?" என்பது அவ்வளவு முகன்மையானது அல்ல. இங்கே காதுற்ற செய்தி காதையாயிற்று. அவ்வளவு தான். அதைத் தமிழிலக்கியத்தில் பயன்படுத்தத் தடை இருக்க முடியுமோ? அதே பொழுது, அப்படிப் பயனுறுத்தியதாலே "அது வரலாறா, தொன்மமா?" என்ற கேள்விக்கு மறுமொழித்ததாய்க் கொள்ளவும் கூடாது.

இனிப் பாடலுக்குள் போவோம்.

அன்புடன்,
இராம.கி.