Monday, October 01, 2007

அரக்கனும், தமிழும், இராமர் சேதுவும் - 5

இராமர் சேது என்று இன்று தவறாகச் சொல்லப்படும் மண்திட்டு ஒரு பக்கம் இராமேசுரத்தையும் (1964 புயலில் நம் கண்ணறிய அழிந்து போன பழைய தனுக்கோடி) இன்னொரு பக்கம் தலைமன்னாரையும் இணைத்துக் கொண்டிருக்கிறது. இதே போல இன்னொரு திட்டும் அந்தப் பக்கம் கோடிக்கரையில் இருந்து யாழ்ப்பாணம், நயினார் தீவு வரை இருக்கிறது. அந்தத் திட்டும் தான் உயர்ந்து கிடக்கிறது. இந்தப் பக்கம் இராமேசுவரத்திற்கு அருகில் இருப்பதை மட்டும் இராமர் கட்டியதாகச் சொல்லும் கூட்டம், அந்தப் பக்கத்தில் கிடக்கும் இன்னொரு சேதுவை (அதை ஆதி சேது என்பார்கள்.) யார் கட்டியதாகச் சொல்லுவார்கள்? கடல்மட்டம், கடலியல் வரைவு தெரிந்தவர்கள் "இந்த இரண்டு சேதுக்களும் இரட்டையானவை" என்றே சொல்லுவார்கள். ஒன்றை மட்டும் உயர்த்தி, இன்னொன்றைக் கண்டுகொள்ளாமல் விடுவது எப்படி? அப்படி என்ன ஓரவஞ்சனை? வலது கண்ணுக்கு மையும், இடது கண்ணுக்குச் சுண்ணாம்புமா உங்கள் ஊரில் அப்புவார்கள்?

அடுத்தது அகம் 70 இல் மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார் பாடிய நெய்தல் திணைப் பாடலில் இராமன் திருவணைக் கரைக்கு வந்து இருந்ததாய் ஒரு செய்தியைப் பார்ப்போம். தலைவியிடன் காதல் தொடர்பாக ஊரார் பேசுவதைப் பற்றித் தலைவியிடம் சொல்லும்போது கீழ்க்கண்டவாறு குறிப்பிடுவதாகப் புலவர் பாடுவார்:

கொடுந்திமில் பரதவர் வேட்டம் வாய்த்தென
இரும்புலாக் கமழும் சிறுகுடிப் பாக்கத்துக்
குறுங்கண் அவ்வலைப் பயம் பாராட்டி
கொழுங்கண் அயிலை பகுக்கும் துறைவன்
நம்மொடு புணர்ந்த கேண்மை முன்னே
அலர்வாய்ப் பெண்டிர் அம்பல் தூற்றப்
பலரும் ஆங்(கு)அறிந்தனர் மன்னே; இனியே
வதுவை கூடிய பின்றை, புகுவது
பொன்வீ ஞாழலொடு புன்னை வரிக்கும்
கானலம் பெருந்துறைக் கவினி மாநீர்ப்
பாசடைக் கலித்த கணைக்கால் நெய்தல்
விழவு அணி மகளிர் தழை அணிக் கூட்டும்
வென்வேற் கவுரியர் தொல்முது கோடி
முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன்துறை
வெல்போர் இராமன் அருமறைக்(கு) அவித்த
பல்வீழ் ஆலம் போல
ஒலிஅவிந் தன்(று)இவ் அழுங்கல் ஊரே. (அகநானூறு:70:5-17)

இந்தப் பாடலில் வரும் பரதவர் என்ற இனக் குழுவினர் தொடக்க காலத்தில் சோழநாட்டுக் கடற்கரையிலேயே இருந்தவர். (என் இடுகையின் முதற்பகுதியில் இளஞ்சேட்சென்னி பரதவரை வெற்றி கொண்ட செய்தியைக் குறிப்பிட்டு இருப்பேன்.) பாண்டிய நாட்டில் பரதவர் அவ்வளவாக விரிந்து இருந்தது இல்லை. பாக்கம் என்று முடியும் நெய்தல் ஊர்ப் பெயர் சோழநாட்டிலும், பின்னால் அதனின்றும் விலகிய தொண்டை நாட்டிலுமே உள்ள பெயராகும். பாண்டிய நாட்டில் இது போன்ற பெயர்கள் மிகவும் அரிது. ஞாழல், புன்னை ஆகிய மரங்கள் விரவிய கானலம் பெருந்துறை (காடு பின்புலமாக இருக்கும் பெருந்துறை) என்ற குறிப்பு கோடிக்கரையையே உணர்த்துகின்றது. இன்றும் இங்கு ஞாழலும், புன்னையும் நிறைந்து கிடக்கின்றன. கோடிக்கரைக் காடு என்றுதான் இந்தப் பக்கம் சொல்லுகிறார்கள். இது போன்ற விவரிப்பு இராமேசுவரத்துக்கோ, இராமநாதபுரத்துக்கோ ஒத்து வராது. அவை பாலை நிலத்தின் கூறுகள் என்பது அங்கே வசிக்கிறவர்களுக்கு நன்றாகவே தெரியும். இது போகத் தொல்முது கோடி என்பது ஆதி சேது என்ற குறிப்பையும் உணர்த்துகிறது.

அதையும் மீறி வென்வேல் கவுரியர் என்று பாண்டியரைச் சுட்டுவதால் பாண்டிநாட்டுத் தலத்தைக் குறிக்க முடியுமா என்றால் "சற்றுப் பொறுங்கள்" என்றே சொல்ல வேண்டும். இன்றைக்கு தொண்டி, மீமிசல் எனக் கிழக்குக் கடற்கரை ஊர்களைக் கடந்து முத்துப் பேட்டை வரை போனால் கோடிக்கரை வந்துவிடும். இந்த ஊர்களுக்கு உட்பரப்பில் இருக்கும் அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, ஆவுடையார் கோயில் ஆகிய ஊர்கள் எல்லாம் ஒரு காலத்தில் முத்தூர்க் கூற்றத்திற்கு அண்மையும் சேர்ந்தவையுமே. புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்றைக்கும் இருக்கும் இந்தப் பகுதிகள் காலம் காலமாய் சோழருக்கும் பாண்டியருக்கும் இடையே பந்தாடப் பட்ட பகுதிகள். இம்மென்றால் சோழன் பாண்டியனிடமிருந்து இவற்றைப் பிடுங்கிக் கொள்ளுவான்; இல்லையென்றால் சோழனிடமிருந்து பாண்டியன் பிடுங்கிக் கொள்ளுவான். கடைசிக் கடற்கோளில் தன் நாடு கணிசமாகக் குறைந்ததால் சோழனிடமிருந்து முத்தூர்க் கூற்றத்தையும், சேரனிடமிருந்து குண்டூர்க் கூற்றத்தையும் பாண்டியன் பறித்துக் கொண்ட கதை கலித்தொகை 104.4 ல் கீழ்வருமாறு சொல்லப்படும்.

மலிதிரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவலின்
மெலிவு ௾ன்றி, மேல்சென்று, மேவார் நாடு ௾டம்பட
புலியொடு வில்நீக்கி, புகழ்பொறித்த கிளர்கெண்டை
வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன்

இந்த இரு கூற்றங்களின் பெயரை உரையாசிரியர் வழியாகவே நாம் அறிகிறோம். தவிர மணிவாசகர் காலத்தில் பரி வாங்கப் போகும் திருப்பெருந்துறையும் (ஆவுடையார் கோயிலும்) இந்தக் கூற்றத்தில் தான் உள்ளது. (பரிவாங்கிய போது இது பாண்டியர் கூற்றமாகவே இருந்திருக்கிறது.) இன்றும் கூட இந்தப் பகுதிகளில் சோழ, பாண்டிய நாடுகளின் இரண்டு பக்கத் தாக்கங்களின் மிச்சம் கணிசமாகவே இருக்கிறது. அதனால், கோடிக்கரை ஓரோர் சமயம் பாண்டியரின் ஆட்சிக்கு வந்ததில் வியப்பு இல்லை. (அகம் 70 ஆம் பாடல் தனுக்கோடியைக் குறிக்கிறது என்று சொல்லுவாரும் உண்டு. என்னால் மேலே சொன்ன காரணங்களுக்காக ஏற்க முடியவில்லை.)

இனி அகம் 70 ஆம் பாடலில், வரும் செய்தியைப் பார்ப்போம். தோழி சொல்லுகிறாள்: (இங்கே அட்லாண்டா பெ.சந்திரசேகரனின் சொற்களை அப்படியே பயனாக்கி "கோடிக்கரை" என்று ஊர்ப்பெயரை மட்டும் மாற்றித் தருகிறேன். அவர் தனுக்கோடி என்ற கருத்தாளர்.)

"உன்னைத் திருமணம் செய்துகொள்ளுமுன் அவருக்கும் உனக்கும் இருந்த காதலைப் பற்றி ஊர்ப் பெண்கள் ஊரார் பலரும் அறியுமாறு அலர் (கிசுகிசு!) பேசிச் செய்தியைப் பரப்பினர். ஆனால், திருமணம் ஆன பின்னரோ [நிலைமை வேறு]; வெற்றி தரும் வேல் ஏந்திய கௌரியர் குலத்துப் பாண்டியருக்குரிய மிகப் பழமையான கோடிக்கரையில் முழங்கும் பெருங் கடல் அலைவீசும் துறையில் வெற்றியன்றி வேறேதும் அறியாத இராமன் தன் இலங்கைப் படையெடுப்புப் பற்றி ஆராய்வதற்காக ஓர் ஆல மரத்தடியின் அடியில் அமர்ந்திருந்தான்; அப்போது அமைதியை வேண்டி ஆல மரத்தில் அமர்ந்திருந்த பறவைகளை ஒலியெழுப்பாமல் இருக்கச் செய்ததுபோல், ஊர் அமைதியாகிவிட்டது!" என்றாள்.

ஆலமரத்தில் அமர்ந்திருந்த பறவைகளை இராமன் கையுயர்த்தி ஒலி எழுக்காமல் இருக்கச் செய்தது கம்பனில் கிடையாது; வான்மீகியிலும் கிடையாது. இப்படி ஒரு செய்தி கோடிக்கரையில் சொல்லப் படுவதில் இருந்தே, கடைச் சங்க காலத்திலேயே இன்றைய இலங்கைக்கும் இராம காதையில் சொல்லப்படும் இலங்கைக்கும் இடையே ஒரு புரிதல் குழப்பம் ஏற்படத் தொடங்கிவிட்டது என்று அறியலாம். ஆனாலும் ஒருசிலர் இராமர் சேது என்று தங்களுக்குத் தோன்றியபடி கற்பனை வாதம் பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.

"இராவணன் ஆண்ட ௾லங்கை எது?" என்ற தலைப்பில் சைவசித்தாந்த வெளியீட்டுக் கழகத்தின் செந்தமிழ்ச் செல்வி இதழில் "சிலம்பு 23" (volume 23) ல் மயிலை. சீனி வேங்கடசாமியார் மற்ற ஆய்வாளர்களின் முடிவுகளைத் தெரிவித்திருப்பார். ஏகப்பட்ட வட இந்திய ஆய்வாளர்கள் இராவணனின் இலங்கையை இன்றைய சத்திஸ்கர், ஜார்க்கண்ட் பகுதியில் ஒரு ஏரிக்கு நடுவில் காட்டுவார்கள். தவிர இன்றைய இலங்கையின் மகாவம்சத்தில் பழஞ்செய்தியாக, தொன்மக் கதையாகக் கூட, இராவணன், இலங்கை என்னும் பெயர்கள் கூறப்படவில்லை.

இனி அடுத்து இராமநாதபுரத்துக்கும், இராமேசுரத்துக்கும் நடுவே பாம்பன் வாய்க்கால் ஏற்பட்டது பற்றிப் பார்க்கலாம். இதை நான் சொல்லுவதைக் காட்டிலும், இராமநாத சுவாமி கோவில் கும்பாபிசேக மலர் 1975ல் "இராமேசுவரத் தீவு" என்னும் தலைப்பில் மயிலையார் எழுதிய ஒரு கட்டுரையை அப்படியே தட்டச்சித் தருகிறேன்.
------------------------------
இராமேசுவரம் என்னும் இச்சிறு தீவு முற்காலத்தில் இராமநாதபுரத்தோடு இணைந்த ஒரு நிலமாக இருந்து பிறகு சிறு தீவாக மாறிற்று என்னும் வரலாறு பலருக்குத் தெரியாது. இச்செய்தி பலருக்கு வியப்பாக இருக்கும். ஆனால் இராமேசுவரம் தீவும் இராமநாதபுரமும் ஒரு காலத்தில் இணைந்திருந்தன என்பது உண்மை.

தென்னிந்தியாவின் கடற்கரை ஓரங்கள் எக்காலத்திலும் ஒரே மாதிரியாக இருந்ததில்லை. கடற்கோள்களினாலும், கடல் அரிப்பினாலும் நமது நாட்டுக் கடற்கரைப் பக்கங்களில் எத்தனையோ மாற்றங்கள் நெடுங் காலமாக நடந்துள்ளன. இன்றும் நடந்து கொண்டிருக்கிறது. இப்போது பாண்டிய நாட்டுக்கு அருகில் இருக்கிற இலங்கைத் தீவு முன்னொரு காலத்தில், பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்னே, தமிழகத்தோடு இணைந்து ஒரே நிலமாக இருந்தது. இந்தப் பெரிய நிலப்பரப்பு, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே கடற்கோளினாலும், கடல் அரிப்பினாலும் சிறிது சிறிதாகச் சிதைந்து போய்க் கடைசியில் தனித் தீவாகப் பிரிந்து போய், பிற்காலத்தில் இலங்கைத் தீவாக மாறிப் போயிற்று. நில ஆராய்ச்சி செய்யும் அறிஞர்கள் இந்த வரலாற்றுச் செய்தியைக் கூறுகிறார்கள். இலங்கை, தனித் தீவாகப் பிரிந்து போன பிறகுங் கூட, கொழும்புக்குத் தெற்கேயுள்ள கடலோரங்களில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு அந்தப் பகுதி நிலங்கள் கடலில் முழுகிப் போயுள்ளன என்று மகாவம்சம் என்னும் இலங்கை வரலாற்று நூல் கூறுகிறது.

கன்னியாகுமரி இப்போது தமிழகத்தின் தெற்கெல்லையாக அமைந்திருக்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னே, கன்னியாகுமரிக்குத் தெற்கே ஒரு நிலப்பரப்பு தமிழகத்தோடு இணைந்திருந்தது. அந்த நிலப்பரப்பு ஏறத்தாழ இரண்டு மாவட்டங்கள் (ஜில்லாக்கள்) அளவு இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அந்த நிலப்பரப்பு பிற்காலத்தில் கடற்பெருக்கினாலும், கடல் அரிப்பினாலும், பையப் பைய கடலில் மூழுகிப் போய்விட்டது. அந்த நிலப்பரப்பு முதல்தடவை ஏற்பட்ட கடல் கொந்தளிப்பினால் ஒரு பகுதி மறைந்து போய் எஞ்சியிருந்த இன்னொரு பகுதி நிலம் மற்றுமொரு கடற்பெருக்கினால் மறைந்து போயிற்று, இந்த வரலாற்றுச் செய்தியைச் சிலப்பதிகாரமும், கலித்தொகையும் கூறுகின்றன. இறையனார் அகப்பொருள் உரைப் பாயிரமும், கடற்கோளினால் முழுகிப் போன இந்த நிலங்களைக் கூறுகிறது.

திருப்பதி என்னும் திருவேங்கடமலையை எல்லோரும் அறிவார்கள். வேங்கடமலையைச் சூழ்ந்திருக்கும் நாடுகளுக்கு வேங்கடக் கோட்டம் என்பது பழைய பெயர். இந்த வேங்கடக் கோட்டத்துக்குக் கிழக்கே கடற்கரையோரமாகப் பவத்திரிக் கோட்டம் என்னும் ஒரு நிலப்பரப்பு இருந்தது. பவத்திரிக் கோட்டம் ஒரு ஜில்லா (மாவட்டம்) அளவுள்ள நிலம். இந்தப் பவத்திரி நாட்டை 1800 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நக்கீரர் அகநானூறு 340ம் செய்யுளில் கூறுகிறார். இந்தப் பவத்திரிக் கோட்டம் கி.பி.11ம் நூற்றாண்டில் கடலில் மூழ்கிப் போயிற்று. கடலில் முழுகிப் போன பவத்திரிக் கோட்டம் இப்போது திருவேற்காடு ஏரி (பழவேற்காடு ஏரி - இராம.கி) என்று பெயர் பெற்று பெரும் நீர்ப்பரப்பாக இருக்கிறது. பவத்திரிக் கோட்டம் இருந்ததையும், அது கடலில் முழுகிப் போனதையும் பிற்காலத்துச் சோழ அரசர்களின் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. பவத்திரிக் கோட்டத்தில் இருந்த ஊர்களில் ஒன்று காகந்தி என்பது. "கடல்கொண்ட காகந்தி" என்று சோழர் கல்வெட்டுகள் கூறுகின்றன. நெடுங்காலமாகத் தொண்டைநாடின் கடற்கரையொரமாக இருந்த பவத்திரிக் கோட்டம் கடலில் முழுகிப் போய் இப்போது திருவேற்காடு ஏரியாய் மாறிப் போய்விட்டது. இந்த ஏரியின் தென்பகுதி இப்போது தமிழக அரசாட்சிக்கு உட்பட்டும், வடபகுதி ஆந்திர அரசுக்கு உட்பட்டும் இருக்கின்றன. (ஸ்ரீஹரிக் கோட்டா என்று இன்று சொல்லப்படும் விண்வெளி ஏவுகணைத் தளத்தின் பெயரில் பின்னுள்ள "கோட்டா" இந்தக் கோட்டமாய் இருக்க வாய்ப்பு உண்டு. ஸ்ரீஹரி என்னும் திரிவு எப்படி வந்தது, பவத்திரிக்கும் அதற்கும் உள்ள ஓசைத் தொடர்பு என்ன, என்று இன்னும் அறிந்தேன் இல்லை; தேடுகிறேன் - ௾ராம.கி)

தமிழகத்தின் தெற்கே பாண்டிநாட்டிலே கிழக்குக் கடற்கரையையடுத்து கொற்கைக்குடாக் கடல் இருந்தது. கொற்கைக் குடாக் கடல் நிலத்தில் புகுந்து உள்கடலாக அமைந்திருந்தது. கொற்கைக் குடாக் கடலின் மேற்கே கொற்கைப் பட்டினம் இருந்தது. இது துறைமுகப் பட்டினமாகவும் முத்துக் குளிக்கும் இடமாகவும் இருந்தது. கொற்கை நகரத்தைப் பற்றிச் சங்கப் பாடல்கள் சிறப்பாகக் கூறுகின்றன. தாமிரபரணி ஆறு அக்காலத்தில் கொற்கைக் குடாக் கடலில் சென்று விழுந்தது. கடற்கரையில் இருந்து ஐந்து மைல் தூரம் உள்புகுந்து உள்நாட்டுக் கடலாக இருந்த கொற்கைக் குடாக் கடல் பிற்காலத்தில் ஏறத்தாழ 10 ஆம் நூற்றாண்டில் மண்மூடி மறைந்து போய்விட்டது. கடற்கரைப் பக்கமாகக் கடல் அலைகள் மணலைக் கொண்டு வந்து கொற்கைக் குடாக் கடலின் ஒரு புறத்தைத் தூர்த்து விட்டன. தாமிரபரணி ஆறு மணலை அடித்துக் கொண்டு வந்து கொற்கைக் குடாக் கடலின் இன்னொரு புறத்தைத் தூர்த்துவிட்டது. இவ்வாறு இருபுறமும் மணல் தூர்ந்து கொற்கைக் குடாக்கடல் அடியோடு மறைந்து போய் இப்போது அது இருந்த இடம் நிலமாக மாறிவிட்டது. தாமிரபரணி ஆறும் இடம் மாறிவிட்டது. இவ்வாறு கடற்கரையோரங்களில் கடல் அரிப்பினாலும், கடல்பெருக்கினாலும் பல இடம் கடல்மாறிப் போனதற்குப் பல சான்றுகளைக் காட்டலாம். (மாமல்ல புரத்திற்கு அருகில் ஏற்பட்ட மாற்றங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். - இராம.கி.)

இராமேசுவரம் ஒரு காலத்தில் இராமநாதபுரத்தோடு இணைந்திருந்ததென்றும், அது பிற்காலத்தில் தீவாகப் பிரிந்து தாய்நாட்டில் இருந்து பிரிந்து போய்விட்டதென்றும் கூறுகிறோம். அதனை விளக்குவோம். இராமேசுரம் இராமநாதபுரத்துடன் இணைந்திருந்த காலத்தில் இராமேசுவரக் கோயிலில் இருந்து இராமலிங்கப் பெருமானை இராமநாதபுரத்துக்கு எழுந்தருளிவித்து ஒரு வாரம் தங்கிப் பிறகு மீண்டும் இராமேசுவரத்துக்குக் கொண்டு போவது வழக்கமாய் இருந்தது. இவ்வாறு இராமேசுவரம் தீவாக மாறுவதற்கு முன்பு வரையில் இது நடந்து வந்தது. தீவாக மாறிப் போனபிறகு இராமேசுவரர் இராமநாதபுரத்துக்கு எழுந்தருளுவது நின்றுவிட்டது. ஏறத்தாழ கி.பி.12ம் நூற்றாண்டில் இலங்கையை ஆண்ட சிங்கள அரசன் தமிழ்நாட்டின் மேல் படையெடுத்துப் போர் செய்ய வந்தபோது, அவனுடைய சேனையைக் கப்பல்களில் ஏற்றிக் கொண்டுவந்து இராமேசுவரத்தில் இறங்கிப் பிறகு அந்தச் சேனையை இராமநாதபுரத்துக்கு அழைத்து வந்தான் என்று சுல்லவம்சம் (=சூளவம்சம் - இராம.கி) என்னும் இலங்கைநூல் கூறுகிறது. இதனாலும் இராமநாதபுரமும் இராமேசுவரமும் முற்காலத்தில் ஒன்றாக இணைந்திருந்தன என்பதை அறிகிறோம்.

ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கு முன்பு இராமநாதபுர வட்டத்தில் போர்ச்சுகீசியர் வந்து கப்பல் வணிகம் செய்தார்கள். அக்காலத்தில் பெரும் புயலடித்துக் கடல் கொந்தளித்துக் கடலில் நீண்டுகிடந்த இராமேசுவரத்தைத் தீவாகப் பிரித்துவிட்டதும், கடல்நீர், சிறு கால்வாய் போலப் பாய்ந்து இராமநாதபுரத்தையும், இராமேசுவரத்தையும் பிரித்துவிட்டது. சிலகாலம் வரையில் இந்தச் சிறு கால்வாயைக் கடந்து இராமநாதபுரத்துக்குப் போக்குவரத்து இருந்தது. பிறகு இந்தக் குறுகலான கால்வாயில் கடல்நீர் புகுந்து அதை அகலமாக்கி விட்டது. அப்போது போர்த்துகீசிய வாணிகர் தங்களுடைய வணிகக் கப்பல்களின் போக்குவரத்துக்காக இந்தக் கால்வாயை ஆழமாகவும் அகலமாகவும் செய்துவிட்டார்கள். அதற்காக அவர்கள் ஆயிரக்கணக்கான வராகன்களைச் செலவு செய்தார்கள்.

புயல் அடித்து காற்று மழையினாலும் கடல் கொந்தளிப்பினாலும் இயற்கையாக உடைப்புண்ட இராமேசுவரம் பிறகு பையப் பைய உடைப்பு அகலமாகிக் கால்வாய் ஆகிவிட்டது. அந்தக் கால்வாயை போர்த்துகீசிய வாணிகர் கப்பல் போக்குவரத்துக்கு ஏற்றதாக அகலமும் ஆழமுமாகச் செய்து விட்டனர், இவ்வாறு இராமேசுவரம் தனித்தீவாகப் பிரிந்து போயிற்று. இராமநாதபுரத்துக்கும், இராமேசுவரத்துக்கும் உள்ள கால்வாய் இப்போது பாம்பன் கால்வாய் என்று பெயர் கூறப்படுகிறது. இராமேசுவரமும், இராமநாதபுரமும் முன்னொரு காலத்தில் இணைந்து ஒரே நிலமாக இருந்தது என்பதைப் பிற்காலத்தவர் மறந்து விட்டார்கள்.
----------------------------------

இராமநாதபுரத்துக்கும், இராமேசுரத்துக்கும் இடையில் பாம்பன் கால்வாயை போர்த்துகீசியர் வெட்டிய போதும், பின்னால் ஆங்கிலேயர்கள் அதை அகலப் படுத்திய போதும், இராமர் சேது என்று சொல்லி அதை நிறுத்த ஆட்கள் இல்லை. இன்றோ, சேதுக் கால்வாய் வெட்டுவதை நிறுத்துவதற்கு இராமனைக் காரணம் காட்டுகிறார்கள்.

இனி ஆதி சேதுவுக்கும், இப்பொழுது பேசப்படும் இராமர் சேதுவுக்கும் இடையிலான நிலம் கடற்கோளில் அழிந்த செய்தியை அடுத்த பகுதியில் பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.

32 comments:

Anonymous said...

dear sir,

i'm sorry that unable to write in tamil at the moment, but in all my years research nd study i have never heard of any connection between kodikarai and nainatheevu. actually lots of big boat travel thru this area every day. i do not know from where you got this idea of a link between kodikarai and nainatheevu.

Anonymous said...

You have made a grave error here. Let me explain in full, firstly Mahavamsa is not a historical chronicle that relates the history of Sri Lanka. As the author of Mahavamsa himself says it is a religious history of the Mahavihara. And as it clearly states it was “compiled for the serene joy and emotion of the pious”.

Mahavamsa deals with three aspects only,

1. History of Buddha
2. The coming of Buddhism to Sri Lanka and
3. The History of Mahavihara. (In connection with the history of Mahavihara it also relates the history of kings and people who fostered it and the history of kings and people who tried to destroy it.)

All other chronicles like Dipavamsa, Rajavaliya, etc all recount the tales of Raman & Ravanan. Moreover the Sri Lankan folklore is rich with tales about the escapades of Ravanan.
Further almost all ancient villages and towns of Sri Lanka have legends about Ravanan associated with them, this more true in the case of Sinhalese. Tamil villages have legends about Raman associated with them instead.

Please read this link as well.
http://www.hindustantimes.com/StoryPage/StoryPage.aspx?id=fe2f4394-73e9-41a0-a41a-a30d3ef2c6b3&&Headline=Ravana+is+a+hero+for+Sinhala+nationalists

Anonymous said...

"அப்போது அமைதியை வேண்டி ஆல மரத்தில் அமர்ந்திருந்த பறவைகளை ஒலியெழுப்பாமல் இருக்கச் செய்ததுபோல், ஊர் அமைதியாகிவிட்டது!"

So what trick Ram did for this? No doubt Tamils are superstitious lot from Sangam days.

The Grammarian said...

// தட்டச்சித் தருகிறேன்.// ==>
அச்சுத்தட்டித் தருகிறேன்
எனல் சிறப்பு.

nayanan said...

//இராமநாதபுரத்துக்கும், இராமேசுரத்துக்கும் இடையில் பாம்பன் கால்வாயை போர்த்துகீசியர் வெட்டிய போதும், பின்னால் ஆங்கிலேயர்கள் அதை அகலப் படுத்திய போதும், இராமர் சேது என்று சொல்லி அதை நிறுத்த ஆட்கள் இல்லை. இன்றோ, சேதுக் கால்வாய் வெட்டுவதை நிறுத்துவதற்கு இராமனைக் காரணம் காட்டுகிறார்கள்.
//

ஐயா வணக்கம்.
இந்த ஆய்வுத் தொடர் அருமையாக
உள்ளது. பாம்பன் கால்வாய் பற்றி
அறிந்து வியந்தேன். ஆதிசேது பற்றி
அறிய ஆவல்.

அதேபோல திருப்பெருந்துறை இருக்கும் பகுதியை குத்து மதிப்பாக
அறிந்து வைத்திருந்தாலும், அதுதான்
ஆவுடையார் கோயில் என்று அறிந்து
மகிழ்ந்து போனேன். மிக்க நன்றி.

//அநாநி
So what trick Ram did for this? No doubt Tamils are superstitious lot from Sangam days.
//

இந்த அநாநி மாதிரி அறிவுப் பொங்கல்களை இணையத்தில் பார்க்கமுடியாவிட்டால்
எனக்கு பொழுதே போவதில்லை :-))

அன்புடன்
நாக.இளங்கோவன்

குமரன் (Kumaran) said...

ஐயா. அடுத்த பகுதி எப்போது வரும்?

FloraiPuyal said...

அன்பின் இராமகி, உடல்நலம் சரியில்லையா அல்லது வேலைப்பளுவினால் தொடராது இருக்கிறீர்களா? தொடங்கியதை முடிக்காது விடுபவர் அல்லவே நீங்கள். பிறரது எதிர்ப்புக்களால் எழுதுவதை நிறுத்தியிருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

இத்தொடரை முடிப்பதுடன் மேலும் நிறைய எழுத வேண்டும் என்றும் வேண்டுகிறேன்.

இராம.கி said...

அன்பிற்குரிய பெயரில்லாதவருக்கு,

மிகுந்த நாட்கள் கழித்து உங்கள் பின்னூட்டிற்கு மறுமொழிப்பதை மன்னியுங்கள்.

கோடிக்கரைக்கும் நயினாத் தீவிற்கும் தொடர்பு இல்லையென்று நீங்கள் சொல்லுகிறீர்கள். ஆனால் "கோடிக்கரைக்கும், மாதகல்லுக்கும் நிலத்தொடர்பு இது போல மணல் திட்டாய் இருந்திருக்க வேண்டும்" என்று மறவன் புலவு க. சச்சிதானந்தம் மிக ஆணித்தரமாகக் கூறுகிறார். (அவர் ஒரு கடலியல் அறிஞர்.) இப்பொழுது இன்னும் சில ஈழத்தாரும் அது போலச் சொல்லுகிறார்கள். அந்தப் பக்கத்துக் கதைகளைக் கூறுகிறார்கள். ஆதிசேது ஒன்று கோடிக்கரையை ஒட்டி இருந்தது என்று மலேசிய அறிஞர் மருத்துவர் செயபாரதி கூறியும் நான் கேள்விப் பட்டு இருக்கிறேன். தவிர நயினார் தீவு என்பது நாகனார் தீவு (< நாகர் தீவு) என்பதன் திரிவு என்றும் (நாக நாடு என்பது அழிந்து போன ஒன்று; நாம் இப்பொழுது பேசிக் கொண்டிருக்கும் கடல் பகுதி அதன் மேல் ஏற்பட்டதாய் இருக்கலாம். அதன் மிச்ச சொச்சங்களை இந்தப் பக்கம் தமிழகத்தில் நாகர் பட்டினம்>நாக பட்டினம் என்பதிலும், பூம்புகாரின் பழைய பெயர் சம்பா பதி என்பதிலும் (யாமர் = கருப்பர், நாகர், யாமர்>யாம்பர்>ஸ்யாம்பர்>சாம்பர் = கருப்பானவர்; யா>ஞா>நா என்பது கருமைநிறம் குறிக்கும் தமிழ்வேர்ச்சொல். சம்பாபதியின் இன்னொரு பெயர் = காகந்தி அதுவும் கருப்பு என்னும் பொருள் கொண்ட சொல் தான். தமிழகத்தில் நகரத்தார் என்ற வணிகர்கள் காவிரிபூம்பட்டினத்திற்கு முன்னால் நாகநாட்டில் இருந்ததாக ஒரு தொன்மம் உண்டு. மணிமேகலை என்ற பெயர் இவர்களிடையே இன்றும் புழக்கத்தில் உண்டு.) அறியமுடியும். சம்பாபதி என்ற பெயரும், நாகநாடு என்ற இடமும் சிலம்பு, மணிமேகலையில் பேசப்படுகின்றன. மணிமேகலையில் பேசப்படும் மணிபல்லவம் (< மணிபல்லங்கம்) என்ற இடம்; மணிமேகலை துறவு மேற்கொண்டு அமுதசுரபி பெற்ற இடம்.) நயினார் தீவாகத்தான் இருக்க வேண்டும் என்று மயிலை சீனி வேங்கடசாமியார் சொல்லுகிறார்.

மகாவம்சத்தைப் பற்றிய உங்கள் கருத்தைப் புரிந்து கொள்ளுகிறேன். அதே பொழுது, அதில் வரும் செய்திகளை முற்றிலும் புறம் தள்ளக் கூடாது என்றே மயிலைசீனி வேங்கடசாமியார் சொல்லுகிறார். நண்பரே! ஒரு வட்டாரத்தில் இராவணன் கதைகள் மிகுந்து இருப்பதாலேயே அங்கு இராவணன் வாழ்ந்திருந்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இலங்கைத்தீவில் புத்தர் வந்து தன் கால் தடங்களைப் பதித்தார் என்று கூடக் கதைகள் இருக்கின்றன. அதனாலேயே, அந்தத் தீவிற்கு புத்தர் போனார் என்று ஆகி விடுமோ? வரலாற்றையும், நம்பிக்கைகளையும் உரசிப் பார்த்து உண்மைகளை அறிய வேண்டும் அல்லவா?

வால்மீகி இராமாயணத்தை அலசிய பல வரலாற்று ஆய்வாளர்களும் சொல்லுவது: "இராமாயணக் கதையில் வரும் இலங்கை இன்றைய இலங்கை அல்ல." என் குறையறிவிற்குத் தென்பட்டவரையும் அதே முடிவுதான். இந்த இடுகையில் கம்பனின் சில காட்சிகளையும், கூற்றுகளையும் எடுத்துக் காட்டி அதைச் சொல்ல முயல்கிறேன். உங்களுக்கு மாறுபட்ட கருத்து இருந்து அதை நிறுவ முடியுமானால் செய்யுங்கள். முடிவாக ஒன்று. இங்கே நாம் பழைய தமிழ் வரலாற்றை ஆய்ந்து கொண்டிருக்கிறோம். பலரும் சேர்ந்து முயன்றால் தான் அதன் வரைவு கிடைக்கும். விட்டுப்போன தொடர்புகளை மீள அமைக்க முடியும். இதற்கு ஈழத்தின் புவியியல், வரலாறு, தொன்மம், ஊர்க்கதைகள், சொல்லாடல்கள், ஊர்ப்பெயர் ஆய்வுகள் தெரிந்தவர்கள் கருத்துச் சேகரிப்பில் ஈடுபட வேண்டும்.

பழந்தமிழகம் என்பது இன்றைய தனுக்கோடிச் சேதுவுக்கும், கோடிக்கரைச் சேதுவுக்கும் இடையே கணிசமான நிலத்தைக் கொண்டது. அதன் தொடர்ச்சியே இன்றைய இலங்கைத் தீவு. (பழந்தமிழகம் என்பது இது மட்டுமல்ல; குமரிக்கும் கீழே நிலம் இருந்திருக்கிறது. இன்றைய நெல்லை மாவட்டத்திற்குக் கிழக்கிலும் நிலம் இருந்திருக்கிறது. தாம்பர பெருனை ஆறு இன்றைக்கும் கிழக்கே கடலில் கலந்திருக்கிறது. அந்தப் பக்கம் இலங்கைத் தீவில் விசயன் வந்து இறங்கிய இடமும் தாம்பர பண்ணி என்றே பாலியில் சொல்லப் பட்டிருக்கிறது. அதே பொழுது, குமரிக் கண்டம் என்ற கருதுகோளை நான் ஏற்பவன் அல்லன். பழந் தமிழகம் என்ற நிலநீட்சியைத் தேடிக் கொண்டு இருப்பவன். இதைப் பற்றித் தான் அடுத்த பகுதியாய் எழுதவேண்டும் என்று எண்ணிக் கொண்டு இருக்கிறேன். காலமும், முயற்சியும், உடல்நலமும் ஒன்று கூடிவரவேண்டும்.)

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

So what trick Ram did for this? No doubt Tamils are superstitious lot from Sangam days.

என்று எழுதியிருக்கும் நண்பரே! உங்கள் கேள்விக்கு விடை எனக்குத் தெரியாது.

ஆனால், பழைய மூதிகங்களில் (myths) நிலவும் இது போன்ற நம்பிக்கைகளை ஒவ்வொரு இனத்திலும், நாட்டிலும், என்னால் காட்ட முடியும். தமிழரை மட்டும் மூட நம்பிக்கையாளர் என்று வரையறுப்பது ஒருவிதத் தாழ்வு மனப்பான்மையாகும். அது நாம் பார்க்கும் பார்வையைப் பொறுத்தது. காலம், இடம், அறிவு வளர்ச்சி, குமுகாயம் (society) வளர்ந்தநிலை, அங்கு இருந்த விளைப்பு ஊற்றுக்கள் (productive sources), விளைப்பு உறவுகள் (productive relations) பொறுத்து இதைச் சொல்ல வேண்டும்.

இந்தக் கால அளவுகோலில் வைத்துப் பார்த்து, சேயோனை எள்ளுப் பேரன் மட்டம் தட்டுவது மிக எளிது. (எள்ளுப் பேரன் < கொள்ளுப் பேரன் < பேரன் < மகன் < தந்தை < பாட்டன் < பூட்டன் < சேயோன்.)

அன்புடன்,
இராம.கி

இராம.கி said...

அன்பிற்குரிய இளங்கோ,

ஆதிசேது பற்றிய விவரங்களைத் தேடி அளிக்க முயலுவேன்.

ஆவுடையார் கோயிலுக்குக் கட்டாயம் போய் வாருங்கள். திருவாசகம் பிறக்கக் காரணமான இடம். கோயிலின் தூய்மை, கவனிப்புச் சரியில்லை என்றாலும், பார்க்க வேண்டிய கோயில். இது போன்ற இடங்களை நன்கு பேணி சுற்றுலா இடங்களாய் ஆக்குவது நல்லது. வரலாற்றுச் சிறப்புள்ள ஊர். அரபுக் குதிரைகள் வரிசை வரிசையாக வந்திறங்கிய ஊர். அது ஒரு துறைமுகமாய் இருந்தது என்று இன்று நம்ப முடியாத இடம். கிழக்குக் கடற்கரை எங்கும் அகழாய்வு செய்ய வேண்டியது நிறைய இடங்கள் உள்ளன.

1964ல் நடந்த தனுக்கோடி அழிவைத்தான் முட்டாள் தனமாய்ப் புறம் தள்ளி மறந்துவிட்டோம்; இப்பொழுது, அண்மையில் மூன்றாண்டுகளுக்கு முன் நடந்த ஆழிப் பேரலைக்கு அப்புறமும், நாம் கடலுக்கு நிலம் இழந்த கதையை நம்பவில்லை என்றால் எப்படி?

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய இலக்கணியாருக்கு,

தட்டச்சித் தருகிறேன் என்பது தட்டு அச்சித் தருகிறேன் என்ற பிரித்துப் பார்த்தால் சரியென்றே எண்ணுகிறேன். தட்டுதல் என்ற வினையும், அதையொட்டி அச்சுதல் என்ற இரண்டாம் வினையும் சேர்ந்து (ஒன்றை வினையெச்சமாக்கி, இன்னொன்றை முற்றாக்கி) கூட்டு வினையாகிறது. கண்டு கொள்ளுங்கள் என்று தென்பாண்டிப் பேச்சு கண்டுக்குங்க என்று சுருங்குவதை இங்கு எண்ணிப் பாருங்கள். இதே போல, செய்ஞ்சுக்குங்க (செய்து கொள்ளுங்கள்). படிச்சுக்குங்க என்று ஏராளமாய்ச் சொல்லலாம்.

அச்சு என்பது இங்கு பெயர்ச்சொல் அல்ல. அச்சுதல் என்ற வினைச்சொல்லை இங்கு புழங்குகிறேன். அச்சிடுதல் என்று பெயர்ச்சொல்லோடு துணைவினை சேர்த்துப் பழகும் இந்தக் கால நடைமுறை மட்டுமே தமிழில் புழங்க வேண்டுமா என்ன?

to print என்பதை அச்சுதல் என்று சொல்லக் கூடாதா?

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய புயலாருக்கு,

எங்க பக்கத்துக் கவிஞர் ஒருவரின் (பேர் சொல்ல வேண்டாம், உங்களுக்கே தெரியும்)

"போற்றுபவர் போற்றட்டும் புழுதி வாரித்
தூற்றுபவர் தூற்றட்டும் தொடர்ந்து செல்வேன்
ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால்
எடுத்துரைப்பேன் எவர்வரினும் நில்லேன் அஞ்சேன்"

என்ற பாடலை, 12, 13 அகவையில் இருந்து பேச்சு மேடைகளில் சொல்லிப் பழகியவன் நான். எனவே, என் கருத்திற்கு மாற்றுக் கருத்துக்களைக் கண்டு நான் ஒன்றும் அயர்ந்து போய்விடவில்லை.

அன்பிற்குரிய குமரன் மற்றும் புயலாருக்கு,

உங்களின் எதிர்பார்ப்பு புரிகிறது. ஆனால் ஒரு நீண்ட விடுப்பில் நாடுவிட்டு நாடுவந்து அமெரிக்காவில் ஊர்சுற்றிக் கொண்டு இருக்கிறேன். தவிரக் குறிப்புகள் எல்லாம் சென்னையில் இருக்கிறது. கூடவே இந்தக் கடல் ஆழம், பனி ஊழிகள், அவற்றின் காலம், கடல்கொண்ட நிலங்கள், ஆகியவை பற்றிய செய்திகளை, நேரம் கிடைக்கும் போது இங்கு சேகரித்துக் கொண்டிருக்கிறேன். உறுதியாக இந்தத் தொடரை முடிப்பேன். கொஞ்சம் என் போக்கில் போகிறேனே? என்ன சொல்லுகிறீர்கள்?

அன்புடன்,
இராம.கி.

குமரன் (Kumaran) said...

ஐயா. தங்கள் பயணம் எல்லாம் நன்கு நிறைவு பெற்ற பின்னர் எழுதுங்கள். அவக்கரம் (அவசரம் என்பதற்கு இந்தச் சொல்லப் பயன்படுத்தியிருக்கிறேன்) இல்லை. தொடர் தொடர்ந்து வராததற்கு காரணம் என்னவோ என்ற ஐயத்தால் தான் கேட்டேன்.

குமரன் (Kumaran) said...

//

இந்தக் கால அளவுகோலில் வைத்துப் பார்த்து, சேயோனை எள்ளுப் பேரன் மட்டம் தட்டுவது மிக எளிது. (எள்ளுப் பேரன் < கொள்ளுப் பேரன் < பேரன் < மகன் < தந்தை < பாட்டன் < பூட்டன் < சேயோன்.)

//
ஐயா, சேயோன் மேய குறிஞ்சி நிலம் என்று தொல்காப்பியம் சொல்லும் இடத்தில் சேயோனுக்கு 'மகன்' என்ற பொருள் கொண்டு சிவனின் மகன், கொற்றவை சிறுவன் ஆகிய திருமுருகன் என்று பொருள் சொல்லப் படித்திருக்கிறேன். அதுவே சேயோனுக்குப் பொருள் என்றும் எண்ணி வருகிறேன். நீங்கள் பாட்டனின் பாட்டனை சேயோன் என்று சொல்லியிருக்கிறீர்கள். நேரம் கிடைக்கும் போது அதனையும் கொஞ்சம் விளக்குங்கள். வேங்கடம் தொடரிலும் சில கேள்விகள் கேட்டிருக்கிறேன். அவற்றிற்கும் நேரம் கிடைக்கும் போது விடை சொல்லுங்கள். நன்றிகள்.

FloraiPuyal said...

அன்பின் இராமகி,
குமரன் கூறியது போலத்தான் எனக்கும் ஐயம் வந்தது. மற்றபடி உங்களை அவக்கரப் படுத்தவோ உங்கள் போக்கை மாற்றவோ இல்லை :) . நீங்கள் உடல்நலத்துடன் இருப்பது அறிந்து மகிழ்ச்சி. அமெரிக்காவிற்கு வந்திருப்பது குறித்தும் மகிழ்ச்சி. (முடிந்தால் உங்களை ஒருமுறை நேரில் காணவேண்டும் என்று ஆவல். பெரியண்ணனைக் கண்டும் பலநாட்கள் ஆகிவிட்டது.)

//
பழந் தமிழகம் என்ற நிலநீட்சியைத் தேடிக் கொண்டு இருப்பவன். இதைப் பற்றித் தான் அடுத்த பகுதியாய் எழுதவேண்டும் என்று எண்ணிக் கொண்டு இருக்கிறேன்.
//
உங்களுக்கு உதவும் என்ற நோக்கில் சொல்கிறேன். கூகிளின் உலகம் அல்லது செய்கோள் வரைபடத்தில் தென்னிந்திய ஈழப்பகுதிகளைக் கண்டால் அதில் நீங்கள் குறிப்பிடும் அளவுள்ள நிலம் நீரில் மூழ்கியிருப்பதைக் காணமுடியும். இந்த இராமர் சேது வாதம் பயனற்றது என்பதை நிறுவ இது ஒன்றே போதும். தமிழகத்தினையும் ஈழத்தையும் இணைத்து சில அடிகளே ஆழத்தில் நிலம் இருப்பதையும் அந்நிலம் ஏறக்குறைய நூறு மைல் அகலத்திற்கு இருப்பதையும் காணலாம். மேலும் நீங்கள் குறிப்பிட்ட தென்கடலிலும் ஒரு நூறு மைல் அளவுள்ள நிலம் கடலில் அமிழ்ந்திருப்பதையும் பல சிறிய மற்றும் பெரிய தீவுகள் சுற்றிலும் இருப்பதையும் காணலாம். நீங்கள் குறிப்பிடும் இலங்கைத் தீவு இதில் ஏதேனும் ஒன்றாக இருக்கலாம்.

இன்னொரு செய்தி. சமீபத்தில் நான் பார்த்த ஒரு ஆய்வுக் கட்டுரையில் யாவா பகுதியிலுள்ள எரிமலை சில நூறாண்டுகளுக்கு ஒருமுறை வெடித்து வருவதாகவும் ஆயிரத்து ஐநூற்றிலிருந்து ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கிடைப்பட்ட காலத்தில் வெடித்த போது எழுந்த பேரலையால் தமிழகத்தின் பெரும் பகுதி கடலில் மூழ்கியதாகவும் ஆய்வாளர் கூறியிருந்தார். அந்த ஆய்வு கிடைத்தால் அனுப்புகிறேன். இராமர் கட்டியதாக கூறும் வாதங்கள் அனைத்துமே குழந்தைத்தனமாகத் தான் தெரிகிறது. உங்கள் ஆய்வில் மேலும் பல செய்திகளைத் தெரிந்து கொள்ளலாம் என்று எதிர்பார்க்கிறேன்.

Anonymous said...

Iyya,
Your blogs are always interesting and informative.
As puyalar told it looks like the land could have existed to south and east of current tamilnadu. As well near Indoesia too we could see the lands submerged in water. This again strengthens your view of 'nagar' island flooded in olden days. Eagerly awaiting for your further continuity.
Just another question. You always have told in blogs like other south indian languagues Telugu and Kannada are related to Tamil. But their grammer resembles more to Sanskrit. If you could write on that too it will be helpful.
Murali.

Anonymous said...

ஐயா, நாகர் தீவு என்பது முன்பு இலங்கை முழுவதற்கும் வழங்கிய பெயர். பின்பு அது வட மாகாணத்திற்கு மட்டும் என சுருங்கியது. இப்பொழுது அது நயினை தீவுக்கு மட்டுமே வழங்குகின்றது.


மேலும் ஆதிசேது நீங்கள் சொல்வதுபோல் இருக்க வாய்ப்பில்லை. எனெனில் இப்போதைய புவியியளாலர் கருத்தின் படி யாழ் தீபகற்பம் அமைந்துள்ள சுண்ணப்பாரை சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்னர் தான் கடல் எழுச்சியால் உருவானதாக கருதப்படுகிறது.

ஆதிசேது அப்படி இருந்திருந்தால் அது கடந்த 5,000 ஆண்டுகளுக்கு பின்னர் தான் உருவாகியிருக்க முடியும், அப்படியிருந்தால் அது இன்னமும் அங்கே தான் இருக்கும், அதற்கிடையில் மறைந்துபோக வாய்ப்பில்லை. மேலும் நான் இதுவரை பார்த்த எந்தவொரு ஆழ்கடல் படத்திலும் இது போன்ற ஆதிசேது தடம் எதுவும் காணப்படவில்லை.

இராம.கி said...

அன்பிற்குரிய குமரன்,

சேல் என்ற வேருக்கு சிவப்பு என்ற பொருளும், தொலைவு என்ற பொருளும் இருப்பதால், சேயோன் என்ற சொல்லை இரண்டு வகையிலும் ஆளலாம்.

சேய்மை = தொலைவு (எதிர்ச்சொல்: அண்மை = நெருக்கம்). பூட்டனுக்கும் தந்தை நமக்குத் தொலைவில் உள்ள உறவு என்பதால் சேயோன் என்று சொல்லப் படுகிறான். (மகன் என்னும் ஒருவன் ஏழு தலைமுறைகளைத் தனக்கு முன்னும் (4) பின்னும் (3) சரியாக அழைக்கும் நெறி தமிழரிடம் உண்டு. இப்படிப் பல்வேறு உறவு முறைகளைக் குழப்பமில்லாமால், மிக நீண்ட உறவுகளுக்கும் தமிழரால் குறிப்பிட முடிவதை பிரடரிக் எங்கெல்சு தன்னுடைய Origin of family, private property and state என்ற மார்க்சிய நூலில் விதந்து சொல்லுவார். படிக்க வேண்டிய பொத்தகம் அது. சேயோன் தெரியாமல் போனால் கூடச் சரி என்று விட்டு விடலாம். இன்னும் அண்மை உறவுப் பெயர்களையும் அல்லவா நாம் தொலைத்துக் கொண்டு இருக்கிறோம்? நம் உறவு முறைப் பெயர்களை நம்மில் பலரும் சிறாருக்குச் சொல்லிக் கொடுக்காமல், வெள்ளைக்கார முறைக்கு வழுவிக் கொண்டு இருக்கிறோம். சிற்றப்பாவிற்கும் மாமனுக்கும் வேறுபாடு தெரியாமல், அத்தைக்கும், மாமிக்கும், சித்திக்கும் வேறுபாடு தெரியாமல் இப்பொழுது பல தமிழ்ச் சிறாரும் aunty uncle என்று கூப்பிட்டு உறவுமுறைகளைப் புரிந்து கொள்ளாது இருப்பது மிகவும் வருத்தத்திற்கு உரியது. இதற்கு மேல், பாழாய்ப் போன mummy daddy அழைப்புக்கள்..... அம்மா, அப்பா என்று கூப்பிட்டு விட்டால் தாழ்ந்து போனது போல் பலர் நினைக்கிறார்கள்.)

தொலைவின் தொடர்ச்சியாய் உயர்வுப் பொருளூம் இயற்கையாய் வந்து சேரும். மலையாளத்தில் சொல்லும் சேட்டன் (=அண்ணன்), சேட்டத்தி (=சேச்சி, அக்கா) என்ற சொற்களும் இதோடு தொடர்புடையவை தான். அகரமுதலிக்குள் தேடினால் இன்னும் பல சொற்கள் கிடைக்கும்.

சேயோன் என்ற நிறச்சொல் தொடக்கத்தில் முருகனைக் குறித்தாலும், பின்னால் சிவனையும் குறித்தது.. தமிழ் முறைப்படி முருகனும், சிவனும் ஒருவரில் இருந்து இருவராய்க் கிளத்த தெய்வக் கருத்தீடுகள்.

இறைவன் ஒருவனே! நாம் தாம் அவனுக்கு வெவ்வேறு உருவமும், ஆளுமைத் தோற்றமும் கொடுக்கிறோம். விதவிதமாய்க் கற்ப்னை செய்கிறோம். நாளடைவில் மிகவும் பாடுபட்டு, உருவங்களை ஒதுக்கி, உருவமில்லா பேராற்றலை உணர்கிறோம்.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய புயலாருக்கு,

google earth மூலமாகவும் பார்க்கலாம் தான். நான் இன்னும் முயலவில்லை. செய்கிறேன். என் இடுகையின் ஊடே hancock வலைத்தளம் பற்றிச் சொல்லியிருந்தேனே அதிலும் அழிந்த இடங்கள் பற்றிக் கூறியிருக்கிறார்கள். படித்துப் பார்க்கலாம்.

இன்றைய இலங்கையை இராம காதையோடு பொருத்துவதும், தனுக்கோடி சேதுவை இராமசேது என்று அழைப்பதும் ஒப்ப முடியாத செயல்கள். இந்த இந்துத்துவ வாதிகளின் தாக்கம் தமிழ்நாட்டில் இருந்து களையப்பட வேண்டிய ஒன்று.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய முரளி,

தெலுங்கிற்கும், கன்னடத்திற்கும் தமிழுக்கும் உள்ள உறவு முறைகள் பற்றிப் பலரும் எழுதியிருக்கிறார்கள். தேடிப் பார்த்தால் கிடைக்கும். மொழியயலார் Bh.Krishnamoorthy பற்றித் தேடினால், ஆதாரமான கட்டுரைகள் கிடைக்கும். பாவாணரும் திராவிட மொழிகள் பற்றிய ஒரு பொத்தகத்தை எழுதியுள்ளார். பொதுவாகப் பழங்கன்னடம் பழந்தமிழுக்கு மிக மிக நெருங்கியது; வேறுபாடுகள் மிகச் சிறியதே. கிட்டத்தட்ட பழங்கன்னடம் பழந்தமிழின் ஒரு வட்டார வழக்குப் போலவே தோற்றமளிக்கும். பழந்தெலுங்கு பழந்தமிழுக்கும் பக்கதத்திற்கும் இடைப்பட்டது. பாகதம் அறிய பழந்தெலுங்கு நமக்கு ஒரு நுழைவாயில். பாகதத்தின் வழியே சங்கதம் போகலாம். பாகதத்தை முன்னால் வைக்காமல் சங்கதத்தை கொண்டுவைப்பது தாத்தனுக்குப் பேரன் முந்தி என்பதைப் போலவே ஆகும். இதைச் செய்ததால் தான் இந்திய மாந்தவியல், குமுகவியல், பண்பாட்டியல், இலக்கியங்கள் போன்றவற்றின் புரிதல் தலைகீழாகி இருக்கிறது. (செந்தமிழில் இருந்து தமிழ் வந்தது என்று சொன்னால் எவ்வளவு தவறோ அது போல சங்கதத்தில் இருந்து பாகதம் வந்தது என்று சொல்லுவதும் தவறுதான்.)

எல்லாவற்றையும் சங்கதத்தோடு முடிச்சுப் போட்டுப் பார்ப்பது ஒருவகை obscurantism. மாயை. சாதிக் குமுகாயத்தின் உயர்நிலையில் இருந்த பலரும் இதில் ஈடுபட்டிருக்கிறார்கள்.கிப்பொழுதும் செய்கிறார்கள். இந்தியாவை வளரவிடாமல் தடுப்பதில் இந்தப் பிற்போக்குத் தனத்திற்கும் பங்கு உண்டு. (அதே பொழுது சங்கத மொழிக்கும், சங்கத நூல்களுக்கும் உள்ள உரிய இடத்தை யாரும் மறுக்கத் தேவையில்லை.)

என்னால் முடிந்ததைப் பின்னால் ஒருகாலம் விளக்க முயலுவேன்.

அன்புடன்,
இராம.கி.

ஜீவி said...

//இறைவன் ஒருவனே! நாம் தாம் அவனுக்கு வெவ்வேறு உருவமும், ஆளுமைத் தோற்றமும் கொடுக்கிறோம். விதவிதமாய்க் கற்ப்னை செய்கிறோம். நாளடைவில் மிகவும் பாடுபட்டு, உருவங்களை ஒதுக்கி, உருவமில்லா பேராற்றலை உணர்கிறோம்.//

பல்வேறு கருத்துக்களிடையே கிடைத்த முத்து!

இராம.கி said...

அன்பிற்குரிய பெயரில்லாதவருக்கு,

என் இடுகையில் சுட்டிக் காட்டிய hancock வலைத்தளம் போய், நான் சொல்லிய இயக்கப் படத்தைப் பாருங்கள். (இன்னொரு பக்கம் ஒரு சேது இல்லாவிட்டால் இப்படி இடைப்பட்ட ஒரு நிலம் அழிந்து இருக்கமுடியாது.) தவிர National Institute of Oceanography, Goa வின் தரவுகளையும் தேடுங்கள். செயகரன் பொத்தகத்தையும் படியுங்கள். அதில் குறிப்பிடும் டேராடூன் ஆய்வகத்தின் கட்டுரைகள், ஆவணங்களையும் படியுங்கள். ஒருவேளை புலப்படும். தவிர மறவன்புலவு சச்சிதானந்தத்தோடும் தொடர்பு கொள்ளுங்கள். முடிந்தால் அந்த ஆதிசேதுப் பகுதிகளில் போய்வந்த மூத்த மீனவர்களிடம் பேசிப் பாருங்கள். இன்னும் முடியுமானால், நீங்களே அந்த ஆய்வில் ஈடுபடுங்கள். உங்கள் முன்முனைப்பில் ஏதேனும் நீங்கள் செய்தால் தான் உண்டு.

பொதுவாக இந்துமாக் கடல் பற்றிய விவரங்கள் அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை. (அட்லாண்டிக் பற்றி மிகுதியும், பசிபிக் பற்றி ஓரளவும் கிடைக்கும். ஆசியா பற்றிக் கிடைத்தால் அது சப்பான், சீனா, ஆத்திரேலியா, கொரியா பற்றிக் கிடைக்கும். இந்துமாக் கடல் ஆய்வுகள் குறைந்தே நடந்திருக்கின்றன. இது போன்ற ஆய்வைச் செய்ய இந்திய நடுவண் அரசு பணம் செலவழிப்பதில்லை. (அப்படிச் செய்திருந்தாலும் அந்த விவரங்களைப் பொதுவில் அவர்கள் வெளியிட மாட்டார்கள்; கமுக்கமாகக் கிடப்பார்கள். எல்லாமே அவர்களுக்கு secret தான். ஏதோ ஒரு ஆய்வகத்தின் கிடங்கில் இந்த விவரங்கள் பூட்டித் தூங்கிக் கிடக்கும்.)

தமிழக அரசோ, " கடல் ஆய்வா, அதன் வீசை என்ன விலை?" என்று கேட்கும். தமிழ்நாட்டு வரலாறு, வளங்கள், ஆய்வு ஊற்றுக்கள் பற்றித் தமிழக அரசு ஈடுபட்டதாய்க் குறைவான தரவுகளே உண்டு. தமிழக அரசு நெடுங் காலமாய் நடுவணரசின் ஏவலாளியாய் (person who carry out the orders), எழுத்தராய் (clerk), கணக்கராய் (accountant), வரிவாங்குபவராய் (tax collector) மட்டுமே இருந்திருக்கிறது. ஒர் அரசு என்ன செய்யவேண்டும் என்று அது மறந்து நெடுநாட்கள் ஆகிற்று. இல்லையென்றால் இவ்வளவு கையாலாகாதவர்களாய் இருப்பார்களா? தமிழக அரசை இந்த அளவிற்கு சாடுவது பற்றி என்னை மன்னியுங்கள்.

அன்புடன்,
இராம.கி.

Kiran said...

I really liked ur post, thanks for sharing. Keep writing. I discovered a good site for bloggers check out this www.blogadda.com, you can submit your blog there, you can get more auidence.

அறுமீன் கிளர்மதி said...

liberty எழுவுதி என்றால் liberation என்பது எழுவுதிமையா?

லிபரேசன்(liberation) என்பதை விடுவித்தல் என்று அழைக்கலாம் என நண்பி ஒருத்தர் மொழிந்துள்ளார். அவ்வாறாயின் Liberation Tigers of Tamil Eelam என்பதில் வரும் லிபரேசனை எவ்வாறு குறிக்கலாம்? ஒரே குழப்பமாக உள்ளது நண்பரே.

நீங்கள் உருவாக்கும், பரிந்துரைக்கும் சொற்கள் பாவிக்க விரும்பினாலும் அந்த சொற்களின் ஆங்கிலப் பரிமாணங்களிற்கு ஏற்ப உங்கள் சொற்களைக் கையாள என் அறிவிற்கு முடியவில்லை. இனிமேல் நீங்கள் புதிய சொற்களைப் பரிந்துரைக்கும்போது அவற்றுடன் தொடர்புடைய பிற ஆங்கிலச் சொற்களிற்கான நிகர்ச் சொற்களைத் தந்தால் மிகவும் உதவியாக இருக்கும்.


இவற்றிற்கான தமிழ் சொற்களையும் முடிந்தால் தாருங்கள் நண்பரே.

liberally - ?
liberalness - ?
liberalism - ?
liberal - எழுவரல்
liberty - எழுவுதி
liberation - ?

emancipation, autonomy, manumission, sovereignty, restraint, unrestraint,

subjucation, confinement, oppression, conquer, dictatorship, dictator

collectivist
independence - பந்திலாமை; தன்னாளுமை; விடுதலை

independent - ?
independency - ?
dependence - ?
dependent - ?
dependency - ?
servitude - ?
suppression - ?
logistics - ?
anarchism - ?
anarchy - ?
rebellion - ?
rebel - ?
republic - ?
democracy - சனநாயகம்
democratic ?
nationalism - ?
communism - ?
imperialism - ?
monarchy - ?
refrain -
freedom - பரிவுடைமை
free - பரிவு
freely - ?
unfree - ?
self-government - ?
self-realization - ?
constraint - ?
imprisonment - ?
privacy - ?
policy - ?
regsitered trade mark - ?
discrimination - ?
ethics - ?

gun - கவண்
hand gun - கைக்கவண்
rifle - துவக்கு, துப்பாக்கி
rocket - ஏவுகணை, உந்துகணை??
missile - ?
stun gun - ?
shot gun - ?
sniper - ?
pilot - ?வருதை என்றால் ஓர்டினரி(ordinary) என்று நீங்கள் கூறியுள்ளீர்கள், எனவே extraordinary என்பதை அதிவருதை என்பதா மிகுவருதை என்பதா இல்லை வேறைமாதிரி அழைப்பதா?

தகவல் என்பதற்கு ஆங்கிலத்தில் ஈடான சொல் என்ன?

இன்போர்மேசன்(Information) என்பதை உள்ளுருமை என்று அழைத்தால் இன்போர்ம்ட் சோர்சஸ்(Informed Sources) என்பதை உள்ளுருமை ஊற்றுக்கள் என்று அழைக்கலாமா? இல்லை தகவல் அறிந்த வட்டாரங்கள் என்று கூறுவதா?

கிளர்மதி அறுமீன் said...

liberty எழுவுதி என்றால் liberation என்பது எழுவுதிமையா?

லிபரேசன்(liberation) என்பதை விடுவித்தல் என்று அழைக்கலாம் என நண்பி ஒருத்தர் மொழிந்துள்ளார். அவ்வாறாயின் Liberation Tigers of Tamil Eelam என்பதில் வரும் லிபரேசனை எவ்வாறு குறிக்கலாம்? ஒரே குழப்பமாக உள்ளது நண்பரே.

நீங்கள் உருவாக்கும், பரிந்துரைக்கும் சொற்கள் பாவிக்க விரும்பினாலும் அந்த சொற்களின் ஆங்கிலப் பரிமாணங்களிற்கு ஏற்ப உங்கள் சொற்களைக் கையாள என் அறிவிற்கு முடியவில்லை. இனிமேல் நீங்கள் புதிய சொற்களைப் பரிந்துரைக்கும்போது அவற்றுடன் தொடர்புடைய பிற ஆங்கிலச் சொற்களிற்கான நிகர்ச் சொற்களைத் தந்தால் மிகவும் உதவியாக இருக்கும்.


இவற்றிற்கான தமிழ் சொற்களையும் முடிந்தால் தாருங்கள் நண்பரே.

liberally - ?
liberalness - ?
liberalism - ?
liberal - எழுவரல்
liberty - எழுவுதி
liberation - ?

emancipation, autonomy, manumission, sovereignty, restraint, unrestraint,

subjucation, confinement, oppression, conquer, dictatorship, dictator

collectivist
independence - பந்திலாமை; தன்னாளுமை; விடுதலை

independent - ?
independency - ?
dependence - ?
dependent - ?
dependency - ?
servitude - ?
suppression - ?
logistics - ?
anarchism - ?
anarchy - ?
rebellion - ?
rebel - ?
republic - ?
democracy - சனநாயகம்
democratic ?
nationalism - ?
communism - ?
imperialism - ?
monarchy - ?
refrain -
freedom - பரிவுடைமை
free - பரிவு
freely - ?
unfree - ?
self-government - ?
self-realization - ?
constraint - ?
imprisonment - ?
privacy - ?
policy - ?
regsitered trade mark - ?
discrimination - ?
ethics - ?

gun - கவண்
hand gun - கைக்கவண்
rifle - துவக்கு, துப்பாக்கி
rocket - ஏவுகணை, உந்துகணை??
missile - ?
stun gun - ?
shot gun - ?
sniper - ?
pilot - ?வருதை என்றால் ஓர்டினரி(ordinary) என்று நீங்கள் கூறியுள்ளீர்கள், எனவே extraordinary என்பதை அதிவருதை என்பதா மிகுவருதை என்பதா இல்லை வேறைமாதிரி அழைப்பதா?

தகவல் என்பதற்கு ஆங்கிலத்தில் ஈடான சொல் என்ன?

இன்போர்மேசன்(Information) என்பதை உள்ளுருமை என்று அழைத்தால் இன்போர்ம்ட் சோர்சஸ்(Informed Sources) என்பதை உள்ளுருமை ஊற்றுக்கள் என்று அழைக்கலாமா? இல்லை தகவல் அறிந்த வட்டாரங்கள் என்று கூறுவதா?

Anonymous said...

Dear Dr. Rama. Ki

The animations available on that site are not correct in the sense that they do not take into account all factors that influence changes on the landscape. There are three factors that control the alterations which occur on land, namely Plate Movement, Volcanic Activity and Sea Level Changes. Of these three, Volcanic Activity does not affect the area we are concerned in, but the animations available on that site take into account only the Sea Level Changes and does not consider Plate Movements in drawing these animations. Because of this reason these animations are not correct.

Mainly because of Plate Movements caused by the breaking up of the Indo-Australian tectonic plate, Sri Lanka has been moving away from South India at a rate of 1cm a year. Hence even 1000 years ago Sri Lanka would have been in a different position than it is today. And when considering that the time frame we are concerned with is lakhs of years in length I’m sure you will see the big picture.

Jaffna peninsula is made out of limestone and limestone as you know never forms above water (sea or a salty lake) this fact alone is enough proof that Jaffna peninsula was at one time below the sea. And taking into consideration that the whole peninsula is topped with sea sand which as you know also forms under sea, there can be no doubt whatsoever that Jaffna was at one time under the sea. And research in this sector has shown that the Jaffna peninsula came out of the sea only around 5000 years ago because of Plate Movements, before that time it was an ancient sea bed. The whole of Sri Lanka is mostly made out of the same geological rock kind except the Jaffna peninsula.

Dear sir I’m not trying to insult anyone here but most of Tamil authors do not take Plate Tectonics into account in any of their articles, books, etc. Everything these authors write about may have been true 30-40 years ago but that was before Plate Tectonics appeared on the scene in the 1970’s. Since that time every single concept regarding geology has been completely changed because of the introduction of Plate Tectonics. It is like when Sir Newton discovered Gravity and changed science forever.

Regards

??????????? ???? said...

Iramaki


Graham hancock is a pseudo archeologist. He has been exposed many times
http://en.wikipedia.org/wiki/Pseudoarchaeology

This site is a good expose of many pseudo archeologies at the moment including that of Hancock

http://www.hallofmaat.com/modules.php?name=Topics

Anonymous said...

ஐயா,
"நிலா" என்ற சொல் தூய தமிழ்ப் பெயரா ?

நன்றி.

FloraiPuyal said...

//
Graham hancock is a pseudo archeologist. He has been exposed many times
http://en.wikipedia.org/wiki/Pseudoarchaeology

This site is a good expose of many pseudo archeologies at the moment including that of Hancock

http://www.hallofmaat.com/modules.php?name=Topics
//

அரக்கனும், தமிழும், இராமர் சேதுவும் - 4 ல் இராமகி எழுதியது:
//
இந்த நிலங்கள் அழிந்ததை ஒரு இயக்கப் படமாக வலையில் போட்டிருந்தார்கள். அதன் சுட்டி கீழே.

http://www.grahamhancock.com/underworld/AshCF1.php?p=1

(மேலே உள்ள தளத்தில் அடுத்தடுத்து 5 பக்கங்கள் இருக்கும். வலைத்தளத்தில் சொல்லுவதை நான் ஏற்கிறேன் என்று பொருள் கொள்ளாதீர்கள். நான் சுட்டி கொடுத்தது அதில் வரும் இயக்கப் படத்திற்காகவே.)
//

குறை சொல்லும் முன் முழுமையாகப் படித்துவிட்டுச் சொல்லவும்.

ஹான்காக் பற்றி பார்த்ததும் இப்படி யாராவது வருவார்கள் என்று தெரிந்து தான் கூகிள் உலகத்தைப் பற்றி பின்னூட்டினேன்.

Vijayakumar Subburaj said...

> சேல் என்ற வேருக்கு சிவப்பு என்ற
> பொருளும், தொலைவு என்ற
> பொருளும் இருப்பதால்,
> சேயோன் என்ற சொல்லை இரண்டு
> வகையிலும் ஆளலாம்.

"நீல நிறம்" மற்றும் "அண்மை" என்னும் பொருள் தரும், "சேல்" என்ற சொலுக்கு எதிர் பதமாக அமைந்த, "நீல்" என்று ஒரு சொல் இருக்கிறதா? இதற்கும், சிவப்பு முதல் நீலம் வரையிலான கண்களால் காணும் நிறங்களுக்கும், இதே அலை வரிசையிலமைந்த ஒளிக்கும் ஏதாவது தொடர்புள்ளதா?

இது போல நிறங்களைக் குறிக்கும் வேறு ஏதேனும் தமிழ்ச் சொற்கள், தொலைவையும் குறிக்க பயன்படுத்தப் பட்டுள்ளனவா?

நன்றி.

FloraiPuyal said...

இக்கட்டுரையினைத் தொடரவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

FloraiPuyal said...

இத்தொடரை முடிக்க வேண்டும் என்று மீண்டும் அன்புடன் வேண்டுகிறேன்.