Monday, February 18, 2008

மீள்தொடங்கல்

தமிழகத்தில் தெரியும் அரசியல் தடுமாற்றம், ஈழம் பற்றிப் பேசுவதில் விரவிக் கிடக்கும் அச்சப் போக்கு, "என்னை ஒட்டாது இருந்தால் போதும்" என்னும் தாமரையிலைத் தண்ணீர்மை, தமிழகம் - ஈழம் பற்றிய வரலாற்றுத் தெளிவில்லாமை - இது போன்ற கருத்துகள் குறித்துத் துண்டும் துணுக்குமாய் நான் கேட்ட ஒரு உரையாடலும், இதன் முடிவில் தமிழர்போக்கு பற்றியிருந்த சில முன்னிகை(comment)களும் என் மனத்தை உறுத்திக் கொண்டு இருப்பவை.

முதலில் உரையாடலைப் படிப்போம். [உரையாடல் அதே சொற்களில் கீழே இல்லாவிட்டாலும், கிட்டத்தட்ட அமையுமாறும், அதே பொழுது படிக்கச் சுவை கருதியும், கொஞ்சம் எடுவித்துக் (edit) காட்டியிருக்கிறேன்.]
----------------------------------------------
இங்கே பாருங்க தம்பி, பாலைலே வானம் பார்க்குறது ..... மழைக்காகவும் இருக்கலாம், நாள்காட்டு, கோளுன்னு ராத்திரி வெளிச்சத்துக்காகவும் இருக்கலாம். நல்ல வேளையா, மழைக்கு வானம் பார்க்குற சோகம் இந்த வருசம் இல்லை; கொட்டோ கொட்டுன்னு கொட்டி, குளம், கம்மாய்ன்னு வெள்ளமாக் கிடக்கு. இருந்தாலும் வெல வாசிதான் கன்னாப் பின்னான்னு ஏறிக் கிடக்கு.

ஆமாண்ணே! பொன்னி வெல கிலோ இருவத்தஞ்சு சொல்றான். ஒரு நாளைக்கு நூறு ரூவா இருந்தாலும் ஒரு குடும்பம் ஒழுங்காச் சாப்பிட முடியாது போலெ. பக்கத்துலே ஏதாச்சும் வாங்கிவருவோம்னு பார்த்தா, பேருந்துக் காசு 4 ரூவா, 5 ரூவா இருக்கு. ஓர் இளநீ 8 ரூவா, 10 ரூவா விக்குது. நன்னாரி "சர்பத்" கூட, அஞ்சு ரூபாய்க்குக் குறையமாட்டேங்குறான். எங்கேயும் குடிக்கிறதுக்கு நல்ல தண்ணியை காணோம். தவிச்ச வாய்க்குத் தண்ணீர், மோர் குடுக்க, இப்ப யார் பந்தல் வைக்குறா, சொல்லுங்க? கடைசிலே எல்லாப் பயலுகளும் ஆளுக்கு ஒரு புட்டில் (bottle) தண்ணியைக் கையிலே தூக்கிட்டே அலையுறாய்ங்க..... "கலி காலத்துலே, காசுக்கு தண்ணி விப்பாக"ன்னு கேள்விப் பட்டிருக்கேன்; இப்ப அது உண்மையாப் போச்சு.

என்ன தம்பி, நாமளாவது அன்னாட வாழ்க்கையிலே அல்லாடறதைப் பத்திப் பேசிட்டிருக்கோம். தெற்கிலும் தெற்கே (புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.) உசிருக்குல்லே அல்லாடுறாக. அதப் பேச மாட்டேங்குறீயேப்பா?

பேசப் படாதுன்னு இல்லைண்ணே! நம்மளை யாரு பேச விடறாக? வேரோடே அவுகளை அழிச்சுப்புடத்தான் ஒரு கூட்டமே கருவங் கட்டிக்குனு அலையுதே! நம்மூர்க்காரவுகளும் இதுக்கு தொணையாயில்லெ போறாக! கத்தி, கபடா, தளவாடம்னு எல்லாம் இங்கேர்ந்து தான் போகுதுன்னு பரவலாச் சொல்லிக்கிடறாக.

என்னப்பா நாயம்? நம்ம பங்காளிகளைக் கொல்ல நாமளே துணை போகலாமா? கேக்க ஒரு நாதியில்லையா?

ஆமாண்ணே! தெக்கத்திகாரவுகளைப் பத்தி வெளிப்படையா யாருண்ணே நம்மூர்லே பேச முடியுது, சொல்லுங்க? ஒரு நாளிதழ், ஒரு தாளிகை, ஒரு தொலைக்காட்சி இப்படி ஏதாவது ஒண்ணு வெளிப்படையா நம்மூர்லே ஆதரிச்சுப் பேச முடியுதா? உடனே "தேசத் துரோகம்"னு சொல்லி அமத்தியர்றாய்ங்க. (எந்த அரபு நாட்டுலேயாவது பாலத்தீனியனைப் பத்திப் பேசமுடியாமல் இருக்க முடியுமான்னு யோசிச்சுப் பாருங்க. வடக்கு அயர்லாந்து பத்தி தெற்கு ஐரிசுக்கார பேசாம இருந்திருக்காகளா? போசுனியா பத்தி யுகோசுலாவுக்கார? ஏன் நம்ம மட்டும் இப்படிப் பேசமுடியாம இருக்கு?) தெற்கத்தியாட்கள் பேரைச் சொன்னாலே, அவுக நாட்டுப் பேரை எடுத்தாலே, ஒரு மாதிரியா இங்கே பார்க்குறாய்ங்களே? அது ஏன்? ஒரு விலங்கு பேரைச் சொன்னாலே "உள்ளே போடுறா"ன்னு பயமுறுத்துற அளவுக்கு, நம்முரைக் கெடுத்து வச்சிருக்காய்ங்களே, அது ஏன்?. இதுலே பேராயம், பாரதிய சனதா, அய்யா கழகம், அம்மா கழகம், மத்த கழகங்கள்னு பேருகள் தான் வேறேயெ தவிர, எல்லாரும் ஒரே குட்டையிலே ஊறுன மட்டைகளாட்டம் தான் நடந்துக்குறாய்ங்க. தமிழ், தமிழன்னு சொல்றதெல்லாம் ஒரு பாவலாத் தான். மனசுலே இருக்குறதை வெளியிலே சொல்ல முடியாம, மருகிக்கினே பயந்து சாகுறாய்ங்க. அவனவன் சம்பாதிச்சதைக் காப்பாத்திக்கோணுமில்லெ. இவுனுக போடுற கட்டியத்துலே (condition), அண்ணன், தம்பி, தவறிப் போனா, ஒப்பாரி வச்சு பாடப்புடாதாமே? "என்னடா இது, வாழ்றது நம்முர்லே தானா?"ன்னு சந்தேகம் நமக்கு அப்பப்ப வந்துருது; மொத்தத்துலே, நாடு போற போக்குச் சரியில்லெண்ணே.

ஆமா தம்பி, உடுத்துன துணியோடு எல்லாத்தையும் இழந்து ஓடியாரவுகளையும் "ஊடுருவல்"ன்னு சொல்லிடுறாய்ங்க. என்னய்யா இது, பொழைப்புக்கா ஓடியார்றாக, உசிரு நாளைக்கு நிலையில்லெ, "வானத்துலேர்ந்து குண்டு போட்டுக்குணே இருக்கான்"னு பதறியடிச்சு ஓடியார்றாக - அப்படின்னாலும் அவுகளை ஆதரிக்குறவுகளுக்கு இங்கே தடா, பொடா தான். சரி, ஓடியாறத்தான் வழி விடலை. கொல்லுறதுக்கு வழிபண்ணாம இருக்கலாமில்லியா? அதுவுமில்லியே? "இந்தாடா, மாப்புளே, இதையும் வச்சுக்க, எங்க பங்காளிகளை நீயே வெட்டிச் சாய்ச்சுரு, அப்பத்தான் ஒழுங்கா இருப்பாய்ங்க"ன்னு அரிவாள், கத்தியை எதிரிக்கு அணுக்கம் பண்ணிக் குடுத்தா எப்படி?

அண்ணே சரியாச் சொல்றீக! நம்மூர்லேர்ந்து சிங்களக்காரனுக்கு ஆயுதம் கொடுக்குறது கொஞ்சம் கூடச் சரியில்லேண்ணே. உடம்பிறந்தானுக்கு நாமளே உலை வெக்கலாமா?

நல்லாக் கேட்டுக்க தம்பி, சிங்களக்காரனுக்கு ஆயுதம் கொடுக்கறதை மட்டும் பார்த்தா நமக்கு நிலைமை புரியாது; இன்னும் ஆழப் போனாத்தான், சிக்கல்லே இருக்குற சூழ்க்குமம் புரியும். சிங்களத்துக்கும் இங்கேயும் ஏதோ ஒரு விட்ட குறை தொட்ட குறை இருக்கு போலிருக்கு. அங்கே தமிழரசு ஒண்ணு ஏற்படப்படாதுண்ணு தடுக்குறதுலே, நம்ம நடுவணரசு உறுதியாவே இருக்கு. நம்மளைப் போன்ற தமிழ்க்காரவுக மனசு நடுவணரசுக்கு மாறியிருக்குன்னு கூட அது உணர்ந்ததாத் தெரியலை.

அதெப்படிண்ணே! தமிழராகிய நாமளும் சேர்ந்தது தானே நம்ம நடுவணரசு? நம்ம உணர்வை உதறித் தள்ளிருமா?

பாக்குறதுக்கு நடுவணரசில் நாம சேர்ந்து இருக்குறோம்குறது ஒரு தோற்றம் தம்பி, உண்மையிலே நம்ம ஆட்கள் அங்கே எதுவும் மாறிச் சொல்லலை; நடுவணரசு கேட்கவும் இல்லை. இவய்ங்க ஒரு பக்கம் சில அமைச்சுகள்லெ பரிபாலனம் பண்ண, இன்னொரு பக்கம் நடுவணரசு எடுக்குற முடிவுகள் நம்ம எண்ணத்துக்கு மாறித்தான் இருக்கு. அதோட மட்டுமில்லை; இன்னொரு பக்கமும் பாரு, படகு எடுத்துக்கினு நம்மூர்க்கரவுக கடலுக்கு மீன்பிடிக்கப் போனா, "அங்கே புடி, இங்கே புடி"ன்னுனு சிங்களத்தான் தென் கடல்லேயும், கீழக் கடல்லேயும் குண்டு போடுறான். இந்தக் குண்டுமாரிலே மாட்டிக்கிணு கொஞ்சம் கொஞ்சமா நம்ம ஆளுகளும் செத்துப் போறாக. போனவாரம் கூட இப்படித்தான் ஓராளு போயிட்டாரு; என்னாச்சு, ஏதாச்சுன்னு கேக்கக் கூட தமிழக அரசலே யாரையும் காணோம். செய்தித்தாள்லேயும் எங்கேயோ ஒருமூலையிலே பத்தி போடுறான். கடைசிலே, "இந்தாங்கப்பா, ஒரு லெச்ச ரூவா வச்சுக்குங்க, இனிமே அந்தப்பக்கம் படகுலெ மீன்புடிக்கப் போகாதீக"ன்னு போதனை மட்டும் கொடுத்தர்றாக. "என்னய்யா இது, தெரிஞ்ச தொழில் மீன்புடிக்குறது மட்டும் தானே! அங்கே போகாதேன்னா, எப்படி? நம்மூருக்கும் அந்தக் கடல் உரிமைதானே? மீன்புடிக்காம, நாங்க உயிர்வாழ்றது எப்படி? ஆக, ஒண்ணும் நமக்குப் புரிய மாட்டேங்குது. எந்த நாட்டுலே நாம இருக்கோம்? நாம தமிழ் தான் பேசுறமா, இல்ல, சிங்களம் பேசுறமா?"

சரியாச் சொன்னீக அண்ணே! வணிகம் அது இதுன்னு சொல்லி நம்மூர்க் கப்பல் நம்முர்த் துறைகள்லே அணையலாம்னு, கடலுக்குள்ளே நம்ம அரசே வாய்க்கால் வெட்டப் போனா, "அய்யோ, எங்க சாமி போட்ட பாலத்தை வெட்டுறாய்ங்களேன்னு" முட்டாப் பயக சிலர் நம்மூர்லேயே ஒப்பாரி வைக்குறாய்ங்களே? அதையும் கவனிங்க.

அதே ஏன் கேக்குறே, தம்பி, வெவரங் கெட்ட பயலுகளுக்குச் சேதுன்னா பொருள்னு கூட வெளங்கலெ! வடக்கத்திக்காரன் இராமர் அது இதுன்னு சொன்னான்னா, இவய்ங்களும் ஆமாஞ்சாமியா? நம்மூர் இயற்கை நமக்குல்லே புரிபடோ ணும். "சேதுன்னா தமிழ்லே பாலமில்லைப்பா; கரை; சேற்றாலே சேர்த்தது சேது. கம்மாய்க்கரை மாதிரி கிழக்குக் கடலுக்குச் சேது ஒரு கரை; சேதுக்கரைக்குத் தெக்கெ இருக்குறது தென்கடல்"னு சொல்லியும் விளங்கலே. அந்தக் கரை வழியா பத்தாயிரம் வருசத்துக்கும் முன்னாடி, விலங்கு, மனுசனெல்லாம் ஊர்ந்து, நடந்து போய் தெற்கே இருக்குற தீவை ரொப்பியிருக்காய்ங்கப்பா, ஒரு காலத்துலே அது பழந்தமிழ் நாடுய்யா. அதுலே ஒரு பகுதி ஏழ்பனை நாடு, இன்னைய யாழ்ப்பாணம். எப்படிப் பார்த்தாலும் அந்தத் தீவு நம்ம ஊருக்கு நெருக்கமய்யா. இன்னைக்கி எப்படியோ அது மாறிப் போயிருச்சு. சிங்களனும் தமிழனும் சேர்ந்திருக்குறாப்புலே ஆயிப் போச்சு. பின்னாடிச் சண்டையும் ஆயிப்போச்சு. இதெயெல்லாம் விளங்கிக்காம, இராமர்தான் பாலங் கட்டுனார்னா, தீவுக்குள்ளே அவருக்கு முன்னாடி விலங்குகளும், மக்களும் எப்படிப் போனாங்க, பாலம் கட்டியா? - ன்னு ஒரு பய கேக்க மாட்டேங்குறான். இல்லெ, யானை, பூனையெல்லாம் பத்தாயிரம், இருபதாயிரம் வருசத்துக்கு முன்னாடி, உப்புத் தண்ணியிலே நீச்சலடிச்சுப் போய்ச் சேர்ந்துதா?

சேதுங்குறது ஒரு இயற்கை மேடுய்யா; நீரோட போக்குக்குத் தக்க மாதிரி அதன் மட்டம் கூடும், குறையும். கால மாற்றத்துலே ஏற்கனவே இருந்த கரையையும் (=சேதுவையும்) மீறி கொஞ்சங் கொஞ்சமா கடல் மட்டம் இப்ப உயர்ந்து போச்சு; இயற்கையான மேடும் (=சேதுவும்) கூட இப்பக் கடலுக்குள்ளே முழுகிப் போச்சு. "சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்" னு அந்தக் கடல்மேட்டுக்கு மேலே இன்னும் கரையை உயர்த்தி வீதி போடுங்கப்பான்னு பாரதி பாடினானே? இந்தப் பயலுகளுக்கு அதாவது புரியுதா? "ஆகா, பாட்டுக்கு ஒரு புலவன் பாரதி"ன்னு மேடையிலே பேசுனா மட்டும் போதுமா? அடப் புரியாத பயலுகளா, இராமயணக் கதைக்கும் இந்தச் சேதுவுக்கும் தொடர்பில்லைன்னு தலைலே அடிச்சிக்கினு சொன்னாலும் கேக்குறாப்புலே தெரியலையே. வேணுமின்னாச் சாமியை நல்லாக் கும்பிடுங்கப்பா! அதுக்காக, இல்லாத கதையெல்லாம் சாமி மேலே இட்டுக் கட்டாதீக.

ஆமாண்ணே! இந்த அடிப்படையைப் புரிஞ்சுக்காம, உச்ச நய மன்றம் (supreme court) வரைக்கும் வழக்குப் போடுறாய்ங்க! முட்டாப் பயலுகன்னு இவய்ங்களைச் சொல்லாம, வேறே யாரைச் சொல்லுறது போங்க? தேர்தலுக்காகப் பயந்துக்குணு பேராயக் கட்சிக்காரங்களும் உண்மையை இழுத்து மூடிருவாய்ங்க போலேருக்கே; மருத்துவரய்யா வேறெ, கூட இப்பச் சேர்ந்துக் கிட்டாரு.

ஆமா தம்பி, யாரோ சொன்னாய்ங்க! அவரவருக்கு அவரவர் அரசியல்னு. இது ஒருபக்கம் இருக்க, இன்னொரு பக்கம் இதுதான் சாக்குன்னு சிங்களக்காரன் தன்னூர்லேர்ந்து 30 இடங்களைப் பட்டியல் போட்டு "இதெல்லாம் இராமாயணத்தோட தொடர்புள்ள இடங்கள்"னு குழம்புன குட்டையில மீன்புடிக்கிறான். இங்கெ சில கேணப்பயல்களும் அதெ எடுத்துக்கிட்டு கேக்காய்ங்க: "பார்த்தீகளா, நாங்க சொன்னது சரியாப் போச்சு, இராமர், சீதையோட பாதங்கள் இங்கெல்லாம் பட்டிருக்கு; அப்பேர்க்கொத்த பாலத்தை வெட்டலாமா?" கூறு கெட்ட நம்ம பயல்களும் இதெக் கேட்டுக்கிட்டு இருக்காய்ங்க. அட மடப்பயலுகளா! சிங்களனுக்குத் தேவை - வாய்க்கால் அமையக் கூடாது; அப்படி அமைஞ்சா, கொழும்புத் துறைமுகம் சுத்தமாப் படுத்துரும்; அவன் பொருளாதாரம் பெரிசா அடிபட்டுரும்; தூத்துக்குடித் துறைமுகம் இதுக்கு மாறா ஓங்கி எழுந்திரும்; அதனாலெ, அதெ நிறுத்தணும்னு சொல்லி "போடுறா அனுமாரு"ன்னு குட்டிக் கரணமே அடிக்குறான். அவன் சூழ்ச்சி இவய்ங்களுக்குப் புரியலை. பொருளாதாரம் பேசுறாய்ங்க பொருளாதாரம், ரொம்ப வக்கணையா.....

ஆமாண்ணே, போற போக்கைப் பார்த்தால், மொத்தத்துலே சேதுக் கால்வாய்த் திட்டம் இனிமேப் பிசிபிசுத்துரும் போலேருக்கு. ஒருபய கண்டுக்க மாட்டான்னு நினைக்கேன்.

ஆமா தம்பி, தமிழன் தான் ஏமாளியாச்சே. "ஊரு ரெண்டானாக் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்"னு சொல்லுவாக. இந்தக் கழகங்கள் தான் இங்கே ரெண்டாகிக் கிடக்கே, அய்யா சொன்னா, அம்மாவுக்கு ஆகலை; அம்மா சொன்னா அய்யாவுக்கு ஆகலை. அப்புறம் என்ன? எல்லாக் கூத்தாடிகளும் தனக்கு என்ன தேறும்னு கும்பல் போட்டு கூடி வர்றானுக. இவுக சண்டை என்னைக்கி நிக்குதோ, அன்னைக்குத் தான் நமக்கு விடியல்னு ஆகிப் போச்சு. அதுக்குப் பொறவுதான் ஊருலகமும் நம்ம மதிக்கும். பொதுவா, தமிழ், தமிழன்னாலே இந்தியாவுலே, உலகத்துலே, ஏகப்பட்ட பேருக்கு இளக்காரமாய்த்தான் இருக்கு. அதுக்கு முதற் காரணம் நமக்குப் பெருமிதமில்லே; நம்ம வரலாறு நமக்கே தெரியலை; எதுக்கெடுத்தாலும் உணர்ச்சி வசப்படுறோம். கட்சி அரசியல்லே வெட்டுக் குத்துன்னு ரொம்பவே சண்டையடிச்சுக்குறோம். இத்தனை நாள் பெரியாருக்கு அப்புறமும் எது மூட நம்பிக்கை, எது பின்பற்ற வேண்டியதுன்னு தெரிஞ்சுக்கிறதில்லெ. பாழாப் போன திரையுலகுலே தெரியுற நிழழை எல்லாம் நிலைன்னு நினச்சு, ஆகா, ஓகோன்னு குதிக்குறோம். நம்மில் பலருக்கும் ஊறிப்போன சாதியுணர்வும் தடுக்குது. தமிழன்குற உணர்வாக்கம் இன்னும் சரியா அமையலெ. இந்தியன்குற அடையாளத்துக்கும், தமிழ்ன்குற அடையாளத்துக்கும் உள்ள உறவைப் புரிஞ்சுக்கலே; ஒண்ணைப் பேசுனா, இன்னொண்ணு அதுக்கு எதிருன்னு ஊரெல்லாம் பரப்புரை நடக்குது. மொத்தத்துலே தமிழன்குற முகவரியை மறந்துருங்கிறாக.
-------------------------

இந்த உரையாடலின் கடைசியில் வரும் முன்னிகைகள் என்னுள்ளும் ஆழ்ந்து இருப்பவையே. தமிழரின் தற்போதைய நிலைக்கு உள்ளிருக்கும் முரண்பாடுகளே காரணம் என்று நான் எண்ணுகிறேன். அதோடு, வெளிமுரணைக் காட்டிலும் உள்முரண் ஆழ்ந்து கவனிக்கப் பட வேண்டியது என்று இயங்கியலில் (dialectics) சொல்லுவார்கள். தமிழரின் இன்றைய அவலம் பற்றிய சிந்தனைகள் எழும்போதெல்லாம், தமிழ் - தமிழர் என்ற பெருமிதத்தைக் கூட்டும் வகையில் எனக்குத் தெரிந்ததை அவ்வப்போது என் பதிவில் எழுதிக் கொண்டுதான் வருகிறேன். எது மூட நம்பிக்கை, எது பின்பற்ற வேண்டியது என்றும் எனக்குத் தெரிந்த வகையில் தெளிவுறுத்தி வருகிறேன். கூடவே நம் வரலாறு பற்றியும் சொல்லி வருகிறேன். இருந்தாலும் இப்படிச் சொல்லுவதைத் தடுத்த நிறுத்தும் முயற்சி, ஒரு சிலரால் தொடர்ந்து வலைப்பதிவுலகில் செய்யப் பட்டே வருகிறது.

நடுவில் கொஞ்ச காலம் ஒரு மாதிரி சலிப்பு வந்ததிலும், ஊர்சுற்றியதிலும், என் பதிவு தொய்ந்து போனது. அப்படித் தொய்ந்தது சரியில்லை என்ற எழுச்சியாலும், "செய்தக்க செய்யாமையானும் கெடும்" என்ற எண்ணத்தாலும், கிளர்ந்து, மீண்டும் ஒருமித்து எழுத வேண்டும் என்று முனைந்த போது, தமிழ்மண நிர்வாகத்திடமிருந்து நாள் காட்டச் சொல்லி ஓர் அழைப்பு வந்தது. அதையே ஒரு தூண்டுகோலாய் எடுத்துக் கொண்டு மீண்டும் இப்பொழுது எழுதத் தொடங்குகிறேன்.

சென்ற காரிக்கிழமை (= சனிக்கிழமை) மாலை நேரத்தில் மக்கள் தொலைக்காட்சியில் தேனிசைச் செல்லப்பாவின் இசை நிகழ்ச்சியைத் தற்செயலாகக் கொஞ்ச நேரம் கேட்டேன். பிடித்திருந்தது. அவரைப் போன்ற பாடகர்கள் பெருகவேண்டும். அந்தப் பாடல்வரிகளாவது நமக்கு உறைக்கட்டும்.

உலகத் தமிழினமே எண்ணிப்பார் - நீ
உறங்கினால் வரலாற்றில்
யாருன்னை மன்னிப்பார்?
................

- தேனிசைச் செல்லாப்பா பாடிய ஒரு பாடலின் தொடக்க வரிகள்.. (இந்தப் பாடலை முழுக்கவும் mp3 வடிவில் யாரேனும் வலையில் ஏற்ற முடியுமோ?)

அன்புடன்,
இராம.கி.

24 comments:

Anonymous said...

//உலகத் தமிழினமே எண்ணிப்பார் - நீ
உறங்கினால் வரலாற்றில்
யாருன்னை மன்னிப்பார்? //



"உலகத் தமிழினமே எண்ணிப் பார்,நீ உறங்கினால் வரலாற்றில் யாருன்னை மன்னிப்பார்?"

அப்படியா?

கேட்க நியாயமாகத்தான் இருக்கிறது!

சிந்திக்கத் தொடங்கும்போதே இதன் அபத்தம் பிடரியில் அடிக்கிறது.

தமிழினம் ஏதோ எதையும் அசட்டை செய்யாது தூங்கிக்கிடப்பதாகப் பாடப்படுகிறது.

தமிழ் பேசும் மக்களின் உரிமைகளைப் பறித்தும்,அவர்களைக் கொடிய சட்டங்கள் போட்டு ஒடுக்கியும்,மிகவும் கேவலமான சினிமாவின் மூலம் பாலியல் வதைக்குள் தள்ளியும் அவர்களது ஆன்ம வலுவை ஒடுக்கும் அதிகாரத்திலுள்ள கட்சிகள்-அரசுகள்-இயக்கங்கள் எங்கே மக்களைச் சுயமாகச் சிந்திக்க விடுகின்றன?

இப்பாடல் வரிகளை ஆதிக்கவாதிகளை நோக்கி எழுதியிருக்க வேண்டும்.

"உலகத் தமிழினத் தலைவர்களே எண்ணிப்பாருங்கள்,நீங்கள் உறங்கினால் வரலாற்றில் யாருங்களை மனிப்பார்?"என்றிருக்க வேண்டும்.

எனினும், உலகத் தமிழினத் தலைவர்கள் எப்போதும் தூங்காதிருந்தே தமது பதிவிக்கு-பணத்துக்கு ஆபத்தில்லாது காலத்தை ஓட்டுகிறார்கள்!இங்கே,தத்தமது நலனுக்குகந்த மாதிரித் தமிழ் மக்களை ஒடுக்கியபடி.இதில் சாதாரணத் தமிழ் மக்களை நோக்கி நோவதில் அர்த்தமுண்டொ?



இங்ஙனம்,
கந்தையா இருகுநாதன்.

ILA (a) இளா said...

நட்சத்திர வாழ்த்துக்கள்!

வசந்தன்(Vasanthan) said...

மீண்டும் ஒருமுறை உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இது நல்ல கிழமையாக அமையும்.

மணியன் said...

நட்சத்திரமாக தாங்கள் இந்த வாரம் எழுதுவது தமிழ்மணத்திற்கு பெருமை சேர்க்கும். மீள்தொடங்கல் தங்களுக்கு மட்டுமல்ல, தமிழன்னைக்கும் என்பதை உங்கள் பதிவுகள் கட்டியம் கூறும். காலத்தால் மறந்தவற்றையும்/மறைந்தவற்றையும் உங்கள் எழுத்துக்கள் மீட்டுவருகின்றன.
வாழ்த்துகளுடன்,
மணியன்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

முதலில் நட்சத்திர வாழ்த்துக்களைச் சொல்லிக் கொள்கிறேன் இராம.கி ஐயா!
விண்மீன் வாரத்தில் தமிழ் இசைப் பதிவொன்றினை நேயர் விருப்பமாக் கேட்கலாமா? :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//சேதுன்னா தமிழ்லே பாலமில்லைப்பா; கரை; சேற்றாலே சேர்த்தது சேது//

//"சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்" னு அந்தக் கடல்மேட்டுக்கு மேலே இன்னும் கரையை உயர்த்தி வீதி போடுங்கப்பான்னு பாரதி பாடினானே?//

சூப்பர்! :-)

//அதுலே ஒரு பகுதி ஏழ்பனை நாடு, இன்னைய யாழ்ப்பாணம்//

ஓ...ஏழ்பனை தான் யாழ்ப்பாணம் ஆயிற்றா ஐயா?
யாழிசை பாணர்கள் நாடென்பதால் யாழ்ப்பாணம் என்றல்லவா எண்ணியிருந்தேன்?

ஈழத்தின் ஊர்ப் பெயர் விளக்கங்கள் பற்றி நீங்க சொன்னா இன்னும் நல்லா இருக்கும்! ஈழம் என்பதற்கே பொருள் என்ன என்று உங்களைக் கேட்க முன்பே எண்ணி இருந்தேன்!

தென்றல் said...

நட்சத்திர வாழ்த்துக்கள்,ஐயா!

Subbiah Veerappan said...

உங்கள் வரவு நல்வரவாகுக!
வாழ்த்துக்கள் சகோதரரே!

கோவை சிபி said...

வாழ்த்துகள்.

வெற்றி said...

அன்பின் இராம.கி ஐயா,
முதலில் நட்சத்திர வார வாழ்த்துக்கள்.

இந்தக் கிழமை முழுவதும் நல்ல அரிய பல சங்கதிகளை உங்களின் பதிவுகள் மூலம் அறியக் கூடியதாக இருக்கும் என்பதில் மிக்க மகிழ்ச்சி.

/* ஒரு காலத்துலே அது பழந்தமிழ் நாடுய்யா. அதுலே ஒரு பகுதி ஏழ்பனை நாடு, இன்னைய யாழ்ப்பாணம். */

ஆகா! இது வரை நான் அறிந்திராத சங்கதி. மிக்க நன்றி ஐயா.

நண்பர் கண்ணபிரான் ரவிசங்கர் சொன்னது போல பண்டைய ஈழத்து வரலாறுகளை உங்கள் மூலம் அறிய நானும் மிகவும் ஆவலாக உள்ளேன்.

/* தமிழரின் தற்போதைய நிலைக்கு உள்ளிருக்கும் முரண்பாடுகளே காரணம் என்று நான் எண்ணுகிறேன் */

மிகவும் சரியாகச் சொன்னீர்கள் ஐயா.
எனது கருத்தும் இதுவே. உட்பகையுள்ள இனம் வீழ்ச்சியடையும் என்பதை ஐயன் வள்ளுவன் அன்றே இடித்துரைத்தும், செவிடன் காதில் ஊதின சங்கொலி போல இன்று வரை அந்தப் பிழையைத் திருத்தாமல் இருக்கிறோம் என்பதுதான் இன்னும் வேதனையானது.

/* தேனிசைச் செல்லாப்பா பாடிய ஒரு பாடலின் தொடக்க வரிகள்.. (இந்தப் பாடலை முழுக்கவும் mp3 வடிவில் யாரேனும் வலையில் ஏற்ற முடியுமோ?) */

இந்தப் பாட்டு என்னிடம் கைவசம் இல்லை. ஏதோ ஒரு இணையத்தளத்தில் கேட்ட ஞாபகம். அத் தளத்தின் முகவரி எம்பிட்டால் தெரியப்படுத்துறேன் ஐயா.

இது உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் எழுதின பாட்டென்று நினைக்கிறேன். சரியாகத் தெரியாது.

enRenRum-anbudan.BALA said...

இராம.கி ஐயா,
நட்சத்திர வாழ்த்துக்கள்!

//
ஆமா தம்பி, தமிழன் தான் ஏமாளியாச்சே. "ஊரு ரெண்டானாக் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்"னு சொல்லுவாக. இந்தக் கழகங்கள் தான் இங்கே ரெண்டாகிக் கிடக்கே, அய்யா சொன்னா, அம்மாவுக்கு ஆகலை; அம்மா சொன்னா அய்யாவுக்கு ஆகலை. அப்புறம் என்ன? எல்லாக் கூத்தாடிகளும் தனக்கு என்ன தேறும்னு கும்பல் போட்டு கூடி வர்றானுக. இவுக சண்டை என்னைக்கி நிக்குதோ, அன்னைக்குத் தான் நமக்கு விடியல்னு ஆகிப் போச்சு. அதுக்குப் பொறவுதான் ஊருலகமும் நம்ம மதிக்கும். பொதுவா, தமிழ், தமிழன்னாலே இந்தியாவுலே, உலகத்துலே, ஏகப்பட்ட பேருக்கு இளக்காரமாய்த்தான் இருக்கு. அதுக்கு முதற் காரணம் நமக்குப் பெருமிதமில்லே; நம்ம வரலாறு நமக்கே தெரியலை; எதுக்கெடுத்தாலும் உணர்ச்சி வசப்படுறோம். கட்சி அரசியல்லே வெட்டுக் குத்துன்னு ரொம்பவே சண்டையடிச்சுக்குறோம்.
//
மிகச் சரியாக அவதானிக்கப்பட்ட நிலைமை !!!

Anonymous said...

//மீண்டும் ஒருமித்து எழுத வேண்டும்//

எடுத்த காரியம் யாவும்
வெற்றியுடன் நிறைவேறட்டும்.
உள்ளத்தில் உறுதி நிலைத்திருக்கட்டும்.
நற்செய்திகள் பல
நமைவந்து சேரட்டும்.
___/\___

நா. கணேசன் said...

கலைஞரின் சொற்பொழிவு - முரசொலி விருதுவிழாவில் கேட்டீர்களா?
சேது திட்டம் பற்றி நிறையக் கதைத்திருக்கிறார்.

அன்புடன்,
நா. கணேசன்

நா. கணேசன் said...

// உலகத் தமிழினமே எண்ணிப்பார் - நீ
உறங்கினால் வரலாற்றில்
யாருன்னை மன்னிப்பார்?
................

- தேனிசைச் செல்லாப்பா பாடிய ஒரு பாடலின் தொடக்க வரிகள்.. (இந்தப் பாடலை முழுக்கவும் mp3 வடிவில் யாரேனும் வலையில் ஏற்ற முடியுமோ?) //


தேனிசையைச் செவிமாந்த ஓரிடம்:
http://enathublogs.blogspot.com/2008/02/blog-post_17.html

நா. கணேசன்

குமரன் (Kumaran) said...

வணக்கம் இராம.கி. ஐயா. எந்தவித சுணக்கமும் இன்றி தொடர்ந்து நீங்கள் எழுதி எங்கள் அறிவை மேம்படுத்த வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். மிக்க நன்றி.

Unknown said...

அன்பிற்கினிய இராமகி ஐயா, வெகுநாட்கள் கழித்து உங்கள் எழுத்தில் எழுந்து நனைந்தேன்.

சேது விளக்கம், ஏழ்பனை, எது மூடநம்பிக்கை போன்றவை வெகு அருமை.

ஏழ்பனை என்றால் ஏழு பனை என்று பொருளா?

யாழ்பானம் என்று இருசுழி ன தான் வரவேண்டுமா?

தமிழ்மணம் உங்களால் ஒருவாரம் உற்சவம் காணப்போகிறதோ!

அன்புடன் புகாரி

nayanan said...

ஐயா,

தமிழக, இந்திய அசியல்வாதிகள்,
வைதீக பவுத்தக் கூட்டணி போன்ற பலரும் தொடர் துரோகங்களை தமிழ் மக்களுக்கு செய்து வருகிறார்கள் என்பது வெட்ட் வெளிச்சம்.

தமிழக இந்திய வாழ் மக்கள் இங்கே இருக்ககூடிய கொடுஞ்சட்டங்களுக்கும்
பேய் பிசாசுகளுக்கும் அஞ்ச வேண்டி யிருந்தாலும், **சட்டங்களுக்கு உட்படாதவைகளை**
பேசுவதற்கும் எழுதுவதற்கும் கூட
தமிழ் மக்கள் ஏன் தயங்க வேண்டும் என்ற கேள்வி என்னை வாட்டுவதுண்டு.

தமிழ்நாட்டான் பயப்படுகிறான் என்பது
ஞாயமான ஒன்றாக எனக்குப் பட்ட போதிலும் தமிழ் நாட்டில இருந்து் புலம்பெயர்ந்த மக்களும், இணையத்தில் உலவுகின்ற மக்களும்
ஏன் சட்டத்துக்குட்பட்ட, ஈழம் குறித்த எளிய உரையாட்டு்களுக்குக் கூட தயங்கிறார்கள் என்பது விளங்கமாட்டேன்கிறது.

நான் கூட பல நாள்கள் ஞாயமான அச்சம் என்றுதான் எண்ணியிருந்தேன்.

ஆனால், என் கருத்து தற்போது அப்படியில்லை.

இணையத்தில் தமிழர்களுக்கு எதிரானவர்கள் சிலர் இருந்த போதிலும், அவர்களை மாற்ற முடியாது என்ற போதிலும், ஏனையோர் சில வெகு சாதாரண மற்றும் அக்கறை கூடக் காட்டுவதில்லை என்பது யோசிக்க வேண்டிய விதயம்.
சிலர் காட்டுகிறார்கள்; நானும் காண்கிறேன். ஆனால் அது ஒரு துளி.

இவர்கள் அஞ்சுபவர்கள் அல்லர். கோழைகளும் அல்லர். பெரும்பாலோனோர் தமிழக அரசியல்வாதிகளைப் போன்ற வேடதாரிகளாகவே எனக்குப் படுகின்றனர்.

இதை நான் எழுதுவதற்கு மன்னிக்க வேண்டும். ஆனால் இணையக் குமுகமும் ஒரு வேடதாரிக் கழகமாகவே எனக்குப் படுகிறது.

இணைய நண்பர்கள் என் மேல் வருத்தமுற்றால் பரவாயில்லை.

அன்புடன்
நாக.இளங்கோவன்

இராம.கி said...

அன்பிற்குரிய கந்தையா இரகுநாதன்,

"உலகத் தமிழினமே" என்ற பாடலை முழுக்கக் கேட்டுப்பாருங்கள். கேட்டபின் தான் அதன் முதலிரு வரிகளைக் குறிப்பிட்டேன். எனக்கு அந்தப் பாடல் அவத்தமாகத் தெரியவில்லை.

திரு. காசி அனந்தனின் அந்தப்பாடல் தமிழினத் தலைவர்களையும் கேள்வி கேட்கிறது. முழுப்பாடலையும் இங்கே எழுதி அலசுவது சொல்லவந்த பொருளில் இருந்து நம்மை வெகுதொலைவு இட்டுச் செல்லும்.

புரிந்து கொள்ளுவீர்கள் என்று எண்ணுகிறேன்.

இராம.கி said...

அன்பிற்குரிய இளா,

வாழ்த்துக்களுக்கு நன்றி

அன்பிற்குரிய வசந்தன்,

உங்கள் கனிவிற்கு நன்றி. வன்னியில் இருக்கும் வெண்ணாங்கு பற்றி உங்கள் பதிவில் எழுதியிருந்தீர்கள். அது வெள் நாகுவாய் (வெள் நாகு >வெண்ணாகு>வெண்ணாங்கு) இருந்தால் பெங்களூரு பற்றிய என் பதிவைத் திரும்பப் படியுங்கள். திரு. நாக. கணேசன் வெள்நாகுவின் இன்னொரு பெயரான வெங்கால் என்ற மரத்தின் பெயரால் தான் வெங்காலூர் (பெங்களூரு) என்ற பெயர் ஏற்பட்டதென்று சொல்லுவார். நான் அவரில் இருந்து வேறுபட்டு என் கருத்தைச் சொல்லியிருந்தேன். இருந்தாலும் வெங்கால் - வெள் நாகு மரம் பற்றிய செய்திகள் அந்தப் பகுதியில் இருக்கும்.

அன்பிற்குரிய மணியன்,

உங்கள் கனிவிற்கு நன்றி. என்னால் முடிந்ததை நான் செய்கிறேன். அதன் பயன், பயனில்லாமையைப் படிப்போர் தான் சொல்ல வேண்டும்.

அன்பிற்குரிய கண்ணபிரான்,

உங்கள் வாழ்த்திற்கு நன்றி. தமிழிசை பற்றிய ஆய்வில் கொஞ்ச காலம் ஈடுபடாமல் இருக்கிறேன். இந்த ஒரு கிழமையில் முடியுமா என்று தெரியவில்லை.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய கண்ணபிரான்,

ஏழ்பனை நாடு என்பது பழம்பாண்டி நாட்டின் நாற்பத்தொன்பது நாடுகளில் ஒரு தொகுதி. நாடு என்றவுடன் இந்தக் காலப் பொருள் கொள்ளாதீர்கள். அது ஒரு கோட்டம் போலத் தான். காட்டாக, தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி போகும் வழியில் உள்ள வல்லநாடு, பட்டுக்கோட்டைப் பகுதியில் இருக்கும் ஒரத்த நாடு போன்றவை "நாடு"களையா குறிக்கின்றன? இல்லை. "நாடு" என்ற சொல்லின் பொருள் காலத்திற்கு ஏற்ப மாறி வந்திருக்கிறது. அதைப் புரிந்து கொண்டால் தான் நம் வரலாற்றை விளங்கிக் கொள்ள முடியும்.

பழம் பாண்டிநாட்டை அடையாளம் காணுவதில் சிக்கல் இன்னும் இருக்கிறது. ஆனாலும் அதில் இன்றைய இலங்கைத் தீவும் சேர்ந்தது என்றே பலரும் சொல்லுகிறார்கள். (முதல் கடற்கோளுக்குப் பின்னால் சோழனிடம் இருந்து பாண்டியன் பிரித்துச் சேர்த்துக் கொண்ட இடம் முத்தூர்க் கூற்றம். அது இன்றைய அறந்தாங்கி, பட்டுக் கோட்டை, ஆவுடையார் கோவில், தொண்டி, மீமிசல் போன்றவை சேர்ந்தது. இந்த ஊர்கள் எங்கள் ஊருக்கு நெருங்கி இருப்பவை. எங்கள் பகுதியும் புதுக்கோட்டை மாவட்டமும் முற்றிலும் பாண்டிநாடும் இல்லை; சோழநாடும் இல்லை. நாங்கள் எல்லைப்புறத்தார். மாறி மாறி எங்களை இரு வேந்தர்களும் பந்தாடியிருக்கிறார்கள்.

முத்தூர்க் கூற்றம் இன்றைய யாழ்ப்பாணத்திற்கு அருகில் உள்ளது. பனை மரம் யாழ்ப்பாணத்தை ஒட்டிய பகுதிகளில் அடிப்படையான ஒரு மரம். இந்தப் பக்கம் இன்றையத் தமிழ்நாட்டில் பாலைப் பகுதியான பழைய இராமநாதபுரம், பழைய திருநெல்வேலி மாவட்டங்களிலும் அந்த மரம் பெரிதும் உள்ளது. பனையின் தாக்கம் தமிழருக்குப் பெருத்ததே.

யாழ்ப் பாணர் நிறைந்த ஊர் யாழ்ப்பாணம் என்பதெல்லாம் பொருந்தச் சொல்லும் பிற்கால உத்தி. தமிழில் இயல்பான ஊர்ப்பெயர்கள் அப்படி அமையா.

இராமர் சேது பற்றிய என் தொடர் இன்னும் முடிபடாமல் கிடக்கிறது. திரு. குமரன் கூட அதை முடிக்கச் சொல்லிக் கேட்டிருந்தார். அதில் பழந்தமிழகம் பற்றி எழுத எண்ணியுள்ளேன்; செய்வேன்.

ஈழம் என்பதும் இலங்கை என்பதும் ஈல்தல் = பிரித்தல் என்ற வினையில் எழுந்த சொற்களே. பெருநிலத்தில் இருந்து ஆறு, கடல் நீரோட்டங்கள் ஈல்த்துப் பிறந்த நிலங்கள். ஈழம்/இலங்கை இரண்டிற்கும் ஒரே வேர்ச்ச்சொல் தான். இதனோடு தொடர்புடைய சொற்கள் ஈர்/இரண்டு; ஈட்டி, இல்லம் போன்றவை. இன்னும் பல சொற்கள் உள்ளன. அவற்றையெல்லாம் ஒரு தொகுதியாகப் பார்த்தால் ஈல்தல் என்ற வினையில் கீழ் அவை ஒன்றுபடுவதை உணர முடியும்.

இலங்கை என்பது இன்றைக்குத் தென்கடலில் நாம் காணும் தீவுக்கு மட்டும் பெயரல்ல. தென்பெண்ணை ஆற்றில் ஈல்த்து பிறந்த ஒரு தீவு கூட மாவிலங்கை (=பெரிய இலங்கை) என்று சொல்லப்படும். அந்த அரசனைப் பற்றிப் பத்துப்பாட்டில் ஒரு தனிப்பாட்டே இருக்கிறது. அதே பொருளில் அரித்து (=அறுத்து)ப் பிறந்தது அரங்கம். திருவரங்கமும் அதே கருத்தீடு தான்.

ஈழம் என்ற சொல்லின் பொருள் island என்பதே. ஒரு விதப்புச் சொல்லே இங்கு பொதுமைப் பொருள் கொண்டது. மேலை மொழிகளில் வரும் island போன்ற சொல்லையும் சகரம் இல்லாமல் ஐலண்/ஈலண் என்பதைப் பலுக்கிப் பாருங்கள், ஈழம் என்ற சொல்லுக்கும் தீவு என்ற பொருளுக்கும் உள்ள பொருத்தம் சட்டென்று புரியும். தமிழிய மொழிகளுக்கும், இந்தையிரோப்பிய மொழிகளுக்கும் ஏதோ ஒரு காலத்தில் தொடர்பு இருந்திருக்க வேண்டும் என்று நான் சொல்லுவதில் ஈழம் என்ற சொல்லும் ஒரு பகுதியே.

ஈழம் என்னும் சொல் பற்றிச் சுருக்கமாய் என்னுடைய ஏதோ ஒரு கட்டுரைகளில் சொல்லியிருக்கிறேன். இப்பொழுது நினைவில்லை.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய தென்றல், சுப்பைய்யா, கோவை சிபி,

உங்கள் வாழ்த்திற்கு நன்றி.

அன்பிற்குரிய வெற்றி,

உங்கள் கருத்திற்கு நன்றி. ஈழம் பற்றிய செய்திகளை அவ்வப்போது சொல்லி வருகிறேன். இனியும் சொல்லுவேன்.

அன்பிற்குரிய என்றென்றும் அன்புடன் பாலா,

வருகைக்கு நன்றி. அவதானிப்பு இருந்து என்ன பயன் சொல்லுங்கள். அவலம் தீர வழியைக் காணோம்.

அன்பிற்குரிய பெயரில்லாதவருக்கு,

உங்கள் வாழ்த்திற்கு நன்றி

அன்புடன்,
இராம.கி

இராம.கி said...

அன்பிற்குரிய கணேசன்.

கலைஞரின் சொற்பொழிவைக் கேட்கவில்லை; நாளிதழில் படித்ததோடு சரி. முடிவில் திட்டம் நடப்பது போல் தெரியவில்லை.

தேனிசைச் செல்லாப்பா பாடலுக்கு சுட்டி கொடுத்ததற்கு நன்றி

அன்பிற்குரிய குமரன்,

எனக்குத் தெரிந்ததை எழுதுகிறேன். கொஞ்சமாவது படிப்போருக்குப் பயன்பட்டால் சரி.

அன்பிற்குரிய புகாரி,

நெடுநாள் கழித்துத் தொடர்பு கொள்ளுகிறோம். ஏழ்பனை என்பது ஏழ் பனை நாடுகளின் சுருக்கம். நாற்பத்தொன்பது நாடுகளில் இது ஒரு ஏழு நிலத் தொகுதி. மேலே ஒரு பின்னூட்டில் கொடுத்திருப்பதைப் படியுங்கள்.

யாழ்ப்பாணம் என்று இன்று மூன்று சுழி தான் போடுகிறார்கள்.

சொல் திரிவுகளில் நகரம்/னகரம் போன்றவை ணகரமாக மாற வழியுண்டு. எது நடந்தது என்பதை ஆய்ந்து தான் காண முடியும்.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய நயனன்,

அச்சம் நம்மைப் பீடித்திருப்பதால் தான் எதையும் செய்ய இயலா நிலையில் இருக்கிறோம். "தேசத் துரோகம்" என்று சிலர் சொல்லுவது அணுகுண்டு போடுவது மாதிரி. அவ்வளவுதான், கப்சிப் என்று நாம் ஆகிவிடுவோம் அல்லவா? அதனால் பயன்படுத்துகிறார்கள். அவர்களுக்குத் தேவை நாம் வாய் மூடிக் கொண்டிருப்பதே.

இணையக் குமுகம் வேயதாரிகள் என்று சொல்லுவது ஒரு தேவையில்லாத பொதுமைப்படுத்தல் என்று நான் எண்ணுகிறேன். எல்லாருமே வேயதாரிகள் என்று சொல்ல முடியாது. வேயதாரிகள் இயங்குவதை இணையக் குமுகம் எளிதாக்குகிறது என்று வேண்டுமானால் சொல்லலாம்.

(வேயம் என்ற சொல், மேயம்>மேஷம்>மேடம் என்ற திரிவைப் போல் தமிழ் - சங்கதம் - மீண்டும் தமிழ் ஆகிவந்த தோற்றம். ஒன்றைப் போல் இன்னொன்றைக் காட்டும் வகையில் முகமூடியை வேய்ந்து கொள்ளுவது வேயம். தெய்யம் போன்ற சாக்கையர் கூத்திலும், கதகளி போன்ற கூத்திலும் வேயம் கட்டிக் கொள்ளுகிறார்களே, அதை ஓர்ந்து பாருங்கள். சங்கதக்காரர்கள் வேயத்தை வேஷம் என்பார்கள். நாம் மூலம் புரியாமல் அதை வேடம் என்று திரும்ப ஆக்கிக் கொண்டு இது தமிழில்லையோ என்று தொலைக்கிறோம். இப்படித் தொலைத்த தமிழ்ச்சொற்கள் மிகப்பல. முயன்றால் நம் தமிழ்ச்சொல்லை மீட்கலாம்.)

அன்புடன்,
இராம.கி.

shansnrmp said...

தங்களின் கட்டுரைகளுக்கு நன்றி ..சிலப்பதிகாரத்தில் புகார் கடற்கரையில் நிகழ்ந்த , கோவலன் மாதவி உரையாடலை
தேடி அலைந்த எனக்கு உங்கள் வலை சற்றே இதமாளிகிறது .
கோவலன் மாதவி உரையாடலை பதிவு செய்தால் மிக்க நன்றி
உடையவனாக இருப்பேன் ஐயா..
அன்புடன்
சிவசண்முகம்