இராசிச் சிதறலும் உருவகப் பெயர்களும்
(முன்னே சிங்கை இணையம் வலையிதழில் நான் எழுதிவந்த காலங்கள் தொடரின் ஐந்தாம் அதிகாரத்தை சில மாதங்கள் முன் இங்கு வெளியிட்டேன். வானியலோடு தொடர்பு உள்ள இந்தத் தொடரை வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தொடருவதாகச் சொன்னேன். இப்பொழுது ஆறாம் அதிகாரம்.)
கோள்களின் நகர்வைக் கண்டும், அது நம் வாழ்வை என்ன செய்யும் என்றும், படபடத்துத் தவிக்கும் ஒரு குமுகாயம் நம்மூரைப் போல வேறெங்கேனும் உலகில் இருக்குமா என்பது ஒரு பெருங்கேள்வியே! ஆண்டு முழுக்கக் காரி (சனி)ப் பெயர்ச்சி, குருப் பெயர்ச்சி, ஏறகை (இராகு) - கீழதை (கேது)ப் பெயர்ச்சி, ஏறகைக் காலம் (இராகு காலம்), யம கண்டம், புறத்தோயக் காலம் (ப்ரதோஷ காலம்), செவ்வாய்த் தோயம் (செவ்வாய் தோஷம்) என ஒவ்வொன்றிலும் நமக்கு நடக்கக் கூடிய நல்லது கெட்டது என்ன என்று விளைவு அறியத் துடித்துத் தடுமாறிக் கொண்டே இருக்கிறோம்.
இத்தனைக்கும் "இறைவன் நம் உளம் புகுந்த பின்பு கோள்ப் பெயர்ச்சிகள் நம்மை என்னப்பா செய்யமுடியும்? அவற்றை எல்லாம் நல்லாக வையுங்கள்" என்று திருஞான சம்பந்தர் கோளறு பதிகம் பாடுகிறார். (நல்லுதல் என்பது இங்கே நல்லது அல்ல; விளக்கை நல்லாய் வை என்றால் அணைத்து வை என்று பொருள்; சிவகங்கை/புதுக்கோட்டைப் பக்கம் அப்படிச் சொல்லுவார்கள். இந்த வினையை தெலுங்கு மொழி கூடத் தொடர்ச்சியாய்க் கையாளுகிறது; நாம் தொலைத்து விட்டு நிற்கிறோம்; நல்லுதலின் திரிபான நல்லித்தல்>நலித்தல்>நலிதல் மட்டும் இன்றும் தமிழில் இருக்கிறது. நல்லுதல் என்ற பழைய வினை அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஒரு சில வட்டார வழக்குகளில் மட்டும் நிற்கிறது. நல்ல மரம் என்ற சொல் கருப்பு நிற மரம் என்று ஒரு சில இடங்களில் பொருள் கொள்ளும். இங்கே "கோள்களை ஒதுக்கி அந்தச் சிந்தனையை அறுத்து அணைத்து வையுங்கள்" என்றே பொருள் கொள்ள வேண்டும்).
வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி
சனிபாம்பு இரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே!
இந்தப் பாடலைக் கேட்ட பிறகும், ஓதிய பிறகும், கூடச் சோதியரை நம்மில் பலர் நாடிக் கொண்டே இருக்கிறோம்; ஊரெங்கும் சோதியர்கள் பலன் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்; முடிவில் சோதியம் என்பது நல்ல வருமானம் உள்ள ஒரு தொழிலாக இந்தக் காலத்தில் மாறிவிட்டது; இப்படி நான் சொல்லுவதற்கு நண்பர்கள் அதிர வேண்டாம்; சோதியத்திற்குள் நான் நுழையவில்லை. ஆனால் வானியலுக்கும் சோதியத்திற்கும் இடையில் உள்ள விளிம்பு வரை வந்து உங்களோடு உரையாட முற்படுகிறேன்.
இன்று நேற்று இல்லாமல் எல்லா நாகரிகங்களும், ஏன் தமிழ் நாகரிகமும் கூட, விடிய விடிய விண்ணை உற்றுப் பார்த்தே வந்திருக்கின்றன. கோள்களின் நகர்வுகளும் அவற்றின் பின்புலங்களும் தமிழனை எப்பொழுதும் ஈர்த்திருக்கின்றன. இந்தக் கோள்ப் பெயர்ச்சிகள் எல்லாம் கிட்டத்தட்ட அசையாமல் இருக்கும் (?) பின்புலங்களை வைத்தே அளக்கப் படுகின்றன. அப்படி அளக்கும் போது ஒரு குறிப்பிட்ட விண்மீனைப் பற்றுகோளாக்கி மற்ற கோள்களின் நகர்வுகளைப் பார்க்கிறோம். புவியின் தன்னுருட்டிலும் வலையத்திலும் பல்லாயிரக் கணக்கான விண்மீன்களை நாம் 360 பாகைச் சுற்றில் பின்புலங்களாகப் பார்க்கிறோம். இந்த 360 பாகைச் சுற்றை 12 பகுதிகளாய்ப் பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் 30 பாகையாக்கி. அந்த 30 பாகைக்குள் முன்னின்று தெரிந்து அடையாளம் காண வைப்பது போல ஒரு சில விண்மீன் கூட்டங்களை மட்டும் உருவகம் செய்து வானை நம் வசப் படுத்திக் கொள்ளுகிறோம். நாகரிகத்திற்கு நாகரிகம் இந்த உருவகங்கள் மாறுபடலாம்; ஆனாலும் என்னவோ, நம்மூர் உருவகம் நாவலந்தீவு எங்கணும் பரவி மேலைநாடுகள் வரை சென்று கிடப்பது ஒரு வியப்புத்தான்.
முதலில் வரும் இராசி "மேயம்" என்று சொல்லப் படுகிறது.
இந்த 360 பாகைச் சுற்றின் முதற் பகுதி மேய இராசி; இதைத் தமிழில் இன்றைக்கு மேழம் என்றும், வடமொழியில் மேஷம் என்றும் சொல்லுகிறோம். மேயத்தை ஒட்டிய சொற்களுக்கு எல்லாம் அடித்தளமும் தமிழே தான். இருந்தாலும் பலருக்கு இது புரிவதில்லை; இது போன்ற சொற்களை வடமொழியோ என்று நம்மில் பலர் விவரம் புரியாமல் தடுமாறி எண்ணிக் கொண்டிருக்கிறோம்.
"மேஏஏஎ......" என்ற ஆட்டின் கனைப்பு ஒலியை, விலங்காண்டி மாந்தன் தன் காதில் கேட்டுக் கேட்டு, அதையே தானும் குரைத்துக் காட்டி, அந்த ஒலியையே அந்த விலங்கின் பெயராகவும் சூட்டித் தன் எண்ணத்தில் அவன் ஏற்றி இருக்க வேண்டும். ஏனென்றால் இன்றைக்கு இருக்கும் ஒரு சில சொற்கள் அப்படி ஒரு வேரை நமக்கு உணர்த்துகின்றன. அதே போல ம்........யே>ஞ்.......யே என்ற சற்று மூக்கொலி கலந்த கனைப்பு ஒலியும் ஆட்டையே குறித்திருக்க வேண்டும். அந்த மூக்கொலி கலந்த கனைப்பு ஒலியையையும் அப்படியே இயம்பிக் காட்டி நாளடைவில் அதே ஒலியாலே யேடு/யாடு/ஆடு என்ற சொல்லாலும் தமிழ் மாந்தன் இந்த விலங்கைக் குறிக்கத் தொடங்கியிருக்க வேண்டும். ஏற்கனவே என் கட்டுரைகளில் முன்னர் சொன்ன மாடும், மானும் போல, ஆடும் தன் ஊன் காரணமாய் தமிழ் மாந்தன் வாழ்வில் தனியிடம் பெற்றது. ஊன்களின் தாக்கம் ஆதி மனிதன் வாழ்வில் மிக அதிகம். அதை மறுப்பதும், மரக்கறித் தாக்கத்தை அழுத்திச் சொல்வதும், நம்மை மாந்தவியற் புரிதலில் வெகுதூரம் கொண்டு செல்லாது.
மேய்>மை>மய் என்பது இன்றும் ஆட்டைக் குறிக்கும் சொற்கள். ஆட்டின் நிறம் கூடப் பின்னாளில் யே>யா என்றே குறிக்கப் பட்டது. மொழி ஓரளவு வளர்ச்சியடைந்த நிலையில் "மா" வென ஒலிக்கும் விலங்கை மாடு என்றது போல், யே>யா வென ஒலிக்கும் விலங்கும் யாடு என்று பின்னாளில் அழைக்கப் பட்டது போலும். மாட்டூன் என்பது மாட்டு இறைச்சியைக் குறிப்பது போல், மையூன் என்பதும் மைந்நிணம் என்பதும் ஆட்டிறைச்சியைக் குறிக்கும். மைவிடை என்பது ஆட்டை மாட்டோ டு பொருத்திக் கருவிலங்கு என்று ஏற்றிச் சொன்ன சொல். மேய் எனும் விலங்கு செய்யும் தொழில் மேய்கை அல்லது மேயம் அல்லது மேயல். மேய்கின்ற புல்லும் தமிழில் மேயல் என்றே கூட அழைக்கப் பட்டது. மேய்கை என்னும் தொழிற் பெயரை மேய்தல் என்றும் சொல்லுவது உண்டு. தானாய் மேயாத ஆடுகளை மேய வைக்கும் செயல் மேய்த்தல்; இந்தப் பிறவினைச் சொல் ஆடு எனும் விலங்கைத் தமிழ் மாந்தன் உடமித்தவுடன் (domestication) வந்திருக்கக் கூடிய சொல்; மேய்த்தலைச் செய்ய வைப்பவன் மேய்ப்பன் (கிறித்தவத்தில் பெரிதும் அழுத்தப்படும் சொல்.); மேய்த்தல் என்பதின் பேச்சு வழக்கு மேய்ச்சல்; ஆட்டிற்கு இன்னொரு பெயர் மேய்த்தம்; அது இயல்பான விதிகளின் படி மேய்த்திரம் என்று வடமொழிக்குப் பாய்ந்து ஆட்டுக்கடாவைக் குறிக்கும்.
மேய்த்தம் மேய்ச்சம் என்று திரிந்து (பேச்சு என்ற சொல் பாஷையாய் ஆனது போல்) ஷகரம் பெற்று மேஷமும் ஆகி வடமொழிக்குள் நிலைக்கும்; மேய்ந்தம்>மேண்டம் என்று திரிந்த சொல்லும் ஆட்டையே குறிக்கும். மேய்த்தை>மோத்தை என்பதும் ஆட்டுக்கடா, வெள்ளாட்டுக் கடாவைக் குறிக்கும். (கடா என்பது கூட goat என்ற திரிவில் ஆட்டையே ஆங்கிலத்தில் குறிக்கிறது.) ஆடு என்பது கருப்பாக இருந்து முதலில் விதப்புப் பொருளைக் குறித்து பின் பொதுமையான பின்னர் வெள்ளாடு என்ற முரண் சொல்லும் (கடலை எண்ணெய் போல) ஏற்றுக் கொள்ளப் படுகிறது. மேய்த்தம்>மேத்தம்>மேதம் என்பது கொழுகொழு என்ற ஆட்டிறைச்சியைக் குறிக்கும். [மேத்தம்>மேதம் என்பது mutton என்று மேலை மொழிகளில் திரியும். மேயைப் போல இன்னொரு விலங்கொலி "குக் குக்" என்னும் கோழியொலி. குக்கிடும் ஒலியால் குக்கம் என்றும் குக்குடம் என்றும் கோழியைக் குறிக்கும் தமிழ்ச் சொற்கள் எழுந்தன. குக்குகின்ற பறவை குக்கம் என்றே குறிக்கப் பெற்று இன்று மேலை மொழியில் chicken என்று சொல்லப் படுகிறது. (கோழிக்கறி சாப்பிடும் பழக்கம் பெரும்பாலும் தென்னிந்தியாவில் இருந்தே உலகெங்கும் பரவியிருக்க வேண்டும் என்று விலங்கு ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.) இப்படி ஊனைக் குறிக்கும் சொற்களான மேத்தமும், குக்கமும் எழுந்த கதை மிக இயற்கையானது]. வாயைப்பயம் வாழைப்பழம் ஆனது போல (நம்மில் பலரும் என்னவோ இதைத் தலை கீழாய் உணர்ந்து கொண்டிருக்கிறோம்.) மேயம் என்பது மேழம் என்று மீத் திருத்தமும் பெறும். முடிவில் மற்ற தமிழிய மொழிகளில் ழகரம் டகரமாய் ஒலிக்கப் பெறும்போது மேடம் என்றும் விரிவு கொள்ளும்.
இவ்வளவு விரிவான சொல் விளக்கம் ஏன் சொல்லுகிறேன் என்றால் மேயம் என்ற சொல்லுக்கு தமிழ் அடிப்படை இருந்தால் மட்டுமே இத்துணை பொருட்பாட்டு அகலத்தைக் காட்ட முடியும் என்பதை உணர்த்துவதற்குத் தான். நம்மில் ஏனோ பலரும் இதைப் புரிந்து கொள்ள மறுத்து வடமொழியிலேயே விளக்கம் தேடிக் கொண்டு இருக்கிறோம். அந்த அளவிற்கு நம்மொழியின் வேரை நம்மிடையே காண மறுத்து, மனத்தால் அடிமைப் பட்டிருக்கிறோம்.
மேய் என்ற கனைப்பு ஒலியைப் போல யே>யா என்ற கனைப்பு ஒலியில் இருந்த பிறந்த சொல்லே யேடு>யாடு>ஆடு என்ற வளர்ச்சி; மற்ற தமிழிய மொழிகளில் யேடு>ஏடு>ஏடி என்றெல்லாம் இந்தச் சொல் விரியும். ஏடு என்ற அடியில் இருந்து பிறந்த சொல்லே ஏடையன்>எடையன்>இடையன் என்ற சொல். இது போல யாட்டில் இருந்து பிறந்த சொல்லே யாதவன் என்ற வடசொல்லும். தமிழகத்திலும், நாவலந்தீவிலும் வேறு இடங்களில் இருக்கும் பல்வேறு குடிமக்களின் முன்னாள் தொழிற்பெயர்கள் தமிழ் மூலம் கொண்டவையாகவே இருக்கின்றன. (அதையெல்லாம் சொன்னால் கேட்கப் பொறுமை இருக்குமோ? நாவலந்தீவின் இன்னொரு அடிப்படையைக் காண எத்தனை பேர் முன்வருகிறோம்? :-))
இந்த மேய இராசி தமிழன் பார்வையில் நம்மைச் சுற்றியுள்ள பின்புலத்தின் முதல் இராசி; விண்ணில் தெரியும் இந்தக் குறிப்பிட்ட பகுதிக்குள் முன்னொளிரும் சில விண்மீன்களின் தொகுதி தமிழ் மாந்தனுக்கு ஆடு என்னும் விலங்கை நினைவுறுத்தி இருக்கிறது. எனவே இதை மேய இராசி என்றான். இதெல்லாம் ஒரு அடையாளம் என்ற அளவில் நாம் புரிந்து கொள்ளவேண்டும். முன்பு உள்ள அதிகாரங்களில் மேழ விழு பற்றிச் சொன்னதை இங்கு நினைவு கூருங்கள். மேழத்தில் ஒவ்வொரு ஆண்டையும் தொடங்கும் முறையில் அது ஆட்டை என்றும் சங்க இலக்கியங்களில் சொல்லப் பட்டது; ஆட்டு என்ற சொல்லுள் முக்கொலி நுழைந்து ஆண்டு என்றும் நம் வழக்கில் ஆனது; மேலை மொழிகளில் மூக்கொலி இன்னும் கூடி annum என்று சொல்லுவதும் இதே பொருளில் தான். (உடனே தமிழ் ஆண்டுத் தொடக்கம் சித்திரையா, தையா என்ற புதிருக்குள் போகவேண்டாம். அதைப் பற்றி இன்னொரு முறை பார்க்கலாம்.) மேலை மொழிகளில் இருக்கும் வானியற் சொற்கள் பலவும் நம் நாகரிகத்தோடு தொடர்பு கொண்டுள்ளன. ஆழப் பயின்றால் அவற்றை நாம் அடையாளம் காணலாம்.
அடுத்தது விடை:
வலயச் சுற்றில் அடுத்த பகுதி விடை இராசி; இதை விடவ/இடப இராசி என்று தமிழிலும், வடமொழிப் படுத்தி (வ்)ரிஷப இராசி என்றும் சொல்லுகிறோம். விடை என்பது எருது. எப்படிக் காளை என்பது மாட்டின் ஆணைக் குறிக்கிறதோ, அது போல எருது என்பதும் மாட்டின் ஆணையே குறிக்கிறது. எருது என்பதை ஏறு என்றும் குறிக்கிறோம்; ஏலுதல் என்பது உயர்தல்; ஏலேலோ ஐலசா என்று கூறுகிறோம் இல்லையா? எருதின் கழுத்தின் மேல் உயர்ந்து கிடக்கும் உறுப்பு எருத்து என்றும், பிடரி (பிடிக்க முடியாதது) என்றும், அது திமிரிக் கிடப்பதால் திமில் என்றும் அழைக்கப் படுகிறது. உயர்ந்து, ஏல்ந்து கிடக்கும் அந்த உறுப்பே இந்தியக் காளைக்கு இன்னும் ஒரு சிறப்புப் பெயரைக் கொடுக்கிறது. ஏல்து>ஏர்து>எருது. இந்தப் பெயரும் விதப்பில் இருந்து பொதுமைக்கு வந்த பெயர்தான். எருது வேளாண்மைக்குப் பெரிதும் பயன்பட்ட பிறகு, குறிஞ்சி மற்றும் முல்லை நிலையைக் குறிப்பதற்கு காட்டெருது என்றே சொல்லுகிறோம். (எழுந்து, உயர்ந்து முன்வந்து முதலில் இருக்கும் கலிப்பாவின் ஓர் உறுப்புக்கு எருத்து என்றே பெயர். அந்த எருத்து பின்னால் தொகையறா, பல்லவி என்ற பெயரில் மாறி இன்றைய சீர்த்தனைப் பாடல்களிலும் திரைப்பாடல்களிலும் இருக்கிறது. சீர்த்தனை, திரைப்பாடல் வடிவங்களின் அடியூற்று கலிப்பாவில் இருக்கிறது.)
விலங்கினங்களில் ஆண் உயிரி பெண்ணுயிரியைக் காட்டிலும் விடைத்துப் பெருத்து இருப்பதாலேயே விடை என்ற சொல் காளையைக் குறிக்க எழுந்தது. வேட்டைக் குமுகாயத்தில் விடைத்திருக்கும் விலங்குகள், குறிப்பாக ஆண் விலங்குகள், அவற்றின் ஊன் பெருக்கிற்காகவே கொல்லப் பட்டன. பொலிந்து இருந்த காளை பொலி காளை, அதாவது பருத்த காளை; இப்படி காளைகளுக்கு பருத்த என்ற பொருள்படும் அடைகள் தமிழில் பெரிதும் உள்ளன. விடை என்பது அப்படி ஒரு பெயரடை; விடை மா என்ற பெயருக்கு, பருத்த விலங்கு என்ற பொருள்; பழந் தமிழ்மாந்தனின் ஊன்விலங்குகளில் தலையாயது விடை மா; எனவே தான் மாட்டு மந்தைகளை அவன் வளர்த்தான். விடை மா என்ற தமிழ்ச் சொல் தமிழிய மொழிகளில் விடைமா> விடமா> விடமம்>விடவம்>விடபம் என்று ஆகும்; வடமொழியில் வழக்கம் போல் ரகரம் உள்வந்து ஷகரத் திரிபு பெற்று (வ்)ரிஷபம் என்றும் ஆகும்.
மூன்றாவது ஆடவை:
வலயச் சுற்றின் மூன்றாம் பகுதி ஆடவை; இது ஆடு+அவ்வை>ஆடவ்வை>ஆடவை என்று பிரியும். ஆடூஉவும் (ஆணும்) மகடூஉவும் (பெண்ணும்) புணர்ந்திருக்கும் இரட்டை உருவகம் ஆடவை. இந்தப் பகுதியில் பழந் தமிழ் மாந்தன் பார்த்த சில குறிப்பிட்ட விண்மீன்களின் தொகுதி ஒரு ஆணும் பெண்ணும் புணர்ந்திருப்பது போல் தோற்றம் அளித்திருக்கின்றன. புணருதல் என்ற பொருளை உணர்த்தும் இன்னொரு தமிழ்ச் சொல் முயவுதல்/ முயக்குதல் /முயத்துதல் என்று வரும்; இந்தச் சொல்லுக்குத் தழுவுதல் என்ற பொருள் உண்டு. "போழப்படா முயக்கு" என்ற வள்ளுவர் அடி பற்றி முன்னரே சொல்லியிருக்கிறேன். முயத்துதலின் பெயர்ச்சொல் ஆன முயத்துனம் என்பது புணர்ச்சி என்ற பொருளைக் கொள்ளும். முயத்துனத்தை மைத்துனம் ஆக்கி மிதுனம் என்று வடமொழி திரிக்கும். முயத்தன் மைத்தன் ஆகிப் பின் பேச்சு வழக்கில் மச்சானும் ஆவான் (முயத்துதற்கு/புணருதற்கு உரியவன் மச்சான், அவ்வளவு தான்). இது போலவே மைத்துனி/மச்சினி போன்ற சொற்கள் எழும்; மயலுதல் என்பதும் கலவிக்கு இணங்குதலே. (புணர்ச்சி செய்யும் ஆண்/பெண் உறுப்புக்களும் புள் என்னும் வேரால் உருவாகிப் புகர மெய்யிலேயே குறிக்கப் படுவதுண்டு. ஆனால் பெரும்பாலான தமிழ் அகரமுதலிகளில் தான் அவை பதிவு செய்யப் படாமலே போயின. :-))
மேலே ஆள் அல்லது ஆணைக் குறிக்கும் ஆடு என்ற சொல் இன்றைக்கும் தெலுங்கில் வழக்கில் இருக்கிறது. ஆள்+து>ஆடு. இது போல அவ்வை என்பது பொதுவாகப் பெண்ணைக் குறிக்கும் சொல். இது கன்னடத்தில் விரவியது. அவ்வை என்ற பாடினியைப் பற்றி நமக்கு எல்லாம் தெரியும்; அவள் இயற்பெயர் நமக்கு எங்கு தேடினும் தெரியாமற் போயிற்று. அவ்வை என்ற சொல்லை "அவை" என்று தொகுத்து பெண்பாற் பெயர்களில் ஈற்றாகப் பயன்படுத்துவதும் உண்டு. காட்டு: குந்தவை;
இன்னும் உள்ள ஒன்பது பகுதிகளின் பெயர்கள் பற்றி அடுத்துப் பார்ப்பதற்கு முன் கோள்கள் இராசிகளில் வந்து சேருகிற நிலையும் கார்காலம் தொடங்கும் காலத்தையும் பற்றிய பரிபாடலின் ஒரு பகுதியைப் பார்ப்போமா? ஓவ்வொரு முறையும் பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் பாடலைக் கொடுத்து இந்தத் தொடரில் ஒரு அதிகாரத்தை முடிப்பது எனக்கு வழக்கம்; இந்த முறை மாறுபட்டுத் தருகிறேன்.
"விரி கதிர் மதியமொடு வியல்விசும்பு புணர்ப்ப,
எரி, சடை, எழில்வேழம் தலையெனக் கீழ் இருந்து
தெரு இடைப்படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள்
உருகெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர,
வருடையைப் படிமகன் வாய்ப்ப, பொருள்தெரி
புந்தி மிதுனம் பொருந்த, புலர்விடியல்
அங்கி உயர் நிற்ப, அந்தணன் பங்குவின்
இல்லத் துணைக்கு உப்பால் எய்த, இறை யமன்
வில்லின் கடை மகரம் மேவ, பாம்பு ஒல்லை
மதியம் மறைய, வரு நாளில் வாய்ந்த
பொதியில் முனிவன் புரை வரைக் கீறி
மிதுனம் அடைய, விரிகதிர் வேனில்
எதிர்வரவு மாரி இயைக என இவ் ஆற்றால்
புரைகெழு சையம் பொழிமழை தாழ
நெரிதரூஉம் வையைப் புனல்"
இந்தப் பாடலில் வரும் வானியல் நிகழ்வு கி.மு.161 ஆம் ஆண்டு, கலியாண்டு 2941, பிரமாதி ஆவணித்திங்கள் 12 ஆம் நா: வியாழக்கிழமை, சதுர்த்தசி திதி அவிட்ட நாள்காட்டு கூடிய நாள் என்று சொல்லுவதாக 1969 ல் வெளிவந்த சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக பரிபாடற் பதிப்பு கூறுகிறது. நாம் வேறொரு நாளில் இதைப் பற்றிப் பேசுவோம்.
இப்போதைக்கு வரட்டுங்களா!
அன்புடன்,
இராம.கி.
5 comments:
//சில விண்மீன்களின் தொகுதி தமிழ் மாந்தனுக்கு ஆடு என்னும் விலங்கை நினைவுறுத்தி இருக்கிறது. எனவே இதை மேய இராசி என்றான். இதெல்லாம் ஒரு அடையாளம் என்ற அளவில் நாம் புரிந்து கொள்ளவேண்டும்//
பண்டைத் தமிழனின் அறிவியலத்தான் நாய் பெற்ற தெங்கம்பழம் போல யாரோ எடுத்து, "இந்த இராசிக்கு நாலு காலு, புட்டத்தத் தூக்கி எந்திரிக்கும்னு" 'வெளக்கஞ்' சொல்லி சோதிய சாத்திரம் உருட்டி இருக்காய்ங்கெ. அவெய்ங்கெக் கிட்ட வெவரம் கேட்டா நமக்கு என்னெக்கி நல்ல காலம்.
ஐயா உங்கள் கட்டுரைகளால் தமிழுக்கு நல்ல காலம்தான்.
நண்றி
> ஆடூஉவும் (ஆணும்) மகடூஉவும் (பெண்ணும்)
தமிழில் ஆடூஉ, மகடூஉ என்பன முறையே ஆணையும் பெண்ணையும் குறிக்கும், ஆனால் தெலுங்கில் மகடூ ( மகா(ண்)டு ) என்பது ஆணையும் ஆ(ண்)ட(வாளு) என்பது பெண்களையும் குறிக்கும்.
சிறுவயதில் தமிழில் என்னைக் குழப்பிய வார்த்தைகளுள் இவையும் அடங்கும்.
:)
அய்யா , நீண்ட நாட்களின் பின் தங்கள் பதிவைக் கண்டதில் மகிழ்ச்சி.
முயத்தன் பற்றிய விளக்கம் அருளி அய்யாவின் மைத்துனன் பற்றிய
கட்டுரையில் குழம்பி இருந்த எனக்குத் தெளிவைக் கொடுத்தது.
குக்கன், மேத்தம் விளக்கங்கள் அருமை. அடிக்கடி எழுதுங்க!
பிரதாப்
Sir, Your website is more informative and very useful. Thanks for your time and effort to share your knowledge.
Sorry to write in English.
Sir,
Your website is very informative and very useful.
Thanks to spend your time and effort to share your knowledge with us.
-Ashok
Post a Comment