அண்மையில் "இராவணனை அரக்கன் என்று சொல்லும் புறநானூறு" என்ற இடுகையில் திரு.குமரன் சங்க இலக்கியத்தில் வரும் இராம காதைச் செய்தியைச் (புறம் 378) சொல்லியிருந்தார். அரக்கன் என்ற சொல்லாட்சி அந்தப் பதிவிலும், அதன் பின்னூடங்களிலும் பெரிதும் பேசப்பட்டது. "அப்படி ஒரு கவனிப்பு அந்தச் சொல்லுக்கு ஏன் வந்தது?" என்று முதலில் எனக்குப் புரிபடவில்லை. "வௌவியவன் தமிழன் அல்லன், அரக்கனே! தமிழரையும், அரக்கரையும், (அதே போல தமிழரையும், குரங்குகளையும்) ஒன்றாய் எண்ணிக் குழம்பலாகாது" என்ற கருத்தும் அந்த இடுகையில் உணர்த்தப் பெற்றது. இந்த உணர்விப்பினுள், "அரக்கருக்கும் தமிழருக்கும் தொடர்பு இருப்பதாய்ச் சான்றுகள் உண்டா?" என்ற கேள்வியும் கூடத் தொக்கி நிற்கிறது. (பொதுவாய் இராட்சசன், இராக்கதன் என்ற சுமையேற்றிக் கிடக்கும் வட சொற்திரிவுகளைக் காட்டிலும் அரக்கன் என்ற எளிய தமிழ்ச் சொல்லின் பொருண்மையை நேரடியாய்ப் பார்ப்பது நம்மைச் சரியான புரிதற் பாதையில் கொண்டு செல்லும். எங்கும் வடமொழிக் கண்ணாடியை வைத்துக் கொண்டே, வழி தேடுவது நம்மில் பலருக்கும் வாடிக்கையாகி விட்டது. இதில் திராவிடச் சிந்தனையாரும் விதிவிலக்கல்ல போலும். வேதநெறி, மனுநீதிகளின் இடைவிடாத் தாக்கத்தால், ஒருசார்க் கோடலாய்த் தமிழர், தம் சிந்தனை இழப்பது வருத்தமாய் இருக்கிறது.)
"அரக்கர் என்பவர் யார்?" என்ற கேள்விக்கு நாம் போகுமுன்னால், குறிப்பிட்ட புறம் 378 பாடலின் காலத்தைப் புரிந்து கொள்ளுவது நலம் பயக்கும். இந்தப் பாடல் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னியை முன்னிறுத்தி, ஊன்பொதி பசுங்குடையார் பாடியது (பாடாண் திணை, இயன்மொழித் துறை).
[ஊன்பொதி பசுங்குடையார் என்பது புலவரின் இயற்பெயரல்ல; காரணப் பெயர். தென்பாண்டி நாட்டில் இன்றும் கூடப் பெரும் விழாக்களில் (காட்டாக கோயில்களில் ஆடி மாதம் நடைபெறும் படையல்களில்) பெரும் பானைகளையோ, மாழைக் (metallic) கலசங்களையோ, தேடிக் கொண்டு இருக்காமல், பச்சைப் பனையோலையில் பின்னிய கூடைகளையே, விழாச்சோறு முகந்து கொள்ளவும், ஊன் போன்றவற்றைப் பொதிந்து கொள்ளவும், பயனுறுத்துவார்கள். பசுங்குடை என்ற சொல்லாட்சி பசுங்கூடையை உணர்த்தும் திரிவாகும். பூக்குடல் என்பது பூக்கூடையை உணர்த்துமல்லவா? அதைப் போல குடை என்ற சொல் இங்கு கூடையை உணர்த்தியது. ஊன்பொதி பசுங்குடை என்ற அழகான சொல்லாட்சியைத் தன்னுடைய வேறொரு பாவில் இந்தப் புலவர் பயன்படுத்தியிருக்க வேண்டும்; ஆனால் அந்தச் சொல்லாட்சி உடைய பாடல் நமக்குக் கிடைக்கவில்லை. தொகுப்பாளரின் உரையை வைத்தே புலவரின் பெயர்க்காரணத்தை நாம் அறிந்து கொள்ளுகிறோம்.] இதே அரசனை இதே புலவர் புறம் 10 (பாடாண் திணை, இயன்மொழி, பூவைநிலைத் துறை), புறம் 203 (பாடாண் திணை, பரிசில் துறை), புறம் 370 (வாகைத் திணை, மறக்கள வழித் துறை) ஆகிய பாடல்களிலும் பாடியிருக்கிறார். இது தவிர இடையன் சேந்தன் கொற்றனார் பாடிய அகம் 375 இலும் இளம்பெருஞ்சென்னி என்ற குறிப்பு இருக்கிறது.
இளஞ் சேட்சென்னியும், இளம் பெருஞ்சென்னியும் ஒரே ஆளாகத்தான் இருந்திருக்க வேண்டும் என்பது தமிழிய மொழிகளின் சொல்வளத்தைக் கவனித்துப் பார்த்தால் புரிபடும். சேடு, சேட்டு என்பவை உயர்வு, பெரியநிலை, தொலைவு போன்றவற்றைப் பழந்தமிழிற் குறிக்கும். சேண்மை என்ற சொல்லும் கூட இன்றைக்குத் தொலைவைக் குறிப்பது தான். மலையாளத்தில் பெரியவனைக் குறிக்கச் சேட்டன் என்றும், பெரியவளை சேட்டத்தி என்றும் சொல்லுகிறார்கள் அல்லவா? சேள் என்பது தான் இதன் வேர். மூவேந்தர்களில் பெருஞ்சேரல், நெடுஞ்சேரலாதன், பெருவழுதி, நெடுஞ்செழியன், பெருங்கிள்ளி, பெருவளத்தான், மாவளத்தான், பெருஞ்சோழன் என்று சொல்லப்படும் பெயர்கள் பெருஞ்சென்னி - சேட்சென்னி என்ற பெயரையும் இயலுமை ஆக்குகின்றன. இளஞ்சேட்சென்னி என்பவன் இன்னொரு சேட்சென்னியின் இளவலாய் இருந்திருக்கலாம்.
இந்தச் சோழன் இளஞ்சேட்சென்னியை, செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி என்றும், பாமுளூர் எறிந்த இளஞ்சேட்சென்னி என்றும், புறநானூற்றுத் தொகுப்பாளர் குறிப்பிடுவார். பாழி என்ற பெயரில், தமிழ்கூறும் நல்லுலகில், சங்க காலத்தில், பல ஊர்கள் இருந்திருக்கின்றன. பொதுவாய்ப் பாழி என்பது இயற்கைக் குகையைக் குறிக்கும். (ஆசீவகத் துறவிகளின் வாழ்விடங்கள் பாழி என்றே நம் இலக்கியங்களில் குறிக்கப் பட்டிருக்கின்றன. பள்ளி என்பது பொதுவாய்ச் செயினர், போதியர் ஆகியோரின் இருப்பிடங்களைக் குறிக்கும்.) செருப்பாழி என்பதில் வரும் செரு என்பது திரு என்ற பொருள் கொண்ட ஒரு முன்னொட்டு. (சேரே திரட்சி என்பது தொல்காப்பிய உரியியல்; செருப்பாழி என்பது பெரிய, திரண்ட குகை என்ற பொருள் கொள்ளும்.) செரு என்ற முன்னொட்டு திரு என்ற பொருளைக் குறித்ததற்குச் சான்றாக, திருத்தணிகையையைச் செருத்தணி என்று சொல்லும் வழக்கம் அகரமுதலிகளில் பதிவு செய்யப் பட்டிருக்கிறது. வடுகரைப் பெருஞ்சென்னி வெற்றி கொண்ட செய்தி புறம் 378 இலும், அகம் 375 இலும் வருவதால், வேங்கடத்தை ஒட்டி இந்தச் செருப்பாழி இருந்திருக்கலாம். (சரியான இடத்தைக் குறிக்க முடியவில்லை.)
சென்னி என்பது ஓர் இனக்குழுப் பெயர். (சென்னியர் என்ற சொல்லும் செம்பியர் என்ற சொல்லும் ஒரே வேரில் உருவானவை தாம்.) சோழர்கள் தொடக்க காலத்தில் பல்வேறு பகுதிகளில் (அழுந்தூர், ஆமூர், கழார், குடந்தை, பருவூர், பெருந்துறை, போர், வல்லம் ஆகிய ஊர்கள்) தனித் தனி இனக்குழுக்களாய் கி.மு. 500/400க்கு முன்னால் இருந்திருக்கிறார்கள். பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் ஒவ்வோர் இனக்குழுவும் இன்னொன்றை வென்றி கொண்டு, இணைந்து, பின்னர் பெரும் இனக்குழுக்களாகி, சென்னி, கிள்ளி என்று இரு பெரிய இனக்குழுக்கள் மட்டுமே கடைசியில் அமைந்து, முடிவில் பெருஞ்சோழராய் உருவாகி இருக்கிறார்கள்.
கி.மு. 500/400க்கு அண்மையில் அழுந்தூரில் தொடங்கிய சென்னி வகைச் சோழர் கொஞ்சம் கொஞ்சமாய் பெருஞ்சோழராகி, நெய்தலங்கானலுக்கு வந்து (நெய்தலங்கானல் என்பது காவிரிப்பூம் பட்டினத்திற்கு மிக அருகில் உள்ள ஊர்), முடிவில் காவிரிப் பூம்பட்டினத்தைத் தலைநகராய்க் கொண்டு ஆண்டதும், கிள்ளி வகைச் சோழர்கள் இதே போலச் வேறு சிறிய ஊர்களில் தொடங்கி, முடிவில் உறையூரைத் தலைநகராக்கி ஆண்டதுமாய் இருக்கும் தொடக்க காலச் சோழர் வரலாற்றை சங்க இலக்கியங்களின் மூலம் புரிந்து கொள்ளலாம். அதே பொழுது சேரர், சோழர், பாண்டியர் என்ற பேரினக்குழுவின் தலைவர்களாய் வேந்தர்கள் கி.மு.7 ஆம் நூற்றாண்டு அளவில் இருந்ததைத் தொல்காப்பியம் மிகத் தெளிவாகப் பதிவு செய்திருக்கிறது.ஆகச் சங்க இலக்கியம், தொல்காப்பியம் என்ற இரண்டு தரவுகளையும் பார்க்கும் போது, கி.மு.700ல் இருந்து கி.மு.500 வரை ஒரு 200 ஆண்டு காலத் வரலாறு இன்னமும் தெளிவு படாமல் இருக்கிறது.
சேரர், சோழர், பாண்டியர் என்ற பேரினக் குழுக்களின் தோற்றம், வரலாறு, மரபுகள், தொன்மங்கள் பற்றி இந்த இடுகையில் நான் விவரிக்கவில்லை. அதற்கு இன்னொரு இடுகைதான் செய்ய வேண்டும்.
சங்க கால வரலாறு என்பது சரியாக எழுதப் படாமல், கால முரண்பாடுகளோடேயே தான் இன்றும் இருக்கிறது. குறிப்பாக செங்குட்டுவன், கயவாகு என்ற தவறான சமகாலப் பொருத்தலால், கி.பி.171-193 என்று செக்கில் சிக்கிக் கொண்டு, முன்னேற முடியாமல், தமிழக வரலாறு சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது. அண்மைக் காலத்தில் கிடைக்கும் தமிழிக் கல்வெட்டுக்களையும், அகழாய்வுச் செய்திகளையும், சங்க கால அரசர்களின் நாணயங்களையும், சங்க இலக்கியங்களோடு பொருத்திப் பார்க்கும் போது, "செங்குட்டுவன் - முதலாம் கயவாகு ஆகியோர் சம காலத்தவர்" என்ற முன்னீட்டை முற்றிலும் ஒதுக்கினால் தான் தமிழர் வரலாறு சரியாகும் போல் தெரிகிறது. சிலப்பதிகாரத்தின் பதிகத்திற்குப் பின்னாலும், புகார்க் காண்டத்திற்கு முன்னாலும் வரும் உரைபெறு கட்டுரைக்கும், சிலம்பின் கடைசியில் வரும் வரந்தரு காதைக்கும் இடையே தெரியும் பெருத்த உள் முரண்பாடுகள் நம்மைப் பெரிதும் ஓர்ந்து பார்க்க வைக்கின்றன. பெரும்பாலும் வரந்தரு காதை என்பது காப்பியத்தோடு ஒன்றுபடாமல், பின்னோர் செய்து ஒட்டியதோ என்று எண்ண வைக்கிறது. அதே போல உரைபெறு கட்டுரையும் ஆசிரியர் இளங்கோவடிகளால் சேர்க்கப் படாமல், பின்னவர்களால் இணைக்கப் பட்டிருக்கக் கூடும். [சிலம்பு பற்றி இங்கு பேசினால் அது வேறு புலனத்திற்குக் கொண்டு போகும் என்பதால் அதைத் தவிர்க்கிறேன்.]
இந்த முரண்பாடுகளைத் தீர்க்கும் வகையில் எழுந்த அண்மைக்கால இரு வரலாற்று முயற்சிகள் ஆவணப்படுத்தப் பட்டு இருக்கின்றன. [அவற்றில் முதல் ஆவணம் பேரா. பே.க. வேலாயுதம் (பெரியார் ஈவெ.ரா. கல்லூரி, திருச்சி) ப.சீனிவாசன் (திருச்சி நாணயவியல் கழகம்) ஆகியோர் இணைந்து திருச்சி நாணயவியல் கழகத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழாவில் 23/2/1997 வெளியிடப்பட்ட "சங்க கால மன்னர் வரிசை" என்னும் சிறு கையேடு ஆகும். இரண்டாவது, "சங்க கால மன்னர்களின் காலநிலை - தொகுதி 1" மற்றும் "சங்க கால மன்னர்களின் காலநிலை - தொகுதி 2" என்ற இரு பொத்தகங்களாய், டாக்டர் பத்மஜா ரமேஷ், வி.பி. புருஷோத்தமன் ஆகியோரால் எழுதப்பட்டு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சிஐ.டி. வளாகம், தரமணி, சென்னை மூலம் 2000 த்தாம் ஆண்டில் வெளியிடப் பட்டது.]
மேலே சொன்ன ஆய்வாளர்களில், திருவளர். பத்மஜா ரமேஷ், திரு. புருஷோத்தமன் ஆகியோர் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னியும், உருவப்பல் தேர் இளஞ்சேட்சென்னியும் ஒருவரே என்ற கருத்துக் கொள்கிறார்கள். உருவப்பல் தேர் இளஞ்சேட்சென்னியை முதற் கரிகாலனின் மகனாகவும், இரண்டாம் கரிகாலனின் தந்தையாகவும் பொருநராற்றுப் படை ஆதாரத்தின் மூலம் இவர்கள் அடையாளப் படுத்துவார்கள். அவர்கள் கூற்றின் படி, உருவப்பல் தேர் இளஞ்சேட் சென்னியின் காலத்தில், கிள்ளி வகைச் சோழர்களின் ஆட்சி ஓர் அண்ணுமுடிவிற்குக் (near end) கொண்டு வரப்படுகிறது. இளஞ்சேட்சென்னியின் பேரன், இரண்டாம் கரிகாலனின் மகன் ஆன நலங்கிள்ளி - இளஞ்சேட்சென்னி என்ற இரட்டைப் பெயரெடுத்து, கிள்ளிவகை அரசரின் கடைசி அரசனான நெடுங்கிள்ளியைத் தொலைத்தெறிவதோடு, கிள்ளிகளின் குல ஆட்சி உறையூரில் முற்றிலும் முடிந்து போகிறது. தலைநகரும் அதற்கு அப்புறம் காவிரிப் பூம்பட்டினத்தில் இருந்து உறையூருக்கே மாறுகிறது.
முன்னே சொன்ன இரண்டு ஆவணங்களையும் படித்தால் ஒன்றிற்கொன்று முரணாகச் சில காலநிலைகளும், உடன்பாட்டில் சில காலநிலைகளும் இருப்பதை அறிந்து கொள்ள முடியும். இந்த ஆவணங்களை ஆழ்ந்து படித்து அதில் இருக்கின்ற ஒன்றாமைகளை (inconsistencies) உணர்ந்ததால், மூல இலக்கியங்களையும், கல்வெட்டு விவரங்களையும், மீண்டும் படித்து, சங்க கால நிலையை நான் தற்போது ஆய்ந்து கொண்டு இருக்கிறேன். சங்க இலக்கியப் பாடல் எழுதியோரையும், பாடப்பட்டவரையும் பொருத்தி இந்தக் காலத்தியப் பிணைய அலசல் (network analysis) முறை மூலம் என் ஆய்வு நடத்தப் படுகிறது. ஆய்வு முடியச் சற்று காலம் ஆகலாம்.
இப்போதைக்கு நான் முந்தைய ஆய்வாளர்களின் முடிவுகளையே இங்கு கொடுக்கிறேன். ஊன்பொதி பசுங்குடையாரின் பாடற்காலத்தை, மேலே சொன்ன முதல் ஆவணத்தின் மூலம் கிட்டத் தட்ட கி.மு.325 - 250 என்றும், இரண்டாம் ஆவணத்தின் மூலம் கி.மு.250-225 என்றும் முடிவு செய்யலாம். ஆக இராமகாதை பற்றிய செய்திகள் கி.மு.250 அளவிலேயே தமிழில் பதிவு செய்யப் பட்டதாகச் சொல்ல வேண்டும்.
சங்க இலக்கியத்து இராம காதைச் செய்திகளுக்கு புறம் 378 தவிர, அகம் 70, கலி - 38 என இன்னும் இரு சான்றுகளும் உண்டு. சங்கம் மருவிய காலத்தில் எழுந்த பழமொழி நானூற்றிலும் ஒரு குறிப்பு உள்ளது. "இராமகாதை வரலாற்றுச் செய்தியா, அன்றி தொன்மச் செய்தியா?" என்பது அவ்வளவு முகன்மையானது அல்ல. இங்கே காதுற்ற செய்தி காதையாயிற்று. அவ்வளவு தான். அதைத் தமிழிலக்கியத்தில் பயன்படுத்தத் தடை இருக்க முடியுமோ? அதே பொழுது, அப்படிப் பயனுறுத்தியதாலே "அது வரலாறா, தொன்மமா?" என்ற கேள்விக்கு மறுமொழித்ததாய்க் கொள்ளவும் கூடாது.
இனிப் பாடலுக்குள் போவோம்.
அன்புடன்,
இராம.கி.
36 comments:
நல்ல ஆய்வு, எழுதுங்கள் தெரிந்து கொள்ளக் காத்திருக்கிறோம்.
உங்களுக்கு தமிழ் இலக்கியம், வரலாற்றில் நிறைய விஷயம் தெரிந்து இருக்கிறது , ஆனால் அரக்கன் என்ற சொல்லாட்சி பற்றி சொல்ல இதை எல்லாம் சொன்னால் தான் புரியுமா?
நேரடியாக கருத்திற்கு போயிருக்கலாம் :-))
ஆகா! கேட்காமலே கிடைக்கிறதே தகவல்கள். நிறைய தகவல்கள். இப்ப அவசரமாகப் படித்தேன். மறுபடியும் பொறுமையாகப் படிக்கிறேன். அடுத்த பகுதிக்கும் ஆவலாகக் காத்திருக்கிறேன்.
//ஊன்பொதி பசுங்குடையாரின் பாடற்காலத்தை, மேலே சொன்ன முதல் ஆவணத்தின் மூலம் கிட்டத் தட்ட கி.மு.325 - 250 என்றும், இரண்டாம் ஆவணத்தின் மூலம் கி.மு.250-225 என்றும் முடிவு செய்யலாம். ஆக இராமகாதை பற்றிய செய்திகள் கி.மு.250 அளவிலேயே தமிழில் பதிவு செய்யப் பட்டதாகச் சொல்ல வேண்டும்.//
இளஞ்சேட் சென்னி கரிகாலனின் தந்தை என வைத்துப்பார்த்தால் , கரிகாலன் கி.பி 100-150 காலத்தினை சார்ந்தவன் என வருகிறது. , மேலும் அகம் ,புறம் இரண்டும் தொகுக்கப்பட்டது உக்கிரப்பெருவழுதிகாலத்தில் ,உருத்திரசன்மரால் தொகுக்கப்பட்டுள்ளது , அவர்கள் காலம் கி.பி.240. நீங்கள் சொல்வதற்கும் இதற்கும் அதிக கால வித்தியாசம் வருகிறதே!
சிலப்பதிகாரம் படி பார்த்தாலும் நெடுஞ்செழியன் காலம் கி.பி 160-200, அதே காலக்கட்டத்தில் தான் கரிகாலன் , சேரன் செங்குட்டுவன் எல்லாம் இருந்ததாக வருகிறது.
எனவே இந்த பாடல் கி.மு வில் பாடியதாக சொல்ல முடியாதே!
அன்புள்ள பெருச்சாளியாரே!
உங்கள் கனிவிற்கு நன்றி. உங்கள் பின்னூட்டை உரையாட்டு நலம் கருதி வெளியிட முடியாது இருக்கிறேன். மன்னியுங்கள்.
புரிந்து கொள்ளுவீர்கள் என்று எண்ணுகிறேன்.
அன்புடன்,
இராம.கி.
அன்புள்ள ஐயா.
என் இடுகையை இட்டு முடித்ததும் அது தங்கள் கண்களில் படும்; ஒரு பின்னூட்டமாவது இடுவீர்கள் என்று எண்ணினேன். பின்னூட்டத்தைக் காணாத போது 'சரி ஒரு பெரிய கட்டுரையோ தொடர் கட்டுரையோ இடப்போகிறீர்கள்' என்று எண்ணினேன். என் எதிர்பார்ப்பை வீணாக்கவில்லை. இந்தத் தொடர்க் கட்டுரைக்கு நன்றி. தாங்கள் அறிந்த பல செய்திகளைத் தங்கள் பதிவினைத் தொடர்ந்து படிக்கும் பலரும் அறிந்து பயன்பெறுவார்கள். மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
என்னுடைய இடுகையில் குறித்த புறப்பாடலை 2 வருடங்களுக்கு முன்பு படித்த போது அதில் உள்ள உவமை நயம் மட்டுமே மனத்தைக் கவர்ந்தது. இந்த இரு வருடங்களில் வலைப்பதிவுகள் படித்த போது தமிழரை 'அரக்கர்' என்றும் 'குரங்குகள்' என்றும் வடமொழியாளர்கள் கேவலமாக எழுதியிருக்கிறார்கள் என்ற செய்தி மீண்டும் மீண்டும் படித்ததில் இந்தப் பாடலை இந்த முறை படித்த போது அந்த இரு சொற்கள் கவனத்தை ஈர்த்தன. வடமொழியாளர்கள் கேவலமாக எழுதிவிட்டார்கள் என்றால் அந்த சொற்களையே கி.மு.விலோ கி.பி. தொடக்க நூற்றாண்டுகளிலோ எழுதப்பட்டப் பாடலில் அவை இராம காதையைச் சொல்லும் போது புழங்குகின்றதே என்ற கேள்வியை வைத்தேன். நீங்கள் சொன்னது போல் 'வௌவியன் தமிழன் அல்லன். அரக்கனே. தமிழரையும், அரக்கரையும் (அதே போல் தமிழரையும் குரங்குகளையும்) ஒன்றாய் எண்ணிக் குழம்பலாகாது' என்ற கருத்தோ 'அரக்கருக்கும் தமிழருக்கும் தொடர்பு இருப்பதாய்ச் சான்றுகள் உண்டா?' என்ற தொக்கி நின்ற கேள்வியோ என் இடுகையில் சொல்லவும் கேட்கவும் எண்ணவில்லை. ஆனால் இடுகையில் எழுதியிருந்த முறையும் பின்னர் பின்னூட்டங்களில் கருத்துபரிமாற்றம் செய்து கொண்டவையையும் பார்க்கும் போது நீங்கள் சொன்னது போன்ற கருத்தும் கேள்வியும் என் இடுகையில் சொல்லப்பட்டன என்ற புரிதல் ஏற்படும் என்று புரிந்து கொள்கிறேன்.
எங்கும் வடமொழிக் கண்ணாடியை வைத்துக் கொண்டே வழி தேடுவது என்ற குறை நீங்கள் சொன்னது போல் எல்லோருக்கும், திராவிடச் சிந்தனையாளருக்கும், இருக்கிறது என்பதனை ஒத்துக் கொள்கிறேன். அதுவே எனக்கு வியப்பாகவும் இருக்கிறது. இராமர் சேதுவைப் பற்றி இப்போது நடக்கும் சர்ச்சைகளிலும் வடமொழிக் காவியங்களில் இருந்து காட்டப்படும் எடுத்துக்காட்டுகளையே எங்கும் காண்கிறேன். தமிழ் இலக்கியங்களிலிருந்து எதுவுமே காட்டப்படுவதில்லை. வடமொழி நூல்கள் சொல்பவையே இந்திய வரலாறு மற்றும் தொன்மங்கள் என்ற எண்ணம் மேல்நாட்டவருக்கும் வடவருக்கும் இருக்கின்றது என்று குற்றம் சாட்டிக் கொண்டே அதே குற்றத்தை நாமும் செய்கிறோம் என்று திராவிடச் சிந்தனையாளருக்குத் தெரிகிறதோ இல்லையோ என்ற ஐயம் தோன்றிக் கொண்டே இருக்கும். நாமே நம் இலக்கியங்களைக் கண்டு கொள்ளாவிட்டால் மற்றவர் எப்படி கண்டு கொள்வர்?
இந்த புறநானூற்றுப்பாடலின் காலத்தைப் பற்றிய ஆராய்ச்சிக் கருத்துகளைச் சொன்னதற்கு நன்றி ஐயா. இந்தப் புரிதல்களைத் தான் நான் தேடிக் கொண்டிருக்கிறேன். ஊன்பொதி பசுங்குடையார் என்ற புலவரின் பெயர்க்காரணத்தையும் மிக நன்றாக மனத்தில் நிற்கும் வகையில் விளக்கியிருக்கிறீர்கள். இனி அவ்வளவு எளிதாக இந்தப் பெயர்க்காரணம் எனக்கு மறக்காது என்று நினைக்கிறேன். (உலோகங்களினால் செய்யப்பட்ட கலசங்களை மாழைக்கலசங்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள். எனக்கு புதிய சொல். இந்த 'மாழை' என்ற சொல்லைப் பற்றி ஏற்கனவே எங்காவது விளக்கமாகப் பேசியிருந்தால் சொல்லுங்கள்).
சோழர்களின் இனக்குழுக்களைப் பற்றியும் கிள்ளி, சென்னி என்ற பெரிய இனக்குழுக்களாக அவர்கள் இணைந்து பின்னர் ஒரே இனக்குழுவாக பெருஞ்சோழராக உருவாகியதைப் பற்றி சொல்லியிருக்கிறீர்கள். அந்தக் கூற்றுகளின் மேல் விவரங்களைப் படிக்க ஆவல் ஏற்படுகிறது. இன்னொரு இடுகையில் / தொடரில் சேரர், சோழர், பாண்டியர் என்ற பேரினக் குழுக்களின் தோற்றம், வரலாறு, மரபுகள் போன்றவற்றைப் பற்றி நீங்கள் எழுதிப் படிக்க ஆவலுடன் இருக்கிறேன்.
தொல்காப்பியம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் இயற்றப்பட்டது என்று படித்திருக்கிறேன். ஆனால் நீங்கள் தொல்காப்பியம் கி.மு.7ஆம் நூற்றாண்டு அளவில் சேர, சோழ, பாண்டிய வேந்தர்களைப் பற்றி பதிவு செய்திருக்கிறது என்று சொல்லியிருக்கிறீர்கள். செங்குட்டுவன், கயவாகு என்ற காலப்பொருத்தல் தவறானது என்றும் அதனால் தமிழக வரலாறு கி.பி. 2ஆம் நூற்றாண்டு என்ற செக்கில் சுழன்று கொண்டிருக்கிறது என்றும் சொல்லியிருப்பவை மேலும் ஆவலைத் தூண்டுகின்றன. மேலும் இவற்றைப் பற்றி விரிவாக எழுத வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.
மேலே வவ்வால் கேட்ட அதே சந்தேகம்தான் எனக்கும் வந்தது(i.e. 100CE vs. 250BCE). ஒரு 2-3 நூற்றாண்டுகள் முன்பின் இருப்பது ஓரு பெரிய வேற்றுமையல்ல என்று என்னை நானே தேற்றிக்கொண்டேன் :)
சிலம்பில் அண்மைக்காலமாக என் கவனம் சென்றிருப்பதால் சிலம்பைப் பற்றிய தங்கள் கருத்துகளையும் அறிய ஆவலுடன் இருக்கிறேன்.
இராம காதை பற்றிய செய்திகள் கி.மு. 250 அளவிலேயே தமிழில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற தங்கள் முடிவு இதுவரை நான் உள்ளுணர்வால் உணர்ந்த ஒன்றை உறுதிப் படுத்துவதாக இருக்கிறது. தமிழ் இலக்கியங்களின் கால அளவை கி.மு. 2ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 2ஆம் நூற்றாண்டு வரை அடக்கும் ஆய்வுகளையே இதுவரை படித்திருக்கிறேன். ஆனால் அவை ஐயத்திற்குரியனவாகவே தோன்றியது.
நான் என் இடுகையில் உசாத்துணையாகக் கொண்ட மதுரைத் திட்டக் கட்டுரையில் அகம் 70 கூறப்பட்டிருக்கிறது. கலித்தொகை 38ஆம் பாடலையும் நீங்கள் குறித்திருக்கிறீர்கள். அதனைத் தேடிப் படிக்கிறேன்.
'அரக்கர் என்பவர் யார்?' என்ற கேள்வியின் விடையையும் புறப்பாடல் 378ன் மேலதிக விளக்கத்தையும் இனி வரும் கட்டுரைகளில் படிக்க ஆவலுடன் இருக்கிறேன்.
ஐயா,
பதிவுக்கு மிக்க நன்றி. கன தகவல்களை அறியக் கூடியதாக இருந்தது. உங்களின் அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
//\'கடுந்தெறல் இராமன் உடன் புணர் சீதையை வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின் செம்முகப்பெருங்கிளை இழைப்பொலிந்தாங்கு\' என்ற நான்கு அடிகளால் வால்மீகி இராமாயணத்திலும் கம்பராமாயணத்திலும் வரும் கதைப்பகுதியைச் சொல்கிறார்.// - இது குமரன் சொன்னது (http://koodal1.blogspot.com/2007/09/blog-post_12.html)
மயிலை சீனி.வேங்கடசாமியின் புத்தகத்திலிருந்து தன்னை மிகவும் கவர்ந்த ஒரு பாடலை எடுத்து தனக்குத் தெரிந்த அளவில் தமிழ்ச் சொற்களுக்கு அருஞ்சொற்பொருள் விளக்கம் கொடுக்க குமரன் அவ்வளவு சிரமப்பட்டிருக்க வேண்டியதில்லை ;-). இதே பாடல், முழு பொழிப்புரையுடன் பழைய ராமாயணங்கள் குறித்த ஒரு கட்டுரையில் (http://www.tamilnation.org/literature/pmunicode/mp061.htm) இங்கே இருக்கிறது. அது கீழே.
[சோழன் இளஞ்சேட்சென்னி ஈந்த பரிசிலால்] வறுமையை இழந்த என் பெரிய சுற்றத்தார் அவன் கொடுத்த அணிகலன்களில் விரலுக்கு அணிய வேண்டியதைக் காதிலும் காதுக்கு அணியவேண்டியதை விரலிலும் இடைக்கு அணிவதைக் கழுத்திலும் அணிந்துகொண்டது பெரும் வலிமையை உடைய இராமனின் தன் துணையாகிய சீதையை இராவணன் வௌவிச் சென்றபோது சீதை நிலத்தில் வீசி யெறிந்திருந்த நகைகளைக் கண்டெடுத்தவுடன் குரங்குகள் அவ்வணிகலன்களில் எதை எந்த உறுப்பின்மீது அணிவதென்று தெரியாமல் தங்கள் உடம்பின்மேல் மாறி மாறி அணிந்துகொண்டதைப் போல் வேடிக்கையாக இருந்தது - என்று சொல்கிறார்.
வால்மீகியிலோ (4:6) குரங்குகள் சீதையின் நகைகளைக் கண்டுபிடிக்கும் காட்சிச் சித்திரிக்கப் படவேயில்லை; மாறாகச் சுக்கிரீவன் இராமனிடம் சீதையின் அணிகலன்கலைக் காட்டி அவை சீதை இராவணனாற் கடத்தப் படும்போது தானும் நான்கு குரங்குகளும் நிலத்தில் இருப்பதைக் கண்டு சீதை அவற்றைக் கீழே வீசியதாக மட்டுமே சொல்கிறான்.
ஆக, இவற்றிலிருந்து நாம் புரிந்துகொள்ளவேண்டியது என்ன? ராவணன் ராட்சசன் என்று வடமொழியார் சொல்வதற்கு முன் நமது சங்கப் புலவர்களே அரக்கன் என்று கூறிவிட்டார்கள், அதனால் வடமொழியாளர்களை(யும், என்ன அரசியலிருந்தும்)ப் பழிக்காதீர்கள். அரக்கியின் முலையையோ மூக்கையோ அறுப்பதில் ஒரு தார்மீக நியாயம் உள்ளது - அதுவும் வனவாசி சூர்ப்பனகை இருகை வேழத்து இராகவன் மேல் பிரேமை கொள்ளலாமோ? (http://ntmani.blogspot.com/2005/05/blog-post_07.html)
குமரனது சில பதிவுகளில், சொல்லப்பட்டதை விட சொல்லப்படாமல் விடப்பட்டதிலேயே அதிக அர்த்தம் தொக்கி நிற்கிறது. சமீபத்திய சில பதிவுகளில் இத் திறனை வெகு நேர்த்தியாகக் கூர்தீட்டியிருக்கிறார் ;-). அவரது பதிவுகளைத் தொடர்ந்து படித்து வருபவன் என்ற முறையில் அவர்மேலும் அவரது தமிழார்வத்தின் மேலும் பெருத்த மரியாதை உண்டு எனினும், தான் காணவிரும்பும் உண்மைக்கான தேடலில் காலத்தைச் செலவழிப்பதைவிட, அவரது தமிழார்வத்தை சரியான திசையில் செலுத்தலாம் என்று பட்டதைச் சொல்லவேண்டியதும் அவசியமாகிறது. நீங்கள் குமரனின் பதிவிலுள்ள ஆழ்நீரோட்டத்தை சரியாக அடையாளம் கண்டிருப்பதாகவே தோன்றுகிறது - உங்களது அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
குமரன், தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். நான் சொல்லியுள்ளது தவறாக இருக்கவேண்டுமென்பதுதான் எனது விருப்பமும். ஆயினும், உண்மை எது என்று அவரவர்க்குத் தெரியும் அல்லவா?
//"இராமகாதை வரலாற்றுச் செய்தியா, அன்றி தொன்மச் செய்தியா?" என்பது அவ்வளவு முகன்மையானது அல்ல. இங்கே காதுற்ற செய்தி காதையாயிற்று. அவ்வளவு தான். அதைத் தமிழிலக்கியத்தில் பயன்படுத்தத் தடை இருக்க முடியுமோ? அதே பொழுது, அப்படிப் பயனுறுத்தியதாலே "அது வரலாறா, தொன்மமா?" என்ற கேள்விக்கு மறுமொழித்ததாய்க் கொள்ளவும் கூடாது.
//
ஐயா. என் இடுகையில் எங்கும் இராமகாதை வரலாற்றுச் செய்தி என்று சொல்லவில்லை. தொன்மம் என்ற சொல்லையே பயனுறுத்தியிருக்கிறேன். அதனால் அந்தத் தொன்மம் தமிழிலக்கியத்தில் பயனுறுத்தத் தடையில்லை. அப்படிப் பயன்படுத்தியதாலேயே வரலாறா தொன்மமா என்ற கேள்விக்கு மறுமொழி தரப்பட்டதாகவும் சொல்லவில்லை. தொடக்கம் முதல் முடிவு வரை இதனைத் தொன்மம் என்றே பேசினேன்.
காதுற்ற செய்தி காதையானது என்ற விளக்கம் படித்தேன். காதுற்ற செய்தி தொன்மமாகவும் இருக்கலாம் வரலாறாகவும் இருக்கலாம். அதனால் அந்தக் கேள்வியை நீங்கள் இங்கே எடுத்துக் கொள்ளவில்லை என்று சொல்லியிருக்கிறீர்கள். சிலம்பும், மற்ற காப்பியங்களும், சங்க இலக்கியங்களும் இந்த வகைப்பாட்டில் அடங்குமா? அல்லது அவை பெரும்பாலும் வரலாற்றுச் செய்திகள் தானா? தங்கள் கருத்து என்ன என்று அறிய ஆவலுடன் இருக்கிறேன்.
ஐயா,
தற்பொழுது நடந்து வரும் சேது சமுத்திரம் குறித்த பிரச்சனையிலே சேது என்ற பெயர் ராமாயணத்தில் இருந்து வந்ததாக சில அடிப்படைவாத இணையத்தளங்கள் கூறிவருகின்றன.
ஆனால் சேது என்பது சேது மன்னர்களைச் சார்ந்த பெயராகத் தான் நான் அறிந்துள்ளேன்
சேது தமிழ்ப்பெயரா, சமஸ்கிருதமா ?
ராமாயணம் சார்ந்ததாக கூறப்படுவதில் எந்தளவுக்கு உண்மை உள்ளது ?
அடிப்படைவாதிகள் இதனையும் திரிக்கிறார்களா ?
>சேது தமிழ்ப்பெயரா, சமஸ்கிருதமா ?
சேது சமஸ்கிருத்ச் சொல். சேதுமந்த் என்றால் பாலம். தென் ஆப்கானிஸ்தானத்தில் ஹெல்மாண்ட் என்ற மாகாணம் இருக்கு. ஹெல்மாண்ட் - சேதுமந்த் cognate words.
அய்யா,
தமிழறிஞர் குமரன் பற்றி ஒரு நண்பர் மேலே புகழ்ந்து எழுதியதை தானே நானும் நேற்று கூறியிருந்தேன்.அதை ஏன் நீங்கள் வெளியிடவில்லை?
தொடர்ந்து நண்பரின் தமிழறிவும் உள்ள கிடக்கையையும் வெளிகொணரும் பதிவுகளை தரவும்.
என் இடுகையில் ஆழ்நீரோட்டத்தைக் கண்டு என் நலன் நாடும் அறிவுரையைக் கூறியிருக்கும் நண்பரே.
பாடலின் பொழிப்புரை நான் உசாவிய கட்டுரையில் (நீங்களும் அதே கட்டுரையைத் தான் குறிப்பிட்டிருக்கிறீர்கள்) சொல்லப்பட்டிருந்தாலும் சொல்லுக்குச் சொல் பொருள் சொன்னால் இன்னும் நன்றாக படிப்பவர் இன்புற வழியுண்டாக்கும் என்ற எண்ணத்தில் தான் எனக்குத் தெரிந்த அளவில் பொருள் சொல்லும் சிரமத்தை மேற்கொண்டேன். உங்களைப் போல் முழுக்கட்டுரையையும் படிக்கும் ஆர்வம் இருப்பவர்களுக்காக அந்தக் கட்டுரையையும் சுட்டியாகக் கொடுத்தேன். (அந்தக் கட்டுரையை என் இடுகையைப் படிப்பவர்களிடமிருந்து மறைக்கவில்லை)
நீங்கள் சொன்னது போல் 'வடமொழியாளர்கள் இராவணன் அரக்கன் என்று சொல்வதற்கு முன்பே நமது சங்கப் புலவர்கள் சொல்லியிருக்கிறார்கள்' என்ற செய்தி எந்த மறைவும் இன்றி என் இடுகையின் தலைப்பிலும் இடுகையிலும் பல பின்னூட்டங்களிலும் இங்கே இந்த இடுகையின் பின்னூட்டத்திலும் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறேன்.
'அதனால் வடமொழியாளர்களைப் பழிக்காதீர்கள். அரக்கியின் முலையையோ மூக்கையோ அறுப்பதில் ஒரு தார்மீக நியாயம் உள்ளது - அதுவும் வனவாசி சூர்ப்பனகை இருகை வேழத்து இராகவன் மேல் பிரேமை கொள்ளலாமோ?' என்று நீங்கள் நீட்டியிருக்கும் பொருளில் எந்த சொல்லும் (சொல்லியோ சொல்லாமலோ) என்னிடமிருந்து வரவில்லை. நான் சொன்னதை வைத்து இவற்றை எல்லாம் தான் நான் சொல்ல வந்தேன் என்று நீங்கள் புரிந்து கொள்வது உங்கள் விருப்பமும் உரிமையும். ஆனால் நான் அப்படி சொல்லவில்லை என்பதனை என் இடுகையின் கடைசிப் பத்தியைப் பார்த்தால் தெளிவாகத் தெரியும். என் இடுகையின் ஆழ்நீரோட்டத்தைக் கண்ட நீங்கள் அந்த கடைசிப் பத்தியையும் படித்து அதில் இருக்கும் ஆழ்நீரோட்டத்தையும் காணுமாறு விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.
ஒன்றைச் சொல்லிப் புரியவைப்பதைவிட சொல்லாமல் விட்டுப் புரியவைப்பது மிகப் பெரும் கலை. அந்தக் கலையை நான் வெகு நேர்த்தியாக (அப்படி நான் செய்யவில்லை; அந்தக் கலை எனக்கு இன்னும் பிடிபடவில்லை என்று நான் இன்னும் நினைத்தாலும்) செய்கிறேன் என்று சொல்லி என்னைப் பெருமைப் பட வைத்துவிட்டீர்கள். மிக்க நன்றி.
என் பதிவுகளைத் தொடர்ந்து படித்து வரும் என் நலம் விரும்பும் நீங்கள், என் மேலும் என் தமிழார்வத்தின் மேலும் மரியாதை கொண்ட நீங்கள் தங்கள் பெயரினையும் சொல்லியிருந்தால் மிக்க மகிழ்ந்திருப்பேன். பொதுவில் சொல்ல விருப்பம் இல்லையெனில் எனக்கு தனிமடலிலாவது தங்கள் பெயரைச் சொல்லுங்கள். தங்கள் பின்னூட்டத்தில் காழ்ப்புணர்ச்சி இல்லை; என் மேல் இருக்கும் அக்கறையே தெரிகிறது. அந்த அக்கறையுள்ள நண்பரை பெயரில்லாதவராக அறிவதை விடப் பெயருடன் அறிவது மிக்க மகிழ்ச்சியைத் தரும். நான் ஏற்கனவே அறிந்த நண்பர் தானா நீங்கள்?
இராம.கி. ஐயா என் இடுகையில் இருக்கும் ஆழ்நீரோட்டத்தைக் கண்டு கொண்டாரோ அல்லது என் மனவோட்டத்தின் திசையினைக் கண்டு கொண்டாரோ தெரியாது. ஆனால் இந்த இடுகையை இட்டதன் மூலம் அவர் அறிந்த பற்பல செய்திகளை நாம் அறியும் வகையில் அவர் தர என் இடுகை ஒரு சிறு தூண்டுகோல் (சுடர் விளக்கு அவர், தூண்டுகோல் மட்டுமே என் இடுகை) போல் உதவியதில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி. என் மகிழ்ச்சியினை மேலே என் பின்னூட்டங்களில் தெளிவாகக் காணலாம்.
முதலில் எழுதிய பெயரில்லாதவருக்கு,
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
அன்பிற்குரிய வவவால்,
"அரக்கன் என்ற சொல்லாட்சி பற்றி சொல்ல இதை எல்லாம் சொன்னால் தான் புரியுமா? நேரடியாக கருத்திற்கு போயிருக்கலாம் "
என்ற உங்கள் பின்னூட்டைப் படித்து முதலில் சிரித்தேன். அரக்கர் = அரக்கு நிறத்தவர் என்று சொல்லிவிட்டுப் போனால் போதுமோ?
"நண்பர் பொறுமையிழந்து அவக்கரமாய்க் கேட்கிறார்" என்று எண்ணிக் கொண்டு அமைந்திருந்தேன். பின்னால் வந்த உங்களின் பின்னூட்டுக்களைப் பார்த்த பிறகுதான் திசை எங்கோ மாறுகிறது என்று உணர்ந்தேன். அவற்றிற்கான என் மறுமொழிகளைக் கீழே தருகிறேன்.
அன்பிற்குரிய இராகவன்,
பொறுமையாகப் படியுங்கள்.
அன்புடன்,
இராம.கி.
«ýÀ¢üÌâ ÅùÅ¡ø,
±ýÛ¨¼Â þΨ¸Â¢ý Ó¾ø À̾¢¨ÂÔõ, þÃñ¼¡õ À̾¢¨ÂÔõ Á£ñÎõ ÀÊÔí¸û ±ýÚ §¸ðÎì ¦¸¡û¸¢§Èý. ¸Ã¢¸¡Äý ±ýÚ þÕŨà ¾¢ÕÅÇ÷ ÀòÁƒ¡, ¾¢Õ, ÒÕ§„¡ò¾ÁÉ¢ý ¬Å½õ ÌȢ츢ÈÐ. ¸Ã¢¸¡Äý I கரிகாலன் II ன் பாட்டனாகக் குறிக்கப் படுகிறான். இளஞ்சேட்சென்னி இவர்களுக்கு இடையில் வருகிறான். கரிகாலன் II ன் காலம் கி.பி.100-150 என்று முடிவு கொள்ளுவது காலம் செங்குட்டுவன் - கயவாகு ஆகியோர் சமகாலத்தவர் என்று கருத்தீட்டால் ஏற்படுவது. இதை இந்த ஆய்வாளர்கள் ஏற்கவில்லை. என் இடுகையில் சொல்லியிருக்கிறேன்.
சிலம்பில் வரும் உரைபெறு கட்டுரையையும், வரந்தரு காதையையும் படித்துப் பார்த்ஹால் இரண்டிற்கும் உள்ள ஒன்றாமை புலப்படும். உரைபெறு கட்டுரையையும், வரந்தரு காதையையும் ஒரே ஆசிரியர் எழுதியிருக்க முடியாது. அதில் ஏதோ ஒன்று பின்னால் எழுதி ஒட்டியது. இதையும் இடுகையில் சொல்லியிருக்கிறேன்.
"அவர் சொன்னார், இவர் சொன்னார்" என்று சில காலநிலை முடிவுகளை ஏற்பதைக் காட்டிலும் மூல இலக்கியங்களையும், கல்வெட்டுச் செய்திகளையும் பொருத்திப் பார்த்து, நீங்களே ஏரணப் (logic) படி ஒரு முடிவிற்கு வருவது நல்லது.
நான் புரிந்து கொண்டவரை இந்தக் கால நிலை மாற்றம் தேவை; கரிகாலன், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், செங்குட்டுவன் ஆகியோரின் காலம் கி.பி.அல்ல. கி.மு.வில் இருக்க வேண்டும் என்றே எண்ணுகிறேன். என்னுடைய முடிவுகளைப் பின்னால் என் ஆய்வு முழுமையடையும் போது விளக்குவேன்.
சிறகொலியாரே (voice on wings),
உங்களுக்கும் என் மறுமொழி இதுதான். தமிழ்ச் சங்க கால வரலாறு திரும்பி நிறுவப்பட வேண்டிய அளவுக்கு, புதிய ஆய்வுகள் வந்திருக்கின்றன.
அன்புட்ன்,
இராம.கி.
அன்பிற்குரிய குமரன்,
இந்தத் தலைப்பில் உங்கள் இடுகையைப் பார்த்து, அதற்குக் கருத்துச் சொல்ல வேண்டுமானால், நீண்டு சொல்ல வேண்டும் என்பதால் பின்னூட்டைத் தவிர்த்தேன். அதோடு, இராம.கி.யின் கருத்தென்றால் மட்டும், "இந்த ஆதாரம் இருக்கிறதா, அந்த ஆதாரம் இருக்கிறதா" என்று துருவித் துருவிப் பபர்ப்பதும், "வெகு எளிதில் என்ன தமிழ் ஆர்வலன் நீ என்று சொல்ல முற்படுவதும், (இன்னும் சிலர் அபத்தம் என்றும், தமிழறிஞரா என்றெல்லாம் குத்திக் கிழித்துப் பார்ப்பதும்) நடக்காமலா இருக்கிறது? எதிர்வினைகள் எழத்ததன் செய்யும் என்ற காரணத்தால், "என் கட்டுரைகள் ஒரு இடுகையில் முடியாமல் தொடர் கட்டுரைகளாய் அமைவது எனக்கு ஏற்படும் சோதனை" என்றுதான் சொல்ல வேண்டும்.
தமிழ் இலக்கியங்களைப் பார்ப்பவர், அதை வடமொழித் துலையில் (தராசில்) ¨ÅòÐ ¿¢¨ÈòÐô À¡÷ôÀÐ þýÚ §¿üÈøÄ, ÀÄ áüÈ¡ñθǡö ¿¼ì¸¢ÈÐ. (அண்மையில் கூட ஒரு மூன்று நாட்கள் முன்னனல், இன்னொரு மடற்குழுவில் ஒரு நண்பர் சொன்னனர்: "சம்ஸ்கிருத நூல்களில் ஏற்கெனவே தெரிவிக்கப்படாத கருத்துக்கள் ஏதும் புதிதாக தமிழில் வந்ததாக தெரியவில்லை. இருப்பின் சொல்லுங்கள்.") º¢Ä§À¡Ð சிரித்தும், சிலபோது º¢Éòதும் ¿¡ý ¦º¡ýÉÐñÎ "¾Á¢¦ÆýÚ Åó¾¡ø ¸üÒûÇÅû" ±ýÚ ¿¢ÚÅ¢ì ¦¸¡ñ§¼ þÕì¸ §ÅñÎõ அப்பா :-). ¾Á¢Æý ²Á¡Ç¢Â¡ö þÕப்பதில் வியப்பில்லை.
Á¡¨Æ ÀüÈ¢ò ¾É¢Â¡¸ô §Àº¢Â¾¢ø¨Ä. ¬É¡Öõ þó¾î ¦º¡ø ÀøÄ¡ñÎ ¸¡ÄÁ¡ö þÕôÀÐ ¾¡ý. Á¡¨Æ¢ý ¾¢Ã¢Å¡É Á¡¨¼ ±ýÀÐ ஒரு ¦À¡ý ¿¡½Âò¾¢üÌ உள்ள ¦ÀÂ÷. Á¸¾ «ÃÍì ¸¡Äò¾¢ø þÕó§¾ Á¡¨¼ ¯ñÎ. ¾Á¢ú þÄ츢Âí¸Ç¢Öõ இது À¢ýÈ¢Õ츢ÈÐ. Å¢Çì¸Á¡¸î ¦º¡øÄ §ÅñÎÁ¡É¡ø §Å¦È¡Õ þΨ¸¾¡ý §ÅñÎõ.
«Ãì¸÷ ±ýÈ ¦º¡øÖ째 þùÅÇ× ±Ø¸û ¸¢ÇõÒõ §À¡Ð, §ºÃ÷, §º¡Æ÷, À¡ñÊÂâý ¦ÀÂ÷측ýõ ¦º¡ல்லப் போனால், என்ன ஆகும்? «ó¾ «ÇÅ¢üÌக் கிளிப்பிள்ளை போலச் சொல்லவைக்கும் ¾¢ñ¨½ô ÀûÇ¢ìܼ ¸üÒ Ó¨È ¿ம்ãâø °È¢ì ¸¢¼ì¸¢ÈÐ. "Óý§É¡÷ ±Ø¾¢ÂÐ §Å¾ Å¡ìÌ"! þó¾ ÅÈðÎò¾Éõ þÃñÎ Àì¸Óõ, (§Å¾¦¿È¢, ÁÛ¿£¾¢ì ¸¡Ã÷¸û ´ÕÀì¸õ, ¾¢Ã¡Å¢¼î º¢ó¾¨É¡Ç÷ þý¦É¡Õ Àì¸õ) ¿¢ÃõÀ¢ì ¸¢¼ì¸¢ÈÐ.
¦¾¡ø¸¡ôÀ¢Âò¾¢ý ¸¡Äõ ÀüÈ¢ ±ý Óó¨¾Â þΨ¸¸Ç¢ø ÌÈ¢ò¾¢Õ츢§È§É? þÄìÌÅÉ¡÷, À¡Å¡½÷, ¬¸¢§Â¡Ã¢ý Óó¨¾Â ¬ö׸Ùõ, þý¨ÈÂì ¦¸¡ÎÁ½ø ¬öÅ¢ø ¾Á¢Æ¢ ±ØòÐì¸û ÀüȢ ¦ºö¾¢Ôõ, ¦¾¡øகாôÀ¢Âò¾¢ý ¸¡Äò¨¾ þýÛõ À¢ý§É¡ì¸¢ò ¾ûÙ¸¢ýÈÉ. ¸¢¨¼ò¾¢ÕìÌõ ¸ø¦ÅðÎ, À¡¨Éô ¦À¡È¢ôҸǢø Á¢¸ô ÀƨÁ¡¸ò ¾Á¢Æ¢ô ¦À¡È¢ôÒõ (¸¢.Ó.500), þÄí¨¸Â¢ø À¡¸¾ô ¦À¡È¢ôÒõ þÕ츢ன்Èன. «§º¡¸ý ¦ÀÕÁ¢ (Asokan Brahmi) ±ýÈ ¸¨¾¦ÂøÄ¡õ þÉ¢மேல் ÀÕôÒìÌ §Å¸¡Ð. "þó¾¢Â ±Øòதுக்களிý ¦¾¡¼ì¸õ ¦¾ü§¸" ±ýÚ ÅÄ¢¾¡É º¡ýÚ¸§Ç¡Î அகழாய்வு ÓÊ׸û ¦¾Ã¢விக்¸¢ýÈÉ. ¦¾¡ø¸¡ôÀ¢Âò¾¢ý ¸¡Äõ þó¾ ÓÊ׸§Ç¡Î ¦¾¡¼÷Ò ¦¸¡ñ¼Ð.
¾Á¢Æ¸ ÅÃÄ¡üÚŨÃ× (historiography and not history) செங்குட்டுவன் - கயவாகு சமகாலம் என்று விசைமுனையில் தான் இது நாள் வரை கட்டப் பட்டிருக்கிறது. இந்த முனை தான் அசைந்து கொண்டு இருக்கிறது.
அகம் 70, கலித்தொகை 38 இரண்டையும் அடுத்துவரும் இடுகைகளில் பார்ப்போம்.
அன்புடன்,
இராம.கி.
அன்பிற்குரிய வெற்றி,
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
அன்புள்ள பெயரில்லாதவருக்கு,
நீங்கள் குமரனின் கூற்றில் உள்ள கருத்திற்கு விளக்கம் கேட்கிறீர்கள். அதற்கு அவரே மறுமொழிப்பது நல்லது. நான் வால்மீகி இராமாயணம், கம்பராமாயணம் ஆகியவற்றில் எப்படி இந்த நிகழ்வு சொல்லப் பட்டிருக்கிறது என்று கூறவில்லை. என் இடுகை அதைப் பற்றியல்ல. "இராவணனை அரக்கன் என்று நமது சங்கப் புலவர்களே முதலில் கூறினார்கள்" என்றும் சொல்லவில்லை. அரக்கன் என்பது இழிவான பொருள் கொண்ட சொல்லும் அல்ல. "நாகர், இயக்கர், கருத்தர், கருப்பர், யாவகர், தமிழர் என்பது போல அரக்கர் என்பதும் ஓர் இனத்தாரின் பெயர்" என்று மட்டுமே சொன்னேன். "அவரும் மற்ற கருப்பர்களோடு சேர்த்துத் தான் எண்ணப் படுவர்" என்று இந்தக் கட்டுரையின் இரண்டாம் பகுதியில் சொல்லியிருக்கிறேன்.
உங்கள் பின்னூட்டைப் படிக்கும் போது, கொஞ்சம் தயக்கம் எனக்கு வருகிறது. நீங்கள் எதையோ தேடிக் கொண்டு இருக்கிறீர்கள். அதே பார்வையிலோ, அன்றி அதற்கு எதிராகவோ கூற்று வருகிறதா என்று கூர்ந்து பார்க்கிறீர்கள் போலும்.
என் கருத்தைத் தெளிவாகச் சொல்லி வருகிறேன் என்றே எண்ணுகிறேன்.
அன்புடன்,
இராம.கி.
அன்பின் இராமகி,
உங்கள் பின்னூட்டங்களில் சில ஒருங்குறியில் இல்லாமல் திஸ்கியிலேயே இருக்கின்றன என்று நினைக்கிறேன். படிக்க இயலவில்லை. நேரமிருப்பின் ஒருங்குறியில் மாற்றி இடவேண்டும் என்று கோருகிறேன்.
என் மறுமொழிகளில் சில இடங்களில் ஒருங்குறிக்கு மாறாக, தகுதரத்தில் வார்ப்பு (font) வந்து விட்டது. திரு.மணிவண்ணன் அதைக் குறிப்பிட்டுச் சொன்னார்; இங்கு தவற்றைச் சரிசெய்து மீண்டும் இடுகிறேன்.
அன்பிற்குரிய வவ்வால்,
என்னுடைய இடுகையின் முதல் பகுதியையும், இரண்டாம் பகுதியையும் மீண்டும் படியுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். கரிகாலன் என்று இருவரை திருவளர் பத்மஜா, திரு, புருஷோத்தமனின் ஆவணம் குறிக்கிறது. கரிகாலன் I கரிகாலன் II ன் பாட்டனாகக் குறிக்கப் படுகிறான். இளஞ்சேட்சென்னி இவர்களுக்கு இடையில் வருகிறான். கரிகாலன் II ன் காலம் கி.பி.100-150 என்று முடிவு கொள்ளுவது காலம் செங்குட்டுவன் - கயவாகு ஆகியோர் சமகாலத்தவர் என்று கருத்தீட்டால் ஏற்படுவது. இதை இந்த ஆய்வாளர்கள் ஏற்கவில்லை. என் இடுகையில் சொல்லியிருக்கிறேன்.
சிலம்பில் வரும் உரைபெறு கட்டுரையையும், வரந்தரு காதையையும் படித்துப் பார்த்ஹால் இரண்டிற்கும் உள்ள ஒன்றாமை புலப்படும். உரைபெறு கட்டுரையையும், வரந்தரு காதையையும் ஒரே ஆசிரியர் எழுதியிருக்க முடியாது. அதில் ஏதோ ஒன்று பின்னால் எழுதி ஒட்டியது. இதையும் இடுகையில் சொல்லியிருக்கிறேன்.
"அவர் சொன்னார், இவர் சொன்னார்" என்று சில காலநிலை முடிவுகளை ஏற்பதைக் காட்டிலும் மூல இலக்கியங்களையும், கல்வெட்டுச் செய்திகளையும் பொருத்திப் பார்த்து, நீங்களே ஏரணப் (logic) படி ஒரு முடிவிற்கு வருவது நல்லது.
நான் புரிந்து கொண்டவரை இந்தக் கால நிலை மாற்றம் தேவை; கரிகாலன், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், செங்குட்டுவன் ஆகியோரின் காலம் கி.பி.அல்ல. கி.மு.வில் இருக்க வேண்டும் என்றே எண்ணுகிறேன். என்னுடைய முடிவுகளைப் பின்னால் என் ஆய்வு முழுமையடையும் போது விளக்குவேன்.
சிறகொலியாரே (voice on wings),
உங்களுக்கும் என் மறுமொழி இதுதான். தமிழ்ச் சங்க கால வரலாறு திரும்பி நிறுவப்பட வேண்டிய அளவுக்கு, புதிய ஆய்வுகள் வந்திருக்கின்றன.
அன்புட்ன்,
இராம.கி.
இதுவும் குறியேற்றக் குழப்பத்தைச் சரிசெய்த மறுமொழி.
அன்பிற்குரிய குமரன்,
இந்தத் தலைப்பில் உங்கள் இடுகையைப் பார்த்து, அதற்குக் கருத்துச் சொல்ல வேண்டுமானால், நீண்டு சொல்ல வேண்டும் என்பதால் பின்னூட்டைத் தவிர்த்தேன். அதோடு, இராம.கி.யின் கருத்தென்றால் மட்டும், "இந்த ஆதாரம் இருக்கிறதா, அந்த ஆதாரம் இருக்கிறதா" என்று துருவித் துருவிப் பபர்ப்பதும், "வெகு எளிதில் என்ன தமிழ் ஆர்வலன் நீ என்று சொல்ல முற்படுவதும், (இன்னும் சிலர் அபத்தம் என்றும், தமிழறிஞரா என்றெல்லாம் குத்திக் கிழித்துப் பார்ப்பதும்) நடக்காமலா இருக்கிறது? எதிர்வினைகள் எழத்தான் செய்யும் என்ற காரணத்தால், "என் கட்டுரைகள் ஒரு இடுகையில் முடியாமல் தொடர் கட்டுரைகளாய் அமைவது எனக்கு ஏற்படும் சோதனை" என்றுதான் சொல்ல வேண்டும்.
தமிழ் இலக்கியங்களைப் பார்ப்பவர், அதை வடமொழித் துலையில் (தராசில்) வைத்து நிறைத்துப் பார்ப்பது, இன்று நேற்றல்ல, பல நூற்றாண்டுகளாய் நடக்கிறது. (அண்மையில் கூட ஒரு மூன்று நாட்கள் முன்னால், இன்னொரு மடற்குழுவில் ஒரு நண்பர் சொன்னார்: "சம்ஸ்கிருத நூல்களில் ஏற்கெனவே தெரிவிக்கப்படாத கருத்துக்கள் ஏதும் புதிதாக தமிழில் வந்ததாக தெரியவில்லை. இருப்பின் சொல்லுங்கள்.") சிலபோது சிரித்தும், சிலபோது சினந்தும் நான் சொன்னதுண்டு. "தமிழென்று வந்தால் கற்புள்ளவள்" என்று நிறுவிக் கொண்டே இருக்க வேண்டும் அப்பா:-) தமிழன் ஏமாளியாய் இருப்பதில் வியப்பில்லை.
மாழை பற்றித் தனியாகப் பேசியதில்லை. ஆனாலும் இந்தச் சொல் பல்லாண்டு காலமாய் இருப்பது தான். மாழையின் திரிவான மாடை என்பது ஒரு பொன் நாணயத்திற்கு உள்ள பெயர். மகத அரசுக் காலத்தில் இருந்தே மாடை உண்டு. தமிழ் இலக்கியங்களிலும் இது பயின்றிருக்கிறது. விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால் வேறொரு இடுகை தான் வேண்டும்.
அரக்கர் என்ற சொல்லுக்கே இவ்வளவு எழுச்சிகள் கிளம்பும் போது, சேரர், சோழர், பாண்டியரின் பெயர்க்காரணம் சொல்லப் போனால், என்ன ஆகும்? அந்த அளவிற்குக் கிளிப்பிள்ளை போலச் சொல்ல வைக்கும் திண்ணைப் பள்ளிக்கூடக் கற்பு முறை நம்மூரில் ஊறிக் கிடக்கிறது. "முன்னோர் எழுதியது வேத வாக்கு"! இந்த வறட்டுத் தனம் இரண்டு பக்கமும் (வேதநெறி, மனுநீதிக் காரர்கள் ஒருபக்கம், திராவிடச் சிந்தனையாளர் இன்னொரு பக்கம்) நிரம்பிக் கிடக்கிறது.
தொல்காப்பியத்தின் காலம் பற்றி என் முந்தைய இடுகைகளில் குறித்திருக்கிறேனே? இலக்குவனார், பாவாணர் ஆகியோரின் ஆய்வுகளும், இன்றையக் கொடுமணல் ஆய்வில் தமிழி எழுத்துக்கள் பற்றிய செய்தியும், தொல்காப்பியத்தின் காலத்தை இன்னும் பின்னுக்குத் தள்ளுகின்றன. கிடைத்திருக்கும் கல்வெட்டு, பானைப் பொறிப்புகளில் மிகப் பழமையாகத் தமிழிப் பொறிப்பும் (கி.மு.500), இலங்கையில் பாலி/பாகதப் பொறிப்பும் இருக்கின்றன. அசோகன் பெருமி (Asokan Brahmi) என்ற கதையெல்லாம் இனிமேல் பருப்புக்கு வேகாது. "இந்திய எழுத்துக்களின் தொடக்கம் தெற்கே" என்று வலிதான சான்றுகளோடு அகழாய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. தொல்காப்பியத்தின் காலம் இந்த முடிவுகளோடு தொடர்பு கொண்டது.
தமிழக வரலாற்றுவரைவு (historiography and not history) செங்குட்டுவன் - கயவாகு சமகாலம் என்று விசைமுனையில் தான் இது நாள் வரை கட்டப் பட்டிருக்கிறது. இந்த முனை தான் அசைந்து கொண்டு இருக்கிறது.
அகம் 70, கலித்தொகை 38 இரண்டையும் அடுத்துவரும் இடுகைகளில் பார்ப்போம்.
அன்புடன்,
இராம.கி.
அன்பிற்குரிய குமரன்,
இராம காதையில் வரலாற்றுச் செய்தி இருக்கிறதா என்று என்னால் சட்டென்று சொல்ல முடியாது. அதில் கலந்திருக்கும் தொன்மங்களையும், வரலாற்றையும் பிரித்து, கால நிலைகளை வரையறை செய்வது தேர்ந்த ஆய்வாளருக்கே முடியும். அது எனக்குத் தெரியாது. என் ஆய்வுக் களன் இராமாயணம் அல்ல.
சிலம்பிலும், சங்க இலக்கியங்களிலும் கூட வரலாறும் தொன்மமும் கலந்தே இருக்கின்றன. அவற்றில் எது வரலாறு, எது தொன்மம் என்று ஓரளவு செல்ல முடியும். நான் பழகிய களன் என்பதனால் எனக்கு அது அணியமாய் அமைகிறது. இருந்தாலும் ஆய்வு என்பது முடிவில்லாதது. நம் முடிவுகள் பின்னால் வரும் ஆய்வாளரால், புதிய தரவுகளால் மறுபார்வைக்கு உட்பட்டு, வரலாறு தொன்மமாகவும், தொன்மம் வரலாற்று நிகழ்வாகவும் ஆகலாம். நான் ஏற்கனவே சொன்னது போல சங்க கால ஆய்வில் நிறைய இடைவெளிகள் இருக்கின்ரன. இன்னும் ஒரு ஒன்றியமை (consistency) ஏற்படவில்லை.
காட்டாக, அவ்வைக்கு அதியமான் காட்டில் கண்ட நெல்லிக்கனியைக் கொடுத்தது உண்மையாக இருக்கலாம். அதே பொழுது, அது சாவா வரம் கொடுக்கும் நெல்லிக்கனி என்பது தொன்மமாகவே தோற்றம் காட்டுகிறது. இப்படிப் பழமரபுகளையும், தொன்மத்தையும் சல்லடை போட்டுப் பிரிப்பது மிகப் பெரியவேலை.
அன்புடன்,
இராம.கி.
அன்புள்ள பெயரில்லாதவருக்கு,
சேது என்ற சொல் பற்றி இனி வரும் பகுதிகளில் எழுதுவதாக இருக்கிறேன். நான் அறிந்தவரை அது தமிழ்ச்சொல்லே. அதே பொழுது, அது வடசொல்லாகக் குறிக்கப் படும் என்றும் அறிவேன். அதைப் பற்றிய விவரமும் கொடுப்பேன். இரு சொற்பிறப்பிற்கும் இடையே உள்ள நுண்ணிய வேறுபாட்டையும் அந்த இடுகையிலேயே குறிப்பேன்.
சேது என்பது தமிழில்லை என்று ஆகுமானால், அப்புறம் செய்தல், சேர்தல், சேர்த்தல் என்ற அடிப்படைத் தமிழ் வினைச்சொற்களும், சேறு என்ற இயல் பெயர்ச்சொல்லும் கூடத் தமிழில்லை என்று ஆகிப் போகும். ("இது சங்கதம், அது சங்கதம்" என்று நீட்டி முழக்கி தமிழில் 40% அளவிர்கு வடசொற்கள் என்று அடிமடியிலேயே கை வைப்பவர்கள் உண்டு. ஏரணத்தின் மூலமாகவே "இது தமிழா, தமிழில்லையா?" என்று நிறுவ வேண்டியிருக்கிறது.)
பொதுவாக, நிகண்டு என்று வந்தால் நாம் திவாகரம் (9 ஆம் நூற்றாண்டு) வரையே போக முடியும். அதற்கு முந்திய தமிழ் நிகண்டுகள் எல்லாம் பல்வேறு காரணங்களால் அழிந்து போய்விட்டன. தொல்காப்பியத்தில் உள்ள உரிச்சொல் தொகுதி மிகவும் குறுகியது. ஒருங்கமாகச் செயல்படுத்திய (organized) அழித்தொழிப்பில் இருந்து மீண்டும் தமிழ் எழுவது மிகப் பெரும் வேலை.
தமிழகத்திற்கும், ஈழத்திற்கும் இடையில் உள்ள மண் திட்டுத்தான் இராம சேது என்பதை நான் ஏற்பவனில்லை. அந்த மண்திட்டு தமிழக வரலாற்றில் ஒரு முகன்மையான இடம் வகிக்கிறது. ஆனால், அது வேறு காரணங்களுக்காக. இராம காதைக்காக அல்ல.
அதே பொழுது இராமனை நான் வணங்குகிறேனா என்றால், வணங்குகிறேன். இராம காதை எனக்கு ஒரு தொன்மம்.
அன்புடன்,
இராம.கி. .
அன்பிற்குரிய V,
சேது என்பது தமிழ்வழி வந்த சொல்லே என்று நான் கருதுகிறேன். அதற்குரிய விளக்கம் இனிமேல் வரும்.
சேது பந்தனத்தை சேதுமந்த் என்று ஆக்கி ஆப்கானிய ஹெல்மாண்ட் உடன் பொருத்துவது எனக்குத் தெரியாது. தேடிப் பார்க்கிறேன்.
அன்புடன்,
இராம.கி.
அன்பிற்குரிய பெயரில்லாதவருக்கு,
தங்களின் கனிவிற்கு நன்றி.
அன்புடன்,
இராம.கி.
அன்பிற்குரிய குமரன்,
"வடமொழியாளர் இராவணனை அரக்கன் என்று சொல்லுவதற்கு முன்னாலே நம் சங்கப் புலவர்களே சொல்லியிருக்கிறார்கள்" என்ற கால நிலை எனக்கு ஒப்புதல் இல்லை. முன்னே நான் சொன்னது போல், வான்மீகி இராமாயணத்தையும், சங்கப் பாடற் குறிப்பையும் நான் ஒப்பிட்டுப் பார்க்கவில்லை. அது என் களன் இல்லை. அதே பொழுது அரக்கன் என்ற சொல்லாட்சி இந்தியத் துணைக் கண்டத்தில் எப்படி எழுந்திருக்கலாம் என்று சொல்ல முற்பட்டிருக்கிறேன்.
என் சிந்தனைப் போக்கிலேயே இந்த இடுகையைத் தொடர்ந்து முடிக்க விழைகிறேன். முடிக்கும் வரை பின்னூட்டம் இடுவோர் பொறுமை கொண்டால் நல்லது. "தங்கள் எதிர்பார்ப்பை" என் வாய்க்குள் தேடுவதைத் தவிர்த்தாலும் நல்லது.
அன்புடன்,
இராம.கி.
அன்பிற்குரிய மணிவண்ணன்,
உங்களின் அறிவுறுத்தலுக்கு நன்றி. குறியேற்றம் கலந்து வந்த பிழையைச் சரி செய்து மீன்தும் அந்த மறுமொழிகளைப் பதித்து இருக்கிறேன்.
அன்புடன்,
இராம.கி.
இராம்கி
சேதுமந்த் ("பாலங்கள் உள்ள ") என்ற சொல் வேதசமஸ்கிருதத்திலேயும் வருகிரது, அதன் மொழிகுணத்தில் அருகாமையில் இருக்கும் தொல் இரானிய மொழில்யிலும் (Haetumant ஆக)வருகிரது.
Michael Witzel : Early Indian History, textual parameters:
It is interesting to note that , however , that some of these names are found in Iranian forms closer to the older RigVedic home of the vedic tribes: the Rasa as the Ranha (the mythicaல் river of the Avesta), the Sarayu as the Harouiiu in the Herat area, the Saraswati as the Haraxvaiti ('the one with many ponds'), in Sistan/Helmand (Setumant 'the one with dams'), the Gomati as Gomal ('one with the cows')
புரிந்ததோ இல்லையோ, வாசிக்க திகைப்பும்(பிரமிப்பு), ஆச்சரியமுமாய் இருக்கின்றது உங்கள் பதிவுகளும், பின்னூட்டங்களும்.
அன்பிற்குரிய V,
சேது பற்றிய பயன்பாடு வேதப் புழக்கத்தில் இருந்ததைப் படித்திருக்கிறேன். ஆனால் அதன் முதற் பொருள் பாலம் அல்ல. அணை, கரை போன்றவையே. சேது பற்றி இந்த இடுகையின் 4-ஆவது பகுதியில், அல்லது 5 - வது பகுதியில் இது பற்றிப் பேசுவேன். நீங்கள் சுட்டிக் காட்டும் மைக்கேல் விட்சலின் குறிப்பும் அணை என்றே பேசுகிறது.
அன்புடன்,
இராம.கி.
அன்பிற்குரிய தருமி,
உங்கள் வருகைக்கும் கனிவிற்கும் நன்றி. எங்கு புரியவில்லை என்று சொன்னால், மேலும் விளக்கம் கொடுப்பதற்கும், இன்னும் எளிதாக்குவதற்கும் வாய்ப்பாய் இருக்கும். பலருக்கும் இந்தப் பதிவு பயன்பட வேண்டும் என்றே விழைகிறேன். தமிழ் வரலாற்று ஆய்வுகளைத் தேடிப் போய்ப் படிக்கும் வழக்கம் கூடவேண்டும் என்றும் எண்ணுகிறேன்.
அன்புடன்,
இராம.கி.
//ஆனால் அதன் முதற் பொருள் பாலம் அல்ல. அணை, கரை போன்றவையே. //
இராம.கி. ஐயா,
குலசேகராழ்வாரும் அணை என்றே சொல்கிறார்.
மலையதனால் அணை கட்டி மதிளிலங்கை அழித்தவனே!
அலைகடலைக் கடைந்து அமரர்க்கு அமுதருளிச் செய்தவனே!
கலை வலவர் தாம் வாழும் கணபுரத்தென் கருமணியே!
சிலை வலவா! சேவகனே! சீராமா! தாலேலோ!
இராம கி ஐயா
////ஆனால் அதன் முதற் பொருள் பாலம் அல்ல. அணை, கரை போன்றவையே. //
ஆழ்வார்களும் அணை என்றே குறிக்கிறார்கள்.
கம்பரும் சேது, அணை என்ற சொற்களையே பயன்படுத்துகிறார்.
எய்தி யோசனை ஈண்டு ஒரு நூறுடன்
ஐயிரண்டின் அகலம் அமைந்திடச்
செய்ததால் அணை என்பது செப்பினார்
வைய நாதன் சரணம் வணங்கியே
- சேது பந்தனப் படலம்.
குரக்கினத்தாலே குரைகடல்தன்னை
நெருக்கிஅணைகட்டி நீள்நீரிலங்கை
அரக்கர்அவிய அடுகணையாலே
நெருக்கிய கைகளால் சப்பாணி
நேமியங் கையனே சப்பாணி
இதிலும் அணை என்றே குறிக்கின்றார் பெரியாழ்வார்
Hello Mr. Ki. Irama: Very good post. But we shouldn't always look into the Sanka literatures to justify our arguments. Lot of these literatures might've been "touched" up. Here is a "research" paper on the names "Asurar", "Arakkar" and "Ratchathar"!
*******
More evidence of who the Indus Valley people were is found in the translations of the Vedas ( which were written by the Aryans who came to India some 3500 years ago) by H.H. Wilson, Ralph Griffith, and A.A. McDonnell and A.B. Keith in English and by M.R. Sambunatha Iyer in Tamil. The Indus Valley people are described as noseless, black and godless barbarians. They are called Dravidians, Thasar, Thayook, Asurar, Arakkar, Rakshather and Sutra. They are also described as anti-gods, chandalas, milechas, sons of prostitutes and in many other derogatory terms. However, their courage and fighting abilities are praised. There are several reference to the town of Hariyupa (later became Harappa).
Some of the many major kings of the Thasar (Tamils) referred to in the Vedas are Samparan, Varacinan, Viruthiran and Susunan with whom the Aryans fought many battles. With Samparan they fought over a period of 40 years. Several sub-rulers and army chiefs are also mentioned. Thanu who went to the battle front to help her son Viruthiran and Kiraki and Arayi, wives of the sub-ruler Kijava, who also went to the front are some of the heroines mentioned. Even today these names are common in parts of Tamil Nadu. The army of the Tamils had women battalions.
The Vedas also refer to the Dravidians occupying the whole of the then known India from the Himalayas to Cape Comrin. They also mention that during the war the Aryans killed hundreds of thousands of Tamils, took several as slaves, destroyed several cities and fortresses, plundered their wealth, broke dams against rivers and bunds of tanks thus inundating the areas, and took their livestock and weapons.
*******
http://www.sangam.org/ANALYSIS/Heritage.htm
Dear sir,
you are using the word called 'inakkuzhu', but is it not 'parambarai' like chozhar parambarai or cherar parambarai meaning to northern eqvalent word called 'vamsam'... which leads to the branch word 'parambariyam'. as you are discussing about 'ssollaTchi' i am just highlighting this to you with my humble knowledge...
regards
saravana from UK...
Post a Comment