Wednesday, December 28, 2022

தமிழில் வணிகம்

நம்மூரில் விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கான கையேடுகள் தமிழில் இருப்பதில்லை. நாம் கொஞ்சமும் கவலுறாமல் அப் பண்டங்களை வாங்குகிறோம். வேறு எந்த நாட்டிலும் இப்படி நடப்பதில்லை. ”தமிழில் கையேடு இல்லையா? நீ எங்களூரில் விற்க முடியாது” என்று சொல்ல நம் மாநில அரசுக்கு முழு உரிமையுண்டு. ஆனால் நம் மாநில அரசு சொல்லாதிருக்கிறது. இதைச் செய்யும் படி அழுத்தம் கொடுத்தால் பண்டம் பயன் படுத்துவது தமிழ்க் கையேட்டால், தானே நடக்கும். ஆங்கிலம் படிக்காதவர் அடுத்தவரை நாடும் இழிநிலை இங்கு குறையும். ஆங்கிலத்தை வைத்துப் படித்தவர் படிக்காதவர் மேல் ஆட்சிசெய்யும் சுமையும் குறையும். நம் மக்களுக்கு ஆங்கிலத்தின் மேலுள்ள மோகம் குறையும். தமிழிலேயே வணிகம் செய்யமுடியும் என்ற தன்னம்பிக்கை பிறக்கும். தமிழருக்கு வேலை அதிகமாய்க் கிடைக்கும். இற்றை நாளில், கணக்கற்ற தமிழ்வழி படித்தோருக்கு வேலை கிடைக்காது போவதால், கல்லூரியில் வழங்கும் தமிழ்ப் படிப்பையே பலரும் தவிர்க்கிறார். கையேடுகளின் மொழிபெயர்ப்பு மூலம் கணிசமான இளைஞருக்கு வேலை கிடைக்கும். தமிழ்ச் சொவ்வறைகள் (softwares) உருவாகும். வணிகத் துறையின் ஆட்சிமொழி ஆங்கிலமாய்த் தொடர்ந்து இருக்காது. தமிழ் கொஞ்சங் கொஞ்சமாய் அதில் செழிக்கும். நம் ஆங்கில அடிமைத்தனம் குறையும்.

தமிழரில் பலரும் இவற்றை எண்ணிப் பார்த்துச் செயற்படுக. பொதுவெளியில் தமிழின் தேவையைக் கூட்டாமல் தமிழ் நிலைக்காது. தமிழ்நாட்டு வணிகம் உள்ளகல் (local) ஆகாது.

Thursday, December 08, 2022

பெருமாண்டம்>ப்ரம்மாண்டம்.

 அண்மையில் நண்பர் கதிர், ப்ரம்மாண்டம் என்ற சொல்லிற்கானத் தமிழிணைச் சொல்லைக் கேட்டிருந்தார். 

மாத்தல் என்பது தமிழில் அளத்தலைக் குறிக்கும் வினைச்சொல். தவிர, மா என்ற ஓரெழுத்தொரு மொழி "பெரியது" என்ற பொருளையும் குறிக்கும். மால் என்று சொல்லினும் உள்ள பொருள் பெருமையே. (மாலுக்கு கரும்பொருளும் உண்டு.) "மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்" என்ற பழைய திரைப்பாடல் வரி நினைவிற்கு வருகிறதா? அதில் வரும் மா என்ற முன்னொட்டு "பெரிய" என்ற பொருளைக் கொடுக்கிறது. அளத்தலில் இருந்து நீட்சி பெற்ற கருத்துத் தான் பெரிது படுத்தல் என்பதும்.

மாலுதல்= பெருமைப் படுதல். மால்>மாள் எனத் திரிந்தாலும் கருமை, பெருமைப் பொருள்களைச் காட்டும். மாளிகை = அரண்மனை,  மாடமுள்ள பெரியவீடு. மாடம் = உப்பரிகையுள்ள வீடு; மாடி = உப்பரிகை.  மாடமாளிகை = மாடிவீடு; மாட்சி (அ) மாட்சிமை = பெருமை. இனி மாள் என்பது மாணாய்த் திரிந்தாலும் மாட்சிமையையும் குறிக்கும்.; மாடு>மடங்கு என்பதும் பெருகலைக் குறிக்கும். மாண்டல் = மாட்சிமைப் படுதல்; மாண்பு = மாட்சிமை; மேலிடம்; “மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்” - புறம் 191. மாண்ட  என்ற சொல் எட்டுத் தொகையில் 25 முறையும், மாண்டது என்பது 2 முறையும், மாண்டன்று என்பது 1 முறையும், மாண்டன என்பது 1 முறையும், மாண்டனை என்பது 1 முறையும் பயின்று வந்துள்ளன. மாணம், மாணல் = மாட்சிமை; மாடை = பொன்; அரை வராகன். மால்குதல்>மாகுதல்> மாகம் = மாகாணம்= மாநிலம்; மாத்து= பெருமை, மாத்தவம் = பெருமை;  மாத்தகை = பெருந் தகுதியுள்ளவன். மாநிலம் = நாட்டின் பெரும்பிரிவு; மாமாத்து = மிகப் பெரியது.  இவ்வளவு காட்டுகளுக்கு அப்புறமும் மாண்டம் என்பது தமிழில்லை என்போமா?

பெரு என்ற முன்னொட்டு சங்கதத்தில் ப்ர என்று திரியும். ஒரு சிலவற்றை மட்டும் இங்கு காட்டுகிறேன். பெருவுடையார்> ப்ரகதீசர்.பெருகாயம்> ப்ரகாசம், பெருஞ்சாதம்> ப்ரசாதம், பெருதரம்> ப்ரதரம், பெருந்தாபம்> ப்ரதாபம், பெருவண்டம்> ப்ரபஞ்சம், பெருவலம்> ப்ரபலம், பெருவல்>ப்ரபு, பெரும்போதம்>ப்ரபோதம், பெருமான்>ப்ரமன், பெருமதேயம்> ப்ரமதேயம், பெரும் ஆதம்> ப்ரமாதம், பெருமுகன்>ப்ரமுகன், பெரும் ஓதம்> ப்ரமோதம், பெருமாட்டி>பெருவாட்டி>ப்ராட்டி, 

மாண்டத்தின் தொடர்பில் இன்னும் பல சொற்கள் இருக்கின்றன. macro என்பதற்கு இணையாக மாக, மாகிய என்பவற்றைச் சொல்லலாம். மதித்தல் வினை கூட,  மாத்தலில் இருந்து பிறந்தது தான். macro size என்பது பெரிது படுத்தப்பட்ட அளவு. மாத்தல் எனும் பிறவினைக்கு இணையான தன்வினை மாதல்; மா ஆகுதல் > *மாகுதல் > மாதல். சொல்லைப் பலுக்கும் எளிமைக்காக குகரம் நம்மிடையே இயல்பாய் உள்நுழையும். பகுதல் என்ற பிரிப்பு வினை பாதல் என்றும் பின் நெடிலாக உருமாறிப் பாகுதல் என்றும் வருவதைப் போல இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மொழி என்பது பொதுவாக நெகிழ்வானது; அது திண்ணிதாய் இருந்துவிட்டால் அப்புறம் வளர்ச்சியில்லை. அங்கும் இங்குமாய் அது நீளும் போதும், திரியும் போதும் புதிய பயன்பாடுகள், புழக்கங்கள், பொருட்பாடுகள் அதற்கு வந்து சேருகின்றன. மிகுந்து ஊற்றுவதை மகுந்து ஊற்றுவதாக சிவகங்கை வட்டாரத்தில் சொல்வார். மக ஈசன் மகேசன் என வடமொழிப் புணர்ச்சியில் வரும். அதைக் கொஞ்சம் நீட்டி மாகேசன் என்றும் சொல்வார். மக்கள் என்ற சொல்லை நீட்டி மாக்கள் என்று திரித்து இன்னொரு வகையினரைக் குறிப்பார். மக்களைக் காட்டிலும் மாக்கள் கொஞ்சம் உடலால் பெரியவர் என்று பொருள். மா என்ற ஈறு விலங்கைக் குறிக்கும். விலங்கைப் போன்று வலிமை கூடி இருப்பவர் மாக்கள்.

மாகுதல் வினை அடிப்படையில் மாதல் பொருள் கொண்ட வினையே. மொழிநீட்சியில் அதைப் புழங்கவேண்டிய காலம் வந்துவிட்டது என்றே நான் கருதுகிறேன். மாக, மாகிய எனும் பெயரடைகளைச் சொல்லும் போது மாகுதல் வினை வாகாய் அமையும். macro meter= மாக மாத்திரி அல்லது மாகிய மாத்திரி. இது "பெரிய மாத்திரி" என்ற பொருளைக் கொள்ளும். மீட்டர் என்ற மேலைச்சொல் கூட அளவுதல் வினையின் வழி செந்தர அளவுகோலான மாத்திரியைக் குறிக்கும். மாத்திரி என்ற அடிப்படைச் சொல்லோடு "மாக" என்பது மட்டுமல்லாமல், இன்னும் பல்வேறு முன்னொட்டுக்கள் சேரும். மாக என்ற சொல்லிற்குள் ரகரம் உள்நுழைவது இந்தையிரோப்பியப் பழக்கம்.

இந்தையிரோப்பியம் முதலா, தமிழியம் முதலா என்ற ஆட்டத்திற்குள் நான் வர விரும்புவதில்லை. பலரும் உணர்ச்சி வயப்பட்டு தடம் மாறிப் போகிறார். ரகரம் நுழைவது, யகர, வகரங்கள் நுழைவது இன்னும் இது போன்ற சொல் திரிவு விதிகளைப் புரிந்தால் தான், இந்தையிரோப்பியம், தமிழியம் ஆகிய மொழிக் குடும்பங்களுக்கு இடையே உள்ள இணைச் சொற்களை இனங் காணலாம் என்று மட்டுமே நான் சொல்கிறேன். எது முதல் என்ற ஆட்டத்தில் பல வடமொழியாளர் போய், நம்மைக் காயடித்தது ஒரு காலம்; நாமும் அதே ஆட்டத்தில் உள் நுழைந்து, ஆற்றலை வீணாக்கி, உணர்ச்சி வயப் பட்டு, இவ் ஒப்புமைகளை மறந்து தொலைக்க வேண்டாம். இப்போதைக்கு மாக, மாகிய என்பது macro என்பதற்கு இணையான சொற்கள் என்பதோடு அமைவோம்.

macro வோடு, magnitude என்பதையும் காணலாம். தமிழில் எண்மானம், பிடிமானம், அவமானம், தன்மானம் எனப் பல்வேறு மானச் சொற்கள் உண்டு. அதில் வரும் மானம் எதைக் குறிக்கிறது என்று நினைக்கிறீர்கள்? எல்லாமே magniude =  அளவு என்பதைக் குறிக்கிறது. எண்மானம் என்பது எண்ணின் அளவு. பிடிமானம் என்பது பிடிப்பின் அளவு. கொஞ்சமாவது பிடிமானம் இருக்க வேண்டும் என்று சொல்லும் போது அந்தக் கொஞ்சம் என்ற கருத்து உள்ளூற அளவுக் கருத்தை உணர்த்துகிறது இல்லையா? அவமானம் என்பது முற்றிலும் தமிழே; வடமொழியல்ல. அவத்தின் மானம் அவமானம். அவம் என்பது கீழ் நிலைமை. "அவலா கொன்றோ, மிசையா கொன்றோ" என்ற புறநானூற்று வரியில் அவல் என்பது கீழ்நிலை இடத்தைக் குறிக்கிறது. அவலில் இருக்கும் நிலை அவம். (பல இடங்களில் லகரமும், மகரமும் தமிழில் போலி.) 

தன்னைப்பற்றிய அளவு தன்மானம். "தான் இப்படியானவன்; இதைத் தாங்க மாட்டாதவன்" என்னும் போதும் ஓர் அளவுகோல் வந்துவிடுகிறது. இங்கே சொன்ன எல்லாமே magnitude என்பவைதான். மானம் என்ற சொல் இதைத்தான் குறிக்கிறது. மா என்ற சொல்லிற்கே ஒரு வேலியில் 20 இல் ஒரு பங்கு = 1/20 என்ற பொருளுண்டு. அளவிடுகின்ற செயலை மானித்தல் என்று தமிழில் சொல்வோம். மானம் = பெருமை

magnify என்பதும் நாம் கவனிக்க வேண்டியதே. இங்கே வெறும் அளவுமட்டும் இல்லாமல், பெரிதாக்கும் பொருளும் இருக்கிறது. மானப்படுத்து என்றால் பெரியதாக்கு என்ற பொருள் சட்டென்று தோன்றாமல் போகலாம். எனவே இதைப் மாகப் படுத்து என்று சொல்லுவது இணையாய் இருக்கும்.

much என்ற சொல்லும் மாத்தலின் வழி வந்தது தான். நீரை ஒரு கலத்தில் ஊற்றிக் கொண்டே வரும் பொழுது அது விளிம்பில் இருந்து கொட்டுகிறது பாருங்கள் அதை மகுதல்>மகுருதல் என்று எங்கள் பக்கத்தில் சொல்வார். இந்த மகுவும் மிகுவும் தொடர்புள்ள சொற்கள். இருந்தாலும் மிகுதல் = to exceed என்ற பொருளைச் சட்டென்று குறிப்பதால், மகுதல் என்றும் அதன் முன் திரிபான மொகுதலையும் உரிய வினையாகக் கையாளலாம். multiply என்பதைக் குறிக்கும் மல்குதல் என்ற சொல்லும் மகுதல் என்று பேச்சுவழக்கில் ஆவதால், மொகு என்பதே much ற்கான என் பரிந்துரை. much என்பதற்கும் more என்பதற்கும் நுணுகிய வேறுபாட்டை ஆங்கிலத்தில் சொல்வார். Much water has flown through the river = மொகுந்த நீர் ஆற்றின் வழியே பெருகியிருக்கிறது / விளவியிருக்கிறது.

இதற்கு அடுத்து மல் என்னும் வேரில் கிளைக்கும் 3 சொல் தொகுதியைப் பார்க்கலாம். முதலில் multi இதை மிகச் சுருக்கமாய் மல், மல்கு>மகு என்றே சொல்லலாம். மல்கிப் பெருகுதல் என்ற வழக்குத் தமிழில் கால காலமாய் உண்டு. multiply என்பதை இக்காலப் பேச்சுவழக்கில் பெருக்குதல் என்றே சொல்லிவருகிறோம். இருந்தாலும் இலக்கிய வழக்கில் மல்குதல் வினை இருந்துள்ளது. மல்குதல் என்பதைத் திரித்துப் பேச்சுவழக்கில் மலிதல் என்றாலும் பெருகுதல் பொருளைத் தரும். மல்குதல்/மலிதல் என்பவை தன்வினையில் வரும் சொற்கள். அதே சொல்லை மலித்தல் என்று சொன்னால் அது பிறவினையாகிவிடும். Please multiply two by five = இரண்டை ஐந்தால் பெருக்குக/மலிக்குக. 

பெருக்குதல் என்பது "கணக்கதிகாரம்" போன்ற தமிழ் நூலில் பேச்சு வழக்குச் சொல்லாகத் திரிந்த முறையில் பருக்குதல்>பழுக்குதல் என்றும் குறிக்கப் பட்டிருக்கிறது. இது போக மல்தல் வினை, மால்தல் என்று நீண்டு, பின் புணர்ச்சியில் மாறல் என்றும் ஆகி, பெருக்கல் வினையைக் குறிக்கிறது. மாறல் என்ற இச்சொல்லும் "கணக்கதிகாரம், கணித நூல்" போன்றவற்றில் multiplication என்பதற்கு இணையாகப் பெரிதும் ஆளப் பட்டிருக்கிறது. 

இந்நூல்களில், ஓர் இழுனை அளவைக் (linear measure) கொடுத்து, அவற்றால் ஏற்படும் சதுரங்களின் பரப்பு அளவை (area measure) கண்டு பிடிக்கும் வேலைக்கு "பெருங்குழி மாற்று, சிறுகுழி மாற்று" என்ற சொற்கள் பயன்பட்டிருக்கின்றன. இன்றைக்கு மாற்றுதல்/மாறல் என்ற சொற்கள் வேறு பொருள் கொள்ளப் படும் என்பதால், முந்தைய வடிவமான மலித்தல் என்பதையே நான் பெருக்குதலோடு சேர்ந்து இங்கு பரிந்துரைக்கிறேன். 

பெருக்குதல், மலித்தல் என்பவை போக இன்னொரு சொல்லும் அகரமுதலிகளில் இருக்கிறது. அது குணித்தல்/குணத்தல் என்று சொல்லப்படும். பெருக்கல் என்பது விரிந்த கூட்டல் (extended addition) என்ற முறையில் தொடர்பு காட்டினால், குணித்தல் என்பது கணித்தலோடு தொடர்புள்ளது; கணித்தல் கூட்டலோடு முதலிலும், நாளடைவில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என்னும் நான்கு செயற்பாடுகளையும் குறிக்கத் தொடங்கியது. இன்றைக்குக் கணித்தல் சொல்லின் பொருட்பாடு மேலும் விரிந்திருக்கிறது. ஆகப் பெருக்கல், மலித்தல், குணித்தல் என மூன்று சொற்கள் தமிழில் பெருக்கற் கருத்தைச் சொல்ல வாகாக உள்ளன. அவ்வகையில் நிகண்டுகளிலும், அகரமுதலிகளிலும் குறிக்கப்படும் குணகாரம், குணனம் = பெருக்கல், குணித்தல் = பெருக்குதல், குணகம் = பெருக்கும் எண், குண்ணியம், குணனீயம் = பெருக்கப்படும் எண், குணிதம் = பெருக்கிவந்த தொகை என்ற சொற்களையும் நாம் புரிந்து கொள்ளலாம்.

அடுத்த சொல்  multitude; இது மல்குதல்/மலிதல் வினையில் இருந்து உருவான பெயர்ச்சொல். மல்கிக் கிடப்பதால் இதை மல்கணம் என்றே அழைக்கலாம்.

இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். நான் அறிந்தவரை பெருமாண்டம் என்பதே சங்கதத்தில் ப்ரம்மாண்டம் என்றாகியுள்ளது.  


Monday, December 05, 2022

வனம் என்பது தமிழ்ச்சொல்லா?

இருவேறு நண்பர்கள் தனிமடலில் “வனம்” என்பது தமிழ்ச்சொல்லா? - என்று கேட்டார். என்விடை பொதுவிலும் இருப்பது நல்லது என்று இங்கு பதிகிறேன்.   

 நீர்க்கடல் என்ற சொல்லில் வரும் கடலுக்குச் செறிவென்ற பொருள் உண்டு. நீர் செறிந்தது நீர்க்கடல். நாளாவட்டப் புழக்கத்தில் சொல்வோருக்கும் கேட்போருக்கும் புரிந்த நிலையில் நீர் என்பதைத் தொக்கி,  வெறுமே கடல் என்றாலே ocean என்று புரிந்து சொல்லைச் சுருக்கத் தொடங்கினார். அதுபோல் வேறு மொழிகளிலும் உண்டு. காட்டாகச் சங்கதத்தில் ஜல சமுத்ரம் என்ற சொல்லில் சொல்வோருக்கும் கேட்போருக்கும் புரிதல் ஏற்பட்ட காரணத்தால் ஜல என்பதைத் தவிர்த்து வெறுமே சமுத்ர என்றாலே ocean என்று புரிந்துகொண்டார். 

இதே போல் மரங்களின் செறிவு கூடிய இடம் மரக்காடாகி நாளடைவில் மரம் என்பதைத் தொக்கி, காடு என்றாலே  மரங்களின் செறிவு மிக்க இடம் என்று சுருக்கிக் கொள்ளப்பட்டது.  ஏனெனில் கடு என்பதற்கு மிகுதி, செறிவு, அடர்த்தி என்ற பொருள்கள் உண்டு.  இதனால் கடுத்தது (=செறிந்தது, அடர்ந்தது)  காடு என்று புரிந்துகொள்ளப் பட்டது. இன்னொரு  சொல்லைப் பார்ப்போம். வல்>வலிமை, வல்>வலு, வல்>வன் போன்ற சொற்கள் எல்லாமே செறிவு, இறுக்கம், கடுமை போன்ற பொருள்களை வன் என்ற சொல்லிற்குக் கொடுக்கும்.  எனவே மரங்கள் செறிந்ததைக் காடு என்பது போலவே வனம் என்ற சொல்லும் காட்டும். 

வன்கண், வன்கனத்தம், வன்கனி, வன்காய், வன்காந்தம், வன்காரம், வன்காற்று, வன்கிடை, வன்கிழம், வன்கை, வன்கொடுமை, வன்கொலை, வன்சாவு, வன்சாவி, வன்சிரம், வன்சிறை, வன்சுரம், வன்சொல், வன்துருக்கி, வன்நெஞ்சம், வன்பகை, வன்பாதல், வன்பாட்டம், வன்பாடு, வன்பார், வன்பால், வன்பிணி, வன்பிழை, வன்பு, வனபுல், வன்புலம், வன்புற்று, வன்புறை, வன்பொறை, வன்மம், வன்மரம், வன்மரை, வன்மா, வன்மான், வன்மீன், வன்முறை, வன்மை, வன்மொழி, வன்றி, வன்றொடர் என்ற சொற்களை வலிமை,, செறிவு  இறுக்கம், கடுமைப் பொருளில்  தான் கையாள்கிறோம். 

இது தமிழின் இயல்பாகின், இதையொட்டி வன்+அம் = வனம் என்ற சொல் எழாதா? காடு என்ற சொல் ஏற்பட்டது போல், வனம் என்ற சொல் எழாதோ? தமிழ் மட்டும் ஏதோ அரைகுறை மொழியோ?  அதேபொழுது ஏதோ ஒரு குழறுபடியில், நம் தனித்தமிழ் அகரமுதலிகளில் வனம் என்ற சொல் இல்லை தான். 19/20 ஆம் நூற்றாண்டுகளில் அப்படி ஓர் முடிவு ஏற்பட்டது ஏன் என்று எனக்குத் தெரியது.  ஆனால் ஏரணப்படி நம் சொல் வளர்ச்சி பார்த்தால் வனம் என்ற சொல் அவ்வகரமுதலிகளில் இருந்திருக்க வேண்டும். இறுக்கமான காழைக் கொண்ட மரமான வன்னி மரத்தை எண்ணிப் பாருங்கள், வன்னிமரம் தமிழானால், ஏராளமான மரங்கள் செறிந்து கிடக்கும் காட்டை வனம் என்று தமிழன் சொல்லான் என்பது விந்தையாக உள்ளது. 

என்னால் அப்படிச் சொல்ல முடியாது. என் சிந்தனையில் அது தமிழே.   

Monday, November 14, 2022

நல்லம்

நல் என்ற வார்த்தைக்கு கரிய, கருமை என்ற பொருள் இருக்கிறது என்று படித்தேன். நல்ல பாம்பு, நல்ல எண்ணெய், நல்லிரவு இவையெல்லாம் கருப்பு என்ற நிறத்தையே குறிப்பதாக படித்தேன். இது எந்த அளவு உண்மை? - என்று நண்பர் @Selva Murali கேட்டிருந்தார். இந்த இடுகையில் அது குறித்துப் பேசுகிறேன்.

யா என்ற ஓரெழுத்தொரு மொழிக்குக் கருமையும் ஒரு பொருள். சொல்லாய்வறிஞர் அருளியார் ”யா” என்ற தலைப்பில் ஒரு தனி நூலே வெளியிட்டுள்ளார். அதில் கருமைப் பொருளுமுண்டு. அதில் இன்னும் பல சொற்களுக்குக் கருமைப் பொருள் சுட்டிக் காட்டுவார்.அந்நூலில் இருந்து சில காட்டுகளை மட்டும் இங்கே நான் குறிக்கிறேன். மேலும் விவரம் வேண்டுவோர் முழு நூலையும் தேடிப் படியுங்கள். 

அருளியாரின் ஆய்வால் தான் ய>ஞ>ந என்ற தமிழ் ஒலித்திரிவு விதியைக்  கண்டுகொண்டோம். தமிழில்  பல சொற்கள் இவ்விதியைப் பின்பற்றித் தம் ஒலிப்பில் மாறியுள்ளன, யால்<ஞால்>நால் என்ற திரிவும் அதன் பாற்பட்டதே. யான்>ஞான்>நான், யாய்>ஞாய் என்பனவுங் கூட இதே திரிவில் எழுந்தவை தான்,    

யா மரத்தை Hardwickia binata விற்கு இணையாய் புதலியலில் (botany) சொல்வார். ”யானை” என்ற பெயர், அவ்விலங்கின் கருமை நிறத்தால் ஏற்பட்ட பெயர். அதே யானைக்கு யா>ஞா>நா என்ற விதிப்படி, நாகம் என்ற பெயரும் கருமைப் பொருள் சுட்டியும் உண்டு. யாடு>ஆடு, யானம்>யேனம்>ஏனம் = பன்றி, ஏனல் = கருந்தினை என்பனவும் இதோடு சேர்ந்ததே. யாமம் என்ற சொல்லும் கருத்துக் காட்சியளிக்கும் இரவைச் சுட்டும்.,  யாம்> நாம் = அச்சம் என்பதும் கரும் பொருளை ஒட்டி வந்ததே. யாந்தை> இருள்நேரப் பறவையான ஆந்தை, நாகம் = கருநிறப் பாம்பு. 

நாகர் = கருநிற மாந்தர், கருநிறத்தவரைக் குறிப்பதாய்,  இற்றை உலகத்தில்  பரவலாய்ச் சொல்லப்படும் negro என்ற பெயரும் நாகரோடு தொடர்புடையதே. நாகர்> நக்கர்> நக்கவரம் என்ற தீவும் இதே கருமைப் பொருள் ஒட்டி எழுந்ததே. யா> ஞா> நா விதிப்படி யாவல்> ஞாவல்> நாவல் (மரம், பழம்) என்பதும் எழும். இந்தியாவை ஒரு காலத்தில் தமிழர் குறிக்கும் சொல்லான நாவலந் தண்பொழில் என்பது இதன் நீட்சி. யால்>யாம்பி>ஆம்பி என்பதும் கருநிறக் காளானைக் குறிக்கும், யாம்>ஆம் = நீர். (நீருக்கும், முகிலுக்கும் ஆன பல சொற்கள் கருமைப் பொருளில் எழுந்தன. யால்>ஆல்>ஆலம் = நீர். யாறு>ஆறு என்பதும். யாமன்>நாமன்>நமன் என்ற கருநிற எமனைக் குறிக்கும் சொல்லும் இப்படிக் கருமையில் எழுந்ததன தாம்.

இனி, நல் மிளகு = கரு மிளகு; நல்ல சாமம் > நல்ல ஆமம் = நல்ல யாமம். நல்ல துவரம் = கடுகு. நல்ல துளசி = கருந்துளசி; அந்துவன் =கருமையானவன், நல்லந்துவன்=  கருமை கூடியவன் (அந்தமான் என்னும் தீவும் கூட அந்துவன் = கருப்பன் என்ற  பெயர்சார்ந்து இருக்கலாம். நல்ல பழாசு = black horey thorn; நல்ல பாம்பு = கரு நாகம். நல்லரிசி = கருப்புப் புட்டரிசி என்ற பல சொற்களையும் கவனியுங்கள். 

நல்லம் என்ற தனிச்சொல்லும் ”கருப்பு , கரி” யைக் குறிப்பதாய் தமிழில் உண்டு. தமிழ் நல்லமும், தெலுங்கு நலுப்பு , நல்ல, நல்லன, நல்லனி என்பவையும் தொடர்புள்ளன. ஆந்திரா, தெலுங்கானாவில் உள்ள சிங்கவேள் குன்றம் (அகோபிலம்) என்ற கோயில் இருக்கும் மலைத்தொடரை நல்லமலைத் தொடர் என்பார். பொதுவாய் தெற்கு மலைகள் கருங்கல்லாலும், மண்மேடுகளாலும் உருவானவை. இந்த மலைத்தொடரில் கருங்கல் அதிகமாயும். மண்மேடுகள் குறைவாயும் இருப்பதால் நல்லமலைத் தொடர் எனப்பட்டது. நல்ல மலை = கருங்கல் மலை. இம் மலைத்தொடர் செம்மரக் காடுகளுக்கும், முன்னாள் முதல்வர் இராசசேகர ரெட்டியின்  Helicoter crash க்கும் பெயர்பட்டது. மிடையங்களிலும் இச்செய்திகள் கூறப்பட்டன.

ஆல்<ஞல்>நல் என்ற திரிவையும் இங்கு சொல்லவேண்டும். அல்லங்காடி என்பது இரவு அங்காடி. அல்>நல் என்றும் திரிவு ஏற்படலாம். நால்வு = கருப்பு. நா(ல்)வல் = நாவல். இது நவ்வல், நலவல் என்றும் சொல்லப்படும். விதப்பாய், நவ்வல் என்பது இனிப்பு நாவலைக் குறிக்கும். நால்>நாள் என்பது முழு இரவைக் குறிக்கும் சொல். பின்னால் தான் நாளின் பொருள் விரிந்து  பகல், இரவு ஆகிய இரண்டையும் சேர்த்துக் குறித்தது. நல்லா= காராம் பசு;  நவரை = கருங்குருவை = black paddy. பாண்டி நாட்டில் குலதெய்வங்களுக்கு முன்னால் விளக்கை ஏற்றிப் படையல், பூசைகள் செய்த பிறகு, ”விளக்கை அமர்த்து” என்பதைச் சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் “விளக்கை நல்லா வை” என்னும் பேச்சு வழக்கில் தெரிந்து கொள்ளலாம். நல்லாக  வை = இருட்டாகும் படி வை..

முடிவாய் ஒன்று சொல்ல விழைகிறேன்.நல் என்பதற்குத் தமிழில் பல பொருள்கள் உண்டு. அதில் கருப்பு என்ற பொருளும் ஒன்று. நமக்கு ஐயமிருந்தால் முதலில் ஓர் அகரமுதலியைப் பார்க்கவேண்டும். அதைப் பாராமல், சற்று நேரம் செலவழிக்காமல், தான் தோன்றியாய்க் கருத்து உரைப்பது நமக்கு உதவி செய்யாது. 

இக்கட்டுரையில் கூறப்பட்ட எல்லாவிதப் பொருள்களுக்கும் முதல் ஆவணங்களைத் தேடுவதென்றால் செய்யலாம். 10,15 நாட்களும், இளமையும் இருந்தால் நான் அதிகமாகவே செய்யலாம். அப்புறம் உங்கள் உகப்பு. 


Monday, October 31, 2022

தமிழினத் தொடக்கம்.

உலகின் முதன்மொழி தமிழ் என்று தமிழ்நாட்டில் இருக்கும் சிலர் சொல்கிறார். இவர் தம் கருத்தை எந்த அனைத்து நாட்டு அரங்கிலும் வைத்ததில்லை. நம்மிடம் மட்டுமே நமக்கு உணர்வூட்டப் பேசுகிறார். அது அரசியல் பேச்சு. அறிவியல் பேச்சு அல்ல. மற்ற நாட்டு ஆய்வாளர் யாரும் (ஓரிருவர் தவிர) தமிழின் முன்மையை இன்னும் ஏற்கவில்லை நான் சொல்வது உங்களை உறுத்தலாம். ஆனால் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவது ஆய்வல்ல. தமிழ்க் குடும்பம் என்ப்து Nostratic என்ற பெருங்குடும்பத்தில் ஒரு பகுதி என்பது மட்டுமே இன்றைக்கு நிறுவக் கூடிய ஒன்று. அதைப் போகும் இடங்களிலெல்லாம் நான் பேசுகிறேன். பேரா. கு.அரசேந்திரனும் செய்கிறார். அதற்கு மேல் உலக முதன்மொழி என்று சொல்வதற்குத்  தரவுகள் இல்லை. 

குமரிக் கண்டம் என்ற தேற்றிலிருந்து, கற்பனையில் இருந்து வெளியே வாருங்கள் என்று அதனால் தான் சொல்லுகிறேன்.  இற்றை ஆய்வுலகம் out of Africa என்ற தேற்றைத் தான் பெரிதும் ஏற்கிறது. அது பற்றிப் பேசி விட்டேன். தமிழ் எங்கு ஏற்பட்டது? எனக்குத் தெரியாது ஐயா. அதற்கு முன் நாம் வேறு மொழி பேசினோமா? அதுவும் தெரியாது. ஆனால் தமிழ் மூத்த மொழிகளுள் ஒன்று என்று மட்டும் ஆணித்தரமாய்த் தரவுகளுடன் பேசுவேன். கி.மு. 10000, 20000 வரைக்குக் கூட நான் பேச முடியும். அதற்குமுன் என்ன நி்லை? எனக்குத் தெரியாது. நம்பிக்கையின் பேரில் நான் பேசுவதில்லை. அறிவியல் அடிப்படைகளின் பேரில் பேசுகிறேன். பழம் மாந்தன் இந்தியாவினுள் வரும்போதே தமிழ் பேசினானா? எனக்குத் தெரியாது. ஆனால் 20000 ஆண்டுகளுக்கு முன் தமிழ் தோன்றியிருக்கலாம். நான் குத்து மதிப்பு ஊகஞ்  செய்பவனும் இல்லை, சோதியனும் இல்லை.

தமிழருக்கும் எத்தியோப்பியருக்கும் பல பண்பாட்டு, ஈனியல் உறவுகள் தெரிகின்றன. தமிழருக்கும்  ஆத்திரேலியப் பழங்குடிகளுக்கும் கூடப் பண்பாட்டு, ஈனியல்  உறவுகள் தெரிகின்றன.     

உங்கள் அதிர்ச்சியிலிருந்து வெளியே வாருங்கள். பத்தில் ஒன்று தமிழ். எல்லாம் தமிழல்ல. கொஞ்சம் அசைபோட்டு அதை உள்வாங்குங்கள்.

என் கருதுகோளை இங்கு சேகரத்திற்காகப் பதிவு இட்டிருக்கிறேன். இது ஆங்கிலத்தில் உள்ளது  (அது ஆங்கிலத்தில் இயங்கும் குழு.) 

Around 65000 years ago, humans from Africa entered India through the coastal route. They traveled all the way to the south on the coast. A part of them remained and the rest moved through the eastern coast and peopled SE Asia and Australia. Some remained in SE Asia and later moved north to people China and others.. There was also a secondary emigration from the persons who remained in the deep South India. I believe in extended Kumari land but not in Kumari continent. A part of Kumari land Tamils ascended the Indian subcontinent and moved out through northwest route They mixed with the people remaining in middle east and Central Asia. Some of whom returned once again to Indus valley around 8000 BC and established their civilization. Further a group of them returned from Central Asia in 1800 BC. These are the Aryans. Melanin content in the human skin changed as per the climate in the respective regions. I don't know where Tamil language has germinated. But definitely it achieved its zenith in Tamilnadu.

The above is my hypothesis. But there are a lot of things which are yet to be proved. This is just a working hypothesis covering the known facts. I will change the hypothesis, as and when more facts are known through Archaeology, Anthropology and Population Genetics. To me, a hypothesis is not sacrosanct, but facts are. Once upon a time I believed In Kumari Continent. But I no longer believe so. That appears to be a fantasy.  I have described my hypothesis in a nutshell.


Wednesday, October 19, 2022

Entrepreneur

 entrepreneur என்பதற்கு "தொழில் முனைவோர்" என்றே பயன்படுத்தி வருகிறோம். அண்மையில் சில ஊடகங்களில் "தொழில்முனைவர்" என்ற வழக்கைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இது சரியா? முதுமுனைவர் போல தொழில் முனைவர் என்பது doctorate பட்டத்துடன் குழப்பத்தைத் தருமா? - என்று ”சொல்” எனும் முகநூல் பக்கத்தில் திரு. நீச்சல்காரன் கேட்டிருந்தார் entrepreneur என்பதற்கு "தொழில் முனைவோர்" என்றே பலரும் பயன்படுத்தி வருகிறார் என்பது உண்மை தான்.  

ஆனாலும், அது அரைகுறைச் சொல்லாக்கம் என்றே நான் சொல்வேன். தொழிலில் (மட்டுமன்றி) மற்ற புது வேறு முயற்சிகளிலும்  ஆங்கிலத்தில் entrepreneur பயனாகும். அதேபோல் தொய்ந்து போன வேலைகளிலும் முனைப்புக் காட்டி முன் வரலாம். முனைப்பென்பது புதுத் தொழில்களுக்கும் மட்டும் பயனாவதல்ல. ஆங்கிலத்தில் entrepreneur க்கு வரையறை சொல்லும் போது, entrepreneur (n.) 1828, "manager or promoter of a theatrical production," reborrowing of French entrepreneur "one who undertakes or manages," agent noun from Old French entreprendre "undertake" (see enterprise). The word first crossed the Channel late 15c. (Middle English entreprenour) but did not stay. Meaning "business manager" is from 1852 என்பார்.

தமிழில் இதற்கான ஈட்டை நாம் கண்டு பிடிக்கலாம். பண்ணு-தல் என்பது செய்-தலுக்கான மாற்றுச் சொல். பண்டம் செய்தல், பணி செய்தல், போன்ற பல்வேறு ஆக்கங்களுக்கும் பொருந்தி வரும் வினைச்சொல். entre என்பதற்கு ”எழுந்து வரும்” என்றே பொருள் கொள்ளலாம். எழுதை என்பது எழுந்து வருவதைக் குறிக்கும் பெயர்ச் சொல்.  ”எழுதைப் பண்ணகர் (அல்லது பண்ணார்)” என்பது entrepreneur க்கான என் பரிந்துரை. உகப்பதும் விடுப்பதும் உங்கள் தேர்வு.  


Saturday, October 08, 2022

தினம்

 "தினம் என்ற சொல் தமிழ்ச் சொல்லா?" என்று தமிழ்ச் சொல்லாய்வுக் குழுவில் ஒரு நண்பர் கேட்டார். ”அது கடன் சொல்” என்றே எல்லோரும் சொன்னார்.  சங்கதத்திற்கு அடிபணியும் போக்கு நம்மில் ஊறிக் கிடக்கிறது போலும். உண்மை அதுவல்ல. குறிப்பிட்டசில கற்களையோ, மரங்களையோ ஒன்றோடு ஒன்றைத் தேய்த்துப் பெற்ற பொறியால் தீ என்பது மாந்தருக்குக் கிடைத்தது. தேய்>தீய்>தீ என்பது தமிழ் மூலம் கொண்ட சொல். எவ்வளவு குட்டிக்கரணம் அடித்தாலும் இது சங்கத ஊற்றுக் காட்டாது. இந்தச் சொல் தமிழில் ஒளிக்கும் பயனுற்றது. 

தீ-தல் என்ற வினைச்சொல் தீ என்னும் பெயரிலிருந்து எழுந்தது. தீ-தல் என்பது , தீய்ந்து போதல் என்ற சொல்நீட்சியை அடுத்து உருவாக்கும். தீய்ந்து போதல் என்பது பேச்சு வழக்கில் தீய்ஞ்சுபோதல், தீந்தல், தீஞ்சல் போன்ற பல வடிவங்களை உருவாக்கும். இவை எல்லாம் தமிழே. இது வடபால் மொழிகளில் கடன் போகையில் தீன்>தின் என்று திரிவுறும். சொல்லின் தோற்றத்தை மறந்துபோன நாம் மீளக் கடன்வாங்கி தினம் என்ற சொல்லை உருவாக்குவோம். ஒளி நிறைந்த பொழுது என்று அதற்குப் பொருள். 

தின் என்னும் திரிவு  தமிழ்மூலங் கொண்ட சொல். வடபால் மொழிகளில் இது பெரிதும் பயனானது. மறவாதீர். இது சங்கதமூலம் கொண்டதல்ல. பல தமிழ்ச் சொற்களை, வடபால் மொழிகளுக்குக் கொடையாய்க் கொடுத்துவிட்டு :நாள் மட்டுமே தமிழ்ச்சொல்” என்று இன்று நாம் சொல்லிக் கொள்வது நம் அடிமைத் தனம். day எனும் ஆங்கிலச்சொல் கூடத் தேய்>தீய்>தீ யோடு தொடர்பு கொண்டது. ஒளியுள்ள பொழுது என்று அதற்குப் பொருள்.  

தெய்வம், தேவன் , தீவு>தீபம்  போன்ற சொற்கள் கூட நம் தீ-யில் உருவானவை தாம்.

  


Saturday, September 24, 2022

பலகாரம்

அண்மையில் இலங்கநாதன் குகநாதன், 'பலகாரம்' தமிழ்ச் சொல்லா ? என்று முகநூலில் கேட்டிருந்தார். அவருக்கு அளித்த விடை எல்லோருக்கும் பயன்படும் என்று இங்கு பதிகிறேன். 

ஆர்தலுக்கு உண்ணுதல் என்னும் பொருளுண்டு. ”அமலைக் கொழுஞ்சோறு ஆர்ந்த பாணர்க்கு”    என்பது புறம் 34 இல் 14 ஆம் அடி. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர் கிழார் பாடியது.. எனவே, ஆரம் என்பது உண்ணக் கூடிய பொருளைக் குறிக்கும். 

இனி ஆகுதல் என்பதற்குச் சமைதல் to be cooked என்ற பொருளும் உண்டு. 

ஆர்-தல், ஆகு-தல், ஆர்வு, ஆர்பதன், ஆர்பதம், ஆர்த்தல், ஆர்த்துதல்  என்ற 7 சொற்களையும் செ.சொ. அகரமுதலியின் முதன் மடலம் இரண்டாம் பகுதியில் காண்க. 

ஆக்கப் பொறுத்த நமக்கு ஆரப் பொறுக்க முடியாதோ? - என்பது ஒரு சொலவடை.

ஆகு+ஆரம் = ஆகாரம் = சமைத்த, சமைக்கிற, சமைக்கும் உணவு. இலக்கணப் படி ஆகாரம் என்பது வினைத்தொகை வழி பெறப்படும் சொல். நாம் சாப்பிடும் போது ஆகும் ஆரத்தையும் ஆகாத (சமைக்காத) ஆரத்தையும் சேர்த்தே சாப்பிடுகிறோம். இங்கே ஆகாரம் என்பது cooked food ஐக் குறிப்பிடும்.  

பல் + ஆகாரம் = பலாகாரம். இது பேச்சுவழக்கில் பலகாரம் என்றும் சொல்லப்படும். 

என் பார்வையில் பலகாரம் தமிழ்ச்சொல்லே.  வடபால் மொழிகளில் இதன் சொற்பிறப்பைச் சரியாக விளக்கமுடியாது.  

பண்ணிய ஆரம் = பண்ணியாரம்> பணியாரம்  என்பதும் பலகாரத்தின் ஒரு கூறே.

அன்புடன்..
இராம.கி.

Wednesday, July 13, 2022

Hospital, hostel, hostage, hotel. guest

இந்த இடுகை hospital, hostel, hostage, hotel, guest தொடர்பானது. hospital, hotel என்பவற்றிற்கு வேறு பெயர்களை நானே முன்னால் பரிந்துரைத்துள்ளேன். அவற்றை மறுத்து இப்போது வேறு சொற்கள் பரிந்துரைக்கிறேன் என்று எண்ணவேண்டாம். இது கூடு-தல் வினையில் எழுந்த தொகுதிப் பெயரகள் ஆகும். இவற்றை மேலும்வந்த அதிகப் பெயர்கள் என்று கொள்க.  பெயர்விளக்கம் கீழே வருகிறது.   

hospital = கூட்டுப்புரவல். ஒரு காலத்தில் பிரான்சில் hospitalக்கும் hotelக்கும் ஒரே மாதிரிப் பெயர் கொண்டிருந்தார். இங்கே, கூடிவந்த நோயரை புரவும் (காப்பாற்றும்) இடம் என்ற கருத்தில் கூட்டுப்புரவல் என்ற சொல் எழுகிறது..  

hosptalize = கூட்டுப் புரவலாக்கு;


host = கூட்டகர்; கூடுவதற்கான அகம் = கூட்டகம்; கூடலை நடத்துவோர் கூட்டகர். 

hostess = கூட்டகத்தி;

hospitable = கூட்டக;

hospitality = கூட்டகன்மை;

hospice = கூட்டுப்புரை; கூட்டிப் புரக்கும் இன்னொரு வகை.  

hospodar = கூடுவோர் தலைவர் = கூடுவோருக்கான தலைவர்;.


hostel = கூடுதளம்; இதையும் விடுதி என்று பல மாணாக்கர் சொல்லிவந்தார். hotelஐயும் hostelஐயும் வேறுபடுத்தத் தளம் சேர்த்தேன். தளம் =இடம்.

hostler/hostelier = கூடுதளர்; 

hostelry = கூடுதளவம்; 


hostage = கூண்டகை; கூடுதலும் கூண்டும் தொடர்புள்ள சொற்கள். இங்கே கூண்டுக்குள் அடைபடும் செயலையும் ஆளையும் குறிக்கும்.

hostile = கூட்டிலி; 

hostility = கூட்டிலிதி;


hotel கூடகல்;; அகல் அகத்தின் பெருஞ் சொல்.  

hotelier கூடகலர்;


guest = கூடியர்; கூட்டகர் கூட்டியதற்கு கூடியவர் இவர்.

guest house = கூடியர் இல்லம்;

guest night = கூடியர் இரவு; 

guest room = கூடியர் அறை;


Tuesday, July 12, 2022

Cricket shots கிட்டிகைச் சவட்டுகள்

 Vertical-bat strokes குத்துப்பட்டை அடி

Defensive shot = வலுவெதிர்ச் சவட்டு

Leave = விடுகை

Drive = துரவு

Flick = விடுக்கு


Horizontal-bat shots கிடைப்பட்டைச் சவட்டு

Cut = வெட்டு

Square drive = சதுரத் துரவு

Pull and hook= இழுத்துக் கொட்கு

Sweep = வயப்பு


Unorthodox stroke play = மரபிலா அடிப்பாட்டம்

Reverse sweep = எதிர் வயப்பு

Slog and slog sweep = வல்லடி, வல்லடி வயப்பு 

Upper cut உம்பர் வெட்டு

Switch hit சொடுக்கடி

Scoop / ramp தூக்கு/உயர்த்து

Helicopter shot சுரினைச் சவட்டு


Wednesday, July 06, 2022

சுயாதீனம்

இச்சொல் பற்றிக் கரு, ஆறுமுகத் தமிழன் கேட்டிருந்தார் சுயாதீனம் என்பது இருவேறு மொழிகளில் பல்வேறு திரிவுகள் ஏற்பட்டு உருவான கூட்டுச்சொல். சுய+ஆதினம் என்று பலரும் பிரிப்பர். 

சுய என்பது சொத்து எழுந்ததற்குப் பின் உருவான சொல். இது தமிழரின் பழங்குடிச் சொல் அல்ல. சுல்>சொல் என்பது ஒளி நிறைந்த பொன்னைக் குறிக்கும். சொல்நம் = சொன்னம் = பொன். இதை ஸ்வர்ணம் என்று சங்கதம் திரிக்கும். சொல்+க்+கம்  = சொக்கம் = பொன்னுலகு. இது சொர்க்கம் என்று சங்கதத்தில் திரியும். இன்னும் திரித்து ஸ்வர்க்கம் என்றும் ஆக்குவர். சொக்கன் = பொன்னார் மேனியன். சொல்+த்+து = எல்லாச் செல்வங்களையும் பொன் எனும் அலகால் காணும் மொத்த அளவு, ”அவருக்குச் சொத்து எவ்வளவு?” என்றால் பொன் அடிப்படையில் மொத்தமாய்க் கணக்கிட்டுச் சொல்லலாம். சொத்து என்பதற்கு உரிமை என்ற பொருள் இந்தப் புரிதலுக்குப் பின்னரே ஏற்பட்டது. . 

சொத்திற்கு உரிமை கொள்வது சொந்தம். ”இது இவருக்குச் சொந்தம்” என்பது முதலில் அசையாப் பொருள்களுக்கே ஏற்பட்டது. பின்னால் ஓரினக்குழு இன்னொன்றை அடிமைப்படுத்தி ஆண்களைக் கொன்று, பெண்டிர், பிள்ளைகள், ஆடு, மாடு போன்றவற்றைக் கவர்ந்தவுடன், கவரப் பட்டோர் சொந்தம் எனும் சொத்து வரையறைக்குள் வந்தார். 

இனிச் சற்று இடைவிலகல் செய்வோம். ”தம்” என்பது நம் உடலில் இருக்கும் உயிரை, ஆன்மாவைக் குறிக்கும். ”அவர்தம் உடல்” எனும்போது உயிர் என்பது கருத்தா ஆகிறது. இது போல், என்றன், உன்றன் என்ற சொற்களையும் நுணுகிப் புரிந்துகொள்ளவேண்டும். நாளாவட்டத்தில் தன், தம் என்பவை தனித்து நிற்கத் தொடங்கின. தனிமை என்பது கூட உயிர்த் தனிமையைத் தான் குறிக்கிறது. வழக்கில் உயிரும் மெய்யும் சேர்ந்ததாய்ப் பலபோது கொள்கிறோம் தான். இருப்பினும், தன்/தான், தம்/.தாம் என்பவை ஆன்மாவைக் குறிக்கின்றனவா, உயிர்+உடலைக் குறிக்கின்றனவா என்பதை இடம் பார்த்துப் புரிந்து கொள்ள வேண்டும்.

”தம்” என்ற சொல்லின் தாக்கத்தால்  சொந்தத்தைச் சொம்+தம் என்று பிரித்து சொம் என்பதற்கே சொத்துப் பொருளைக் கொண்டு வந்தார். இந்தச் சொம் என்பது சங்கதத்தில் ஸ்வொம்>ஸ்வம் என்றாகும். சங்கத சொல்லமைப்பின் படி உடம்பாகிய ஸ்வத்தை இயக்கும் உயிர் ஸ்வயம் என்றாகும். ஸ்வயத்தை நாம் தமிழில் கடன்வாங்கி சுயம், சுயம்பு போன்ற சொற்களை ஆக்குவோம். ஆக சொம் தமிழென்றாலும் ஸ்வயம் என்பது சங்கதம் தான்.

இனி ஆதீனத்திற்கு வருவோம். ஆதீனம் என்பது பேச்சுவழக்கு. ஆதினம் என்பதே அதற்கு முதல். ஆதி என்னும் தமிழ்ச்சொல்லிற்கு (இதற்குச் சங்கத மூலம் சொல்வோர் மொழியறிவு இல்லாது சொல்கிறார்.)  முதல், தலை, தொடக்கம் என்று பொருள். ஆதி என்பது சங்கதம் பாகத, பாலி வழக்கப்படி ஆதின் என்று நீண்டு தலைவனைக் குறிக்கும். ஸ்வாமின் என்பவன் சொத்தின் அதிபதி. வடக்கே, பெண் தன் கணவனை ஸ்வாமின்  என்று அழைப்பாள் பெரும்பாலும் புத்த, செயின மடங்கள் வழி, ஆதினைப் பெற்ற சிவ நெறி,  ஆதினம் என்ற பெருஞ்சொல்லை தம் மடங்களின் தலைவர்க்குப் பயனுறுத்தும். நல்ல தமிழில் இதை ஆத்தன்>ஆதன் என்போம். தவிர, ஆள்>ஆடு>ஆடி>ஆதி>ஆதிக்கம் என்ற சொல் தமிழ்வழி அதிகாரத்தைக் குறிக்கும்  ஆதிக்கம் என்ற சொற்பொருளும், ஆதினம் என்ற சொற்பொருளும்  ஒன்றை ஒன்று ஊடுறுவிப் போயின. 

சுய ஆதினம் என்பதைத் தன்னதிகாரம் என்று நல்ல தமிழில் சொல்லலாம் சுயம் ஆதினம் ஆகிய இரண்டிலும் தமிழ் மூலம் உள்ளது. ஆனால் வடமொழிகளின் அமைதியும் உள்ளது. சொம்மாதனம்   என்றும் பழஞ்சொற்களை மீட்டும் நாம் சொல்லலாம்.  தன்னதிகாரமா, சொம்மாதனமா என்பது அவரவர் உகப்பு.  

Friday, June 24, 2022

Artificial Intelligence உம் இன்னுஞ் சிலவும்

அண்மையில் ஒரு நண்பர் கேட்டாரென்று  artificial intelligence க்கு இணையாகச் செய்யறிவு என்று சொல்லிவைத்தேன். ஒரு பக்கம் அது சரியென்று தோன்றியது. இன்னொருபக்கம் இன்னும் கொஞ்சம் ஆழம் போகலாமோ? எல்லா அறிவும் intelligence ஆகுமா? - என்ற கேள்வியும் தோன்றியது. artificial intelligence க்கு இணையான தமிழ்ச்சொல்லைச் சற்று ஆழமாய்ப் பார்ப்போம். 

முதலில் intelligence (n.) பற்றிப் பார்ப்போம். ஆங்கிலத்தில், “late 14c., "the highest faculty of the mind, capacity for comprehending general truths;" c. 1400, "faculty of understanding, comprehension," from Old French intelligence (12c.) and directly from Latin intelligentia, intellegentia "understanding, knowledge, power of discerning; art, skill, taste," from intelligentem (nominative intelligens) "discerning, appreciative," present participle of intelligere "to understand, comprehend, come to know," from assimilated form of inter "between" (see inter-) + legere "choose, pick out, read," from PIE root *leg- (1) "to collect, gather," with derivatives meaning "to speak (to 'pick out words')."” என்று சொல்வர்.  இங்கே குறிப்பிடவேண்டியது power of discerning என்பதாகும். அறிதல் என்பது அவ்வளவு முகனையில்லை. தெள்ளுதலும், தெளிவும், தெரிவும், தேர்வுமே முகனையானவை. பல்வேறு உகப்புகளிலிருந்து சிந்தித்து ஏதோவொன்றை தெள்ளும் திறன். இதைத் தெள்ளுகை என்பதே போதும்.

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு

தெள்ளிய ராதலும் வேறு

என்று குறள் 374 சொல்லும். சென்னைத் திருவல்லிக்கேணியில் எழுந்தருளும் நரசிங்கப்பெருமாளுக்குத் ”தெள்ளிய சிங்கப்பெருமாள்” என்று பெயர். தெள்குதல் = தெளிவாதல், “வள்ளுயிர்த் தெள்விளி இடையிடை பயிற்றி” என்பது குறிஞ்சிப்பாட்டு 700. “தெள்ளுஞ் கழலுக்கே” என்பது திருவாசகம் 10.19. “தெள்ளியறிந்த விடத்தும் அறியாராம்”- என்பது நாலடியார் 380. “பிரியலேம் தெளிமே” என்பது குறுந்தொகை 273. தெளிஞன்  = தெளிந்த அறிஞன்.. “தெளிவெனப் படுவது பொருள் புலப்பாடே” என்பது தண்டியலங்காரம் 16. “தெளிவிலார் நட்பில் பகை நன்று” என்பது நாலடியார் 219 “தெளிவிலதனைத் தொடங்கார்” என்பது குறள் 464. 

அடுத்தது  artificial (adj.) . இதை “late 14c., "not natural or spontaneous," from Old French artificial, from Latin artificialis "of or belonging to art," from artificium "a work of art; skill; theory, system," from artifex (genitive artificis) "craftsman, artist, master of an art" (music, acting, sculpting, etc.), from stem of ars "art" (see art (n.)) + -fex "maker," from facere "to do, make" (from PIE root *dhe- "to set, put")” என்று சொல்வர். பலரும் செயற்கை/ செயற்று என்றே மொழி பெயர்ப்பர். செய்தல் வழி எழுந்த சொல் இது. செய்தலுக்கு மாற்றாக ஆற்றுதலையும் பயன்படுத்தலாம். மாந்தவுழைப்பில் நாம் செய்வதோடு, மற்ற மாந்தரைச் செய்வித்தல் என்பதை ஆற்றுவித்தல் என்றுஞ் சொல்லலாம். பட்டுவ வாக்கிற் (passive voice) சொல்வது இங்கு சிறப்பாயிருக்கும். 2 ஐயுஞ் சேர்த்து ஆற்றுவித் தெள்ளிகை அல்லது செயற்றுவித் தெள்ளிகை அல்லது செய் தெள்ளிகை என்பது artificial intelligence க்குச் சரிவரும். சுருங்க வேண்டின் செய் தெள்ளிகையே என் பரிந்துரை.. 

அடுத்தது machine learning பார்ப்போம். machine, engine என எல்லாவற்றையும் பொறியெனச் சொல்வது சரியில்லை. Engine is a driver. machine can be either a drver or a driven one. It justs converts one form into another. தமிழில் எ(ல்)ந்திரம்>எந்திரமென்பது எற்றுதல் (= தள்ளுதல்) தொடர்பாய் எழுந்த சொல். இதை இயக்குதற் பொருள் வரும்படி இய(ல்)ந்திரம் என்றுஞ் சொல்வர். எல்லுதல்/இயலுதல் என்ற இரு செயல்களுமே ஒரு machine ஐ இன்னொரு machine இயக்குவது குறித்தது.. காட்டாக நாம் பயன்கொள்ளும் சீரூந்து என்பது 4 பேரோ, 8 பேரோ செல்லும் ஒரு சகடம் (car) ஆகும். இது வெறுமே 1 machine அல்ல. இதனுள் 2 machineகள் உள்ளன. 4 சக்கரமிருக்கும் சகடத்தை (machine1) சகடத்தின் எந்திரம் எனும் 2 ஆம் machine இயக்குகிறது. 

அப்படியெனில் machine ஐ எப்படித் தமிழில் சொல்வது? இதற்கான விடை எளிது. ஆனாற் கவனம் வேண்டும். திரும்பத் திரும்ப ஒரே வேலையைச் சீராகச் செய்யவும், தன்னாலியலாத பெரும் வேலைகளை தன் சிந்தனையால், கருவிகள்/கட்டுப்பாடுகளாற் செய்யவுமே மாந்தன் machine ஐக் கண்டு பிடித்தான். இதில் முகன்மையானது அச்செடுத்தது போல் ஒப்பிட்டு மீளச் செய்யும் வேலையின் நேர்த்தி. மா என்ற ஓரெழுத்து ஒரு மொழிக்கு அளவு, ஒப்பீடு, அதிகம், வலி ஆகியவை பொருட்பாடுகளாகும். .ஆங்கிலத்தில் machine ஐ, ”1540s, "structure of any kind," from Middle French machine "device, contrivance," from Latin machina "machine, engine, military machine; device, trick; instrument" (source also of Spanish maquina, Italian macchina), from Greek makhana, Doric variant of Attic mekhane "device," from PIE *magh-ana- "that which enables," from root *magh- "to be able, have power." என்று குறிப்பிடுவார்.  

இவ் வரையறையில் முகன்மை ”மா” என்பதே. தமிழில் அன்னுதல் = போலுதல். மா+அன்னுதல் என்ற சொற்கள் புணரும் போது உடம்படுமெய்யாக யகரம், வகரம் பெரும்பாலும் பயன்படும் ஓரோவழி ககரமும் சில போது பயன்படலாம். இங்கே அதைப் பெய்து மா+க்+அ(ன்)னுதல் = மாக(ன்)னுதல் என்ற கூட்டுச் சொல்லை உருவாக்கலாம் ”ஒன்றைப்போல் இன்னொன்றைச் செய்து கொண்டிருத்தலை அது குறிக்கும். வலி, அதிகம் என்ற பொருளும் இதனுள் உண்டு. ஒரு machine இப்படித் தானே இயங்குகிறது? machine = மாகனை அல்லது மாகனம். நான் சில காலமாய் மாகனத்தைப் பயின்று வருகிறேன். பலரும் இதைக் கேள்வி கேட்கிறார். என் விடை சிறியது. ”கருவி என்பது நம்மிடம் பல காலம் இருந்தது. 200/250 ஆண்டுகளிற்றான் machine எனும் பெருங் கருவியை அறிந்தோம். கருவியத்தைக் காட்டிலும் மாகனம் எனக்குப் பொருந்துவதாய்த் தோன்றுகிறது.  

பொறி என்ற சொல் எந்திரத்திற்கு ஒரு மாற்றே (குறிப்பாக உள்ளக எரிப்பு இயந்திரத்திற்கு - internal combustion engine - அதுவொரு மாற்று.) அதன் பொருளை நீட்டி மாகனத்திற்கு இணையாகப் பயில்வதற்கு நான் தயங்குவேன். (இத் தெளிவு எனக்குவர நெடுங்காலமானது. என் பழைய ஆக்கங்களில் எந்திரம், பொறி என்ற சொற்களின் பயன்பாட்டில் குழப்பம் இருந்திருக்கிறது, இப்பொழுது 4,5 ஆண்டுகளாய் அதில் குழப்பம் தவிர்க்கிறேன்.) என் பரிந்துரை machine learning = மாகனப் பயிற்றுவிப்பு. (மாகனம் பயில்கிறது. நாம் பயிற்றுவிக்கிறோம்.) அடுத்தது 

Deep learning - ஆழ் பயிற்றுவிப்பு; 

Deep neural networks =  ஆழ் நரம்பக வலையங்கள்; 

Differential Programming = வகை நிரலியாக்கம்;  

Probabilistic Programming = பெருதகை நிரலியாக்கம் (http://valavu.blogspot.in/2010/06/blog-post_21.html)

Intuition (n.) உட்தோற்றம்

mid-15c., intuicioun, "insight, direct or immediate cognition, spiritual perception," originally theological, from Late Latin intuitionem (nominative intuitio) "a looking at, consideration," noun of action from past participle stem of Latin intueri "look at, consider," from in- "at, on" (from PIE root *en "in") + tueri "to look at, watch over" (see tutor (n.)).

intuitive = உள்ளே தோன்றியபடி

couner- என்பது contra- என்னும் இலத்தீன் முன்னொட்டிலிருந்து வந்தது. அதை எதிரென்று சொல்லுவதைக்காட்டிலும் கூடாவென்று சொல்வதே நல்லது. நம்முடைய கூடா-விற்கும் இலத்தீன் contra- விற்கும் தொடர்பிருப்பதாகவே நான் எண்னுகிறேன். தவிர முன்னொட்டைக் காட்டிலும் பின்னொட்டே இங்கு தமிழிற் சரிவரும். 

counter-intuitive = உட்தோற்றத்திற் கூடாதபடி. (உட்தோற்றிற் கூடிவராத படி) 


Wednesday, June 15, 2022

9,90,900

”9,90.900 என்பவற்றை ஒன்பது, தொண்ணூறு, தொள்ளாயிரம், என்று நாம் சொல்வது தப்பு , தொண்டு, தொண்பது, தொண்ணூறு என்றே சொல்ல வேண்டும், அப்படித் தான் சங்க காலத்தில்  நம் முன்னோர் கூறினார்” என்பது ஓர் ஆதாரமற்ற கூற்று, அரைகுறைப் புரிதலோடு இணையமெங்கும் இக் குறிப்பு சுற்றிக் கொண்டு மீள மீள வருகிறது, இல்லாத சிக்கலை இருப்பது போல் உரைக்கும் போலியுரையார் எவரும் மூல நூல்களைப் பாரார் போலும். தான்தோன்றித் தனமாய்த் தனக்குத் தோன்றுவதை எல்லாம் அடித்து விடுவதும்.  விவரந் தெரியாதோர் அதைக் கண்டு அசந்துபோய், இப் போலி விளக்கம் சரியோ என எண்ணத் தலைப்படுவதும் தொடர்கிறது. நண்பர் ஒருவர் ”இது சரியோ?” என்று எண்ணத் தலைப்பட்டு தம் முகநூல் பக்கத்தில் ஒரு முறை, இடுகை இட்டிருந்தார். அவர் போல் பலரும் இப்போலியைச் சரியென எண்ணக் கூடும். உண்மையை அறிக நண்பரே!. 

முதலில் தொண்டு, ஒன்பதைப் பார்ப்போம்.. தொல்காப்பியத்தில்  தொண்டு என்பது ஓரிடத்திலும், ஒன்பது என்பது வேற்றுமையுருபுகளுடன் 15 இடங்களிலும் (ஒன்பஃது - 2 , ஒன்பதிற்று - 1, ஒன்பதின் - 1, ஒன்பதும் - 3, ஒன்பாற்கு - 2, ஒன்பான் - 6 என) வருகின்றன. இதே போல் சங்கநூல்களில்  தொண்டு ஓரிடத்திலும், (ஒன்பதிற்று - 4, ஒன்பதிற்று ஒன்பது - 1, ஒன்பது - 3 என) ஒன்பது 9 இடங்களிலும் வருகின்றன. சொல்லாட்சி காணின், ஒன்பது என்ற பெயர் எங்கும் 90 ஐக் குறிக்க வில்லை. ஆகத் தொண்டும் ஒன்பதும் 9 எனும் ஒரே எண்ணைக் குறிக்கும் சம காலச் சொற்களே. இப்பெயர்கள் வந்துள்ள அடிகளை உங்கள் பார்வைக்குக் கீழே தந்துள்ளேன்.

தொல்காப்பியம் 

-------------------------

  தொண்டு (1)

தொண்டு தலையிட்ட பத்து குறை எழுநூற்று - பொருள். செய்யு:101/3

   ஒன்பஃது (2)

னகர தொடர்மொழி ஒன்பஃது என்ப - எழுத். மொழி:49/2

ஒன்பஃது என்ப உணர்ந்திசினோரே - பொருள். செய்யு:101/4

    ஒன்பதிற்று (1)

உள எனப்பட்ட ஒன்பதிற்று எழுத்தே - எழுத். தொகை:28/2

    ஒன்பதின் (1)

இரு பாற்பட்ட ஒன்பதின் துறைத்தே - பொருள். புறத்:21/24

    ஒன்பதும் (3)

அ பால் ஒன்பதும் அவற்று ஓர்_அன்ன - சொல். பெயர்:14/6

அ வகை ஒன்பதும் வினையெஞ்சு கிளவி - சொல். வினை:31/3

ஒன்பதும் குழவியொடு இளமை பெயரே - பொருள். மரபி:1/4

    ஒன்பாற்கு (2)

நூறு என் கிளவி ஒன்று முதல் ஒன்பாற்கு - எழுத். குற்.புண:67/1

  ஈறு சினை ஒழிய இன ஒற்று மிகுமே -    67/2

ஒன்று முதல் ஒன்பாற்கு ஒற்று இடை மிகுமே - எழுத். குற்.புண:70/2

    ஒன்பான் (6)

ஒன்று முதல் ஒன்பான் இறுதி முன்னர் - எழுத். குற்.புண:32/1

ஒன்பான் ஒகர-மிசை தகரம் ஒற்றும் - எழுத். குற்.புண:40/1

ஒன்பான் இறுதி உருபு நிலை திரியாது - எழுத். குற்.புண:54/1

ஒன்பான் முதல் நிலை முந்து கிளந்து அற்றே - எழுத். குற்.புண:58/1

ஒன்பான் இறுதி உருபு நிலை திரியாது - எழுத். குற்.புண:65/1

இரண்டு முதல் ஒன்பான் இறுதி முன்னர் - எழுத். குற்.புண:75/1

சங்க நூல்கள் 

-------------------------------

    தொண்டு (1)

ஆறு என ஏழு என எட்டு என தொண்டு என - பரி 3/79

    ஒன்பதிற்று (4)

ஒன்பதிற்று இரட்டி உயர் நிலை பெறீஇயர் - திரு 168

ஒன்பதிற்று_ஒன்பது களிற்றொடு அவள் நிறை - குறு 292/3

ஒன்பதிற்று தட கை மன் பேராள - பரி 3/39

தெரு இடைப்படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள் - பரி 11/3

    ஒன்பதிற்று_ஒன்பது (1)

ஒன்பதிற்று_ஒன்பது களிற்றொடு அவள் நிறை - குறு 292/3

    ஒன்பது (3)

ஒன்பது கொண்ட மூன்று புரி நுண் ஞாண் - திரு 183

ஒன்பதிற்று_ஒன்பது களிற்றொடு அவள் நிறை - குறு 292/3

ஒன்பது குடையும் நன் பகல் ஒழித்த - அகம் 125/20

---------------------------------------

இனி சொற்பிறப்புகளுக்கு வருவோம். தமிழில் சுழி, ஒன்று, இரண்டு, மூன்று, ஐந்து, பத்து, நூறு, ஆயிரம். இலக்கம்/நெய்தல், கோடி/குவளை, ஆம்பல், சங்கம். தாமரை, வெள்ளம் ஆகிய சொற்களே அடிப்படை எண்ணுச் சொற்களாகும். வெள்ளத்திற்கு மேல் எந்த எண்ணையும் நான் தமிழ்வழியே கண்டதில்லை. வெள்ளத்திற்குக் கீழுள்ள சொற்கள் எல்லாம் இவற்றைக் கொண்டு உருவானவையே. முதலில் 4 இன் பெயரைப் பார்ப்போம். 

I, II, III, IV, V, VI, VII, VIII, IX, X என்று உரோமன் முறையில் எழுதுகிறாரே? அதை வைத்தே கூட இதைச் சொல்லலாம். உரோமனில் அடிக்குறியீடுகள் I, V, X, L, C, D, M என்று அமையும். இவற்றின் மதிப்பு 1, 5, 10, 50, 100, 500, 1000.  இவற்றை வைத்தே சில மரபுகளோடு (அதாவது விதிகளோடு) மற்ற எண்களை உரோமனில் கட்டுவார். I, II, III வரை கோடுகளை ஒன்றன்முன் ஒன்றாக வலப்பக்கமிட்டு வருவதற்குக் கூட்டலென்று பெயர். நாலென வரும்போது நாலு கோடுகளிடாது ஒரு V ஐ இட்டு அதன் இடப்பக்கம் கோடிட்டு IV ஐக் குறிப்பார். ஆக இடப்பக்கம் கோடிடுவதன் பொருள் கழித்தல் ஆகும். அதாவது 5 இலிருந்து 1 ஐக் கழித்தால் 4. ஆறிற்கு மறுபடியும் வலப்பக்கம் கோடிட்டு VI, VII, VIII என 6, 7, 8 ஐக் குறிப்பர். அடுத்து ஒன்பதின் குறியீடாய் நாலில் நடந்தது போல் X ஐக் குறித்து அதன் இடப்பக்கம் கோடிட்டு ஒன்பதை IX என்று குறிப்பார். இதன் பொருள் பத்து - ஒன்று. இதே முறையில் தான் தமிழிலும் சொற்பொருள் வழி காட்டுகிறார். 

5 என்பது கை என்ற சொல்லில் எழுந்தது. கையில் குறைந்தது நாலு. நலிந்தது/நால்ந்தது என்ற சொல் குறைந்ததைக் குறிக்கும். நால்ங்கை>நான்கை>நான்கு என்பது தமிழில் ஏற்படும் இயல்பான திரிவு. இதை இன்னும் சுருக்கிக் கை/கு-வைத் தொக்கி நாலு என்றும் சொல்கிறோம். ஆகக் கூட்டல் முறை மட்டும் தமிழில் எண்ணுப் பெயர் வளர்ச்சியைக் காட்டவில்லை. கழித்தல் முறையும் நம் எண்ணுப் பெயர்களில் பயில்கிறோம். 6,7,8 என்ற சொற்கள் எழுந்த வகையை நான் இங்கு பேசவில்லை. மாறாக, நேரே ஒன்பதிற்கு வருவோம்.  இதிலும் கழித்தல் முறை பயில்கிறோம்.

10  வந்தபின், 9  ஏற்படுவது இயல்பு. பத்தை விட ஒல்லியானது (குறைந்தது) ஒன்பது, ஒலிந்த பத்து> ஒல்ந்த பத்து> ஒன்பத்து>ஒன்பது. இதே எண்ணை இன்னொரு வகையிலும் சொல்லலாம். பத்தில் தொண்டியது (துவள்>தொள்> தொண்டு>தொண்டியது - குறைபட்டது) என்றும் அணுகலாம். தொள்ந்த பத்து> தொண்பத்து> தொண்பது என்பதும் சரியே. பது என்பதை உள்ளூறப் புரிந்துகொண்டு தொண்டு என்ற சொல்லும் எழும். இன்னொரு வகையில் சொன்னால், துவள்ந்து>துவண்ட பத்து, தொண்பது. தொள்ளும் ஒல்லும் ஒரே பொருள. எப்படிக் கையைத் தொகுத்து நால்/நாலு, நான்கைக் குறித்ததோ, அப்படியே துவள்> தொள்> தொண்டு என்பதும் ஒன்பதைக் குறித்தது. தொள்ளுவது= துளைபட்டது. பத்தில் தொள்ந்தது = குறைந்தது; மறவாதீர். தொள்பட்டது  செயப்பாட்டு வினை. தொண்டு செய்வினை.  

ஒன்பது தொண்டு என்ற இரண்டுமே தமிழில் ஒரேபொருள் குறிக்கும் சொற்கள் தாம். சங்கதத்திலும் மேலை மொழிகளிலும் கூட நொய்ந்தது (குறை பட்டது) என்பது நொவம்>நவம் என்றும் ஆங்கிலத்தில் நவம்>நவன்>நயன்>nine என்றும் ஆகும். சிந்தனை முறை 2 மொழிக்குடும்பங்களிலும் ஒன்றாகவே உள்ளது. தமிழிய மொழிகளுக்கும் இந்தையிரோப்பியத்திற்கும் ஏதோ ஒரு தொல்பழங் காலத்தில் உறவு இருக்கலாம் என நான் சொல்வதை இப்போதாவது உணர்க. .

தொள் எனும் முன்னொட்டு குறைபட்டது என்று பொருள் தருவதால் நூற்றுக்கு முந்தைய பத்து தொள்+நூறு = தொண்ணூறு ஆயிற்று. அதேபோல ஆயிரத்திற்கு முந்தைய நூறு தொள்ளாயிரம் ஆயிற்று. 

தொள் இலக்கம் அல்லது தொள் நெய்தல் = தொண்ணெய்தல், என்பதை இப்போது தொண்ணுறாயிரம் என்கிறோம். இதேபோல் தொள்கோடியை தொண்ணூறு இலக்கம் என்கிறோம். தொள்ளாம்பல், தொள்சங்கம், தொள்தாமரை, தொள்வெள்ளம் போன்றவற்றையும் வேறு வகையில் அழைக்கலாம்.  

மேலே சொன்னதற்கு விதிவிலக்காய் 9000 பயன்படுவதும் ஒரு காரணங் கருதித் தான். பத்தாயிரம் என்பதற்கு தனிச்சொல் தமிழில் கிடையாது. (சங்கதத்தில் உண்டு. நியுதம் என்பார்.) எனவே தமிழில் ஒன்பதாயிரம் என்பது ஒன்பதையும் ஆயிரத்தையும் சேர்த்துப் பெருக்கல் வழியில் உரைக்கிறோம்.

     

  


Monday, June 13, 2022

உதயம், மதியம், அஸ்தமம், ராத்திரி

இது 2007 இல் மார்ச்சு 14 இல் சொல் ஒரு சொல் என்னும் வலைப்பதிவில் இட்டது. சேமிப்பிற்காக இங்கு மீண்டும் இடுகிறேன்.

======================

 சொல் ஒரு சொல்லை விடாது படித்து வருகிறேன். பெரும்பாலும் பின்னூட்டு இடாமல் படித்துப் போய்விடுவதுண்டு. இப்பொழுது, உதயம், மதியம், அஸ்தமனம், ராத்திரி என்ற நான்கு சொல்லை இங்கு கொடுத்துச் சிறுபொழுதுகள் பற்றிப் பேசியிருக்கிறீர்கள். என்னுடைய இடையூற்றைப் பொறுத்துக் கொள்வீர்கள் என்று எண்ணுகிறேன்.

இது போன்ற சொற்கள் பெரும்பாலும் இருபிறப்பிகள். அவற்றின் கருக்கள் தமிழாய் இருக்கும், வெளித்தோற்றம், முடிப்பு ஆகியவையோ வடமொழியாய் நிற்கும்.
உத்தல் என்பது தோன்றுதல், விடிதல், உயர்தல் என்ற பொருளைக் குறிக்கும் நல்ல தமிழ் வினைச்சொல் தான். அதன் திரிவான உற்றது என்ற சொல்லை நாம் புழங்குகிறோம், இல்லையா? உற்றது என்றால் ஏற்பட்டது என்றுதானே பொருள்? ஒளி தோன்றியது, ஏற்பட்டது என்பதைக் குறிப்பது தான் உத்தல் என்னும் வினை. சூரியன் உற்றினான் என்றால் = சூரியன் தோன்றினான்.

உற்றுதல்>உற்றித்தல்>உத்தித்தல்>உதித்தல் என்ற வளர்ச்சி நமக்கு உரியது தான். சூரியன் உதித்தான் என்பதும் நாம் சொல்லக் கூடியது தான். (பொழுது என்பது கூட முதலில் கதிரவனைக் குறித்துப் பின்னால் தான் காலத்தைக் குறித்தது.) ஆனாலும் உதயம் என்ற அந்த முடிவில் எங்கோ வடமொழிச் சாயல் தெரிகிறது. என்ன என்று அறுதியாகச் சொல்ல முடியவில்லை. இந்த இருபிறப்பிச் சொற்கள் எல்லாமே இப்படித்தான்; ஒருவகையில் பார்த்தால் தமிழாய்த் தெரியும்; இன்னொரு வகையில் பார்த்தால், வடமொழித் தோற்றம் கொள்ளும்.

அடுத்து மதியம் பற்றிச் சொல்லியிருந்தீர்கள். நண்பகல் என்பது நள்ளிய பகல் என்றே பொருள் கொள்ளும். நள்ளுதல் என்பது குத்தப் பட்டது, நிலைக்கப் பட்டது என்ற பொருளை இங்கு காட்டும். "நட்டமே நிற்கிறான் பார்" என்று சிவகங்கைப் பக்கம் சொல்லுவார். (நட்டப் பட்ட ஒரு நிலம் நாடு.) ஒரு வட்டத்தின் மையத்தில் நட்டப் பட்டது நடுவம். நண்பகல் என்பதும் நடுப்பகல் என்பதும் ஒன்றுதான். பகலை ஒதுக்கி வெறுமே இடம், பொருள், ஏவல் பார்த்து நடுவம் என்றும் சொல்லலாம். அது காலத்தைக் குறிக்கிறது என்று உரையாட்டில் புரியுமானால் சுருக்கச் சொல்லைப் புழங்குவதில் தவறில்லை.

**பொதுவாக தமிழிய மொழிகளுக்கும், வடபால் மொழிகளுக்கும் (=இந்தையிரோப்பிய மொழிகளுக்கும்) நடக்கும் ஒலிமாற்றத்தில் நம்முடைய நகரம் அங்கு மகரமாகும். நம்முடைய டகர, றகர, ழகர, ளகரங்கள் அங்கு தகர, ஷகரங்களாய் மாறி ஒலிக்கும். நம் நடு அங்கே மது என்றாகும். [இந்த விதியைப் பின்பற்றித் தான், minute -இன் இணையான "நுணுத்து" என்ற நம் சொல்லை மீட்டெடுத்தோம்]; நகர, மகர இணைகளை நான் ஒரு பட்டியல் போட்டே சொல்ல முடியும். நடுவம் ம(த்)தியம் என வடமொழியில் ஆனது ஒரு இயல்பான மாற்றம் தான். (யகரம், ரகரம் ஆகிய ஒலிகள் வடமொழிப் பலுக்கில் இது போன்ற சொற்களில் உள்நுழையும்.) நடுவ அண்ணம் (approximately middle time) என்பது நடுவத்திற்கு அண்மையில் உள்ள காலம்; இதையே வடமொழிப் பலுக்கலில் மத்திய அண்ணம் = மத்திய அண்ணம் = மத்தியாண்ணம்>மத்தியானம் என்று சொல்லுவார்கள். இதிலும் பார்த்தீர்களா? அடிப்படை தமிழ், ஆனாலும் வடமொழித் தோற்றம்.**

இனி அஸ்தமனம் பற்றிப் பார்ப்போம். கயிறு அறுந்தது என்றால் இரண்டாய்ப் போனது; அவளுக்கும் எனக்கும் உறவு அற்றுப் போனது என்றால் உறவு இல்லாமற் போனது என்று பொருள். வேலையற்ற நிலை = வேலையில்லாத நிலை; அற்றம் என்ற சொல்லுக்கு பொருள் இல்லாத நிலை என்றுதான் பொருள். நாம் சுழியம், சுன்னம் என்று சொல்லுகிறோமே, அந்த zero விற்கு இன்னொரு சொல் அற்றம். nothingness. அற்றல் என்ற வினைக்கு இல்லாது போதல் என்றே பொருள். அல்லன் என்றால் இல்லாதவன் என்றுதான் பொருள். அற்றலுக்கும் அல்லலுக்கும் ஒரே வேர் தான். அல் என்னும் அடிவேர். அற்றல்>அத்தல் என்றும் பேச்சுவழக்கில் சொல்லப் படும். "என்ன அவனோடு பேச்சு? அவனுக்கும் நமக்கும் ஆகாதுன்னு ஆயிப் போச்சுல்ல; அத்துவிடு".

அத்தமானம் = இல்லாத நிலை. வருமானம், பெறுமானம், கட்டுமானம் என்பது போல் இங்கே அத்தமானம். மானுதல் என்பது அளத்தல்; மானம் என்பது நிலையைக் குறிக்கும் பெயர்ச்சொல். மேலே கூறிய மானங்கள் எல்லாம் கூட்டுச் சொற்கள். இங்கே ஒளி இல்லாத நிலை; சூரியன் மறையும் நிலை. அத்தமானம் வடமொழிப் பலுக்கில் அத்தமனம்>அஸ்தமனம் என்று ஆவது மிக எளிது. ஆக அடிப்படை நம் மொழியில் தான் இருக்கிறது. இன்றையத் தோற்றம் கண்டு நாம் வடமொழியோ என்று மயங்குகிறோம். அவ்வளவுதான்.

இதே போல இராத்திரிக்குள்ளும் நம்முடையது உள் நிற்கிறது. ஒருவன் என்பதற்கு பெண்பாலாய் ஒருத்தி (பழைய புழக்கம்), ஒருவள் (புதிய புழக்கம்) என்று சொல்கிறோம் அல்லவா? அதேபோல இருள்தல் என்ற வினையில் இருத்து இருள்வு, இருட்டு என்ற இரு பெயர்ச்சொற்கள் பிறக்கும். இருள்வு மருவி இரவு என்று ஆகும். இருட்டு வடக்கே போக இருத்து>இருத்தி என்றாகிப் பின் பலுக்கல் திரிந்து ரகரம் நுழைந்து இரத்தி>இராத்தி>இராத்ரி ஆகும். முன் இரவு, பின் இரவு என்பதை முன்னிருட்டு, பின்னிருட்டு என்று நாம் சொல்ல முடியுமே?

நான் இந்தப் பின்னூட்டை முடிக்குமுன் சிறுபொழுதுகள் பற்றி ஒன்று சொல்ல வேண்டும். ஒரு நாளை நான்கு பொழுதாகப் பிரிப்பது பொதுவாக மேலையர், மற்றும் வடமொழியாளர் பழக்கம். ஆறு பொழுதாய்ப் பிரிப்பதே பழந்தமிழ்ப் பழக்கம். (என்னுடைய காலங்கள் தொடரை இங்கு நினைவு படுத்துகிறேன்.) நம்மூர் வெதணத்திற்கு (climate) அது சிறப்பாக இருக்கும்.

6AM - 10AM = காலை; morning; ஒளி கால் கொண்டது காலை. காலுதல் = ஊன்றுதல்
10AM - 02PM = பகல்; noon; பொகுல் என்பது உச்சி; பொகுல்>பொகுள்>பொகுட்டு என்பதும் உச்சி தான்.
02PM - 6PM = எற்பாடு; எல் (கதிரவன்) படுகின்ற (=சாய்கின்ற) நேரம் எற்பாடு. இந்தச் சொல்லை முற்றிலும் இந்தக் காலத் தமிழில் தவிர்த்துவிட்டோம். இது ஒரு பெரிய இழப்பு. இந்தச் சொல் இல்லாமல் பகலையும், மாலையையும் கொண்டுவந்து போட்டு பேச்சில் குழப்பிக் கொண்டு இருக்கிறோம்.
6PM - 10PM = மாலை; மலங்குதல் = மயங்குதல்; ஒளி மலங்கும் நேரம் மாலை. (கவனம் மாலை என்பது 6 மணிக்கு மேல்தான்; மாலை 4 மணி என்று சொல்லுவது பெரும் பிழை; ஆனாலும் பல தமிழர்கள் எற்பாட்டைப் புழங்காததால் மாலையைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆங்கிலத்தில் evening என்பது சரியாகவே பயன்படுகிறது.)
10PM - 2AM = யாமம், இரவு, night, யா என்னும் ஓரெழுத்தொரு மொழிக்கு இருட்டு, கருமை என்ற பொருள் உண்டு. யா வில் பிறந்த பலசொற்கள் ஆழமான பொருள் உள்ளவை. யாமத்தை ஜாமமாக வடமொழி மாற்றிக் கொள்ளும்.
2AM - 6AM = விடியல், வைகறை twilight ஒளி விடிகிறது; இருள் வைகிறது; இரண்டின் வேறுபாட்டையும் தெளிவாக உணர வேண்டும்.

இது போக நண்பகல் 1200 noon, நள்ளிரவு, நடுயாமம் midnight பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. மாலை, யாமம், விடியலை மும்மூன்று மணிகளாய்ப் பிரித்து முதல், இரண்டாம், மூன்றாம், நான்காம் யாமம் என்று சொல்லுவது ஒரு சிலரின் பழக்கம்.

அன்புடன்,
இராம.கி.
March 14, 2007 12:50 AM

Sunday, June 12, 2022

Strategy and tactics

"strategy என்பதற்கு தற்போது பயன்பாட்டிலுள்ள வியூகம்,செயற்றிட்டம் போன்றவை அதன் சாரத்தை வெளிப்படுத்தவில்லை என்று நினைக்கிறேன்.

ஓர் இலக்கை அடைவதற்காக தெரிவு செய்யப்பட்ட வழி என்ற பொருள் அதில் வரவேண்டும். தெரிவு (choice) என்பது strategy இல் முக்கியம்; அந்தத் தெரிவின் போது trade off இருக்கும். இந்த அர்த்தத்தில் உங்களிடம் நல்ல கலைச்சொல் உள்ளதா?" என்று Nadesapillai Sivendran இதற்கு முந்தைய இடுகையில் கேட்டிருந்தார். நான் நெடுநாளாய்ப் பரிந்துரைக்கும் சொல் ஒன்று உண்டு. 

------------------------------

அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை

படைத்தகையால் பாடு பெறும்

என்று 768 ஆம் குறளில் தானை (போர்)ப் படைத்தகை (military strategy, war strategy) என்ற  சொல் போரில் பின்பற்றப் படுவதாய் வரும்.   சதுரங்கம் ஆடுவோருக்கும் இது முகன்மையான குறளாகும். பொதின நடத்தம் (business practice) போன்றவைகளுக்கும் இதுபோன்ற  strategy தேவைதான் என்று கருதி, ”படைத்தகை” போல் தடந்தகை (strategy) என்ற சொல்லை ஒருகாற் பரிந்துரைத்தேன். (படைத்தகை என்பது பதாகை, கொடி, குடை, பல்லியம், காகளம் போன்ற தோற்றமெனப் பரிமேலழகர் சொல்வார். நான் அதற்கு உடன்படேன். ”தோற்றத்தால் பாடுபெறும்” என்று பரிமேலழகர் சொல்வது சரியென எனக்குத் தோற்றவில்லை.) 

என் பரிந்துரை தடந்தகை (strategy), தந்திரம் (tactics)

0


Saturday, June 11, 2022

இயல்பும், இயற்பும் திருமந்திரமும்

இயல்பியல் என்ற சொல்லை physics இற்கு இணையாக 1968 இல் கோவை நுட்பியல் கல்லூரியில் நானும் ஒரு சில நண்பரும் சேர்ந்து பரிந்துரைத்தோம். அது முனைவர் இராதா செல்லப்பனை ஆசிரியராகக் கொண்ட சென்னைப் பல்கலை கழக Physics தமிழ்ச்சொல்கள் வெளியீட்டில் சேர்ந்து தமிழ்நாடு எங்கும் பரவியது. பின்னால் இயற்பியல் என்று எப்படித் திரிந்தது? யார் மாற்றினார்?- என்று தெரியவில்லை எப்படியோ தவறான சொல் பரவிவிட்டது. இப்போது அரசின் பள்ளிக் கல்வித்துறையே தவறான சொல்லைத் தான் பயன்படுத்துகிறது. 

இயற்பென்ற சொல் பழம் இலக்கியங்களில் இல்லவேயில்லை என்று நான் சொன்னேன். சிலர், குறிப்பாக பேரா. இரா. செல்வக்குமார், தம் முகநூல் பக்கத்தில் திருமந்திரத்தில் இயற்பு ஆளப்படுவதாயும், இயக்கம் என்பது அதன் பொருளென்றும் சொன்னார். அவர் பக்கத்தில் என் மறுப்பைச் சொன்னேன். அதை என் வலைப்பதிவில் இட மறந்தேன். இப்போது சேமிப்புக் கருதி இடுகிறேன். 

பல்வேறு திருமந்திரப் பதிப்புக்களின் இடையே பாட வேறுபாடு உண்டு. இதற்கு முடிவு காணும் வகையில் மூலப் பாட ஆய்வுப் பதிப்பாக முனைவர் சுப.அண்ணாமலையைப் பதிப்பாசிரியராகக் கொண்டு கோவிலூர் மடத் தலைவர் ”இந்தியப் பண்பாடு - ஆராய்ச்சி நிறுவனம், 84, கலாக்ஷேத்ரா சாலை, திருவான்மியூர், சென்னை 600041” என்ற நிறுவனத்தின் கீழ் செம்பதிப்பு ஒன்றை வெளியிட்டார். பல்வேறு இடங்களிலிருந்து (இதில் எல்லா ஆதீன நூலகங்களும் உண்டு) பெற்ற 27 சுவடிகளையும், 11 முன்பதிப்புக்களையும் ஒப்பிட்டுப் பார்த்து வெளியிட்ட இச் செம்பதிப்பு ஓரளவு சுவடி பெயர்ப்புப் பிழைகளைச் சரி செய்தது. அதே பொழுது, எல்லா வேறுபாடுகளும் சரி செய்யப் பட்டுவிட்டதாய்ச் சொல்லமுடியாது. இந்தக் காலத்தில் திருமந்திரப் பதிப்பை எடுகோட்டு (reference) நிலையிற் கொள்ள வேண்டுமானால் இந்தப் பதிப்பு முகன்மையானது. 

இப்பதிப்பின் படி குறிப்பிட்ட பாடல் 2184 ஆம் பாடலாய் வகும். இது ”அவத்தை பேதம்” என்ற 120 ஆம் இயலில் “சுத்த நனவாதி” என்ற மூன்றாம் உள் இயலில்  ”இறைவன் செய்யும் உதவி” என்ற தலைப்பின் கீழ் வருகிறது.

உயிர்க்குயி ராகி(2) யுருவா யருவா

யயற்புணர் வாகி யறிவாய்ச் செறிவாய்

நயப்புறு சத்தியு நாத னுலகாதி

யியற்பின்றி(2) யெல்லா மிருண்மூட மாமே(3)


பதிப்பிற் கொடுத்துள்ள இதன் கருத்து: 

------------------------

சத்தியும் சிவமும் உலகத்து உயிர்கட்கு உயிராகி ஒன்றி நின்றும், தெய்வ உருவாய்த் தனித்து நின்றும், அருவாய் விளங்கியும், உடனாய் நின்று கலந்தும் அறிபொருளாகவும், வியாபகப் பொருளாகவும், இருந்து இயக்கவில்லையேல் உயிர்களை ஆணவ மலம் மூடியே கிடக்கும்.

------------------------

இச் செம்பதிப்பில் “இயக்கப் பொருளே” அடிப்படை வினையாய்ச் சொல்லப் படுகிறது. அதே பொழுது, பாட்டின் அடிப்படை வினை இயக்குதல் என்னுமாகில் ”இயக்கு என்ற பெயர்ச்சொல் ஆளப் படாது இயற்பு எனும் பெயர்ச்சொல் ஆளப்பட வேண்டிய தேவை என்ன?” என்ற கேள்வி நமக்குள் எழுகிறது. திருமந்திரம் போன்ற நூலில் காரணமின்றி வேறு சொற்கள் கையாளப் படா. ஒவ்வொரு சொல்லிற்கும் காரணமிருக்கும். இயக்கென்ற பெயர்ச்சொல்லைக் காட்டிலும் இயற்பென்ற சொல் என்ன புதுப்பொருளைக் கொடுக்கிறது? அப்படியொரு புதுச்சொல் எழவேண்டிய தேவையென்ன? - என்ற கேள்விகள் நம்முள் எழுகின்றன. அப்படியின்றி, இயல்பு என்ற சொல்லிற்கு மாறாக இயற்பு என்ற சொல் சுவடிப் பெயர்ப்புப் பிழையாக இருந்திருக்குமானால் வேறு ஏதோவொன்று பாட்டின் அடிவினையாக இருக்கவேண்டும். அதைக் கீழே காணுவம். இதே செம்பதிப்பிற் குறிப்பிட்ட பாடலுக்கு மூன்று பாட வேறுபாடுகள் சொல்லப் பெறுகின்றன. இந்த வேறுபாடங்கள் ஏன் கருத்திற் கொள்ளப்படவில்லை என்ற விளக்கம் பதிப்பில் இல்லை. வேறு பாடங்கள் 

1. ராகிய (இது துடிசைக் கிழார் சிதம்பரனார் பதிப்பு “திருமந்திரம் மூவாயிரத்தில்” வருகிறது.)

2. யியல்பின்றே லெல்லா (இது சி.அருணை வடிவேல் முதலியார், தருமபுர ஆதீனம், “திருமந்திர மாலையாகிய திருமந்திரத்தில்” வருகிறது)

3. லாமே (இது சென்னைக் கீழ்த்திசைச் சுவடிகள் காப்பகத்தில் உள்ள சுவடியில் உள்ளது.)

முதலாம் வேறுபாடு பாட்டின் ஓசையில் இடையூறு செய்வதால், அதை ஒதுக்கியது சரியென்றே தென்படுகிறது. இரண்டாவது மூன்றாவது பாடவேறுபாடுகளை ஒதுக்குவது எனக்குச் சரியென்று தென்படவில்லை. அவற்றை நாம் ஏற்றுக்கொண்டால், ”ஏலுதல்”எனும் அடிப்படை வினை பாட்டிற்கு ஒழுங்கான பொருள் கொடுக்கிறது. இப்பாடவேறுபாடுகளோடு நான் புரிந்து கொண்ட பொருளைக் கீழே கொடுத்துள்ளேன்.

------------------------

உயிர்களுக்கு உயிராகி நின்றும், தெய்வுருவாய், அருவுருவாய் அயல் நின்று கலந்தும், அறிபொருளாகவும் செறி பொருளாகவும் விருப்பமுறும் சத்தியும் நாதனும் உலகிற்கு ஆதியாகும் இயல்பு இன்றேல், எல்லாம் இருள் மூடலாகும்.

------------------------

சத்தியும் சிவனும் உலகிற்கு ஆதியாகும் இயல்பு இல்லாது போனால் - இங்கு இதுவே அடிப்படை வினை - எல்லாம் இருளாகும். ”உயிர்களுக்கு உயிராகி நின்றும், தெய்வுருவாய், அருவுருவாய் அயல் நின்று கலந்தும், அறிபொருளாகவும் செறி பொருளாகவும் விருப்பமுறும்” என்பது சத்திக்கும் நாதனுக்கும் தரப்படும் நீண்ட பெயரடை.  மொத்தத்தில் இயல்பென்ற சொல்லை ஆளும்போது, கருத்துரை தெளிவாக இருக்கிறது. தமிழில் இயல்+பு என்ற புணர்ச்சி மொழியமைப்பிற்கு மாறுபட்டு இருவேறு சொற்களை உருவாக்கும் தேவை எழவில்லை. தமிழ் இலக்கணமும் காப்பாற்றப் படுகிறது. திருமந்திரம் பாடலின் பொருளும் பொருத்தமாய் இருக்கிறது.

இயற்பு என்ற சொல் வேறு நூல்களில் ஆளப் படுகிறதா? - என்பது அடுத்த கேள்வி. என்னுடைய கேள்வி மிக அடிப்படையான கேள்வி. அது தமிழ்ச்சொல்லாகத் தெரிகிறதா? இயலாக அமைவது இயல்பு.  இயலாகச் செய்யப்பட்டது இயற்கை. [எங்கெல்லாம் கை எனும் விகுதி வருகிறதோ அங்கு செய்யப்பட்டது என்ற அடிவினையே உள்நின்று இருக்கும். அதே போல பு என்னும் விகுதி தானே அமைவதைக் குறிக்கும். என் கேள்வி எளிது “இயற்பு என்பது எதைக் குறிக்கிறது?” [இயல்பு சரியானால் இயற்பு சரியில்லை, இயற்பு சரியானால் இயல்பு சரியில்லை. இரண்டையும் சரியாகக் கொள்வதற்குத் தமிழ் வருக்க எழுத்துக் கொண்ட மொழியில்லை. வடமொழி போற் தமிழில் bu, pu என்ற வருக்கவொலிகள் கிடையாது. அவை ஒரே பொருள் தரும் மாற்றொலிகள்.]

அடிப்படைக் கேள்வியைத் அருள்கூர்ந்து உணருமாறு வேண்டுகிறேன்.

அன்புடன்,

இராம.கி. 


Wednesday, June 08, 2022

பண்டிதர், சாஸ்திரி, தீக்ஷிதர்

பண்டிதர், சாஸ்திரி, தீக்ஷிதர், பகதூர் என்ற பெயர்களுக்கான தமிழ் மூலங்கள் உண்டா என்று நண்பர் ஒருவர் ஒரு முறை கேட்டிருந்தார். பகதூர் என்பது  இசுலாமிய அரசர், தனக்குத் தெரிந்த ஊர்ப் பெரியவருக்குக் கொடுக்கும் பட்டம். இதன் சொற்பிறப்பு எனக்குத் தெரியாது. மற்ற மூன்றிற்கும் தமிழ்த் தொடர்பு உண்டு, கீழே விளக்கியுள்ளேன்.

படுதல்> பட்டித்தல்> ப(ட்)டி> படி என்பது சொல்வளர்ச்சி. படிப்பு என்பது பொதுவாக இன்னொருவர் போட்ட தடத்தில் நாம் போவதையேக் குறிக்கும். பழைமையைக் குறிக்கும் பண்டு என்ற சொல்லும் கூட முன்னே போட்ட தடத்தைக் குறிப்பது தான். பண்டிதர் என்ற சொல்லுங் கூட அவ்வழி வந்தது தான். (பண்டிதர் என்பதை வடசொல் என்றே நம்மில் பலர் பிறழப் புரிந்து கொள்கிறோம்.) பெரிதும் படித்தவர் பண்டிதர் என்பது தான் அடிப்படைப் பொருள். அவருடைய படிப்பு பண்டிதம் எனப்படும். பண்டித அறிவைக் கடன் வாங்கி பாண்டித்யம் என்று வடமொழி திரித்துக் கொள்ளும். இதைப் பற்றித் தெள்ளிகை என்ற என் கட்டுரைத்தொடரில் சொல்லியுள்ளேன். படிப்போடு தொடர்பான பல செய்திகளை அது சொல்லும்.  

https://valavu.blogspot.com/2007/02/1.html

https://valavu.blogspot.com/2007/02/2.html

https://valavu.blogspot.com/2007/04/3.html

இத்தொடரைக் கிடுக்கி, எசு இராமச்சந்திரன் என்ற தொல்லியலார் சங்கதச் சார்பில் என்னை மறுத்துரைத்தார். அதற்கு மறுமொழியாய், ”ஓதி” என்ற மறுப்புக் கட்டுரைத் தொடரும் எழுதினேன்.

https://valavu.blogspot.com/2007/02/1_27.html

https://valavu.blogspot.com/2007/02/2_27.html

https://valavu.blogspot.com/2007/02/3_28.html

படித்துப் பாருங்கள்.

அடுத்து வருவது சாஸ்திரம்/ சாஸ்திரி. ஒரு குறிப்பிட்ட புலனம் பற்றிய செய்திகளைப் பற்றி ஒருங்கே சேர்த்துச் சொல்வது சாற்றம் எனப்படும். “அவர் என்ன சாற்றினார்?” என்று கேட்பதில்லையா? சாற்றம் நம் பேச்சு வழக்கில் சாத்தமாகி (சாத்தன் என்ற சொல்லை நினைவுகூருங்கள்.) சாஸ்தம் என்று வட மொழியில் திரியும். அது மேலுந்திரிந்து சாஸ்திரம் என்றாகும். சாஸ்திரம் அறிந்தவன் சாஸ்திரி. ஏது சாற்றம் என்பது logic. அது ஹேது ஸாஸ்த்ரம் என்று சங்கதமாற்றம் அடையும். பல சாற்றங்கள் இப்படிச் சாஸ்திரங்களாகியுள்ளன. கப்பல் சாஸ்திரம் என்பது கப்பலைப் பற்றிய சாற்றம்.

இதற்கடுத்தது தீக்ஷிதர் என்ற சொல்லைப் பார்ப்போம். இச்சொல்லின் விளக்கம் சற்று நீளமானது. 

தீக்ஷிதர் என்பார், வேள்வி செய்தலை முன்னுறுத்தும் முன்குடுமிப் பார்ப்பார். மற்ற பெருமானரைப் போலன்றி, தீமூட்டி நெய்யூற்றிச் செய்யும் வேள்வி முறையை பெருமானமாய் (ப்ரமாணமாய்)க் கொண்டவர். வேள்வியைத் தம் கடமையாய் ஏற்றுப் போற்றிச் செய்பவர். அடிப்படையில் பூருவ மீமாம்சை வழியினர். உத்தர மீமாம்சைக் கொள்கையை ஏற்றவரில்லை. தமிழகத்தில் இவர் நுழைந்தது சங்க காலத்தில் என்றே சொல்லலாம். வடக்கே அற்றுவிகம், செயினம், புத்தம் ஆகிய நம்பா மதங்கள் செழித்து வளர்ந்த காலத்தில் வடக்கில் இருந்த மன்னர் சிறிது சிறிதாய் வேள்வி முறைகளில் இருந்து நழுவினார். எனவே  வேறிடங்களை நோக்கி முன்குடுமிப் பார்ப்பார் நகர வேண்டியதாயிற்று. தமிழ் வேந்தரில் ஒரு சிலர் கொஞ்சங் கொஞ்சமாய் இவர்பக்கம் சாய்ந்தார். எனவே பூருவ மீமாஞ்சை இங்கு கால் கொள்ளத் தொடங்கியது. 

வேள்வியின் போது, வேள்வி செய்விக்கும் எல்லாப் பெருமானரும், வேள்வி செய்யும் உடையவரை ( = எஜமானரை- யஜுர் வேதத்தில் அப்படித்தான் பெயர் குறிப்பார்.) ஒரு சூளுரை (சங்கல்பம்) செய்யும்படி, சொல்வார். வேள்வி செய்யும் பலரும் ஐயர் சொல்வதை என்னவென்று அறியாமல் சொல்வார். சூளுரை என்பது, “இதைக் கடைப்பிடிப்பேன்” என்று உறுதி செய்வது தான். அவர் காட்டும் தீவத்தின் மேல் தீண்டி இச்சூளுரையைச் செய்ய வேண்டும்/ இது போன்ற சூளுரைகள் அவ்வளவு உறுதியில்லாதவை. எனவே யாரும் கண்டு கொள்வதில்லை ஆனாலும் தீயையும் நீரையும் தீண்டியே இது போன்ற சூளுரைகள் செய்யப்படுகின்றன. ஐம்பூதங்களில் இரண்டான தீயும் நீரும் சூளுறைகளுக்குச் சான்றுகளாகின்றன.   

தீ என்பது வேதநெறிக்கு முகன்மை. நீர் என்பது ஆகம நெறிக்கு முகன்மை, இன்றிருக்கும் சிவநெறி தீயையும், நீரையும் சேர்த்தே சூளுரை கூறலுக்குப் பயன்படுத்தும். எல்லாச் சிவன் கோயில்களிலும் ஓரளவு இது நடந்தே தீரும். (பெருமாள் கோயில்களில் ஆகமம் அதிகம், வேள்வி குறைச்சல்.) 

தீக்கிதர் என்பார் இதில் சற்று தீவிரமானவர், ஒரு குறிப்பிட்ட அகவையில் தேவையான நூல்களைப் படித்த பின்னர், இதற்கென்று சிறப்பாக ஒரு வேள்வி நடத்தி, அந்த வேள்வித் தீயைத் தீண்டி இது போல் ஒரு சூளுரையை ஏற்பார், அதன் வாசகம் தராமல், அடிப்படைப் பொருளை மட்டும் இங்கு சொல்கிறேன். “வேதநெறி வழுவாமல் பூருவ மீமாம்சைப்படி நான் நடந்து கொள்வேன். இன்னின்ன செய்வேன், இன்னின்ன செய்யமாட்டேன்” என்று சூளுரைரையை, சொல்லியே இளம் பெருமானர் தீக்கை பெறுகிறார், தீக்கிதரும் ஆகிறார். 

தீக்கை என்பது தமிழ்ச்சொல் தான். துல்> தில்> திள்> தீள்> தீட்டு, தீண்டு போன்ற சொற்களும், துல்> தொல்> தொலி, தோல் போன்ற சொற்களும். துள்> தொள்> தொள்ளு> தொடு போன்ற சொற்களும், தொள்> தொள்கு> தொட்கு> தொக்கு என்பதும், தீக்கையொடு தொடர்புள்ளவை. தீட்கு> தீக்கு>  தீக்கை என்பது touch என்பதைக் குறிக்கும். தீக்கை பெற்றவரைத் தீக்கையர் என்னாது தீக்கை எனும் பெயர்ச்சொல்லில் இருந்து ”தீக்கித்-தல்” என்ற இன்னொரு வினைச் சொல்லை உருவாக்கித் தீக்கித்தார்> தீக்கிதர்> தீக்ஷிதர் எனச் சங்கதத்தில் இச்சொல் திரியும். (இது போன்ற உருவகம் மடி> மரி> மரணம்> மரணித்தல் என்றும். கல்> கற்பி> கற்பனை> கற்பனித்தல் என்ற சொற்களிலும் அமையும். தீக்கித்தல், மரணித்தல், கற்பனித்தல் போன்றவை அரைகுறைத் தமிழறிவில் எழுந்த சொற்கள்.)

தீக்கிதர் தில்லைச் சிற்றம்பலத்தில் மட்டுமிருப்பவரல்ல. இந்தியாவெங்கணும் இவருண்டு. [ஏன் நம்மூரிலேயே திருமறைக்காடு, ஆவுடையார் கோயில், திருப்பிடவூர் (திருப்பட்டூர்) போன்ற ஊர்களில் இருந்தார். இன்னும் சிலவும் உண்டு.  இன்று தில்லையரைத் தவிர மற்றோர் நம்மூரில் தீக்கிதர் என்று தம்மைச் சொல்லிக் கொள்வதில்லை.] அவர் எல்லாருமே வேள்வி நடத்தத் தகுதியுள்ளவர் என்பது பொருள். மோனியர் வில்லியம்சில் “to consecrate or dedicate one's self (esp. for the performance of the soma-sacrifice) என்றே தீக்ஷைக்குப் பொருள் தருவார். தீக்கிதர் சங்கதத்தின் மேல் சற்று அதிகப் பற்று கொண்டவர். தமிழ் மேல் உள்ள நெகிழ்ச்சி குறைவு தான். இருப்பினும் சிவநெறியில் பெரிய குருவான உமாபதிசிவம் என்பார் தீக்கிதர் கொடிவழியில் வந்தவர் தான். தீக்கிதருக்கும் ஆரத்தி காட்டுதலுக்கும் தொடர்பில்லை. ஆரத்தி காட்டுவது சிவச்சாரியார். இவர் வேறு வகைப் பெருமானர். சிவதீக்கை பூண்டவர்.

சிவ தீக்கை என்பது சிவநெறியின் வழி நடப்பது, இதிலும் தீயை, நீரைத் தீண்டி, “சிவநெறி வழுவாமல் ஆகமம் சொல்வதன் படி  நான் நடந்து கொள்வேன். இன்னின்ன செய்வேன், இன்னின்ன செய்யமாட்டேன்” என்று சூளுரைரையைச் சொல்லியே இளம் பெருமானர் சிவ தீக்கை பெறுகிறார்,  இவரைச் சிவாச்சாரி என்பார். தமிழ் மேல் நெகிழ்ச்சி கொண்டவர்.  

இற்றைச் சிவநெறி என்பது ஆகம நெறி கூடியும்  வேதநெறி ஊடு வந்தும் ஏற்பட்ட விந்தையான கலவை. ஆனாலும் சிவநெறியார் வேதநெறியை ஒரு கட்டுக்குள் வைத்திருக்கவே முயல்வர். அவருக்கு ஆகமமே முதல் ஆகும், வேதம் என்பது பிறகே. ஆகம நெறி என்பது வழிபாட்டு நடைமுறை குறித்தது. 

நண்பர்களே! பொதுவாய் ஒரு சொல்லுக்குப் பொருள் சொல்லும்போது அருள்கூர்ந்து இடம், பொருள், ஏவல் பாருங்கள். கொஞ்சம் கேள்வி கேளுங்கள். 

அன்புடன்,

இராம.கி.


Wednesday, June 01, 2022

சரவல்/சிரமம்

ஏறத்தாழ ஓராண்டிற்கு முன்,”தமிழ்நாட்டு நிதி அமைச்சரின் உரையைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். தமிழ் பேசவும், படிக்கவும் அவர் சரவல் படுகிறார்” என்ற முன்னிகையை என் முகநூல் பக்கத்திலிட்டேன். இதில் வரும் ”சரவலைச்” “சிரமம்” எனும் இருபிறப்பிச் சொல்லிற்கு  மாற்றாய் நெடுநாட்கள் பயில்கிறேன். இடுகை படித்த கவிஞர் தாமரை “சரவல்-சிரமம்' மொழியாக்கம் குறித்து நீங்கள் எழுதியதிருந்தால் பதிவிடுங்கள். சிரமம் என்பதையே இதுகாறும் பயன்படுத்தி வந்தேன்” என்றார். தமிழில் தொடங்கித் திரிந்து புழங்கும் ”சிரமத்திற்கு”,“இளைப்பு, களைப்பு, உழைப்பு, படைக்கலப் பயிற்சி” என்று தமிழ் அகரமுதலிகளில் பொருள் கூறுவார். Monier-Williams இன் சங்கத - ஆங்கில அகரமுதலியில், 

1) Śram (श्रम्):—1. śram [class] 4. [Parasmaipada] ([Dhātupāṭha xxvi, 95]) śrāmyati (in later language also śramati, te; [perfect tense] śaśrama, 3. [plural] śaśramuḥ or [Śāṅkhāyana-brāhmaṇa] śremuḥ, p. śaśramāṇa, [Ṛg-veda; Mahābhārata]; [Aorist] āśramat, [Atharva-veda], [subjunctive] śramat, [Ṛg-veda]; śramiṣma, [ib.; Brāhmaṇa]; [future] śramitā, [Mahābhārata]; śramiṣyati [grammar]; [infinitive mood] śramitum, [ib.]; [indeclinable participle] -śramya, [Brāhmaṇa]),

—to be or become weary or tired, be tired of doing anything (with [infinitive mood]; also [impersonal or used impersonally] na mā śramat, ‘may I not become weary!’), [Ṛg-veda] etc. etc.;

—to make effort, exert one’s self ([especially] in performing acts of austerity), labour in vain, [ib.] :—[Passive voice] śramyate ([Aorist] aSrAmi, [grammar]), [Mahābhārata; Kāvya literature] etc. (cf. vi-√śraṃ) :—[Causal] srAmayati ([Aorist] aśiśramat), to make weary, fatigue, tire, [Kāmandakīya-nītisāra; Harivaṃśa; Subhāṣitāvali];

—to overcome, conquer, subdue, [Rāmāyaṇa];

— (śrāmayati), to speak to, address, invite (āmantraṇe), [Dhātupāṭha xxxv, 40] ([varia lectio] for grām cf. grāmaya) :—[Desiderative] See vi-śiśramiṣu.

2) 2. śram ind. [gana] svar-ādi.

3) Śrām (श्राम्):—See [Causal] of √1. śram.

என்ற விவரந் தந்து, இதன் தாதுவாய் śram (”Dhātupāṭha xxvi, 95”) என்பதைக் குறிப்பார். (ஒரு வேலையை விடாது செய்கையில் நமக்கு இளைப்பும், களைப்பும், சோர்வும் வரும் அல்லவா? இது உடலுழைப்பிலும் வரலாம், அறிவுழைப்பிலும் வரலாம்.  śram இன் பொருள்களாய்,  ”சோர்வு, தளர்வு, தள்ளாடு, துயரம், துன்பம், தொய்வு, தொல்லை, தொ(ல்)ந்தரவு, வருத்தம்” போன்று பலவற்றைச் சொல்லலாம்.  இவையெல்லாமே குத்தல் வேர்ப் பொருளில் கிளைத்தவை. (மோனியர் வில்லியம்சு அப்படிச் சொல்லாது. பொதுவாய், சங்கதத் தாதுக்கள் என்பன வேர்கள் அல்ல. அவை வெவ்வேறு தொகுப்புகளைக் குறிக்கும்.) ஒரு செயலை விருப்பமின்றிக் கடமையெனச் செய்யும் போது நம்மைக் குத்துவது போன்ற இருப்புக் கொள்ளா உணர்ச்சி இயல்பாய் எழும். 

மேலுள்ள பொருள்களில், தகரச் சொற்கள் அதிகம் என்பதால், அவற்றின் பிறப்பை முதலில் பார்ப்போம்.  முதலில் வருவது. துல்> துன்> துன்பு> துன்பம். அடுத்து, தொல்> தொல்> தொல்லை= துன்பம். தொலைதல்= தளர்தல்.  தொல்> தொ(ல்)ந்தரித்தல் = வருத்தல். துன்புறுத்தல் என்பன எழும்.; தொ(ல்)ந்தரவு= தொந்தரவு;. வருத்தத்தில், உடம்பு தொளதொளக்கும். தொல்> தொள்> தொளதொள-த்தல், இதன் நீட்சி, தொள்> தள்> தளர்> தளர்த்தி> தளர்ச்சி.  துள்> தொள்> தொள்கு-இன் வளர்ச்சியாய் சேற்றுச் சொல் எழும். தொள்ளுதல் = நெகிழ்தல், தொள்> தொள்ளம் =  சேறு, தொள்> தொள்ளி> தொளி = சேறு, தொள்> தொய்> தொய்யல் = சேறு. தொய்யில் = குழம்பு; தொள்> தொய்> தொய்தல்= தளர்தல்; தொள்> தொள்ளாடு> தள்ளாடு. தொள்> தொய்> தொய்தல்= சோர்தல். துள்> (துய்)> துயர்> துயரம். தொய்யல் = துன்பம் என்பன அடுத்தடுத்த வளர்ச்சியைக் காட்டும். இதே பொருள்களில் சகரச்சொற்களும் வளரலாம். 

சுல்>சூல்>சூலம் = குத்தும் ஆயுதம்

சுல்>சூலை = வெப்பு நோய்; 

சுல்> சுள்> சுரம் = நடக்கையில் குத்தும் பாலை நிலம், உடம்பைக் குத்தும் நிலை (- எனவே நோய்), குத்தும் (எரிச்சலைத்த் தரும்) கள், குத்தும் படிக உப்பு, சுரம் என்பது தான் பெரும்பாலும் śram என்பதற்கு இருபிறப்பி அடிப்படையாகலாம். குத்தும் வேரில் சோர்வு, தளர்வு, தள்ளாடு, துயரம், துன்பம், தொய்வு, தொல்லை, தொ(ல்)ந்தரவு, வருத்தம்” போன்ற பொருள்களில் வளர்ந்திருக்கலாம்.  śram என்பதை மீளக் கடன்வாங்கையில் சிரமம் என்றாகும்.,

சுல்> சுள்> சுர்> சுரங்கம் = குத்தித் துளைத்த நீள் துளை, பாதை.

சுல்> சுள்> சுர்> சுரசுரத்தல்> சருச்சரையாதல்> சர்ச்சரையாதல் = கரடு முரடாய்க் குத்தும்படி இருத்தல். சுரசுரப்பு = roughness.

சுல்> சுள்> சுர்> சுரண்டுதல் = குத்தித் துளைத்தல்; 

சுல்> சுள்> சுர்> சுரணை = குத்தும் உணர்ச்சி

சுல்> சுள்> சுர்> சுரவை = சுர் என்று குத்தித் தெறிக்கும் வீக்கம்.

சுல்>சுள்>சுர்>சுரன்>சூரன்>சூரியன் = குத்தும் ஞாயிறு

சுல்> சுள்> சுர்> சுரி = குத்தி உருவான துளை

சுல்> சுள்> சுர்> சுரிகை = குத்தும் உடைவாள்.

சுல்> சுள்> சுர்> சுரிமுகம் = துளையுள்ள பக்கம்.

சுல்> சுள்> சுர்> சுரியூசி = பனையேட்டில் துளையிடுங் கருவி

சுல்> சுள்> சுர்> சுரீரெனல் = குத்தல் ஒலிக்குறிப்பு.

சுல்> சுள்> சுர்> சுரை = குழி.

சுல்> சுள்> சுர்> சுரைக்காய் = குழியுள்ள காய்.

அடுத்து, 

சுல்> சுள்> சள்> சள்ளுதல் = இளகுதல்.

சுல்> சுள்> சள்> சள்ளல் = சேறு

சுல்> சுள்> சள்> சழு> சழுங்கு> சழுக்கம் = நெகிழ்ச்சி

சுல்> சுள்> சள்> சழ> சழங்கு> சழங்குதல் = சோர்தல்; சழங்கு> சழக்கம் = தளர்ச்சி

சுல்> சுள்> சளை> சளைத்தல் = தளர்தல், சோர்தல்

சுல்> சுள்> சள்> (சாள்)> சாளை = வடியும் வாய்நீர்

சுல்> சுள்> சொள்> சொளு. சொளுத்தல் = சேறாதல், சோறு குழைதல்

சுல்> சுள்> சொள்> சோர்; சோர்தல் = தளர்தல்; சோர்வு = தளர்ச்சி

சுல்> சுள்> சள்> சர்> சருவுதல் = தொந்தரவு செய்தல், போராடுதல்; சருவல் = தொந்தரவு 

சுல்> சுள்> சள்> சர்> சருச்சை> சர்ச்சை = ஒருவர் நிலை இன்னொருவருக்குக் குத்துவதாவது. தகறாறு.

சுல்> சுள்> சள்> சர்> சரம் = குத்தும் அம்பு, போர், சரமாரி = அம்புமழை; சரடு = அம்புத் தொடர்ச்சி = கயிறு.

சுல்> சுள்> சள்> சர்> சரட்டை> சிரட்டை = கரடான கொட்டங்கச்சி

சுல்> சுள்> சள்> சர்> சரல்> சரள்> சரளை = குத்தும் கல்.

சுல்> சுள்> சள்> சர்> சரவம் = குத்தும் கூரிய நகங் கொண்ட பறவை. இதை sarabham என்று சொல்லித் சங்கதம் எடுத்துக் கொள்ளும்,  இது சிங்கத்தைக் கொல்லும் பறவையாம்.

சுல்> சுள்> சள்> சர்> சரவம் = சுரத்தில் திரியக் கூடிய ஒட்டகம்.

சுல்> சுள்> சள்> சர்> சரவல் = சரவை = தொந்தரவு, துன்பம், coarseness, roughness, தொல்லை, (தொல்லை தரும்) தெளிவற்ற எழுத்து; சரவை யெழுத்து = திருத்தப் படாத முதற்படி; “சரவல் இல்லாமல் எழுதிக் கொண்டு வா” என்பது நாஞ்சில் நாட்டு வழக்கு இச் சொல்லைத் தான் நான் பயன்பாட்டில் விரிவுபடுத்தினேன்.



  


Saturday, May 28, 2022

நொதுமல் (neutral)

”நொதுமலுக்கு neutral எனும் பொருள் எப்படி வந்தது? மென்மை என்பதாலா? ” என்று திரு. Baskaran Ranganathan அண்மையில் கேட்டிருந்தார். நொ + துமல் என்ற கூட்டுச்சொல் இதுவாகும். இதுபற்றிய ஆய்வின்றி செ.சொ. அகரமுதலியில் நொதுமலுக்கு நொது>நொதுமல் என்று நெகிழ்ச்சிப் பொருள் வழி சொற்பிறப்பு தருவார். கூடவே ”நட்பும் பகையும் இல்லாதவரை நொதுமலர் என்பது பழந்தமிழ் வழக்கு” என்றும் கொடுப்பார். ”எப்படி இவ்விளக்கம் சொற் பிறப்போடு சரியாகும்?” என்று அகரமுதலியில் இருக்காது. இதுபோல் நிலையில் பலசொற்கள், தவறான சொற்பிறப்போடு  அகரமுதலியில் உள்ளன. அகரமுதலியில் சரிசெய்ய வேண்டிய குறைகள் பல. (குறைகளைச் சொல்வதால் என்மேல் கோவங் கொள்ளாது.) நிருவாகத்தார் அகரமுதலியை மீள்பார்வை செய்யுமாறு வேண்டிக் கொள்கிறேன். மீள்பார்வை வழியாகத் தான் அகரமுதலியின் தரத்தைக் கூட்ட முடியும். என்னிடம் உதவிகள் கேட்டால் முடிந்ததைச் செய்ய அணியமாய் உள்ளேன்.. 

நுல்>நொல்>நொள்>நொய்>நொ>நோ; 

நொ>நொகு>நொகை; 

நொள்>நொள்வு>நொவ்வு>நோவு; 

நொய்>நை, 

போன்றவை குறைவு, மெலிவு, அழிதல், அற்றல் ஆகிய பொருள்களில் எழும் சொற்களாகும்.  negative என்ற பொருளும் நொகைக்கு உண்டு. அப்பொருளில் நெடுநாள் நான் பயன்படுத்துகிறேன். நம் ”நொ”வும் இந்தையிரோப்பிய ne யும் தொடர்புடையன. அடையாளங் காணத்தான் ஆட்களில்லை. 

துல்>துள்>துள்ந்து>துண்டு, 

துள்>துள்வு,>*துவ்வு = two, do, போன்ற சொற்களும், (வகரமும் மகரமும் தமிழில் போலிகளாதலால்), 

துண்மு>தும்மு>துமு>துமி (= வெட்டு, இரண்டாக்கு) என்ற சொற்களும் தொடர்புடையன. 

துமல் = இரண்டான நிலை. (நட்பு, பகை என்ற இருமை.) = இருமை = இரண்டன்மை. 

நொ துமல் = நட்பு, பகை என்ற இருமை அற்ற (=அழிந்த, குறைந்த, மெலிந்த, தளர்ந்த) நிலை  எனவே இரண்டுமில்லா நடுநிலை. இதேபொருளில் தான் இந்தையிரோப்பியனில் neuter,neutral போன்ற சொற்கள் வரும். காட்டாக ஆங்கிலத்தில், neuter (adj.) late 14c., neutre, in grammar, of nouns, pronouns, etc., "neither masculine nor feminine in gender," also of verbs, "having middle or reflexive meaning, neither active nor passive," from Latin neuter "of the neuter gender," literally "neither one nor the other," from ne- "not, no" (from PIE root *ne- "not") + uter "either (of two)" (see whether). The Latin word is probably a loan-translation of Greek oudeteros "neitr, neuter." From 1520s it also had the sense of "taking neither side" which now generally goes with neutral (adj.).

நொதுமலின் தொடர்பாய் சங்க இலக்கியத்தில் கீழுள்ளவை வருகின்றன.  

    நொதுமல் (5)

நொதுமல் நெஞ்சம் கொள்ளாது என் குறை - நற் 54/7

நொதுமல் கழறும் இ அழுங்கல் ஊரே - குறு 12/6

நொதுமல் வானத்து முழங்கு குரல் கேட்டே - குறு 251/7

நோய் முந்துறுத்து நொதுமல் மொழியல் நின் - அகம் 39/4

நொதுமல் விருந்தினம் போல இவள் - அகம் 112/18

    நொதுமலர் (6)

உள்ளி நொதுமலர் நேர்பு உரை தெள்ளிதின் - நற் 11/3

அழாஅதீமோ நொதுமலர் தலையே - நற் 13/2

இது மற்று எவனோ நொதுமலர் தலையே - குறு 171/4

நொதுமலர் போல கதுமென வந்து - குறு 294/3

நோய் இலை இவட்கு என நொதுமலர் பழிக்கும்-கால் - கலி 59/19

நொதுமலர் போல பிரியின் கதுமென - அகம் 300/11

    நொதுமலாட்டிக்கு (1)

நொதுமலாட்டிக்கு நோம் என் நெஞ்சே - நற் 118/11

    நொதுமலாளர் (3)

நொதுமலாளர் கொள்ளார் இவையே - ஐங் 187/1

நொதுமலாளர் அது கண்ணோடாது - அகம் 398/16

நொதுமலாளர் பொதுமொழி கொள்ளாது - புறம் 35/31

    நொதுமலாளன் (2)

நொதுமலாளன் கதுமென தாக்கலின் - நற் 50/5

நொதுமலாளன் நெஞ்சு அற பெற்ற என் - அகம் 17/8

    நொதுமலாளனை (1)

யாரையும் அல்லை நொதுமலாளனை/அனைத்தால் கொண்க நம் இடையே நினைப்பின் - நற் 395/2,3


Saturday, May 21, 2022

Specific to Generic

பலமுறை நான் எடுத்துரைக்கும் ஓர் அடிப்படைக் கருதுகோளை (basic hypothesis) மீண்டும் இங்கே சொல்ல விழைகிறேன். [இதை நான் அறிந்தது. காரைக்குடி செல்விப் பதிப்பகம் வாயிலாக T.பக்கிரிசாமி அவர்கள் வெளியிட்ட "சிந்தனை வளர - பாடநூல் அமைப்பு" என்னும் அருமையான பொத்தகம். என் சிந்தனை தெளிவுற, அதுவே வழிவகுத்தது.] 

”ஆதி மனிதனிடம் பருப்பொருள், இடப்பொருட் சொற்களே இருந்தன. கருத்துச் சொற்கள், அறிவால் உணரவல்ல சொற்கள், கலைச்சொற்கள், பண்புச் சொற்கள் - இவை ஆதியில் இல்லை. அமானுஷ்யச் சொற்களும் (supernatural) சொற்களும் இல்லை” - என்று திரு. பக்கிரிசாமி மேலே எடுத்துரைத்த அவர் நூலிற் சொல்லுவார். இதையே, சற்று மாறிய முறையில், "எந்தக் கருத்தும் முதலில் விதப்பான பயன்பாட்டில் இருந்து, பின்னரே பொதுமைக்கு வரும்" என்று நான் வரையறுப்பேன். (அதாவது specific to generic என்பதே என் புரிதல்.) 

நெய் என்ற பயன்பாட்டை, விலங்குக் கொழுப்பில் அறிந்த பழந்தமிழ் மாந்தன், பின் எள்ளைக் கடைந்து எடுத்த நெய்க்கு, எள்நெய் (=எண்ணெய்) என்றே பெயரிடடிருக்கிறான்; பின்னால், மற்ற வித்துக்களில் இருந்தும் நெய்யெடுக்க முடிந்த போது, எள்நெய் என்பது, எண்ணெய் எனும் பொதுமைச்சொல்லாய்த் திரிந்து, எள் அல்லாதவற்றில் இருந்து கிடைத்த எண்ணெய்களையும் குறித்திருக்கிறது. 

இதே போலக் "கீழிருக்கும் நிலம்" எனும் விதப்பான இந்தியப் புவிக்கிறுவ (geography) உண்மை "கிழக்குத் திசையைப்" பொதுமையாய்க் குறிக்க வந்திருக்கிறது. அதாவது, விதப்பான இடப்பொருளைக் குறிக்கும் கீழ் என்னும் சொல், நாளடைவில் கிழக்கு திசை என்னும் பொதுப்பொருளை பழக்கத்தாலே குறிக்கிறது. (எந்த மாந்தக் கூட்டத்தாரும் தாம் வாழும் புவிக்கிறுவின் கூறுகள், சூரியன் எழும்/சேரும் நகர்ச்சிகள் ஆகியவற்றை வைத்தே, திசை பற்றிய விதப்பான குறியீடுகளைத் தம்மிடையே புரிந்து கொள்ளுகிறார்கள்.) 

இனி பூதம் என்ற சொல் பிறந்த வகை பற்றிப் பார்ப்போம். முதலில் வடமொழியாளர் (குறிப்பாக இந்தாலசி மடற்குழுவில் இருப்போர்) கருத்தோடு எனக்குள்ள முரணைச் சொல்லவேண்டும். 

அளவையியலில் உள்ளெழுச்சி, வழியெழுச்சி (induction, deduction) என்ற இரண்டு முறைகள் உண்டு. அறிவியல் என்பது 100 க்கு 99 விழுக்காடு உள்ளெழுச்சி (induction) முறையில் தான் வளருகிறது. ஆனாலும் தெரியாதவருக்கு ஒன்றைச் சொல்லிக் கொடுக்கும் போது வழியெழுச்சி (deduction) முறையில் தெரிவிப்பது அறிவியலில் உள்ள பழக்கம். இந்த உள்ளெழுச்சி (induction) என்பது இயற்கையாக அறிவியல் வளரும் முறை. அதே போல பெரும்பாலும் விதப்பான (specialized) சிந்தனையில் இருந்து தான், பொதுமையான (generic) சிந்தனைக்கு அறிவியலில் போக முடியும். 'முதலில் விதப்பு - பின் பொதுமை - மறுபடியும் விதப்பு - மறுபடியும் பொதுமை' என்ற சுழற்சியில் தான் மனிதனின் சிந்தனை வளருகிறது. அதேபடி தான் கருத்துக்களும் சொற்களும் எல்லா மொழிகளிலும் உருவாகின்றன. 

இதை விளக்குமாப் போலத் தமிழில் ஒரு காட்டைப் பார்ப்போம். நெய் என்பது ஏற்கனவே விலங்கில் இருந்து பெறப்பட்ட கொழுப்பில் இருந்து உருக்கப் பட்டது. நெடுநாட்கள் இந்த விலங்குக் கொழுப்பு நெய் மட்டுமே தமிழ் மாந்தனுக்குத் தெரியும். பின்னாளில் நாகரிகம் வளர்ந்த நிலையில் வேறொரு முயற்சியில், எள்ளில் இருந்தும் நெய் போன்ற ஒரு பொருள் பெறப்பட்டது. இப்பொழுது, இதுவரை விதப்பான சொல்லாக இருந்த நெய் என்பது தன்னுடைய பொருளை மேலும் விரித்துப் பொதுமையாகிறது; அப்பொழுது எள்+நெய் = எண்ணெய் என்று ஆயிற்று; எண்ணெய்யும் ஒரு வகை நெய்தானே? அடுத்த சுற்றில், இன்னும் நாகரிக வளர்ச்சியில் எண்ணெய் என்ற விதப்பான சொல்லே மேலும் பொதுமையான சொல்லாகி கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், மண்ணெண்ணெய் எனப் பல எண்ணெய்கள் கிளைக்கின்றன. அடுத்த வளர்ச்சியில், மண்ணெண்ணெய் என்ற விதப்புச்சொல் மீண்டும் பொதுவாகி, இந்திய மண்ணெண்ணெய், அரேபிய மண்ணெண்ணெய் என உட்பொதிகள் (composition) மாறிய வகையில் மீண்டும் ஒரு விதப்புச் சொற் கூட்டங்களைத் தோற்றுவிக்கிறது. சொற்கள் இப்படித் தான் ஒரு மொழியில் வளருகின்றன.

இனி இன்னொரு சொல்லைப் பார்ப்போம். ஞாலம் என்ற சொல் புவியைக் குறிக்கிறது. ஞாலம் என்றால் தொங்குவது என்று பொருள். இதை வைத்துக் கொண்டு 'ஆகாயத்தில் இந்தப் பூவுலகு தொங்கிக் கொண்டே இருக்கிறது. இதை அந்தக் காலத்திலேயே எங்கள் தமிழன் உய்த்துணர்ந்து விட்டான்', என்று நம்மில் ஒரு சிலர் தவறாகப் பொருள் கொண்டு, வீணே மார் தட்டிக் கொள்ளுகிறோம். அது சரியா என்று கொஞ்சம் ஓர்ந்து பார்த்தால் தவறு புரிந்து போகும். விலங்காண்டியாய் இருந்த பின் நாகரிகம் அடைந்து, குறிஞ்சி நிலத்தில் நடமாடிக் கொண்டு இருந்த ஆதி மாந்தன் பூமிக்கு வெளியில் இருந்து பார்த்தா, பூமி தொங்குவதைத் தெரிந்து கொள்வான்? அது அந்தக் கால அறிவு நிலைக்கு முற்றிலும் முரணானது அல்லவா? அவன் கொண்ட பட்டறிவின் வழியே அவனைச் சுற்றியுள்ள சூழலில் இருந்து தானே அவன் பேசிய சொல் வர முடியும்? நாம் மாந்தனுக்கு மீறிய செயலை நம்பவில்லையென்றால், அறிவியலின் பாற்பட்டு நின்றால், உலகாய்தத்தின் படி ஒழுகினால், "பூமி தொங்குகிறது-எனவே ஞாலம் என்ற பெயரிட்டான்" என்ற விளக்கத்தை எப்படி ஒத்துக் கொள்ள முடியும்? (ஆனால் இப்படிக் கருத்துமுதலாக விளக்கம் தரும் தமிழறிஞர்கள் (பாவாணரையும் சேர்த்து) இருக்கத்தான் செய்கிறார்கள்.) 

சரி, உண்மையான விளக்கம் என்ன? சொல்லறிஞர் ப. அருளி சொல்லுகிறார். இந்தியத் துணைக்கண்டம் எங்கும் பெரிதும் பரவிக் கிடந்த ஒரு மரம் ஆலமரம். அது புதலியற் (botany) தோற்றத்தின் படி பார்த்தால், இந்தியாவிற்கே சொந்தமானது. ஆலுதல் என்பதன் பொருள் தொங்குதல் தான். ஆனால் இங்கே எது தொங்குகிறது? ஆலமரத்தின் சிறப்பே அதன் தொங்கும் விழுதுகள் தான், இல்லையா? நாம் ஏதொன்றுக்கும் பெயர் வைக்கும் போது அதன் தனித்துத் தெரியும் குணத்தை வைத்துத் தானே பெயர் வைக்கிறோம்? அதனால் ஆலும் விழுதுகள் நிறைந்த மரம் ஆல் என்றே கூறப்பட்டது. ஆல்>ஆலம்>யாலம் என்று இந்தச் சொல் விரியும் போது ஆலங் காடுகளைக் குறிக்கலாயிற்று. ஆலமரம் பரவிக் கிடந்த நிலம் கூடக் பின்னால் "காடு" என்று சொல்லை போலவே "யாலம்" என்று சொல்லப் படலாயிற்று. முதலில் மரம், பின்னால் காடு முடிவில் காடுகள் உள்ள நிலம் என்ற பொருள் நீட்சி இயற்கையானதே. இனி அந்த யாலம் கூட சொற்பலுக்கில் திரிகிறது. தமிழில் ய>ஞ>ந என்ற ஒலி மாற்றம் ஏகப் பட்ட சொற்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. (அருளியின் "யா" என்ற பொத்தகத்தை படித்தால் பல்வேறு சொற்களை இந்த மாற்றத்திற்குக் காட்டாகக் காணலாம்.) யாலம்>ஞாலம் = ஆலமரங்கள் நிறைந்த இடம்; அதாவது பரந்த பூமி. அந்தக் கால மாந்தனுக்கு யாலம் நிறைந்த நாவலந்தீவே ஞாலம் என்ற பரந்த புவியாய்த் தெரிந்தது ஒன்றும் வியப்பில்லை. இதற்கு மாறாக, (புவி என்னும் ஞாலம் தொங்கிக் கொண்டு இருக்கிறது என்ற) இன்றையப் புரிதலை அன்றையச் சொல்லுக்கு ஏற்றிச் சொன்னால் எப்படி? அன்றைய மனிதனுக்கு பரவிக் கிடக்கிற ஆலங் காடே ஒருவகையில் ஞாலம் தான். இப்படிச் சொல்வேர் தேடும் போது அன்றைய அறிவுக்கு எட்டிய முறையில் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அப்படி வேர்ப் பொருள் காணும் போது தான் நமக்கு நம் நாட்டின் தொன்மை புரிகிறது. இங்கு ஆதி மாந்தன் வாழ்ந்திருப்பதற்கான நாகரிகக் கூறுகள் ஞாலம் போன்ற சொற்கள் மூலம் வெளிப்படுகிறது. (ஏனெனில் இந்தியத் துணைக் கண்டத்திற்கே உரிய ஆலமரத்தின் கூறு இங்கே உள்ளே பொதிந்து இருக்கிறது.)

திரு தி.பக்கிரிசாமி என்பவர் "சிந்தனை வளர - பாடநூல் அமைப்பு" (செல்வி பதிப்பகம், காரைக்குடி) என்ற பொத்தகத்தில் ஒரு அருமையான கருத்துச் சொல்லியிருந்தார். "ஐம்புலன் சொற்களே அறிவுக்கு அடித்தளம்; ஆதி மனிதனிடம் பருப் பொருள், இடப் பொருள் சொற்களே இருந்தன. கருத்துச் சொற்கள், அறிவால் உணரவல்ல சொற்கள், கலைச் சொற்கள், பண்புச் சொற்கள் - இவை ஆதியில் இல்லை. மீவியற்கைச் (Supernatural) சொற்களும் இல்லை." இதைப் பற்றி நெடு நாட்களுக்கு முன் தமிழ் இணையத்தில் ஒரு மடல் எழுதியிருந்தேன். அதன் படி இப்பொழுது என்னிடம் இல்லை.

ஐம்புலன் சொற்களுக்கு ஒரு சில எடுத்துக் காட்டுகளைப் பார்ப்போம். கை என்ற சொல் கரம் என்ற பருப் பொருளை உணர்த்தி பின் அஞ்சு என்ற கருத்துப் பொருளையும் உணர்த்தியது. இங்கு விதப்பில் இருந்து பொதுமை என்று கருத்து விரிகிறது. அதே போல பல் (வாயில் உள்ள tooth) என்பதில் இருந்தே பலது (many) என்ற கருத்துப் பிறந்தது என்று புலவர் இளங்குமரன் நிறுவுவார். அதே போல கவலை என்பது மரக்கிளை பிரியும் ஒரு மரப்பகுதி. அது கவடு, கவட்டை என்றெல்லாம் பேச்சுவழக்கில் திரியும். இதுவும் ஒரு பருப் பொருள் தான். இரண்டு, மூன்று பாதைகள் பிரிகிற அல்லது கூடுகிற இடமும் கவலை என்றே அறியப் படும். மரக்கிளைப் பிரிவு, பாதைப் பிரிவுகளுக்கு எனப் பொருள் நீளுகிறது. இந்தப் பொருளே பின்னால் மனக் கவலை என்ற வருத்தப் பொருளுக்கும் (முற்றிலும் கருத்துச் சார்ந்த ஒரு உணர்வு) பயனாகத் தொடங்குகிறது. ஆகப் பருப்பொருட் சொற்களே ஒரு வளர்ச்சியில் கருத்துச் சொற்களாகச் சேவை புரிகின்றன. இதுதான் முறையும் கூட.

இன்னொரு காட்டையும் பார்ப்போம். ஒருவனைப் பார்த்து, "அவன் நல்ல பையன்" என்கிறோம். இந்த "நல்ல" என்ற சொல் எப்படிப் பிறந்திருக்கக் கூடும்? மாந்தன் பெற்ற ஒரு பருப்பொருட் பயன்பாட்டை அது நமக்குச் சொல்ல வேண்டுமே? கொஞ்சம் ஓர்ந்து பார்த்தால் விடை கிடைக்கும். எல் என்பது ஒளி. ஒருவன் மேல் ஒளி பட்டால் அவன் பொலிவாக இருக்கிறான் என்று பொருள். ஏதொன்றும் பொலிவாக இருந்தால் அது நமக்குப் பிடிக்கிறது. எல்>யெல்>ஞெல்>நெல் என்று இந்தச் சொல் திரிவு படும். நாம் விளைக்கும் நெல் மஞ்சளாக ஒளிபட நிற்கிறது. தவிர, நெல் நம்முடைய பசியை ஆற்றுகிறது. ஆக, நமக்கு உறுதுணையாக இருக்கிறது. எனவே நெல்லவன் என்பவன் நல்லவன் ஆகிறான். இங்கே இரண்டு கருத்து வந்திருக்கிறது. அடிப்படைப் பொருள் ஒளி - விதப்பானது. அதனின்றும் விளைந்த சொல் நெல்; அதனிலும் விதப்பான இன்னொரு பொருள், அதன் பயன். இப்படி மற்றவருக்குப் பயன் தரக் கூடியவன் நல்லவன் எனப்படுகிறான். தமிழில் ஏகப்பட்ட "நெல்லூர்கள்", "நல்லூர்கள்" என்றே பொதுமக்கள் பலுக்கில் சொல்லப்படும்.

இதே போல ஆதித் தமிழனுக்கு, கொன்றை தெரியும், கோங்கு தெரியும், தேக்கு தெரியும். ஆனால் மரம் என்ற பொதுப் பொருள் தானாகச் சுயம்புவாக வர முடியாது அல்லவா? அப்படியானால் மரம் என்ற பொதுமைச்சொல் முதலில் எந்த விதப்புப் பொருளைக் குறித்தது? இந்த ஆய்வின் விளைவாக (கடம்பைக் குறிக்கும்) மரா என்ற விதப்பான சொல் மரம் என்ற பொதுமைக் கருத்தை உருவாக்கியது என்று உணர்ந்தேன். கடம்பவனம் பற்றித் தமிழரின் தொன்மம் நமக்குச் சொல்லுகிறது அல்லவா? இதை இன்னொரு சமயம் விளக்குவேன்.

இப்படிச் சிந்தனையில் வரக்கூடிய பருப் பொருள்கள் எல்லாம் அந்தக் காலத்து மனிதனை உணரக் கூடியவையாக இருக்க வேண்டும். பூ என்ற வேர்ச் சொல்லில் இருந்து, பூ என்னும் விதப்புப் பொருளைக் குறிக்காது, becoming, growing என்ற பொதுமைப் பொருளை நிலை நாட்டி, அதிலிருந்து பூதம் என்ற சொல் எழாது என்று நான் சொல்லுவதற்கு உரிய காரணங்களை இனி விளக்குவேன். பூ என்ற மலர் பூக்கலாம்; அப்படிச் சொல்லுவது இயற்கையான வளர்ச்சி; ஏனென்றால், பூ என்ற பருப் பொருளை நாம் உணர முடியும். யாலம் என்பது ஞாலம் என ஆகலாம்; ஏனென்றால் யாலம் என்ற பருப்பொருளை நாம் உணர முடியும். ஆனால் பூவில் இருந்து, எந்த ஒரு விதப்பான பொருளைக் குறிக்காது, வெறுமே becoming, growing என்ற தோன்றுதல் பொருளில், பூது>பூதம் என்ற என்ற ஒரு பொதுமைக் கருத்தீட்டை (generic concept) கொண்டு வருவது மிகக் கடினம் அய்யா, மிகக் கடினம் ! 

வடமொழியாளர், கருத்துக்கள் ஒன்றில் இருந்து ஒன்றாக எப்படிக் கிளைக்கும் என்று அடுத்தடுத்து ஐம்புலன் சொற்களாகப் பார்க்காமல், இலக்கணி பாணினியின் தாக்கத்தால் 200, 300 சந்த அடி வேர்களை வைத்துக் கொண்டு, கருத்துமுதல் வாதமாக, ஒரு generic concept - யை முதலில் வைத்து பின் அதோடு பல ஒட்டுக்களைச் சேர்த்து வழியெழுச்சி (deduction) ஆகக் காட்டுவார்கள். இவர்களின் வாதத்தைப் பார்த்து நான் பல நாட்கள் பெரிதும் குழம்பிப் போயிருக்கிறேன். Can a primitive man configure first a generic concept out of nowhere without any physically meaningful specific experience? It appears to me completely non-intuitive to start with a generic concept in the primitive days. வேண்டுமானால், வெறும் வழியெழுச்சியாக (deductive), வடமொழி போன்ற ஒரு செயற்கை மொழியில், ஏன் எசுபராந்தோவில் (Esperanto) வேண்டுமானால் உருவாக்க முடியும். ஆனால் தமிழ் போன்ற இயற்கை மொழியில் அது முடியாது. இங்கு தான் இந்தாலசிக்காரர்களுடன் நான் பெரிதும் முரண்படுகிறேன். 

பருப்பொருட் சொற்களே ஒரு வளர்ச்சியில் கருத்துச் சொற்களாகச் சேவை புரிகின்றன. இதுதான் முறையும் கூட.

http://valavu.blogspot.com/2005/04/physics-1.html

http://valavu.blogspot.com/2005/04/physics-2.html

http://valavu.blogspot.com/2005/04/physics-3.html

http://valavu.blogspot.com/2005/04/physics-4.html 

Tuesday, May 17, 2022

Resume - profile - curriculum vitae - biodata

நண்பர் நாக. இளங்கோவன் 2018 மேயில் அவருடைய முகநூல் பக்கத்தில் resume, profile, curriculum vitae, biodata என்ற 4 சொற்களுக்கான தமிழிணைச் சொற்களை பரிந்துரைத்தார். என் பரிந்துரைகள் கீழே:

 resume (n.)

also résumé, 1804, "a summary," from French résumé, noun use of past participle of Middle French resumer "to sum up," from Latin resumere (see resume (v.)). Meaning "biographical summary of a person's career" is 1940s.
இது சேரிகை.
profile (n.)
1650s, "a drawing of the outline of anything," from older Italian profilo "a drawing in outline," from profilare "to draw in outline," from pro "forth" (from PIE root *per- (1) "forward") + filare "draw out, spin," from Late Latin filare "to spin, draw out a line," from filum "thread" (from PIE root *gwhi- "thread, tendon"). Meaning "a side view" is from 1660s. Meaning "biographical sketch, character study" is from 1734.
இது கோட்டிழை.
curriculum vitae (n.)
"brief account of one's life and work," 1902, from Latin curriculum vitae, literally "course of one's life" (see curriculum). Abbreviated c.v..
இது வாழ்வோட்டம்.
bio-
word-forming element, especially in scientific compounds, meaning "life, life and," or "biology, biology and," or "biological, of or pertaining to living organisms or their constituents," from Greek bios "one's life, course or way of living, lifetime" (as opposed to zoe "animal life, organic life"), from PIE root *gwei- "to live." The correct usage is that in biography, but since c. 1800 in modern science it has been extended to mean "organic life," as zoo-, the better choice, is restricted in modern use to animal, as opposed to plant, life. Both are from the same PIE root. Compare biology.
biodata
இது வாழ்தரவு..
3
  • Like