நல் என்ற வார்த்தைக்கு கரிய, கருமை என்ற பொருள் இருக்கிறது என்று படித்தேன். நல்ல பாம்பு, நல்ல எண்ணெய், நல்லிரவு இவையெல்லாம் கருப்பு என்ற நிறத்தையே குறிப்பதாக படித்தேன். இது எந்த அளவு உண்மை? - என்று நண்பர் @Selva Murali கேட்டிருந்தார். இந்த இடுகையில் அது குறித்துப் பேசுகிறேன்.
யா என்ற ஓரெழுத்தொரு மொழிக்குக் கருமையும் ஒரு பொருள். சொல்லாய்வறிஞர் அருளியார் ”யா” என்ற தலைப்பில் ஒரு தனி நூலே வெளியிட்டுள்ளார். அதில் கருமைப் பொருளுமுண்டு. அதில் இன்னும் பல சொற்களுக்குக் கருமைப் பொருள் சுட்டிக் காட்டுவார்.அந்நூலில் இருந்து சில காட்டுகளை மட்டும் இங்கே நான் குறிக்கிறேன். மேலும் விவரம் வேண்டுவோர் முழு நூலையும் தேடிப் படியுங்கள்.
அருளியாரின் ஆய்வால் தான் ய>ஞ>ந என்ற தமிழ் ஒலித்திரிவு விதியைக் கண்டுகொண்டோம். தமிழில் பல சொற்கள் இவ்விதியைப் பின்பற்றித் தம் ஒலிப்பில் மாறியுள்ளன, யால்<ஞால்>நால் என்ற திரிவும் அதன் பாற்பட்டதே. யான்>ஞான்>நான், யாய்>ஞாய் என்பனவுங் கூட இதே திரிவில் எழுந்தவை தான்,
யா மரத்தை Hardwickia binata விற்கு இணையாய் புதலியலில் (botany) சொல்வார். ”யானை” என்ற பெயர், அவ்விலங்கின் கருமை நிறத்தால் ஏற்பட்ட பெயர். அதே யானைக்கு யா>ஞா>நா என்ற விதிப்படி, நாகம் என்ற பெயரும் கருமைப் பொருள் சுட்டியும் உண்டு. யாடு>ஆடு, யானம்>யேனம்>ஏனம் = பன்றி, ஏனல் = கருந்தினை என்பனவும் இதோடு சேர்ந்ததே. யாமம் என்ற சொல்லும் கருத்துக் காட்சியளிக்கும் இரவைச் சுட்டும்., யாம்> நாம் = அச்சம் என்பதும் கரும் பொருளை ஒட்டி வந்ததே. யாந்தை> இருள்நேரப் பறவையான ஆந்தை, நாகம் = கருநிறப் பாம்பு.
நாகர் = கருநிற மாந்தர், கருநிறத்தவரைக் குறிப்பதாய், இற்றை உலகத்தில் பரவலாய்ச் சொல்லப்படும் negro என்ற பெயரும் நாகரோடு தொடர்புடையதே. நாகர்> நக்கர்> நக்கவரம் என்ற தீவும் இதே கருமைப் பொருள் ஒட்டி எழுந்ததே. யா> ஞா> நா விதிப்படி யாவல்> ஞாவல்> நாவல் (மரம், பழம்) என்பதும் எழும். இந்தியாவை ஒரு காலத்தில் தமிழர் குறிக்கும் சொல்லான நாவலந் தண்பொழில் என்பது இதன் நீட்சி. யால்>யாம்பி>ஆம்பி என்பதும் கருநிறக் காளானைக் குறிக்கும், யாம்>ஆம் = நீர். (நீருக்கும், முகிலுக்கும் ஆன பல சொற்கள் கருமைப் பொருளில் எழுந்தன. யால்>ஆல்>ஆலம் = நீர். யாறு>ஆறு என்பதும். யாமன்>நாமன்>நமன் என்ற கருநிற எமனைக் குறிக்கும் சொல்லும் இப்படிக் கருமையில் எழுந்ததன தாம்.
இனி, நல் மிளகு = கரு மிளகு; நல்ல சாமம் > நல்ல ஆமம் = நல்ல யாமம். நல்ல துவரம் = கடுகு. நல்ல துளசி = கருந்துளசி; அந்துவன் =கருமையானவன், நல்லந்துவன்= கருமை கூடியவன் (அந்தமான் என்னும் தீவும் கூட அந்துவன் = கருப்பன் என்ற பெயர்சார்ந்து இருக்கலாம். நல்ல பழாசு = black horey thorn; நல்ல பாம்பு = கரு நாகம். நல்லரிசி = கருப்புப் புட்டரிசி என்ற பல சொற்களையும் கவனியுங்கள்.
நல்லம் என்ற தனிச்சொல்லும் ”கருப்பு , கரி” யைக் குறிப்பதாய் தமிழில் உண்டு. தமிழ் நல்லமும், தெலுங்கு நலுப்பு , நல்ல, நல்லன, நல்லனி என்பவையும் தொடர்புள்ளன. ஆந்திரா, தெலுங்கானாவில் உள்ள சிங்கவேள் குன்றம் (அகோபிலம்) என்ற கோயில் இருக்கும் மலைத்தொடரை நல்லமலைத் தொடர் என்பார். பொதுவாய் தெற்கு மலைகள் கருங்கல்லாலும், மண்மேடுகளாலும் உருவானவை. இந்த மலைத்தொடரில் கருங்கல் அதிகமாயும். மண்மேடுகள் குறைவாயும் இருப்பதால் நல்லமலைத் தொடர் எனப்பட்டது. நல்ல மலை = கருங்கல் மலை. இம் மலைத்தொடர் செம்மரக் காடுகளுக்கும், முன்னாள் முதல்வர் இராசசேகர ரெட்டியின் Helicoter crash க்கும் பெயர்பட்டது. மிடையங்களிலும் இச்செய்திகள் கூறப்பட்டன.
ஆல்<ஞல்>நல் என்ற திரிவையும் இங்கு சொல்லவேண்டும். அல்லங்காடி என்பது இரவு அங்காடி. அல்>நல் என்றும் திரிவு ஏற்படலாம். நால்வு = கருப்பு. நா(ல்)வல் = நாவல். இது நவ்வல், நலவல் என்றும் சொல்லப்படும். விதப்பாய், நவ்வல் என்பது இனிப்பு நாவலைக் குறிக்கும். நால்>நாள் என்பது முழு இரவைக் குறிக்கும் சொல். பின்னால் தான் நாளின் பொருள் விரிந்து பகல், இரவு ஆகிய இரண்டையும் சேர்த்துக் குறித்தது. நல்லா= காராம் பசு; நவரை = கருங்குருவை = black paddy. பாண்டி நாட்டில் குலதெய்வங்களுக்கு முன்னால் விளக்கை ஏற்றிப் படையல், பூசைகள் செய்த பிறகு, ”விளக்கை அமர்த்து” என்பதைச் சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் “விளக்கை நல்லா வை” என்னும் பேச்சு வழக்கில் தெரிந்து கொள்ளலாம். நல்லாக வை = இருட்டாகும் படி வை..
முடிவாய் ஒன்று சொல்ல விழைகிறேன்.நல் என்பதற்குத் தமிழில் பல பொருள்கள் உண்டு. அதில் கருப்பு என்ற பொருளும் ஒன்று. நமக்கு ஐயமிருந்தால் முதலில் ஓர் அகரமுதலியைப் பார்க்கவேண்டும். அதைப் பாராமல், சற்று நேரம் செலவழிக்காமல், தான் தோன்றியாய்க் கருத்து உரைப்பது நமக்கு உதவி செய்யாது.
இக்கட்டுரையில் கூறப்பட்ட எல்லாவிதப் பொருள்களுக்கும் முதல் ஆவணங்களைத் தேடுவதென்றால் செய்யலாம். 10,15 நாட்களும், இளமையும் இருந்தால் நான் அதிகமாகவே செய்யலாம். அப்புறம் உங்கள் உகப்பு.
No comments:
Post a Comment