Saturday, May 21, 2022

Specific to Generic

பலமுறை நான் எடுத்துரைக்கும் ஓர் அடிப்படைக் கருதுகோளை (basic hypothesis) மீண்டும் இங்கே சொல்ல விழைகிறேன். [இதை நான் அறிந்தது. காரைக்குடி செல்விப் பதிப்பகம் வாயிலாக T.பக்கிரிசாமி அவர்கள் வெளியிட்ட "சிந்தனை வளர - பாடநூல் அமைப்பு" என்னும் அருமையான பொத்தகம். என் சிந்தனை தெளிவுற, அதுவே வழிவகுத்தது.] 

”ஆதி மனிதனிடம் பருப்பொருள், இடப்பொருட் சொற்களே இருந்தன. கருத்துச் சொற்கள், அறிவால் உணரவல்ல சொற்கள், கலைச்சொற்கள், பண்புச் சொற்கள் - இவை ஆதியில் இல்லை. அமானுஷ்யச் சொற்களும் (supernatural) சொற்களும் இல்லை” - என்று திரு. பக்கிரிசாமி மேலே எடுத்துரைத்த அவர் நூலிற் சொல்லுவார். இதையே, சற்று மாறிய முறையில், "எந்தக் கருத்தும் முதலில் விதப்பான பயன்பாட்டில் இருந்து, பின்னரே பொதுமைக்கு வரும்" என்று நான் வரையறுப்பேன். (அதாவது specific to generic என்பதே என் புரிதல்.) 

நெய் என்ற பயன்பாட்டை, விலங்குக் கொழுப்பில் அறிந்த பழந்தமிழ் மாந்தன், பின் எள்ளைக் கடைந்து எடுத்த நெய்க்கு, எள்நெய் (=எண்ணெய்) என்றே பெயரிடடிருக்கிறான்; பின்னால், மற்ற வித்துக்களில் இருந்தும் நெய்யெடுக்க முடிந்த போது, எள்நெய் என்பது, எண்ணெய் எனும் பொதுமைச்சொல்லாய்த் திரிந்து, எள் அல்லாதவற்றில் இருந்து கிடைத்த எண்ணெய்களையும் குறித்திருக்கிறது. 

இதே போலக் "கீழிருக்கும் நிலம்" எனும் விதப்பான இந்தியப் புவிக்கிறுவ (geography) உண்மை "கிழக்குத் திசையைப்" பொதுமையாய்க் குறிக்க வந்திருக்கிறது. அதாவது, விதப்பான இடப்பொருளைக் குறிக்கும் கீழ் என்னும் சொல், நாளடைவில் கிழக்கு திசை என்னும் பொதுப்பொருளை பழக்கத்தாலே குறிக்கிறது. (எந்த மாந்தக் கூட்டத்தாரும் தாம் வாழும் புவிக்கிறுவின் கூறுகள், சூரியன் எழும்/சேரும் நகர்ச்சிகள் ஆகியவற்றை வைத்தே, திசை பற்றிய விதப்பான குறியீடுகளைத் தம்மிடையே புரிந்து கொள்ளுகிறார்கள்.) 

இனி பூதம் என்ற சொல் பிறந்த வகை பற்றிப் பார்ப்போம். முதலில் வடமொழியாளர் (குறிப்பாக இந்தாலசி மடற்குழுவில் இருப்போர்) கருத்தோடு எனக்குள்ள முரணைச் சொல்லவேண்டும். 

அளவையியலில் உள்ளெழுச்சி, வழியெழுச்சி (induction, deduction) என்ற இரண்டு முறைகள் உண்டு. அறிவியல் என்பது 100 க்கு 99 விழுக்காடு உள்ளெழுச்சி (induction) முறையில் தான் வளருகிறது. ஆனாலும் தெரியாதவருக்கு ஒன்றைச் சொல்லிக் கொடுக்கும் போது வழியெழுச்சி (deduction) முறையில் தெரிவிப்பது அறிவியலில் உள்ள பழக்கம். இந்த உள்ளெழுச்சி (induction) என்பது இயற்கையாக அறிவியல் வளரும் முறை. அதே போல பெரும்பாலும் விதப்பான (specialized) சிந்தனையில் இருந்து தான், பொதுமையான (generic) சிந்தனைக்கு அறிவியலில் போக முடியும். 'முதலில் விதப்பு - பின் பொதுமை - மறுபடியும் விதப்பு - மறுபடியும் பொதுமை' என்ற சுழற்சியில் தான் மனிதனின் சிந்தனை வளருகிறது. அதேபடி தான் கருத்துக்களும் சொற்களும் எல்லா மொழிகளிலும் உருவாகின்றன. 

இதை விளக்குமாப் போலத் தமிழில் ஒரு காட்டைப் பார்ப்போம். நெய் என்பது ஏற்கனவே விலங்கில் இருந்து பெறப்பட்ட கொழுப்பில் இருந்து உருக்கப் பட்டது. நெடுநாட்கள் இந்த விலங்குக் கொழுப்பு நெய் மட்டுமே தமிழ் மாந்தனுக்குத் தெரியும். பின்னாளில் நாகரிகம் வளர்ந்த நிலையில் வேறொரு முயற்சியில், எள்ளில் இருந்தும் நெய் போன்ற ஒரு பொருள் பெறப்பட்டது. இப்பொழுது, இதுவரை விதப்பான சொல்லாக இருந்த நெய் என்பது தன்னுடைய பொருளை மேலும் விரித்துப் பொதுமையாகிறது; அப்பொழுது எள்+நெய் = எண்ணெய் என்று ஆயிற்று; எண்ணெய்யும் ஒரு வகை நெய்தானே? அடுத்த சுற்றில், இன்னும் நாகரிக வளர்ச்சியில் எண்ணெய் என்ற விதப்பான சொல்லே மேலும் பொதுமையான சொல்லாகி கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், மண்ணெண்ணெய் எனப் பல எண்ணெய்கள் கிளைக்கின்றன. அடுத்த வளர்ச்சியில், மண்ணெண்ணெய் என்ற விதப்புச்சொல் மீண்டும் பொதுவாகி, இந்திய மண்ணெண்ணெய், அரேபிய மண்ணெண்ணெய் என உட்பொதிகள் (composition) மாறிய வகையில் மீண்டும் ஒரு விதப்புச் சொற் கூட்டங்களைத் தோற்றுவிக்கிறது. சொற்கள் இப்படித் தான் ஒரு மொழியில் வளருகின்றன.

இனி இன்னொரு சொல்லைப் பார்ப்போம். ஞாலம் என்ற சொல் புவியைக் குறிக்கிறது. ஞாலம் என்றால் தொங்குவது என்று பொருள். இதை வைத்துக் கொண்டு 'ஆகாயத்தில் இந்தப் பூவுலகு தொங்கிக் கொண்டே இருக்கிறது. இதை அந்தக் காலத்திலேயே எங்கள் தமிழன் உய்த்துணர்ந்து விட்டான்', என்று நம்மில் ஒரு சிலர் தவறாகப் பொருள் கொண்டு, வீணே மார் தட்டிக் கொள்ளுகிறோம். அது சரியா என்று கொஞ்சம் ஓர்ந்து பார்த்தால் தவறு புரிந்து போகும். விலங்காண்டியாய் இருந்த பின் நாகரிகம் அடைந்து, குறிஞ்சி நிலத்தில் நடமாடிக் கொண்டு இருந்த ஆதி மாந்தன் பூமிக்கு வெளியில் இருந்து பார்த்தா, பூமி தொங்குவதைத் தெரிந்து கொள்வான்? அது அந்தக் கால அறிவு நிலைக்கு முற்றிலும் முரணானது அல்லவா? அவன் கொண்ட பட்டறிவின் வழியே அவனைச் சுற்றியுள்ள சூழலில் இருந்து தானே அவன் பேசிய சொல் வர முடியும்? நாம் மாந்தனுக்கு மீறிய செயலை நம்பவில்லையென்றால், அறிவியலின் பாற்பட்டு நின்றால், உலகாய்தத்தின் படி ஒழுகினால், "பூமி தொங்குகிறது-எனவே ஞாலம் என்ற பெயரிட்டான்" என்ற விளக்கத்தை எப்படி ஒத்துக் கொள்ள முடியும்? (ஆனால் இப்படிக் கருத்துமுதலாக விளக்கம் தரும் தமிழறிஞர்கள் (பாவாணரையும் சேர்த்து) இருக்கத்தான் செய்கிறார்கள்.) 

சரி, உண்மையான விளக்கம் என்ன? சொல்லறிஞர் ப. அருளி சொல்லுகிறார். இந்தியத் துணைக்கண்டம் எங்கும் பெரிதும் பரவிக் கிடந்த ஒரு மரம் ஆலமரம். அது புதலியற் (botany) தோற்றத்தின் படி பார்த்தால், இந்தியாவிற்கே சொந்தமானது. ஆலுதல் என்பதன் பொருள் தொங்குதல் தான். ஆனால் இங்கே எது தொங்குகிறது? ஆலமரத்தின் சிறப்பே அதன் தொங்கும் விழுதுகள் தான், இல்லையா? நாம் ஏதொன்றுக்கும் பெயர் வைக்கும் போது அதன் தனித்துத் தெரியும் குணத்தை வைத்துத் தானே பெயர் வைக்கிறோம்? அதனால் ஆலும் விழுதுகள் நிறைந்த மரம் ஆல் என்றே கூறப்பட்டது. ஆல்>ஆலம்>யாலம் என்று இந்தச் சொல் விரியும் போது ஆலங் காடுகளைக் குறிக்கலாயிற்று. ஆலமரம் பரவிக் கிடந்த நிலம் கூடக் பின்னால் "காடு" என்று சொல்லை போலவே "யாலம்" என்று சொல்லப் படலாயிற்று. முதலில் மரம், பின்னால் காடு முடிவில் காடுகள் உள்ள நிலம் என்ற பொருள் நீட்சி இயற்கையானதே. இனி அந்த யாலம் கூட சொற்பலுக்கில் திரிகிறது. தமிழில் ய>ஞ>ந என்ற ஒலி மாற்றம் ஏகப் பட்ட சொற்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. (அருளியின் "யா" என்ற பொத்தகத்தை படித்தால் பல்வேறு சொற்களை இந்த மாற்றத்திற்குக் காட்டாகக் காணலாம்.) யாலம்>ஞாலம் = ஆலமரங்கள் நிறைந்த இடம்; அதாவது பரந்த பூமி. அந்தக் கால மாந்தனுக்கு யாலம் நிறைந்த நாவலந்தீவே ஞாலம் என்ற பரந்த புவியாய்த் தெரிந்தது ஒன்றும் வியப்பில்லை. இதற்கு மாறாக, (புவி என்னும் ஞாலம் தொங்கிக் கொண்டு இருக்கிறது என்ற) இன்றையப் புரிதலை அன்றையச் சொல்லுக்கு ஏற்றிச் சொன்னால் எப்படி? அன்றைய மனிதனுக்கு பரவிக் கிடக்கிற ஆலங் காடே ஒருவகையில் ஞாலம் தான். இப்படிச் சொல்வேர் தேடும் போது அன்றைய அறிவுக்கு எட்டிய முறையில் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அப்படி வேர்ப் பொருள் காணும் போது தான் நமக்கு நம் நாட்டின் தொன்மை புரிகிறது. இங்கு ஆதி மாந்தன் வாழ்ந்திருப்பதற்கான நாகரிகக் கூறுகள் ஞாலம் போன்ற சொற்கள் மூலம் வெளிப்படுகிறது. (ஏனெனில் இந்தியத் துணைக் கண்டத்திற்கே உரிய ஆலமரத்தின் கூறு இங்கே உள்ளே பொதிந்து இருக்கிறது.)

திரு தி.பக்கிரிசாமி என்பவர் "சிந்தனை வளர - பாடநூல் அமைப்பு" (செல்வி பதிப்பகம், காரைக்குடி) என்ற பொத்தகத்தில் ஒரு அருமையான கருத்துச் சொல்லியிருந்தார். "ஐம்புலன் சொற்களே அறிவுக்கு அடித்தளம்; ஆதி மனிதனிடம் பருப் பொருள், இடப் பொருள் சொற்களே இருந்தன. கருத்துச் சொற்கள், அறிவால் உணரவல்ல சொற்கள், கலைச் சொற்கள், பண்புச் சொற்கள் - இவை ஆதியில் இல்லை. மீவியற்கைச் (Supernatural) சொற்களும் இல்லை." இதைப் பற்றி நெடு நாட்களுக்கு முன் தமிழ் இணையத்தில் ஒரு மடல் எழுதியிருந்தேன். அதன் படி இப்பொழுது என்னிடம் இல்லை.

ஐம்புலன் சொற்களுக்கு ஒரு சில எடுத்துக் காட்டுகளைப் பார்ப்போம். கை என்ற சொல் கரம் என்ற பருப் பொருளை உணர்த்தி பின் அஞ்சு என்ற கருத்துப் பொருளையும் உணர்த்தியது. இங்கு விதப்பில் இருந்து பொதுமை என்று கருத்து விரிகிறது. அதே போல பல் (வாயில் உள்ள tooth) என்பதில் இருந்தே பலது (many) என்ற கருத்துப் பிறந்தது என்று புலவர் இளங்குமரன் நிறுவுவார். அதே போல கவலை என்பது மரக்கிளை பிரியும் ஒரு மரப்பகுதி. அது கவடு, கவட்டை என்றெல்லாம் பேச்சுவழக்கில் திரியும். இதுவும் ஒரு பருப் பொருள் தான். இரண்டு, மூன்று பாதைகள் பிரிகிற அல்லது கூடுகிற இடமும் கவலை என்றே அறியப் படும். மரக்கிளைப் பிரிவு, பாதைப் பிரிவுகளுக்கு எனப் பொருள் நீளுகிறது. இந்தப் பொருளே பின்னால் மனக் கவலை என்ற வருத்தப் பொருளுக்கும் (முற்றிலும் கருத்துச் சார்ந்த ஒரு உணர்வு) பயனாகத் தொடங்குகிறது. ஆகப் பருப்பொருட் சொற்களே ஒரு வளர்ச்சியில் கருத்துச் சொற்களாகச் சேவை புரிகின்றன. இதுதான் முறையும் கூட.

இன்னொரு காட்டையும் பார்ப்போம். ஒருவனைப் பார்த்து, "அவன் நல்ல பையன்" என்கிறோம். இந்த "நல்ல" என்ற சொல் எப்படிப் பிறந்திருக்கக் கூடும்? மாந்தன் பெற்ற ஒரு பருப்பொருட் பயன்பாட்டை அது நமக்குச் சொல்ல வேண்டுமே? கொஞ்சம் ஓர்ந்து பார்த்தால் விடை கிடைக்கும். எல் என்பது ஒளி. ஒருவன் மேல் ஒளி பட்டால் அவன் பொலிவாக இருக்கிறான் என்று பொருள். ஏதொன்றும் பொலிவாக இருந்தால் அது நமக்குப் பிடிக்கிறது. எல்>யெல்>ஞெல்>நெல் என்று இந்தச் சொல் திரிவு படும். நாம் விளைக்கும் நெல் மஞ்சளாக ஒளிபட நிற்கிறது. தவிர, நெல் நம்முடைய பசியை ஆற்றுகிறது. ஆக, நமக்கு உறுதுணையாக இருக்கிறது. எனவே நெல்லவன் என்பவன் நல்லவன் ஆகிறான். இங்கே இரண்டு கருத்து வந்திருக்கிறது. அடிப்படைப் பொருள் ஒளி - விதப்பானது. அதனின்றும் விளைந்த சொல் நெல்; அதனிலும் விதப்பான இன்னொரு பொருள், அதன் பயன். இப்படி மற்றவருக்குப் பயன் தரக் கூடியவன் நல்லவன் எனப்படுகிறான். தமிழில் ஏகப்பட்ட "நெல்லூர்கள்", "நல்லூர்கள்" என்றே பொதுமக்கள் பலுக்கில் சொல்லப்படும்.

இதே போல ஆதித் தமிழனுக்கு, கொன்றை தெரியும், கோங்கு தெரியும், தேக்கு தெரியும். ஆனால் மரம் என்ற பொதுப் பொருள் தானாகச் சுயம்புவாக வர முடியாது அல்லவா? அப்படியானால் மரம் என்ற பொதுமைச்சொல் முதலில் எந்த விதப்புப் பொருளைக் குறித்தது? இந்த ஆய்வின் விளைவாக (கடம்பைக் குறிக்கும்) மரா என்ற விதப்பான சொல் மரம் என்ற பொதுமைக் கருத்தை உருவாக்கியது என்று உணர்ந்தேன். கடம்பவனம் பற்றித் தமிழரின் தொன்மம் நமக்குச் சொல்லுகிறது அல்லவா? இதை இன்னொரு சமயம் விளக்குவேன்.

இப்படிச் சிந்தனையில் வரக்கூடிய பருப் பொருள்கள் எல்லாம் அந்தக் காலத்து மனிதனை உணரக் கூடியவையாக இருக்க வேண்டும். பூ என்ற வேர்ச் சொல்லில் இருந்து, பூ என்னும் விதப்புப் பொருளைக் குறிக்காது, becoming, growing என்ற பொதுமைப் பொருளை நிலை நாட்டி, அதிலிருந்து பூதம் என்ற சொல் எழாது என்று நான் சொல்லுவதற்கு உரிய காரணங்களை இனி விளக்குவேன். பூ என்ற மலர் பூக்கலாம்; அப்படிச் சொல்லுவது இயற்கையான வளர்ச்சி; ஏனென்றால், பூ என்ற பருப் பொருளை நாம் உணர முடியும். யாலம் என்பது ஞாலம் என ஆகலாம்; ஏனென்றால் யாலம் என்ற பருப்பொருளை நாம் உணர முடியும். ஆனால் பூவில் இருந்து, எந்த ஒரு விதப்பான பொருளைக் குறிக்காது, வெறுமே becoming, growing என்ற தோன்றுதல் பொருளில், பூது>பூதம் என்ற என்ற ஒரு பொதுமைக் கருத்தீட்டை (generic concept) கொண்டு வருவது மிகக் கடினம் அய்யா, மிகக் கடினம் ! 

வடமொழியாளர், கருத்துக்கள் ஒன்றில் இருந்து ஒன்றாக எப்படிக் கிளைக்கும் என்று அடுத்தடுத்து ஐம்புலன் சொற்களாகப் பார்க்காமல், இலக்கணி பாணினியின் தாக்கத்தால் 200, 300 சந்த அடி வேர்களை வைத்துக் கொண்டு, கருத்துமுதல் வாதமாக, ஒரு generic concept - யை முதலில் வைத்து பின் அதோடு பல ஒட்டுக்களைச் சேர்த்து வழியெழுச்சி (deduction) ஆகக் காட்டுவார்கள். இவர்களின் வாதத்தைப் பார்த்து நான் பல நாட்கள் பெரிதும் குழம்பிப் போயிருக்கிறேன். Can a primitive man configure first a generic concept out of nowhere without any physically meaningful specific experience? It appears to me completely non-intuitive to start with a generic concept in the primitive days. வேண்டுமானால், வெறும் வழியெழுச்சியாக (deductive), வடமொழி போன்ற ஒரு செயற்கை மொழியில், ஏன் எசுபராந்தோவில் (Esperanto) வேண்டுமானால் உருவாக்க முடியும். ஆனால் தமிழ் போன்ற இயற்கை மொழியில் அது முடியாது. இங்கு தான் இந்தாலசிக்காரர்களுடன் நான் பெரிதும் முரண்படுகிறேன். 

பருப்பொருட் சொற்களே ஒரு வளர்ச்சியில் கருத்துச் சொற்களாகச் சேவை புரிகின்றன. இதுதான் முறையும் கூட.

http://valavu.blogspot.com/2005/04/physics-1.html

http://valavu.blogspot.com/2005/04/physics-2.html

http://valavu.blogspot.com/2005/04/physics-3.html

http://valavu.blogspot.com/2005/04/physics-4.html 

No comments: