இருவேறு நண்பர்கள் தனிமடலில் “வனம்” என்பது தமிழ்ச்சொல்லா? - என்று கேட்டார். என்விடை பொதுவிலும் இருப்பது நல்லது என்று இங்கு பதிகிறேன்.
நீர்க்கடல் என்ற சொல்லில் வரும் கடலுக்குச் செறிவென்ற பொருள் உண்டு. நீர் செறிந்தது நீர்க்கடல். நாளாவட்டப் புழக்கத்தில் சொல்வோருக்கும் கேட்போருக்கும் புரிந்த நிலையில் நீர் என்பதைத் தொக்கி, வெறுமே கடல் என்றாலே ocean என்று புரிந்து சொல்லைச் சுருக்கத் தொடங்கினார். அதுபோல் வேறு மொழிகளிலும் உண்டு. காட்டாகச் சங்கதத்தில் ஜல சமுத்ரம் என்ற சொல்லில் சொல்வோருக்கும் கேட்போருக்கும் புரிதல் ஏற்பட்ட காரணத்தால் ஜல என்பதைத் தவிர்த்து வெறுமே சமுத்ர என்றாலே ocean என்று புரிந்துகொண்டார்.
இதே போல் மரங்களின் செறிவு கூடிய இடம் மரக்காடாகி நாளடைவில் மரம் என்பதைத் தொக்கி, காடு என்றாலே மரங்களின் செறிவு மிக்க இடம் என்று சுருக்கிக் கொள்ளப்பட்டது. ஏனெனில் கடு என்பதற்கு மிகுதி, செறிவு, அடர்த்தி என்ற பொருள்கள் உண்டு. இதனால் கடுத்தது (=செறிந்தது, அடர்ந்தது) காடு என்று புரிந்துகொள்ளப் பட்டது. இன்னொரு சொல்லைப் பார்ப்போம். வல்>வலிமை, வல்>வலு, வல்>வன் போன்ற சொற்கள் எல்லாமே செறிவு, இறுக்கம், கடுமை போன்ற பொருள்களை வன் என்ற சொல்லிற்குக் கொடுக்கும். எனவே மரங்கள் செறிந்ததைக் காடு என்பது போலவே வனம் என்ற சொல்லும் காட்டும்.
வன்கண், வன்கனத்தம், வன்கனி, வன்காய், வன்காந்தம், வன்காரம், வன்காற்று, வன்கிடை, வன்கிழம், வன்கை, வன்கொடுமை, வன்கொலை, வன்சாவு, வன்சாவி, வன்சிரம், வன்சிறை, வன்சுரம், வன்சொல், வன்துருக்கி, வன்நெஞ்சம், வன்பகை, வன்பாதல், வன்பாட்டம், வன்பாடு, வன்பார், வன்பால், வன்பிணி, வன்பிழை, வன்பு, வனபுல், வன்புலம், வன்புற்று, வன்புறை, வன்பொறை, வன்மம், வன்மரம், வன்மரை, வன்மா, வன்மான், வன்மீன், வன்முறை, வன்மை, வன்மொழி, வன்றி, வன்றொடர் என்ற சொற்களை வலிமை,, செறிவு இறுக்கம், கடுமைப் பொருளில் தான் கையாள்கிறோம்.
இது தமிழின் இயல்பாகின், இதையொட்டி வன்+அம் = வனம் என்ற சொல் எழாதா? காடு என்ற சொல் ஏற்பட்டது போல், வனம் என்ற சொல் எழாதோ? தமிழ் மட்டும் ஏதோ அரைகுறை மொழியோ? அதேபொழுது ஏதோ ஒரு குழறுபடியில், நம் தனித்தமிழ் அகரமுதலிகளில் வனம் என்ற சொல் இல்லை தான். 19/20 ஆம் நூற்றாண்டுகளில் அப்படி ஓர் முடிவு ஏற்பட்டது ஏன் என்று எனக்குத் தெரியது. ஆனால் ஏரணப்படி நம் சொல் வளர்ச்சி பார்த்தால் வனம் என்ற சொல் அவ்வகரமுதலிகளில் இருந்திருக்க வேண்டும். இறுக்கமான காழைக் கொண்ட மரமான வன்னி மரத்தை எண்ணிப் பாருங்கள், வன்னிமரம் தமிழானால், ஏராளமான மரங்கள் செறிந்து கிடக்கும் காட்டை வனம் என்று தமிழன் சொல்லான் என்பது விந்தையாக உள்ளது.
என்னால் அப்படிச் சொல்ல முடியாது. என் சிந்தனையில் அது தமிழே.
No comments:
Post a Comment