இயல்பியல் என்ற சொல்லை physics இற்கு இணையாக 1968 இல் கோவை நுட்பியல் கல்லூரியில் நானும் ஒரு சில நண்பரும் சேர்ந்து பரிந்துரைத்தோம். அது முனைவர் இராதா செல்லப்பனை ஆசிரியராகக் கொண்ட சென்னைப் பல்கலை கழக Physics தமிழ்ச்சொல்கள் வெளியீட்டில் சேர்ந்து தமிழ்நாடு எங்கும் பரவியது. பின்னால் இயற்பியல் என்று எப்படித் திரிந்தது? யார் மாற்றினார்?- என்று தெரியவில்லை எப்படியோ தவறான சொல் பரவிவிட்டது. இப்போது அரசின் பள்ளிக் கல்வித்துறையே தவறான சொல்லைத் தான் பயன்படுத்துகிறது.
இயற்பென்ற சொல் பழம் இலக்கியங்களில் இல்லவேயில்லை என்று நான் சொன்னேன். சிலர், குறிப்பாக பேரா. இரா. செல்வக்குமார், தம் முகநூல் பக்கத்தில் திருமந்திரத்தில் இயற்பு ஆளப்படுவதாயும், இயக்கம் என்பது அதன் பொருளென்றும் சொன்னார். அவர் பக்கத்தில் என் மறுப்பைச் சொன்னேன். அதை என் வலைப்பதிவில் இட மறந்தேன். இப்போது சேமிப்புக் கருதி இடுகிறேன்.
பல்வேறு திருமந்திரப் பதிப்புக்களின் இடையே பாட வேறுபாடு உண்டு. இதற்கு முடிவு காணும் வகையில் மூலப் பாட ஆய்வுப் பதிப்பாக முனைவர் சுப.அண்ணாமலையைப் பதிப்பாசிரியராகக் கொண்டு கோவிலூர் மடத் தலைவர் ”இந்தியப் பண்பாடு - ஆராய்ச்சி நிறுவனம், 84, கலாக்ஷேத்ரா சாலை, திருவான்மியூர், சென்னை 600041” என்ற நிறுவனத்தின் கீழ் செம்பதிப்பு ஒன்றை வெளியிட்டார். பல்வேறு இடங்களிலிருந்து (இதில் எல்லா ஆதீன நூலகங்களும் உண்டு) பெற்ற 27 சுவடிகளையும், 11 முன்பதிப்புக்களையும் ஒப்பிட்டுப் பார்த்து வெளியிட்ட இச் செம்பதிப்பு ஓரளவு சுவடி பெயர்ப்புப் பிழைகளைச் சரி செய்தது. அதே பொழுது, எல்லா வேறுபாடுகளும் சரி செய்யப் பட்டுவிட்டதாய்ச் சொல்லமுடியாது. இந்தக் காலத்தில் திருமந்திரப் பதிப்பை எடுகோட்டு (reference) நிலையிற் கொள்ள வேண்டுமானால் இந்தப் பதிப்பு முகன்மையானது.
இப்பதிப்பின் படி குறிப்பிட்ட பாடல் 2184 ஆம் பாடலாய் வகும். இது ”அவத்தை பேதம்” என்ற 120 ஆம் இயலில் “சுத்த நனவாதி” என்ற மூன்றாம் உள் இயலில் ”இறைவன் செய்யும் உதவி” என்ற தலைப்பின் கீழ் வருகிறது.
உயிர்க்குயி ராகி(2) யுருவா யருவா
யயற்புணர் வாகி யறிவாய்ச் செறிவாய்
நயப்புறு சத்தியு நாத னுலகாதி
யியற்பின்றி(2) யெல்லா மிருண்மூட மாமே(3)
பதிப்பிற் கொடுத்துள்ள இதன் கருத்து:
------------------------
சத்தியும் சிவமும் உலகத்து உயிர்கட்கு உயிராகி ஒன்றி நின்றும், தெய்வ உருவாய்த் தனித்து நின்றும், அருவாய் விளங்கியும், உடனாய் நின்று கலந்தும் அறிபொருளாகவும், வியாபகப் பொருளாகவும், இருந்து இயக்கவில்லையேல் உயிர்களை ஆணவ மலம் மூடியே கிடக்கும்.
------------------------
இச் செம்பதிப்பில் “இயக்கப் பொருளே” அடிப்படை வினையாய்ச் சொல்லப் படுகிறது. அதே பொழுது, பாட்டின் அடிப்படை வினை இயக்குதல் என்னுமாகில் ”இயக்கு என்ற பெயர்ச்சொல் ஆளப் படாது இயற்பு எனும் பெயர்ச்சொல் ஆளப்பட வேண்டிய தேவை என்ன?” என்ற கேள்வி நமக்குள் எழுகிறது. திருமந்திரம் போன்ற நூலில் காரணமின்றி வேறு சொற்கள் கையாளப் படா. ஒவ்வொரு சொல்லிற்கும் காரணமிருக்கும். இயக்கென்ற பெயர்ச்சொல்லைக் காட்டிலும் இயற்பென்ற சொல் என்ன புதுப்பொருளைக் கொடுக்கிறது? அப்படியொரு புதுச்சொல் எழவேண்டிய தேவையென்ன? - என்ற கேள்விகள் நம்முள் எழுகின்றன. அப்படியின்றி, இயல்பு என்ற சொல்லிற்கு மாறாக இயற்பு என்ற சொல் சுவடிப் பெயர்ப்புப் பிழையாக இருந்திருக்குமானால் வேறு ஏதோவொன்று பாட்டின் அடிவினையாக இருக்கவேண்டும். அதைக் கீழே காணுவம். இதே செம்பதிப்பிற் குறிப்பிட்ட பாடலுக்கு மூன்று பாட வேறுபாடுகள் சொல்லப் பெறுகின்றன. இந்த வேறுபாடங்கள் ஏன் கருத்திற் கொள்ளப்படவில்லை என்ற விளக்கம் பதிப்பில் இல்லை. வேறு பாடங்கள்
1. ராகிய (இது துடிசைக் கிழார் சிதம்பரனார் பதிப்பு “திருமந்திரம் மூவாயிரத்தில்” வருகிறது.)
2. யியல்பின்றே லெல்லா (இது சி.அருணை வடிவேல் முதலியார், தருமபுர ஆதீனம், “திருமந்திர மாலையாகிய திருமந்திரத்தில்” வருகிறது)
3. லாமே (இது சென்னைக் கீழ்த்திசைச் சுவடிகள் காப்பகத்தில் உள்ள சுவடியில் உள்ளது.)
முதலாம் வேறுபாடு பாட்டின் ஓசையில் இடையூறு செய்வதால், அதை ஒதுக்கியது சரியென்றே தென்படுகிறது. இரண்டாவது மூன்றாவது பாடவேறுபாடுகளை ஒதுக்குவது எனக்குச் சரியென்று தென்படவில்லை. அவற்றை நாம் ஏற்றுக்கொண்டால், ”ஏலுதல்”எனும் அடிப்படை வினை பாட்டிற்கு ஒழுங்கான பொருள் கொடுக்கிறது. இப்பாடவேறுபாடுகளோடு நான் புரிந்து கொண்ட பொருளைக் கீழே கொடுத்துள்ளேன்.
------------------------
உயிர்களுக்கு உயிராகி நின்றும், தெய்வுருவாய், அருவுருவாய் அயல் நின்று கலந்தும், அறிபொருளாகவும் செறி பொருளாகவும் விருப்பமுறும் சத்தியும் நாதனும் உலகிற்கு ஆதியாகும் இயல்பு இன்றேல், எல்லாம் இருள் மூடலாகும்.
------------------------
சத்தியும் சிவனும் உலகிற்கு ஆதியாகும் இயல்பு இல்லாது போனால் - இங்கு இதுவே அடிப்படை வினை - எல்லாம் இருளாகும். ”உயிர்களுக்கு உயிராகி நின்றும், தெய்வுருவாய், அருவுருவாய் அயல் நின்று கலந்தும், அறிபொருளாகவும் செறி பொருளாகவும் விருப்பமுறும்” என்பது சத்திக்கும் நாதனுக்கும் தரப்படும் நீண்ட பெயரடை. மொத்தத்தில் இயல்பென்ற சொல்லை ஆளும்போது, கருத்துரை தெளிவாக இருக்கிறது. தமிழில் இயல்+பு என்ற புணர்ச்சி மொழியமைப்பிற்கு மாறுபட்டு இருவேறு சொற்களை உருவாக்கும் தேவை எழவில்லை. தமிழ் இலக்கணமும் காப்பாற்றப் படுகிறது. திருமந்திரம் பாடலின் பொருளும் பொருத்தமாய் இருக்கிறது.
இயற்பு என்ற சொல் வேறு நூல்களில் ஆளப் படுகிறதா? - என்பது அடுத்த கேள்வி. என்னுடைய கேள்வி மிக அடிப்படையான கேள்வி. அது தமிழ்ச்சொல்லாகத் தெரிகிறதா? இயலாக அமைவது இயல்பு. இயலாகச் செய்யப்பட்டது இயற்கை. [எங்கெல்லாம் கை எனும் விகுதி வருகிறதோ அங்கு செய்யப்பட்டது என்ற அடிவினையே உள்நின்று இருக்கும். அதே போல பு என்னும் விகுதி தானே அமைவதைக் குறிக்கும். என் கேள்வி எளிது “இயற்பு என்பது எதைக் குறிக்கிறது?” [இயல்பு சரியானால் இயற்பு சரியில்லை, இயற்பு சரியானால் இயல்பு சரியில்லை. இரண்டையும் சரியாகக் கொள்வதற்குத் தமிழ் வருக்க எழுத்துக் கொண்ட மொழியில்லை. வடமொழி போற் தமிழில் bu, pu என்ற வருக்கவொலிகள் கிடையாது. அவை ஒரே பொருள் தரும் மாற்றொலிகள்.]
அடிப்படைக் கேள்வியைத் அருள்கூர்ந்து உணருமாறு வேண்டுகிறேன்.
அன்புடன்,
இராம.கி.
No comments:
Post a Comment