Wednesday, July 06, 2022

சுயாதீனம்

இச்சொல் பற்றிக் கரு, ஆறுமுகத் தமிழன் கேட்டிருந்தார் சுயாதீனம் என்பது இருவேறு மொழிகளில் பல்வேறு திரிவுகள் ஏற்பட்டு உருவான கூட்டுச்சொல். சுய+ஆதினம் என்று பலரும் பிரிப்பர். 

சுய என்பது சொத்து எழுந்ததற்குப் பின் உருவான சொல். இது தமிழரின் பழங்குடிச் சொல் அல்ல. சுல்>சொல் என்பது ஒளி நிறைந்த பொன்னைக் குறிக்கும். சொல்நம் = சொன்னம் = பொன். இதை ஸ்வர்ணம் என்று சங்கதம் திரிக்கும். சொல்+க்+கம்  = சொக்கம் = பொன்னுலகு. இது சொர்க்கம் என்று சங்கதத்தில் திரியும். இன்னும் திரித்து ஸ்வர்க்கம் என்றும் ஆக்குவர். சொக்கன் = பொன்னார் மேனியன். சொல்+த்+து = எல்லாச் செல்வங்களையும் பொன் எனும் அலகால் காணும் மொத்த அளவு, ”அவருக்குச் சொத்து எவ்வளவு?” என்றால் பொன் அடிப்படையில் மொத்தமாய்க் கணக்கிட்டுச் சொல்லலாம். சொத்து என்பதற்கு உரிமை என்ற பொருள் இந்தப் புரிதலுக்குப் பின்னரே ஏற்பட்டது. . 

சொத்திற்கு உரிமை கொள்வது சொந்தம். ”இது இவருக்குச் சொந்தம்” என்பது முதலில் அசையாப் பொருள்களுக்கே ஏற்பட்டது. பின்னால் ஓரினக்குழு இன்னொன்றை அடிமைப்படுத்தி ஆண்களைக் கொன்று, பெண்டிர், பிள்ளைகள், ஆடு, மாடு போன்றவற்றைக் கவர்ந்தவுடன், கவரப் பட்டோர் சொந்தம் எனும் சொத்து வரையறைக்குள் வந்தார். 

இனிச் சற்று இடைவிலகல் செய்வோம். ”தம்” என்பது நம் உடலில் இருக்கும் உயிரை, ஆன்மாவைக் குறிக்கும். ”அவர்தம் உடல்” எனும்போது உயிர் என்பது கருத்தா ஆகிறது. இது போல், என்றன், உன்றன் என்ற சொற்களையும் நுணுகிப் புரிந்துகொள்ளவேண்டும். நாளாவட்டத்தில் தன், தம் என்பவை தனித்து நிற்கத் தொடங்கின. தனிமை என்பது கூட உயிர்த் தனிமையைத் தான் குறிக்கிறது. வழக்கில் உயிரும் மெய்யும் சேர்ந்ததாய்ப் பலபோது கொள்கிறோம் தான். இருப்பினும், தன்/தான், தம்/.தாம் என்பவை ஆன்மாவைக் குறிக்கின்றனவா, உயிர்+உடலைக் குறிக்கின்றனவா என்பதை இடம் பார்த்துப் புரிந்து கொள்ள வேண்டும்.

”தம்” என்ற சொல்லின் தாக்கத்தால்  சொந்தத்தைச் சொம்+தம் என்று பிரித்து சொம் என்பதற்கே சொத்துப் பொருளைக் கொண்டு வந்தார். இந்தச் சொம் என்பது சங்கதத்தில் ஸ்வொம்>ஸ்வம் என்றாகும். சங்கத சொல்லமைப்பின் படி உடம்பாகிய ஸ்வத்தை இயக்கும் உயிர் ஸ்வயம் என்றாகும். ஸ்வயத்தை நாம் தமிழில் கடன்வாங்கி சுயம், சுயம்பு போன்ற சொற்களை ஆக்குவோம். ஆக சொம் தமிழென்றாலும் ஸ்வயம் என்பது சங்கதம் தான்.

இனி ஆதீனத்திற்கு வருவோம். ஆதீனம் என்பது பேச்சுவழக்கு. ஆதினம் என்பதே அதற்கு முதல். ஆதி என்னும் தமிழ்ச்சொல்லிற்கு (இதற்குச் சங்கத மூலம் சொல்வோர் மொழியறிவு இல்லாது சொல்கிறார்.)  முதல், தலை, தொடக்கம் என்று பொருள். ஆதி என்பது சங்கதம் பாகத, பாலி வழக்கப்படி ஆதின் என்று நீண்டு தலைவனைக் குறிக்கும். ஸ்வாமின் என்பவன் சொத்தின் அதிபதி. வடக்கே, பெண் தன் கணவனை ஸ்வாமின்  என்று அழைப்பாள் பெரும்பாலும் புத்த, செயின மடங்கள் வழி, ஆதினைப் பெற்ற சிவ நெறி,  ஆதினம் என்ற பெருஞ்சொல்லை தம் மடங்களின் தலைவர்க்குப் பயனுறுத்தும். நல்ல தமிழில் இதை ஆத்தன்>ஆதன் என்போம். தவிர, ஆள்>ஆடு>ஆடி>ஆதி>ஆதிக்கம் என்ற சொல் தமிழ்வழி அதிகாரத்தைக் குறிக்கும்  ஆதிக்கம் என்ற சொற்பொருளும், ஆதினம் என்ற சொற்பொருளும்  ஒன்றை ஒன்று ஊடுறுவிப் போயின. 

சுய ஆதினம் என்பதைத் தன்னதிகாரம் என்று நல்ல தமிழில் சொல்லலாம் சுயம் ஆதினம் ஆகிய இரண்டிலும் தமிழ் மூலம் உள்ளது. ஆனால் வடமொழிகளின் அமைதியும் உள்ளது. சொம்மாதனம்   என்றும் பழஞ்சொற்களை மீட்டும் நாம் சொல்லலாம்.  தன்னதிகாரமா, சொம்மாதனமா என்பது அவரவர் உகப்பு.  

1 comment:

ந.குணபாலன் said...

முதிசம் அல்லது முதுசொம் என்ற சொல்லைப் பரம்பரைச் சொத்து என்ற பொருளிலும்,
ஆதனம் என்ற சொல்லை வீடுவாசல், காணிபூமி, வயல்வாய்க்கால், தோட்டந்துரவு என்னும் சொத்துக்களைக் குறிக்கவும் பாவிக்கின்றோம். சொம்மாதனம் என்பது நல்ல இனிமையாக இங்கே சுயாதீனம் என்பதற்கு ஈடாகவும், தன்னாட்சி என்பதற்கு இணையாகவும் அமைகின்றது என்பது என் தாழ்மையான கருத்து.

ந.குணபாலன்