Saturday, June 15, 2019

நெல்லும் தமிழரும் தென்கிழக்காசியாவும் - 7

தகரத் தேடல், கெடா மாநிலத் தென்தொடர்ச்சியிலும் கூடியது. பெரிலீசு, பினாங்கு, கெடாவென்று போய் மலேசியாவின் பல மாநிலங்களுக்கும், தாய்லந்திற்கும் பல் நூற்றாண்டுகளாய்த் தேடல் விரிந்தது. (பர்மாவில் ஈயச் சுரங்கங்கள் கிடையா.) பல்வேறு இனக்கலப்பும், மொழிக்கலப்பும், பண்பாட்டுக் கலப்பும் இப்பகுதிகளில் ஏற்பட்டன. வெண்கலம் என்பது வெண்கலச்செம்பின் சுருக்கமாகும். பேச்சு வழக்கில் செம்பு தவிர்த்து வெண்கலமானது.. [இற்றைத் தமிழர் பலர்க்கும் இது சுருக்கம் என்பதே தெரிவதில்லை.] வெண்கலத்தின் ”கலம்”, கலெங் (kaleng) எனும் மலாய்ச்சொல் வழிப்பட்டது. (எல்லாம் தமிழ் தமிழ் என்பதன் சரவல் இப்போது புரிகிறதா? வரலாற்றில் நாமும் பலவற்றைக் கடன் வாங்கினோம். கடனும் கொடுத்தோம்.) வெண்நிறங் கொண்டதால் கலம் வெண்கலமானது. நினைவுகொள்க. மலாயில் கலெங்= Tin தமிழில் வெண்”கல”த்தின் பின்பகுதி. (”செம்பு” வெண்கலத்தினுள் தொக்கி நிற்கிறது. மின்சாரத்தை மின் எனும்போது சாரம் தொக்குவது போல் இதுவும் அமையும்.)

செம்பின் சுருக்கம் செய்/செம் ஆகும். தகரம் சேர்க்கச்சேர்க்க சிவப்பில் பொன் நிறங் கூடி முடிவில் வெண்மையாகும். பொன்மைதெரிய அமையுஞ்செய் பொன்செய் ஆனது. (இந்தையிரொப்பிய வழக்கப் படி) இதனுள் ரகரஞ்சேர்த்துப் ப்ரொன்செய்>bronze ஆகவும் பலுக்கலாம். ஆங்கில அகரமுதலிகளில் சொற்பிறப்புத் தெரியவில்லை என்பார். எனக்குப் புரிந்தவரை இதனுள் தமிழ் கரந்துநிற்கிறது..கலஞ் செம்>கல்ஞ்சம்>கஞ்சம் என்பதிலும் மலாய்ச்சொல் உள்ளார்ந்து நிற்கிறது. மாந்தவாழ்வில் வெண்கல அட்டிழை, சட்டென எழ வில்லை. போர்க்கருவி, உணவாக்கம் மட்டுமின்றி, கூலவிளைப்பிற்கும் அது பயனானது. எளிதில் உருகி நீர்மமாகும் வெள்ளீயத்தில் செப்புக் கலன்களையும், கருவிகளையும் முக்கியெடுத்து முலாம் பூசுவதில் தொடங்கிய பழக்கம், உருகுநிலை கூட்டிச் செய்துபார்த்துச் சரிசெய்யும் (trial and error) முறையில் வெவ்வேறு அட்டிழைப் பொதிவுகளுக்கு (compositions) இட்டு வந்தது. முன்னோர் கண்டுபிடித்த புதுக்குகளில் (products) எந்தப் பொதிவு அதிக வலு கொடுத்ததோ, அதுவே நாளாவட்டத்தில் நிலைத்தது. அப்படித்தான் 7 பங்கு செம்பு, ஒரு பங்கு தகரம் என்ற பொதிவு (composition) நமக்குக் கிடைத்தது. 

[வெண்கலத்தின் இடை விலகலாய், ஆதிச்ச நல்லூரின் (2 பங்கு செம்பு, 1 பங்கு துத்தநாகம் கொண்ட) பித்தளையைக் காணலாம். துத்தநாகம் இராசத் தானத்தில் கிடைத்தது. நாகம்= கருப்பு.. துத்தம்= வெளிறிய; துத்தநாகம்= வெளிறிய கருமாழை. பழம்மேலையரிற் பலரும் வெண்கலம், பித்தளை எனும் 2 ஐயுங் குழப்பிக்கொள்வார். இன்றுங்கூட Bronze ஐப்போல் Brass ற்கும் சரியான சொற்பிறப்புத் தெரியாதென ஆங்கிலச் சொற்பிறப்பியல் சொல்லும். இச்சொற்கள் வெளியாரிடமிருந்து வந்ததென்பார். brass (n.) "yellow malleable alloy metal, harder than copper," Old English bræs "brass, bronze," originally any alloy of copper, in England usually with tin (this is now called bronze), later and in modern use an alloy of roughly two parts copper to one part zinc. A mystery word, with no known cognates beyond English. Perhaps akin to French brasser "to brew," because it is an alloy. It is also compared to Old Swedish brasa "fire," but no sure connection can be made. Yet another theory connects it with Latin ferrum "iron," itself of obscure origin.

பித்தளையும் பொன்நிறத்ததே. வெள்ளொளி மயங்கி இருள்கையில் உள்ள நிறத்தை மஞ்சளென்பார். மயங்கல்>மஞ்சல்>மஞ்சள். பொல்/பொலம்= பொன். பொற்ற= பொன்னாலாகிய. பொல்ங்கம்>பொங்கம்> பிங்கம்>பிங்கலம்= பொன்மை கலந்த சிவப்பு. பேச்சுவழக்கில் பிங்கலம், பிங்களமாகும். பொற்று> பொத்து>பித்து என்பதும் மஞ்சள்நிறமே. பித்து>பித்தல்>பித்தள்> பித்தளை. பித்தம்= மஞ்சளான ஈரல்நீர். பித்தம்>பீதம்/பீதகம்= பொன்னிறம், மஞ்சள். பீதகன்= வியாழன். பீதக வேர்= மஞ்சள் வேர், பீதராகம்= பொன்மை; பீதலகம்= பித்தளை பீதாம்பரம்= பொன்னாடை பீதகவாடை= மஞ்சளாடை; பீரம்= மஞ்சள் படரும் பசிய நிறம்; பசலையென்பார். பீரை= மஞ்சள்நிறப் பீர்க்கம் பழம். பீளை= மஞ்சள்நிறக் கண்மலம். பீள்>பீ= மலம். பில்லை= மங்கிய மஞ்சள்நிறம்.

பித்து>பெத்து>பேத்து என்பது இந்தையிரோப்பிய பலுக்கல் முறையில் பேத்து> ப்ரேத்து>ப்ரேஸ்து>பிரேஸ் என்றாகும். (இந்தையிரொப்பியம் போகும் சொற்களில் -tt>-st>-ss என்று திரிவது பல சொற்களில் நடந்துள்ளது.) இதன்படி, பித்தளையும் பிரேஸும் தொடர்பு உள்ளவையாகவே தெரிகிறது. ஏனெனில் தமிழ்ச்சொல்லே சங்கதத்திலும் பயில்கிறது. [pittalaவோடு, கஞ்சமெனும் (kaamsya) சொல்லையும் சங்கதம் குழப்பத்தோடு ஆளும். இதுபோக ritikaa, diipti போன்றவற்றையும் அவர் சொல்வார். அவற்றுள் நான் போகவில்லை.] சங்கதத்திடம் இருந்து பித்தளையைத் தமிழ் கடன் வாங்கியதெனில், மேற் பத்தியில் சொன்ன பலவும் தமிழில்லை என்றாகும். தவிரக் குடஞ் செய்யப் பித்தளை பயனுற்றதால், குடவமும் பின்னாளில் பித்தளையைக் குறித்தது. குடக்கி= பித்தளை; குடவஞ்செம்பு= பித்தளை கொண்டு அணியம் ஆக்கும் ஒருவகை விளிம்பற்ற செம்பு. pure copper free from alloy verdigris. குடவப் பொடி= brasslings; குடவன் பொன்= பித்தளை சேர்ந்த பொன்.]

இனி வெண்கலத்திற்கு மீள வருவோம். சுமேரியாவிற்றான் வெண்கலம் முதலில் (பொ.உ.மு. 3300) செய்யப் பட்டதாம். தேவையான வெள்ளீயமும் செம்பும் துருக்கியில் கிட்டியதாம். நடுவண்கடல் நாடுகளின் வணிகர் நெடுங் காலம் தாம் பெற்ற ஈயம் எங்கிருந்து வந்ததென்பதை கமுக்கமாய் மறைத்து வைத்திருக்கிறார். தகரமே சுமேரிய நாகரிகத்தில் வெண்கலப் பெருக்கம் கூடுவதற்கு வழி வகுத்தது. யூவ்ரட்டீசு, டைகிரீசு ஆறுகளின் பருவகால வெள்ளப் பெருக்கும், அதன் விளைவால் ஆற்றங்கரைகளில் நடந்த நீர்ப் பாசனமும், வெண்கலக் கொழுக்களும், பயிர் உவரி உருவாகக் காரணம் ஆகின. ஊர், பாபிலோன், நினேவா போன்ற நகரங்கள் வாழமுடிந்தது. விளை பொருட்கள்போல வினைக்கலன்களும் செய்யப்பட்டன. நாகரிகம் தழைத்தது.

துருக்கியின் ஈயம் பற்றாத பொழுது, ஈயம்தேடி அக்கால வணிகர் இரோப்பா முழுக்க அலைந்திருக்கிறார். முடிவில் இங்கிலாந்தின் வெல்சுப் பகுதியில் தகரம் கிடைத்திருக்கிறது. அந்தக் கிடைப்பையும் அவர் வெளியே சொல்லாது கமுக்கமாய் இருந்திருக்கிறார். பொ.உ.மு.400-300 களில் தான் கிரேக்கர் இவ் வுண்மையை அறிந்திருக்கிறார். அவருக்குப்பின் ஆட்சிக்கு வந்த உரோமானியர் ஈயச் சுரங்கங்கள் தம் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டுமென்று கருதியே இங்கிலாந்தைப் பிடித்திருக்கிறார். இதே சிக்கல் தென்கிழக்காசிய ஈயத்திற்கும் ஏற்பட்டிருக்கலாம், காழகத்து ஆக்கம் எனப் பட்டினப் பாலையில் சொல்வது ஈயத்தின் மறைகுறிப்பாகலாம் ஈயங்கருதியே சோழரும், பாண்டியரும், பல்லவரும், பெருஞ்சோழரும் தென்கிழக்காசியாவிற்குப் போயிருந்திருக்கலாம். தமிழ் வணிகரும் ஈயக்கிடைப்பு இடங்களை தம் நாட்டினருக்கு வெளிப்படுத்தாது மறைத்திருக்கலாம்.  [இன்றைக்கும் கூட எந்த வணிகரும் தான் யாரிடமிருந்து பொருட்களைக் கொணர்கிறோம் என்று சொல்லமாட்டார். போட்டி வணிகருக்குத் தெரிந்துவிடும் என்று மறைப்பார்.]

பயன்பாட்டு முகத்தில் அக்காலத்தில் ஈயமின்றி வாள்கள் இல்லை, படைக் கலங்கள் இல்லை, பயிர்த்தொழில்கள் இல்லை. தங்கம், வெள்ளி, செம்பிற்கு மட்டுமல்லாது இழிவான ஈயத்திற்கும் பெருமதிப்பு உண்டு. பயிர்க்கலங்கள் இன்றி (அதாவது ஈயமின்றி), பொ.உ.மு.3000-2500 களில் மருதமென்ற திணையே எழுந்திருக்காது. (இதை இன்னும் ஆழமாய்க் கீழே பார்க்கப் போகிறோம்.) கெட்டிப்பட்ட பயிர் நிலத்தைக் கிளறியுழ, வெண்கலத் தண்டு/கொழுக்களைப் பயனுறுத்தியிருக்கலாமென அறிவியலார் சொல்வர். வெறும் மரக்கட்டையாலோ, வலுவிலாச் செம்புக்கோலாலோ, பயிர்த்தொழில் வளர வில்லை. (வெண்கலக் கொழுக்களின்பின், பொஉ.உ.மு 1800 களில் இரும்புக் கொழு வந்தே, பயிர்த்தொழில் மேலுஞ் செழித்தது.) ஆழ்ந்து பார்த்தால், பயிர்த் தொழிலுக்கும், வெண்கலத்திற்கும் கட்டாயந் தொடர்பு இருந்தது புரியும். பெரும்பாலும் பொ.உ.மு. 3300 க்கு அப்புறமே இத்தொடர்பால் வேளாண் நெல்லுக்கு முகன்மை ஏற்பட்டிருக்கலாம்.

இதற்குமுன் இயற்கையில் விளைந்த புன்செய்நெல் விளைச்சலை (dryland paddy cultivation) மாந்தன் பயன்கொண்டான். பெருத்த நெல்விளைச்சலுக்கு வெண்கலக் கொழு மட்டும் பற்றாது. நீர்ப்பாசனம் என்ற இன்னொரு நுட்பியல் உத்தியும் வேண்டும். அதைத் தமிழன் எங்கு கற்றுக்கொண்டான்?- என்பதற்குக் கம்போடியா எனும் இன்னொரு நாட்டிற்கு நாம் போகவேண்டும். இங்கு தகரங் கிடையாது. ஆனால் நீர்ப்பாசன நுட்பியல் கண்டுபிடிக்கத் தேவையான இயற்கைத் தூண்டுதல் ஏராளமாய் இருந்தது. ஒரு ஆறுமாசம் அங்கிருந்து இயற்கையைக் கவனித்தாலே நெல்லும், அதன் பெருவளர்ச்சியும் புரிந்து போகும். அதை அடுத்துப் பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.

No comments: