Wednesday, June 12, 2019

நெல்லும் தமிழரும் தென்கிழக்காசியாவும் - 3

செம்பு 7 பங்கும் வெள்ளீயம் (=தகரம்) 1 பங்கும் கொண்ட வெண்கலத்தில் தான் தமிழர் தென்கிழக்காசியா போன கதையின் சுவையாரம் தொடங்குகிறது {Bronze is an alloy consisting primarily of  copper, commonly with about 12-12.5% tin and often with the addition of other metals [such as aluminium (அலுமினியம்), manganese (காந்தயம்), nickel (நவையம்) or zinc (துத்தநாகம்)] and sometimes non-metals or metalloids [such as arsenic (நஞ்சகம்), phosphorus (ஒளியகம்) or silicon (மண்ணகம்)]}. [1968/69 இல் கோவை நுட்பியற் கல்லூரியின் முத்தமிழ் மன்றம் வெளியிட்ட ”தொழில் நுட்பம்” மலரில், “தனிமங்களின் முறைப்பட்டியல்” என்ற கட்டுரையை வெளியிட்டேன். அதை இற்றைப் படுத்தி என் வலைப்பக்கத்தில் வெளியிட முயல்கிறேன். அதைக் கொண்டு அங்கமில் (inorganic) வேதியல் முழுதையும் நல்ல தமிழில் பெரும்பாலும் சொல்லிவிடலாம். இப்போதைக்குப் பொறுத்து இருங்கள்.] இப்பகுதியில் தொடர்புள்ள மாழைச் செய்திகளைப் பார்ப்போம்.

அதுவென்னவோ, தெரியவில்லை. ”சிந்து நாகரிகம் தமிழரது” என்று சொல்வதிலும் கேட்பதிலும் புல்லரித்துப் போகும் நம்மிற் பலரும் பொ.உ.மு. 2500-1750 ஐச் சேர்ந்த ஆதிச்சநல்லூரைக் கொஞ்சமும் கண்டுகொள்வதில்லை. (2004 இற்கு அப்புறம் தொல்லாய்வு அங்கு நடைபெறவேயில்லை. நம்மூர்ப் போராளிகளுக்கும் வேறு வேலை வந்துவிட்டது. அரசியல் கட்சிகளுக்கும் அக்கறையில்லை. ”சிந்து சமவெளி” என்பதிலே நம்மூரார் குளிர்ந்து போகிறார். வேறு வழியின்றிச் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கிட்டுக் கேட்கவேண்டி உள்ளது. வெறும் பேச்சில் முழம்போட்டே நம் பொழுதுகள் கழிகின்றன. இன்னொரு பரப்புரையும் நடக்கிறது. சிந்து மாந்தர் திராவிட இனமென ஈனியல் சொல்கிறதாம். எனவே தமிழர் வடமேற்கிருந்தே வந்தாராம். இது சொல்லி நம்மை 3000 BC ஈரான் எலாமைட்டிற்குக் கொண்டு செல்வார். கொஞ்சம் பொறுங்கள் ஐயா! ஆதிச்சநல்லூரில் எவ்வளவு பரப்பு அகழாய்ந்தீர்? 0.1% தேறுமா? அதுவே, தமிழரின் பழமை, 3750 ஆண்டுகள் இருக்குமெனக் காட்டுகிறதே?

அப்புறமென்ன 3000 BC ஈரான்? ஆதிச்சநல்லூர்க் காலவரங்கைத் (range of time) துல்லியமாய் நிறுவ, இன்னும் எவ்வளவு தொல்லாய்வு வேண்டும்? செய்தோமோ? [ஆதிச்சநல்லூர் தாழிகள் மூன்று அடுக்கில் உள்ளதென்பார். முன் ஆய்ந்த பிரெஞ்சுக்காரர் மூன்றாம் அடுக்கின் காலத்தை பொ.உ.மு. 2000 என்பார். இப்போது நீதிமன்றத்தில் பொ.உ.மு.905 என இறக்குகிறார். அண்மையில் காலங் கண்ட தாழி மேலா, நடுவா, கீழா? தெரியாது. திரு இராம மூர்த்தியின் அறிக்கைக்குக் காத்து நிற்போம். ”என்னமோ நடக்குது, மர்மமாய் இருக்குது.” என்றுமட்டும் சொல்லத் தோன்றுகிறது. உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டுமென்பார் வள்ளலார். இப்போதைக்கு வாய்மூடிக் கொள்கிறேன்.) கீழடிக்குக் கொடிபிடிப்போர் ஆதிச்ச நல்லூர்க்கு அறைகூவுக! அதற்குள் தமிழன் வந்தேறி எனவுரைக்கப் பலரும் முயல்கிறார். அத்தனை மகிழ்வா? கூரையேறி கோழிபிடிக்கத் தெரியாதவர் வானமேகி வைகுன்றம் போனாராம். சரி வெண்கலத்திற்கு வருவோம்.

ஆதிச்சநல்லூரிலிருந்து கிழக்கே ஆற்றுவழி 25 கி.மீ ஏகின், கொற்கை வந்து விடும். தொல்லாய்வின்படி இதுவே தமிழகத்தின் பழந்துறைமுகம். (அற்றைக் கடல் இற்றைவிட 8 கி.மீ உள்தள்ளியது. ஈனியல் சொல்வதுபோல் பொ.உ.மு. 2350 இல் தமிழர் கடல்வழியே ஆத்திரேலியா போனது மெய்யெனில், கொற்கை/ ஆதிச்சநல்லூரின் பழமை பொ.உ.மு.1750 இற்கும்முன் சிந்துவெளி அளவிற்குப் போவதும் உறுதியே. என் புரிதலில் 2 நாகரிகங்களும் பெரும்பாலும் சமகாலத்தவை. சிந்துநாகரிகம் போல் இங்கும் வெண்கலப் பொருள்கள் கிட்டியுள்ளன. ஆதிச்சநல்லூர் வெண்கலத்தில் 23% வரைக்குங் கூடத் தகரஞ் சேர்த்தாராம். (பொதுவாய் வெண்கலத்துள் 14% க்குள் தான் தகரமிருக்கும். கணக்கதிகாரமோ 20% வரைக்குங் கூடச் சொல்லும்) சிக்கலான இச் சேர்க்கையை எப்படிச் செய்தாரென இற்றை மாழையியலார் வியப்பார். தவிரச் செம்பு 8 பங்கும், தகரம் 1 பங்கும் காரீயம் 4 பங்கும் கலந்த, தளவு> தரவு>தரா (heavy leaded bronze) வெண்கலமும் கூட நம் புழக்கத்தில் இருந்ததாம். காரீயமுஞ் செம்புங் கொண்ட இந்த அட்டிழையை இக்காலத்தில் கவண் மாழை (gun metal), செம் பித்தளை (red brass) என்றழைப்பர்.

இனி. வெண்கலஞ் செய்யச் செம்புவேண்டுமே? தாம்பர பொருநை, தாம்பர அம்பலம், தேரிக்காடுகள் போன்றவை செம்பின் தமிழக இயலுமையை உணர்த்தினும், செம்புக் கனிமம் நெல்லையிற் பேரளவு கிட்டியதற்குச் சான்று இல்லை. (இக்கால விழுப்புரம் மாவட்டத்தில் கொஞ்சம் செம்புக் கனிமம் உண்டு.) ஆதிச்சநல்லூரிற் செம்பு சிறிது பிரிக்கப்பட்டதாயும், அதேபொழுது கணிசமான செம்பு, வெண்கலப் பொருள்கள் கிட்டியதாயும் தொல்லாய்வு சொல்லும். கடலுக்கப்பால் ஈழத்திலும் தாம்பரம், மணிகள் (குறிப்பாய் மரகதம்) கிடைத்ததாம். பழந்தமிழகத்திலிருந்து ஈழம் வேறுபட்டதல்ல. முகன நிலத்தில் இருந்து 3000/4000 ஆண்டுகளுக்கு முன் அது தீவாய்ப் பிரியுமுன், நம்மைத் தொட்டுந் தொடாதும் இருந்தது. இல்>ஈல்>ஈழ்>ஈழம். ஈல்>ஈர், இல்>இலு>இரு>இரள்>இரண்டு; இல்>இலு>இலங்கை போன்ற சொற்கள் நிலம்பிரிந்த செய்தியைக் குறிக்கும். இலங்கை என்றசொல் சிங்களமல்ல. அதுவுந் தமிழே. எல்லாவற்றையும் ”டக்”கென இன்னொரு மொழியாய்ச் சொல்லிச் சொல்லி நாமிழந்தது மிக அதிகம்.

இந்தியாவிற் செம்பு அதிகங் கிட்டியது வடக்கே தான். அதே பொழுது அச்செம்பு அங்கிருந்து நமக்குக் கிட்டாதும் இல்லை. வணிகம் எதற்கு இருந்தது? துணைக் கண்ட வணிகத்திற்கு உதவுவதாய் அக்காலத்தில் உத்தர, தக்கணப் பாதைகள் இருந்தன. பொ.உ.மு. 600-200களில், நந்த-மோரியர், இப் பாதைகளைக் காவந்து செய்தார். (விரிவாக என் “சிலம்பின் காலம்” நூலிற் கண்டு கொள்க!) இப் பாதைகள் எப்போது ஏற்பட்டன என்பது இன்னும் ஆயாத ஒன்று. கோதாவரி ஆற்றங் கரையில் நூற்றுவர் கன்னரின் படித்தானத்திலிருந்து (Paithan closer to Aurangabad, Maharashtra) அசந்தா, எல்லோரா வழி வடக்கே நகர்ந்து, தபதி, நருமதை ஆறுகளைக் கடந்து, மகேசர் வந்து, பின் கிழக்கே திரும்பி, குன்றுப் பகுதியில் (Gond country) கோனாதா வந்து, உஞ்சைக்குப் (Ujjain) போய், பில்சா (Bhilsa அல்லது விதிசா Vidisha) வந்து, நேர் வடக்கே திரும்பி, தொழுனை (= யமுனை) ஆற்றங்கரையின் கோசாம்பி (kosam) வந்து, அயோத்தி/ சாகேதம் (Fyzaabaad) வந்து, முடிவில் சாவத்தி சேருவதையே தக்கணப் பாதை என்பர். தெற்கே தகடூரில் தொடங்கி கருநாடக ஐம்பொழில் (Aihole) வழி படித்தானம் போன பாதை தக்கணப் பாதையின் நீட்சியாகும்.

பழங்காலத் தமிழரை இந்திய வடபகுதிகளோடு இணைத்தது தக்கணப் பாதையும் அதன் நீட்சியுமே. நூற்றுவர் கன்னர் நாணயங்கள் தமிழ், பாகதம் எனும் 2 மொழிப் பயன்பாட்டைக் காட்டின. சங்ககாலப் பாலைப் பாக்கள் சொல்லும் வணிகம் இவ்வழி நடந்தது. இந்தியாவின் பழஞ் செப்புச் சுரங்கங்கள் தக்கணப் பாதையோடு தொடர்புற்றன. இராசத்தானம் கேத்ரியில் இருந்து 660 கி.மீ. தள்ளி உஞ்சை வரத் துணைப் பாதையும் இருந்தது. இதே போல் மத்தியப் பிரதேசம் மலஞ்சுகண்டிலிருந்து தக்கணப் பாதையின் விதிசா (மகதத் துணைத் தலைநகரம். அசோகன் பட்டத்திற்கு வருமுன் இங்கே ஆளுநன்.) வர 420 கி.மீ ஆகும். இது போக சார்க்கண்டு சிங்க்பூமிலும் செம்பு கணிசமாய்க் கிட்டியது. பல்வேறு சாத்துகளின் வழி பெரு வண்டிகளில் செம்புக் கனிமத்தைத் தக்கணப் பாதையால் தெற்கே கொணர்வதில் அன்று எந்தச் சரவலுமில்லை. இது போல் பொ.உ.மு. 2600 களில் சிந்து வெளியிலும் இராசத்தானச் செம்பு (ஓமான் செம்பும்) கிடைத்தது. எனவே செம்பு கிடைப்பில் நாம் சிந்து வெளியாரிடம் வேறுபட்டவர் இல்லை.

[சிந்து வெளியார் என்போர் தமிழர் ஆகலாம். அது முற்றிலும் வேறு ஆய்வு ஆகும். அதை வைத்துச் சிந்து வெளியிலிருந்தே தமிழர், தமிழகம் வந்தார் என்பது ஓர் ஊகம் அவ்வளவு தான். அதற்கான ஆதாரம் இதுவரை வெளி வந்ததைப் படித்தால் ஏற்கும் படியில்லை. ஓய்வுற்ற திரு,. பாலகிருட்டினன், இ.ஆ.ப, வின் முயற்சியால், ஐராவதம் மகாதேவனைப் பின்பற்றி, ”பானைப் பாதை” என்ற வாதமும் இப்போது கிளம்பியுள்ளது. பல்வேறு தமிழரும் இதை அப்படியே நம்புகிறார். இதுவே உண்மையென்றும் சொல்லித் தமிழறிஞர் இடையே இப்போது பரப்புரையும் குழப்பலும் நடக்கிறது. நான் புரிந்துகொண்ட வரை புறம் 201 ஆம் பாடலைக் கொண்டு தமிழர் துவாரகையிலிருந்து தெற்கே வந்தார் என்று சொல்ல முற்படுவது குறைப் புரிதலாகும். அது வேளிரின் நகர்ச்சி பற்றிப் பேசுகிற பாடல். வேளிர் மட்டுமே, தமிழரா, என்ன? வேறு யாருமே இல்லையா? வேளிர் தமிழகத்திற்கு வந்து சேரும் போது மற்ற தமிழர் இங்கு இருந்திருக்கலாமே? இல்லையென்று சொல்ல ஆதாரங்கள் உண்டா?)

ஒருகாலத்தில் இருக்கு வேதத்தின் காலத்தைக் கூட்டிக் கொண்டிருந்தார். இப்போது பெரும்பாலும் அது பொ.உ.மு. 1500-1200 என்ற முடிவிற்குப் பலரும் வந்தாகி விட்டது. அப்புறம் ஆரியர் இங்கேயிருந்து தான் இரோப்பா போனார் என்றார். ஆரியர் பெரும்பாலும் இந்தியாவினுள் வந்து குடியேறியவர் என்பது இப்போது, அரியானாவின் Rakhigarhi இல் நடந்த தொல்லாய்வின் வழி பொடிப்
பொடி ஆகிவிட்டது சிந்து நாகரிகம் என்பது திராவிட/தமிழிய நாகரிகம் என்று ஆகி விட்டது. ஆனால் சிந்துவிலிருந்து தான்.தமிழர் தமிழகம் வந்தாரென்பது ஒரு புதுவிதத் திரிப்பு. இதற்குதவும் வகையாய் ஆதிச்ச நல்லூரில் 2004 இல் கிடைத்த எச்சங்களின் காலத்தைப் பொ.உ.மு.905, 791 என்றது வாய்ப்பாகப் போய்விட்டது. என்னைப் பொறுத்தவரை 2004 ஆம் ஆண்டு ஆய்வு குறைப்பட்ட ஆய்வு. இன்னும் ஒருமுடிவிற்கு வந்துசேர முடியாத நிலையிலேயே நாம் உள்ளோம். அண்மையில் இன்னொரு புதுப்பூதங் கிளம்பியுள்ளது. சிந்தவெளி நாகரிகம் பொ.உ.மு, 9000 ஆண்டுகள் முந்தையதாம்! இதையெப்படி எதிர் கொள்ளப் போகிறோம்? தொல்லியலில் நடக்கும் அரசியல்/குழப்பம் முடியவே முடியாது போலிருக்கிறது. “எப்படியாவது தமிழரின் பழமையைக் குறை” என்பதே நோக்கம் போலும்.]

அன்புடன்,
இராம.கி.

No comments: