Wednesday, June 12, 2019

நெல்லும் தமிழரும் தென்கிழக்காசியாவும் - 4

சரி செம்பின் ஊற்றையும் அது வரும் வழியையும் பார்த்தோம். வெண்கலஞ் செய்ய ஈயம் வேண்டுமே? ஈயத்தில் காரீயம், வெள்ளீயமென 2 வகை சொல்வார். காரீயம் அதிக அணுவெடையும் (207.2), குறை உருகு வெம்மையுங் (melting temperature 327.5 பாகை செல்சியசு) கொண்டது. வெள்ளீயமோ குறை அணுவெடையும் (118.71) இன்னுங் குறை உருகு வெம்மையும் (231.9 பா.செ.) கொண்டது. வேறிரு மாழைகளின் உருகு வெம்மையை (செம்பு 1085 பா.செ., இரும்பு 1538 பா.செ) இவற்றோடு ஒப்பிட்டால் நான் சொல்வது புரியும். 2 ஈயங்களும் குறைவெம்மையில் எளிதிலுருகி நீர்மமாகிவிடக் கூடிய மாழைகளே. இதுபோல் இயலும் மாழைகள் மிக அரிது. [அறை வெம்மையில் நீர்மமாய் இருப்பது இதள்.(Mercury) மட்டுமே] 

நீர்மங்கள் (நீர் போன்றது நீர்மம்) தமக்கென வடிவங்கொள்ளா. ஓர் ஏனத்தில் ஊற்றுகையில், ஏனவுருக் கொள்ளும். இன்னொரு ஏனத்திற்கு மாற்றின் இவை இழியும் (= சாரையாக வடியும்) இதனால், ஆங்கில liquid ஓடு இணை காட்டி நீர்மத்தை இழிதையென்றுஞ் சொல்லலாம். (வழக்கம்போல்  ஆங்கிலச் சொல்லிற்கு நான் இணைகாட்டுவதை பலரும் மறுப்பார். இந்தை யிரோப்பியத்தோடு தமிழை இணைக்கலாமா? ”என்னவொரு அவச்சாரம்?” என்றுஞ் சிலர் எண்ணுவர். மற்றுஞ் சிலரோ வில்லியம் சோன்சு, மாக்சு முல்லர், எல்லிசு, கால்டுவெல் சொன்னவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு, அதற்கு அப்புறம் பாவாணர்வழி ஒப்புமைகளைப் புறந்தள்ளி தமிழியம், இந்தையிரோப்பியனிடை கடன்வாங்கல் தவிர்த்து உறவே இல்லென்பார். எனினும் ஆழ்ந்துநோக்கின் 1000, 2000 சொற்களுக்குமேல் உறவுள்ளன, ஆய்வு செய்யத்தான் ஆளில்லை. என்னைத் திட்டுவதிலும், அவதூறு பேசுவதிலும் நேரஞ்செலவழிப்போர் நான் சொல்வதை உள்வாங்கிக் கொஞ்சமேனும் ஆய்வில் ஈடுபட்டால் நல்லது)

பொதுப்பெயராய் மட்டுமின்றி ”இழியம்” என்பது விதப்புப் பொருளுங் காட்டும். குறை வெம்மையில் உருகி இழியும் 2  மாழைகளையும் இழியம்>ஈயம் என்போம். (வட தமிழகத்தில் வாழைப்பழம்> வாயப்பயம் ஆவதில்லையா? இழியம்>ஈயம் என்றாவதும் இதுபோற் பழக்கத்தால் தான். கருப்பீயம் காரீயமாயும், வெளிறிய ஈயம் வெள்ளீயமாயும் ஆனது. காரீயத்தை ஆங்கிலத்தில் இழிதை (Lead) என்பார். சொல்லூற்றுத் தெரியாத வேதிப் பெயராய் plumbum என்பதும் புழங்கும். தொடக்கத்தில் காரீயத்தால் குழாய் செய்ததால் (plumbing), plumbum குழாயைக் குறிக்குமோ என ஐயுறுவார். ”புழல், புழம்பிற்குத்” தமிழில் குழாயென்றே பொருள். தமிழ் அடிப்படை இல்லாது, Lead, plumbum போன்ற சொற்களைப் புரிந்துகொள்ளவே முடியாது. (இதைப் போல் சொல்வதால் தான் சிலருக்கு நான் பொல்லாப்பு ஆவேன். அதெப்படி Lead, plumbum- இற்குத் தமிழ்மூலங் காட்டலாம்? பலராலும் இவற்றை நம்ப முடிவதில்லை.) இழியம்>ஈயத்தோடு இன்னொரு சொல்லும் தமிழிலுண்டு. வழிங்கம்> வயிங்கம்>வங்கம். இதுவும் உருகியிழியும் மாழைகளான காரீயம், வெள்ளீயம், துத்தநாகம் போன்றவற்றைக் குறிக்கும். இனி வெள்ளீயத்திற்கு வருவோம். இதற்கும் உருகி இழியும் இயல்புண்டு.

வெள்ளீயத்தின் நிறம் என்பது முற்றிலும் வெள்ளையல்ல. வெளிறிய கருமை. தகதகவெனும் ஒளிக்குறிப்பில் தகளம்>தவளம் ஆனது, தகளம்>தகடம்>தகரம் என்பது வேறு வகையில் வெள்ளீயத்திற்கான சொல் வளர்ச்சி. தவிர, வெள்ளீயத்தை மிகவெளிதில் அடித்துத் தட்டித் தகடாக்கலாம். தள்>தட்டு> தட்கு>தக்கு>தகு.. இதனாலும் தகு>தகள்>தகடு>.தகடம்>தகரம் ஆகும். ஆங்கிலத்தில் வரும் stannum, tin போன்றவையும் இவற்றோடு தொடர்பு உடையவை தாம். இன்று நுட்பியல் வளர்ந்துவிட்டது. எல்லா மாழைகளையும் சூடாக்கித் தகடாக்கி விடலாம். தகரக் கனிமம் (cassiterite SnO2 associated with lepidolite bearing pegmatites) சட்டிசுக்கர் தண்டேவாரா மாவட்டத்தில் இன்றுங் கிடைக்கிறது. ஆந்திரக் காக்கிநாடாவிலிருந்து வடக்கே 330 கி.மீ தொலைவில் இச்சுரங்கம் அக்கால அடர்காடுகள், மலைகளுக்கு நடுவில் இருந்தது. யாருக்கேனும் அந்தக் காலத்தில் இதனிருப்புத் தெரிந்ததற்கு இதுவரை சான்றில்லை.

(நம்மூரில் உள்ள தகடூர், தகளம்>தகடம் பயனுற்ற ஊரா? அல்லது கிட்டிய ஊரா? ஒருவேளை பின்னால் இரும்பு கிடைத்துத் தகடாக்கினாரா? தெரியாது) வெண்கலச் சிறப்புற்ற தமிழர்க்கு வெள்ளீயம் எப்படிக் கிடைத்தது? அங்கு தான் தமிழரின் கடற்பயண முகன்மை புரிகிறது. பர்மா, தாய்லந்து, மலேசியா, இந்தொனீசியா ஆகியவற்றை நம் தமிழர் அக்கரைச்சீமை என்பார். கம்போடியா, சம்பா (வியட்நாம்), பிலிப்பைன்சு கூடத் தமிழர் அறிந்தவையே. மொலுக்காத் தீவுகளின் மணப்பொருள் தேடியும் தமிழர் போனார். பெருத்த ஆமையோட்டுப் பரிசல்களும் கடற்பயண வழியில் தேடப்பட்டன. [https://www.ancient-origins.net/news-history-archaeology/2000-year-old-lost-city-rhapta-may-have-been-found-tanzania-006234] பல்வேறு மணிகள் தேடியும் தமிழர் கடல் தாண்டி நகர்ந்தார்.

கடல் தாண்டுவதில் ஈழஞ் சேர்க்காதது நமக்கு ஏற்கனவே அது தெரிந்தது என்பதாற்றான். ஈல்>ஈழ்>ஈழம் என்பது முகனை நிலத்தில் பிரிந்த நிலம் எனும் ஓர்மையால் ஏற்பட்டது. இற்றைக்கு 18000 ஆண்டு தொடங்கி 2500 ஆண்டு வரை சிச்சிறிதாய் இப்பிரிவு ஏற்பட்டது. பொ.உ.மு. 1000-500 அளவில் கோடிக்கரை, யாழ்ப்பாணம், தலைமன்னார், தனுக்கோடி, ஆகிய இடங்களுக்கு இடைப்பட்ட கடலடி நிலமும், குமரியின் தெற்கில் 250 கி.மீ. நீள நிலப்பரப்பும் முற்றிலும் அழிந்தன. (நான் குமரிக்கண்டத்தை நம்புவதில்லை. ஆனால் தமிழ்நாட்டோடு ஒட்டிய குமரிநிலம் அழிந்ததை நம்புகிறேன்.) இவ்வழிவிற்கு அப்புறம் சோழரிடமிருந்து முத்தூர்க் கூற்றத்தையும் (பெரும்பாலும் இற்றைப் புதுக்கோட்டை மாவட்டம்), சேரரிடமிருந்து குண்டூர்க் கூற்றத்தையும் (பெரும்பாலும் கேரளத் திருவனந்தபுரம், கொல்லம் மாவட்டம்) பாண்டியர் பறித்துக்கொண்டார். (இலக்கியத்தில் இது பதிவாகியது.)

65000 ஆண்டுகள் முன் ஆப்பிரிக்காவிலிருந்து நெய்தல் மாந்தர் (costal people) தமிழகம் வந்தபோது ஈழம் தமிழகத்தோடு சேர்ந்திருந்தது. இருப்பினும் அவ்வெச்சங்கள் தமிழகத்தில் கிட்டவில்லை. ஓர் ஈழக் குகையில் 30000-40000 ஆண்டுகளுக்கு முந்தைய சான்று கிட்டியது. விழுப்புரம் மாவட்டத்தில் 10000.15000 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு குழந்தையின் மண்டையோடு கிளர்ப் படிவமாய்க் (glazed fossil) கிடைத்தது. (நம்மில் பலரும் இலக்கம் ஆண்டுகளுக்கு முந்தைய அத்திரம்பாக்க ஓமோ எரக்டசு மாந்தரோடு நெய்தல் மாந்தரைக் குழப்பிக் கொள்கிறோம். அத்திரம்பாக்க ஆய்வு இன்றும் பலரை ஓர்ந்துபார்க்க வைக்கிறது தான். ஆனால், நம்மை எந்தப் பாதைக்கு அது இட்டுச்செல்லும்? தெரியாது.) மணிமேகலையின் படி ஈழத்திற்கு இரத்தினத் தீவெனும் பெயருமுண்டு. ஈழமென்ற சொல் கூட ஈலன்>ஐலண்ட் (island) ஈல் (isle) எனும் இந்தையிரோப்பியச் சொற்களைத் தூண்டியிருக்கலாம். ஆங்கிலச் சொற்பிறப்பியலில் island, isle ஆகியவற்றின் ஊற்றுவாய் தமக்குத் தெரியாது என்பார். ஈழமெனும் குறிப்பிட்ட விதுமைச் சொல் உலகெங்கும் தீவுகளைக் குறிக்கப் பொதுமைப்பட்டிருக்கலாம் என்பது என் முன்னீடு..

மணிபல்லவம் என்றபெயர் பெரும்பாலும் மணிமேகலா தெய்வத்திற்கும் புத்த நெறிக்கும் தொடர்புடையதாகலாம். யாழ்ப்பாணத்திற்கு அருகிய நாகனார் (>நாயினார்>நயினார்) தீவே மணிபல்லவம் என்று சிலர் சொல்வர். ஒரு வேளை முழு ஈழத்தீவிற்கும் இது இன்னொரு பெயரோ எனவும் தோன்றுகிறது. இதையெப்படி நிறுவுவது? இச்சொல் மணி, பல்லவமெனும் இருசொற் புணர்ச்சியால் ஆனது. ’மணிபல்லவத்தைக்’ கவனித்தால்,’ப’ வலி மிகாதிருப்பது புலப்படும். “புதிய தமிழ்ப்புணர்ச்சி விதிகள்” என்றநூலில் மலேசிய அறிஞர் செ. சீனிநைனா முகம்மது (இலக்கணந் தவறாது தமிழ் ஆவணம் எழுத விழைவோர் இந்நூலைப் படியுங்கள். அடையாளம் வெளியீடு. 1205/2 கருப்பூர்சாலை, புத்தநத்தம் 621310, தொலைபேசி 04332 273444) ஒரு விதி சொல்வார். நிலைமொழி  இ,ஐ,வு,ய்,ர்,ழ்,ம்- என முடியும் பெயர்ச்சொல் ஆகவும், வருமொழி ககர, சகர, தகர, பகரத்தில் தொடங்கும் பெயர்ச் சொல் ஆகவும் இருந்தால், வலி மிகாதென்பார். இதன் காட்டுகளாய் காய்கறி, பசி பட்டினி, ஈவுசோவு, இலைதழை, கூழ்கஞ்சி, குலங்கோத்திரம் போன்றவற்றை சொல்வார். இக்கூட்டுச் சொற்களின் இருவேறு பகுதிகள் ஒரே பொருளையும் இருவேறு தோற்றங்களையுங் காட்டுவதைக் கவனிக்கலாம். 

கறி =  உணவிற்காகக் கடிப்பது. கறிக்காகும் காயும், கறிக்காகாத காயும் உலகில் உண்டு. அதேபோல் பசி தானாயும் எழலாம். பட்டினி கிடந்தும் எழலாம். பட்டினியாலெழும் பசி விதப்பான சேர்க்கை. சோர்வால் வரும் ஈ(ர்)வு (=பிரிப்பு) ஈவுசோ(ர்)வு என்பது இன்னொரு இரட்டைக் கிளவி. தாழ்ந்து கிடப்பது இலைதழை. உயர் இலையிலிருந்து வேறுபட்டது. இலைதழையும் இரட்டைக் கிளவியே. கூழாகிய கஞ்சி, கூழல்லாக் கஞ்சியினின்று வேறுபட்டது. குலம்= பெருங்குழுப்பெயர். கூட்டம்>கோத்திரம் என்பது தந்தைவழி உறவுகொண்டது இவ்விளக்கப் பார்வையில் மணிபல்லவத்தைப் புரிந்து கொள்ளலாம் மணி என்பது பொதுமைப்பொருள் கொண்டது. பல்லவம், அம்மணிக்கு விதப்புத் தோற்றம் கொடுக்கிறது. முதலில் மணியைப் பார்ப்போம்.

மணிக்கு jewel, bead என 2 பொருள் சொல்வர். சிவநெறி, புத்தநெறியில் அக்க மணிக்குப் பெருஞ்சிறப்புண்டு. "ஓம் நமச்சிவாய", "ஓம் மணிபத்மே ஹூம்" போன்ற மந்திரங்களை 108 முறை விடாது சொல்லும்போது எண்ணிக்கைக்கு ஆக சமய நெறியாளர் அக்கமணி மாலை பயன்படுத்துவர். அக்கமணி, கடவுள் மணி, கண்டம்/கண்டி/கண்டிகை, கள்மணி, முள்மணி, உலங்காரை போன்றன அக்கமணியின் மறுபெயர்கள். சங்கதத்திலிதை உருத்திர அக்கம்>ருத்ராக்கம்> ருத்ராக்ஷம் என்பார். அக்கமணி, ஒரு குறிப்பிட்ட காய்/பழத்தின் உள்ளிருக்கும் செந்நிறக்கொட்டை. ஆனால், பழத்தின் தோலோ கருநீலம் ஆயிருக்கும். (சிவனின் தொண்டை நீலமாவது புரிகிறதா?) அதனால் கருநீலப்பழக் கொட்டை (blueberry beads) என்றும் ஆங்கிலத்தில் பெயருண்டு. கருநீலத்தைக் குறிக்கும் மணிப்பெயர் தமிழில் மட்டுமே உண்டு. தோலைத் தவிர்த்து கொட்டையையே முதலில் அறிந்த வடமேற்கு ஆரியர் அதை ருத்ர அக்ஷம் என்றே சொல்வார். 

இப்பழக் கொட்டைகளில் பல முட்களும், பொதுவாய் 5 முகங்களுமுண்டு. சிலவிதக் கொட்டைகளுக்கு 5 இலுங் குறைந்தும், சிலவற்றிற்கு 5 ற்கு மேல் 21 வரைக்குங் முகங்களுண்டு..கொட்டைகளைக் காயவைத்து அவற்றூடே துளையிட்டு மாலையாக்குவதும் தானஞ் (>த்யானம்) செய்கையில், எண்ணிக்கைக்காக, அக்கமாலையை உதவிக்குக் கொள்வதும் சிவ, புத்த சமய நெறியாரின் வழக்கம். அக்க மணி, தானத்திற்கு (>த்யானத்திற்கு) ஓர் தளவாடம் (tool). விதப்பான இக்கொட்டை தரும் மரத்தை ஆங்கிலத்தில் Elaeocarpus ganitrus roxb என்பர். இது 60-80 அடிவரை கூட வளரும். இமயமலை அடிச்சாரலிலிருந்து கங்கைச்சமவெளியிலும் மேற்குத்தொடர்ச்சி மலையிலும், நேபாளம், தென்கிழக்காசியாவிலும், பாப்புவா நியுகினியிலும், ஆத்திரேலியாவிலும், குவாம், ஹவாய், சீனம், தைவான், போன்ற விடங்களிலும் இது வளர்கிறது. இந்தொனீசியா, மலேசியா, ஈழத்திலும் (கண்டி, நுவெரெலியா) கூட இதுவுண்டு. மணிமேகலை காலத்தில் இம்மரம் ஈழத்தில் அதிகமாய் இருந்ததோ, என்னவோ?

உல்>ஒல்>அல் என்பது கூர்மையைக்குறிக்கும் வேர்ச்சொல். அல்லுதல்= கூர்த்தல். குற்றல். முடிதல். காலங்காட்டும் இடைநிலைகள் சேர்த்து 3 தொழிற்பெயர்களை இதன் வழி அடையாளங் காட்டலாம். அல்ந்தல்> அன்றல்*>அந்தல்= முடிதல்; அல்கல்= கூர்தல், குற்றல், குறைதல், இது அல்கல்>அஃகல்>அக்கல் என்றுமாகும். அல்வல் = கூர்வுதல் குற்றல், குறைதல் இது அல்வல்>அவ்வல்>அவல் என்றும் ஆகும். அஃகம்>அக்கம் என்பது மேலே சொன்ன கொட்டைக்கு இன்னொரு பெயர். அவமும் அதே பொருளே. அக்கம் புரிந்தால் பல்லவப் பெயரும் புரிந்து போகும். பல்லவம், மரத்திற்கும், மரம் வளரிடத்திற்கும் ஆன பெயர். மரச்சிறப்பால் நாகனார் தீவிற்கும் ஈழத்திற்குமே மணிபல்லவப் பெயர் ஏற்பட்டிருக்கலாம். 

அன்புடன்,
இராம.கி.

No comments: