Sunday, June 09, 2019

நெல்லும் தமிழரும் தென்கிழக்காசியாவும் - 2

இனிப் Paddyக்கு வருவோம். ”Oryzus Sativa வின் விதப்புகளான Indica, Japanica” ஆகிய இரண்டுமே 8000/9000 ஆண்டுகள் முன் இந்தியாவுள் நுழைந்து கலந்ததாய்ப் பழம்புதலியல் (Paleobotany) சொல்லும். கங்கைக் கரையில் 8000 ஆண்டுகளுக்கு முன் நெல் பயிரிட்டாரோ என்றுகூடச் சிலர் ஐயுறுவார். மேற் சொன்ன படி இராக்கிகார்கில் பொ.உ.மு. 2430-2140 இல் கான்நெல்/ பயிர்நெல் சேர்ந்த Oryzus Sativa Indica நெல்லிருந்ததற்குச் சான்றுண்டு. 

கங்கைக் கரைக் கட்டுரைகளைப் பற்றி அறிய, Ancient India - New Research ed. Upinder Singh, Nayanjot Lahiri Oxford University Press, 2009 என்ற நூலிலுள்ள Human- Plant Interactions in the Middle Gangetic Plains: An Archeobotaical Perspective (From the Mesolithic upto Third Century BC) by Shibani Bose pp 71-123 என்ற கட்டுரையைப் படியுங்கள். ”இது போன்ற ஓர் அருமையான கட்டுரை, காவிரி, வைகை, தண்பொருநைச் சமவெளி பற்றி வெளி வராதா?” என்றும் ஏங்குகிறேன். கண்டேனில்லை. தெரிந்தால் சொல்லுங்கள்.

தமிழ் கூறும் நல்லுலகில் இதுபோல் புதலியல், தொல்லியல், தமிழியல் சேர்த்து ஆய்வுகள் நடப்பது மிகக் குறைவு. காட்டாகச் சொல்கிறேன். ஆயிரம் ஆண்டுப் பழமை கொண்ட வீராணம் ஏரியில் நாலைந்து ஆழ்துளைப் புரை இட்டு மண்கூறு (solil sample) எடுத்தாலே கடந்த 1000 ஆண்டு வெதணம் (climate), மழை நிலவரம், புதலியற் செய்திகள், பயிரிட்ட வகைகள், வெவ்வேறு நெல் வகைகள் எனப் பல உருப்படியான செய்திகளைக் கண்டுபிடிக்கலாம். அவற்றை நம் இலக்கியங்களோடு பொருத்தியுங் காட்டலாம். அப்போது தான் நம் இலக்கியத்தைப் பிறர் நம்புவர். 

அதையெலாம் செய்வதற்கு நாமோ, நம் அறிஞரோ, அரசுகளோ, கல்வி நிலையங்களோ என்றும் முயன்றதேயில்லை. நம் போகூழால், நம் பின்புலம் பற்றி நாமென்றும் ஆய்ந்ததில்லை. ஆனால் “எட்டுத் தொகை, பத்துப் பாட்டென” எனும் இலக்கியக் குறிப்புக்களை மேடை நிறையப் பேசுவோம். மீள மீளச் சொன்னதையே கூறின், சலிப்பு வராதோ? நம்பகத் தன்மை கூடுமோ? பேச்சொரு பக்கம். ஆய்வு இன்னொரு பக்கம் அல்லவா?. இரண்டும் நமக்கு வேண்டுமே? இக்குறையை வெவ்வேறு அரங்குகளில் நான் சொல்வதாலேயே என்னை ஒதுக்கும் தமிழார்வலரும் தமிழறிஞரும் மிகுதி. நான் “தமில் வால்க” ஆளல்லன்.

நெல் எப்போது தமிழகம் போந்தது? எனக்குத் தெரியாது. நமக்குக் கிட்டிய சான்றுகளின் படி பொ.உ.மு. 490 இல் பயிர்நெல் பொருந்தலில் இருந்தது. கொடுமணத்தில் இருந்தது. சிவகளையில் பொ.உ. மு. 1100 க்கு அருகில் போய்விடட்து. இதற்கு முன் குறைந்தது பொ.உ.மு. 2250 இல் நெல் தமிழகத்தில் இருந்திருக்கலாம். (ஆனால் ஊகம் போதுமோ?)  

கரும்பை நம்மூர்க்குக் கொணர்ந்தது அதியமானின் முன்னோரெனச் சங்கவிலக்கியம் சொல்லும். நன்செய்ப் பயிர்களான நெல்லும் கரும்பும் தென்கிழக்கு ஆசியாவில் இருந்து வந்ததாகவே இற்றைப் புதலியலுஞ் (Botany) சொல்கிறது. நெல் கரும்பிற்கு முன் வந்திருக்கலாம். அது கங்கை வழியா? கடல் வழியா?- என்பதில் இன்னும் தெளிவில்லை. பொதுவாய்க் கங்கைக்கும் காவிரிக்கும் அக் காலகட்டத்தில் உறவிருந்ததா? தெரியாது. ஆனால் தமிழர் கடற்பயணம் 4230 ஆண்டுகள் முன் நடந்ததற்குச் சான்றுண்டு. ஈனியலின் படி ஆத்திரேலியப் பழங்குடிகளில் 11% பேருக்குத் தமிழரோடு தொடர்புண்டாம். (இது போக ஆத்திரேலியப் பழங் குடிகளுக்கும், நம்மூர்ப் பிரான்மலைக் கள்ளருக்கும் 65000 ஆண்டுத் தொடர்பு உண்டு.) 4500 ஆண்டுகள் முன் தமிழர் கடலிற் பயணித்திருக்கலாமென ஆதிச்சநல்லூர் அகழாய்வும் உணர்த்தும்.

(https://www.eurekalert.org/pub_releases/2013-01/m-gf011413.php?fbclid=IwAR2yBnP69hgoxretM2_1WVMkPtcG0OLKSb4RO1H5p9bfyY5UYqTdkyjl5fU.)
(https://www.bbc.com/news/science-environment-21016700?fbclid=IwAR2l6H5VI-uI1VI9EzKrpP3TcBS6fsAwAqpxl020Nma010oCfqZA2Kmqos)

இன்னொரு வகையில் தென்கிழக்காசியரும் தமிழகம் வந்திருக்கலாம். (வியப்பாகிறதோ?) ஏனெனில் 7500 ஆண்டுகள் முன் சுந்தாலாந்தின் மிச்சப் பகுதி கடலுள் அமிழ்ந்து ஒரு தீவக்குறையும், சில தீவுகளும் மட்டுமே எஞ்சின. கடற்கோளில் அவர் கண்டமிழந்தார்; நாமோ ஆதாரமின்றிக் கண்டம் இழந்ததாய்ச் சொல்லிக் கொள்கிறோம். 

நாம் பாராட்டும் நெல்லும், கரும்பும், தென்னையும், வாழையும், வெளியில் இருந்து வந்தவையே. (பலா பற்றிச் சொல்ல முடிவதில்லை.) இதுகேட்கும் பலர்க்கும் நான் சொல்வது அதிர்ச்சி ஆகலாம். கடற்பயணவழி நம் பொருள்/சொற்கள் தென்கிழக்காசியா போகலாம் எனில், அவர் சரக்கும் நமக்கு வரலாமே? 

அதே போது, அரிசிப் பொருளும் சொல்லும் தமிழக வழி மேலையர்க்குப் போயிருக்கலாம். பிற்காலத்தில் நம்மிடமிருந்து ”Paddy” எனும் சொல் மலேசியா/இந்தொனீசியா போயிருக்கலாம் நாமும் கடல் வழி அங்கு போய் வந்தோமே? சரி, மெனக்கிட்டு, தமிழர் ஏன் கடற்பயணம் போனார்? தன்னேர்ச்சியாய் (accidental) தென்கிழக்கு ஆசியாவைக் கண்டபின் அதன் பயன் கருதி வணிகம் நடந்ததோ? அன்றி அக்கரைச் சீமை போகும் வழியை அவரிடமிருந்து நாம் கற்றோமோ? இப்போது ஏதுஞ் சொல்ல முடியவில்லை.

ஒருவேளை தென்கிழக்காசியாவிற்குப் போனது மணிகள்/மாழைகளைக் கருதியோ?- என்று கூட எண்ணிப் பார்க்கலாம். ஏனெனில் பண்டமாற்றிற்கு, பொருளியல் வளர்ச்சிக்கு, இவை முகன்மையானவை. வெண்கலத்திற்குப் பெயர் போன தமிழகத்தில் வெள்ளீயக் (தகரக்) கனிமம் கிடையாது என்பது உங்களுக்குத், தெரியுமோ? ஆனால், ஆதிச்சநல்லூர் அகழாய்வில் ஏராளமான வெண்கலப் பொருள்கள் கிட்டியுள்ளன. செம்பை, அதன் கனிமத்திலிருந்து பிரித்தெடுக்கும் ஆலையும் வெண்கலஞ் செய்யும் வார்ப்பாலையுங் கூட தண்பொருநைக்கு (தாம்பிரபருணிக்கு) அருகிருந்தன. இது தவிரக் கடந்த 1500 ஆண்டுகளில், தொடர்ந்து chozha bronze இற்குத் தமிழகம் பெயர் பெற்றது. அது எப்படி? வியப்பாக இல்லையா? சோழியன் குடுமி சும்மா ஆடி விடுமா, என்ன? வெண்கலத்திற்குத் தேவையான வெள்ளீயம், என்பது நெடுங்காலமாய் அக்கரைச் சீமையிலிருந்தே நமக்குக் கிட்டியது. அந்தக் கதையையும் கீழே பார்ப்போம்..

அக்கரைச் சீமை என்பது முதலில் மலேயா, தென்தாய்லாந்தைச் சேர்ந்த அக்காலக் காழகத்தைக் குறிக்கும். (பின்னால் பொருள் விரிந்தது.) கரு மண்ணைக் காழென்று சொல்லாய்வறிஞர் கு.அரசேந்திரன் குறிப்பார். பட்டினப் பாலையில் வரும் ”காழகத்து ஆக்கம்” நினைவுக்கு வருகிறதா? (பெரும்பாலும் அது தகரமாகலாம். நாம் தென்கிழக்காசியா போனதும் அதற்காகவே ஆகலாம். விரிவாகவே கீழே பார்ப்போம்) 

காழகம்>கழாகம்> கடாகமெனத் தமிழ்த்திரிவு தொடங்கும். பின் இது Kataha எனச் சங்கதம் போகும். Kadaram, Kidaram, Kidara என்று மேலுந் திரியும். சங்கத் தமிழ் புரியாக் காலத்தில் ஊற்றுத் தெரியாமல் கடாரத்தைக் கடன்வாங்குவார். Chieh-Cha எனச் சீனத்தின் I-Tsing தன் பயண நூலில் இந்நாடு பற்றிப் பதிவார். Kalah என அரபியிலும், Quedah என மேல் நாடுகளிலும் சொல்வர். .

[காழெனில் வேறு செய்திகளும் நினைவு வரும் பொதுவாய்க் கருப்பு நம்மை விடாது தொடரும். குமரிக் கண்டக் கருத்தை ஒதுக்கி மொழிவழி நோக்கின், நம் உறவுகள் புரியும். யா>யாமம்= கருப்பு. யாம்> ஸ்யாம்>அசோம்>அஹோம்= அசாம் குடிகள். அசோம்>அசாம்; யாம>ஸ்யாம்>சாம்>சான்= பர்மாப் பழங் குடிகள். ஸ்யாம்= தாய்லந்து. ஸ்யாம்>சாம்= தாய்லந்தின் பழங்குடிகள்; கம்போடியாவிலும் கருப்பின் தொடர்பு உண்டு. சாம்>சம்>சம்பா= வியத்நாம் குடிகள். வியத்நாமிற்கே ’சம்பா’ என்ற பழம்பெயருண்டு. 

யா> யாவம்> யாவகம்>  ஜாவகம்= இந்தோனீசியாவின் முகனத்தீவு (மற்ற தீவுகளைப் பற்றி வேறு இடத்திற் சொல்வேன்); யாகம்>ஞாகம்>நாகம்> நாகர்= கருப்பர். யாகர்>யக்கர்> யக்‌ஷர்= ஈழப் பழங்குடிகள். இவரை இயக்கர், நாகரென்றும் அழைப்பர். நாகர்>negro, உலகெங்கும் பரவிய இப்பெயரின் சொற்பிறப்பு ஒருகால் நம்மூர் ஆகலாம். (வியப்பாகிறதா?) ”க்க”, “க்ர” ஆவது இந்தையிரோப்பியப் பழக்கம். நாகர்/நக்கவர் = கருப்பர். (அம்மணப் பொருள் வேறுவகையில் எழுந்தது.) நக்கவர்>நக்கவரம். இதை நாகதீவம் என்று அரபிகளும் குறிப்பிட்டார். அசாமிற்குப் பக்கம் இருப்பது நாகாலாந்து. பர்மாவில் உள்ள சான் குடிகளோடு நாகாலாந்து மக்கள் தொடர்புற்றவர்.

இனிக் கருமுதல்>கம்முதல்= ஒளிகுன்றல்; கம்மம்>கம்மை= தமிழிலும், கெமேரிலும் கருப்பு. கமர்>கெமர்= கம்போடியர். அந்துவன்>அந்துமன்> அந்தமான் என்பதும் கருப்பே. (அந்துவன் சேரலென முதற் சேரனைச் சொல்கிறோமே? அவனுங் கருப்போ? குட்டி அந்துவன் தீவுப் பழங்குடிகளின் பெயர் ஓங்கு (Onge/aung). இதன்பொருளை அம்மொழியில் இன்னுந் தேடுகிறேன். 

தெற்கு/நடு அந்துவன் தீவுகளின் ஜாரவா மக்களுக்கு அவர் மொழியில் ஓங்கென்றே பெயர். (ஜாரவா=- இந்திக்காரர் வைத்த பெயர்) ஜாரவா மொழிக்கும் தமிழுக்கும் உள்ள உறவுச் சொற்களை வேறு தொடரில் சொல்வேன். மேலே போனால் அக்கால அங்கம் (இக்கால வங்கம்) கூட ஓங்கின் திரிவாகலாம். வங்காளிகளுக்கும், ஓங்குகளுக்கும், தமிழருக்கும் ஈனியல் தொடர்புண்டு. ஆப்பிரிக்காவில் தொடங்கிய பழம் மாந்தர் நம்மூர் வந்து, கடற்கரை வழி தென்கிழக்காசியா போய், முடிவில் ஆத்திரேலியா சேர்ந்தாரே, அவருங் கருப்பே. நாமும் கருப்பு. நம்மில் ஊடி வரும் சிவப்பும் வெளுப்பும், பழுப்பும் பின்னால் ஏற்பட்டவை புகாரைத் தலைநகராக்கிய நாகநாடு, சோழநாட்டுப் பகுதி. நாக பட்டினம், நாகர் கோயில், சம்பாபதி (புகார்) இவையெலாம் இத்தொடர்பு காட்டும். வடதமிழகத்தின் ஒரு முகன்மைக் குமுகரை சாம்பவர் என்பார். சாமளம் நம்மை விடாது].

வெண்கலம் மட்டுமின்றிப் பித்தளையும் கூட நம்முடன் தொடர்புள்ளதே. துத்தநாகம், காரீயம், வெள்ளீயம், செம்பு, வெண்கலம், பித்தளை போன்ற மாழைகளும், அட்டிழைகளிலும் [alloy (v.) c. 1400, "mix (a metal) with a baser metal," from Old French aloiier, aliier "assemble, join," from Latin alligare "bind to, tie to," from ad "to" (see ad-) + ligare "to bind, bind one thing to another, tie" (from PIE root *leig- "to tie, bind"). சங்கதம் இதை “மிஸ்ரலோக”மாக்கும்.] தமிழரின் பங்கு கணிசமானது. 

பழந்தமிழக எஃகு/இரும்பைப் பேசும் தொல்லியலார், அட்டிழைகளையும் பார்க்க வேண்டும். இரும்புக் காலத்தின் முன் தமிழருக்குச் செம்புக்காலம் கிடையாது என்பது, ஆதிச்சநல்லூர் பார்க்கின், அவக்கர முடிவாகும். செம்பு எங்கு கிடைத்தது? நாகம் (Zinc), காரீயம் (Lead), வெள்ளீயம் (Tin) போன்றவை எங்கு கிடைத்தன? இனக்குழு வரலாற்றில் எப்படியவை எழுந்தன? இவற்றை நாடி தமிழன் எங்கு சென்றான்? போனவிடங்களில் கொசுறாகச் சிலவற்றை அள்ளிக் கொணர்ந்தானா? உள்ளூர் வாழ்வை இக்கொசுறுகள் மாற்றினவா? தமிழகத் தென்பகுதியை நாமின்னும் சரியாய் ஆயவில்லையோ?- என்ற கேள்விகளும் எழுகின்றன.

இன்னொன்றையும் எண்ணிப்பாருங்கள். முல்லைநில வரகு, கேழ்வரகு, பனிவரகு, சாமை, தினை, குதிரைவாலி போன்றவற்றை விளைவித்துத் துய்த்த தென்பாண்டித் தமிழன் எப்படி வெளியூர் நெல்லுக்கு மாறினான்? நீர்ப்பாசனம் இங்கெப்படி முகன்றது? ஒருவேளை நெல்லை வைத்தே மருதம் நம்மில் முகிழ்த்துக் கிளர்ந்ததோ? ”அரிசிச்” சொல் எங்கிருந்து நமக்கு எப்படிக் கிடைத்தது? வ்ரிஹி என்று சங்கதத்தைத் தூக்கிவந்து, ”அரிசிக்குச்” சிலர் அணைகொடுப்பதை நானேற்பதில்லை. பார்லி, கோதுமை சாப்பிட்டவர் அரிசிக்குச் சொல் தந்தாரென்பது சிறிதும் நம்ப முடியாதது. (அரிசியை வேற்று மொழிச் சொல்லென நான் சொன்னவுடன் என்மேல் சீறிப்பாயுந் தமிழர் நிறையவே இருக்கலாம்.) தமிழர்க்கும் தென்கிழக்காசியருக்குமான தொடர்புகளென்ன? இப்படி அடுத்தடுத்துப் பார்க்கப் போகிறோம்.

அன்புடன்,
இராம.கி.

No comments: