Friday, June 14, 2019

நெல்லும் தமிழரும் தென்கிழக்காசியாவும் - 6

முன் சொன்னதுபோல், புகாரிலிருந்து சாவகம் புறப்படும் கப்பல்கள் அந்துவன்/நக்கவரம் தீவுகளுக்குப் போய்ப் பின் அங்கிருந்து 8.84 N 98.9 E இலுள்ள இற்றைத் தாய்லந்தின் கிரா ஈற்றுமம் (Isthmus of Kra) அடையலாம், அல்லது நக்கவரந் தீவுகளுக்குத் தென்கிழக்கிற் சென்று சுமத்திராத் தீவின் அக்க முனையை அடையலாம். இதை வலஞ்செய்து மலாக்கா நிரிணை வழியே சுமத்திராவின் மலையூர், சம்பி, பலெம்பாங் போன்ற நகர்களை அடையலாம். இன்னும் கீழேபோனால் சாவகத்திலும் அடையலாம். [மலாக்கா நீரிணை வழியை தமிழர் முதலில் அறிந்ததுபோல் தெரியவில்லை. அது காழகத்தில் சிலகாலம் இருந்தபின் கண்டுபிடித்த வழி.] முதலில் கிரா ஈற்றுமத்தைப் பார்ப்போம். அங்குள்ள ’தக்கோலம்’ எனும் நகரம் அக்காலத்தில் பெரிதும் முகன்மையானது.

[கூகுள் முகப்பைக் கொண்டு நான் சொல்லும் இடங்களை கூர்ந்து கவனித்து அறியுங்கள். நாம் துழாவிக் கொண்டிருப்பது வரலாற்றிற்கு முந்தைய காலம். வரலாறு என்பது எழுத்து எழுந்ததற்குப் பின் உள்ள காலம். வரலாற்றிற்கு முந்தையது என்பது pre history. தொடக்க வரலாறு என்பது proto history. தமிழி எழுத்து என்பது இற்றை நிலையில் பொ.உ.மு.800 இல் தொடங்கியது. (ஆகப் பழமையான பானைச்சில்லு.கொற்கையில் கிடைத்தது.) அதற்கு முன்னிருந்த சான்றுகள் எவையும் இன்னும் கிட்டவில்லை. சிந்து சமவெளி எழுத்துகளைப் போன்ற பானைக் கீற்றுகள் தமிழகத்திலும் கிட்டியுள்ளன அவற்றின் காலம் மீவுயர்ந்து பார்த்தால் பொ;உ.மு. 2600. நாம் இங்கே பொ.உ.மு. 2600க்கும் முந்தைய நிலையைத் தேடுகிறோம். நெல் இதற்கு முன் இங்கிருந்ததா?]. 

பழந்தமிழக மேற்குக் கரையில் இருந்து புறப்படுங் கலங்களுக்கு செங்கடற் கரை பெருனிக்கெ (Bernike) என்பது எவ்வளவு முகன்மையோ, அதேயளவு முகன்மையானது இத் தக்கோலம். பெருனிக்கே பெயரைக் குறித்த கிரேக்க ஆசிரியர் தாலமி, தக்கோலத் துறை பற்றியும் தம் பூகோளநூலில் சொல்லி யிருப்பார். சயாமியமொழியில் தக்கோலத்தைத் தக்குவா பா என்பார். தமிழர் தொடர்ந்து தக்கோல நகரக்குப் போய்வந்து கொண்டிருந்தார். பொ.உ 800/900 அளவிலிருந்த பல்லவர்காலத் தமிழடையாளங்களும், அவனிநாரணனான 3 ஆம் நந்திவருமன் பெயரால் பெருமாள் கோயில்/சிலைகள், குளம், கல்வெட்டுகளும் இங்கு தொல்லாய்வில் கிட்டின. குறைத்துநடந்த இவ்வாய்வுகளைக் காண்கையில், அவ்வூர் வெகுகாலத்திற்கு முன்பேயே ஒருவேளை உருவாகி இருக்கலாமென்று தோன்றுகிறது.

பல்வேறு தமிழ்வணிகக் கூட்டத்தார் இங்கு வந்து போயுள்ளார். தவிர, பொ.உ. 3, 4 ஆம் நூற்றாண்டின், ”பெரும்பத்தன் கல்” [பட்டன்>பத்தன்= தங்கம், வெள்ளி ஆசாரி”] எனும் தமிழி வாசகத்தோடு, (பொன்தேய்த்து) மாற்றுரைக்குங் கல்லும், பல்வேறு மணிகளும் அருகிலுள்ள குவான்லுக் பட்டில் (Khuan Luk Pat) கிட்டின. முதன்முதலாய்த் தமிழர் எப்போது தக்கோலம் போனார்? தெரியாது. தாய்லந்தின் தொடைபோல் கீழிறங்கும் இப்பகுதியை ”கலங்கா வல்வினை இலங்காசோகம்” என இராசேந்திரன் மெய்கீர்த்தி சொல்லும். யாரோ ஒருவர் இலங்காசோகத்தை இலங்கா அசோகமெனப் பிழைபடப் பிரிக்க, அதுவே எல்லாவிடத்தும் பரவி. அசோகரோடு அதையொட்டி விதவிதமாய்க் கதைத்து அடையாளங் காணமுடியாது செய்தார். நமக்குத்தான் வடவருக்குத் தாசர் ஆகும் மனப்பாங்கு அதிகமாயிற்றே? (Interpretation through Sanskrit has diverted many research in S E Asia.) .தமிழ்வழி அறிந்தால் இலங்காசோகத்தின் சொற்பிறப்பு சட்டென விளங்கும்.

இல்தல்>ஈல்தல்>ஈழ்தல் வினை தமிழில் பிரித்தலை உணர்த்தும் முகனை நிலத்திலிருந்து ஈழ்ந்தது ஈழம். இல்தலை இலங்குதலென்றுஞ் சொல்வர். அதற்கும் பிரித்தல் பொருளுண்டு. இலங்கையும் ஈழம் போலவே தமிழ்ச் சொல் தான். [அது சிங்களமில்லை. இந்தையிரோப்பியனில் isle/ஈல், island/ஈலண்ட் என்று பொதுப்படச் சொல்கிறோமே அதுகூட ஈழம் என்ற விதப்புப் பெயரின் பொதுமையாக்கல் ஆகலாம்.] இலங்குதலின் எதிர்ச்சொல் இலங்காதிருத்தல். சுள்>(சொள்)>சொள்கு>சொகு>சோகு>சோகம் என்பது திரண்ட தொடையைக் குறிக்கும். [ஊருவும் கவானும் சோகமும் குறங்கே” திவாகரம் 351] திகுதிகுவெனத் திரண்டதாலேயே thigh எனும் இந்தை யிரோப்பியச்சொல் பிறந்தது. இலங்காசோகம்= பிரியாத்தொடை. இற்றை வடமலேசியாவின் இப்பழம்பெயர். எத்தனை பேருக்குத் தெரியும்? ஜோகூர் வரை தொடை நீண்டுகிடக்கிறது. பொ.உ.2 ஆம் நூற்றாண்டில் காழக(கடார) அரசு இலங்காசோகத்தில் தொடங்கியிருக்கலாம் என்பார். இதுவே தென்கிழக்காசியாவின் முதலரசுத் தொடக்கமாம்.

தக்கோலத் துறையிற் கீழிறங்கி நிலம்வழி கிழக்கே 290 கி.மீ பயணித்தால், பசிபிக் பக்கமுள்ள தாம்பரலிங்கம் வரும் [இராசேந்திர சோழனின் மெய்கீர்த்தியில் வரும் மா (பெரிய) தாமலிங்கம் இதுவே.]  இதன் முகன்மையும் பெரிதே. இதன் இற்றைச் சயாம்பெயர் நகோன் சி தம்மராட் 8.43 N 99.56 E. ஒருகாலத்தில் இது காழகஅரசைச் சேர்ந்தது. (காழகஅரசு பின்னாளில் சுமத்ராவின் பலெம்பாங்ஙைத் தலைநகராய்க் கொண்ட சிரீவிசயத்தின் சிற்றரசானது.) தாம்பரலிங்கத்தில் சிரீவிசய அரசன் கட்டிய புத்தர் கோயிலும், அதுசேர்ந்த தமிழ்க் கல்வெட்டும் கிட்டியது. இத்துறைமுகம் சிலகாலம் கம்போடியர் கட்டுப்பாட்டில் இருந்தது. தாமலிங்கத்திலிருந்து பசிபிக்கில் நகர்ந்தால், எளிதாய்க் கம்போடியா போகலாம். (மலாக்கா நீரிணைவழி போகவேண்டியதில்லை.) கம்போடியா பற்றிக் கீழே பார்ப்போம்.

கலைத்தக் கோர்புகழ்த் தலைத் தக்கோலமும்
தீதமர் வல்வினை மா தாம லிங்கமும்

என்று இருவேறு இலங்காசோக நகர்களை இராசேந்திர சோழன் மெய்கீர்த்தி பேசும். தக்கோலத்தின் தெற்கே, இக்கால வுக்கெட்டுச் (Phuket) சுற்றுலாத் தீவும் (இது இன்று பெயர்பெற்றது. வரலாற்றுச் சிறப்புமிக்க தக்கோலம் பெயர் பெற வில்லை.). அதன்கிழக்கே கிரா ஈற்றுமக் கிராபிப் (Grabi) பகுதியும் தெரியும். அதன் தெற்கே இலங்காவியை (6.37N 99.78E) அடையலாம். இதன் நேர்கிழக்கில் பசுபிக்கடற் பக்கம், ”பட்டினம்” என்ற ஊருமுண்டு. (மலாயில் பட்டனி. இதன்பொருள் துறைமுகம். அதேபொழுது, வரலாற்றாய்வர் சொற்பிறப்பு அறியாது ”சங்கதம், அது, இது” எனக் குழம்புவதுமுண்டு. தென்கிழக்காசியா எங்கணும் இப்படிநடப்பது மிகச் சாத்தாரம். தமிழ்வழி செல்லவேண்டிய பாதையைச் சங்கதக் கல் தடைப்படுத்தும் தமிழ்வழி பார்க்காவிடின் பல இடங்களில் தடுமாறுவோம். இவ்வாறு சங்கதம் தமிழை நிறையவே படுத்தியுள்ளது. இலங்காசோகமும், மலேசியாவின் பெருலீசு, கெடா, பினாங்கு மாநிலங்கள் சேர்ந்ததே அற்றைக் காழகம். காழகநிலமே தமிழர் முதலிற்போன நிலமுமாகும்.

காழகத்திற்குச் சுங்கைப்பட்டென்றும் பெயருண்டு. (Sungai Batu ஆற்றுப்பட்டு. நம்மூர் செங்கழுநீர்ப்பட்டு, நீர்பெயற்று போல் இதைப் புரிந்து கொள்ளுங்கள்.) பட்டு, தமிழில் குடியிருப்பைக் குறிக்கும். சுங்கை= ஆறு., பெருநை, ஓடை. அந்தக் காலச் சுங்கைப் பட்டினம் இன்று சுங்கைப்பட்டாணி என்று பெயர் திரிந்து தமிழூற்றை மறைத்து நிற்கும். இலங்காவிக்கும் தெற்கில் மலேசிய மேலைக்கடல் துறையாக இற்றைப் பினாங்கு உள்ளது. .சரி, தமிழர் தக்கோலம் போன காரணமென்ன? வெண்கலத்திற்குத் தேவையான தகரம் முதலில் தக்கோலத்தில் கிட்டியிருக்கலாம்.

பர்மா தொடங்கி, தாய்லந்து/ மலேசியத் தீவக்குறை வழி, இந்தோனீசியத் தகரத் தீவுகள் வரை வடக்கு-தெற்கில் 2800 கி.மீ நீளம் 400 கி.மீ அகலம் தென்கிழக்காசியத் தகர வளைபட்டை (Tin Belt) உள்ளதால், தக்கோல வடக்கிலும் தெற்கிலும் தகரச் சுரங்கங்கள் உருவாகின. இற்றையுலகின் 54% தகரத்தேவையை (9.9 நுல்லியன் தொன்கள் million tonnes) இவ்வளைப்பட்டை நிறைவுசெய்கிறது. அவ்வளவாய்க் காடும் மலையுமின்றி, சிறுசிறு குன்றுகளும், எளிதில் கனிமஞ் சேகரிக்கும் நிலப்பாங்கும் கொண்டதால் தகரக் கனிமம் எளிதிலிங்கு வாரப்பட்டது. இதனாலேயே தகரமென இவ்வூர்க்குப் பெயரிட்டாரோ, என்னவோ? பேச்சில் ரகரம் லகரமாவது சிலமொழிகளின் பழக்கம். தகரம்>தக்கலம்>தக்கொலம்>தக்கோலம் என்பது இயல்பான திரிவு. சயாமிய மொழியில் இன்றும் ”தக்குவா” என்ற சொல் தகரத்தைக் குறிக்கும். இற்றைப் பெயரான ”தக்குவா பா” அதன் வழி உருவானதே.

செம்போடு தகரஞ்சேர்த்துக் கடின வெண்கலமாக்கி, கூர்ங்கருவி, படைக்கலன் செய்யப் பயன்படுத்தினார் ஏறத்தாழ 2000 ஆண்டுகள் நடந்த வெண்கலக் காலப் (Bronze Age) பயன்பாடே மென்மேலும் தகரச் சுரங்கங்களைக் கண்டுபிடிக்க ஏதுவானது. தகரத்தின் முதற்கிடைப்பு பொ.உ.மு. 3500 இல் துருக்கியிலும், பின் இங்கிலாந்திலும் இருந்தது. எகிப்து, சுமெரியா, பாபிலோனிய, அக்கேடிய நாடுகளில் வெண்கல வாணிகம் செய்தோர், தகரச்சுரங்கங்கள் இருந்த இடங்களின் அடையாளங்களை, குறிப்பாக இங்கிலாந்தின் இருப்பை, மூடி மறைத்தார். ஏறத்தாழ பொ.உ.மு. 310 இல் தான் இம்மறைப்பு கிரேக்கரால் கண்டுபிடிக்கப்பட்டது. இங்கிலாந்தின் தகரச்சுரங்கங்களைத் தம்பக்கம் கைக்கொள்ளவே உரோமானியர் இங்கிலாந்தை அடிமைகொண்டார்.

[தகரத்தை ஆங்கிலத்தில் [tin Old English tin, from Proto-Germanic *tinom (source also of Middle Dutch and Dutch tin, Old High German zin, German Zinn, Old Norse tin), of unknown origin, not found outside Germanic. Other Indo-European languages often have separate words for "tin" as a raw metal and "tin plate;" such as French étain, fer-blanc. Pliny refers to tin as plumbum album "white lead," and for centuries it was regarded as a form of silver debased by lead; hence its figurative use for "mean, petty, worthless."] என்றும், stannum [stannic (adj.) "containing tin," 1790, from Late Latin stannum "tin" (earlier "alloy of silver and lead"), a scribal alteration of Latin stagnum, probably from a Celtic source (compare Irish stan "tin," Cornish and Breton sten, Welsh ystaen). The Latin word is the source of Italian stagno, French étain, Spanish estaño "tin." The chemical symbol Sn is from Late Latin stannum] என்றும் சொல்வர்.] இதுபோகத் தகரம் சீனத்திலும், தென் ஆப்பிரிக்காவிலும் பயன்பட்டதற்குச் சான்றுண்டு. பொ.உ.மு. 2300-2000 அளவில் வடகிழக்குத் தாய்லந்தின் கோரட் சமவெளியில் வெண்கலஞ் செய்ததற்கும், பொ.உ.மு.1600 இல் வியத்நாமில் செய்ததற்கும் சான்றுண்டு. இதனூடேதான் தகரம் தமிழர்க்குத் தெரியவந்திருக்கவேண்டும்.

அன்புடன்,
இராம.கி.

No comments: