Saturday, June 08, 2019

நெல்லும் தமிழரும் தென்கிழக்காசியாவும் - 1

”Paddy என்பது நெல்லை குறிக்க ஆங்கிலம் பயன்படுத்தும் சொல். இதன் மூலச்சொல் Pady என்கிற மலாய் மொழி சொல் என அறியாமல் ஆங்கிலம் உளறும். நெல்லை படியால் அளக்கும் செயலால் நெல்லை படி.என்றே அழைத்தனர்  சாப்பாட்டிற்கு அவங்க தான் படியளக்கிறாங்க என்றால் உணவுக்கு அவர்கள் தான் நெல் அளந்து கொடுக்கிறார்கள் என்றே பொருள். ஆகவே தமிழ் அளத்தல் அளவான படி என்பதே ஆங்கிலத்தில் படி. ப்பேடி என்ற உச்சரிப்பில் வழங்கப்படுகிறது” 

என்ற சிற்றிடுகையைத் ”தமிழரின் தொன்மை, பண்பாடு, வரலாறு தொடர்பான பதிவுகள் குறித்த ஆய்வுதள (STARCH)” எனும் முகநூற் குழுவில் ஒரு முறை கண்டு வியந்து போனேன். 

ஒரு வேளை சொற்பிறப்பியல் என்பது இவர் போலும் சிலருக்குக் குடிசைத் தொழிலாய் ஆகிவிட்டதோ?  சான்றின்றி இப்படிக் கற்பனையிற் சொல்ல முடியுமா? இவர் காட்டும் எழுத்துப் பெயர்ப்பு சரியா? Paddy யில் 2 d உண்டே? ஆங்கிலம் உளறுகிறதா? இன்னொரு மொழியை இப்படிச் சொல்லலாமா? “தமிழ் உளறுகிறதெ”ன வேற்றார் சொன்னால் நாம் வாளாய் இருப்போமா? 

தவிரப் ”படி” என்பது எப்படி நெற்பெயராகும்? அளக்கப் படும் பொருளுக்குப் பகரியாய், வேறெதிலும் அளவையலகே பெயராகியது உண்டோ? குறிப்பிட்ட மலாய்ச்சொல் Padyயா Padiயா? எப்படி அப்பெயர் அங்கு வந்தது? Padi, அரிசி/நெல்லைச் சேர்ந்து குறிக்காதா? (மலாயில் nasi=சோறு.) நெல்வேளாண்மை அங்கெப்படி ஏற்பட்டது? படி>பரி>வரி என்ற சொல் எங்கு ஏற்பட்டதென்று இவர் அறிவாரோ?

இந்நண்பர் மட்டுமன்றி, பன்னூறு தமிழரும் ”நெல் நம்மூரில் தோன்றிய கூலம்” என்றே ஆதாரமின்றி எண்ணிக் கொள்கிறார், பேசவுஞ் செய்கிறார். (நெல், அரிசி என்ற சொற்கள் தமிழாகலாம். படி>பரி>வரியும் தமிழாகலாம், அதுவேறு.) நம்மூரிற் புழங்கும் எல்லாவற்றையும் நாமே கண்டுபிடித்தோம் என்பது சரியா? இங்கிருந்து அரிசி மேற்கே போனது சரியாகலாம். ஆனால், மேற்குலகே முழுவுலகு ஆகிவிடுமா? தவிரத் தானாய் நெல் வளர்ந்தது ஒரு காலம் எனில் பயிரிடத் தொடங்கியது வேறு காலம் அன்றோ? 

இயற்கையரிசி 8500-13500 ஆண்டுகள் முன் சீன யாங்க்ட்சி ஆற்றங்கரையில் தோன்றியிருக்கலாமென ஒரு சிலரும், (பர்மா, தாய்லந்து, கம்போடியா, லாவோசு, வியத்நாம், மலேசியா, இந்தோனீசியா, பிலிப்பைன்சு) சேர்ந்த பழஞ் சுந்தாலாந்துக் கண்டத்தில் எழுந்திருக்கலாம் என வேறுசிலரும் ஆதாரத்தோடு சொல்வார். தவிர, 5000 ஆண்டுகளுக்கு முன் கொரியா, சப்பான், கங்கைச் சமவெளிகளில் நெல் வளர்ந்ததற்கும் ஈனியல் (genetics), தொல்லியல் (archeology) சான்றுகளுண்டு. தவிர, புதுக் கற்காலத்தில் (பொ.உ.மு.9000-8000) அலகாபாத் மாவட்டம் கோல்திவாவில் கான் நெல்லும் (Oryza rufipogon) பயிர் நெல்லும் (Oruyza sativa) விளைந்ததாய்ச் (Indian archeology A. review 1974-75, 80 Indian Archeology A review 1976076, 88 Sharma et al;, Beginnings of Agriculture, Allahabad, Abinash Prakashan, 1980, 184) சொல்வர். இவையெலாம் பயிரியல் (agronomy), பழம் புதலியல் (Paleobotany) ஆதாரங்களோடு வருங் குறிப்புகள். இவற்றையெலாம் "“ப்பூ” என்று நாம் உதறித் தள்ள முடியாது.

அண்மையில் Antiquity இதழிலும் Journal of Archaeological Science இதழிலும் ஆக்சுபோர்டு, பனாரசு இந்து பல்கலைக்கழகங்கள் இணைந்து நடத்திய ஆய்வறிக்கையில், அரியானாவின் Rakhigargh பகுதியில் 2430-2140 BC அளவில் கான்நெல், பயிர்நெல் சார்ந்த வேளாண்மைக்குச் சான்று பகர்வார். இத்தோடு ஒன்றை மறக்கக்கூடாது. அரிசி, சிந்து சமவெளியில் தோன்றிய பயிரல்ல. அது கங்கைக் கரையிலிருந்து சிந்து சமவெளிக்குப் பெயர்ந்தது என்றே அறிவியல் சொல்லும். 

வடபுலத்தில் நெல் வந்த திசை கிழக்கிருந்தே தொடங்கும். கங்கைக் கரைக்கு அது எப்போது வந்தது? தெரியாது. உலகின் ஏதோ ஒரு மூலையில் இயற்கையிலோ, மாந்த முயற்சியிலோ நெல் தாவரம் எழுந்து/ வளர்ந்து, பின் வணிகம், மாந்த நகர்ச்சி போன்றவற்றால் வேறிடம் நகர்ந்தது. அவற்றிற் சில வேறிடங்களில் பயிரிடவும் படலாம். நம்மூரில் பயிரிடப் படுவதாலே நம்பெயர் உலகெங்கும் உள்ளதென ஒரு போதுங் கூற முடியாது. இதுவரை நாம் அறிந்த அறிவியற் செய்திகளின் படி நெல் என்பது பெரும்பாலும் சீனத்தின் யாங்ட்சி ஆற்றங் கரை, யுன்னான் மாநிலம், அல்லது தென்கிழக்காசியா பகுதி என ஏதோவொன்றில் தோன்றி நம்மூருக்குப் பரவியிருக்கலாம் என்பதே பழம் புதலியலாரின் கணிப்பு. கீழே விரிவாய்ப் பார்ப்போம்.

”தமிழரே மூத்தார், மலேசியர் இளையரெ”னும் அண்ணன்கார முடிவு அடிப்படையில் சரியானதல்ல. ”சிலவற்றில் அவர் முந்தி சிலவற்றில் நாம் முந்தி.” இன்று நாம் காணும் இரட்டை விலாவரிக் கலத்தின் (double outrigger canoe) கட்டுமானத்தை தென்கிழக்காசியரிடமிருந்தே நாம் கற்றோம். அதன் பின்னரே கலங்களின் கவிழாக் கட்டுமானத் தேவை நமக்குப் புரிந்தது. 

தவிர, இற்றை மடகாசுகர் மொழியான மலகாசி, மலேசிய/இந்தோனீசிய மொழிகளோடு தொடர்புற்றது என்பர். இவ்விரு நாட்டவர்க்கும், மலகாசி இனத்தார்க்கும் ஈனியல் தொடர்புண்டு. (Human settlement of Madagascar occurred between 350 BC and 550 AD by Austronesian peoples, arriving on outrigger canoes from Borneo.) இவையெல்லாம் நெடுங்காலம் கடற்பயணப் பழக்கம் தென்கிழக்கு ஆசியருக்கு இருந்தால் தான் முடியும். ”யாம் மூத்தவர், நீர் இளையர்” எனும் சங்கத நடைமுறையை ஏற்காது சாடுகிறோமே? அதே பாதையிற் நாம் பயணித்து நம்மிலுங் கீழே மலேசியரை இறக்குவது சரியா? அது முன்னுக்குப் பின் முரண் இல்லையா?

மற்றோர் செய்தால் தவறு, நாம் செய்தால் மட்டும் சரியா? தமிழ், தமிழ் என்பதில் கவனம் வேண்டாமா? வெகு எளிதில் நாமும் பொதுக்கையர் (facist) ஆகும் இயலுமை உங்களுக்குப் புரிகிறதோ? இணையமெங்கும் அவ் வியலுமையை நான் நெடுகக் காண்கிறேன். கரணம் தப்பினால் மரணம். நண்பரின் இடுகை போல் சொல்வது முறையற்றது. சற்று கிடுக்கிப் பாருங்கள். புரியும்.

குமுக மிடையங்களில் (social media) ஒருவர் இடுகையை மற்றோர் விழைவதும், முதுகில் தட்டிக்கொடுப்பதும், அவைநாகரிகத்தால் ஒன்றுஞ் சொலாது நகர்வதும், ”எழுதுவது எல்லாஞ் சரி”யென எண்ணுவதும், ஒருவர் எழுத்தை மற்றோர் முன்வரிப்பதும் முகநூலாருக்கு வேண்டின் நலம்பயக்கும். தமிழை வளர்க்குமா? சற்று ஓர்ந்துபாருங்கள். இது போற் போலிச்செய்திகள் பெரிதாய் உலவுங் காலத்தில். நம் அறிவியற் பார்வையைக் கூட்டிக் கொள்ளலாமே?

ஏற்கனவே ”குமரிக்கண்டம், தமிழே முதன்மொழி, உலகில் உள்ளதெலாம் தமிழன் தந்ததே, நுல்லிய (million) ஆண்டுகளுக்கு முன் தமிழன் இருந்தான்”. போன்ற உள்ளீடற்ற கூற்றுக்களை நம்ப, உலகிற் பலரும் அணியமாய் இல்லை. ”ஆப்பிரிக்கா விட்டு ஓமோசேப்பியன் வெளியானதே 70000 ஆண்டுகளென” ஒரு சிலரும். ”1.5/3.5 இலக்கம் ஆண்டென” வேறு சிலரும் தரவுகளொடு வாதாடுகையில், அதனூடே புகுந்து தமிழனின் நுல்லிய கால வாழ்வுக்கு நாம் தரும் தரவுகளென்ன? தொல்லியலா? மாந்தவியலா? ஈனியலா? குமரிக் கண்டம் என்பதற்கும் ஓர் அடிப்படை வேண்டாமா? தவறாய்ப் புரிந்துகொண்ட இலக்கிய ஆதாரம் மட்டுமே போதுமா? வரலாற்றிற்கு முந்தைக் காலத்தில் இலக்கியம் உண்டோ? நாம் முந்தையர் என்று சொல்ல எத்தனை புலங்களில் ஆய்வு செய்தோம்? வெறும் வாய்ப் பந்தல் போடுவதே நம்மைக் கொண்டு செல்லுமா?

சொற்பிறப்பியல் வழி தமிழுயர்த்த நினைப்போர், குமுக மிடையத்தில் அரசியற் பார்வை கொள்ளாது, பாவாணர் புகழை மட்டும் பாடாது, அருள் கூர்ந்து பாவாணர், ப.அருளி, கு.அரசேந்திரன் போன்றோரின் கட்டுரைகளை ஆழ்ந்து படித்துப் புரிந்து கொள்ளுங்கள். கொஞ்சம் புலமை கொள்ளுங்கள். ”முந்தையோர் எந்த அளவிற்குச் சலித்துப் பார்த்துக் கவனத்தோடு பொருள் சொன்னார்? சொற்பிறப்பியல் என்பது எப்படி நகர்கிறது? எவ்வொலி எப்படித் திரியும்?, எது முறை, எது முறையற்றது? நாம் சொல்வதன் ஏரணமென்ன?, மக்கள் பயன்பாடென்ன? முற்படுத்தும் கருத்துகளுக்கு இலக்கிய, கல்வெட்டு, பிறமொழி, பிறபுல ஆதாரங்களுண்டா?” எனப் பாருங்கள். தோன்றியபடி 4 எழுத்துகளைத் திருத்திப் போட்டு, அதன்வழி உன்னித்து Folk etymology காட்டுவது, முறையற்றது. (நான்சொல்லும் சொற்பிறப்பியலைக் கூட ஏற்கமறுப்போர் இணையத்திலுண்டு. அதுகண்டு நான் சினமுற முடியுமோ?). இதுபோற் கூற்றை எல்லா மொழியியலாரும் சட்டென ஏற்கார். சொற்பிறப்பியல் என்பது நம்முன் நடக்கும் ”அந்தர சால” மாகை (magic) அல்ல. மீறிச் செய்ய நாம் அடம்பிடித்தால், people would not take us seriously. ”Non-sensical arguments” என்று கூறி நகர்வர்.

இத்தொடரில் நான் நெல்லை மட்டும் பேசவில்லை. மாழை, வணிகம், கடற் பயணம், நகர்ச்சியெனத் தமிழருக்கும், தென்கிழக்காசியருக்கும் பொதுவான பல்வேறு செய்திகளைப் பற்றியும் பேசுகிறேன். ”நெல்லும், தமிழரும் தென் கிழக்காசியாவும்” என்பது சரியாக ஆயப்படாத ஒரு புலம். இதில் மனத்தடையே மிகுதி. நான் சொல்வதிற் சிலவற்றை நீங்கள் ஏற்கலாம், சிலவற்றை ஏற்காதும் போகலாம். ”கிழக்கைப் பார்” என்பது ஒருவகை அரசியல் சூளுரையல்ல. மேலை நாடுகளைக் கண்டு ஏங்கும் பல தமிழருக்கு அது துலைநோக்கைக் கற்றுத் தரும் முயற்சி. ”எல்லாமே தமிழெ”னும் “ஏகாந்தப் பார்வையிலிருந்து” சற்றிறங்கி வருவோம் நண்பர்களே! கிழக்கிலும் மேற்கிலும் கடல்வழி நாம் நகர்ந்துகொண்டே இருந்தோம். நம் பழம் நாகரிகம் அதன் விளைவாலும் ஏற்பட்டதே. ஈதலும் சரியில்லை. கொடுத்தலும் சரி யில்லை. தருதலே மெய்க்கு நெருங்கியிருக்கும் (ஈ,தா, கொடு பற்றித் தொல்காப்பியம் படியுங்கள்.)   

அன்புடன்,
இராம.கி.

1 comment:

Unknown said...

In earlier writings, 3 or sets below you wrote that “Eppadi padinaaro” was sung by Gopalakrishna Barathi. It was wrong. The song was written by SUddhananda Barathi. Please correct the error or slip. Anbudan Radhakrishnan