ஈழம் தவிர்த்தால், தமிழகக் கிழக்குக் கரையிலிருந்து வணிகங்கருதி தென்கிழக்காசியாவிற்கே தமிழர் முதலில் சென்றிருக்கமுடியும். இந்திய உள்நாட்டுவணிகம் உணர்த்தும் பாலைப்பாட்டுகள் மட்டுமின்றி கடல் வாணிகம் உணர்த்தும் நெய்தற்பாட்டுகளும் முகன்மையே. தென்கிழக்கு ஆசியப் பார்வையில் வெளிவரும் கடல்வாணிகச் செய்திகளை நம்மிற் பலரும் கூர்ந்து கவனிக்கமாட்டேம் என்கிறோம். மேலைவாணிகம் ஈர்க்கும் அளவிற்குக் கீழைவாணிகம் நம்மிற் சிலருக்கு முகன்மையாய்த் தெரிய வில்லை. சேரர் தொண்டியின் (இற்றைக் கோழிக்கோடு) கப்பல்கட்டுந் திறன் பொ.உ.1421 வரை சிறந்ததால் சீனக்கடலோடி செங்கே தன் கப்பற் கட்டுமானம் முடிந்தபின் கலங்களைத் தொண்டிக்கனுப்பி அவற்றின் உள்ளக நேர்த்தியை (internal efficacy) ஓராண்டு தங்கிச் சீர்செய்து போனானாம். ஆகக் கால காலமாய்த் தமிழரின் கடலோடுந் திறனுக்குக் கொஞ்சமுங் குறைச்சலில்லை. அது சரி, அக்கரைச்சீமையின் இருப்பைத் தமிழரெப்படி அறிந்தார்?
அக்கரைச் சீமையின் இருப்பை அறிந்ததில் நண்பர் ஒரிசா பாலு சொல்லும் ஆமை மிதப்புக் கடல்நீரோட்ட வழியை நானேற்கத் தயங்குவேன். அலை பரந்தெழும் நாட்களில் படகு/கப்பல் ஓட்டுவோர் நுட்பக் கருவிகளின்றி வெறும் பார்வையாலேயே, ஆமைகளைத் தொடர்ந்து செல்லமுடியும் என்பதில் எனக்கு ஐயமுண்டு. [ஆமைகளைப் பின்பற்றாது நார்வேயின் தோர் ஐயர்தால் (Thor Heyardahl) பல்வேறு பழங் கடற்பயணங்களை மீள நிறுவிக் காட்டினாரே?] வெறுமே நீரோட்டம், உடுக்கள், காற்று- இவற்றைக் கொண்டே ஒரு கடலோடி கடலுக்குள் நகர முடியாதா?- என்ற கேள்வி எனக்குண்டு. தவிரச் சிந்து வெளியில் தமிழ்ப் பெயர்கள் உள்ளதாய்க் கூறும் திரு. பாலகிருட்டிணன் இ.ஆ.ப. வைப் பின்பற்றி, உலகெங்கும் 19000 தமிழ்ப் பெயர்கள் உள்ளனவெனப் பாலு கூறுவதையும் நான் ஏற்கத் தயங்குவேன். திரு. பாலுவின் கடலாய்வு இன்னும் ஆழமாய், அறிவியலோடு பொருந்தி வருமெனில், கட்டாயம் நான் கவனிப்பேன்.
(தமிழ்ப் பெயர் என்று நாம் சொல்பவற்றை அவ்வந் நாட்டுமொழிகளில் எப்படியழைத்தார்? எப்படிப் புரிந்துகொள்ளப்பட்டன?- என்று பார்க்க வேண்டாமா? நம் பார்வையே சரியென ஒருபக்கச் சார்பாய் எப்படிச் சொல்ல முடியும்? இப்படித்தான் ஒரு நண்பர் தென் அமெரிக்காவின் தித்திகாக்கா ஏரியை எந்த ஆதாரமும் இன்றித் தித்திக்கும் ஏரி என்றார். ஆப்பிரிக்காவின் தங்கனிக்காவை தேங்கனிக்காடு என்றார். இதுபோன்ற கூற்றுக்கள் தமிழிணையத்தில் இப்போது பெருகிவிட்டன. யாருமே கேள்வி கேட்காததால் இதுபோலும் கூற்றுக்கள் அடுத்தடுத்து எழுகின்றன. என்னைக் கேட்டால் இந்தப் போக்கு சரியில்லை மஞ்சள் கண்ணாடி போட்டுப்பார்த்தால் உலகம் மஞ்சளாய்த் தான் தெரியும். அது உண்மையாகிவிடாது. Let us show some sense of balance.)
இப்போதைக்கு இன்னோர் இயலுமை மட்டுமே எனக்குத் தென்படுகிறது. 7500 ஆண்டுகள் முன் சுந்தாலாந்துக் கண்டம் முற்றிலுமழிந்து தீவுகளும் தீவக்குறையுமாய் எஞ்சியபோது இரட்டை விலாவரிக் கலங்களில் (double outrigger canoe) அக்கரைச்சீமையார் மேற்கே தமிழகத்திற்கு ஏன் வந்திருக்கக் கூடாது? அதாவது பொது உகத்தில் (coomon era), மலகாசித் தீவிற் சென்று குடியேறும் முன்னரே நம்மூருக்கு அவர் வந்திருக்கலாமே? அப்படிக் குடியேறியவரை நம்மூரில் நாகரெனக் குறித்தாரோ? அவர் குடியேறிய இடங்கள்தாம் சம்பாதிப் பட்டினம் (புகார்), நாகப்பட்டினம் போன்றவையோ? நாகர் தீவுகளிலிருந்து வந்தவர் குடியேறிய நிலம் நம்மூரிலும் நாகநாடு ஆனதோ?
பழஞ் சோழநாட்டில் நாகநாடு, வளநாடு என 2 பகுதிகளுண்டு. (சிலப்பதிகார வாழ்த்துப் பாடலைக் கூர்ந்து படியுங்கள். ”நாகநீள் நகரொடு நாகநாடு அதனொடு போகநீள் புகழ்மன்னும் புகார்நகர் அது தன்னில்” என்பது பாதல உலகமா? எத்தனை நாள் உரையாசிரியர் கூற்றிற்குச் செவி சாய்ப்பீர்?) நாக நாட்டிற்குப் புகார் தலைநகர், வளநாட்டிற்கு உறையூர் தலைநகர். இருவேறு சோழரும் பங்காளிகள் ஆகவும் இருந்தார். முரண்பட்டும் இருந்தார். அவர் இடையே ஒற்றுமைக் குறைவு. நாகர் எழுதிய பாடல்களெனச் சங்க இலக்கியத்தில் பலவுமுண்டு. அவரை நாகரெனத் தனியே அழைத்ததின் பொருள் என்ன? எல்லோரும் போல் அவரும் தமிழரெனில் அவருக்கேன் தனிப்பெயர்? ஒருவேளை நாகர் தமிழர்க்கு நெருங்கி வந்தவரும் அதேபோது இன்னொருவகை வேறுபட்டவரும் ஆனவரோ? சிந்தனை குறுகுறுக்கிறது. இப்போதைக்கு நமக்கேதுந் தெரியவில்லை. ஆயினும் இயலுமைகளைப் பேசாதிருக்க முடியவில்லை. நாகப்பட்டினம், புகார், காரைக்கால் போன்ற இடங்களில் ஈனியலாய்வு செய்யலாம்.
அக்கரைச் சீமை போகத் தமிழர்க்கு வாகானது 10 பாகையில் அமையும் கிடைநீரோட்டமாகும். இது குட்டியந்துவன் தீவிற்கும், (9.17 N 92.41 E) பேரந்துவன் தீவிற்கும் (11.62 N 92.73 E. அந்தமான். தமிழ்ப்பெயரை அடையாளங் காணாது நாம்நிற்பதால் ஹண்டுமான், ஹனுமானென மாற்றார் ஏதேதோ சொல்கிறார். நாமும் மயங்கி நின்றுவிடுகிறோம்.) இடையே செல்லும் பாதையாகும். நக்கவரம் தீவு (9.16 N 92.76 E), குட்டியந்துவன் தீவிற்கும் தெற்கிலுள்ளது.
அக்காலத் துறைமுகங்களான கடல்மல்லை 12.63 N 80.19 E, புதுக்கை 11.90 N 79.82 E, புகார் 11.15 N 79.84 E; நாகப்பட்டினம் 10.77 N 79.84 E கோடிக்கரை 10.28 N 79.28 E; மருங்கூர்ப் பட்டினம் 9.84 N 79.08 E, அழகன்குளம் 9.36 N 78.97 E ஆகிய வற்றில் புறப்பட்டால் இலங்கையைச் சுற்றவேண்டாம். மாறாகக் கொற்கை 8.63 N 78.86 E, முசிறி 10.15 N 76.20 E, சேரர் தொண்டி (இற்றைக் கோழிக்கோடு) 11.26 N 75.78 E என்று புறப்பட்டால் இலங்கையைச் சுற்றித் திரிகோணமலை 8.59 N 81.28 E வந்து 10 பாகை நீரோட்டத்தைப் பிடிக்கவேண்டும். (கடல் நீரோட்டத்தை உதவியாய்க் கொள்ள, தமிழகக் கிழக்குக் கடற்கரையிலிருந்து புறப்பட்ட கலங்கள் மணிபல்லவம், திரிகோணமலை போய்ச் செல்வது இயல்பே.கொற்கை வழித் தொலைவு கூடினும் திரிகோண மலையில் 9.16 N 92.76 E தங்கி உணவு, நீரைச் சேகரித்துச் செல்லலாம்.)
ஆகப் பழந்தமிழகத்தின் எத்துறையிலிருந்து கிழக்கு நோக்கி கடல்வழி புறப்பட்டாலும், அந்துவன் தீவுகள் / நக்கவரத் தீவுகளின் வழி செல்வதைத் தவிர்க்க முடியாது. அதற்குங் கிழக்கில் செல்ல முயன்றால் 8.84 N 98.9 E இலுள்ள இற்றைத் தாய்லந்தின் கிரா ஈற்றுமம் (Isthmus of Kra) அடையலாம். நெல்லும் தகரமும் நாடிப் போகையில் கிரா ஈற்றுமம் நமக்கு முகன்மை யானதே. அதை விரிவாகப் பேச உள்ளேன். அதற்கு மாறாய் நக்கவரந் தீவுகளுக்குத் தென்கிழக்கிற் சென்றால் சுமத்திராத் தீவின் அக்க முனையை (இதையும் அக்கமுனை>அக்கயமுனை>அக்ஷயமுனை என்று சங்கதப் படுத்தி நம்மைப் பலருங் குழப்புவார்) அடையலாம். இன்றைக்கிதை ”பண்டார் அச்சே” என மலாய்மொழியில் அழைப்பார்.
[அக்கரைச்சீமைச் செய்திகளுக்குமுன் ஓர் இடைவிலகல். தமிழிலக்கியத்தில் முதன்முதல் அக்கரைச்சீமை நம் இலக்கியங்களில் குறிக்கப்படுவது மணிமேகலையிற்றான். மணிபல்லவம் வந்த iமணிமேகலை புத்த பீடிகையால் தன் பழம்பிறப்பு உணர்ந்து, மணிமேகலா தெய்வத்தால் 2 மந்திரம் பெற்று, தீவுதிலகையின் அறிவுறுத்தலால் அஃகயப் பாத்திரம் பெற்று, புகாருக்குத் திரும்பி, அறவண அடிகளிடம் ஆபுத்திரன் திறமும் பாத்திரமரபும் அறிந்து, ஆதிரைவழி பிச்சை பெற்று, உலக அறவியில் பசிப்பிணி ஆற்றி, சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக்கி, உதயகுமாரன் கொலையுற்றதால், சிறைப்பிடிக்கப் பட்டு, பின்னால் அரசனும் அரசியும் உண்மையை அறிந்து, இவளைச் சிறையிலிருந்து விடுவிக்க, ஆபுத்திரன் நாடான சாவகத்திற்கு ஏகுவாள்.]
இற்றை இந்தொனேசியா, தாய்லாந்து, கம்போடியா, வியத்நாம் நாடுகளில் சிற்சில வேறுபாடுகளோடு பரவிக்கிடக்கும் ஒரு கதை, மணிமேகலை 14 ஆம் காதையிலும், பெரும்பாணாற்றுப் படையில், ”திரைதரு மரபின் உரவோன் உம்பல்” என்ற 31 ஆம் அடிக்கு அதன் உரையாசிரியர் நச்சினார்க்கினியர் கொடுக்கும் விளக்கத்திலும் வரும் (இருவேறு தோற்றமுள்ள) ஒரு கதையும் ஒன்றிற்கொன்று உறவுகாட்டும். தென்கிழக்காசியத் தொடர்பு காட்டும் இக்கதையின் முகன்மை, ஆழத்தை, நம்மிற் பலரும் உணர்ந்தோமில்லை. கீழே மணிமேகலை கதையைச் சொல்கிறேன். நச்சினார்க்கினியர் சொல்வதை இத்தொடரின் வேறிடத்தில் பார்ப்போம். (நாகநாடென்று தமிழகத்திற்கு வெளியே மணிமேகலையில் குறிக்கப்படுவது தென்கிழக்காசியா முழுமையும் குறித்திருக்கலாம். இது சோழரின் நாகநாட்டிலும் வேறுபட்டது. முந்தையதை வெளியக நாகநாடென்றும், பிந்தையதைச் சோழ நாகநாடு என்றுங் குறிப்போம்.).
புகார்ச் சோழனாகிய நெடுமுடிக்கிள்ளி கடற்கரை சார்ந்த புன்னைச் சோலையில் ஒரு வெளியக நாகநாட்டு மங்கையைக் கண்டு காதலித்து 1 திங்களளவும் அவளோடு உறைந்தான். ஒருமாதங் கழிந்த பின் அவனிடஞ் சொல்லாது அவள் அகல, எங்கு ஒளிந்தாள் என அரசன் தேட, அரிய ஆற்றல் உடைய சாரணன் ஒருவன் அங்கு வரக் கண்டு, அவனிடம் அரசன் மங்கை பற்றி உசாவு, ”மங்கையைக் கண்டிலேன் ஆயினும் முற்செய்தி அறிவேன். வெளி நாகநாட்டு அரசனாகிய வளைவணனின் தேவி வாசமயிலையின் மகள் அவள். பெயர் பீலிவளை, அவள் பிறந்தபோது ’பரிதி குலச் செல்வன் ஒருவனைக் கூடி இவள் கருவுற்று வருவாள்’ என நிமித்திகர் சொன்னார். நீ கூறியவள் அவளாகலாம். அவள் வயிற்றுத் தோன்றிய நும்மகனே இனி உன்நாடு வருவான். அவள் வாராள். இன்னுமொரு செய்தி. மணிமேகலா தெய்வத்தின் கடுஞ்சொல்லால் உன்நகரைக் கடல் கொள்ளும். இந்திரசாபம் இருத்தலால் அது தப்பாது. இதை உண்மையெனக் கொண்டு இந்நகரைக் கடல் கொள்ளாதபடி, ஆண்டு தொறும் இந்திரவிழாவை மறவாது செய்து வருக” என்று அச்சாரணன் சொன்னானாம்.
மணிமேகலையின் பாட்டி சித்திராபதி சோழ அரசிக்கு இக் கதையைச் சொல்லி, ”அந்நாள் தொடங்கி நகர மக்கள் நடுங்கிப் போனார். இடைவிடாது இந்திர விழாவும் நடந்து வருகிறது. இப்போது மணிமேகலை சிறையுற்ற செய்தியை அறிந்து மணிமேகலா தெய்வம் சினமுற்று வரலாம்” என்றுஞ் சொல்வாள். அறவண அடிகளின் அறிவுரையால் சோழ அரசன் மணிமேகலையைச் சிறையிலிருந்து விடுவிக்க, அவள் அங்கிருந்து புறப்பட்டு ஆபுத்திரன்நாடு ஏகி அவனைப்பார்த்து அவனுடைய முற்பிறப்பைச் சொல்லி மணிபல்லவத்திற்குக் கூட்டிவருவாள். [இதுவரை சொன்ன பீலிவளை கதையோடு தென்கிழக்கு ஆசியக் கதை சற்று வேறுபடும். பெரும்பானாற்றுப் படையின் உரையாசிரியரான நச்சர் மாற்றுக்கதை சொல்வார். அத்திரிவை கம்போடியா பற்றிப் பேசும் போது பார்ப்போம்.)
நாம் இங்கு பேசவிழைந்தது அக்கரைச்சீமையின் இருப்பைத் தமிழர் அறிந்தது பற்றியதாகும். மணிமேகலையையும், பெரும்பாணாற்றுப் படைக்கான நச்சர் உரையையும் பார்க்கும் போது, மணிமேகலை காலத்திற்கு (பொ.உ.400 களில்) முன்னேயே, சங்ககாலத்திலேயே (பொ.உ.மு.550-பொ.உ.250), தமிழர்க்குச் சாவக நாட்டின் இருப்புத் தெரிந்திருக்கிறது என்பதாகும் இதற்குமுன் எப்போது இவ்விருப்புத் தெரிந்தது? - என்பதை ஆத்திரேலியப் பழங்குடிகளின் ஈனியல் ஆய்வு வழி அறியலாம். ஏறத்தாழ 11% ஆத்திரேலியப் பழங்குடியினருக்கு தமிழ்க் கலப்பிருப்பதும், இக்கலப்பு பொ.உமு. 2350 இல் ஏற்பட்டிருக்கலாம் என்பதும் அண்மையில் கண்டுபிடிக்கப் பட்டது. எனவே தென்கிழக்கு ஆசியாவைத் தமிழர் ஓரளவாவது அறிந்தது இற்றைக்கு 4350 ஆண்டுகள் முன்னராகும்..அது மிக நீண்ட காலம் தான். தாய்லந்து/ மலேசியாவின் இலங்காசோகம், தக்கோலம், தாம்பலிங்கம் ஆகியவற்றைப் பற்றிக் கீழே பார்ப்போம்.
அன்புடன்,
இராம.கி.

1 comment:
அற்புதமான விவரங்கள். நான் தெற்காசிய முழுதும் பயணித்து உள்ளேன். எங்கும் எனக்கு இது நம் முன்னோர் வாழ்ந்த \வந்த இடம் என்ற உணர்வு இருக்கும். முக்கியமாக ஜாவா, சுமத்ரா தீவு, கம்போடியா, வீயட்னம். பழைய இலக்கியங்கள் வழி அன்றைய உலகை ஓரளவு அறிய முடிகிறது. கீழடி உட்பட ,பூமபுகார் மற்றும் பல இடங்களில் தோண்டி ஆராய்ச்சி செய்தால் பல பொருட்கள் கிடைத்து மேலும் உண்மை தெளிவாகலாம்.
Post a Comment