Tuesday, April 09, 2019

கொல்/பொன் - 1

https://www.facebook.com/krishnan.ramasamy.31/posts/10218571448016554 என்ற இடுகையில் தமாசுக்கசு எஃகுக் (wootz steel) குறுவாள் பற்றியும் தமிழரின் பங்குபற்றியும் வெளிவந்ததை முன்வரித்து இருந்தேன். அதற்கு முன்னிகையாய், “அடித்து அடித்து இரும்பைக் கொல்லுவதால் கொல்லன்” என திரு. வேந்தன் அரசு எழுதியிருந்தார். “கிடையாது. தமிழன் முதலிலறிந்த மாழை பொன் அதன் இன்னொருபெயர் கொல். பொன்னே பின் பொதுப் பெயராகி, வெண்பொன், செம்பொன், இரும்பொன் என்றுபல மாழைகளுக்குப் பெயராகியது. கொல்லும் பொதுப்பொருள் கொண்டது. கொல்லில் வேலை செய்தவன் கொல்லன்” என மறுமொழித்தேன். இதையேற்காத வேந்தனரசு, “பொன்னுக்கு கொல் எனும்சொல் எங்கு காணலாம்? தங்கால் பொற்கொல்லனார் என்பது ஏன்.?” என வினவினார்.

இன்னொரு நண்பரான கருப்புச் சட்டைக்காரரோ, இதற்கும் மேலே போய், நக்கலாய், “தமிழர் முதலில் அறிந்த மாழை பொன்னா??? அப்படி எனில் தமிழர் இந்த கற்காலம், இரும்பு காலம் என்று உலகவழக்கு எதையும் வாழவில்லை? அட்லாண்டிசு, வகாண்டா, அமேசான் போல தமிழர் குமரிக்கண்டத்திலும் வாழ்ந்தனர் போலும். மேலும் வகாண்டா மக்கள் வைப்பிரேனியத்தை அறிந்ததுபோல் தமிழர் பொன்னை அறிந்து அனைத்தையும் பொன்னால் இழைத்திருந்தனர் போலும்” என்றெழுதினார். இவரிருவரும் இப்படி வினவுகையில், உடன் விடையிறுக்கவியலாது, கூர்ச்சரம், இராசத்தானம் போன்றவிடங்களில் நான் ஊர்சுற்றிக் கொண்டிருந்ததால், இப்போது திரும்பிவந்தபின் எழுதுகிறேன். முதலில் இக்கேள்விக்கு அடிப்பார்வை கொடுக்கும் வேதியல் விவரங்களைப் பார்த்துவிடுவோம்.  ..

திண்ம (solid), நீர்ம (liquid), வளிம (gas) வாகைகளில் (phases), மாழைகளாயும் (metals), அல்மாழைகளாயும் (non-metals), ஆலாதிகளாயும் (interts), இதுவரை 118 எளிமங்கள் (elements) மாந்தரால் காண/செய்யப் பட்டுள்ளன. வினைமைகளையும் [reactivities] தன்மைகளையும் (properties) பொறுத்து இவ்வெளிமங்களை ஒரு முறைப்பட்டியலில் வேதியலார் வகைப்படுத்துவர். முறைப்பட்டியலின் 11 ஆம் குழுவில் (group; இதை 1b என்பாருமுண்டு ), 4 ஆம் பருவத்தில் (period) செம்பும் (Copper; Cu 29), 5 ஆம் பருவத்தில் வெள்ளியும் (Silver; Ag 47). 6 ஆம் பருவத்தில் பொன்னும் (Gold; Au 79), 7 ஆம் பருவத்தில் உரோஞ்செனியமும் (Roentgenium; Rg 118) அமையும். இந்நிரலின் கடைசி மாழை இயற்கையில் கிடைப்பதல்ல. மாந்தன் தன்முயற்சியில் செயற்கையாய்ச் செய்தது.

முதலில்வரும் செம்பு ஓரளவு வினைமை கொண்டது. உலகின் பல்லாண்டு அகவையில் பெரும்பாலும் அது செப்புக் கந்தகையாகவே (Copper Sulphide) கிடைக்கிறது. செம்பை எளிமமாக்கியபின் காற்றில் கந்தக இரு அஃகுதை (Sulpher di-oxide) வளி இலாதவரை, செம்பை ஓரளவு காப்பாற்றி விடலாம். காற்றில் அவ்வளி நுல்லியனில் 1 பங்கு (parts per million) இருப்பினும், செம்பு தன் பளபளப்பிழந்து செப்புக் கந்தகையாய் (CuS2), அல்லது செப்புக் கந்தக அஃகையாய் (CuSO4) மாறிப் பல்லிழிக்கும். நாட்பட, நாட்படச் செம்புச் சிலைகளும் கலன்களும் பாசம் பிடிப்பது இப்படித்தான். நாம் இந்தப் பாசத்தை திருநீறாலோ, புளியாலோ, எலுமிச்சையாலோ தேய்த்து அகற்றிக் கொண்டிருக்க வேண்டும். 

அடுத்து வரும் வெள்ளியோ கந்தக இரு அஃகுதையோடு அதேயளவிற்கு வினைபுரியாது. எனவே எளிதில் பூண்டுறாது (not become a compound), தூய, பரி எளிமமாகவோ (pure, free element), அன்றிப் பொன்னோடும், மற்ற மாழைகளோடும் சேரும் அட்டிழையாகவோ (alloy), அன்றி ஆர்ச்சினைட் (argentite) குளோர் ஆர்ச்சிரைட் (chlorargyrite) போல் மண்ணூறல் பூண்டாகவோ (mineral compound) அமையும். இப்போதெலாம் செம்பு, பொன், காரீயம் (lead), துத்தநாகம் (zinc) போன்ற மாழைகளைக் கனிமங்களிலிருந்து தூவிக்கும் (refining) போதே வெள்ளி பெறப்படுகிறது. தனித்துக் கிடந்த வெள்ளிகளெலாம் ஏற்கனவே மாந்தரால் பிரித்துப் பொறுக்கப்பட்டு விட்டன. பூண்டுறாது தனித்தே ஒருகாலத்தில் வெள்ளி கிடைத்ததால், அதை உயர்தனி மாழை (noble metal) என்றார்.

பொன்னோ வெள்ளியினுஞ் சிறந்த உயர்தனிமாழை. மாந்தனுக்குக் கிட்டிய மாழைகளில் அதுவே மீக்குறை வினைமை கொண்டது. வெகு எளிதில் பூணாது, பல நூறாண்டுகளுக்கு எளிமாய்க் கிடைத்தது. தங்கத்தின் சிறப்பே அதுதான். அதனாற்றான் பொன்னை முதலிற் கிட்டிய மாழையென்பார். மற்ற மாழை மண்ணூறல்களோடு கலந்து கனிமங்களாய்க் கெட்டிப் பட்டோ, மண்/மணலாகவோ கிடந்ததை நீர்பாய்ச்சிப் பிரித்தார். இன்னுமரிதாய், பாறைகள் ஊடேயும் பொன் சிறைப்பட்டிருந்தது. காலங்காலமாய் நடக்கும் மழை, புயல், பனி போலும் இயற்பாடுகளால், பொன்கலந்த கட்டி, மண், மணல்கள் பொடிப் பொடியாகி ஆற்றுப்படுகைகளுக்கு வந்துசேர்ந்தன. மாந்தன் பொன்னை முதலிலறிந்தது ஆற்றுப்படுகைகளின் வழிதான். [நம்மூர்ப் பொன்னியின் ஆற்றுப்படுகையிலும் பொன்கிடைத்தது. கொல்லி மலையும் பொன்/மணி கிடைத்த மலையே. (கொல்>கொல்லி). கொல்தொடர்பால் கோலார், அதைக் கோலாள>குவலாள புரமெனுஞ் சொற்கள் பிறந்தன. (கொல்லுக்கு பொதுமைப் பொருள் வந்தபின், மாழை/மணி கிட்டியதால் கொ(ல்)ங்கு என்றபெயர் ஏற்பட்டதோ என்ற ஐயமும் எனக்குண்டு. கொல்தொடர்பான சொற்கள் பற்றியறிய ”கொன்றையும் பொன்னும்” எனும் என் தொடரைப் படியுங்கள்.

https://valavu.blogspot.com/2006/01/1_23.html
https://valavu.blogspot.com/2006/01/2_24.html
https://valavu.blogspot.com/2006/01/3.html
https://valavu.blogspot.com/2006/01/4.html
https://valavu.blogspot.com/2006/01/5.html
https://valavu.blogspot.com/2006/01/6.html
https://valavu.blogspot.com/2006/01/7.html ]

இன்றைக்குச் சிலவற்றை இத்தொடரில் மாற்றுவேனெனினும், பெரும்பாலும் மற்றவை ஏற்பேன். கொல்லை நாம் குறைத்து மதிக்கிறோம். ஆற்றுப் படுகையிலும், கரைகளிலும் கிடைப்பவற்றை புவியியலார் இடப்பொதிகை (placer deposit) என்பார். இவற்றில்கிட்டும் பொன்னை, சல்லடை அல்லது தட்டிலிட்டு நீராலலசிப் பொறுக்கி, நுண்டி(>நோண்டி) எடுப்பது கொழித்தல் (Panning) எனப்பட்டது. அரிசியில் கல்பொறுக்க முறம் பயன்படுத்துகிறோமே அதற்கும் கொழித்தலென்றே பெயர். இதில் முறத்தோடு நீருங் கலந்து வீழும். தாம்பாளம் போலுந் தட்டத்தில் (shallow pans) பொன்கலந்த மணற் சல்லியை இட்டு, நீரிலமிழ்த்தி அலசி, வேதிவினையின்றி, பூதிகப்பிரிப்பால் (physical separation) அடர்பொன்னை அடராப்பொருள்களிலிருந்து பிரிப்பர். இதன்மூலம் 99/99% தூயதங்கம் கூட நேரடியாய்க் கிட்டும்.

அடுத்தமுறை மடைவாய்த்தல் (Sluicing). மாறிமாறி மடைகளுக்கிடை கொட்டிய தங்க மணல், மண், கட்டி, பரல் போன்றவற்றை நீரோட்டத்தால் பொன் அல்லாதவற்றை வெளிக்கொணர்ந்து, பொன்னை மடைகளிடையே, தொடர்ந்துபாயும் நீரால் சிக்கவைப்பது இம்முறையாகும். 3 ஆம் முறையை ஆழ்படுகை உறிஞ்சல் (Dredging) என்பார். நல்ல ஈர்ப்புத்திறன்கொண்ட களி மிதவை இறைப்பி (suspension pump) மூலம் நீருக்கடியிலுள்ள ஆற்றுப் படிவை உறிஞ்சிச் சல்லடைக்குக் கொணர்ந்து மடைத்தலுக்கும் அலசலுக்கும் உட்படுத்திப் பொன்னைப் பிரிப்பது இதில்நடக்கும். அடுத்துவரும் 4 ஆம் முறையை ஊஞ்சல்பெட்டி (Rocker box) முறையென்பார். இன்னுங் கடினக் கட்டிகளில் சிக்கிய பொன்னை நீரால் பிரிக்கும் முறை இதுவாகும். இப்படி ஒவ்வொருமுறையிலும் பூதிகமுறைகளே பயன்படும்.

பலநாடுகளில் நாலாம்முறை பயன்பட்டாலும், நம்மூரில் மிகுத்துச் சொல்லப் படுவது கோலார்ச் சுரங்கமே. இன்னொன்று கருநாடகக் கட்டிச் (Hutti) சுரங்கம். (தமிழகத்தில் கட்டியர் என்றே ஒரு குறுநில வேளிர் சங்ககாலத்தில் இருந்தார். கட்டி என்ற சொல்லைப் பொன் எனும் பொருளில் சம்பந்தர் தேவரத்தில் ஆண்டுள்ளார். ) 1954 இல் கருநாடக மாநிலம் ஏற்பட்டபோது அதனுட்சேர்ந்த கோலார் முற்றிலும் தமிழர் தொடர்புள்ளதே. சென்னையைத் தக்கவைக்க பெருந்தலைவர் காமராசர் கொடுத்த விலைகளில் அதுவுமொன்று. கோலார், கொள்ளேகால், இன்னும் வடக்கே வட கொங்கு (இதைக் கங்கர் நாடு என்பார்.) முழுதும் தமிழ்ப்பகுதிகளே. இன்று அங்குள்ளோர் தமிழை மறந்தார். கன்னடர் ஆக்கப்பட்டார். கிட்டத்தட்ட இற்றைநிலையில் 2 கோடித் தமிழர் தம் மொழி யிழந்து உள்ளார். (நான் தெலுங்கு, மலையாள மாநிலங்களின் வழி இழந்த மக்கள் தொகை பேசவில்லை.)   

5 ஆம் முறையில் மட்டும் வேதியல் குறுக்கிடும். பெரும்பாலான சுரங்கத் திணைக்களங்களில் (mine based plants) இன்று இம்முறையே பயன்படுகிறது. இம்முறை எழுந்து 100 ஆண்டுகள்கூட ஆகாது. இதில் பொற்பாறையை உடைத்துப் பொடியாக்கி சவடியக் கரிங்காலகைக் (Sodium Cyanide) கரைசலோடு வினைபுரிய வைத்து பொடிக்குள் பொதிந்த தங்கம்.வெள்ளியைக் கரைத்துப் பொன்/வெள்ளிக் கரிங்காலகைக் (gold/silver cyanide) கரைசலாக்குவர். பின் அதனோடு, துத்துநாகஞ் (Zinc) சேர்த்து பொன், வெள்ளி மாழைகளை திரைய (precipitate) வைத்து, நாகக் கரிங்காலகைக் (Zinc Cyanide) கரைசலைப் பெறுவர். இதோடு, கந்தகக் காடியை (sulphuric acid) வினைக்கவைத்து, கரிங்காலகைக் காடி (Hydrogen Cyanide) ஆக்கி, சமையலுப்போடு (Cooking salt)மேலும் வினைக்க வைத்து சவடியக் கரிங்காலகை (Sodium Cyanide) செய்வர். சவடியக் கரிங்காலகையை பொற்பாறைப் பொடியோடு மீள வினைக்கவைப்பார். இப்படி அதிகத் தங்கம் பிரித்தெடுக்கப்படும். முதல் 4 முறைகளுக்கு ஆகுஞ் செலவை விட 5 ஆம் முறைக்குச் செலவதிகம். சூழியற்கேடும் அதிகம். ஆயினும் பொன்னாசை யாரை விட்டது, சொல்லுங்கள்?

இப்போதைக்கு இவ்வேதியல் விவரங்கள் போதும். மாழையெனும் தனி வகையை மாந்தன் முதலிலுணர்ந்தது பொன்வழிதான். அதன்பின் தான் வெள்ளி, (No process to invent. Ordinary separation is enough.) ஆனால் எந்தக் கடின வினைக்கும் பயன்கொள்ள முடியவில்லை. வெறும் கலம், அணிகலன் என்றே பயன்கொண்டார். (கற்காலக் கல்லறைகளில் தங்க அணிகலன்கள் கண்டு பிடித்துள்ளார்.) செம்பைக்காட்டிலும் வெள்ளி, அதைக்காட்டிலும் தங்கமென எளிதிலடித்து நீட்டவும், வளைக்கவும் முடிந்தது. தண்டுமை (ductility), மெலுக்குமை (Malleability) என இப்பண்பைச் சொல்வர் (a single ounce of gold can be beaten into a sheet of 300 square feet.) சூளை வெம்மையிலேயே இவற்றை உருக்கவும் முடிவதால் அணிகலன் செய்வது எளிது. தங்கம் உருகுப்புள்ளி (melting point) 1064 செல்சியசு. வெள்ளி 961.8 செல்சியசு. தங்க, வெள்ளி உருகுலைச் செய்முறையின் ஊடே தப்பு/சரி முறையில் தன்னேர்ச்சியாய்ச் செம்பைப் பிரித்தறிந்தார். (இதன் உருகுப்புள்ளி 1085 செல்சியசு).

மற்ற நாகரிகங்களை ஏற்குஞ் சிலர் தமிழர் பொன்னை முதலிலறிந்தார் என்றால் மட்டும் நக்கலும் கேலியும் கொழிக்க வேதியல் அறியாது பேச முற்படுகிறார். தமிழர்க்கு கொம்பு முளைக்கவுமில்லை. இராம.கி. அப்படிச் சொல்லவுமில்லை. அட்லாண்டிசு, வகாண்டா, அமேசான் போலத் தமிழர் குமரிக்கண்டத்தில் வாழ்ந்தாரெனவுஞ் சொல்லவில்லை. வகாண்டா மக்கள் வைப்பிரேனியத்தால் செய்தது போல் தமிழர் பொன்னால் இழைக்கவும் இல்லை. எல்லோரையும் போல் தமிழரும் பழங்கற்காலம், நடுக்கற்காலம், புதுக்கற்காலம், பெருங்கற்காலம், பொற்காலம், செம்புக்காலம், வெண்கலக் காலம் இரும்புக்காலமென மாந்த வரலாற்றைத் தாண்டித்தான் வந்தார். பொற்காலம் என்றவுடன் தமிழர் பொன்னால் இழைத்தாரென்று பொருள் இல்லை. பொன்னறிந்த காலமென்று பொருள்

[வேதியலறியாது, அரைகுறைப் புரிதலில் இப்படி நக்கலடிப்பதை நண்பர் தவிர்த்திருக்கலாம். கேள்வி கேட்பதிலும் ஒரு மட்டு, வரைமுறை கிடையாதா? ”இப்படி மெனக்கெட்டு இவன் சொல்கிறானே? மடத்தனமாய்ச் சொல்வானா? சற்று கூகுளிட்டுத்தான் பார்ப்போமெ”ன்ற கனிவு கூட நண்பருக்கு இல்லாது போனது வருத்தமாகிறது. நக்கலுங் கேலியும், புத்தறிவிற்குக் கேடே விளைக்கும். Bro, You may get some brownie points out of that. But is that what you aim in facebook discussions? I wonder.]

இதற்கடுத்தது வெள்ளி; அதுவும் அணிகலன், கலனென நின்றுபோனது. மூன்றாவதாய்ச் செம்பு, அணிகலனில் தொடங்கி ஆயுதமாய் நகரும். ஆயினும் செம்பு அவ்வளவு கடினமில்லை. கொஞ்சம் அழுத்தினால் செம்புக் கலம் அமுங்கும். தகடு வளையும், செப்பு வாள் ஒருபோரில் உறுதியாய் நிற்காது. வெள்ளீயம் (Tin) சேர்த்து வெண்கலம் செய்தாற்றான் செம்பு நிலைப்படும். (வெள்ளீயங் கிடைத்த தென்கிழக்காசியா நமக்குப் பூகோளத் தன்னேர்ச்சி. அத்தொடர்பின்றி சங்ககால நாகரிகமில்லை.) பின் காரீயஞ்(Lead) சேர்ந்த செம்பு. அதற்குப் பின் நாகஞ் (zinc) சேர்ந்த பித்தளை (brass). இப்படிப் பல்வேறு அட்டிழைகள் உருவாகும் .வெண்கலம் எழுந்த பிறகே மருதம் உருவானது. செம்புருக்கும் நுட்பியலை நீட்டியபின் தான் இரும்பு நமக்கு வாய்த்தது. இரும்புக்கு மாறியபின்தான் நம்மூரில் மருதம் நிலையுற்றது. இவற்றைப்பற்றியும் விவரித்துச் சொல்லவேண்டும். வேறொரு தொடரில் செய்வேன். இப்போது பொன்னுக்கு மீள்வோம். கொஞ்சம் சங்க இலக்கியம். நண்பர் இதையும் படிக்கலாம்.

அன்புடன்,
இராம.கி.

2 comments:

Priya said...

Miga Sirappu

திருமலைசாமி.சி said...

மிகச் சிறப்பான அலசல்.அறிவியற் கருத்துகள்
பலவற்றை அறிந்துகொண்டேன்.குறிப்பாக வேதியியல் கருத்துகளைச் சொல்லிவிதம் அருமை ஐயா.என் நெஞ்சார்ந்த வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவிக்கிறேன்.நன்றி.